பிளாஸ்டிக் தவிர்ப்பது சுலபம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிளாஸ்டிக் தவிர்ப்பது சுலபம்!

நீங்கள் வாழும் இடத்தை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் பொருட்கள் என்னென்ன என்று ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் முதல் பாத்ரூம் மக் வரை சகலமும் பிளாஸ்டிக் ஆகிவிட்டன. மளிகை முதல், உணவு, மருந்துகள் என அனைத்தும் பிளாஸ்டிக்கில்தான் கிடைக்கின்றன.

மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடியது, எளிதில் அப்புறப்படுத்தக்கூடியது என்பதால், பிளாஸ்டிக்கின் மோசமான பின்விளைவுகளைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.

பிளாஸ்டிக் பயன்படுத்துவது அவசியமானதா? பிளாஸ்டிக் விளைவிக்கும் தீங்குகள் என்னென்ன? அதைத் தவிர்ப்பது எப்படி?

முன்பு சாப்பிட வாழை இலை, தையல் இலை, உலோகத் தட்டுகள் பயன்படுத்தினோம். இன்று கண்களைக் கவரும் நிறங்களிலும், வடிவங்களிலும் நம் வீட்டில் பிளாஸ்டிக் தட்டுகளும், கிளாஸ்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மலிவான விலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பதால், நம் பசுமை வீடுகள் பிளாஸ்டிக் வீடுகளாக மாறிவிட்டன. சமையல் அறையில் நம் பாரம்பரிய அஞ்சறைப் பெட்டிகூட இப்போது பிளாஸ்டிக் பெட்டிதான். இது பார்க்க அழகாகத் தெரியலாம், ஆனால் உடலுக்குக் கேடு விளைவிப்பதில் முதல்இடம். அதேபோல கடைக்கு காய்கறி, மளிகை சாமான் வாங்கச் செல்ல முன்பெல்லாம் துணிப்பை கொண்டுசெல்வோம். இன்று துணிப்பை என்பது கேலிக்குரியதாக மாறிவிட்டது.

பிளாஸ்டிக்கை ஏன் தவிர்க்க வேண்டும்?
‘பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் இப்போது என்ன ஆகிவிடப்போகிறது, பின்னாட்களில், பிரச்னை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ எனும் அசட்டுத் தைரியத்தில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால், நோய்களின் ஆதிக்கம்தான் அதிகரிக்கும்.

சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தட்டு, கிண்ணத்தில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பி.பி.ஏ (BPA) என்ற ரசாயனம், உடலுக்குள் சென்று, ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறுவயதிலேயே பருவம் எய்துதல், விந்தணுக்கள் குறைதல், இதய நோய், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் 92 சதவிகிதத்தினருக்கு அவர்கள் ரத்தத்தில் பி.பி.ஏ ரசாயனம் இருந்ததாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Centre for disease control and prevention) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரியவர்கள் மட்டுமல்ல, பச்சிளம் குழந்தைகள்கூட இதனால், பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.


என்னென்ன விளைவுகள்?
பாலிகார்பனேட் கலந்த பிளாஸ்டிக்கை சூடுபடுத்தினாலோ அல்லது வெயில் பட்டாலோ, அதிலிருந்து பிஸ்பினால் ஏ (Bisphenol A) எனும் ரசாயனம் வெளிப்படுகிறது. பாலியஸ்டரிலிருந்து ஸ்ட்ரீன் வெளிவரும். பி.வி.சி-யில்இருந்து, வினைல் குளோரைடு மற்றும் தாலேட்ஸ் வெளிவரும்.
தாலேட் உள்ள பொருட்களை ஐரோப்பிய யூனியன் 2005-ம் ஆண்டே தடை செய்துவிட்டது. ஆனால், நம் ஊரில் உள்ள பெரும்பாலான பிளாஸ்டிக்கில் தாலேட் உள்ளது.

நம் வீடுகளில் உள்ள உட்புறக் காற்றினுள்கூட கலந்துவிடுவதால், ஆண்களுக்கான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பியில் பாதிப்பை ஏற்படுத்தி, இனப்பெருக்க செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஹோட்டல்களில் உணவை பேக் செய்யும் கவர், காஸ்மெடிக் பொருட்களை அடைத்துவைக்க, குழந்தைகள் விளையாட, தண்ணீர் பைப் போன்ற பொருட்கள் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக்கில் பாலிவினைல் குளோரைடு என்ற கெமிக்கல் காணப்படுகிறது. இது புற்றுநோய், பிறவிக் குறைபாடுகள், சுவாசப் பிரச்னை, சரும அலர்ஜி, செரிமானக் கோளாறு கல்லீரல் பாதிப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

பாலி கார்பனேட் மற்றும் பிஸ்பினால் ஏ, உணவு பேக்கிங், தரமான தண்ணீர் பாட்டில்களில் காணப்படுகின்றன. இது எதிர்ப்பாற்றலைக் குறைக்கும், உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத இயக்கங்கள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.


எது நல்ல பிளாஸ்டிக்?

சரி இந்த பிரச்னைகள் ஏதும் ஏற்படுத்தாத நல்ல பிளாஸ்டிக் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்வி எழலாம். பிளாஸ்டிக்கில், நல்ல பிளாஸ்டிக் என்பதே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிகவும் மோசமானது என்றே பிரிக்க முடியும். எந்த பிளாஸ்டிக் பயன்படுத்தினாலும் ரசாயனங்கள் வெளிவரத்தான் செய்யும். விளைவுகளும் ஏற்படும். ஆனால் அதன் அளவுகள் மட்டுமே மாறுபடும். எனவே, பிளாஸ்டிக்கை முற்றிலும் நிராகரிப்பதுதான் ஒரே வழி.

பிளாஸ்டிக் தவிர்க்க... மாற்று வழிகள்...
பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தினாலும், இரண்டு - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும் போது, பிரஷ்ஷில் இருந்து அதிகமான ரசாயனங்கள் வெளியாகும்.

சோப் பாக்ஸ், குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட், மக் போன்றவற்றை அலுமினியமாகவோ, ஸ்டீலாகவோ மாற்றலாம். இது துருப்பிடிக்காது. நீண்ட நாட்களுக்குப் பயன்படும்.

தண்ணீர் குடிக்க, பித்தளை, ஸ்டீல் பாட்டிலைப் பயன்படுத்தலாம். மதிய உணவை எடுத்துச் செல்வதற்கு பிளாஸ்டிக் அல்லாத ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் நல்லது.

தட்டு, டம்ளர், கிண்ணம் போன்றவற்றை ஸ்டீல் அல்லது பித்தளையில் வாங்கிப் பயன்படுத்தலாம். பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.

குழந்தைகளுக்கு பேபி பாட்டிலோ, பிளாஸ்டிக் அல்லது ரப்பர் நிப்பிலோ கொடுப்பதை தவிருங்கள். குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் மிக மோசமான பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது என்கின்றன ஆய்வுகள். உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றை ஸ்பூன், பாலாடை, ஸ்டீல் கிண்ணம், ஸ்டீல் டம்ளரில் கொடுக்கலாம்.

மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தப்படுவது உயர்தரமான பிளாஸ்டிக் என்றாலும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

ஹோட்டலில் உணவு வாங்க, வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டல் உரிமையாளரை வாழை இலையில்் பேக் செய்து தரச் சொல்லிக் கேட்கலாம். வாழை இலை இரண்டு முதல் 10 நாட்களில் மக்கிவிடும்.
இளநீர், பழச்சாறு குடிக்கும்போது ஸ்ட்ரா தவிர்க்கலாம்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கும்போது மோசமான கெமிக்கல்களை வெளியிடும். மண் பாண்டங்கள், எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறுங்கள்.
கடைக்குச் செல்கையில், துணிப்பைகளை வைத்திருங்கள்.

மூன்று ஆர் (R) - களை (Reduce, Reuse, Recycle) எப்போதும் கடைப்பிடிப்போம். அதாவது, பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைப்போம். தேவை எனில், ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம்.

இதைப் பின்பற்றினால் நம் உடலும், நாம் வாழும் பூமியும் ஆரோக்கியமாக இருக்கும்!


குறைந்த மோசமான பிளாஸ்டிக்... குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தலாம்

கொதி நீரிலோ, சூரிய ஔியில் பட்டாலோ, மைக்ரோ ஓவனில் வைத்தாலோ அதிகப்படியான ரசாயனங்களை வெளியிடும். மற்றபடி பயன்படுத்த ஓரளவிற்கு ஏற்றது. ஒர் ஆண்டிற்கு மேல் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

# 2 High Density Polyethylene (HDPE) - அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பூ, சுத்தப்படுத்தும் திரவங்கள், பை, பிளாஸ்டிக் கவர்

# 4 Low Density Polyethylene (LDPE) - காபி கப், உணவுப் பொருட்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

# 5 Polypropylene (PP) - தயிர், யோகர்ட், ஹோட்டல் உணவு பேக் செய்யும் கவர்கள், மருந்து பாட்டில்கள், சிரப் பாட்டில்.

ஒருமுறை பயன்படுத்த...
# 1 Polyethylene Terephthalate (PET) - மினரல் வாட்டர், குளிர்பானங்கள், ஜூஸ், மது வகைகள், மவுத் வாஷ், கெட்ச் அப், வெண்ணெய், ஜெல்லி, ஜாம், ஊறுகாய் போன்றவற்றை பேக் செய்யப்படும் பிளாஸ்டிக்கில் கலந்திருக்கும். அவசரத்துக்குப் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.மிகவும் மோசமான பிளாஸ்டிக்... பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

பிளாஸ்டிக் பொருட்கள், உணவு தொடர்பாக பயன்படுத்தும் பொருட்களில் இந்த எண்கள் கொண்ட மிகவும் மோசமான பிளாஸ்டிக் கலந்திருக்கின்றன. இவற்றை வாங்காமலும், பயன்படுத்தாமலும் தவிர்ப்பது நல்லது.

# 3 Phthalates, Vinyl Chloride, Dioxin - உணவுகளைப் போர்த்துவதற்கு, இறைச்சிகளைப் பதப்படுத்தும் கவர்களில் கலந்திருக்கும்.

# 6 Polystyrene (PS) - பிளாஸ்டிக் கப், சூப் பவுல், ஸ்பூன், தட்டு, ட்ரே, ஐஸ் ட்ரே

# 7 all chemicals (BPA) - பேபி பாட்டில், மைக்ரோ வேவ் பொருட்கள், கேன் உணவுகள், பல் தொடர்புள்ள பொருட்கள்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.