பேபி ஃபேக்டரி-சோதனை மேல் சோதனை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,663
Likes
18,542
Location
chennai
#1
சோதனை மேல் சோதனை


திருமணத்துக்கு முன்பும், திருமணமான புதிதிலும் `நீ பாதி... நான் பாதி கண்ணே...’ என்பதாக இருக்கிற கணவன்-மனைவி உறவு, ஆசையும் மோகமும் முடிந்து போகிற மூன்று மாதங்களுக்குள் தலைகீழாக மாறித்தான் போகிறது. நடக்கிற நல்லதுகளுக்கெல்லாம் தான் மட்டுமே பொறுப்பு என்றும் அல்லதுகளுக்கு தன் துணையே காரணம் என்றும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொள்வதும் ெதாடர்கதையாகும். வேறு எந்த விஷயத்துக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, குழந்தை இல்லாத தம்பதியர் விஷயத்தில் மிகவும் பொருந்தும்.குழந்தையின்மைக்குப் பெண்களை மட்டுமே காரணம் காட்டி வந்த தலைமுறைகள் மாறி, இன்று ஆண்களிடமும் பிரச்னைகள் இருக்கலாம் என்கிற விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. சிகிச்சைக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கும்போதே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்துதான் வர வேண்டும் என்கிற கண்டிஷனையும் மருத்துவர்கள் முன் வைக்க ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றமும்கூட!

குழந்தையின்மைக்கான காரணங்கள் கணவன்-மனைவி இருவரிடமும் சம அளவிலேயே இருக்கின்றன. எனவேதான் சிகிச்ைசக்கு வரும் போது இருவரையும் வரச் சொல்கிறோம். போன தலைமுறை போல இல்லாமல் இந்தத் தலைமுறை ஆண்கள், தாமாகவே அதற்கு முன்வரவும் தயாராகவே இருக்கிறார்கள். தன்னிடம்கூட பிரச்னைகள் இருக்கலாம்... என்பதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மாறியிருக்கிறார்கள்... அந்த ஒத்துழைப்பு குழந்தையின்மை சிகிச்சைக்கு மிக முக்கியம்’’ என்கிறார் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரான மனுலட்சுமி.

பெண்களையும் ஆண்களையும் தனித்தனியே பாதிக்கிற குழந்தையின்மைப் பிரச்னைக்கான காரணங்கள் குறித்து விளக்குகிறார் அவர். முதலில் பெண்கள் பிரச்னைகளைப் பற்றிப் பார்ப்போம். கருவுறுதல் நிகழ, பெண்களின் மூளையில் இருந்து ஹார்மோன்கள் சரியாக வெளியாக வேண்டும். அந்த ஹார்மோன்களின் தூண்டுதலின் பேரில் கருப்பையில் கருமுட்டை உருவாவது முறையாக நடைபெற வேண்டும். அந்த முட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும். அதில் மரபணுக் கோளாறுகள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஹார்மோனின் தூண்டுதலால் அந்த முட்டை முதிர்ச்சி யடைந்து கருக்குழாய்க்குள் சென்று 24 மணி நேரம் அங்கே காத்திருக்கும். கணவரின் உயிரணு கர்ப்பப்பை வாயில் வெளியேற்றப்பட்டால் அது நகர்ந்து வந்து அந்த முட்டையினுள் சென்று கருத்தரிக்கச் செய்து கருவாக உருவாக வேண்டும். அந்தக் கரு 2 நாட்கள் சினைக்குழாயிலேயே இருந்துவிட்டு பிறகு நகர்ந்து வந்து கர்ப்பப்பையில் பதிந்து வளர ஆரம்பிக்க வேண்டும். இத்தனை விஷயங்களும் முறையாக நடந்தால்தான் அந்த கர்ப்பம் முழுமையாக நடைபெறும். இந்த சங்கிலித் தொடர் செயல்பாடுகளில் ஒரு இடத்தில் கோளாறு நடந்தாலும் கரு உருவாவதில் பிரச்னை வரும்.

ஒரு தம்பதியருக்கு ஒரு மாதத்தில் 20 சதவிகிதம்தான் கருத்தரிக்கும் வாய்ப்புகள் இருக்கும். 80 சதவிகிதம் அதற்கு வாய்ப்பில்லை. திருமணமான முதல் வருடத்தில் 85 சதவிகித தம்பதியருக்கு கருத்தரிக்கும். பெரும்பாலானவர்களுக்கு முதல் 6 மாதங்களிலேயே கரு உண்டாகும். எந்தப் பிரச்னைகளுமே இல்லை என்றாலும்கூட 85 சதவிகிதத்தினருக்குத்தான் முதல் வருடத்தில் குழந்தை உண்டாகிறது. மீதமுள்ள 15 சதவிகிதத்தினரில் 7 முதல் 8 சதவிகிதத்தினருக்கு திருமணமான 2வது வருடத்தில் கருத்தரிக்கும்.எல்லாம் சரியாக இருந்தும் திருமணமான 3 முதல் 4 வருடங்களுக்குள் கருத்தரிக்காதவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும். ஒரு வருடம் வரை குழந்தை இல்லை என்றாலே அவர்களுக்கு சில சோதனைகளைப் பரிந்துரைப்போம். அதிலும் பெண்ணின் வயது 35க்கு மேல் என்றால் 6 மாதங்களிலேயே அந்த சோதனைகளை மேற்கொள்ளச் சொல்வோம். பெண்ணின் வயது அதிகரிக்கும் போது கருமுட்டையின் தரம் பாதிக்கப்படும். அதில் பிரச்னைகளும் வரலாம்.

பரிசோதனை என்று வரும்போது முதலில் சினைப்பையின் செயல்திறன் எப்படி இருக்கிறது, கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா, கர்ப்பப் பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைத்தான் முக்கியமாகப் பார்ப்போம். கருப்பையைப் பொறுத்தவரை கருமுட்டை உற்பத்தி சரியாக இருக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி முறையாக இருந்தாலே முட்டை உற்பத்தியும் அது வெளியேறுவதும் ஓரளவு சரியாகவே இருக்கும்.

கரு முட்டை உற்பத்தியும் வெளியேறுதலும் சரியாக இருப்பதைத் தெரிந்து கொள்ள `ஃபாலிக்குலர் ஸ்டடி’ என்கிற சோதனை செய்யப்படும். அதாவது, மாதவிலக்கான 10வது நாள் தொடங்கி, ஒருநாள் விட்டு ஒருநாள் ஸ்கேன் செய்து கருமுட்டை உற்பத்தியைக் கண்காணிப்போம். 21வது நாள் ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து கருமுட்டை உருவாகியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தது கருக்குழாய் அடைப்புக்காக செய்யப்படுகிற டியூப் டெஸ்ட். இதில் டையை (Dye) செலுத்தி எக்ஸ் ரே எடுத்து ஏதேனும் அடைப்பு இருக்கிறதா எனப் பார்க்கலாம். அதாவது, கர்ப்பப்பை வாயில் ஒரு சின்ன ரீஃபிள் மூலம் மருந்தை செலுத்தி, எக்ஸ் ரே எடுத்து அடைப்பு இருக்கிறதா எனப் பார்க்கப்படும். லேப்ராஸ்கோப்பி மூலமும் கண்டறியலாம். கர்ப்பப்பையில் கழலையோ கட்டிகளோ இருக்கிறதா என்பதையும் ஸ்கேன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

இவை எல்லாம் பெண்களுக்கு... ஆண்களுக்கும் சில சோதனைகள் அவசியம். அவர்களுக்கு செமன் அனாலிசிஸ் (Semen Analysis) என்கிற உயிரணு பரிசோதனை செய்து அவற்றின் எண்ணிக்கை, நகரும் தன்மை, மார்ஃபாலஜி எனப்படுகிற அணுக்களின் வடிவம் போன்றவை தெரிந்து கொள்ளப்படும். முன்பெல்லாம் குழந்தையின்மைக்கான சிகிச்சை என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே என்ற நிலை இருந்தது. பெண்ணுக்கு எல்லா சோதனைகளையும் செய்து பார்த்து எதிலுமே பிரச்னைகள் இல்லை என்றால், பிறகு ஆணுக்கு சோதனைகள் செய்வதும் அவருக்குத்தான் பிரச்னை என்றும் கண்டுபிடிக்கிற நிலை இன்றில்லை.

கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவ ஆலோசனைக்கு வர வேண்டும். ஒரே நேரத்தில் இருவருக்கும் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். ஆண்களுக்கு அதிக பரிசோதனைகள் கிடையாது. தாம்பத்திய உறவை நிறுத்தி 3 நாட்கள் கழித்து உயிரணு பரிசோதனையை செய்து கொள்ளவேண்டும். செமன் அனாலிசிஸ் என்பதை உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள விதிகளின்படிதான் செய்கிறோம். அதன்படி உயிரணுக்களின் எண்ணிக்கை 15 மில்லியனுக்குமேல் இருக்கவேண்டும். மார்ஃபாலஜி என்கிற வடிவம் 4 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

அணுக்களின் நகரும் தன்மை 35 முதல் 40 சதவிகிதம் இருக்க வேண்டும். ஆண்களின் உயிரணுக்களில் பிரச்னைகள் வர பல காரணங்கள் உண்டு. சில நேரங்களில் இன்ஃபெக்*ஷன் காரணமாக பாதிக்கப்படலாம். பரம்பரையாக தொடரும் நோய்களாலும், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன் போன்றவற்றாலும் அவற்றுக்காக எடுத்துக் கொள்கிற மருந்துகளாலும் பாதிக்கப்படலாம். மிக மிக முக்கியமாக புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தைப் பெரியளவில் பாதிக்கும். இப்படி பிரச்னைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் ஆன்ட்ராலஜிஸ்ட்டை சந்தித்து ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து அசாதாரணமாக ஏதேனும் இருக்கிறதா எனப் பார்த்து சரிசெய்ய வேண்டியிருக்கும்.

இப்படி பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியே பரிசோதனைகள் மேற்கொண்டு, யாருக்கு என்ன பிரச்னை.... எதனால் கருத்தரிக்கவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துவிடலாம். அதாவது, 80 சதவிகித தம்பதியருக்கு இப்படிச் சொல்லிவிட முடியும். 10 முதல் 20 சதவிகித தம்பதியருக்கு குழந்தையின்மைக்கான காரணத்தையே கண்டுபிடிக்க முடியாமலும் போவதுண்டு. கருமுட்டை உற்பத்தி சரியாக இருக்கும். கர்ப்பப்பையில் பிரச்னைகளே இருக்காது. கருக்குழாய் அடைப்பு இருக்காது.

கணவரிடத்திலும் பிரச்னைகள் இருக்காது. ஆனாலும், கருத்தரிக்காது. அப்படிப்பட்ட தம்பதியருக்கு இன்ன பிரச்னைகளால்தான் குழந்தையில்லை என்பதையே மருத்துவர்களால் சொல்ல முடியாது. அதை Unexplained Infertility என்கிறோம். இதனால் பாதிக்கப்படுகிற தம்பதியர்தான் மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். `எந்த டாக்டரை பார்த்தாலும் எல்லாம் நார்மல் என்கிறார்... ஆனால், குழந்தை உண்டாகவில்லை’ என்கிற விரக்தியில் மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

நமது மருத்துவ முறையைப் பொறுத்தவரை கர்ப்பப்பையில் உள்ள பிரச்னைகளையும் கருக்குழாய் அடைப்புகளையும் சினைப்பை நீர்க்கட்டிகளையும் மட்டும்தான் சோதனைகளின் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதைத் தாண்டி நிறைய நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. கருமுட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும். கருமுட்டை சரியாக வெளியாகி, கருக்குழாய்க்குள் போக வேண்டும். இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள நமக்கு எந்த மருத்துவத் தொழில்நுட்பமும் இல்லை.

கருமுட்டை என்பது நாம் பிறக்கும்போதே உருவாகி விடுவது. பூப்பெய்தியது முதல் மெனோபாஸ் வரை அதுதான் ஒவ்வொன்றாக வெளியே வரும். அந்தக் கருமுட்டைகளின் தரம் பிறப்பிலேயே பிரச்னைக்குரியதாக இருக்கலாம். முட்டைகள் சரியாக உற்பத்தியாகி, வெளியேறுகின்றனவா என்றுதான் நம்மால் பார்க்க முடியுமே தவிர, அவற்றின் தரத்தைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். காரணமற்ற குழந்தையின்மைப் பிரச்னைக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகள்தான் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும்.

பெண்ணுக்கு எல்லா சோதனைகளையும் செய்து பார்த்து எதிலுமே பிரச்னைகள் இல்லை என்றால், பிறகு ஆணுக்கு சோதனைகள் செய்வதும் அவருக்குத்தான் பிரச்னை என்றும் கண்டுபிடிக்கிற நிலை இன்றில்லை. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவ ஆலோசனைக்கு வர வேண்டும். ஒரே நேரத்தில் இருவருக்கும் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். ஆண்களுக்கு அதிக பரிசோதனைகள் கிடையாது.

கருமுட்டை என்பது நாம் பிறக்கும்போதே உருவாகி விடுவது. பூப்பெய்தியது முதல் மெனோபாஸ் வரை அதுதான் ஒவ்வொன்றாக வெளியே வரும். முட்டைகள் சரியாக உற்பத்தி யாகி, வெளியேறுகின்றனவா என்றுதான் நம்மால் பார்க்க முடியுமே தவிர, அவற்றின் தரத்தைத் தெரிந்து கொள்ள முடியாது.


 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,663
Likes
18,542
Location
chennai
#2
நகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை!


பேபி ஃபேக்டரி


குழந்தை இன்மைக்கான காரணங்கள் ஆண், பெண் இருவரிடமும் உண்டு என்பதையும் யாருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம் என்பதையும் பார்த்தோம்.முதலில் பிசிஓஎஸ் எனப்படுகிற Poly Cystic Ovary Syndrome. பாலிசிஸ்டிக் ஓவரிஸ் அல்லது சினைப்பை நீர்க்கட்டிகள் என்கிற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தையில்லாத பெண்கள் பலரும் சந்திக்கிற பரவலான பிரச்னை இது. பெண்மை மலரும் பருவத்தில் தொடங்கி, மெனோபாஸ் வரை எல்லா வயதுப் பெண்களையும் பாதிக்கிற இது, குழந்தையில்லா பெண்களிடம் குரூரமாக நடந்து கொள்கிறது.

பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, குழந்தை தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தாக்கக்கூடியது. எனவே, அதை மரபணு சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் பார்க்கலாம். கிராமத்துப் பெண்களிடம் இந்தப் பிரச்னையின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. காரணம், அவர்களது உடல் உழைப்பு. உயரத்துக்கேற்ற எடையுடன் இருக்கும் அவர்களது உடல்வாகு. நகரத்துப் பெண்களுக்கோ இதன் தாக்கம் ரொம்பவே அதிகம்.

நகரத்து வாழ்க்கை முறை, மாறிப் போன உணவுப்பழக்கம், அதனால் ஏற்படுகிற பருமன், அதன் தொடர்ச்சியாக ஹார்மோன் கோளாறுகள் என இதற்கு நிறைய காரணங்கள் உண்டு...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி. பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னைக்கும் கருத்தரித்தலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அந்தப் பிரச்னையைப் பற்றிய அறிமுகத்தையும் அழகாக சொல்கிறார் அவர்.

``கருப்பையின் செயல்திறனை பாதிக்கிற ஒருவகையான ஹார்மோன் கோளாறுதான் பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை. உலக அளவில் 7 சதவிகித பெண்கள் பிசிஓஎஸ் பிரச்னையால் குழந்தையின்றித் தவிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். தெற்காசிய நாடுகளில் இதன் தாக்கம் சற்றே அதிகம் என்பது உப தகவல்.

ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கம் கட்டுப்பாடுகளை இழப்பதே இதற்கான பிரதான காரணம். அதன் விளைவாக அவளது மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போவதில் இருந்து, கருத்தரிக்காதது வரை எதுவும் நடக்கலாம். உங்களுடைய தோற்றத்தை மாற்றலாம். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது நீரிழிவு, இதய நோய்கள் வரக்கூட காரணமாகலாம்.

பிசிஓஎஸ் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு சினைப்பையில் சின்னச்சின்ன கட்டிகள் உருவாகும். அந்தக் கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றாலும், அவைதான் ஹார்மோன் சமநிலையின்மைக்குக் காரணமாகின்றன. பிசிஓஎஸ் பிரச்னைக்கு இதுதான் காரணம் எனத் துல்லியமாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், பரம்பரைத்தன்மை அதில் பெரும்பங்கு வகிக்கிறது.

அதனால், குடும்பத்தில் யாருக்கேனும் பிசிஓஎஸ் இருந்தால் அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் அது தொடரும் வாய்ப்புகள் அதிகம். இது அம்மா வழியில் இருந்தோ, அப்பா வழியில் இருந்தோ மகள்களுக்குத் தொடரலாம். இன்சுலின் ஹார்மோனின் அளவு சராசரியைவிட மிக அதிகமாக இருப்பதுகூட பிசிஓஎஸ் பிரச்னைக்குக் காரணமாகலாம்.பிசிஓஎஸ் என்ன செய்யும்?

பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்கு AMH என்கிற ஹார்மோனின் அளவு 6.7க்கு மேல் இருக்கும். அது 2 முதல் 6.7க்குள் இருப்பதுதான் இயல்புநிலை. சில பெண்களுக்கு இது 12, 13... 18 வரைகூட போய், தீவிர பிரச்னையாக மாறுவதுண்டு. இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு முறைதவறி வரும். அதாவது, 6-7 மாதங்கள் ஆனால் கூட மாதவிலக்கு வராது. அப்படியே வந்தால் 40 நாட்களுக்குக்கூட ரத்தப்போக்கு தொடரும்.

பூப்பெய்திய புதிதில் இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையற்று இருப்பதை பல அம்மாக்களும் அலட்சியமே செய்கிறார்கள். `வயசுக்கு வந்த புதுசுல அப்படித்தான் இருக்கும். போகப் போக சரியாயிடும்...’ என்றும் கல்யாணமானா தானா சரியாயிடும்...’ என்றோ சமாதானம் சொல்கிறார்கள். அந்த அலட்சியம் கூடாது. முறையான மருத்துவப் பரிசோதனையின் மூலம்தான் அதைக் கண்டறிய முடியும்.

பிசிஓஎஸ் பாதித்த பெண்களுக்கு முகம் மற்றும் உடல் முழுக்க ரோம வளர்ச்சி இருக்கும். முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். அவர்களது முகத்தை வைத்தே இந்தப் பிரச்னை இருப்பதைக் கணிக்கலாம்.

பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெரும்பாலான பெண்கள் பருமனானவர்களாகவும் இருப்பார்கள். பிசிஓஎஸ் Vs கர்ப்பம் கருமுட்டைகளை உருவாக்கி, கர்ப்பப்பையை கருத்தரிக்கத் தயார்படுத்துகிற செயலை இந்தப் பிரச்னை பெருமளவில் பாதிக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு கருமுட்டைகள் ஸ்டாக் இருந்தாலும், அது வெளிப்படுவதில் சிக்கல் இருக்கும். கருமுட்டைகள் தரமின்றி இருக்கும்.

பருமனும் பிசிஓஎஸ்ஸும் சேர்ந்து கொள்ளும் போது அது Sub-fertility என்கிற குழந்தையின்மைப் பிரச்னைக்கு வழி வகுக்கிறது. இத்துடன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் தன்மையும் சேர்ந்து கொள்வதால் 40 சதவிகிதப் பெண்களுக்கு அது கருத்தரித்தலைத் தடை செய்கிறது. Insulin Resistance இருந்தால் கருத்தரித்தாலுமே அந்தப் பெண்களுக்கு நீரிழிவு வரலாம். ஆகவே, கர்ப்பகால நீரிழிவாலும் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

80 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வருகிறது. பிற்காலத்தில் நீரிழிவு வருவதற்கான ஒரு முன்னோட்டமாகவும் அமைகிறது இது. கர்ப்பம் தரித்தாலும் அடிக்கடி அது கலைந்து போகும். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன் சுரப்பு அதிகமிருக்கும். அதனால் Hyperandrogenism என்கிற பிரச்னை வந்து, ஆண்களைப் போல முகம் மற்றும் உடல் முழுக்க முடி வளர்ச்சி காணப்படும்.

மாதவிலக்கு முறையாக நடைபெறாத காரணத்தினால் கர்ப்பப்பையின் உள் லைனிங் பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் அங்கே புற்றுநோய் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும். மாதந்தோறும் கருமுட்டை வெளிப்படாததால் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட கருப்பையின் உள் சவ்வுப் பகுதிகளில் புற்றுநோய் தாக்கும் ஆபத்தும் 3 மடங்கு அதிகம்.

சினைப்பை நீர்க்கட்டி என்பதை பிரச்னைகளின் பெட்டகம் என்றே சொல்லலாம். இடியாப்ப சிக்கல் மாதிரி ஏகப்பட்ட பிரச்னைகளை தன்னகத்தே கொண்டு ஒவ்வொன்றாக உங்களுக்குக் கொடுக்கக்கூடியது. இப்படிப் பலமுனை தாக்குதல் செய்கிற பிசிஓஎஸ் பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும், சரி செய்யவும் முடியும். அதன் மூலம் குழந்தையின்மைக் கவலையில் இருந்து தப்பிக்கவும் முடியும். அவற்றைப் பற்றி அடுத்த இதழில்...

சினைப்பை நீர்க்கட்டி என்பதை பிரச்னைகளின் பெட்டகம் என்றே சொல்லலாம். இடியாப்ப சிக்கல் மாதிரி ஏகப்பட்ட பிரச்னைகளை தன்னகத்தே கொண்டு ஒவ்வொன்றாக உங்களுக்குக் கொடுக்கக்கூடியது.

பருமனும் பிசிஓஎஸ்ஸும் சேர்ந்து கொள்ளும் போது, அது குழந்தையின்மைப் பிரச்னைக்கு வழி வகுக்கிறது. கர்ப்பம் தரித்தாலும் அடிக்கடி கலைந்து போகும். பிற்காலத்தில் நீரிழிவு வருவதற்கான ஒரு முன்னோட்டமாகவும் அமைகிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,663
Likes
18,542
Location
chennai
#3
பெண்ணைப் பெற்றவர்களுக்கு.


பிரச்னைகளின் பெட்டகமான பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிகள் பற்றியும் அவை குழந்தையின்மையைக் குறி வைத்துத் தாக்குகிற அவலத்தையும் பார்த்தோம். பிரச்னை என ஒன்றிருந்தால் அதற்கு தீர்வும் இருந்துதானே ஆக வேண்டும்? பிசிஓஎஸ் குறித்த பயமுறுத்தல்களில் பீதியடைந்திருக்கும் பெண்களுக்கு பயம் போக்கும் வகையில் ஆறுதலான, அவசியமான சில தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி.``இந்த விஷயத்தில் என்னுடைய முதல் அறிவுரை பெண்ணைப் பெற்றவர்களுக்கு. மகள்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்... நல்ல வேலையில் அமரச் செய்ய வேண்டும்... நல்ல இடமாகப் பார்த்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து குறையின்றிச் செய்கிறார்கள்.

ஆனால், திருமணத்தின் போது அவள் தாயாகத் தகுதி உள்ளவள்தானா என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். அவளது ஜனன உறுப்புகள் குறைகள் இன்றி இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். மாதவிலக்கு சுழற்சி முறையின்மை போன்று வெளிப்படையாகத் தெரிகிற பிரச்னைகள் கூட தானாகச் சரியாகும் என அலட்சியப்படுத்துவது, ஆசை மகளின் சந்ததியே அழிந்து போகக்கூடக் காரணமாகலாம். பிசிஓஎஸ்ஸுக்கான பரிசோதனைகள்...

* சாதாரண ஸ்கேன் மூலமே இந்தப் பிரச்னையை எளிமையாகக் கண்டறியலாம். திருமணமாகாத பெண்களுக்கு வயிறு வழியேவும், திருமணமான பெண்களுக்கு அடி வழியேவும் ஸ்கேன் செய்து, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையைப் பார்க்கலாம். பிசிஓஎஸ் இருந்தால் அது ஒருவித சிறப்பு அமைப்பில் தனியே தெரியும். அதாவது, சினைப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் கல் பதித்த நெக்லஸ் போன்று சினைப்பையின் ஓரத்தில் உருவாகிக் காட்சியளிக்கும். சினைப்பையின் மையப்பகுதி பளீரென இருக்கும்.

* அடுத்தது AMH என்கிற ஹார்மோன் அளவைத் தெரிந்து கொள்வதற்கான ரத்தப் பரிசோதனை. இது 6.7க்கு மேல் இருந்தால் பிசிஓஎஸ் உறுதி செய்யப்படும்.

* பிசிஓஎஸ் உள்ள எல்லாப் பெண்களுக்கும் மாதவிலக்கு சுழற்சி முறைதவறித்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. 70 சதவிகிதப் பெண்களுக்கு அப்படி இருக்கும். 80 சதவிகிதப் பெண்களுக்கு கருமுட்டை வெளியாகிற செயலே நடக்காது. மாதவிலக்கான 21வது நாள் ஒரு ரத்தப் பரிசோதனையின் மூலம் Serum progesterone அளவு கண்டறியப்படும்.

அது 5க்குக் கீழ் இருந்தால் கருமுட்டை வெளியேறுதல் நடக்கவில்லை என்பது தெரியும். தவிர, காலையில் வெறும் வயிற்றில் செய்யப்படுகிற ரத்தப் பரிசோதனையில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவானது 25க்கு மேல் இருந்தால் Insulin Resistance பிரச்னையும் இருக்கிறது என உறுதியாகும். சாதாரணமாக இந்த அளவு 25க்குக் கீழ் இருக்க வேண்டும்.

என்ன தீர்வு?
* மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலமாகவே பிசிஓஎஸ் பிரச்னையை ஓரளவுக்கு குணப்படுத்திவிட முடியும். பிசிஓஎஸ் உடன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னையும் உள்ளவர்களுக்கு Hyperinsulinemia என்கிற பிரச்னை வரலாம். அதுவும் கருத்தரிப்பதற்குத் தடையாக அமையும். எனவே அவர்களுக்கு மெட்ஃபார்மின் (Metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். `மெட்ஃபார்மின் என்பது நீரிழிவுக்கு கொடுக்கறதாச்சே... அப்போ நமக்கும் டயாபடீஸ் வந்திருச்சா?’ என பயப்பட வேண்டாம். இது நீரிழிவு வராமல் தடுப்பதற்கான மாத்திரை. தவிர, கருமுட்டை வெளியேறுதலுக்கு உதவி செய்து, கருத்தரித்தால் அடிக்கடி கலைந்து போகாமல் காக்கவும் உதவக்கூடியது.

* பருமன் அதிகமானவர்களுக்கு எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தப்படும். பருமனும் பிசிஓஎஸ்ஸும் சேர்ந்துள்ளவர்களுக்கு Sub fertility என்கிற குழந்தையின்மை பிரச்னை வரும் என முந்தைய இதழிலேயே பார்த்தோம். பருமனான பெண்களின் உடலில் உள்ள அனைத்துக் கொழுப்பு செல்களிலும் ஈஸ்ட்ரோஜென் சேர்ந்து கொண்டு, ஒவ்வொரு செல்லும் ஒரு கருத்தடை மாத்திரை மாதிரி வேலை செய்து, மிக மோசமான ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். அது கருமுட்டை வெளியேறுதலை பாதிக்கும்.

இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியும் முறையற்று இருப்பதால், திடீரென கர்ப்பமாகி இருந்தால்கூடத் தெரியாமலே போகும். 5-6 மாதங்கள் வரை மாதவிலக்கே வரவில்லை என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், கருத்தரித்திருக்கும். திடீரென கையிலோ, காலிலோ அடிபட்டு, அதற்காக எக்ஸ்ரே எடுப்பார்கள். கர்ப்பமாக இருக்கும் போது எக்ஸ்ரே எடுத்தால் அந்தக் கதிர்கள் கருவைப் பாதிக்கும்.

அதுவும் அவர்களுக்குத் தெரியாது. பிறகு கர்ப்பமானது தெரிய வரும் போது, அந்தக் கரு ஆரோக்கியமாக இல்லாமல் போய், அந்தச் சுமையையும் சேர்ந்து சுமப்பார்கள். எனவேதான் பிசிஓஎஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு எடைக் குறைப்பு கட்டாயமாக அறிவுறுத்தப்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாத பருமன் குறைக்கும் சிகிச்சைகளை மகப்பேறு மருத்துவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

* மாத்திரைகளில் சரிப்படுத்த முடியாத பிசிஓஎஸ் பிரச்னையை Ovarian drilling முறைப்படி தீர்வு காணலாம். லேப்ராஸ்கோப்பி முறையில் சினைப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை உடைத்து விடலாம்.

* கருமுட்டையே உருவாகாத Anovulation பிரச்னைக்கும் சிறப்பு மாத்திரைகளும் ஊசிகளும் உள்ளன. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் அதைப் பற்றியும் ஆலோசிக்கலாம்.

* பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்குக் கருத்தரிக்க பெரும்பாலும் மருத்துவ உதவியும் சிகிச்சையும் அவசியப்படும். கருமுட்டைகள் உருவாக அளிக்கப்படுகிற சிகிச்சையின் விளைவாக நிறைய முட்டைகள் உருவாகி, ஒன்றுக்கு மேலான கருக்கள் உருவாகலாம். இரட்டைக் குழந்தைகள் என்றால் மகிழ்ச்சி. 3, 4 குழந்தைகள் என்றால் ரிஸ்க் அதிகம்.

அத்தனை கருக்களையும் சுமப்பது ஆபத்து என்பதால், Selected fetal reduction முறையில் ஒன்றிரண்டு கருக்களை அழிக்க வேண்டிவரும். கர்ப்பம் தரிப்பது மட்டுமின்றி, சுமப்பது, பிரசவிப்பது வரை அவர்களுக்கு ஒவ்வொரு நாளுமே ஒரு யுகமாக மிகுந்த சிரமத்துடனேயே கழியும்.

* சில நேரங்களில் பிசிஓஎஸ்ஸுக் கான சிகிச்சைகளினால் சிலருக்கு Ovarian Hyper Stimulation Syndrome (OHSS) என்கிற பிரச்னை வரலாம். இதில் வயிறு வீங்கிக் கொள்ளும். வயிற்றுக்குள் நீர் கோர்த்துக் கொள்ளும். அதற்குத் தனியே மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும்.

* வெளிநாடுகளில் மூட்டு வலி, மார்பகப் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்ந்து தனித்தனி அமைப்புகளை நடத்துகிறார்கள். அதில் அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, அடுத்தவர்களுடன் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். அது போன்ற விழிப்புணர்வு நம்மூர் பெண்களுக்கும் வரவேண்டும்.

பிசிஓஎஸ் வேறு என்ன செய்யும்?
* கருமுட்டை உருவாகாது. உருவானாலும் சரியாக வெளியேறாது. அதனால் கருத்தரிக்காது.

* மாதவிலக்கான 2வது நாள் பெண்களின் உடலில் சுரக்கும் LH என்கிற ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். 2 முதல் 6 வரை இருக்க வேண்டிய அந்த ஹார்மோன் 7 முதல் 12 வரை கூடப் போகும். அப்படி அளவுக்கதிகமாக இருந்து அந்தப் பெண் கருத்தரித்தால் அந்தக் கருமுட்டை யின் தரம் நன்றாக இருக்காது. தானாக அந்தக் கரு கலைந்துவிடும்.

* நிறைய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, அதனால் Hyperplastic Endometrium என்கிற பிரச்னை வரும். அதாவது, கருமுட்டை வெளியேறினாலும் அது முறையாக பதிந்து வளர ஏதுவாக இல்லாமல் கருப்பையின் உட்புற லைனிங் பகுதி தகுதியற்றுப் போகும். சாதாரணமாக கருப்பையின் லைனிங் பகுதியானது கருமுட்டை வெளியேறும் போது ரோஜாப் படுக்கை மாதிரி இருக்கும்.

கருவைத் தாங்கி வளரச் செய்யத் தயாராக இருக்க வேண்டிய அந்தப் பகுதி, அதிக ஈஸ்ட்ரோஜென் சுரப்பினால் ரத்த ஓட்டம் மாறுபட்டு, குழந்தையை ஏற்றுக் கொள்ளும் தன்மையை இழக்கும். அதனாலும் குழந்தை தங்காது.

இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியும் முறையற்று இருப்பதால், திடீரென கர்ப்பமாகி இருந்தால் கூடத் தெரியாமலே போகும். 5-6 மாதங்கள் வரை மாதவிலக்கே வரவில்லை என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், கருத்தரித்திருக்கும்.

பிசிஓஎஸ்ஸுக்கு பட்டை மருந்து!
சமையலுக்குப் பயன்படுத்துகிற பட்டையை ஒரு துண்டு எடுத்து வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். 1 டேபிள்ஸ்பூன் அளவு பட்டைப் பொடியுடன் 15 மி.லி. தண்ணீர் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வர, பிசிஓஎஸ்ஸின் தாக்கம் சற்றே குறையும்.


(அலசுவோம்!)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.