பிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
பிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா?

couple_390.jpg


ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.


பெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குப்பின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.


திருமணத்திற்குப்பின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.


கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது. மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.


மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன. இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.


அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.


இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக் கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.


மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும். பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.


சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.


சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.