மணமுறிவுக்குப் பின் - After Divorce

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மணமுறிவுக்குப் பின்

By டாக்டர் அபிலாஷா


‘மாங்கல்யாம் தந்துனானேனா
மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ ச்ரதஸ்சதம்!!!’

அட்சதை தூவி மணமகளுக்கு மணமகன் திருமாங்கல்யம் கட்டும் நேரத்தில் சொல்லப்படும் மந்திரம் இது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதன் அர்த்தம் என்னவென்று யோசித்திருக்கிறோமா?
'மங்கலகரமானவளே! உன்னுடனான குடும்ப வாழ்க்கை இனிதாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தாலியை உன் கழுத்தில் கட்டுகிறேன். என் மனைவியாக, என்னுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்பவளாக, சர்வ யோகங்களுடன் நூறாண்டு காலம் வாழ்க!' என்பதுதான்.

இந்த மந்திரத்தின் அர்த்தம் உணர்ந்து மணமகன் தாலி கட்டினால், திருமண வாழ்வில் எல்லா நாளும் இனிய நாள்தான். வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் வெகு சிலரே. இல்லத்து அரசியாக, கணவனின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்கால சந்ததியை வளர்த்து, அவனுடைய சகல இயக்கங்களிலும் உறுதுணையாக இருப்பவள் மனைவி. ஒரு மனிதன் எல்லாவற்றையும் இழந்தாலும்கூட, நல்ல மனைவி வாய்க்கப்பட்டிருந்தால் அவனுக்கு அதைவிட அதிர்ஷ்டம் வேறு எதுவுமில்லை.

என் வாழ்க்கையின் சுக துக்கங்களை உன்னுடன் பகிர்வேன், நான் உன்னை நம்புகிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஆரம்பித்த திருமண உறவு, சில சமயங்களில் பிரச்னைக்கு உள்ளாகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கு நீதான் காரணம்; உனக்கு பொறுப்பே இல்லை என்று கணவனும், நீங்க என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க என்று மனைவியும் ஒருவரை ஒருவர் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது, பிரச்னை லேசாகத் தலை தூக்கும்.

நவீன பெண்களின் தேவை மாறி வருகிறது என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், கணவனின் விருப்பங்களுக்கு மனைவி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவிக்குத் தேவைப்படும் மரியாதை, சுதந்தரம், சம நிலை போன்றவற்றை கணவன் புரிந்துகொள்ள வேண்டும். திருமண வாழ்க்கையில் அன்பும், புரித்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் மிகவும் முக்கியம். இதில் ஒன்று குறைந்தாலும் திருமண பந்தம் தொடர்வதில் சிக்கல் தொடங்கிவிடும்.

ஆண் தன்னுடைய பழைய கால சிந்தனையை மாற்றிக்கொண்டால் மட்டுமே இனி வரும் திருமண உறவுகள் நீடித்திருக்க முடியும். ஆணும் பெண்ணும் இணைந்துதான் நல்லதொரு குடும்ப வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சமூகத்தில் தனித் தனி தீவுகளாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது.

திருமண வாழ்க்கை நிலைத்து நீடித்திருக்க ஒரு நல்ல வழி இருக்கிறது. உங்களால் இயன்றவரை உங்கள் மனைவி / கணவனுக்கு கை கொடுங்கள். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் உடன் நில்லுங்கள். பிரச்னை ஏற்பட்டு மனக்கசப்பு வந்தாலும், எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை வையுங்கள். ஒருபோதும் உங்கள் ஆன்மாவை விற்றுவிடாதீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு எல்லை மீறல்கள் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ஒருவரை ஒருவர் மனதார நேசிப்பதும், விட்டுக் கொடுத்து வாழ்வதும் முக்கியம். ஆனால் எல்லாத் திருமணங்களும் எவ்வளவு உறுதி எடுத்து ஆரம்பித்திருந்தும் இறுதிவரை தொடர்வதில்லை. சிறிய பிரச்னைகளேகூட புரிதல் இல்லாமல் போகும்போது, அவை வளர்ந்து பெரிய பிரச்னையாக வெடித்து, உறவில் விரிசல்களை ஏற்படுத்திவிடுவதுண்டு. இதுவரை அனுபவித்த துன்பங்கள் போதும், இனிமேல் சந்தோஷமாக இருக்க விரும்பி முடிவு செய்து பிரிந்துவிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம் சமூகத்தைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒரு பாதுகாப்பான அமைப்பு. அது சாதாரண உறவு நிலையால் மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. தவிர ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் சமந்தப்பட்டது அல்ல. கணவன் மனைவி இருவரின் குடும்பங்களை ஒன்றாக இணைக்கும் பாலம். இந்தச் சமூகத்தில் பிறந்த எல்லா ஆண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சோம்பேறித்தனமும், பெண்தானே என்ற அலட்சியமும் ஒளிந்துகொண்டே இருக்கும்.

பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப்படும் பெண்களுக்குப் புது இடம், புது சூழல் பழக்கப்பட நாளாகும். கணவனைப் புரிந்து அவன் குணத்துக்கு ஏற்ப தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்ளவேண்டி இருக்கும். எல்லாப் பெண்களாலும் அது முடியாமல் போகலாம். குடும்பத்தில் யார் பெரியவர் என்ற ஈகோ பிரச்னை தலைதூக்கும். பல சமயங்களில், என்ன வாழ்க்கை இது என்ற அலுப்பு ஏற்படும். ஒட்டுதல் இல்லையெனில், பிரச்னைகள் முளைத்து வேர் விட்டு கிளையாகி, விவாகரத்து என்ற மணமுறிவு நிலைக்கு வந்துவிடும்.

திருமண அமைப்பில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் என்ன செய்வது? அதிலும் பெண்கள், சின்னக் குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு அதன்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஒற்றைப் பெற்றோராக இந்தச் சமூகத்தை எதிர்கொள்வது மிகவும் கடினம். மிகவும் வலி மிகுந்தது. திருமண முறிவு, மன அழுத்தத்தை தந்துவிடும். ஆழமான காயங்களை ஏற்படுத்திவிடும். அதிலிருந்து மீள என்ன வழி? இதற்குத் தீர்வு என்ன? பேசலாம்.


 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

திருமண உறவு மணமக்களுக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சிகரமாக இல்லையென்றாலும்கூட பரவாயில்லை, நாளொரு பிரச்னை பொழுதொரு பஞ்சாயத்து என்ற நிலை வந்துவிட்டால், அது ஒரு கட்டத்தில் வேறு சில பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.ராணி செல்வராஜ் தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். செல்வராஜ் பொறுப்பின்றி சுற்றித் திரிவதும், வீட்டுக்கு சரியாக வராமலும், கேள்வி கேட்ட மனைவியை அடித்துத் துன்புறுத்துவதுமாக இருந்தான். குழந்தைகள் முன்னால் அவன் பேசும் பேச்சுக்களை காது கொடுத்துக் கேட்க முடியாது.

அவனிடம் கோபித்துக்கொண்டு ராணி தன் தாய் வீட்டுக்கு வரும்போதெல்லாம், பெற்றோர் சமாதானப்படுத்தி, நல்ல வார்த்தைகள் சொல்லி திருப்பி அனுப்பி வைப்பார்கள்.

செல்வராஜின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்ததே தவிர அவன் திருந்தும் வழி இல்லை. இதை உணர்ந்த ராணி கடைசியில் வீட்டை விட்டு அந்த ஊரைவிட்டே கிளம்பிச் சென்றுவிட்டாள். தனக்கு படிப்போ நல்ல வேலையோ இல்லை;

தன்னுடன் குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கண்ணீருடனும் மன வலியுடனும், அவர்கள் தூங்கும்போது முத்தமிட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாள். எங்கெங்கோ தேடியும் இதுவரை அவளைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இப்போது தனியாக குடும்பத்தை சமாளிக்க முடியாமல் ராணியின் அருமையை உணர்ந்து தினமும் அழுகிறான். தன் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

என்றாவது ராணி திரும்ப வருவாள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறான். அவள் திரும்பி வரும்பட்சத்தில் ராணியாகவே அவளை வாழவைக்க முடிவு எடுத்துள்ளான். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

விவாகரத்து, பொதுவாக அனைவரும் நினைப்பதைப்போல சாதாரண விஷயம் இல்லை. சட்டபூர்வமாக பிரிவு ஏற்படுவதற்கு பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னால் உணர்வுரீதியாக தம்பதியருக்கிடையே அந்த ‘விவாகரத்து’ நடந்திருக்கும்.

விவாகரத்து செய்வதற்கான முடிவை எடுக்கும் முன் பலமுறை யோசித்துதான் முடிவு எடுக்கவேண்டி உள்ளது. நம்முடைய சமுதாயச் சூழலில் தனியாக ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் பிரச்னைகளை வார்த்தைகளில் சொல்லி முடியாது. என்னதான் முன்னேறிய சமுதாயமாக நம்மை காட்டிக்கொண்டாலும், இன்னும் பல விஷயங்களில் அப்படியேதான் இருக்கிறோம். கணவன் இன்றி தனியாக வாழும் பெண்ணை ஏளனமாகப் பார்க்கும் சூழல் இன்னும் நிலவுகிறது. திருமண விழாக்கள், கோவில், வளைக்காப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விவாகரத்தானவர்கள் செல்வதைத் தவிர்த்துவிடுவார்கள்.

சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு இந்தப் பிரச்னையின் தாக்கம் குறைவு. மேல்தட்டில் இருப்பவர்களும் அதை ஓரளவு எளிதாகக் கடந்துபோய்விடுகிறார்கள். இடையில் சிக்கிக்கொண்ட மத்தியதர வர்க்கத்தினருக்குத்தான் எல்லாப் பக்கமும் இடி. யார் தவறு செய்திருந்தாலும், யார் பிரச்னைக்குக் காரணமாகி விவாகரத்து செய்திருந்தாலும் தண்டனை என்னவோ பெண்களுக்குத்தான். குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி அவர்கள் மரியாதை இழந்துவிடுகிறார்கள்.

அதனால் அவர்கள் தன்னம்பிக்கை இழக்கின்றனர். ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்க வேண்டு்ம்? செய்யாத தவறுக்கு இப்படி ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என மனக் குமுறலுடனும் கேள்விகளுடனும் மிச்ச வாழ்க்கையை அதிக வலிகளுடன் கடக்கிறார்கள்.

ஆண்களைப் பொருத்தவரையில், குடும்பத்தில் அல்லது வீட்டில் பெரிய பிரச்னைகள் இருக்காது. அவனுக்கென்ன ஆண் என்ற அங்கீகாரம் எப்போதும் உண்டு. ஆனால் தனிமை என்பது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒரேவித வலியையும் வேதனையையும் தரும். ஆண் வெளியில் பிரிவுத் துயரைக் காண்பித்துக்கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் நொறுங்கிப் போய்விடுவதுண்டு.

மிகவும் வெறுத்துப்போய் கசந்துணர்வுடன் விவாகரத்து செய்பவர்கள், ஆரம்பத்தில் தாங்கள் எடுத்த முடிவுக்கு சந்தோஷப்பட்டு விடுதலை ஆனதுபோல் உணர்ந்தாலும், நாளாவட்டத்தில் பழைய நினைவுகள் அவர்களை வாட்டி வதைக்கும். இப்படி பல உணர்வலைக்குள் சிக்கி மனம் தெளிவடைய சிலருக்கு மாதக்கணக்கு அல்லது வருடக்கணக்குகூட ஆகும்.

சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை போட்டு, பிரிந்து, விவாகரத்து வரை சென்றுவிட்டு சில மாதங்களில் தங்கள் தவறை உணர்ந்து திரும்ப சேர்ந்து வாழ்ந்ததும் உண்டு.

இயக்குநர் மணிரத்னத்தில் பிரபல திரைப்படம் மெளன ராகம் இதைப் பற்றித்தான் பேசுகிறது. தன் மீதுள்ள தவறுகளை நிதானமாக யோசித்து அதைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்தால் போதும். திருமண உறவில் மட்டுமில்லை, எந்த உறவுநிலைகளிலும் பிரச்னை ஏற்படாது.

வேறு வழியே இல்லை, விவாகரத்து ஒன்றுதான் தீர்வு என்று எப்போது தம்பதிகள் முடிவெடுக்கலாம்?பேசலாம்…
டாக்டர் அபிலாஷா
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

ஜாதகத்தில் பத்துப் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்திருந்தாலும் வாழும்போது மிகவும் தேவையான, மிகவும் முக்கியமான பொருத்தம் என்றால் அது மனப் பொருத்தம்தான். அது இல்லையென்றால் மிகவும் கஷ்டம். இருவரது விருப்பங்கள் நேர் எதிராக இருந்தால்கூட பிரச்னையில்லை. துணையை தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்ற முயற்சி செய்யும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன.


அஸ்வினும் ராஜியும் மனமொத்துக் காதலித்தார்கள். அஸ்வினிடம் மிகவும் வெளிப்படையாக இருந்தாள் ராஜி. ராஜி தன் வாழ்வில் நடந்த சில கசப்பான விஷயங்களை அஸ்வினிடம் பகிர்ந்துகொண்டாள். ஏற்கெனவே ஒருவருடன் உறவு வைத்திருந்ததையும் ஒரு மனக்கசப்பினால் அந்த உறவை முறித்துக்கொண்டதையும் சொன்னாள்.

அஸ்வின் அவளிடம் பரிதாபம் காட்டினான். அவளை சமாதானம் செய்து ஆறுதல் படுத்தினான். தனக்கு ஏற்ற துணையை, தன்னை புரிந்து அப்படியே ஏற்றுக்கொண்டவனை கண்டுபிடித்துவிட்டதில் ராஜிக்குக் அவன் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.

மணமாகி ஒரு சில மாதங்களில் ராஜியிடம் அஸ்வின் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தான். ஒவ்வொரு நாளும் ராஜி எங்கே போனாள், ஆபீஸில் யாருடன் பேசினாள் என்று சின்ன விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை தன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான்.

ராஜி சொல்லாமல் மறைத்தாலோ, தவிர்த்தாலோ அஸ்வின் எரிச்சல் அடைந்தான். வேலை முடிந்தபின் தன் அலுவலக நண்பர்களுடன் ராஜி காபி குடிப்பதற்குத் தடை விதித்தான். ‘வீட்டுக்கு லேட்டா வரே அதான்’ என்று அதற்குக் காரணம் சொன்னான்.

தான் ஆபீஸிலிருந்து வரும்போது ராஜி வீட்டில் இருந்தாக வேண்டும் என்று சீறிப் பாய்ந்தான். குடும்ப நிதி நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான். மாதாந்திர குடும்பச் செலவை அவனே தீர்மானித்தான். எல்லா விஷயங்களையும் அவன் மட்டுமே முடிவு செய்தான். ராஜி சொல்லும் யோசனைகளை எல்லாம் நிராகரித்துவிடுவான். வீட்டில் அவள் மொபைல் போனை அணைத்துவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். தப்பித் தவறி தோழிகளுடன் அல்லது அலுவலக நண்பர்களுடன் ராஜி வெளியே சென்றால், அவளிடம் சண்டை போட்டு மனத்தைக் காயப்படுத்தினான்.

இருவருக்குள் எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று காரணம் சொல்லி அவளுடைய வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகளையும் தான் கவனித்துக்கொள்ளப்போவதாக அவன் சொன்னதும், அவளுடைய இமெயில் பாஸ்வேர்டை தனக்கு சொல்லும்படி வற்புறுத்தியதும் ராஜி விழித்துக்கொண்டாள். அவனைப் பற்றிய எந்த விஷயத்தையும் அவளிடம் அவன் சொல்வதில்லை. ஆனால், அவளுடைய எல்லா விஷயமும் அவனுக்கு அத்துப்படி என்ற நிலையில், தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைத்தாள்.

அவனுடைய தேவைக்காகவும் பிடிவாதத்துக்காகவும் தன்னுடைய சுயத்தையும் சுதந்தரத்தையும் ராஜி விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அன்பால் விட்டுக்கொடுக்க முன் வரும் அவளால், கணவன் என்ற ஒரே அதிகாரத்தை அஸ்வின் காட்டிய வேற்று முகம் அவளுக்கு சீக்கிரம் வெறுத்துவிட்டது. அவர்கள் உறவும் கடைசிக் கட்டத்துக்கு வர ஆரம்பித்துவிட்டது.

கணவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை சில பெண்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதன் காரணமாக எழும் சண்டைகள், பிரச்னையாக வெடித்து விவாகரத்து வரை முடியும்.
திருமணமான ஒரு சில நாட்களில் ஏற்படும் குடும்பப் பிரச்னையும் இதற்கு ஒரு காரணமாகலாம்.

மனைவியின் வீட்டினரை கணவர் மதிக்கவில்லை என்றாலோ, கணவர் குடும்பத்தாருடன் மனைவி சகஜமாகப் பழகவில்லை என்றாலோ பிரச்னை ஆரம்பமாகிறது என்று அர்த்தம். அதிலும் குறிப்பாக, மாமனார் மாமியாரை மதிக்கவில்லை என்று பெயர் எடுத்துவிட்டால் பூகம்பம்தான். முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். ஆரம்பத்தில் ஏற்படும் சிறு பிரச்னைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வளர்ந்து விவாகரத்து வரை செல்ல வாய்ப்புள்ளது.

திருமண உறவைத் தாண்டி கணவன் அல்லது மனைவிக்கு இருக்கும் தொடர்புகள் - இதைப்பற்றி கணவன் அல்லது மனைவி அறியும்போது மனம் உடைந்துபோகிறது. இது நம்பிக்கைத் துரோகம் என்பதால், யார் சமாதானப்படுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. உறவு முறிவு ஒன்றுதான் தீர்வு என்று நினைக்கும்பட்சத்தில், அவர்கள் அந்த முடிவை எடுப்பதே நல்லது.

பெரும்பாலான குடும்பங்களில், பணப் பிரச்னைதான் விவாகரத்துக்கு முக்கியக் காரணமாகிறது. வீட்டுச் செலவுக்குப் போதிய பணம் கொடுக்காமல் கணவன் பொறுப்பின்றி இருந்தால், ஒரு கட்டத்துக்கு மேல் மனைவியால் குடும்பம் நடத்த முடியாமல் போகிறது.

குடும்பச் செலவுக்குப் பணம் தராமல் இருப்பதுடன், தன்னுடைய முன்னாள் அல்லது இந்நாள் காதலிக்குச் செலவு செய்வதை மனைவி கண்டறிந்தால், விவகாரம் விவாகரத்து வரை செல்வது உறுதி.

மனைவியை உடல்ரீதியாக, மனரீதியாக அச்சுறுத்துவது, அடிப்பது போன்றவை குடும்ப வன்முறைச் செயல்களாகும். சமூகத்துக்குப் பயந்து கூடுமானவரை பொறுத்துப்போகும் இவர்கள், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். எனவே, ஆரம்பத்திலேயே சட்டத்தின் உதவியுடன் அந்த வாழ்க்கையிலிருந்து வெளிவந்துவிடுவது நல்லது.
பேசுவோம்…
டாக்டர் அபிலாஷா


 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி; காதல் திருமணங்களில் சரி; பிரிவு என்று வந்துவிட்டால், பெண்களின் வாழ்க்கைதான் அதிக பாதிக்கப்படும். மணமுறிவுக்குப் பின் ஆண்களுக்கு தனிமை அல்லது தனிப்பட்ட இழப்பு என்ற அளவோடு பிரச்னை முடிந்துவிடும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


கூடுமானவரை, விவாகரத்தை தவிர்க்கவே பெண்கள் விரும்புவார்கள். என்னிடம் கவுன்சிலிங் வரும் தம்பதிகளுக்குக் கூடுமானவரை அவர்கள் சேர்ந்திருக்க வேண்டிய காரணங்களை விளக்கிச் சொல்வேன்.

மீனாவும் குமாரும் திருமணமாகி சில வருடங்கள் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கவே, மீனா வேலையை விட்டுவிட்டு ஹோம்மேக்கராக குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த குமாரின் குடிப்பழக்கம், சில வருடங்களில் தினமும் குடிக்கும் அளவுக்கு அவரை அடிமைப்படுத்தவே, மீனா சண்டை போட்டாள்.

வீட்டுக்குத் தர வேண்டிய பணத்தையும் குமார் சரியாகத் தருவதில்லை. சின்ன குழந்தைகள், வாடகை வீடு, செலவுக்குப் போதிய பணம் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம், பொறுப்பற்ற குடிகாரக் கணவன். எத்தனையோ கவுன்சிலிங், மன மாற்றத்துக்கான சிகிச்சை எல்லாம் எடுத்துக்கொண்டாலும், மீண்டும் பழையபடி குடிக்கும் அளவுக்கு குமார் மாறிப்போனான்.

பொறுக்க முடியாத ஒரு சூழலில், விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு மீனா செல்லவே, அந்த வக்கீல் எனக்குத் தெரிந்தவர். இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கவில்லை. இந்தக் கூடாத பழக்கமே இவர்கள் பிரச்னைக்குக் காரணம் என்று நினைத்து என்னிடம் அனுப்பிவைத்தார்.

இருவரிடம் பேசியபோது, அவர்கள் ஒருவர் மீது மற்றவர் வைத்துள்ள அன்பும் காட்டும் அக்கறையும் மாறாமல் இருப்பது தெரிந்தது. குமாரிடம் மீனாவின் நிலையை எடுத்துச் சொல்லி, குடிப்பதனால் சொந்த வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் வேலையிலும், உடல் நிலையிலும் பிரச்னைகள் ஏற்படும் என்பதை பல கட்ட கவுன்சிலிங் மூலம் புரியவைத்தேன். அதன்பின் ‘டீஅடிக்ஷன்’ சென்டருக்கு அனுப்பினேன்.

அங்கிருந்து, குமார் ஒரு புதிய மனிதனாகவே திரும்பினார். நண்பர்கள் யாராவது ட்ரீட் என்று அழைத்தால், கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு மாறிவிட்டார். யோகா, தியானம் என்று மனத்தை திசை திருப்பி, இப்போது தன் குழந்தைகளுடனும் மீனாவுடனும் சந்தோஷமாக இருக்கிறார்.

இப்படி விவாகரத்து வரை சென்றுவிட்ட திருமண உறவு காப்பாற்றப்பட்டது எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், இன்னொரு கேஸில் இதற்கு நேர்மாறான முடிவுக்கு நானே சொல்லவேண்டியதாகிவிட்டது.

மணப்பெண் ரேஷ்மா, அல்ட்ரா மாடர்ன் பெண். சென்னையில் பிறந்து வளர்ந்தவள். மாப்பிள்ளை அன்பரசன், தஞ்சாவூர் பக்கம். பார்க்க நன்றாக இருக்கிறார், சொத்து, நிலபுலன்கள் இருக்கிறது என்று வீட்டில் அவசரமாக கல்யாணத்தை நடத்திவைத்துவிட்டார்கள். ஆனால் ரேஷ்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வரன் பிடிக்கவில்லை. எவ்வளவோ அடம்பிடித்தும் அவளது அப்பா அசைந்து கொடுக்கவில்லை.

ரேஷ்மா மீது அன்புக்கு அதிகப் பாசம். ஆனால், அவள் அவனிடம் சரியாகப் பேசுவதில்லை. வெளி உலகுக்குக் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர்கள், தனிப்பட்ட வாழ்வில் அதிகம் பேசுவதுகூட இல்லை. அன்பு எதாவது கேட்டால், ரேஷ்மாவிடம் இருந்து ஒற்றை வார்த்தை பதில்கள் மட்டுமே வரும். அன்பு எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை. ரேஷ்மாவின் பெற்றோரிடம் முறையிட்டபோது, அவர்களும் அவளுக்கு அட்வைஸ் செய்ய, அவளுடைய பிடிவாதமும் வெறுப்பும் அதிகமாகியதே தவிர குறையவில்லை.

என்னிடம் வந்தபோது, இருவரிடம் தனித்தனியே பேசினேன். அன்பரசன் அவளுடன் வாழத் தயாராக இருந்தான். ஆனால் ரேஷ்மா, அவனை ஏற்றுக்கொள்ளவே மறுத்தாள். காரணம், இந்தத் திருமணம் தன்னுடைய விருப்பத்தை மீறி கட்டாயமாகத் தன் மீது சுமத்தப்பட்டது. இரண்டாவதாக தன்னுடைய அழகுக்கு சற்றும் பொருத்தமில்லாத தேர்வாக அன்பரசன் இருப்பதாக அவள் ஆழமாக நினைத்தது. திருமணத்துக்குத் தயாராத நிலையில், வீட்டில் கட்டாயப்படுத்தியதால் அந்தக் கோபம் அன்பரசன் மீது வெறுப்பாக மாறிவிட்டது. திருமண உறவின் மீது ஒருவித ஒவ்வாமை அவளுக்கு ஏற்பட்டுவிட்டது.

அழகு சில நாட்கள்தான்; அன்பும் காதலும்தான் திருமண உறவை பலப்படுத்தும்; அது அன்பரசனிடம் அதிகம் இருக்கிறது; எனவே, வாழ்க்கையை தவறவிடாதே; பிடிவாதத்தை மாற்றி கொஞ்சம் யோசித்துப் பார்; உன் மீது உயிரையே வைத்துள்ளான் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால், அவளுடைய மனத்தில் சிறிய மாற்றம்கூட ஏற்படவில்லை. சொன்னதையே திருப்பித் திருப்பி சொன்னாள்.

அன்பரசனிடம் நான் தெளிவாகப் பேசினேன். உங்கள் மனைவிக்கு உங்கள் மீது அன்போ அடிப்படை ஈர்ப்போ கொஞ்சமும் இல்லை. இப்படியே போனால், அது மேலும் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை. வேறு வழியில்லை. பிரிவு இதற்குத் தீர்வில்லை என்று தெரிந்தும், உடன்பாடில்லாமல் ஒருவருடன் திருமண வாழ்க்கையைத் தொடர்வதும் சரியில்லை. சந்தோஷமாக இருக்கத்தான் கல்யாணம் செய்துகொள்கிறோம். ஆனால், உங்களுடன் பேசக்கூட விருப்பாத ஒரு பெண்ணிடம் நீங்கள் என்ன எதிர்ப்பார்க்க முடியும். யோசித்து ஒரு முடிவை நீங்கள் எடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

வருத்ததுடன் அவன் கிளம்பிச் சென்றான். அடுத்த வருடம் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இதனால் ரேஷ்மா தனக்கு ஏற்படுத்திக்கொண்ட சிக்கல்கள் அளவில்லாதது. அவளால் தன் பெற்றோரை, குடும்பத்தாரை, சுற்றி இருப்பவர்களை எதிர்நோக்க முடியாமல் தவித்தாள்.

ஆண் - பெண் இருவரும் சரி நிகர் என்று நாம் அடிக்கடி சொன்னாலும், நாம் வாழும் சமுதாயம் அப்படியொன்றும் அங்கீகாரம் அளித்துவிடவில்லை. உலகம் முழுவதும் பெண்கள் இரண்டாம் பாலினமாகவும், ஆணுக்குக் கீழானவளாகவே இன்று வரை பார்க்கப்படுகிறாள். அதுவும், திருமணம் ஆகி அந்த உறவிலிருந்து விலகிவிடும் பெண்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கின்றன.

விவாகரத்தான ஆணைவிட பெண்ணுக்கு இந்தச் சமூகம் தரும் மறைமுகத் தண்டனைகளும் பிரச்னைகளும் சற்று அதிகம்தான்.

பேசுவோம்…

டாக்டர் அபிலாஷா
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
re: மணமுறிவுக்குப் பின் - After Divorce

காதல் திருமணமாக இருந்தாலும் சரி பெற்றோர் பார்த்து மணம் முடித்திருந்தாலும் சரி பிரச்னை என்று வந்துவிட்டால் அதன் தாக்கம் பெண்களின் மீது கூடுதலாக இருக்கும். காதல் திருமணத்தில் தான் மிகவும் நம்பியவர் நேசித்தவர் துரோகம் செய்துவிட்டார் அல்லது விலகிச் சென்றுவிட்டார் என்று கோபம் ஒரு பக்கம் இருக்க, வீட்டினரை எதிர்த்து இப்படி துணிச்சலாக ஒரு முடிவை எடுத்து அதில் தோற்று விட்டோமே என்று சுய பச்சாதபம் இன்னொரு பக்கம் தாக்கும்.

இப்படியே நாட்கள் கடக்க அவர்கள் மனத்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பெற்றோர்கள் செய்து வைத்த திருமணம் எனில், அப்பா அம்மா மீது கோபம் வருவது இயற்கை. இப்படி நம்மை தள்ளி விட்டு விட்டார்களே என்று மகள் ஆத்திரப்படுவாள். கேள்வி கேட்பாள். அவர்களிடம் அதற்கு பதில் இல்லாத போது இயலாமையால் தவித்துத் திணறுவார்கள்.பெரும் செலவு செய்து கல்யாணம் செய்து வைத்து, குழந்தை பெற்றுக் கொண்டு கடைசியில் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்கதியாய் நிற்பது என்பது பெண்களுக்கு பெரும் சுமை.

தங்களின் அடக்கிவைத்த கோபத்தை வெளியில் காட்டக்கூட முடியாது. தாங்கள் எதற்கும் பயனற்றவர்கள், சக்தியில்லாதவர்கள், லாயக்கற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு ஒரு விதமான வெறுமை அவர்களை சூழ்ந்துவிடும். காரணம் பெண்கள் உணர்ச்சிப் பிழம்பானவர்கள். சந்தோஷம் என்றாலும் சரி கோபம் வருத்தம் அழுகை என எதுவானாலும் அவர்கள் அதை மிகத் தீவிரமாக உணர்வார்கள்.

இப்படி திருமண வாழ்க்கையில் தோல்வி ஏற்படுகையில் எந்த குற்றமும் தவறும் செய்யாமலே தண்டனை கிடைக்கும் நிலை தனக்கு ஏன் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி அவர்களுக்குள் எழுவது இயல்பு. நான் சரியாகத் தானே இருக்கிறேன் அவருக்கு ஏன் என்னை பிடிக்கலை என்று மனம் நொறுங்கிப் போய்விடும் பெண்கள் அனேகம். அதுவும் அவர்கள் ஹோம்மேக்கராக இருந்துவிட்டால் எதிர்கால வாழ்க்கைக் குறித்த பயம் பெற்றோர்களுக்கு மீண்டும் சுமையாகி விடுகிறோமே என்ற தாழ்வு மனப்பான்மை போன்றவற்றிலிருந்து வெளியே வருவது மிகவும் கஷ்டம். நிறைய குழப்பங்கள் ஏற்படும். அதே சமயம் இந்த ஆளுக்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உத்வேகமும் பிறக்கும்.

மனமும் உடலும் செயலற்றுப் போய் வாழ்க்கை ஸ்தம்பித்தது போலத் தோன்றும்.
விவாகரத்து செய்து கொண்ட பெண்களை இன்றைய நவீன சமூகம் கூட ஏற்பதில்லை. அவர்களை சற்று தாழ்வாகப் பார்க்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. அவர்களுக்குள்ளேயே கூட தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும் அளவிற்குத் தான் சமூகம் மாறாமல் உள்ளது. அவன் செய்த தவறுக்கு நான் பலியாகிவிட்டேன் என்று தெரிந்திருந்தும் பெண்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

திருமணம் அல்லது வேறு எதாவது விசேஷங்களுக்குப் போவதில்லை. சிலர் தாலியை தொடர்ந்து அணிந்து கொள்கிறார்கள், சிலர் அதை கழட்டி வைத்துவிடுகிறார்கள். குங்குமம் இட்டுக் கொள்ளலாமா வேண்டாமா என்று சிலர் குழம்புகிறார்கள். இவை எல்லாம் அவரவர் விருப்பம் சார்ந்த விஷயங்கள். ஆனால் பொதுவெளியில் வரும்போது முன்பு திருமண அடையாளத்தோடு காணப்பட்டவர்கள் அவை இல்லாமல் வெறுமையாக இருக்கும் போது முன்பு போல மதிக்கப்படுவதில்லை என்பது சுடும் நிஜம். கோவிலில் ஆரம்பித்து மால் வரை அவர்களைச் சுட்டெரிக்கும் பார்வைகளிலிருந்து எளிதில் அவர்களால் தப்பிக்க முடிவதில்லை.

அஸ்வினிக்கு இருபத்தியோரு வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். கணவன் பிரபாகர் நல்ல படிப்பு, வேலை, அழகு என்று பெருமிதமாக கல்யாணம் செய்து கொண்டாள். ஆனால் அவன் தொட்டதற்கெல்லாம் சந்தேகம் படுபவன் என்று பின்னால் தான் அஸ்வினிக்குத் தெரிந்தது. அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேசக்கூடாது என்பதில் ஆரம்பித்து வேலைக்குப் போகக் கூடாது என்பது வரை பல தடைகள். சரி சரி என்று நான்கு வருடங்களை அவனுடன் பல்லைக் கடித்து வாழ்ந்துவிட்டவளுக்கு இடியாக வந்த பிரச்னை அவள் கருவுற்றபோது அதைக் கலைக்கச் சொல்லி அவன் கட்டாயப்படுத்தியது.

அவனுடைய குழந்தை இல்லை, டி என் ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து அபார்ட் செய்துவிட்டால் இனி உன்னுடன் வாழ்வேன் என்று அடித்து அவளை துன்புறுத்தியுள்ளான். வேறு வழியின்றி இத்தனை நாட்கள் பெற்றோரிடம் கூட தன் பிரச்னையை முழுவதும் சொல்லாமல் இருந்தவள் மனம் விட்டு சொல்லி அழ, அவர்கள் நொந்து போனார்கள். இப்போது இரண்டு வயது ஸ்ருதியுடன் அவள் வீட்டில் தான் இருக்கிறாள். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது பிரபாகர் எப்படி இருக்கார்.

எப்படி போகுது லைஃப் என்று சாதாரணமாக கேட்கப்படும் கேள்விகளுக்குக் கூட பதில் இல்லாமல் பொய் சொல்லவும் பிடிக்காமல் ஏதோ பதில் சொல்லுவாள். ஆனால் அவள் பெற்றோர் வீட்டோடு தங்கிவிட்டாள் என்று உறவினர்களுக்குத் தெரிய வரும் போது ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய முன் வந்தார்கள். மாப்பிள்ளை ரொம்ப நல்லவரா தெரிந்தாரே. இவளுக்குத் தான் கர்வம் அதிகம் என்று அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே விமர்சனம் செய்து கடைசியில் பழியை இவள் மீது தான் போட்டார்கள்.

அதன் பின் நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்குக் கூட அஸ்வினிக்குப் போகப்பிடிப்பதில்லை. இப்படி இருந்தால் அது குழந்தையை பாதிக்கும், வெளியில் போய் வர இருந்தால் தான் மனமாற்றம் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வரும் என்று அவளுக்கு அடுத்தடுத்து சில கவுன்சிலிங் கொடுக்க, இப்போது ஓரளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறாள் அஸ்வினி.

இப்படி எத்தனை எத்தனை அஸ்வினிகள் நம் நாடு முழுவதும்! என்னவிதமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? மனநல மருத்துவர்கள் வரவேற்பரைகளிலும், கோர்ட் வாசப்படிகளிலும் கவலை தோய்ந்த முகத்துடன் பெண்களை திணற வைப்பது ஒரு சமூகத்தில் வளர்ச்சியை அல்ல வீழ்ச்சியைக் காட்டுகிறது. மீடியா வளர்ச்சி அடைந்த இந்த மாடர்ன் காலத்திலும், இன்றும் பல பெண்கள் பிரச்னைகளை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடும்ப வன்முறை என்பது பெண்களை கால காலமாக அச்சுறுத்தும் ஒரு மிகப் பெரிய விலங்காகவே இருந்து வருகிறது.
தவிர்க்க முடியாத சூழிலில் விவாகரத்துப் பெற்று சிங்கிள் பேரண்டாக ஒரு குழந்தையை வளர்ப்பது எளிதான காரியம் இல்லை. சிலர் குழந்தைகள் பிரிந்துவிட்ட இணையின் சாயலில் இருப்பதால் அவர்களைப் பார்க்கும் போது தன்னை அறியாமல் கோபப்படுவது உண்டு. இதற்கெல்லாம் காரணம் அந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தான்.

உலகம் தங்களைப் பார்க்கும் பார்வைக்கும், திருமணத்திற்கு முன்பு இருந்த சந்தோஷங்கள் தொலைந்து போவதாலும் மனம் வெறுத்து கிட்டத்தட்ட நடைபிணமாக வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆண்களுக்கும் பிரிவு என்பது வலிதான். பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து அலுவலக நண்பர்கள் வரை ஏன் என்னாச்சு என்ற கேள்விக்கு பதில் சொல்லியாகவேண்டும். மனம் ஒத்து வாழ முடியாத மனைவியுடன் வாழ்வதன் சிக்கல்களை யாரிடமும் சொல்ல முடியாமல் பழியை ஏற்று மன உளைச்சலுடன் வலம் வரும் எத்தனையோ ஆண்கள் உள்ளனர்.

வலி என்பது இருவருக்கும் ஒன்றுதான். ஆனால் ஆணுக்கு சமூகம் கொடுக்கும் தேறுதல்களும், சலுகைகளும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. என்ன தான் இருந்தாலும் அவன் ஒரு ஆம்பிளை, இவ போனா என்ன அடுத்த முகூர்தத்திலேயே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறோம் என்று சவால் விடும் பெற்றோர்கள் இருக்கும் ஊர் இது. ஆனால் பெண்களை பொருத்தவரையில் முதலில் இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வர வேண்டும். அதன்பின் நார்மல் வாழ்க்கைக்கு திரும்பியாக வேண்டும்.

அதன்பின் இரண்டாம் திருமணம் பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் ஒரு முறை பட்ட காயத்தின் மீது மீண்டும் புதிய ரணங்களை உருவாக்க விரும்புவதில்லை. மனத்தை முறையான பயிற்சிகள் மூலம் சமன் செய்ய முடியும்.

அதெப்படி?

பேசலாம்….
டாக்டர் அபிலாஷா
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
விவாகரத்துக்குப் பின், பெண்கள் தன்னை விட்டுப் பிரிந்த துணைக்கு முன்னால் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சபதம் செய்வார்கள். அவர் செய்த தவறுக்கு நான் ஏன் பலியாக வேண்டும் என்று நினைப்பு மனதின் அடி ஆழம் வரை பதிந்திருக்கும். அதற்கான பதிலைத் தேட முனையும்போது, திக்கற்ற காட்டில் கைவிடப்பட்ட மனநிலையே மிஞ்சும்.விவாகரத்து பெற்ற பெண்களுக்குப் பணி இடத்திலும், அக்கம்பக்கத்தில் இருந்தும் மறைமுகப் பாலியல் தொந்தரவுகள் இருக்கும். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். மனம் பலவீனமடையும். நிராயுதபாணியாகிவிட்ட நிலை ஏற்படும்.

முன்புபோல் இல்லாத வாழ்வு, தொலைந்துவிட்ட கனவுகள், அரைகுறையாக வாழ்ந்துவிட்ட வாழ்க்கையின் நினைவுகள் என அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள். பெண்கள் என்ன ஞானிகளா அல்லது துறவிகளா? மண வாழ்க்கையை விட்டு வெளியே வரும்போது அவர்களுக்கு மறுக்கப்படுவது தாம்பத்தியமும்தான். இப்படி தனக்குள்ளும் புறமும் ஒவ்வொரு நாளும் போராட்டம்; தினமும் ஒரு புதுப் பிரச்னை எனத் தத்தளிப்பார்கள்.

பெரும்பாலான பெண்கள், இயற்கையிலேயே மன உறுதி மிக்கவர்கள். விபத்திலோ அல்லது எதாவது நோய் வந்தோ கணவர் இறந்துவிட்டால், மனைவி தன்னுடைய துயரைக் கடந்தும் குழந்தைகளுக்காக வாழ வேண்டும், அவர்களை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று தன் மனத்தை தேற்றிக்கொண்டு வாழ்வின் நீரோட்டத்தில் கலந்துவிடுவார்கள்.

ஆனால் விவாகரத்து என்பது அவர்களின் ஆன்மாவை உடைத்து மனத்தை சுக்குநூறாக்கும் ஒரு உளவியல் விஷயம். கடந்த காலம் என்பது கறும் நிழலாக எப்போதும் பின்தொடர்ந்துகொண்டிருக்கும். இத்தனையும் மீறி தனியாக வாழ்ந்துகாட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது பெரும் சவால்.

இவ்வளவு விஷயங்களை மீறி, பெண்கள் இன்னொரு திருமணத்தை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. தவிர, குழந்தைகள் விஷயமாக முன்னாள் கணவனைச் சந்திக்க நேரும். உரிமை எதுவும் இல்லையென்றாலும், ஆண்கள் குறை கூறுவதை நிறுத்துவதில்லை. குழந்தை வளர்ப்பில் அவர்களுடைய பங்களிப்பு எதுவுமில்லை என்றாலும், ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுவார்கள். சகிப்புத்தன்மையும் பொறுமையும் அதிகம் தேவையாக இருக்கும்.

அடுத்து பண விஷயங்கள். ஒன்றாக இருந்த காலகட்டத்தில், இருவரும் சேர்ந்து வாங்கிய பொருட்களை உணர்ச்சிவசப்பட்டு பெண்கள் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அல்லது, அதில் அவர்களுக்கு உரிமை இல்லாதவகையில் கணவர் பெயரில் இருக்கும். பிரச்னை என்று வந்த பிறகு, அந்தச் சொத்தை திரும்பிப் பெற முடியாது. வாழ்க்கையே போச்சு ஃப்ளாட் போனா என்னவென்று விட்டுவிடும் பெண்கள் அநேகம். ஆனாலும், பொருளாதாரச் சிக்கல்களை தனியாக நின்று சமாளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இப்படி கடுமையான பல சூழல்களில் இருந்தும் மனப் போராட்டங்களில் இருந்தும் பெண்கள் மீள்வது எப்படி?

பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் என்றாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி, விவாகரத்துக்குப் பின் பெற்றோர்களின் அரவணைப்பு அந்தப் பெண்ணின் மனத்தை ஓரளவுக்கு சரிப்படுத்தும். என்னதான் படித்திருந்தாலும், சுயமாகச் சம்பாதித்தாலும், தோல்வியில் விழும்போது தோள் கொடுக்க ஆதரவுக் கரங்கள் தேவை.

அவற்றில் முக்கியமானது, இவ்வளவு நாட்கள் பரிவுடன் வளர்த்த பெற்றோர்களின் அன்பு. எவ்வளவு செலவு செய்து திருமணம் செய்துவைத்தோம், இப்படி வாழாமல் வந்துவிட்டாள் என்று ஆராயாமல் தீர்ப்பு கூறாமல், பெண்ணின் பிரச்னையை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் அவளுக்கு உறுதுணையாக இருப்பதே பெற்றோர்களின் கடமை. மாறி வரும் சமூகச் சூழலில், பெண்ணை மட்டுமே திரும்பத் திரும்ப சமாதானம் செய்து அனுப்பக்கூடாது. மாறாக, தன் மாப்பிள்ளையை அழைத்து என்ன விஷயம் என்று வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும்.

தீபிகாவுக்கு இருபத்தி எட்டு வயதில்தான் திருமணம். கணவன் கணேஷுக்கு தில்லியில் வேலை. வீட்டாரிடம் பிரியாவிடை பெற்று தில்லியில் செட்டில் ஆனாள். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அவனுடன் வாழமாட்டேன் என்று சென்னை திரும்பிவிட்டாள். எத்தனை தடவை கேட்டாலும் பதில் சொல்ல மறுத்துவிட்டாள். உனக்கு அப்பறமா தங்கச்சி இருக்கா. அவளை கட்டிக்கொடுக்க வேண்டாமா? ஒரு நாலு மாசம் பொறுத்துக்கம்மா என்று சமாதானம் செய்து மாப்பிள்ளையிடம் கெஞ்சிக் கூத்தாடி மீண்டும் அவளை தில்லியில் விட்டுவிட்டு வந்தார்கள்.

அடுத்த இரண்டு வாரத்தில், அவள் மரணச் செய்திதான் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களுக்குள் என்ன பிரச்னை? எப்படி இறந்தாள் என எதுவும் தெரியாமல், தங்களுடன் இருந்திருந்தால் உயிருடனாவது இருந்திருப்பாளே என்ற குற்றவுணர்வுடன் வாழ்கிறார்கள் அவளுடைய பெற்றோர்கள்.

விவாகரத்து நடந்துவிட்டால், சில பெண்கள் தங்கள் தோழிகளை சந்திப்பதைத் தவிர்ப்பார்கள். நல்லதொரு நட்பு வட்டம் நிச்சயம் இருக்க வேண்டும்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் தன்மை இருந்தால், மனத்தில் இருக்கும் பாரம் ஓரளவுக்காவது குறையும். நண்பர்கள் சொல்லும் ஆலோசனைகள் சில சமயம் தெளிவை ஏற்படுத்தும். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் பித்துப்பிடித்திருக்கும் நிலையில், நல்ல தோழமைகள் மெள்ள அந்தப் பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பார்கள். வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை நட்புக்களின் உதவிக்கரம் தேவையாக இருக்கும்.

இது என்னுடைய வாழ்க்கை, எனக்குத் தெரியாமல் என்னை அறியாமல் இது முடிவடைந்துவிட்டது. அதனால் என்ன? மிச்சம் உள்ள வாழ்க்கையை நான் வாழ்வேன் என்ற உறுதி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும்.

தொடர்ந்துபேசலாம்…
டாக்டர் அபிலாஷா

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
பெற்றோர் பார்த்துவைத்த திருமணம் அது. அமெரிக்க மாப்பிள்ளை. இருதரப்பிலும் நல்ல வசதி. பார்க்க நல்ல லட்சணமான பையன். பிரகாஷ் என்று பெற்றோர்கள் வேறு வாய்க்கு வாய் மாப்பிள்ளை புகழ் பாட, மாயாவுக்கும் அதில் பெருமைதான். அதிக எதிர்பார்ப்புகளுடன் மண வாழ்க்கையில் அடியெடுத்துவைக்க, அவன் ஒருவிதமான இறுக்கமான மெளனத்தில் இருந்தான். அவனுடைய சுபாவமே அப்படித்தான் என்று நினைத்துவிட்டாள் மாயா. ஆனால், தன்னிடம் மட்டும்தான் அதிகம் பேசுவதில்லை என்று சீக்கிரத்தில் புரிந்துகொண்டாள். தவிர, அவன் நெருக்கமாகவோ அன்பாகவோ அவளிடம் பேசுவதில்லை. ரோபோவைப்போல செயல்பட்டான். அவன் தன்னுடன் நிறைய பேச வேண்டும், அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும் என்று மாயா ஆசைப்பட்டாள்.


ஆறு ஏழு மாதங்கள் ஆனபிறகும் அவன் மாறாமல் அப்படியே இருக்க, இவளுக்கு லேசான பயம் ஏற்பட்டது. அவனுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தபோது, அவனுக்கு அடிக்கடி ஃபோன் வருவதும், மாயா இருந்தால் வெளியே சென்று பேசுவதும், அடிக்கடி இரவு வீட்டுக்கு வராமல் இருப்பதும் இவளுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. தூண்டித் துருவி விசாரித்ததில், அவனுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் பழக்கம் இருப்பது தெரிந்து இடிந்துபோனாள். பெற்றோரின் கட்டாயத்துக்காகவே ஒப்புக்காக மாயாவை கல்யாணம் செய்திருந்தான்.

மனத்தளவில் இடிந்துபோனாலும், சில நாட்களில் அவன் மனம் மாறிவிடுவான் என்று நினைத்தவளுக்கு மேலும் இடி. விஷயம் தெரிந்தபின் அவளை அங்கு வைத்திருக்க விரும்பாமல் ஊருக்குப் போகச் சொல்லிவிட்டான். அவள் எவ்வளவு கெஞ்சியும் பெற்றோர்களிடம் சொல்லியும் பலனில்லை. விவாகரத்து ஒன்றே இதற்கு தீர்வு என்று அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், இந்தக் கொஞ்ச நாட்களில் அவன் மீது மாயா கண்மூடித்தனமாக அன்பு வைத்துவிட்டாள். ஏதாவது ஒரு மாற்றம் வரும் என்று திடமாக நம்பினாள். ஆனால், அவள் மீது திணிக்கப்பட்ட விவாகரத்தை வேண்டாவெறுப்பாகச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தோழிகள், உறவினர்கள் பக்கத்து வீட்டினர் என்று யார் முகத்திலும் முழிக்காமல் வீட்டில் முடங்கிக் கிடக்க, அவள் பெற்றோர்கள் என்னிடம் அழைத்து வந்தார்கள்.

அவள் மனநிலைக்குத் தக்கபடி பேசி, அவளிடம் பாசிட்டிவ் விஷயங்களைப் பகிர்ந்து சில தெரபிக்களும் கொடுத்து, மெதுவாக அவளுடைய மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தேன். அதன்பின், அவளே தன் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். முதலில், வாழ்க்கை இனி என்னவாகுமோ என்று பயந்தவள், சிறிது ஆசுவாசத்துக்குப் பிறகு அடுத்து என்ன என்று யோசிக்கும் அளவுக்கு முன்னேறிவிடவே, அதையும் அவளையே கண்டறியும்படி சொன்னேன். விட்ட படிப்பைத் தொடர வேண்டும், அதுவும் அவன் இருக்கும் அதே அமெரிக்காவில் போய்ப் படித்து, அவனுக்கு முன்னால் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்றாள். அவளுடைய விருப்பப்படியே படித்து, இன்று தனது 24 வயதில் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறாள்.

எதற்கு மாயாவைப் பற்றி சொல்கிறேன் என்றால், பெண்கள் பலவீனமானவர்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், மனரீதியில் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். பிரச்னை ஏற்பட்டு மனம் உடைந்துபோனாலும், மறுபடியும் தேறி தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கும் திறன் அவர்களிடம் நிறைய உள்ளது.

சமீபகாலமாக, ஐடி துறையினராலும் மீடியாக்களின் பாதிப்பினாலும், சுதந்தரம் என்ற பெயரில் நிறைய தவறுகள் நடைபெற்று வருகின்றன. அது, இளம் பெண்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றது.

சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிதாவின் சொந்த ஊர் திண்டுக்கல். சென்னையில் பிரபல ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். ஆகாஷுடன் திடீர் காதல், திடீர் பதிவுத் திருமணம் என்று அவள் வாழ்க்கையில் சில திடீர்த் திருப்பங்கள். வீட்டினரிடம் சொல்லத் தயங்கி சொல்லாமல் இருந்தாள். ஆனால், பெண் பார்க்கவென்று பெற்றோர் அழைக்கும்போது, ஆகாஷ் கட்டிய தாலியை மறைத்து, ஒப்புக்காக மாப்பிள்ளை முன் நின்று, ஹலோ சொல்லி கைகுலுக்கி, மாப்பிள்ளை பிடிக்கலை என்று ஒவ்வொரு முறை சொல்லித் திரும்புவாள்.

ஒரு கட்டத்தில், ஆகாஷுக்குக் கோபம் வந்து இந்த நாடகத்தை தயவு செய்து நிறுத்து. உங்க வீட்டுல முதல்ல உண்மையைச் சொல்லு என்று சொல்ல, அவனிடம் வாக்குவாதம் செய்து சண்டை போட ஆரம்பித்தாள். அவனுடன் வேறு சில பிரச்னைகளும் ஏற்படவே, அவனை பிரிய முடிவு செய்தாள். பெற்றோருக்குத் தெரியாமல் எப்படி திருமணம் செய்தாளோ, அதேபோல் அவர்களுக்குத் தெரியாமல் விவாகரத்தும் செய்ய அவளுக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

கை நிறைய சம்பளம், நல்ல அழகு. இவை தன்னம்பிக்கையைத் தருவதற்குப் பதில் திமிரைத் தர, எல்லாவற்றையும் துச்சமாக நினைக்கும் மனோபாவம் வளர்ந்துவிட்டது. எங்காவது யாருக்காவது உண்மையாக இருந்திருக்கலாம். பெற்றோர்களிடம் சொல்லிப் புரியவைத்திருந்தால் பிரச்னை முடிந்திருக்கும் அல்லது அவளை தேவையில்லாமல் வரவழைத்திருக்க மாட்டார்கள். ஆகாஷிடம் பொறுமையாக நடந்திருக்கலாம்.

அதுவும் செய்யாமல் அவனையும் சங்கடப்படுத்திவிட்டாள். வாழ்க்கையில் பக்குவம் எல்லோருக்கும் உடனே வந்துவிடாது. ஆனால், எதிலும் அவசரம் காட்டும் ஹரிதா போன்ற பெண்களால் விவாகரத்து சதவீதம் அதிகரித்து வருவது உண்மைதான்.

பொதுவாக, தம்பதியரிடையே விவாகரத்துக்கான காரணங்களாக சொல்லப்படுவது அதிகப்படியான அன்பு, உரிமை கோரல், சந்தேகம், கெட்ட பழக்கவழக்கங்கள், தகாத உறவு வைத்திருத்தல், குடும்பம் நடத்தத் தேவையான பணம் தராமல் இருப்பது, பொறுப்புகளை மறுப்பது போன்றவை முக்கியமானவை.

இதுவும் ஒரு வித்யாசமான வழக்கு.பெண் சென்னைவாசி. மாப்பிள்ளை கனடா. இணையத்தில் பார்த்துப் பழகி உடனே காதலில் விழுந்தார்கள். ஒரு கட்டத்தில், திருமணம் செய்யும் முடிவு செய்தனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், கனடாவிலிருந்து அவன் பறந்து வந்தான். முதல் சந்திப்பிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விட்டது.

ஏதோ ஒரு பெண் தன்மை அவனிடம் இருப்பதாக உணர்ந்தாள். ஆனால், என்னவென்று தெரிவதற்குள் திருமண நாள் நெருங்க, மனக் குழப்பத்துடன்தான் அவனை மணம் செய்தாள். கட்டிய தாலியில் மஞ்சள் ஈரம் காய்வதற்குள் அவள் சந்தித்தது ஒரு வக்கீலைத்தான். எப்படியாவது எங்களைப் பிரித்துவிடுங்கள் என்று கெஞ்சினாள். அவள் சொன்ன காரணமும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தகுதியானவன் இல்லை. இருபாலின விருப்பம் (Bisexual) உடையவன் என்று சொன்னாள். அவளிடம் இத்தனை நாட்கள் இந்த உண்மையைச் சொல்லாதவன், அவள் வற்புறுத்திக் கேட்கவே சொல்லியிருக்கிறான். அதனால் அவளுக்கு ஏற்பட்ட அருவருப்பில் விவாகரத்து கேட்டாள்.

அவனுக்கோ, அவளைப் பிரிய மனமில்லை. எவ்வளவோ கெஞ்சியும், எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். என்னிடம் கவுன்சிலிங் வந்தபோதும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருந்தாள். இது உளவியல் ரீதியான பிரச்னை மட்டும் இல்லை, உடல் ரீதியானதும்கூட. தவிர, சமூகப் பிரச்னையாகவும் இது உருவாகக்கூடிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பற்ற உணர்வு அவளை இந்த உறவிலிருந்து விலக வைத்துவிட்டது. வேறு வழியின்றி அவனுக்கு ஆறுதல் சொல்லி, மீண்டும் கனடாவுக்கே அனுப்பிவைத்தோம்.

மேற்சொன்ன இரண்டு பெண்களும், தங்களின் சுய விருப்பத்தின் பேரில் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அவசரப்பட்டு தங்களுக்கு ஏற்ற மணமகனைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டார்கள். அமைத்துக்கொண்ட வாழ்க்கையிலும் பொறுமையுடன் செயல்படாமல், அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், தான் தன் வாழ்க்கை என்ற நிலையில் விவாகரத்து கோரி, தங்களை நேசித்த துணையை மீளாத் துயரில் தள்ளிவிட்டார்கள்.

சின்ன வயதில் நிறைய பணம் சம்பாதிக்க முடிவதால் ஏற்படும் அலட்சிய மனோபவம் திருமண விஷயத்திலும் வெளிப்பட, சில சமயம் பெண்கள் தேவையில்லாத சிக்கல்களை தங்களுக்குத் தானே வரவழைத்துக்கொள்கிறார்கள். மேற்சொன்ன இரண்டு பெண்களும், இன்றுவரை தாங்கள் இழந்த விஷயத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர்களாகவே தெரியவில்லை.
பேசலாம்...
டாக்டர் அபிலாஷா


 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
அந்த இரண்டு பெண்களும் விதிவிலக்கானவர்கள். ஆனால், பெரும்பாலான பெண்களே திருமண பந்தம் முறிந்துபோகையில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பின்னால் வரும் பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.அவர்கள் மீது எவ்வித தவறும் இல்லையென்றாலும், சமூகத்தால் குற்றவாளிபோல பார்க்கப்படுவார்கள். அவர்களின் தனித்தன்மையோ சுயத்தையோ மதிக்காமல், கணவனுடன் ஒற்றுமையாக வாழத் தெரியாதவள் என்று குற்றம் சாட்டப்படுவார்கள்.

ரேஷன் கார்டிலிருந்து பாஸ்போர்ட் வரை எல்லாவற்றிலும் மீண்டும் இனிஷியல், முகவரி மாற்றவேண்டி இருக்கும். தன் அடையாளத்தை தொலைத்தது போன்ற ஒரு மனச்சிக்கலுக்கு சிலர் உள்ளாவார்கள்.
விவாகரத்து பெற்றவரின் சகோதரி என்பதால், உடன் பிறந்தோரின் மணவாழ்க்கைக்குத் தடையாக இருப்பதை நினைத்து, மேலும் மனம் நோந்து போவார்கள்.

பாதுகாப்பற்ற மனநிலைக்குப் பல பெண்கள் உள்ளாவார்கள். தனியாக வாழும் பெண் என்று எளிதில் சில ஆண்கள் அணுகும் நிலை, விவாகரத்தான பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை.
மீண்டும் ஒரு காதலுக்கோ திருமணத்துக்கோ அவர்கள் மனம் இடம் கொடுப்பதில்லை. திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையில், மேலும் அதே பிரச்னையில் சிக்கிக்கொள்ள அவர்கள் மனம் எளிதில் இடம் கொடுப்பதில்லை.

ஓரளவு இந்தத் தோல்வியைத் தாங்கிய பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்போது, பல புதுப்புது பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். வாடகைக்கு வீடு கிடைக்காது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது, சிங்கிள் பேரன்ட்டாக செயல்பட வேண்டிய நிலைமையை விளக்கியாக வேண்டும். யாருக்கேனும் பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக் கைதியாக வாழ்நாள் முழுவதும் பெண்களின் நிலை இருந்துகொண்டிருக்கும்.

இந்த மனநிலையிலிருந்து வெளியே வர, வாழ்க்கையில் நடந்த எதிர்மறை விஷயங்களைக் கையாள எல்லா பெண்களாலும் முடியாது. அதற்காகத்தான் கவுன்சிலிங் அவசியம். விவாகரத்து ஆன பின்னர், ஒருவரை ஒருவர் அவமானப்படுத்த வேண்டும்; பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் இருக்கும்.

முன்னாள் கணவன் அல்லது மனைவியை எதிரியாகவே நினைப்பதால், வன்மமும் குரோதமுமாக வாழ்க்கை நிம்மதியாக இருக்காது.

குழந்தைகளை, துணையைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் ஏற்படும்படியாகவே வளர்ப்பார்கள். குழந்தைகள் மனத்தில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடுவார்கள். அது, அவர்களின் மனத்தில் பதிந்து எதிர்காலத்தில் அவர்களைப் பாதிக்கும். ஆனால், அதைப்பற்றிய கவலை விவாகரத்து ஆனவர்களிடம் இருக்காது. ஒற்றை பெற்றோராக குழந்தையை வளர்ப்பது மிகப்பெரிய சவால்.

சிங்கிள் பேரன்ட்டில், முக்கியப் பாகுபாடுகள் இருக்கின்றன. அது, தாய் -மகள் உறவா; தந்தை - மகள் உறவா; அல்லது தாய் - மகன் உறவா என்பதைப் பொருத்து, நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன.

தாய் தனியாகக் குழந்தையை வளர்க்க நேரிடும்போது, எல்லாப் பொறுப்புகளையும் அவள்தான் சுமந்தாக வேண்டும். வீட்டுப் பொறுப்புகள், குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்கள் என நிறைய பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். அவர்களுடன் சேர்ந்து அந்தக் குழந்தையும்கூட மற்ற குழந்தைகளைவிட நிறைய பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுவிடும்.

கணவன் - மனைவி - குழந்தை என மூன்று பேர் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை, விவாகரத்து ஆன குடும்பங்களில் இருவர் மட்டுமே செய்தாக வேண்டும். இது, குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோன்றதாகும். குழந்தைகள், இளம் வயதிலேயே பொறுப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். இது, அவர்களின் குழந்தைப் பருவத்தை மாற்றி அமைக்கிறது. காரணமே தெரியாமல், அவர்களும் தாயுடன் தண்டிக்கப்பட்டவர்களாகிறார்கள்.

மனத்தளவில் சீக்கிரம் வளர்ந்துவிடுவார்கள். இது, சில சமயம் பாசிட்டிவ் என நினைத்தாலும், பால்யம் தொலைத்த குழந்தைகளின் மனநிலை நெகட்டிவ் இம்பாக்ட்.

தனியாக வாழும் பெண்கள், தன்னுடைய முடிவுகள் மற்றும் குழந்தைகளுக்கானது என எல்லா முடிவுகளையும் அவர்களே எடுக்கவேண்டி வரும். தாய் என்று வரும்போது, சமூகம் அந்த முடிவை எப்படிப் பார்க்கும் என்ற அச்சம் எப்போதும் மனத்தின் ஓரத்தில் இருந்தபடி இருக்கும். கணவரும் உடனிருந்து ஒரு முடிவை எடுத்து அது சரிவராவிட்டால் கண்டும் காணாமல் இருக்கும் சமூகம், ஒரு பெண் தனியே வாழ்ந்து எடுக்கும் சில முடிவுகளில் மூக்கை நுழைத்துப் பார்க்கும். இது, மனச்சிக்கலை பெண்களுக்கு உருவாகிவிடும்.

அப்பெண்ணே ஒரு மனச்சிக்கலுக்குள் இருப்பாள். அதுவும், அந்த முடிவு சரியில்லாமல் போனால், கேட்கவே வேண்டாம். எதிர்காலம் குறித்தும் அவள் யோசிக்க வேண்டிய நிலை. அது, இன்னும் மன அழுத்தத்தைத் தரும். குழந்தையின் மனதும் அடிக்கடி அழுத்ததுக்கு உள்ளாகும்.

வருடக்கணக்கில் தொடரும் சில வழக்குகளின் கசப்பும், வழக்கு இழுத்தடித்து குழந்தையின் பாதுகாவலர் யார் என்று வரும்போதும், யாராவது ஒருவரிடம் (தாய் அல்லது தந்தை) செல்லும் குழந்தை, மிகவும் அவநம்பிக்கையுடன் வளரும்.

பெற்றோரில் ஒருவரைப் பிரிந்த குழந்தைகள், வளரும்போதே சூழ்நிலையை நேரடியாகப் பார்க்கிறார்கள். பிரிந்தவுடன், இந்தக் குடும்பம் அந்தக் குடும்பத்தை தூற்றுவது அவர்களுடைய மனத்தைப் பாதிக்கும்.

உதாரணமாக, அப்பாவிடம் போகும் ஆண் குழந்தையிடம், ‘நான் சொல்வதை உன் அம்மா கேட்டிருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது’என்று குழந்தைகளிடம் நயமாகப் பேசி இரக்கத்தை சம்பாதித்துக்கொள்வார்கள். அதே மனநிலையில் தாயிடம் வரும் குழந்தை, அவளிடம் முகம் கொடுத்துப் பேசாது. அப்பா சொன்னதை அம்மாவிடம் சொல்லும்போது, அவளும் பதிலுக்கு தன் பங்குக்கு அப்பாவைப் பற்றி குற்றப் பட்டியல் வாசிப்பாள்.

இது, மேலும் விரிசல்களை ஏற்படுத்தி, அக்குழந்தையின் மனத்தைப் பெரிதும் பாதிக்கும். அந்தச் சமயத்தில், மேற்கொண்டு எதுவும் பேசாமல், நீ சின்ன பையன் உனக்கு இப்ப சொன்னா புரியாது. நேரம் வரும்போது சொல்கிறேன் என்று அந்த நிமிடத்தில் கோபங்களை அடக்கி, பிள்ளையின் மனநலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரிந்துபோன இன்னொருவர் (தாய் அல்லது தந்தை) பற்றி குழந்தையிடம் வெறுப்பை ஏற்றி வளர்ப்பது சரியல்ல. அவருடனும் குழந்தைக்கு உறவு இருக்க வேண்டும் என்கிறபோது, நிச்சயம் குழந்தையை பகடைக்காயாக அங்கும் இங்கும் அலைக்கழிக்கவே கூடாது. எதிர்மறை விஷயங்களை சிறியவர்களின் தலைக்குள் என்றுமே புகுத்தக்கூடாது. அது, அவர்கள் வாழ்நாளுக்கான வளர்ச்சிப் பருவம்.

அதை ஏற்கெனவே நம் முடிவுகளால் சாதாரணமாக இருக்க வேண்டியதை சிரமமாக ஆக்கியிருக்கிறோம். எனவே, மேன்மேலும் சிக்கலை கொடுக்காமல், குழந்தையின் மனத்தை இலகுவாக்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, பதின் பருவ (டீன்ஏஜ்) பிள்ளைகளிடம் எதிர்தரப்பினை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டும்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது தோழிகள் அல்லது கவுன்சிலர்களின் உதவியுடன் இந்தப் பிரச்னையை சரி செய்துகொள்ள முடியும். மனத்தின் உள்ள துயரத்தை வடித்து எடுத்துவிட்டால், வாழ்க்கையில் மேற்கொண்டு பயணிக்க முடியும். சோர்ந்து விழுந்துவிட்டால், எழுவதற்குள் வாழ்க்கை முடிந்துபோயிருக்கும்.

தாய் சந்தோஷமாக இருந்தால்தான் அவளிடம் வளரும் குழந்தையும் மன ஆரோக்கியத்துடன் இருக்கும். கோபமும் வெறுப்புமாக ஒரு வாழ்க்கை என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை. நடந்தது நடந்துவிட்டது. எதையும் மாற்ற இயலாது.

இதை உள்ளபடி ஏற்கிறேன். மீண்டும் என் வாழ்வில் சந்தோஷ தினங்கள் மலரும் என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது.

எதிர்மறை விஷயங்களை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், நெகடிவ் விஷயங்கள் நமக்கு நடக்கும்போது, நம்பிக்கை இழக்காமல் அதை நேர்மறையாக மாற்றும் வல்லமை நமக்கு உண்டு என்பதை மனத்தளவில் உணர்ந்துகொண்டால் போதும்.


பேசலாம்...
டாக்டர் அபிலாஷா
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
தனியாக எதைச் செய்தாலும் அதற்குக் கூடுதல் முயற்சியும் சக்தியும் தேவை. ஒரு கை ஓசை யாருக்குக் கேட்கும். இருவர் இணைந்து ஒரு வேலையைச் செய்யும்போது அதை விரைவாகச் செய்து முடித்துவிட முடியும்.


பெண்கள் தனியாகக் குழந்தையை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அவர்கள் வளர்ந்து கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து, பெற்றோரைக் கேள்வி கேட்பார்கள். குழந்தைகளை பகடைக் காய்களாகவோ துருப்புச் சீட்டுகளாகவோ பயன்படுத்தும் பெற்றோர்கள் உள்ளனர்.

ஏன் அப்பாவை பிரிஞ்சே; அதனால்தான் என் ப்ரெண்ட்ஸ் என்னை மதிக்கமாட்டேங்கறாங்க என்று பிள்ளைகள் சொன்னால், அது ஏற்கெனவே காயம் அடைந்த மனத்துக்கு பெரும் வலியைக் கொடுத்துவிடும். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பிள்ளைகள் குறை சொல்ல ஆர்மபித்தால், இதை அப்படியே விட்டுவிடக்கூடாது. அதிலும், பதின்பருவக் குழந்தைகள் கருத்துகளை உதாசீனப்படுத்தவேகூடாது. அதேநேரத்தில், அம்மாவை கார்னர் செய்து எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யவும் விடக்கூடாது.

திருமண பந்தத்தில் இருந்து வெளிவரும் முன், குழந்தைகளையும் சேர்த்துத்தான் யோசிக்க வேண்டும். அப்படி யோசித்துச் செயல்படும் தம்பதிகள், தங்களின் சுய விருப்புகளை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு, குழந்தைகள் நலனுக்காக ஒரு கூரையின் கீழ் வாழ்க்கையைத் தொடர முடிவெடுப்பார்கள்.

ராஜாராம், ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர். அவர் மனைவி ஜோதியும் வேலைக்குச் செல்லும் பெண்தான். ஆரம்பத்தில் இருவருக்கும் ஒரு பிரச்னையும் இருந்ததில்லை. இரண்டு குழந்தைகள், குடும்ப நிர்வாகம் முழுவதும் ஜோதியிடம். ராஜா வேலை முடிந்ததும், நண்பர்களுடன் சுற்றுவது, அடிக்கடி வெளியூர் சுற்றுலா செல்வது என்று குடும்பத்தை தன் சந்தோஷங்களாக நினைப்பதில் இணைக்காமல், அதிக ஒட்டுதல் இல்லாமல் இருக்கவே, நாளாவட்டத்தில் ஜோதிக்கு சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

ரேஷன் கடைக்குப் போவதிலிருந்து பிள்ளைகளின் பள்ளிக்குச் செல்வது வரை எல்லாமே ஜோதிதான். வீட்டு வேலை, அலுவலக வேலை தவிர, கூடுதல் சுமையாக எல்லாமே அவள்தான் செய்ய வேண்டும் என்றபோது, ராஜாவின் பங்கேற்புதான் என்ன? வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அப்படியே இருந்தாலும், அதில் சண்டைதான். குழந்தைகளுக்கு அப்பாவென்ற ஒட்டுதல் ஏற்படவே இல்லை. இப்படி ஒரு பொம்மை புருஷன் தனக்குத் தேவையா என்று ஒரு கட்டத்தில் நினைத்து, அவனிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தாள்.

குடும்பப் பெரியவர்களுடன் பஞ்சாயத்துக்கு வந்தபோது, ராஜாவிடம் பேசினோம். நோய் என்று உனக்கு வந்து படுத்துவிட்டால், உன்னை கவனித்துக்கொள்ளப்போவது உன் மனைவிதான். நண்பர்கள் வந்து நலம் விசாரிப்பார்கள், உறவினர்கள் வருவார்கள். ஆனால், உனக்குத் துணி மாற்ற வேண்டும் என்றாலும், அங்கே உன் மனைவிதான் செய்ய வேண்டும் என்று சில புத்திமதிகள் சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு லேசான புரிதல் ஏற்பட்டது. சின்னச் சின்ன உதவிகளை, வேலைகளை வீட்டில் செய்ய ஆரம்பித்தான். குழந்தைகள் விஷயங்களில் அதிக அக்கறையுடன் இருக்க ஆரம்பித்தான்.

இன்று அவர்கள் இருவரும் வளர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள். ராஜா - ஜோதிபோல உண்டா, அவ்வளவு ஒத்துமை, அவ்ளோ அன்பு என்று பலரும் வியந்து புகழும் அன்யோன்யத் தம்பதிகளாக அவர்களை மாற்றியது காலம்தான். சிறிது சகிப்புத்தன்மை மற்றும் பொறுமைதான். உறவை விட்டு விலகுவது மிகவும் எளிது. ஆனால், அதைப் பொத்திவைத்து காப்பாற்றிக்கொள்வது கொஞ்சம் கடினம். ஆனால், அதன் பலன் என்பது நம்முடைய நிம்மதியும் மகிழ்ச்சியும் என்றபோது, அதைத்தானே முதலில் செய்ய வேண்டும்.

இல்லறம் என்பது தம்பதியரின் எதிர்காலம் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஒரு புனிதமான பந்தத்தைப் பெரியவர்கள் ஏற்படுத்தித் தருவதாகும். லிவ் இன் டுகெதர், திருமண உறவின்றி ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தாலும், அவரவர் சுதந்தரத்தை மதித்து, எவ்வித கட்டுப்பாட்டிலோ நிர்ப்பந்தத்திலோ சிக்கிக்கொள்ளாமல் வாழ்வது என்பது நம் நாட்டில் சரியாக வராது. காரணம், நம்முடைய கலாசாரம் போன்ற விஷயங்கள் ஒரு புறம் இருந்தாலும், உணர்வு ரீதியாகவே குடும்பம் என்ற ஆணிவேரை அசைக்க நம் மக்கள் விரும்பாதவர்கள். அதில்தான் அவர்கள் நிம்மதி உள்ளது என்பதை நன்கு அறிந்தவர்கள்.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, தனித் தனி குடும்பங்களாக மாறி இருந்தாலும், குடும்பம் எனும் அமைப்பு இன்னும் இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்வது அவரவர் விருப்பம் சார்ந்து இருந்தபோதிலும், திருமணம் செய்தே பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள், சட்டத்தின் பாதுகாப்புகூட இல்லாத இவ்வித உறவு நிலைகளில் பிரச்னை என்று வந்துவிட்டால், பெரும் பாதிப்பு அடைவார்கள்.
திருமண வாழ்வின் வெற்றி என்பது ஒன்றாக அறுபது எழுபது காலம் வாழ்வது இல்லை.

நல்ல புரிந்துணர்வுடன், என்ன நடந்தாலும் ஒருவரை மற்றவர் விட்டுக்கொடுக்காமல் பேரன்புடன் இணைந்திருப்பதுதான். இந்தப் புரிதல் இல்லாது போகும்போதுதான் பிரச்னைகள் வேர்விடுகின்றன. கணவனுக்கு மனைவி, மனைவிக்குக் கணவன் அமைவதைப் பொருத்துத்தான் திருமண வாழ்க்கை அமைகிறது. அது, பிரிவா இல்லை சேர்ந்து வாழ்வதென்பது என்பது மனங்கள் இரண்டும் இணைவதைப் பொருத்தது.

பெண்களைப் பொருத்தவரையில், வாழ்க்கையின் இரண்டாம் பகுதி இது. மிச்சமுள்ள வாழ்க்கையை ஒரு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு அவர்கள் மீது உள்ளது. எனவே, அதன் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலக் கவலைகள் அவர்களுக்கு நிறைய இருக்கும். திருமணமான தோழிகள், தெரிந்தவர்கள், இவர்களிடம் கேள்விகள் கேட்டு, அந்தப் புது வாழ்க்கைக்கு ஏற்றபடி தன்னை உருமாற்றிக்கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றனர்.

ஆண்களைப் பொருத்தவரை, இதுபோன்ற பயமோ கவலையோ எதுவும் அவர்களுக்குக் கிடையாது. புதுப்பெண் அழகான மனைவியுடன் இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்குவது மட்டும்தான் அவர்களின் சிந்தனை. விதிவிலக்காக சிலர், தன் வருங்கால மனைவியின் ஆசைக் கனவுகளைப் பற்றி தெரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக எல்லாவிதத்திலும் இருப்பார்கள். ஆனால், சில ஆண்கள் / சில பெண்கள் தங்களுக்கு ஏற்றவகையில் துணை இருக்க வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்பில், அவர்களின் இயல்பை மாற்றி அமைக்க முயற்சி செய்வார்கள். அந்த முயற்சி பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும்.

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு மட்டும் நிகழ்வதில்லை. ஒரு குடும்பம், மற்றொரு குடும்பத்துடன் சம்பந்தமாகிறது; அவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கிறது. இப்படித்தான், ஒரு சமுதாயத்தில் வளர்ச்சி தொன்றுதொட்டு இருந்துவருகிறது. திருமணப் பெண் வீட்டில், பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவலையும் அக்கறையும் லேசான பயமும் கொள்வதுபோல, ஆணின் பெற்றோர் யோசிப்பதில்லை.

மணப்பெண் தங்கள் குடும்பத்தைப் பிரித்துவிடாமல் இருந்தால் போதும்; அன்பும் அனுசரணையுடன் பெரியவர்களிடம் மரியாதை வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களைப் பற்றி மட்டுமே விவாதிப்பார்கள்.

திருமணமான பின்னர், கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டு பிரிவு ஏற்படும் நிலையில், பெண் தனக்கு நெருங்கிய தோழிகளிடமோ, தன் பெற்றோர்களிடமோதான் இதைப்பற்றி பேசுவாளே தவிர, அக்கம் பக்கத்தாரிடமோ, தெரிந்த மற்ற உறவினர்களிடமோ பேசமாட்டாள்.

ஆனால் ஆண் பக்கத்தில், அந்தப் பெண் மீது குற்றம் சொல்வதில் முழுக் குடும்பமும் ஒன்றாகச் செயல்படும். பிரச்னை அதிகரித்து, விவாகரத்து என்று வருகின்ற நிலையில், குடும்பங்கள் ஆளாளுக்கு பழி சுமத்தும். அப்பவே தெரியும் உனக்கு இந்தப் பெண் ஏற்றவள் இல்லை, நீதான் ஊர்ல இல்லாத மகாராணின்னு ஓகே சொன்னே என்று மகன் மீதே பழியைப் போடும்.

சரி, அதனால ஒண்ணும் மோசம் இல்லை. டைவர்ஸ்க்கு அப்பறம் நீ யாரை கல்யாணம் பண்ணிக்க விரும்பினாலும் நாங்க குறுக்கே நிக்கமாட்டோம் என்று ஏற்றிவிடுவார்கள். ஒரு குடும்பம் உடைவதையோ, ஒரு பெண்ணின் மிச்ச வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதையோ பெரிதாக நினைக்காமல், தான் தன் சுயநலம் என்பதில் மட்டுமே கவனமாக இருப்பதால்தான், இந்நாட்களில் விவாகரத்து அதிகரித்துக்கொண்டு வருகிறது.

முன்பு, குடும்பத்துக்குள் ஒரு பஞ்சாயத்து வைத்து, அன்பாகவோ அல்லது அதட்டி உருட்டியோ, எப்படியோ தம்பதியரை சில வருடங்கள் இணைந்து வாழச்செய்து, அது ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திவிட, சந்தோஷமாகவே வாழ்ந்த பல கணவன் மனைவிகள் நம் ஊரில் உண்டு.

நாம் வாழும் காலம் மிகக் குறைவு. அந்தக் குறைந்த காலத்தில் நமக்குக் கிடைத்த உறவுகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கடவுள் போட்ட முடிச்சை அவிழ்க்கவோ, அறுக்கவோ முயற்சிக்காமல், பிரச்னைகளை எதிர்கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடர்வது நல்லது.

திருமணப் பந்தத்தில் மட்டும்தான் ஒரு ஆணும் பெண்ணும், பரஸ்பரம் புரிந்து பருவம் வந்த பிறகுதான் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற உறவுகள், அவன் அல்லது அவள் பிறக்கும்போதே கிடைத்துவிடுகின்றன. அதிலும், கணவன் - மனைவி உறவு என்பது மிகவும் உன்னதமான உறவு. வேறு எந்த உறவோடும் பகிர்ந்துகொள்ள முடியாதவற்றையும், கணவன் மனைவி மட்டும்தான் பகிர்ந்துகொள்ள முடியும்.

நம் வாழ்க்கையை நாமே சரிபடுத்திக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செய்வீர்களா?


(தொடர்ந்து பேசுவோம்)
டாக்டர் அபிலாஷா
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
‘குழந்தைகளுக்காகத்தான் இந்த மனுசனோட இத்தனை நாள் வாழ்ந்தேன். ஆனால், இதற்கு மேல் என் வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ள இனி நான் விரும்பமாட்டேன்’ என்று முடிவெடுக்கும் நிலை வந்துவிட்டால், வேறு வழி இல்லை. முதலில் நாம் சந்தோஷமாக இருந்தால்தான், சுற்றி இருப்பவர்களை சந்தோஷப்படுத்த முடியும். ஆஷா, ரமேஷ் இருவரும் அப்படித்தான் முடிவெடுத்தார்கள்.


ரமேஷ் - ஆஷா காதலித்துத் திருமணம் செய்தவர்கள். ரக்*ஷிதா, பிரியங்கா என்று இரண்டு குழந்தைகள். சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று புயல். ரமேஷின் வாழ்க்கையில் இன்னொரு பெண் வந்ததை ஆஷா கண்டுபிடித்தாள். அவனிடம் கேட்டபோது, வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான். தலையில் இடி விழுந்தது போலானது ஆஷாவுக்கு.

குழந்தைகளை வளர்ப்பதற்காக வேலையை விட்டு ஆறு வருடங்கள் ஆகிறது. அப்பா கொடுத்த வீடு, கொஞ்சம் பேங்க் பேலன்ஸ், நகைகள் இவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டு குழந்தைகளின் படிப்பு, வீட்டுச் செலவு எல்லாவற்றையும் தனியாகச் சமாளிக்க முடியுமா என்று கலங்கித் தவித்தாள். ஆனால், ஒரே வீட்டில் இருந்துகொண்டு ரமேஷை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தி அவளால் வாழ முடியவில்லை.

அவனுடைய துரோகத்தை அவளால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை. அது கடைசி வரை தொடரும் என்று வேறு ரமேஷ் தீர்மானமாகச் சொல்லிவிடவே, வேறு வழியின்றி முடிவெடுக்கும் கட்டாயத்துக்கு ஆஷா வந்தாள்.

ரமேஷ் இருக்கும் அதே தெருவில் வீட்டை மாற்றினாள். குழந்தைகள் தினமும் அவனைச் சந்திப்பதற்குத் தடை சொல்லவில்லை. அவனைத் தன் வாழ்க்கையிலிருந்து சிறுகச் சிறுக வெளியேற்றிவிட்டாள். குழந்தைகள் சில சமயம் ரமேஷுடன் தங்கிவிடுவார்கள். தனிமையும் கழிவிரக்கமும் அவளைச் சூழ்ந்தாலும், தப்பு செய்யும் ரமேஷே இவ்வளவு சந்தோஷமாக இருக்கும்போது, எந்தத் தவறும் செய்யாத தான் ஏன் அழுது வடிய வேண்டும். இனி வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக்கொண்டாள்.

வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர்களின் கதையை நெட்டில், புத்தகங்களில் படித்தாள். படிப்பும், ஏற்கெனவே அவள் பொழுதுபோக்காகக் கற்றிருந்த எம்ப்ராய்டரியும் கைகொடுக்க, தன் ஏரியாவிலேயே சின்னதாக ஒரு பொட்டீக் ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் அவள் கடைக்கு யாரும் வராமல் அங்கும் தனிமையில் இருக்கவேண்டி இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் அவளுடைய அண்ணனின் உதவிக் கரம், அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

தில்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, சூரத் என்று அடிக்கடி பயணம் செய்து, அங்குள்ள ஃபேஷன் உடைகளை உடனுக்குடன் வாங்கி வந்தாள். மெள்ள அவளுடைய டிசைன்கள் இளம் பெண்களுக்குப் பிடித்துவிடவே, கடையில் கூட்டம் வர ஆரம்பித்தது. உடை தவிர, இளம் பெண்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் ஒரே இடத்தில் விற்பனை செய்ய முடிவெடுத்து, அண்ணா நகரில் பிரபல கல்லூரியின் அடுத்த தெருவில் ஒரு அக்ஸெஸரி கடை ஆரம்பித்தாள். அதன்பின், திரும்பிப் பார்க்கவே நேரம் இல்லாத அளவுக்குப் படு பிஸியாகிவிட்டாள். அதே சமயம், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை ஒரு போதும் தவிர்க்கமாட்டாள். மகள்களுக்கும் அம்மா என்றாள் ஒரே பெருமை.

ஒரே சமயத்தில், தாயாகவும் தந்தையாகவும் அவளால் இருக்க முடிந்தது. சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆவதைப்போலக் காட்டுவார்கள். ஆனால், ஆஷா இதையெல்லாம் சாதிக்க நான்கு வருட கடின உழைப்பு தேவைப்பட்டது. இன்று அவளுடைய பொட்டீக், அவள் ஏரியா வி.ஐ.பி.களுக்கு விருப்பமான பிரத்யேகக் கடை. தன்னம்பிக்கையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் சுதந்தரமாக முடிவெடுக்கும் திறனும் அவளை அடுத்தகட்ட நகர்வுக்கு உயர்த்திச் சென்றது.

இப்போது சொல்லுங்கள், தோற்றுப்போனது ரமேஷ்தானே?

வாழ்க்கையில் இதுபோன்று வெற்றி தோல்விகள், மேடு பள்ளங்கள் அனைவருக்கும் ஏற்படுவதுதான். விழுவது விஷயமல்ல, உடனே எழுவதுதான் முக்கியம் என்பார்கள். கணவன் என்பவன் இல்லையென்றால், வாழ்க்கை ஒன்றும் சுக்குநூறாகிவிடாது. உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப்போனால், அவர்களை எளிதில் மீட்டெடுக்க முடியாது. வாழ்க்கைத் துணையாக பாதியில் வந்தவன் பாதியிலேயே பிரிந்துவிட்டால், அதற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பலி கொடுப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஆஷா இன்று பணம் புகழ் சம்பாதித்திருக்கலாம். வாழ்க்கையைத் தனியாக தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ரமேஷ் இல்லாமல் அவள் திருமண வாழ்க்கையில் ஒரு ஆணின் பங்கு என்பது வெற்றிடமாகத்தானே உள்ளது. அதை என்ன செய்து இட்டு நிரப்ப முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

உடல் இன்பம் என்பது ஒரு காலகட்டம் வரையில்தான் பலருக்கு இனிக்கும். இருபது வயதில் இருக்கும் வேட்கை நாற்பதுகளில் இருப்பதில்லை. எல்லோரையும் இதில் பொதுமைப்படுத்த முடியாது. ஆசை, பாசம், கோபம், காதல், காமம் என்று எல்லாவித உணர்வுகளும் சேர்ந்ததுதான் மனமும் உடலும்.

உடல் சோர உழைத்துக் களைத்து வீட்டுக்கு வரும்போது, குழந்தைகளின் அரவணைப்பு போதும் என்றாகிவிட்டது ஆஷாவுக்கு. எப்போதாவது அபூர்வமாக ரமேஷின் அருகாமை தேவைப்படும் என்று நினைக்கும்போது, பிடிவாதமாக மனத்தை ஒருநிலைப்படுத்தி தியான வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

ஆஷா நினைத்திருந்தால், நிச்சயம் அவள் அழகுக்கும் திறமைக்கும் ஒரு இணை கிடைத்திருக்கும். ஆனால் அது தாற்காலிகமானதும் காதலின்றியும் இருக்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. தவிர, ரமேஷ் செய்யும் அதே தவறை சமூகமோ வாழ்க்கையோ தன் மனசாட்சியோ அங்கீகரிக்காத ஒரு விஷயத்தைச் செய்ய அவள் துணியவில்லை. ரமேஷ் தனக்குத் துரோகம் செய்ததைபோல, தன் அருமைக் குழந்தைகளுக்கு அவள் துரோகம் செய்ய விரும்பவில்லை.

ஆம், குழந்தைகளின் மீது முழு அன்பும் அக்கறையும் வைத்திருப்பவர்கள் அப்படித்தான் யோசிப்பார்கள். எதை வாழ்க்கையில் முதன்மைப்படுத்த வேண்டும் (Prioritize) என்ற தெளிவு இருப்பவர்கள்தான் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாசிட்டிவ் எண்ணங்களுடன் உறுதியாக தன் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக்கொண்ட ஆஷாவைப்போல இருக்கமுடியுமானால், விவகாரத்து ஆன பின்பும் வாழ்க்கை இன்னும் இன்னும் அதிகம் இருக்கிறது என்ற பொறுப்புணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால், வலிகளிலிருந்து விடுபடலாம். அந்த வானத்தை வசப்படுத்த முடியாவிட்டாலும், அதில் மிதக்கலாம் என்பதை நம்புகிறீர்கள்தானே?


தொடர்ந்து பேசலாம்…
டாக்டர் அபிலாஷா
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.