பேலியோ டயட்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
Paleo diet-பேலியோ டயட்

கொழுப்பை எடு... கொண்டாடு!


ஆச்சரியமூட்டும் ஆதிகால டயட்

‘‘‘கொழுப்புதான் எல்லா நோய்களுக்கும் காரணம்’ - இப்படித்தான் இதுவரை படிச்சிருக்கோம். மருத்துவர்களும், டயட்டீஷியன்களும் இதையேதான் சொல்றாங்க. ஆனா, ‘கொழுப்பை மட்டுமே பிரதானமான உணவா சாப்பிடுங்க’ன்னு சொல்லுது இந்த டயட். தானியங்கள் கண்டுபிடிக்கப்படாத, நெருப்புன்னா என்னன்னு தெரியாத பேலியோலித்திக் என்ற கற்கால மனிதனோட உணவுமுறைதான் பேலியோ டயட்.

‘குகை மனிதன் டயட்’னு இதைச் சொல்றாங்க!’’ - ஆச்சரியம் விரிய ஆரம்பிக்கிறார் ஷங்கர். பேலியோவை நான்கு வருடங்களாகப் பின்பற்றி வரும் இவர், இதன் மூலம் ஒரே மாதத்தில் பத்து கிலோ வரை எடை குறைத்ததாகச் சொல்கிறார்!

பொதுவாக அமெரிக்காவின் செல்லக் குட்டி டயட்டாக கடந்த 13 வருடங்களாக கோலோச்சி வரும் இந்த டயட், இப்போது இந்தியாவில் காட்டுத்தீ. தமிழர்கள் மத்தியில் பேலியோ டயட்டிற்கென்றே ஃபேஸ்புக்கில், `ஆரோக்கியம் & நல்வாழ்வு’ என்கிற குழுமம் இயங்கி வருகிறது. 26 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவின் ஆரம்பகட்ட உறுப்பினர் எனும் முறையில் பேசுகிறார் ஷங்கர்...

``ஆரம்பத்துல நான்கூட இத நம்பலை சார்... ‘கொழுப்பை சாப்பிடுங்க... உடம்பு குறையும்’னு சொல்லிக் கேட்டப்போ அதிர்ந்து போயிட்டேன். ‘இதையெல்லாம் நம்பாதே! ஹார்ட் அட்டாக் வந்துடும்’னு நண்பர்கள் கூட பயமுறுத்தினாங்க. ஆனா, குகையில வாழ்ந்த ஆதி மனுஷன் நிறைய மாமிசமும், சில வகை பழங்களும்தான் உணவா சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கான். இதுல, கொழுப்பும், புரதமும் நிறைஞ்சு இருந்துச்சு.

அதனால, எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா இருந்தான். ஆனா, எல்லா வசதிகள் இருந்தும் நவீன வாழ்வில் ஏகப்பட்ட நோய்கள்... காரணம், ஆரோக்கிய உணவை விட்டு விலகிட்டதுதான். பேலியோவோட இந்த கான்செப்ட் எனக்கு நியாயமா பட்டுச்சு. அதனாலதான் துணிஞ்சேன்!’’ என்கிறார் ஷங்கர்.

இந்த வித்தியாச டயட்டைப் பொறுத்தவரை கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டைதான் பிரதானம். காலை உணவாக நூறு பாதாம் கொட்டைகளைப் பரிந்துரைக்கிறார்கள். பின்பு பால் - சர்க்கரைக்கு பதில் வெண்ணெய் கலந்த டீ அல்லது காபி.

மதியம் நான்கு முட்டை. அதோடு உப்பு, தக்காளி, வெங்காயம் சேர்க்கலாம். மாலையில், ஒரு கோப்பை பாலுடன் கால் கிலோ பேலியோ காய்கறிகள். (மண்ணுக்குள் விளையும் கிழங்குகள் மற்றும் பீன்ஸ் தவிர்த்து மற்ற காய்கறிகள் அனைத்தும் இதில் அடங்கும்.) கீரை வகைகளையும் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

பருப்பு, பயிறு வகைகள், தானியங்கள் அறவே சேர்க்கக் கூடாது. இரவில், சோறு, குழம்பெல்லாம் இல்லாமல் இறைச்சியை மட்டுமே நெய்யில் வறுத்தோ கிரில் செய்தோ ஃபுல் கட்டு கட்டலாம். இவை அனைத்தையும் வீட்டில் செய்துதான் சாப்பிட வேண்டும்... ரீஃபைண்ட் ஆயில்களைத் தவிர்த்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது இவர்களின் கண்டிஷன். இவ்வளவு கொழுப்பும் சாப்பிட்டால் வெயிட் குறையுமாம். இதற்கும் அறிவியல் ரீதியாக விளக்கம் வைத்திருக்கிறார் ஷங்கர்...

‘‘பொதுவா, நம்ம உடல் இயக்கத்துக்கு ரெண்டு வித எனர்ஜி தேவை. ஒண்ணு, குளுக்கோஸ். அடுத்து, கொழுப்பு! குளுக்கோஸ்னு சொல்றப்போ அதிக கார்போ ஹைட்ரேட் இருக்குற உணவுகளான அரிசி, தானியங்கள், பேக்கரி அயிட்டங்கள், ஜங்க் புட், இனிப்புகள்னு எல்லாம் அடங்கும். உடலுக்கு இந்த உணவுகள் கிடைக்காதப்போ அது ஏற்கனவே உடம்பில் இருக்குற கொழுப்பில் இருந்து எனர்ஜி எடுத்துக்கும். இதனாலதான் பேலியோ டயட்ல உடம்பு குறையுது.

கார்போஹைட்ரேட்டும் குளுக்கோஸும் இருக்குற உணவுகள் பசியைத் தூண்டி நிறைய சாப்பிட வைக்கும். அதனால்தான் உடம்பு போடுது; சுகர், பிரஷர் வருது. ஆனா, கொழுப்பு உள்ள உணவுகள் இப்படியில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுமே ‘போதும்’னு தோணும்.

ஆக்சுவலா இது சர்க்கரை நோய்க்காரங்களுக்காக ஆரம்பிச்ச டயட். இப்ப எல்லாருக்கும் பயன்படுது. நம்ம உடம்புல இருக்குற கார்போஹைட்ரேட்டை கொழுப்பா மாத்தி சேமிச்சு வைக்கிறதுதான் இன்சுலினோட வேலை. இந்த டயட்ல, இன்சுலினுக்கு வேலையே இருக்காது. காரணம், இறைச்சியிலோ, முட்டையிலோ சர்க்கரை அறவே இல்ல! கொழுப்பை எடுத்துக்கிறதால மாரடைப்பு வராதானு கேட்பீங்க.

நிச்சயம் வராது. காரணம், இந்த டயட்ல இருக்கறதெல்லாம் நன்மை செய்யும் கொழுப்புகள்தான். தேவையில்லாத கெட்ட கொழுப்பு சேராது. சேர்கிற நல்ல கொழுப்பும் எனர்ஜிக்கு யூஸாகிடும். இருந்தும், இந்த டயட்டை கடைப்பிடிக்கிறவங்ககிட்ட ‘உடற்பயிற்சி அவசியம்’னு வலியுறுத்துறோம்.

அப்புறம், வைட்டமின் `டி’க்காக குறிப்பிட்ட டைம் வெயில்ல உடல் படுற மாதிரி நிற்கச் சொல்றோம். தினமும் மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்றோம். இதெல்லாம் நோய்களை பக்கத்துல அண்ட விடாது. இருந்தும், மருத்துவ ஆலோசனையோடு இந்த டயட்டை பின்பற்றுவதே நல்லது!’’ என்கிறார் ஷங்கர் ஷார்ப்பாக.

மாமிசத்தை மையப்படுத்தியே இருக்கும் இந்த பேலியோ டயட்டை நம் ஊருக்கு ஏற்ப கொஞ்சம் பட்டி பார்த்து ‘சைவ பேலியோ’வை உருவாக்கியிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். இதன் மூலம் எடை குறைத்தவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் என்.சொக்கன்.

‘‘கடந்த அஞ்சு மாசமாதான் இந்த டயட்டை எடுத்திட்டு இருக்கேன். இப்போ, பதினெட்டு கிலோ குறைச்சிருக்கேன். சைவ பேலியோவைப் பொறுத்தவரை இறைச்சி - முட்டைக்கு பதில், பனீர் சேர்க்கணும். இந்த டயட் முன்பைவிட என்னை சுறுசுறுப்பா வச்சிருக்கு. இது கொஞ்சம் காஸ்ட்லி உணவுமுறைதான். ஆனா, நோய்க்கு செலவழிக்கிறதுக்குப் பதில் இப்படி ஆரோக்கிய உணவை எடுத்துக்கலாமே!’’ என்கிறார் அவர் வேண்டுகோளாக!

ஆனால், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன், ‘`இது உடம்பைப் பாதிக்கும் உணவு முறை’’ என எச்சரிக்கிறார். ``நம்ம லைஃப்ஸ்டைல் வேற. பேலியோவை உருவாக்கின அமெரிக்கர்களோட லைஃப்ஸ்டைல் வேற. நம்ம உடம்புக்கு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால்-தயிர்னு அஞ்சு வகையான உணவுகள் தேவை. இதையெல்லாம் சரிவிகிதத்துல எடுத்தாலே நோயில்லாம வாழலாம்.

கொழுப்பில் இருந்து சக்தியை எடுத்துக்கணும்னா நம்ம உடம்பில் கீடோன் என்கிற வேதிப்பொருள் அதிகமா சுரக்கணும். அதைத் தூண்டுறதுதான் இந்த உணவு முறையோட முக்கிய வேலையா இருக்கு. இது அதிகமாகும் பட்சத்துல கீடோன் சார்ந்த பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கு. அதனால, பேலியோ டயட் பாதிப்பு நிறைஞ்சதே!’’ என்கிறார் அவர் முடிவாக!

மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் மாதவன், பேலியோ டயட்டை வரவேற்கவே செய்கிறார். ஆனால், நவீன காலத்துக்கு ஏற்றாற்போல் அதனை மாற்றி அமைக்க வேண்டியது கட்டாயம் என வலியுறுத்துகிறார். ``ஆதி மனுஷனோட இந்த டயட் நல்லதுதான். ஆனா, நாம ஆதி மனுஷன் இல்லையே. அந்தக் கால மனுஷனுக்கு இறைச்சி, பழங்கள் தவிர்த்து எதுவும் கிடைக்கலை.

அவன் ஓடியாடி வேட்டையாடினான். அதனால, ஆரோக்கியமா திரிஞ்சான். நமக்கு அவ்வளவு உடல் உழைப்பு இல்ல. அந்தக் கால மனுஷனுக்கு இறைச்சி, பழங்கள் தவிர்த்து எதுவும் கிடைக்கலை. ஆனா, அரிசி, கோதுமை, பால் பருப்பு வகைகள்னு எல்லாமே நமக்குக் கிடைக்குது. நாம அதை சரி விகிதத்தில் எடுத்துக்கணும்.

இல்லைன்னா, கால்சியம் குறைபாடு ஏற்பட்டு நோய்கள் தொற்றும். அதே மாதிரி உடலுக்கு கார்போஹைரேட்டும் தேவை. அதுக்கு, கேழ்வரகு மாதிரியான ஈஸியா செரிக்கிற தானியங்களைச் சாப்பிடணும்.

அப்புறம், மாரடைப்பு கெட்ட கொழுப்பு சேர்றதாலதான் ஏற்படுது. அதனால, நல்ல கொழுப்புள்ள உணவுகளான பாதாம், முந்திரி மாதிரியான அயிட்டங்களை எடுத்துக்கலாம். ஆனா, இறைச்சி எடுத்துக்குறதெல்லாம் ஓவர். அளவுக்கு மிஞ்சினா எதுவும் நஞ்சுதான். ஆதிகால மனுஷன்ட்ட இருந்த நல்ல விஷயத்தையும், நம்மட்ட இப்ப இருக்கிற நல்ல விஷயத்தையும் சேர்த்து ஒரு உணவுமுறை உருவாக்கினா அந்த பேலியோ பெஸ்ட்டா இருக்கும்!’’ என்கிறார் அவர் உறுதியாக!

நம்ம உடம்புக்கு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால்-தயிர்னு அஞ்சு வகையான உணவுகள் தேவை. இதையெல்லாம் சரிவிகிதத்துல எடுத்தாலே நோயில்லாம வாழலாம்!
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பேலியோ உண்மையா? உதாரா?


ஆதிமனிதன் உணவுமுறை, மனித ஜீனுக்கு ஏற்றது, நீரிழிவையும் ரத்தக்கொதிப்பையும் இன்ன பிற நோய்களையும் அறவே போக்கக்கூடியது என்றெல்லாம் அண்மைக் காலமாகக் கொண்டாடப்படும் பேலியோ டயட் மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதா? இது பற்றி அலோபதி மருத்துவ உலகத்தின் பார்வை என்ன? உணவியல் நிபுணரும் மருத்துவருமான தாரிணி கிருஷ்ணனும் பேலியோ குழுவைச் சேர்ந்த சங்கரும் சந்தித்து விவாதிக்கிறார்கள்.

தாரிணி: அதிகக் கொழுப்பு, குறைவான மாவுச்சத்து கொண்ட கீட்டோஜெனிக் (Ketogenic diet) என்ற உணவுமுறை இருக்கிறது. பேலியோவும் கீட்டோஜெனிக் டயட் போலத்தான் அமைந்திருக்கிறது. இதுதவிர எனக்கு பேலியோவில் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு.

சங்கர்: கொழுப்புச்சத்து அதிகம் என்று சொல்லப் போகிறீர்களா?

தாரிணி: அடிப்படையிலேயே சில பிரச்னைகள் இருக்கின்றன. பேலியோவில் நீங்கள் சொல்கிற எல்லா உணவுப் பொருட்களுமே விலை உயர்ந்தவை. பாதாம் பருப்பு, இறைச்சி, அவகடோ பழங்கள் போன்றவை எல்லாம் எல்லாருக்கும் சாத்தியமானதல்ல. நீங்கள் பரிந்துரைக்கிற காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளும் விலை அதிகமானவை... குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியவை. அதைவிட சிக்கலான விஷயம், காலிஃப்ளவரிலும் ப்ரக்கோலியிலும் பூச்சிகளின் தாக்கம் மிகவும் அதிகம். சரியாக சுத்தம் செய்யாமலோ, நன்றாக வேக வைத்து சமைக்காவிட்டாலோ பல பிரச்னைகள் ஏற்படும்.

சங்கர்: வழக்கமாக உங்களைப் போல மருத்துவர்கள் பரிந்துரைக்கிற உணவுகள் பெரும்பாலும் கார்போஹைட்ரேட் அளவு அதிகம் உள்ளவையாகவே இருக்கின்றன. காய்கறிகளில் கூட ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது என்பதால்தான் காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்றவற்றை பரிந்துரைக்கிறோம்… பீன்ஸ் கூட பலருக்கு ஏற்றுக் கொள்வதில்லை.

தாரிணி: உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை நாங்களே தவிர்க்கத்தான் சொல்கிறோம். மற்றபடி காய்கறிகளால் மாவுச்சத்து அதிகமாவதில்லை. அதிக நார்ச்சத்து பெறுவதற்கு காய்கறிகள் முக்கியமான ஆதாரம். பீன்ஸும் உடலுக்கு நன்மையைத்தான் தருகிறதே தவிர, பிரச்னைக்கு உரியதல்ல. போதுமான அளவு காய்கறிகளை மக்கள் சேர்த்துக் கொள்வதில்லை என்பதுதான் பிரச்னையே தவிர, காய்கறிகளால் பிரச்னை இல்லை.

சங்கர்: கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தானிய உணவுகளையே தவிர்க்கிறோம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஏற்றுவதிலிருந்து, எடையைக் கூட்டுவது வரை தானிய உணவுகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன. மாவுச்சத்து உணவுகள் விரைவாக பசியை ஏற்படுத்தும். அதனால்தான் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தாலும் 2 கிலோ எடையைக் குறைக்கவே போராடுகிறார்கள். அப்படியே குறைத்தாலும், ருசியால் ஏற்படுகிற ஆசையாலும், உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவாலும் மீண்டும் 4 கிலோ எடை கூடி விடுகிறது. பேலியோ டயட்டில் கொழுப்புச்சத்து அதிகம் என்பதால் பசி ஏற்படாது. ரத்த சர்க்கரை அளவும் ஏறாது. சிறுதானியங்களில்கூட மாவுச்சத்து அதிகம்தானே?

தாரிணி: எடை குறைய வேண்டும் என்றால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புதான் குறைய வேண்டும். அதற்குப் பதிலாக, தானிய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தவறானது. தானிய உணவுகளில் இருந்துதான் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காதபோது, தன்னுடைய தேவைக்காக கொழுப்பை மட்டுமே உடல் எடுத்துக் ள்வதில்லை.

மாறாக, தசைகளையும் உடைக்க ஆரம்பிக்கும். தசைகள் உடைவதோ, நீர்ச்சத்து குறைவதோ ஆரோக்கியமான எடை குறைப்பு அல்ல... இது ஆரோக்கியத்துக்குப் பெரிய கேடு. சிறுதானியங்களில் நார்ச்சத்துதான் அதிகம். அளவுக்கு அதிகமாக சிறுதானிய உணவுகளை சாப்பிட்டால்தான் மாவுச்சத்து அதிகமாகும். ஆனால், நீங்கள் பயப்படும் அளவுக்கு சிறுதானிய உணவுகளை சாப்பிட முடியாது என்பதுதான் யதார்த்தம்.

சங்கர்: ஓட்ஸ் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகாதா?

தாரிணி: ஓட்ஸ் நம் நாட்டு உணவே கிடையாது. அதிலும் இந்தியாவில் கிடைக்கிற ஓட்ஸ் எல்லாமே பிராசஸ் செய்யப்பட்டு வருபவை. அதனால், ஓட்ஸை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டாம். எடை அதிகரிப்புக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கும் பிஸ்ெகட், பப்ஸ், குளிர்பானங்கள், திரும்புகிற பக்கமெல்லாம் பேக்கரி, ஜங்க் ஃபுட் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தானியங்கள் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்ல முடியாது.

சங்கர்: பேலியோ உணவுகள் ஒரு டப்பாவில் அடைத்து விற்கக் கூடியதல்ல. பேலியோ டயட்டை எல்லோரும் பின்பற்றினால் உணவுப் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு வியாபாரம் இருக்காது என்பதால், பேலியோவை ஆதரிக்க மறுப்பதாகவே நினைக்கிறேன். பேலியோவில் நமக்குக் கிடைக்கிற முதல் நன்மையே இந்த உணவுமுறையை வீட்டில் மட்டும்தான் சமைத்துச் சாப்பிட முடியும் என்பது. நீங்கள் பரிந்துரைக்கிற உணவை ஹோட்டலில் சாப்பிட முடியும். ஹோட்டல் உணவுகள் எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடு என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது.

தாரிணி: நாங்களும் ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்க்கத்தான் சொல்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

சங்கர்: இரவில் அதிகமாக சாப்பிடுங்கள் என்கிறோம். ஏனெனில், அடுத்த நாள் காலை வரை 12 மணி நேரத்துக்கு ஒன்றுமே சாப்பிடாமல் இருப்பதால் பசி இல்லாமல் இருக்க வேண்டும், சர்க்கரையின் அளவைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்கிறோம்.

தாரிணி: இரவில் குறைவாக, அளவாக சாப்பிடுங்கள் என்றுதான் பழங்காலத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கிறார்கள். நிறைய காய்கறிகள் சாப்பிட்டுவிட்டு, குறைவான அளவில் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. கொழுப்பு உணவுகளை மட்டுமே 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஆபத்துதான். பேலியோவை பின்பற்றுகிறவர்களின் வயது, உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையில் நீங்களே ஆய்வுகள் செய்து பார்த்தால் உண்மை தெரியும்.

சங்கர்: பேலியோ பற்றிய ஆய்வுகள் வேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம். பொதுவாகவே, மருத்துவ ஆய்வுகள் இந்தியாவில் பெரிதாக இல்லாமல் இருப்பது ஏன்?

தாரிணி: மருத்துவ ஆய்வுகளுக்காக வெளிநாடுகளைப் போல நம் நாட்டில் நிதி கிடைப்பதில்லை. National institute of nutrition உணவு குறித்த பல ஆய்வுகளை நடத்துகிறது. எதிர்காலத்தில் பேலியோ பற்றியும் ஆய்வு நடத்துவோம்.

சங்கர்: தேங்காய் பயன்பாடு கேரளாவில் அதிகம். அவர்கள் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்கள். இந்த சந்தேகம் என்னைப் போல பலருக்கும் இருக்கிறது.

தாரிணி: நம் நாட்டிலேயே கோவாவுக்குப் பிறகு, மாரடைப்பு அதிகம் நடக்கும் மாநிலம் கேரளாதான். கேரளாவில் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது குறைவு. உடற்பயிற்சி செய்வதும் குறைவு. கொழுப்புச் சத்து நிறைய சேர்க்கிறார்கள். கேரளாவைப் பற்றி நம்மிடம் இருக்கும் தவறான கருத்துதான் நீங்கள் கூறியது.

சங்கர்: நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களோ, டயட்டீஷியன்களோ கிடையாது. எங்களது சொந்த வாழ்க்கையில், எங்கள் குழுவினருக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்களின் அடிப்படையிலேயே பல விஷயங்களை சொல்கிறோம். உங்களைப் போல இந்தத் துறையில் இருக்கிறவர்கள் இந்த டயட்டில் என்ன திருத்தங்களை செய்யலாம்?

தாரிணி: பேலியோ டயட்டையே இப்போது பேலன்ஸ்டு டயட்டாகத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். 40 கிராம் அளவு தானியம் சேர்க்கச் சொல்கிறீர்கள். பால், காய்கறிகள், பழங்கள் உங்கள் உணவுமுறையில் இருக்கிறது.

இவற்றில் அதிக எண்ணெய், அதிக கொழுப்பு சேர்த்துக் கொள்வதும் முக்கிய பிரச்னை. 15 மி.லி.க்கு மேல் ஒருநாளில் எண்ணெய் கூடாது. பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது இல்லை என்பதும் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம். பனீர் போன்றவற்றை புரதச் சத்துக்காக சேர்க்கிறீர்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

சங்கர்: கொழுப்புச் சத்து அதிகம் என்பதுதான் பிரச்னையா?

தாரிணி: உலக அளவில் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதில் தலைநகரமாகஇந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது. அதோடு, அசைவம் சமைக்கும் முறையிலும் நிறைய தவறுகளை செய்கிறோம். அந்த அளவு அறியாமை இருக்கும் உலகில் இது ஆபத்தான உணவுமுறை. ஐரோப்பியரை போலவோ, அமெரிக்கரை போலவோ நாம் இல்லை. அசைவ உணவுகளை மட்டுமே நாம் சாப்பிட்டு வாழ முடியாது.

சங்கர்: உலகம் முழுவதும் மனிதர்களின் உடல் அமைப்பு ஒன்றுதானே?

தாரிணி: நிச்சயம் இல்லை. ஒவ்வொரு நாட்டினருக்கும் உடல் அமைப்பு மாறுபடுகிறது. அதனால்தான் இந்தியர்களுக்கு என்று தனிப்பட்ட பி.எம்.ஐ. அளவு வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்களுக்கு பிறவியிலேயே உடலில் கொழுப்புச்சத்தின் அளவு அதிகம் என்பதால்தான், நம் ஊரில் பி.எம்.ஐ. அளவைக் குறைவாக வரையறுத்திருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு இயல்பிலேயே கொழுப்புச்சத்து குறைவு என்பதால் அவர்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை.

சங்கர்: 4 வருடங்களாக அசைவம் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னுடைய கொழுப்பு அளவு நார்மலாகத்தான் இருக்கிறது. முன்பைவிட நன்றாக எடை குறைந்திருக்கிறேன். மருத்துவ உலகம் சொல்வது போல கொழுப்பு ஆபத்து என்றால், எங்கள் குழுவைச் சேர்ந்த சர்க்கரை நோயுள்ளவர்கள் கூட இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்களே... நீரிழிவு மருந்தைக் கூட விட்டுவிட்டார்களே...

தாரிணி: லிபிட் புரொஃபைலை (கொழுப்பு) பொறுத்த வரை உடனே அதன் விளைவு தெரியாது. பல மாதங்களுக்குப் பிறகுதான் அதன் விளைவு என்னவென்று தெரியும். சில வருடங்களுக்குப் பிறகுதான் அது எங்கே அடைப்பு கொடுக்கும் என்பதும் தெரியும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், அளவான கார்போஹைட்ரேட் என்று பேலன்ஸ்டு டயட் பின்பற்றினாலே போதும்... வேறு எந்த விசேஷ டயட்டும் அவசியம் இல்லை.

மனிதர்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு இரண்டு தலைமுறையாவது ஆகும். மனிதகுல ஆரோக்கியத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்களின் முயற்சி பாராட்ட வேண்டியது. உங்கள் குழுவினருக்கு ஒரு சீனியர் டயட்டீஷியன் என்ற முறையில் என்னுடைய வாழ்த்துகள்!

பேலியோவில் நமக்குக் கிடைக்கிற முதல் நன்மையே இந்த உணவுமுறையை வீட்டில் மட்டும்தான் சமைத்துச் சாப்பிட முடியும் என்பதுதான். நீங்கள் பரிந்துரைக்கிற உணவை ஹோட்டலில் சாப்பிட முடியும். ஹோட்டல் உணவுகள் எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடு?

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், அளவான கார்போஹைட்ரேட் என்று பேலன்ஸ்டு டயட் பின்பற்றினாலே போதும்... வேறு எந்த விசேஷ டயட்டும் அவசியம் இல்லை!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.