பெண்களைத் தாக்கும் போஸ்ட்பார்ட்டம் சைக&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#1
பிரசவத்துக்குப் பிறகு போராட்டம்! - பெண்களைத் தாக்கும் போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்


பாலகுரு, மனநல மருத்துவர் - உமாதேவி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்
“தலைப்பிரசவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு...” மருத்துவ வசதியில்லாத காலத்தில், கை வைத்தியம் மூலமாகக் கிராமத்துப் பெண்களே பிரசவம் பார்த்த காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், நவீன மருத்துவ வசதிகள் நிறைந்த இந்த நாட்களில் அப்படிப் பயப்பட ஏதுமில்லை என்றாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மனதுக்குள் மிகப்பெரிய அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதை மறுக்க முடியாது. குறிப்பாக, பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கான பொறுப்பு அதிகமாகிறது. ஒட்டுமொத்த வீடும் அசந்து தூங்கும் நேரத்தில் கதறி அழும் குழந்தையின் அழுகையை நிறுத்தப் போராடும் போதும், தனது தூக்கம், உணவு என... குழந்தைக்காகப் பல விஷயங்களைத் தியாகம் செய்வதும் கூட ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. நம் நாட்டில் பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதிக அளவில் கவனிக்கப்படுவதில்லை. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் பற்றி மனநல மருத்துவர் பாலகுருவிடம் பேசினோம். “பெண்களைப் பொறுத்தவரை பிரசவத்துக்கு முன்பு இருக்கும் மனநிலைக்கும் பிரசவத்துக்குப் பிறகான மனநிலைக்கும் மிகப்பெரிய மாறுதல் இருக்கும். சுதந்திரமாகப் பட்டாம்பூச்சியாகச் சுற்றித்திரியும் ஒரு பெண், பிரசவத்துக்குப் பிறகு, இன்னொரு உயிரைக் காக்கும் பொறுப்பை ஏற்கும்போது, பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார். பிரசவத்துக்குப் பிறகு அனேக பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கைதான். ஒருவிதமான பதற்றம், தேவையில்லாத கோபத்தோடு இருப்பார்கள். இது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், சிலருக்குப் போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ் (Postpartum psychosis) என்ற அரிய வகை மனநோய் ஏற்படலாம். இது மிகவும் அரிதானதுதான் என்றாலும், மிகவும் ஆபத்தானது. ஆயிரத்தில் ஒருவருக்கே இந்த வகை மன பாதிப்பு ஏற்படும்.

இந்த அதீத மன அழுத்தம், பிரசவமானதில் இருந்து முதல் இரண்டு வாரங்களுக்குள் ஏற்படலாம். இதன் தாக்கம் இரண்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். முழுமையாகக் குணமாக ஆறு மாதங்களாகும். அதீத மகிழ்ச்சி, சோகம், துக்கம், கவலை, குழப்பம் என இந்த இளந்தாயின் மனநிலை (மூட்) அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அதிகச்சோர்வு, கவலையுடன் இருப்பார்கள். நேரத்துக்கு உணவை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சரியான தூக்கம் இருக்காது. தன்னால், குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ அல்லது மற்றவர்களால் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற தேவையில்லாத அச்சம் அடிக்கடி மனதில் தோன்றும். இதனால் எப்போதும் ஒருவித படபடப்போடும், குழப்பத்தோடும் இருப்பார்கள். சில சமயங்களில் தற்கொலை எண்ணம் கூடத் தோன்றும்.

இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாகத் தாய், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே மனநோயாளியாக இருந்தால், போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ் ஏற்பட 25 முதல் 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பத்துக்கு முன்பாக மனநோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளைக் கர்ப்பமான பிறகு மாற்றுவார்கள். அப்படி மாற்றும் மருந்துகள் கூட மனநோய் ஏற்பட ஒரு காரணமாக அமைந்துவிடும். கர்ப்பத்துக்கு முன்பாக மனநோய் இல்லாத பட்சத்தில் மூன்று சதவிகிதம் இந்த நோய் தாக்க வாய்ப்பிருக்கிறது. ஆண் குழந்தை எதிர்பார்த்த நிலையில் பெண் குழந்தை பிறக்கும் போதும், பெண் குழந்தை எதிர்பார்க்கும் நிலையில் ஆண் குழந்தை பிறப்பதும் கூட இந்த மனநோய் ஏற்பட ஒரு காரணமாகலாம். பிரவசத்துக்கு நீண்ட நாட்கள் ஆகும்போது அதுவும் ஒருவிதமான மன அழுத்தத்துக்குக் காரணமாகிவிடும்.

குழந்தைகள் தன்னுடைய சாயலில் இருக்க வேண்டும் அல்லது கணவர் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு சில பெண்களுக்கு இருக்கும். ஆனால், இதில் மாறுதல் ஏற்படும்போது, மனநோய் ஏற்படலாம். இதையெல்லாம்விடக் குடும்பச் சூழ்நிலை முக்கியக் காரணமாக இருக்கிறது. குடிகார கணவன், மாமியார் கொடுமை, ஏழ்மை போன்ற காரணங்களும் மன அழுத்தம் ஏற்படக் காரணம். மூளையில் சுரக்கும் செரட்டோனின் என்ற நியூரோடிரான்ஸ்மிட்டர் மாற்றம் காரணமாகவும் மனநோய் ஏற்படலாம்.

பொதுவாகக் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்த மனநோயின் தாக்கம் குறைவாக இருக்கும். சமீபத்திய அபார்ட்மெண்ட் வாழ்க்கையில், கணவன்-மனைவி இருவர் மட்டுமே இருக்கும்போது, அதுவும் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கர்ப்ப காலத்திலும், பிரசவமான பிறகும் பெண்களுக்கு அதீத அன்பும் பரிவும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஆறுதலாகக் குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலே இதைப் பெருமளவு தவிர்க்கலாம். ஆனால், போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் போன்ற மனநோய் ஏற்பட்டவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்” என்றார்.‘‘பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு அல்ல... கர்ப்பம் உறுதியானவுடனே ஒருவித மன அழுத்தம் தொடங்கிவிடுகிறது. எனவே, கர்ப்பம் உறுதியானது முதலே மன அழுத்தம் தவிர்க்க வேண்டியது அவசியம்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் உமாதேவி.

“கர்ப்பம் தரிப்பதில், அதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான உணர்வை அடைவதால், ஹார்மோன்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. தாய்பாசம் என்ற அந்த உணர்வு அவர்களை உணர்ச்சிவயப்பட வைத்துக்கொண்டே இருக்கும். கர்ப்பம் உறுதியான நாள் முதல், தனது குழந்தைக்காகத் தனது உணவு முறையில் இருந்து பல்வேறு விஷயங்களை மாற்றிக்கொள்கிறார்கள். பரிசோதனை, பிரசவச்செலவு எனப் பொருளாதாரத்தில் எழும் திடீர் செலவுகளும் சில நேரங்களில் மன அழுத்தமாக மாறிவிடுகிறது. பிரசவ நேரம் நெருங்க நெருங்க, மேலும் பல்வேறு மன அழுத்தங்கள் அவர்களை ஆட்கொள்கின்றன.

தவிர, வீட்டுச்சூழல், கணவரின் அன்பு முழுமையாகக் கிடைக்காதது, ஏற்கெனவே குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பற்றிய நினைவு.. இப்படிப் பிரசவம் நடப்பதற்குள் அது தொடர்பான பல்வேறு அழுத்தங்கள் பெண்களை ஆட்கொள்கின்றன. இந்த அழுத்தம் அதிகமாகும் போது தற்கொலை எண்ணம் கூடத் தோன்றும். இதிலிருந்து பெண்கள் விடுபட, கர்ப்பம் முடிவானதும், கணவன், மனைவியை ஆறுதலாகவும், அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். ‘உனக்கு நான் இருக்கிறேன்... எதற்கும் கவலைப்படாதே’ என்ற அன்பை அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கும் சூழலில், ‘இந்தப் பிள்ளையை நாங்க பார்த்துக்கிறோம்... நீ தைரியமா இருக்க வேண்டும்’ என்ற ரீதியிலான புகுந்த வீட்டு மனிதர்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

தொடர் கவுன்சலிங் மூலமாக, பிரசவம் தொடர்பான பயத்தைப் போக்க வேண்டியது மருத்துவரின் கடமை. இப்படி அனைவரும் கூட்டுமுயற்சியாக இருந்து முறையான ஆலோசனை, அரவணைப்பைக் கொடுத்தால், மன அழுத்தம் குறையும். கர்ப்பம் உறுதியானவுடன், அதற்கான ஒரு தொகையைச் சேமிப்பில் வைத்துகொண்டே வந்தால் பொருளாதாரரீதியிலான மன அழுத்தத்தையும் தவிர்த்து விடலாம்” என்றார்.

 
Last edited:

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,759
Likes
35,125
Location
mysore
#2
Re: பெண்களைத் தாக்கும் போஸ்ட்பார்ட்டம் சை&

We have to take care of young mothers so that they will not develop this போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ் ! All the family members unitedly support the young mother by showing the love and affection, respect, kindness so that they will not get this depression. thank you!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.