பெண்கள் 360:

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#1
விருதுப் பட்டியலில் தலித் பெண் எழுத்தாளர்


விருதுப் பட்டியலில் தலித் பெண் எழுத்தாளர்
அமெரிக்கவாழ் இந்திய எழுத்தாளரான மிமி மண்டல் இந்த ஆண்டின் ஹியூகோ விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது அறிவியல் புனைவுகளுக்காக வழங்கப்படும் இலக்கிய விருது. தன்னை தலித் எனப் பெருமிதத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் மிமி மண்டல், கொல்கத்தாவில் பிறந்தவர். இந்தியாவிலும் ஸ்காட்லாந்திலும் படித்த அவர், தற்போது நியூயார்க்கில் வசித்துவருகிறார்.


கவிஞர், எழுத்தாளர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அலெக்ஸாண்ட்டிரா பியர்ஸி என்பவருடன் இணைந்து இவர் தொகுத்த ‘லுமினெஸென்ட் த்ரெட்ஸ்’ என்னும் புத்தகத்துக்காக ஹியூகோ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் லோகஸ் விருதுக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளரான ஆக்டேவியா இ. பட்லருக்குப் பிற எழுத்தாளர்கள் எழுதிய நாற்பது கடிதங்களை இவர் தொகுத்திருக்கிறார்.
மிருணாளினிக்கு மரியாதை
97 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த மிருணாளினி சாராபாய், பரதநாட்டியத்தின் அடையாளம். பத்ம பூஷன் விருது பெற்ற அவர் ‘நாட்டியப் பேரொளி’ என்று பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமானவர். நடனத்தைத் தன் வாழ்வின் சுவாசமாகக் கொண்ட அவர் , நடன வடிவமைப்பிலும் முத்திரை பதித்தவர்.


நடனத்தின் மீதான தன் காதலை நடனம் ஆடுவதோடு மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், பிறருக்கு அதைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் விரிவாக்கிக்கொண்டார். 1949-ல் அவர் தோற்றுவித்த ‘தர்பனா அகாடமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ எனும் பயிற்சிப் பள்ளியே அதற்குச் சான்று. கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு நூறாவது பிறந்தநாள். அந்த நாளில் அவரைக் கவுரவிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டது.
வெற்றியின் இரண்டு ஆண்டுகள்
நைஜீரியாப் பெண்களில் 25 சதவீதத்தினரின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதாக 2014-ல் வெளியான ஐ.நா. தரவுகள் தெரிவித்திருந்தன. மலட்டுத்தன்மை பேறுகால மரணம் பாலுறவு இன்ப வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும் அந்தக் கொடிய செயலைத் தடைசெய்யக் கோரி பெண்ணிய அமைப்புகள் போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்திவந்தனர். அதனால் சில மாநிலங்களில் அதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.


ஆனால், அந்தச் செயலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தடைக்கு எதிராகப் போராடியதால் பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் பெருந்துயருக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் போராட்டம் நடத்திய பெண்ணிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், எதிர்ப்பாளர்களின் மறுவாழ்வுக்காகவும் போராடத் தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து 2016 மே மாதம் நைஜீரியா முழுவதும் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. பெண்ணிய அமைப்புகளின் ஒற்றுமையாலும் மனஉறுதியாலும் கிடைத்த வெற்றிக்கு இந்த மாதத்தோடு இரண்டு வயதாகிறது.
வதந்தி பறித்த உயிர்
திருவண்ணாமலை மாவட்டம், அத்திமூர் கிராமத்தில் உள்ள முத்துமாரிஅம்மன் கோயிலுக்குச் செல்ல, சென்னை பழைய பல்லாவரத்திலிருந்து ருக்மணி என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் சென்றனர். அவர்கள் போளூரையடுத்த தம்புகொட்டான்பாறை கிராமத்தில் இருந்த நீலா என்ற பெண்ணிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த நீலாவின் இரண்டு பேத்திகளுக்கு மலேசியாவிலிருந்து வாங்கி வந்த சாக்லெட்களை ருக்மணி கொடுத்துள்ளனர்.

இதைப் பார்த்த கிராம மக்கள், அவர்களைக் குழந்தைக் கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து, கடுமையாகத் தாக்கியுள்ளனர். காரில் இருந்த மூதாட்டியையும் அந்தக் கும்பல் விட்டுவைக்கவில்லை. இந்த மூர்க்கமான தாக்குதலால் ருக்மணி உயிரிழந்தார். வதந்தியின் அடிப்படையில் நடைபெறும் கும்பல்வாதக் கொலைகள் சமீப காலமாக தமிழகத்திலும் அதிகரித்துவருவதையே ருக்மணியின் உயிரிழப்பு உணர்த்துகிறது.
- இரா.தினேஷ்குமார்
எண்ணமும் பேச்சும்: எஸ்.வி. சேகருக்கு மட்டும் ஏன் சலுகை?
பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம், சாமானிய மக்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதேபோல எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#2
ஈராக்கில் செங்கொடி பறக்கவிட்ட முதல் பெண்ஈராக்கில் செங்கொடி பறக்கவிட்ட முதல் பெண்
ஈராக்கின் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தத் தேர்தலில், ஈராக்கின் புனித நகரான நஜாபில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாப் அல் கதீப் எனும் பெண் வெற்றிபெற்றுள்ளார்.

அத்துடன், 2008-ல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராகக் காலணி வீசிய பெண் பத்திரிகையாளர் மும்தாஸ அல் செய்தி என்பவரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இஸ்லாமிய நாட்டில், அதுவும் அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்படும் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது ஆட்சியாளர்கள் மீதான மக்களின் வெறுப்பையும் எதிர்காலத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.
ரயில்களில் பெண்களுக்கான அபாய பொத்தான்
ரயிலில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் தொந்தரவுகளும் அதிகரித்துவருகின்றன. அதைக் கருத்தில்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வடகிழக்கு ரயில்வே முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக இரவு ரயில்களில் பெண் பாதுகாவலர்களை அனுப்பவும் பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதைத் தெரிவிப்பதற்கு ஆபத்தை உணர்த்தும் பொத்தான்களை ரயில் பெட்டிகளில் நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொத்தான், பெண்களால் எளிதில் இயக்கப்படும்வகையில் இருக்கைகளுக்கு அருகில் பொருத்தப்படும். இதை அழுத்தினால் அந்த ரயிலில் பாதுகாவலர்கள் அமர்ந்திருக்கும் பெட்டியில் ஒலியெழுப்பும். இனி, பெண்கள் பாதுகாப்புக்காக அவசர எண்ணையோ அபாயச் சங்கிலியையோ மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை.
கருக் கலைப்பால் பெண் மரணம்
சேலம் அருகில் இருக்கும் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் 23 வயதான லட்சுமி. நான்கு மாத கர்ப்பிணியான அவர், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பாலினம் கண்டறியும் சோதனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனைக்குப் பிறகு, லட்சுமியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். பெண் சிசு என்று தெரிந்ததும் தன் வயிற்றில் வளரும் கருவை லட்சுமி கலைக்கச் சொல்லியிருக்கிறார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர் உதவியோடு கரு கலைக்கப்பட்டது.
அப்போது நேர்ந்த அசாம்பாவிதத்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயக்கமடைந்த லட்சுமி, இறந்துவிட்டார். அந்த மருத்துவமனையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இதுபோன்ற கருக்கலைப்பு சம்பவங்கள் நடந்துவருவது பின்னர் தெரியவந்தது. வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவது சட்டப்படி தவறு. அதை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், பெண் கருக்கள் கலைக்கப்படுவதும் அதைச் சுமக்கும் தாய்மார்களின் உயிரிழப்பும் தொடர்கின்றன.
போலந்து ஓவியருக்கு மரியாதை
புகழ்பெற்றவர்களின் உருவப் படங்களை ரசனையோடு வரைந்து 1920-களில் உலகையே தன் பக்கம் திருப்பிய பெண் ஓவியர் தமரா டி லேம்பிக்கா. அவர் வரைந்த நிர்வாணச் சித்திரங்கள் புரட்சிகரமானவை. 1896 மே 16 அன்று போலந்தில் தமரா பிறந்தார். அவருடைய தந்தை ரஷ்யாவைச் சேர்ந்த யூத வழக்கறிஞர். முதல் உருவப் படத்தை தமரா வரைந்தபோது, அவருக்கு 10 வயது. ஓவியத்தின் மீதான தமராவின் காதல், இத்தாலியில் அவருடைய பாட்டியுடன் வசித்தபோது செழித்து வளர்ந்தது. அவருடைய பெற்றோரின் மணவாழ்வு முறிந்த பின், 1915-ல் தன் அத்தையைப் பார்க்க செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றுள்ளார்.
அங்கு ததேஸ் லாம்மிப் என்பவர் மேல் காதல்கொண்டவர், அதே ஆண்டில் அவரைத் திருமணமும் செய்துள்ளார். 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சி தமராவையும் அவருடைய கணவரையும் அகதிகளாக்கியது. அதன் பிறகு ஓவியத்தை முழுநேரத் தொழிலாகக்கொண்டு காலத்தால் மறையாத அற்புதமான ஓவியங்களை தமரா தீட்டினார். 1930-களில் அவரது படைப்புத் திறன் உச்சத்தில் ஜொலித்தது. 1980 மார்ச் 18 அன்று 81-வது வயதில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அவரது 120-வது பிறந்தநாள். அதைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு சிறப்பு டுடூலை கூகுள் வெளியிட்டது.
எண்ணமும் பேச்சும்: நாங்கள் சபிக்கப்பட்டவர்கள்
இந்தத் தலைமுறை நடிகைகள் சபிக்கப்பட்டவர்கள். ஹாலிவுட்டில் 40 வயதைத் தாண்டிய நடிகைகள்தாம் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. குஷ்பு, ரேவதி, நதியா போன்றோர் நாயகிகளாக இருந்தபோது பெண் கதாபாத்திரங்கள் வலுவாக இருந்தன. ஆனால், தற்போது நாயகிகள் நடனத்துக்கு மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். முன்னணி நட்சத்திர நடிகைகள் கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இயக்குநர்கள், நடிகைகளுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும். ‘அறம்’, ‘அருவி’ போன்ற படங்களைப் போல நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும்.
- ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#3
பெண்ணுரிமைக்குச் சிறை


பெண்ணுரிமைக்குச் சிறை
கடந்த மே 15 முதல் சவுதி அரேபியாவில் ஏழு பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வளைகுடா மனித உரிமை வாரியம் தெரிவித்துள்ளது. சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமைக்காகவும் ஒரு குடும்பத்தின் பாதுகாவலராக ஆண்கள் மட்டுமே இருக்கும் முறையை ஒழிப்பதற்காகவும் போராடியவர்கள் அந்த ஏழு பெண்கள். இவர்களில் லுஜெய்ன் அல் ஹத்லொல் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வாகனம் ஓட்டி நுழைய முயன்றதற்காக முதன்முறை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் 75 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஈமான் அல்-நஃப்ஜன் எனும் பிரபல சவுதி வலைப்பூ எழுத்தாளரும் கைது செய்யப்பட்டிப்பவர்களில் அடக்கம்.
சிகரம் தொட்ட சிறுமி
ஷிவாங்கி பதக் (16) ஹரியாணாவின் ஹிஸர் நகரைச் சேர்ந்தவர். உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டின் உச்சத்தை கடந்த வாரம் தொட்டு இவர் சாதனை படைத்திருக்கிறார். மே 7 அன்று மலையேறத் தொடங்கிய ஷிவாங்கி மூன்றே நாட்களில் எவரெஸ்ட்டின் அடிவார முகாமை அடைந்தார்.

பின்பு அங்கிருந்து, கடல் மட்டத்திலிருந்து 9 கி.மீ. உயரத்தில் இருக்கும் சிகரத்தை ஆறு நாட்களில் அடைந்துள்ளார். மலையேறத் தொடங்கும் முன் காஷ்மீரில் நான்கு மாதம் மேற்கொண்ட கடுமையான பயிற்சி இதற்கு உதவியுள்ளது. எவரெஸ்ட்டைத் தொட்டதும் தன்னையறியாமல் தேசிய கீதத்தைப் பாடியதாகக் கூறுகிறார்.
யூரிக்கு வயது 97

மே 19, 1921 -ல் கலிபோர்னியாவில் பிறந்த யூரி கொச்சியாமா ஒரு ஜப்பானியர். டிசம்பர் 7, 1941 -ல் பேர்ல் ஹார்பர் மீது வீசப்பட்ட குண்டு அவரது வாழ்வைப் புரட்டிப்போட்டது. நோயாளியான அவருடைய தந்தை அன்று கைது செய்யப்பட்டார். ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையானவர், அதற்கு அடுத்த நாளே மரணத்தைத் தழுவினார். அந்த நேரம் அமெரிக்காவில் இருந்த 1,20,000 ஜப்பானியர்களை அகதி முகாமில் அடைக்க அதிபர் ரூஸ்வெல்ட் உத்தரவிட்டார்.
யூரியின் குடும்பம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு குதிரை தொழுவத்தில் அடைக்கப்பட்டது. சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவமும் வலியும் அவரை மனித உரிமைப் போராளியாக்கியது. 1963- ல் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற போராளியான மல்கம் எக்ஸைச் சந்தித்துள்ளார். இன்று நடக்கும் பல போராட்டங்களுக்கும் அதை முன்னெடுத்துச் செல்லும் போராளிகளுக்கும் யூரிதான் முன்னோடி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
பழங்குடிப் பெண்களின் ருத்ர தாண்டவம்
கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள மணக்கடவு என்னும் இடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இந்த இடத்தில் இவர்களுக்காக மயான பூமியும் உள்ளது. மலைவாழ் மக்களின் மயானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்பதற்கு அவர்கள் பல்வேறு வழிகளில் போராடினர். ஆனால், அது எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இந்நிலையில் கடந்த திங்களன்று பொங்கியெழுந்த மலைவாழ் பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசை வாத்தியங்களுடன் தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடியபடி நூதன முறையில் மனு அளித்தனர்.


எண்ணமும் சொல்லும்: உதவுவது நம் கடமை
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளின் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உண்டு. இப்போது அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் அடுத்த வேளை உணவும் இருப்பிடமும் கேள்விக்குறியாக உள்ளன. இங்கிருக்கும் குழந்தைகள் எந்த எதிர்காலமும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பை மீறி அவர்கள் கண்ணில் தெரியும் வெறுமையை என்னால் உணர முடிகிறது. அவர்களுக்கு நம் உதவி தேவைப்படுகிறது.


- பிரியங்கா சோப்ரா, நடிகை, யுனிசெஃப் தூதர்
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#4
கௌரவத்தின் விலை உயிரா?


கௌரவத்தின் விலை உயிரா?
நீனு, கொல்லம் தென்மலையைச் சேர்ந்தவர். கெவின் பி ஜோசப், கோட்டயத்தைச் சேர்ந்தவர். கோட்டயத்தில் தங்கி கல்லூரியில் படித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. படிப்பை முடித்தபின் வேலைக்காக துபாய் சென்றுள்ளார் ஜோசப். நீனு, தென்மலையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய ஜோசப், நீனுவைத் திருமணம் செய்துகொள்ள நீனுவின் பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.


சாதியும் பொருளாதார ஏற்றத் தாழ்வும் இவர்களது திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்டன. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். வசதி படைத்த நீனுவினுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள், நீனுவை அவருடைய பெற்றோருடன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.
நீனுவின் அண்ணன் உள்பட 12 பேர் ஜோசப்பைத் தாக்கி, கடத்திச்சென்றனர். நீனு தன் அண்ணன் சானுசாக்கோவின் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் ஜோசப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் கலப்புத் திருமணம் செய்ததால், ஜோசப் கவுரவ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் நீனு தன்னுடைய கணவரை இழந்துள்ளார்.


ஒன்றுபட்டால் உண்டு வெற்றி
உத்தரப் பிரதேசத்தில் கைரானா தொகுதியில் பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங், பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் போட்டியிட்டார். 47 வயது நிரம்பிய அவர் மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தில், உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் எம்.பி அவர்தான். 2009-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தபசம் முதன்முறையாக வெற்றி பெற்றார்.
அதன் பின் நடந்த குடும்ப சண்டை, அரசியல் சூழ்ச்சி போன்றவை 2014 தேர்தலில் அவருக்குப் பின்னடவை ஏற்படுத்தின. ஆனால், இந்த முறை சாமர்த்தியமாகக் குடும்பத்தையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி வாகை சூடியுள்ளார். வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தபசம், ‘‘எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவுக்குத் தோல்விதான் என்பதை எனது வெற்றி நிரூபித்துவிட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தனர். இருப்பினும் மக்கள் தீர்ப்பு அவர்களை வீழ்த்தியுள்ளது. 2019 மக்களவை தேர்தலிலும் இதே முறையில் பாஜகவைத் தோற்கடிப்போம். மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்’’ என்றார்.


டென்மார்க்கிலும் தடை
‘இருவர் சந்தித்துக்கொள்ளும்போது ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொள்வது எதிரில் உள்ளவரை அவமதிக்கும் செயல். முகத்தைத் திரையிட்டு மறைக்கும் பர்தாவை அணிவதற்கு விரைவில் தடை விதிக்கப்படும்’ என்று டென்மார்க் நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கூறினார். அதன் தொடர்ச்சியாக, டென்மார்க் அரசு இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது குறித்து கடந்த வாரம் வாக்கெடுப்பு நடத்தியது.
அந்த வாக்கெடுப்பில் 75 பேர் பெண்கள் பர்தா அணிய தடைவிதிக்க வேண்டும் என வாக்களித்தனர். வெறும் 30 பேர் மட்டுமே தடை விதிக்க வேண்டாம் என்று வாக்களித்தனர். இதனால், டென்மார்க்கில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1 முதல் அந்தத் தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வறுமையை எழுத்தால் வென்றவர்
அல்ஃபோன்ஸினா ஸ்ட்ரோனி, லத்தீன் அமெரிக்காவின் நவீன கவிஞர், பெண்ணியவாதி. 27 வயதுக்குள்ளாக ஆறு சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் பல கட்டுரை தொகுப்புகளையும் எழுதியவர். 16 வயதிலேயே பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கிவிட்டார். 1892 மே 29-ல் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சலா கேப்ரியஸ்காவில் பிறந்தார். இத்தாலியரான அவருடைய தந்தை அர்ஜெண்டினாவின் சான் ஜூவான் நகரில் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்துவந்தார். சிறு வயதில் ஸ்ட்ரோனி பல்வேறு வேலைகளைப் பார்த்துள்ளார்.
1907-ல் ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்து நாடு முழுவதும் சுற்றிவந்துள்ளார். இளம் பருவத்தில் அவரை வறுமை வாட்டியெடுத்தது. அதையும் மீறி அவர் தன் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். 1920-ல் அவர் எழுதிய லாங்குயிடிஷ் எனும் புத்தகம், அவருக்கு அர்ஜெண்டினாவின் தேசிய இலக்கிய விருதைப் பெற்று தந்தது. 1938 அக்டோபர் 25 அன்று அதிகாலை ஒரு மணிக்கு நீந்துவதற்காகக் கடலுக்குள் சென்றவர் உடலாகத் திரும்பி வந்தார். அவரது 126-வது பிறந்தநாளைக் கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுலை கடந்த செவ்வாய் அன்று கூகுள் நிறுவனம் வெளியிட்டது.
எண்ணமும் சொல்லும்: ஆட்சியர் எங்கே?
தூத்துக்குடியில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் எல்லாம் எங்கே போனார்கள்? எங்களை ஏன் அவர்கள் வந்து பார்க்கவில்லை? எங்களைப் பார்த்து அமைச்சர் ஏன் பயந்து ஓடுகிறார்? ஆட்சியர் எங்கே போனார்? மக்களைப் பாதுகாப்பதைவிட, மக்களைக் கொல்பவர்களைக் காப்பதுதான் அரசின் வேலையா? எங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் 11 லட்சம் தருகிறோம். அவர்கள் குடும்பத்தில் யாரேனும் சாகத் தயாரா?
- ஸ்டெர்லைட் போராட்டக் களத்தைச் சேர்ந்த பெண்ணின் வீடியோ பதிவிலிருந்து.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#5
நீட் பறித்த உயிர்கள்


நீட் பறித்த உயிர்கள்
பிரதீபா, செஞ்சியை அடுத்த பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றிருந்தார். தனியார் கல்லூரியில் சேர்க்கும் அளவுக்கு, கூலித் தொழிலாளியான அவர் தந்தையிடம் வசதி இல்லை. அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவு திங்கள் அன்று வெளியானது. தேர்வு எழுதிய 1,14,602 தமிழக மாணவர்களில் 45,336 மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்ச்சி பெறாதவர்களில் பிரதீபாவும் ஒருவர். 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற விரக்தியில் பிரதீபா தன் வாழ்வை முடித்துக்கொண்டார். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்றிருந்தார். பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் எடுத்திருந்தார். பிரதீபாவின் தற்கொலையின் வேதனை மறையும் முன்னே, திருச்சியைச் சேர்ந்த 17 வயது சுபஸ்ரீயும் தற்கொலை செய்துகொண்டது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலையைத் தொடரும் இந்த இரண்டு மரணங்கள் நீட்டின் மீதான நம்பிக்கையையும் ஏழைக் குழந்தைகளின் மருத்துவக் கனவையும் சிதைத்துள்ளன.


மாதவிடாய் வறுமை
சானிட்டரி நாப்கின்கள், சுகாதாரமான கழிவறை, சுத்தமான தண்ணீர் போன்றவை பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் தேவைப்படுபவை. வறுமை காரணமாக அவை பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், அது ‘ப்ரியட் பாவெர்ட்டி’ என்றழைக்கப்படுகிறது. தெற்காசியாவில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான மாணவிகள் இதன் காரணமாகப் பள்ளிக்குச் செல்வதில்லை என யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் இதன் காரணமாக 60 சதவீத மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில்லை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தங்களுக்கு பருவம் அடையும் வரை, 71 சதவீத இந்திய மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து எதுவுமே தெரியவில்லை என அதன் தரவுகள் தெரிவிக்கின்றன. கற்பது பெண்களின் அடிப்படை உரிமை. ‘ப்ரியட் பாவெர்ட்டி’ அந்த உரிமையை நீர்த்துப் போகச் செய்கிறது. சுத்தமான தண்ணீரும் சுகாதாரமான கழிவறையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டி வைத்து மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பெற்றோர்களும் பேச முன் வருவோம் ‘பிரீயட் பாவெர்ட்டி’யை ஒழிப்போம்.


கல்வியைக் காவு வாங்கும் வன்முறை
ஆப்கானிஸ்தானில் வறுமை, பாதுகாப்பு அச்சுறுத்தல், பெண்களுக்கு எதிரான பாகுபாடு, உள்நாட்டுப் போர் ஆகியவை காரணமாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. பள்ளிக்குச் சென்ற 30 லட்சம் பெண் குழந்தைகளில் தற்போது 60 சதவீதத்துக்கும் மேலானோர் கல்வி கற்கவில்லை. குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கு தாலிபான் தடை விதித்திருப்பதால், 7 முதல் 17 வயது வரையிலான பெண் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, கந்தகார், ஹெல்மன்ட், வார்டாக், பாக்டிகா, ஜாபுல், ஓருஸ்கான் ஆகிய பகுதியில் 85 சதவீதப் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இடப்பெயர்வு மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்காத பெண் குழந்தைகளின் விகிதம் ஆப்கானிஸ்தானைக் காட்டிலும், அந்நாட்டுக்கு அருகில் உள்ள பாகிஸ்தானிலும் நேபாளத்திலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் தேவை இல்லாத தீய செயல்களில் அவர்கள் ஈடுபட நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.


என் குழந்தை நலம்தானா?
டாக்டர் வர்ஜீனியா அப்கார், மயக்கவியல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. 1909-ல் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் அவர் பிறந்தார். 1933-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1949-ல் வர்ஜீனியா அறுவைசிகிச்சை மருத்துவக் கல்லூரியின் முதல் மயக்கவியல் பெண் பேராசிரியரானார். பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்காக 1952-ல் ‘அப்கார் ஸ்கோ’ரை உருவாக்கினார்.


குழந்தைகளின் ஆரோக்கியம் இன்றும் இந்த மதிப்பீட்டின் படிதான் அளவிடப்படுகிறது. 1959-ல் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொதுச் சுகாதாரத்தில் அவர் பட்டம் பெற்றார். 1972-ல் ‘இஸ் மை பேபி ஆல் ரைட்?’ என்ற புத்தகத்தை ஜோன் பெக் என்ற எழுத்தாளருடன் இணைந்து எழுதியுள்ளார். 1972-ல் ஆகஸ்ட் 7 அன்று 65-ம் வயதில் அவர் மரணம் அடைந்தார். அப்காரின் 109-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமான டூடுலைக் கடந்த வியாழனன்று கூகுள் வெளியிட்டது.

எண்ணமும் சொல்லும்: பேனாவை மிரட்டும் புள்ளிகள்
நான் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறேன். சக்தி வாய்ந்த சிலர் என்னை அச்சுறுத்துகின்றனர். எனது குடும்பம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளரான என்னைத் தடுத்து நிறுத்தவும், எனது செய்தியின் திட்டங்களைத் தடுக்கவும் சிலர் முயல்கிறார்கள். என்னையும் எனது திட்டங்களையும் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிக்கிறார்கள். எனது செல்போன், வருமானவரி வழக்குகள், என் மீதான குற்றம் ஆகியவற்றை அவர்கள் கண்காணித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரிடம் புகார் அளித்துள்ளேன். சுதந்திர நாட்டில் இருக்கும் எனக்குப் பாதுகாப்பு மற்றும் உரிமை கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் செய்தி நிறுவனத்தில் வேலைபார்ப்பதைத் தடுப்பதற்கு அரசு துணை நின்றாலோ எனது வீடு மற்றும் தொலைபேசி கண்காணிக்கப்பட்டாலோ, அது சட்டவிரோதமானது. மேலும் மனித உரிமை மீறலாகும்.
- மூத்த பத்திரிகையாளரும் பத்திரிக்கை ஆசிரியருமான பர்கா தத்தின் டிவிட்டர் பதிவிலிருந்து
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.