மகள்களிடம் எதை சொல்வது? எப்படி சொல்வது

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எதை சொல்வது? எப்படி சொல்வது?

நெருக்கத்திற்கும், பிணைப்பிற்கும் அடையாளமே அம்மாவும், மகளும்தான். தாயின் வயிற்றில் பிறந்து, மடியில் தவழ்ந்து இடைவெளி இல்லாமல் வளரும் மகள்– பத்து வயதை தாண்டும்போது மெல்ல மெல்ல தாயிடம் இருந்து விலகுகிறாள். எல்லா வீடுகளிலும் அப்படி இல்லை என்றாலும், பெரும்பாலான வீடுகளில் அந்த விலகல் இருக்கத்தான் செய்கிறது. காலப்போக்கில் பல குடும்பங்களில் தாய்க்கும்– மகளுக்கும் இடையே பெரிய மதில் ஒன்று கட்டப்பட்டது போன்ற இடைவெளி விழுந்துவிடுகிறது.

அந்த இடைவெளி உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால் ‘மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?’ என்பதை தாயார் கற்றுக்கொள்ள வேண்டும்.

மகள், அம்மாவிடம் ‘என் பள்ளிக்கூட நண்பர்களில் சில மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் நான் நட்பு கொண்டிருக்கிறேன்..’ என்று சொன்னால், பெரும்பாலான அம்மாக்கள் உடனே, ‘‘ஏய்.. அதெல்லாம் கூடவே கூடாது. ஆண்களோடு நட்புவைப்பது நல்ல பழக்கம் இல்லை. நீ மாணவி களிடம் மட்டும் தோழமை கொண்டால் போதும்’’ என்று சொல்வார்கள். அது மகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ‘நீ ஒரு பழைய பஞ்சாங்கம். உன்னிடம் என் நட்பு பற்றி பேசியதே தப்பு’ என்பார்கள்.

இதுபோன்ற செயல்பாடுகள்தான் விலகலுக்கு காரணமாக இருக்கின்றன.

விலகல் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் என்ன சொல்லவேண்டும்?

‘‘உன்னுடன் படிக்கும் மாணவர்களோடு நீ நட்பு கொள்ளத்தானே விரும்புகிறாய், தப்பில்லை. ஆனால் நட்பு கொள்வது ஆணிடம் என்றாலும், பெண்ணிடம் என்றாலும் நீ தெளிவாக இருக்கவேண்டும். எல்லையோடு பழகவேண்டும். அந்த நட்பில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டாலோ, சிக்கல் ஏற்பட்டாலோ என்னிடம் மறைக்காமல் சொல்..’’ என்று கூறவேண்டும்.

இவ்வாறு தாய் சொல்லும்போது, மகள் ‘அம்மா நமக்கு ஆண் நண்பர்களிடம் பேச சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அந்த சுதந்திரத்தை நாம் எல்லை மீறாமல் அனுபவிக்கவேண்டும்’ என்று நினைத்து, தாய்மீது மதிப்பு கொள்வாள். அந்த நட்பில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அதற்கு விடைதேடி அம்மா முன்னால் போய் நிற்பாள்.

ஆண், பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மகள், அம்மாவிடம் ‘அம்மா நீ அவனை (அண்ணன் அல்லது தம்பியை) இஷ்டம்போல் நடந்துகொள்ள அனுமதிக்கிறாய். சைக்கிளில் செல்ல அனுமதிக்கிறீர்கள். நினைத்த நேரம் வெளியே செல்ல அனுமதிக்கிறீர்கள். எனக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறீர்கள்’ என்று கேட்பார்கள்.

அதற்கு பெரும்பாலான அம்மாக்கள், ‘‘அவன் ஆண். சைக்கிள் ஓட்டுவான்.. வண்டி ஓட்டுவான்.. என்ன வேணுமானாலும் செய்வான். நீ பெண், அடக்க ஒடுக்கமாக நடந்துக்கணும்..’’ –இப்படி பதில் சொல்கிறார்கள்.

இந்த பதில் பெண்களை எரிச்சலூட்டும். அவள் பெண்ணாக பிறந்ததை குற்றமாக சொல்வதுபோல் அமைந்துவிடும். அதற்கு பதிலாக, ‘நீ என் செல்ல மகள். அவன் என் செல்ல மகன். நான் உங்கள் இருவரிடையே ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. நான் இருவரையும் சமமாகவே பாவிக்கிறேன். சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறாயா? ஓட்டு. நீ பெண்ணாக பிறந்ததால் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டியதில்லை. உன்னிடம் இருக்கும் திறமையை நீ வெளிக்காட்டு. அதற்கு தேவையான எல்லா வாய்ப்புகளையும் நான் உருவாக்கித் தருகிறேன்’ என்று கூறவேண்டும்.

பெண்களுக்கு சில அம்மாக்கள் கண்காணிப்பு வளையம் போட்டுவிடுகிறார்கள். தங்கையை பின்தொடர்ந்து அண்ணன் சென்று கொண்டிருப்பான். ‘என்னம்மா இது கொடுமை. நான் எங்கு போனாலும் இவன் என்னோடு வந்துகொண்டே இருக்கிறான். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரி போன்று என்னை பின்தொடர்கிறான். இது எனக்கு பிடிக்கவே இல்லை’ என்று மகள் கோபம் கொள்வாள்.

பதிலுக்கு அம்மா, ‘‘அவன் உன் அண்ணன். நீ ஏதாவது தப்பு செய்தால் அவனும் சேர்ந்துதான் பாதிக்கப்படுவான். அதனால் நீ சரியான வழியில் சென்று கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக அவன் உன்னை பின்தொடர்கிறான். அது அவன் கடமை’’ என்று பேசி, மகளின் கோபத்தை அதிகரிக்கச் செய்து விடுவார்கள்.

அதற்கு பதிலாக, ‘உன் அண்ணனோ, தம்பியோ யாரும் உன்னை பின்தொடர்ந்து வந்து எந்த பலனும் இருக்கப்போவதில்லை. உன்னை உன்னால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதனால் நீதான் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும். உன் அண்ணன் சந்தேகத்தோடு உன்னை பின்தொடர்வதாக நீ நினைப்பது தவறு. ஒருவேளை அந்த எண்ணத்தில் அவன் இருந்திருந்தால் அது தவறு என்று அவனுக்கு நான் உணர்த்துகிறேன். நீ எப்போதும் போல் கவனமாக இரு..’ என்று தான் கூறவேண்டும்.

மகள்கள் தற்போது தங்கள் அம்மாக்கள் அழகாக உடை அணிந்து நாகரிகமாக தோன்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சில அம்மாக்களுக்கு அதிலெல்லாம் ஆர்வமே இல்லை. அதனால் மகள், அம்மாவிடம் ‘ஏம்மா நீ மட்டும் இப்படி பழைய பஞ்சாங்கம் மாதிரி உடை அணிந்து வருகிறாய். என் தோழிகளின் அம்மாக்களை பார். எவ்வளவு அழகாக உடை அணிந்துவருகிறார்கள். அவர்களை பார்த்தாவது நீ படி..’ என்று சொல்கிறார்கள்.

பெரும்பாலான அம்மாக்கள் உடனே, ‘‘எனக்கு வயதாகிவிட்டது. இனி என்னை யாரும் திரும்பிப்பார்க்கவேண்டியதில்லை. அதனால் என் உடை இப்படித்தான் இருக்கும். நீ உன் வேலையை பார்’’ என்று கூறிவிடுகிறார்கள்.

அப்படி சொல்லாமல், இப்படி சொல்லலாம்..!

‘‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடை பிடிக்கும். எனக்கு இந்த உடை பிடித்திருக்கிறது. உனக்கு இது பிடிக்கவில்லை என்கிறாய். இதற்காக உன் தோழிகள் மத்தியில் உன் செல்வாக்கு குறைந்துவிடும் என்று நீ கருதவேண்டாம். நான் உன் அம்மா. உன் தோழிகளின் அம்மாவோடு என்னை ஒப்பீடு செய்து பார்க்காதே. ஆனாலும் உன் ஆசைக்காக இனி நான் துணி வாங்கச் செல்லும்போது உன்னையும் அழைத்துச் செல்கிறேன். நாம் இருவரும் சேர்ந்து எனக்கான உடைகளை தேர்ந்தெடுக்கலாம்’’ என்று கூறவேண்டும்.

இப்படி சூழ்நிலைகளுக்கும், மகளின் மன இயல்புக்கும் தக்கபடி அம்மாக்கள் பேசினால் தாய்– மகள் இடையே இடைவெளி தோன்றாது. அன்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.