பேச்சிலர் ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் 7 வழிகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பேச்சிலர் ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் 7 வழிகள்

30 வயதில் சர்க்கரை நோய், 40 வயதில் மூட்டு வலி, 50 வயதில் மாரடைப்பு என சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை மருத்துவத்துக்கே செலவிடும் நிலை வந்துவிட்டது. சிறு வயதில் இருந்தே அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் பற்றிய சரியான புரிதல் இன்மையே பல்வேறு பிரச்னைகளுக்கும் அடித்தளம். கல்லூரி முடித்து, வேலைக்குச் சேர்ந்த, திருமணம் ஆவதற்கு முன்பான இடைப்பட்ட காலம் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமானது. கல்லூரிப் படிப்பு முடியும் வரை பெற்றோரின் கண்டிப்பில் வளர்ந்தவர்களுக்கு, வேலைக்காகப் பெற்றோரைப் பிரியும்போது, இயல்பாகவே ஒரு சுதந்திரமான உணர்வு இருக்கும்.

புதிய ஊர், புதிய சூழல், புதிய மரியாதை, புதிய வேலை, கையில் சுயமாக உழைத்த பணம், அந்தப் பணத்தைச் சுதந்திரமாகச் செலவிடும் வாய்ப்பு என சகலமும் மாறும்போது மனதளவில் குதூகலமாக இருக்கும். காலையில், ‘நேரமாச்சு எந்திரி’ என எழுப்புவதற்கோ, ‘பல் துலக்கு, குளித்துவிட்டு வெளியே செல், டிபன் சாப்பிட்டுட்டுப் போ’ எனச் சொல்வதற்கோ யாரும் இல்லாததால், இஷ்டம் போல வாழத் தோன்றும்.

இதனால், சுதந்திரம் என நினைத்துக்கொண்டு, நேரம் கெட்ட நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது, உணவு உட்கொள்வது என நாம் செய்யும் வாழ்க்கைமுறைத் தவறுகள் எதிர்காலத்தில் சர்க்கரை நோய் தொடங்கி, மன அழுத்தம் வரை எல்லாவற்றுக்கும் மூலக் காரணமாக மாறிவிடுகிறது. பேச்சிலர் லைஃபில் செய்யும் இதுபோன்ற சிறுசிறு தவறுகளைத் திருத்திக்கொள்வதன் மூலம் எதிர்காலம் ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். இனி பேச்சிலர்களுக்கான ஹெல்த்தி லைஃப்ஸ்டைலுக்கு சில ஸ்பெஷல் டிப்ஸ்...
காலை உணவு அவசியம்!
நாள் முழுதும் ஓடுவதற்கான ஆற்றலைத் தருவது காலை உணவுதான். அதைத் தவிர்க்கக் கூடாது. 10 நிமிடங்களில் எளிமையாகத் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டிஷ்கள் இங்கே...

10 மினிட்ஸ் டிஷ்
அறையில் எப்போதும் ஏதாவது பழங்கள், நட்ஸ், பால் போன்றவை இருக்கட்டும். காலையில் எந்தப் பழம் இருக்கிறதோ அதனைச் சிறிது நறுக்கி, ஒரு டம்ளர் பால் சேர்த்து, இனிப்புக்குக் கருப்பட்டி சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால், மில்க் ஷேக் ரெடி. புரதம், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைத்துவிடும்.

எளிதாகத் தயாரிக்கக்கூடியது கேழ்வரகுக் கஞ்சி. கேழ்வரகு மாவைத் தண்ணீரில் கரைத்து, ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பாலில் சிறிது கருப்பட்டி சேர்த்துக் கரைத்து, கேழ்வரகு மாவுடன் சேர்த்தால், கேழ்வரகுக் கஞ்சி ரெடி. இதில், கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைவாக உள்ளன.

முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடலாம். கோதுமை பிரெட் வாங்கி வைத்துக்கொண்டால், பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். முட்டையில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் நிறைவாக உள்ளன.பேச்சிலர் பிரச்னைகள்
ஆண்கள்

ஹார்மோன் சமநிலை இன்மை இருக்கும். பழக்கவழக்கங்கள் மாறும்போது திடீரென மூன்று மாதங்களிலேயே உடல் எடை அதிகரித்துவிடும்.


தண்ணீர் மாற்றம், ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, முடி கொட்ட ஆரம்பிக்கும், சருமம் வெடித்துக் காணப்படும். கழுத்துக்குக் கீழே, தோல் கறுப்பாகி தடிமனாகும். தேகம் பொலிவு இழக்கும்.


அதிகம் சாப்பிட வேண்டும் எனும் உணர்வு (Binge Eating ) இருக்கும். சிலர் சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.

பெண்கள்

ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக, மாதவிலக்கு சீராக இருக்காது. சோர்வாகவே இருப்பார்கள்.


ஹாஸ்டல் போன்ற இடங்களில் சாப்பிடும்போது, ஒரே வகையான உணவுகளைச் சாப்பிடுவதால், நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காது.


உடல் எடை அதிகரித்து, பி.சி.ஓ.டி உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படும்.

[HR][/HR]
ஹோட்டல் உணவு ஆபத்து!

சோம்பல் என்பது கிருமியைப் போல, ஆளையே அரித்துவிடும். சோம்பலை கைவிட்டால், ஹோட்டல் உணவைத் தவிர்க்க முடியும்.


அலுவலக வேலை முடிந்து சோர்வாக வந்து ஹோட்டல்களில், ரோட்டோரக் கடைகளில் வயிறு நிறையச் சாப்பிடுவது தவறு. இந்தப் பழக்கம்தான் நோய்களுக்கு முதல் காரணம். ஹோட்டல் உணவுகளில் நுண்ணூட்டச்சத்துக்கள் அறவே இருக்காது. உணவு அடிக்கடி சூடுபடுத்தப்படும். மாவுச்சத்து மட்டுமே இருக்கும். அளவுக்கு அதிகமான மாவுச்சத்து உடலில் கொழுப்பாக மாறிவிடும். இப்படிச் சாப்பிடுவதால், உடலில் இரவு நேரத்தில் வேகமாக நடக்கும் வளர்சிதை மாற்றம் மெதுவாகும். இதனால், நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்.


மது, சிகரெட் எந்த அளவுக்கு ஆபத்தோ, அதே அளவுக்கு ஹோட்டல் உணவுகளும் உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

[HR][/HR]


மாற்று என்ன?
சமையல் என்பது ஒரு கலை என்றெல்லாம் ஒதுக்கிவைக்கத் தேவை இல்லை. நமக்கான உணவை நாம் தயாரிக்க வேண்டும். அது நமது பொறுப்பு. அறையில் மிக எளிமையாக உணவுகளைத் தயார் செய்ய முடியும்.

1. அறையில் என்னென்ன காய்கறிகள் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் எடுத்து நறுக்கி, ஒரு கப் அரிசி சேர்த்து, குக்கரில் வேகவைத்தால் ஊட்டச்சத்து மிகுந்த வெஜிடபிள் சாதம் ரெடி.

2. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாலட் செய்து சாப்பிடலாம்.

3. அவலைத் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து, கொஞ்சம் பால், வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், பசி அடங்கிவிடும்.

4. கேன் தண்ணீர், ஹோட்டல் தண்ணீர் இரண்டுமே நல்லவை அல்ல. எனவே, அறையில் தண்ணீரைச் சூடுபடுத்தி, ஆறவைத்துக் குடியுங்கள்.

[HR][/HR]


ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி!
கல்லூரி முடிக்கும் வரை தினமும் அதிக தூரம் நடந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிகளில் விளையாடுவது, தெருவில், மைதானங்களில் விளையாடுவது போன்ற காரணங்களால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஆனால், வேலைக்குச் சேர்ந்தவுடன் நடப்பதே அரிதாகிவிடும். விளையாட்டும் இல்லை, உடற்பயிற்சியும் இல்லை எனும்போது, உடலில் செரிமானமாகி வெளியேறவேண்டிய கழிவுகள் மெதுவாக வெளியேறும். உடற்பயிற்சி செய்யாததால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஓவர்டைம் வேலை பார்த்து, நம்மை நலமாக வைத்திருக்கும். ஆனால், எவ்வளவு காலம்தான் உள்ளுறுப்புகளால் ஓவர்டைம் வேலை பார்க்க முடியும்? அதிக நேரம் வேலை செய்வதால், அதன் செயல்திறன் படிப்படியாகக் குறைந்து, சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் போன்றவை வந்துவிடும். இதைத் தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். உயரத்துக்கு ஏற்றவகையில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதே போதுமானது.

அறையிலேயே எந்தக் கருவிகளின் உதவியும் இன்றி, சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

அலுவலகத்தில் உள்ள ஜிம்களைப் பயன்படுத்தலாம். அதிகப் பரப்பளவுள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுடைய அலுவலகத்தை இரண்டு சுற்று சுற்றிவருவது உடலுக்கு நல்லது.

காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். அதிகாலையில் தூய்மையான காற்றைச் சுவாசித்தவாறு, மொட்டைமாடியில் யோகா செய்வது நல்லது.


21 - 28 வயதில்தான் உடல் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கும். இந்த வயதில் பெரிய உடல் நலப் பிரச்னைகள் இருக்காது என்பதால், உடற்பயிற்சி செய்து உடலை நல்ல டோனில் வைத்திருப்பது, அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும்.

[HR][/HR]
செலவைத் திட்டமிடுங்கள்!

மாதத் தொடக்கத்தில் உணவுக்கு அதிகமாகச் செலவிடுவதையும், மாதக் கடைசியில் சாப்பிடாமல் இருப்பதையும் தவிர்க்க திட்டமிடல் அவசியம்.

1. மாத பட்ஜெட்டைத் தயார் செய்யுங்கள். அன்றாட உணவுக்கு என ஒரு தொகையை முன்பே எடுத்துவைத்து, தினமும் திட்டமிட்டபடி செலவிடவும்.

2. ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, அறையிலேயே எளிமையாகச் சமைத்துச் சாப்பிடும்போது, உடலுக்குச் சத்து கிடைப்பதோடு, உணவுக்காகச் செலவிடும் தொகையில் 60 சதவிகிதம் குறையும்.

3. அவசர மருத்துவமனைச் செலவுகளுக்கும், திடீரென சொந்த ஊருக்குச் செல்ல நேரும் செலவுகளுக்கும் என, குறிப்பிட்ட தொகையைச் சேமித்துவைப்பது நல்லது.
[HR][/HR]
சுத்தம்! சுத்தம்! சுத்தம்!
நல்லொழுக்கத்தின் முதல் படி, தங்கியிருக்கும் அறை முதல் டாய்லெட் வரை வசிப்பிடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதே.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின் பருவத்தை எட்டியவுடன், அவர்கள் துணிகளை அவர்களே துவைக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


ஒரு வாரம் முழுவதும் துணிகளைச் சேர்த்து, ஒரே நாளில் துவைப்பது தவறு.


உள்ளாடைகளைத் தினமும் துவைத்துக் காயவைத்து, எடுத்துக்கொள்ள வேண்டும். தலையணை உறை, பெட்ஷீட் போன்றவற்றை வாரம் ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது தங்கியுள்ள அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.


அறைக்குள் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டாம். அறைக்கு வெளியே வைக்க வேண்டும். குப்பைத்தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம்.

[HR][/HR]
சிகரெட், மது வேண்டாம்!

மது அருந்தினால்தான் கெத்து, மது அருந்துபவர்கள் வீரமானவர்கள், மாடர்னானவர்கள், சிகெரெட் பிடிப்பதுதான் ஸ்டைல், போதைவஸ்துகளைப் பயன்படுத்தினால்தான் மூளை நன்றாக வேலை செய்யும் போன்றவை அனைத்தும் கட்டுக்கதைகள்தான். போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது, உடலுக்கு கேடு மட்டும் அல்ல. அது ஒரு ஒழுக்கக்கேடான செயல், சமூகத் தீங்கு என்பதை உணர வேண்டும்.

புகை மற்றும் மது இரண்டுமே மெல்லக் கொல்லும் ஸ்லோ பாய்சன். இவற்றை எடுத்துக்கொள்வது தற்கொலைக்குச் சமம். தீய பழக்கங்கள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வயது இது. இந்த வயதில் கவனமுடன் இருந்தால், பிறகு வாழ்க்கை முழுவதும் தீய பழக்கங்களை அண்டவிடாமல் தடுக்க முடியும்.


உங்கள் நண்பர்கள் சிகெரெட் பிடிக்க வற்புறுத்தினாலோ, மது அருந்தச் சொன்னாலோ, கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். ட்ரீட் என்ற பெயரில் மது, சிகெரெட் போன்றவற்றைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

[HR][/HR]
தனிமை தவிர்!
அலுவலக விடுமுறையன்று நாள் முழுவதும் உறங்குவதையோ, குளிக்காமல் உட்கார்ந்தே இருப்பதையோ தவிருங்கள். நீங்கள் தங்கி உள்ள ஊரைச் சுற்றி வலம் வாருங்கள். நண்பர்களோடு அரை நாளைச் செலவிடுங்கள். அரை நாள் ஓய்வெடுங்கள்.

தினமும் பெற்றோருடன் செல்போன் மூலம் பேசுவது அவசியம். பெற்றோருடன் அடிக்கடி பேசும்போது, தனிமை உணர்வு மறையும். அவர்கள் கண்காணிப்பில் இருப்பது உங்களை நல்வழிப்படுத்தும்.

உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது அவசியம். கராத்தே, நீச்சல், ஜூம்பா டான்ஸ், ஏரோபிக்ஸ், சங்கீதம் எனப் புதிதாகக் கற்றுகொண்டே இருப்பது, உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் எளிய வழி.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.