பூண்டு - Garlic

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பூண்டு

கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புதமான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டின் மருத்துவ குணங்களால் ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வோருக்கு பலவித வியாதிகள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர். ‘‘நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும்.

பூண்டு இருக்கும்போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது. (Antibacterial activity) இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் உண்ணும்போது ஜீரண சக்தியை தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. இது உஷ்ணத்தை கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.

இதன் தோலில் ‘அல்லிசின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும்போது நமக்கு முழுமையான பலனைத் தரும். கொழுப்பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லைஎனலாம். அதனால் இதய நோயை தடுக்கும் வல்லமை உண்டு. ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும் இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும்படியும் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் தினமும் இதை ரசத்தில் தட்டிப் போடுபவர்கள் அதிகம். பசியை தூண்டும். ஜீரணமாகும். இப்படிப் போடும்போது அதிக நேரம் வேகவைக்க மாட்டார்கள். தோலுடன் சிதைக்கும்போது அதிக பலன்களை தரும். பூண்டு துவையல் இருந்தால் பலருக்கும் குழம்பே வேண்டாம் என்ற அளவுக்கு சாப்பிடுவர். சட்னி, குருமா வகைகள், குழம்பு, பிரியாணி போன்றவை மட்டுமின்றி அசைவ உணவுகளில் இஞ்சி-பூண்டு அரவை இல்லாத செய்முறை குறிப்புகளே குறைவு.

பொடி வகைகளில் தனியா பொடி, பருப்பு பொடி, பூண்டு பொடி, தேங்காய் பொடி என பல விதமான பொடிகளிலும் பச்சையாகவே சேர்த்து பொடி செய்வது வழக்கம்.குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் உட்கொண் டால் நன்கு பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. இந்தப் பூண்டை அதிகம் உட்கொண்டால் உணர்ச்சிகள் தூண்டப்படும் என நம்பப்பட்டதால், நமது முன்னோரில் சிலர் மட்டுமே இதை உண்டார்கள். இப்போது இதன் மருத்துவ குணம் மட்டுமல்ல... ருசியும் பலருக்கும் பிடித்துப் போனதால் அதிகம் உபயோகிக்கின்றனர்.

சரியானபடி உபயோகிக்க தெரிந்தவர்கள் நல்ல பலனைப் பெறுகிறார்கள். நமது முன்னோர் இதை உணவாக உட்கொள்வதை விட மருந்தாகத் தான் அதிகம் உபயோகித்தார்கள். காது குடைச்சல், வலி இருந்தால் ஒரு பூண்டு பல்லை பஞ்சில் சுற்றி காதில் சொறுகினால் நல்ல பலன் தெரியும். சிறு வயதில் இதைப் போல பெரியவர்கள் நமது வீடுகளில் செய்வதை பார்த்து இருக்கிறோம். இப்போது எங்கள் வீடுகளில் இதைப் போல உபயோகப்படுத்துகிறோம். பாலில் பூண்டை வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சளி, இருமல், ஜுரம் இருக்கும்போது தந்தால் சீக்கிரம் குறையும்.

கை, கால் சுளுக்குக்கு பூண்டு சாற்றை தடவி உருவி விடுவார்கள். உடனே குணம் தெரியும். இதைப் போல பாட்டி வைத்தியம் பலவுண்டு. சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். முகப்பரு, காய்ச்சல், வயிறு உப்புசம், வெண்குஷ்டம், மூலம், வாயு உபாதை, கட்டிகள், ஜன்னி, இடுப்பு வலிக்கு இடிச்ச பூண்டோடு நாட்டு மருந்துகள் சேர்த்து உபயோகிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும்.

நமது பெரியவர்களிடமிருந்து நாமும் பலவற்றை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். ஒரு சிலர் இன்னமும் இதை உபயோகிக்கும் முறை தெரிந்து பலன் பெறுகின்றனர். நம் உணவில் இதை இஞ்சியுடன் சேர்க்கும்போது பூண்டின் வாசனை நன்கு குறைக்கப்படும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
ஸ்பெஷல் ரெசிபி

பூண்டு  ரசம்

என்னென்ன தேவை?

தனியா - 1 டேபிள்ஸ்பூன், சீரகம்- 1 டீஸ்பூன்,
மிளகு - 10, சிவப்பு மிளகாய்- 2,
கறிவேப்பிலை - சிறிது,
முழு பூண்டு - 2,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயம் - சிறிதளவு,
வெல்லம் - சிறு துண்டு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கடுகு, சீரகம், நெய் - தாளிப்பதற்கு.

எப்படிச் செய்வது?

புளியை ஊறவைத்துக் கரைக்கவும். அத்துடன் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தேவையான உப்பு, வெல்லம் சேர்க்கவும். 2 முழு பூண்டை உரித்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். தனியா, சீரகம், மிளகு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, 2 பல் பூண்டு தோலுடன் சேர்த்து சிறிய மிக்ஸியில் அடிக்கவும். பூண்டு வெந்ததும் புளிக்கரைசலில் சேர்த்து கொதி வரும்போது பொடியைப் போட்டு ஒரு கொதி வரும்போதே இறக்கவும். சிறிது நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயத்தை தாளித்துச் சேர்க்கவும். மிக ருசியாக இருக்கும்.

என்ன இருக்கிறது? [100 கிராமில்]

ஆற்றல் 149 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 33.06 கிராம்
கொழுப்பு 0.5 கிராம்
புரதம் 6.36 கிராம்
வைட்டமின் சி 31.2 மி.கி.
கால்சியம் 181 மி.கி.
ரிபோஃப்ளேவின் 0.11 மி.கி.

பூண்டுக்  குழம்பு

என்னென்ன தேவை?

முழு பூண்டு - 3,
புளி - எலுமிச்சை அளவு,
சின்ன வெங்காயம் - 10,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 3,
தனியா தூள், பெருங்காயத்தூள், மிளகுத் தூள் - தலா அரை டீஸ்பூன்,
மிளகு - ஒன்றரை டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது,
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு,
உப்பு - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறு துண்டு.

எப்படிச் செய்வது?

பூண்டை உரித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைக்கவும். சின்ன வெங்காயத்தை உரிக்கவும். மிளகை சிறிது நெய்யில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து உரித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் அரைத்த கலவை சேர்த்து தனியா தூள், மிளகுத் தூள் கலந்து நன்கு கொதிக்க விடவும். நல்ல வாசனை வரும்போது புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதை இட்லி, தோசையுடனும் பறிமாறலாம். சாதத்துடன் குழம்பாகவும் பரிமாற மிக ருசியுடன் இருக்கும்.

செட்டிநாட்டு  பூண்டு சட்னி

என்னென்ன தேவை?

பூண்டு - 15 பல்,
சிவப்பு மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
துருவிய தேங்காய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மிக்ஸியில் முதலில் மிளகாய், உப்பு, உரித்த பூண்டு, தேங்காய் சேர்த்து தண்ணீர் விடாமல் ஒரே ஒரு தடவை கரகரப்பாக அரைக்கவும். தாளிக்க வேண்டாம். குழிப்பணியாரத்துக்கு பரிமாறலாம்.

இன்னொரு வகை சட்னி

2 உரித்த முழு பூண்டுடன் 1/4 டீஸ்பூன் சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை, உப்பு, புளி, 8 சிவப்பு மிளகாய் சேர்த்து அரைக்கவும். மைக்ரோவேவ் அவனில் உதிர்த்த பூண்டு பற்களை கண்ணாடித் தட்டில் 10 வினாடிகள் வைத்து எடுத்தால் தோல் சுலபமாக உரிக்க வரும். பூண்டு ஜீரண சக்தியை தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களை பெறலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.