புத்திர பாக்கியம், திருமண வரமருளும் லிங்க வடிவ விநாயகர் சொரூபங்கள்!

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#1
னைத்துத் தெய்வங்களுக்கும் மேலானவர் விநாயகர். தனக்கு மேல் ஒரு நாயகர் இல்லாத பெருமைக்குரியவர் விநாயகர். எனவேதான், விநாயகப் பெருமான், 'முழுமுதற் கடவுள்’ என்று போற்றப் பெறுகிறார். வெற்றிக்கு வித்தாக, வினைகளைக் களைபவராக, ஓம்காரத்தின் உறைவிடமாக, உயிர்த் தத்துவத்தின் மூலாதாரமாக வழிபடப்படும் விநாயகர், மஞ்சளைப் பிடித்து வைத்து பிள்ளையாராக பாவித்து வழிபடும் அளவுக்கு மிகவும் எளிமையான கடவுள்.


நம் ஊரில் ஆனைமுகத்தான் எத்தனையோ வடிவங்களில் காணப்பட்டாலும் வேலூருக்கு அருகில் சேண்பாக்கம் என்னுமிடத்தில் லிங்க வடிவத்தில் சுயம்புவாகத் தோன்றி அருள்புரிகிறார். விநாயகர் லிங்க வடிவில் சுயம்புவாகக் காட்சியளிப்பது வேறெங்கும் காண இயலாத அதிசய நிகழ்ச்சியாகும்.
சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றி அருள்புரிந்த புண்ணியத் தலங்களைத் தேடித் தேடிச் சென்று வழிபட்டு வந்தார் ஆதிசங்கரர். ஒருமுறை வேலூரின் சேண்பாக்கத்துக்கு மேற்கே விரிஞ்சிபுரத்தில் சுயம்புவாக அவதரித்த ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்து வழிபட்டார். அப்போது ஓரிடத்தில் பதினோரு சுயம்பு விநாயகர் சொரூபங்களை தம் ஞானதிருஷ்டியில் கண்டார்.

ஆதிசங்கரர், தம் ஞானதிருஷ்டியில் தரிசித்த பதினோரு விநாயகர் சொரூபங்கள் சுயம்புவாக லிங்க வடிவத்தில் காட்சி தரும் தலம்தான் சேண்பாக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் கோயில்.
அந்தக் கோயிலில் விநாயகப் பெருமான் நிகழ்த்திய லீலையைப் பற்றி காஞ்சிப் பெரியவர், 'தெய்வத்தின் குரலா'க அருளியிருக்கிறார்.
'ஒரு காலத்தில் சேண்பாக்கத்திலிருந்த விநாயகர் மூர்த்தங்கள் மண்ணுக்குள் மூடியிருந்தன. துக்கோஜி என்ற (அப்போது மகாராஷ்டிராவின் ஒரு பகுதியை ஆண்டுகொண்டிருந்த மன்னரின்) மந்திரி ஒருநாள் இரவு சேண்பாக்கம் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் அச்சு முறிந்து பூமியில் புதைந்துவிட்டது. சக்கரம் புதைந்த பூமி முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. சுற்றிலும் யாரையும் காண இயலவில்லை. பதறிப் போன மந்திரி, 'இரவு நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே...’ என்று கவலையுடன் விநாயகரை தியானித்தபடி அங்கேயே கண்ணயர்ந்துவிட்டார். அப்போது அவருடைய கனவில் வந்த விநாயகர், 'சக்கரம் புதையுண்ட இடத்தில் என்னுடைய லிங்க வடிவத் திருமேனிகள் புதைந்திருந்தன. அவற்றின் மேல் உன்னுடைய வண்டியின் சக்கரம் ஏறியதால்தான் ரத்தம் வந்துவிட்டது. இதுவரை நான் மண்ணுக்குள் புதைந்திருந்தது போதும். இனி நான் மக்களுக்கு அருள்புரிய வேண்டும்' என்று தெரிவித்தார். கனவில் தோன்றிய விநாயகரின் தரிசனத்தால் மனம் மகிழ்ந்த துக்கோஜி, அந்த இடத்தில் கோயில் கட்டினார்...’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மகாப் பெரியவர்.
இந்தக் கோயிலில் மூலவரான செல்வ விநாயகர் லிங்க உருவில் நடுநாயகமாக வீற்றிருக்க, சுற்றிலும் மற்ற விநாயகர்கள் எழுந்தருளியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள்: பால விநாயகர், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்தி - புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர். வண்டியின் சக்கரம் ஏறியதால் மூலவர் செல்வ விநாயகரின் மீது அதன் தடம் இப்போதும் காணப்படுவதாகக் கூறுகிறார்கள்.

கோயிலின் தலமரமாக வன்னி மரம் வெளிப் பிராகாரத்தில் தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி பத்து நாள்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பால விநாயகருக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் நீங்குவதாக ஐதீகம். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு 33 தாமரைத் தண்டு திரிகளைக் கொண்டு பசு நெய்யினால் தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து, தீபம் ஏற்றி, விநாயகரை வழிபட்டு, ஆதிசங்கரர் ஶ்ரீசக்கர ஸ்தாபனம் செய்த இடத்தில் நவகிரகங்களை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தத் தலத்தின் சிறப்புகள் :
*தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் வந்து வணங்குவதற்கு ஏற்ற வகையில் மேற்கூரையற்ற நிலையில் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
*மூலவர் சந்நிதியிலேயே கொடிமரம் அமைந்திருக்கிறது.
*நவகிரகங்களில் சனீஸ்வரர் மூலவரைப் பார்த்தபடி இருப்பது சிறப்பு.
லிங்க வடிவில் அருள் புரிந்துகொண்டிருக்கும் முழுமுதற் கடவுளான ஆனைமுகத்தனை வணங்கி, வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோம்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.