பால் பவுடர்கள் பாதுகாப்பானவையா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பால் பவுடர்கள் பாதுகாப்பானவையா?

மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது பால் பவுடர் நிறுவனம் ஒன்று. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன் 18 மாதக் குழந்தைக்காக, ஒரு நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கினார். அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், கோவையில் உள்ள உணவு ஆய்வுப் பரிசோதனைக் கூடத்தில், அந்தப் பால் பவுடரை ஆய்வுசெய்யக் கொடுத்தார். அதில், உயிருள்ள 28 லார்வாக்கள் (Live larvae), 22 அந்துப்பூச்சிகள் (Rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காலாவதியாகிவிட்ட பால் பவுடரில், அதன் தரம் குறைந்திருக்குமே தவிர புழுக்கள் உருவாக வாய்ப்பில்லை. புழு, புழுக்களின் முட்டைகள் இருக்கிறது என்றால், அந்த நிறுவனத்தின் பால் பவுடரை பேக் செய்யும் போது, சரியாக ஸ்டெரிலைஸ் (Sterilize) செய்யவில்லை என்று அர்த்தம்.

முன்பெல்லாம் தாய்ப்பாலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அன்றாடம் சாப்பிடும் உணவையே, எண்ணெயும் காரமும் இல்லாமல் கொடுத்தனர். அப்போது எந்த பால் பவுடர்களும் ஆயத்த பவுடர்களும் இருந்தது இல்லை. நாம் சாப்பிடும் அன்றாட உணவையே நன்கு மசித்து புளிப்பு, காரம், எண்ணெய் இல்லாமல் கொடுத்தாலே போதும்.

பாதுகாப்பது எப்படி?
பிறந்து ஆறு மாதங்கள் வரை, குழந்தைகளுக்கு அனைத்துச் சத்துக்களும் அடங்கிய தாய்ப்பாலைத் தவிர, வேறு எந்த உணவும் தரக் கூடாது. ஆறு மாதங்களுக்கு மேல், இணை உணவாக ஏதாவது தரலாம் என மருத்துவர்கள் சிலரும், பால் பவுடர்களைப் பரிந்துரைக்கின்றனர். எந்த அளவுக்கு இது பாதுகாப்பானது என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.

குழந்தைக்கு இணை உணவு தருவது நல்லதுதான். ஆனால், இப்படி புழுக்கள் நெளியும் சுகாதாரமற்ற உணவைக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு, தொற்று, காய்ச்சல், செரிமானக் கோளாறு, கடும் வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வரலாம். பால் பவுடர்களை இளஞ்சூடான நீரில் கலக்கி குழந்தைக்குக் கொடுப்பதால், அதில் உள்ள புழுக்களும் அதன் முட்டைகளும் இறந்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. வயிற்றினுள் சென்று, அவை உயிருடன் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைகளுக்குத் தொடர் வயிற்று வலி வந்து, பெரிய பிரச்னையில்கூட முடியலாம்.

வீட்டிலேயே மாற்று உணவு!
ஆறு மாதக் குழந்தைகளுக்கு, இணை உணவை வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பது ஒன்றே சிறந்தது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சிறு பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை இவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, நன்றாகக் கழுவி, காயவைத்து, தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைத்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம்.

மாதம் ஒருமுறை புதிதாக அரைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு சாதத்தை நெய் விட்டு, குழந்தைக்குக் கொடுக்கலாம். நன்கு வேகவைக்கப்பட்டு, மசித்த பச்சைப் பட்டாணியும் குழந்தைக்கு நல்லது. உருளை, கேரட், மஞ்சள் பூசணி போன்ற காய்களை வேக வைத்து, தோல் நீக்கிய பின், நன்கு மசித்துத் தரலாம். அரிசி இரண்டாக உடைக்கப்பட்ட நொய் கஞ்சி தரலாம். இதை, இளஞ்சூடான பதத்தில் குழந்தைக்குத் தருவதே நல்லது. பழங்கள், பழச்சாறுகளைக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துமாவு கஞ்சி, கேழ்வரகு கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம்.

பாதுகாப்பு டிப்ஸ்!
டெட்ரா பேக்கில் வரும் உணவுகளில் காற்று உள்ளே போக வாய்ப்பு இல்லை. எனவே, பூச்சிகள், புழுக்கள் உருவாவது தடுக்கப்படும். எந்த பேக்கிங் உணவாக இருந்தாலும், காலாவதி தேதியைச் சரிபார்த்து வாங்கவும். பயன்படுத்தும் முன்பு, முகர்ந்து பார்க்கலாம். பூச்சிகள், புழுக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்த பிறகு பயன்படுத்தலாம்.

பேக்கிங் உணவுகளில் பூச்சி, புழுக்கள் வரக் கூடாது என, பூச்சிகொல்லி ரசாயனங்களும் கலப்பது உண்டு. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து, வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற மருந்து கொடுக்கலாம். இதனால், உணவு மூலமாகக் குழந்தைக்கு வயிற்றில் சேர்ந்திருக்கும் பூச்சிகள் அழிக்கப்படும்.

பழச்சாறு, கஞ்சி, கூழ் போன்ற எதைக் கொடுத்தாலும், நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரில் கலந்து கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.