பெருங்காயம் - Asafoetida

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பெருங்காயம்

கு.சிவராமன் சித்த மருத்துவர்காலிப் பெருங்காய டப்பா” என தோற்றுப்போனவர்களைச் சமூகம் ஏளனப்படுத்தும் சொல் நமக்கு நினைவிருக்கும். பெருங்காயம் அப்படியான சமாச்சாரம் அல்ல. அதன் மணத்தைக் கண்டு முகம் சுளித்த அமெரிக்கர், ஒருகாலத்தில் அதைப் பிசாசு மலம் என ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. இப்போது, நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப் போல, ஸ்பானிஷ் ஃப்ளூ பல்லாயிரம் பேரை 1910-களில் கொன்று குவித்தது.

பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராக செயலுற்றதைக் கண்டறிந்து, பெருங்காயத்தைக் கழுத்தில் தாயத்து மாதிரி அவர்கள் கட்டித் திரிந்ததும், அதன் பின், அதற்கு ‘கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டதும் வரலாறு சொல்லும் செய்திகள்.

பன்றிக் காய்ச்சல் தடுக்கும் பெருங்காயம் தைவானில் உள்ள ஆய்வாளர்கள் இந்த பெருங்காயம் பன்றிக்காய்ச்சலுக்குப் பயனாகும் அமாட்டடின்/சைமடின் வைரஸ் மருந்துகளைப் போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக்கொண்டது எனக் கண்டறிந்தனர். அதன் பின், ஏன் இந்தப் பெருங்காயம் நல்ல மாத்திரைகளாக வரவில்லை என்ற செய்தி தெரியவில்லை.

மருந்து அரசியல், காப்புரிமை மருத்துவ வணிகத்தில் சிக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். நாம், இப்போது கொளுத்தும் வெயிலில், தினம் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடலும் குளிரும், கால்சியமும் பெருகும், லாக்டோபாசில்லஸ் எனும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச் சுருட்டக்கூடும்.

கலப்படப் பெருங்காயம்?
நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதுவே, கருத்திருந்தால் வாங்க வேண்டாம். பெருங்காயத்தில் நடக்கும் கலப்படங்கள் ஏராளம். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும்.

சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்த்துப் பெருங்காயம் சந்தையில் உலாவுவதால், மூக்கைத் துளைக்கும் வாசம் தந்தாலும், கண்ணை விரித்துப்பார்த்துதான் காயம் வாங்க வேண்டும். அதே போல், அதன் மணம் எளிதில் போய்விடுமாதலால், நல்ல காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருப்பது, அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கும்.

பெண்களைக் காக்கும் பெருங்காயம்
பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.

கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.

குழந்தை பிறந்த பின்
கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற, காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது. இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம்.

அஜீரணம் போக்கும்
அஜீரணத்துக்குப் பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. புலால் சமைத்தாலும் சரி, வாயு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போது, துளிப் பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, பெருங்காயம் இரண்டரை கிராம் (பிற பொருள் அளவின் கால் பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்துவைத்து, சோற்றில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையைச் சாப்பிட்டுப் பின் சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண், (Gastric oesophagal Reflex Disease-GERD), முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத் தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு, எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொண்டு, காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்கள் சாப்பிட, வாயுக்குத்து முழுமையாய் நீங்கும்.

அதற்கு முன்னர் வந்திருப்பது, ஜீரணம் தொடர்பான வலியா, அல்லது ஒரு வகையான நெஞ்சு வலியா (Unstable angina) என உறுதிப்படுத்துவது மிக அவசியம். இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி, நீர் மலமாய்ப் போகும் குடல் அழற்சி நோய்களிலும் பயனளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓம நீரில், துளிக் காயப் பொடி கலந்துகொடுக்க, மாந்தக் கழிச்சலை நீக்கி, சரியான பசியைக் கொடுக்கும்.

ஜீரணம் மட்டுமல்ல. புற்றுநோயிலும்கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
 
Last edited:

vasanthi

Friends's of Penmai
Joined
May 18, 2011
Messages
417
Likes
168
Location
chennai
#2
perungayathin vasanaithan theriyum adan payangalai thagavalai thanthatharku nandri
vasanthi
mct
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
காயமே இது பொய்யடா!


என்ன இருக்கிறது?

`சமையல் வாசம் மூக்கைத் துளைக்கிறதே!’ என்று வீட்டில் நுழையும்போதே வாசனை பிடிப்போம். அந்த வாசனைக்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பெருங்காயமே. நம் நாட்டின் பாரம்பரிய சமையலில் கட்டாயம் இடம் பெறுவது பெருங்காயம். நறுமணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் பயன்படுத்தும் பெருங்காயத்தை சித்த, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள்.இந்த பெருமைமிகு பெருங்காயத்தில் பசையும், மைதாவும் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள் என்கிறார்களே! இது உண்மையா? பெருங்காயத்தில் எந்த பொருட்களை, என்ன விகிதத்தில் சேர்க்க வேண்டும்? அதன் மருத்துவ பயன்கள் என்ன? கலப்படம் செய்த பெருங்காயத்தை எப்படி கண்டுபிடிப்பது? கேள்விக்கணைகளை சித்த மருத்துவர் அபிராமியின் முன் வைத்தோம்...


``பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசபொட்டிடா’. ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.

முதலில் கட்டி பெருங்காயமாக தயாரித்தார்கள். அதுவே பொடித்து கருவேல பிசின், கோதுமை இரண்டும் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்தக் கலவையே கூட்டுப் பெருங்காயம் என்று சொல்கிறார்கள். கலவையில் சேர்க்கப்படும் கருவேல பிசினை கம் அராபிக் (Gum Arabic) என டப்பாவில் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் பசை என சிலர் நினைத்து கொள்கிறார்கள்.

அது தவறு. பெருங்காயத்தை அதன் ஒரிஜினல் வடிவத்தில் சமையலில் சேர்க்க முடியாது. காரம் மிக அதிகமாக இருக்கும். ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உபயோகிக்க முடியாது. இதனால் பெருங்காய தயாரிப்பு நிறுவனங்கள் அதோடு கொஞ்சம் கருவேல பிசின் மற்றும் கோதுமையை கலந்து பவுடராக்கி விற்பனை செய்கின்றன.

சில நிறுவனங்கள் கோதுமைக்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் மைதாவை பெருங்காயத்தில் கலக்கின்றன. மைதா சேர்த்தால் பெருங்காயத்தின் மருத்துவத் தன்மை குறைந்துவிடும். இன்னும் சில நிறுவனங்கள் லாபநோக்கோடு பெருங்காய எசன்ஸை கலக்கிறார்கள். இதில் வெறும் வாசனைதான் இருக்கும். இப்படி கலப்பட முறையில் தயாரிக்கும் பெருங்காயம் எந்த விதத்திலும் பயனைத் தராது.

பெருங்காயத்தின் கழிவுகள், குப்பைகள், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றைக் கலந்து பெருங்காயம் என்ற பெயரில் தயாரித்து விற்கிறார்கள். இந்தக் கழிவுகளுடன் வாசனைக்காக சிறிது எசன்ஸை மட்டும் கலந்து விடுவார்கள். தரமற்ற இந்த விற்பனை தொடராமல், உணவுக்கட்டுப்பாட்டு நிறுவனம் கட்டுப்படுத்த வேண்டும்.

பெருங்காய பலன்கள்

* குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி. சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப்பொடியில் பயன்படுத்தப்படுகிறது.

* குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்
காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகிவிடும்.

* மாதவிலக்கு சரியாக வராமலும், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.

* சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம்.

* பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும்.

* தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. மலச்சிக்கலை சரியாக்கும். நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எது ஒரிஜினல்?

இத்தனை மருத்துவ பயன்கள் உள்ள பெருங்காயத்தை கலப்படம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டும் தவிர்க்க வேண்டியதில்லை. நீங்கள் வாங்கும் பெருங்காயம் உண்மையானதுதானா என்று கண்டறிய, அதை ஒரு தம்ளர் தண்ணீரில் கரைக்க வேண்டும். ஒரிஜினல் எனில் நீரில் நன்கு கரைந்து பால் போல காட்சியளிக்கும். கலப்படம் இருந்தால் கரையாமல் குப்பை போல நீரின் மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதோடு சிறு கட்டிகளாக மிதக்கும். இந்த சோதனையை நீங்களே வீட்டில் செய்து பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்க நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை மட்டுமே பயன்படுத்துவோம். பால் பெருங்காயத்தில் கோதுமை, கருவேல பிசினின் கலப்பு குறைவாகவே இருக்கும்.

சில லேகியங்கள், சூரணங்கள் தயாரிப்பில் பால் பெருங்காயத்தை பயன்படுத்துகிறோம். எனவே, தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத்தை வாங்கிப் பயன்படுத்தினால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளைகரைக்கும் திறனும் உண்டு. மலச்சிக்கலை சரியாக்கும். நிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும்ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு என சில ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.