மனதோடும் கொஞ்சம் பேசுவோம்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1
தாக்குப்பிடிக்க 7 வழிகள்
வாழ்க்கை என்னும் அனுபவப் பயணத்தில் தவிர்க்க முடியாதவை சவால்கள். அதிபயங்கரமான சவாலைச் சமாளித்து அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டெழுவதற்குப் பெயர்தான் ‘தாக்குப்பிடித்தல்’.
பரீட்சைகள், கல்வி கற்கும் முறையில் அடிக்கடி மாறுதல்கள், சக மாணவர்கள், வயதில் மூத்தவர்களுடனான உறவு, பெற்றோரின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பணிவாழ்க்கைத் தேர்வுகள், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி… இப்படி எது வேண்டுமானாலும் மாணவப் பருவத்தினருக்குச் சவாலாக அமையக்கூடும். அவற்றிலிருந்து மீளாவிட்டால் அந்தச் சிக்கலுக்குப் பலிகடாவாக ஆகிவிடும் அபாயம் உள்ளது.

திராணி இல்லையே!
இந்நிலையில் நம் மாணவர்களிடத்தில் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் மிகக் குறைவாக இருப்பதை ஒரு மனநல ஆலோசகராகக் கவனித்துவருகிறேன். பிரகாசமான வாய்ப்புகள் இருந்தாலும், மிகக் குறைவாகத் தாக்குப்பிடிக்கும் ஆற்றலோடுதான் நம் மாணவர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரப் பின்னணி, பாலினம் என்ற எந்த பேதமும் இந்தச் சிக்கலுக்கு இல்லை.
சொல்லப்போனால், தன்னம்பிக்கை, சுயமரியாதை, வெற்றி உள்ளிட்டவை குறித்த வழிகாட்டலும் தகவல்களும் இன்று ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனாலும், நமக்குத் தாக்குப்பிடிக்கும் திராணி இருக்கிறதா?
வாழ்க்கை எனும் உண்மையான பரீட்சைக்குத் தயாராவதற்கான வழி தாக்குப்பிடிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல். வாருங்கள், வாழ்க்கைத் தேர்வுக்கு ஆயத்தம் ஆவோம்!
1. ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உயிரியல் கடிகாரத்தையும் உடலையும் ஆரோக்கியமாகப் பேணிக்காத்தால் மன ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது சுலபம். ஆகவே, நிம்மதியான-போதுமான அளவு இரவு உறக்கம், சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க உணவு, வாரத்துக்குக் குறைந்தபட்சம் 300 நிமிடங்கள் உடற்பயிற்சி, முறையான வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றை வழக்கப்படுத்திக்கொண்டால் மாணவர்கள் எளிதில் தாக்குப்பிடிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
2. தன்னை அறியும் திறன்
உங்களின் தனித் திறன்களையும் நற்பண்புகளையும் நீங்களே உற்றுக் கவனித்து வாரந்தோறும் குறிப்பெடுங்கள். மூன்று வகைகளின் கீழ் அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
# தன்னம்பிக்கை – இயல்பாகவே உங்களிடம் வெளிப்படும் ஒரு திறன்/பண்பு.
# தகுதி – பயிற்சி மேற்கொண்டு நீங்கள் வளர்த்துக்கொண்ட திறன்/பண்பு.
# செய்யக்கூடிய திறன் – உங்களால் முடியும் என்றாலும் அதற்கெனக் கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க வேண்டிய திறன்/பண்பு.
இந்தப் பிரிவுகளின் கீழ் உங்களுடைய திறன்களையும் பண்புகளையும் நீங்களே கண்டுபிடித்தால், அவற்றை மேம்படுத்தும் செயல்பாட்டில் நீங்களே இறங்கிவிடுவீர்கள். இதன்மூலம் மற்றவர்களோடு ஒப்பிடப்பட்டுப் பந்தயக் குதிரையாக மாறும் அவஸ்தையைத் தவிர்க்கலாம்.
3. சமூகத் திறன்கள்
பெற்றோர், உறவினர், நண்பர்களின் ஊக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களோடு நல்ல உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். தாக்குப்பிடிக்கும் திறனக்கு உறவுப் பாலம்தான் மிகப் பெரிய பலம். பெருவாரியான நேரத்தை யாருடன் செலவழிக்கிறோமோ அவர்களாகவே நாம் மாறுகிறோம். ஆகவே, உங்களுக்கு ஆதரவு அளிக்கும், சவால்விடும், உங்களைத் திருத்தும், வழிநடத்தும் மனிதர்களோடு பழகுங்கள். இதில் வயது வரம்பு ஒரு தடையல்ல. ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொண்டு நல்ல உறவு வட்டத்தைப் பேணுங்கள்.
4. நெருக்கடியை ஏற்றுக்கொள்ளவா அல்லது மிகைப்படுத்தவா?
நெருக்கடியான சூழ்நிலையைக் கையாளும்போது, உணர்ச்சிவசப்பட்டுச் சூழலை மிகைப்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாகப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு புத்திக்கூர்மையோடு ஏற்றுக்கொள்ளும்போது, அதை லாகவமாகக் கையாள முடியும்.
5. வெற்றியும் தோல்வியும்
வெற்றியை நோக்கிய பயணத்தில் எதிர்ப்படும் சின்ன நிறுத்தம்தான் தோல்வி. அதை ஏற்றுக்கொண்டால் வெற்றிக்கான சூத்திரத்தைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இதுவே தாக்குப்பிடித்தலின் முதல் பாடம்.
6. அர்த்தமும் நோக்கமும்
படிப்பது வேலைக்காகத்தான் என்று திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான பாடத்தைக் கற்றுத்தருவதுதான் கல்வியின் நோக்கம். ஆகவே, நீங்கள் கற்றதில் இருந்து நம் பூமிக்கு உங்களால் இயன்றதைக் கொடுங்கள்.
7. 'ஒன்று’-ன் ஆற்றல்
இதுவரை செய்துவந்த ஒரு செயலைப் புதுவிதமாகச் செய்ய முயலுங்கள். அந்த முயற்சியில் நீங்கள் கண்டுபிடித்த அந்தப் புதிய வழியை முதலில் 21 நாட்கள் பயிற்சி செய்துபாருங்கள். அதைத் தொடர்ந்து 90 நாட்கள் செய்யும்பட்சத்தில் அதுவே உங்களின் அங்கமாக மாறிவிடும். இப்படி நமக்கு நாமே சவால் விடுத்து மாற்றத்துக்குத் தயாராகும்போது எந்தச் சவாலும் நம்மை வீழ்த்த முடியாது.
வாருங்கள் இனி வாராவாரம் உங்கள் மனதோடும் கொஞ்சம் பேசுவோம்!

கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C.ராஜரத்தனம்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#4
சட்டாம்பிள்ளையைச் சமாளிப்பது எப்படி?
பதின்பருவத்தினரை பெரிதும் அச்சுறுத்தும் உளவியல் ரீதியான சிக்கல்களில் ஒன்று, ‘சட்டாம்பிள்ளைத்தனம்’. வம்பிழுத்தல், சீண்டல் போன்றவை இதற்குள் அடக்கம். என்றாலும் ஆங்கிலத்தில் ‘புல்லியிங்’ என்று சொல்லப்படும் சட்டாம்பிள்ளைத்தனம் என்பது பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்காகும். இதனால் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகுதல், பள்ளிக்குச் செல்ல மறுத்தல், படிப்பில் இருந்து இடைநிற்றல் உள்ளிட்ட சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டுவருகிறார்கள்.
இத்தனை பிரச்சினைக்குரிய சட்டாம்பிள்ளைத்தனம் பல வகையில் நிகழ்த்தப்படுகிறது. அவற்றைப் புரிந்துகொண்டால் மட்டுமே அவற்றைக் கையாள்வதற்கான வழிகளையும் கண்டடைய முடியும்.

அதட்டல் மிரட்டல்
பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடுதல், முரட்டுத்தனமான பேச்சு, திட்டுதல், அதட்டுதல் உள்ளிட்ட பேச்சுரீதியான அதட்டல் மிரட்டல் ஒரு வகை சட்டாம்பிள்ளைத்தனம். மூன்றாம் நபருக்கு இவை வெறும் கேலிப் பேச்சாகத் தோன்றலாம்.
ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே புரியும் இதன் தீவிரம். இதனால் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவரும் வாக்குவாதத்தில் இறங்கும்பட்சத்தில் தவறிழைப்பவர் தப்பித்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்துவிடுவதுண்டு. “நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேலி செஞ்சேன். ஆனா, அவள் பிரச்சினையைப் பெரிசாக்கிட்டா” என்பதுபோல.
சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துதல்:
சமூகத்தில் இருந்து அல்லது குழுவினரிடம் இருந்து ஒருவரைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தில் அவரைப் பற்றிப் புறம்பேசுதல், குழுவாகச் சேர்ந்து தூற்றுதல், பொது இடங்களில் வைத்துச் சங்கடப்படுத்துதல்.
உடல்ரீதியான தாக்குதல்:
ஏதோ விபத்து நிகழ்ந்துவிட்டது என்ற அபிப்பிராயத்தைப் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் குறிவைத்தவரை அடித்தல், உதைத்தல். பலநேரத்தில் இத்தகைய சம்பவங்களைப் பொது மக்கள் கண்டும் காணாமல் இருப்பதால் மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தாக்குதல்களும் ஒரு சேர நிகழ்த்தப்படுவதும் உண்டு.
சட்டாம்பிள்ளையின் குணங்கள்
1.நான் மற்றவர்களைக் காட்டிலும் பலசாலி, பணம் படைத்தவன் போன்ற அதிகாரத் திமிர் கொண்டவர் சட்டாம் பிள்ளையாக மாறுவதுண்டு. பலசமயங்களில் தன்னம்பிக்கை அற்றவர்களும் தன்னைப் பெரும்புள்ளியாகக் காட்டிக்கொள்ளும் தன்முனைப்பு கொண்டவர்களும் சட்டாம்பிள்ளைகளாக வலம் வருவதுண்டு.
2.சட்டாம்பிள்ளைகளால் விமர்சனத்தை ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது.
3.அவர்களுக்கு மற்றவர்களின் வலி புரியாது.
4.தன்னை எல்லோரும் அண்ணாந்து பார்க்க வேண்டும் பாராட்டித் தீர்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுதி அவர்களிடம் காணப்படும்.
5.அனேகமாக சட்டாம்பிள்ளைகள் கூட்டமாகத்தான் திரிவார்கள்.
என் கிட்ட மோதாதே!
தங்களுடைய வீட்டிலோ சுற்றுப்புறத்திலோ மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் நபர்களைப் பார்த்துப் பழகியே பெருவாரியான சட்டாம்பிள்ளைகள் உருவாகுகிறார்கள். இப்படி மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தத் துடிக்கும் இளைஞர்கள் பெற்றோர் கவனிப்பாரின்றி இருப்பவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். தன்னுடைய போதாமையைப் பாதுகாப்பின்மையைச் சமாளிக்கத்தான் பலர் மற்றவர்களை அச்சுறுத்தத் தொடங்குகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் சமூக அந்தஸ்து மிக்க பல பெரும்புள்ளிகள் இப்படிப்பட்ட சட்டாம்பிள்ளைகளாகத்தான் நடந்துகொள்கிறார்கள். அவர்களைத்தான் நம் குழந்தைகள் முன்மாதிரியாக வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டி இருக்கிறது.
அதற்கு முன்னதாகப் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் சட்டாம்பிள்ளைகளைக் கையாளச் சில யோசனைகள்:
#உங்களிடம் யாரேனும் சட்டாம்பிள்ளைத்தனத்தை வெளிப்படுத்தினால் முதல் கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது, “நான் தனி ஆள் இல்லை” என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதுதான். உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள், நண்பர்களோடு நேரம் செலவழிக்கத் தொடங்குங்கள். அக்கம்பக்கத்தாரோடு இருப்பவர்களை நெருங்கச் சட்டாம்பிள்ளைகள் தயங்குவார்கள்.
#தன்னம்பிக்கையோடு அமைதிகாத்து இருக்கப் பழகுங்கள். நேர்மறையானவர்களைச் சட்டாம்பிள்ளைகளால் எதுவும் செய்ய முடியாது. பயத்தில், கோபத்தில் உடனடியாக எதிர்வினையாற்றுபவர்களைத்தான் சட்டாம்பிள்ளைகள் குறிவைப்பார்கள்.
#நம்பத்தகுந்த வயதில் மூத்தவர்களிடம் புகார் அளியுங்கள். அதேநேரத்தில் பெரியவர்களைத் துணைக்குத்தான் கூப்பிட வேண்டுமே தவிர அவர்களை வைத்துச் சட்டாம்பிள்ளையைக் கையாள வேண்டாம். ஏனென்றால், இதன்மூலம் நீங்கள் பலவீனமானவர்கள் என்று சட்டாம்பிள்ளை நினைக்கக்கூடும். அதனால் உங்களைச் சீண்ட வேறு வழிகளைத் தேடத் தொடங்குவார்.
# துரிதமாகவும் சீராகவும் செயலாற்றுவது அவசியம். பொதுவாக, வம்பிழுப்பதில்தான் தங்களுடைய கைவரிசையைச் சட்டாம்பிள்ளைகள் காட்டத் தொடங்குவார்கள். அத்தகைய சூழலைவிட்டு உடனடியாக வெளியேறுவது ஆரம்பத்திலேயே அவர்களின் கொட்டத்தை அடக்க உதவும்.
#நிலைமை கைமீறிப் போவதாகத் தோன்றினால் மனநல ஆலோசகரை அணுகுங்கள்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#5
கவனச்சிதறலைக் கவனிப்போம்!
மனத்தை ஒருமுகப்படுத்திப் படிக்க உட்காரும்போதெல்லாம் கவனச்சிதறல் ஏற்படுதல் என்பது பதின்பருவத்தினருக்கே உரிய சிக்கல்களில் ஒன்று. அலைபாயும் எண்ணங்களும் பகல் கனவு காணும் மனநிலையும் இந்தப் பருவத்தினரை அலைக்கழிக்கும். இதற்கான காரணங்களில் ஒன்று மூளையில் ஏற்படும் வளர்ச்சி. இரண்டாவது, சிந்திக்கும் திறனுக்கு மனித மூளையைத் தயார்படுத்த முதல்கட்டமான தெளிவற்ற புத்திக்கூர்மை இந்தக் காலகட்டத்தில்தான் உருவாகும்.
மூன்றாவதாக வயதுவந்தவருக்குரிய முதிர்ச்சியை ஏற்படுத்த ஹார்மோன்களில் உண்டாகும் ஏற்ற இறக்கங்கள். எதுவாக இருந்தாலும் இவை எல்லாம் சேர்ந்து படிப்பைப் பாதிக்கின்றன என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் சிக்கல்.

உணர்ச்சிவசப்படவைக்கக்கூடிய செய்திகளும் சம்பவங்களும் விடலைப்பருவ மூளையைக் கிளர்ச்சி அடையச் செய்யும். அதிலிருந்து மீண்டு அமைதியான மனநிலைக்கு வந்து படிப்பில் மூழ்குவது மிகவும் கடினம். இதைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களும் பெற்றோரும் பதின்பருவத்தினரை அனுசரணையுடன் நடத்துவது அவசியம்.
கவனிக்க உதவும் பொழுதுபோக்கு
பதற்றமூட்டக்கூடிய வீடியோ விளையாட்டுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபடுதல் நன்மை பயக்கும். அதேபோல பகல் கனவு காண்பதைத் தவிர்க்கப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடலாம். ஹார்மோன்களின் கொந்தளிப்பைச் சமன்படுத்தப் படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் உடற்பயிற்சி செய்தல், சரிவிகித உணவு சாப்பிடுதல், ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கில் ஈடுபடுதல் கைகொடுக்கும்.
ஆனால், இன்று வீடுகளிலும் பள்ளியிலும் குழந்தைகள் எந்நேரமும் படித்துக்கொண்டிருக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், படிப்புக்கும் பொழுதுபோக்குக்கும் சரிவிகிதமான முக்கியத்துவம் தரப்படும் குழந்தைகள்தாம் ஆர்வத்துடன் பயில்கிறார்கள் என்பதுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.
சரி, படிப்பின் வழியாகவே கவனச்சிதறலை எப்படிக் குறைக்கலாம் என்பதைப் பார்ப்போம்:
1.எந்நேரமும் படித்துக்கொண்டிருக்காமல் படிப்புக்கான நேரத்தைத் தீர்மானியுங்கள். சிலருக்கு விடியற்காலை படித்தல் கைகொடுக்கும். சிலருக்கோ இரவு படிப்பதுதான் சவுகரியமாக இருக்கும். இதில் எது உங்களுக்கு உகந்தது என்பதைக் கண்டுபிடியுங்கள்.
2.தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து படிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அடிக்கடி இடம் மாறத் தோன்றினாலும் மாற்ற வேண்டாம்.
3.சாப்பிடும் இடத்திலோ, டி.வி. இருக்கும் இடத்திலோ நீங்கள் தூங்கும் இடத்திலோ படிக்க வேண்டாம்.
4.சுவரைப் பார்த்து உட்கார்ந்து படித்தல் நல்லது. அதற்குப் பதிலாக ஜன்னலையோ, கதவையோ பெரிய அறையையோ பார்த்து உட்கார்ந்தால் கவனச்சிதறல் ஏற்பட வேறேதும் தேவை இல்லை.
5.படிக்க உட்காருவதற்கு முன்கூட்டியே தேவையானதைத் திட்டமிடுங்கள். தேவையான தாள், பேனா அல்லது கழிப்பறைக்குச் செல்லுதல், தண்ணீர் குடித்தல் போன்ற அத்தனை வேலைகளையும் செய்து முடித்துவிட்டுப் படிக்க உட்காருங்கள்.
6.இன்றைய அதிநவீனச் சாதனங்களின் தொல்லையால் பதின்பருவத்தினரின் மனம் ஒருமுகப்படக்கூடிய கால அவகாசம் 12 நிமிடங்கள் மட்டுமே. ஆக, ஒரு தலைப்பை 12 நிமிடங்களுக்கு ஆழ்ந்து வாசித்தால் நீங்களே தானாக 2 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் கழிப்பறை செல்லுதல், தண்ணீர் குடித்தல் அல்லது ‘Brain Gym’ போன்ற எளிய மூளைப் பயிற்சிகளைச் செய்து முடித்துவிடுங்கள்.
7.ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்யுங்கள். இசையைக் கேட்டபடியே படிப்பது மனம் லயித்துக் கற்க உதவும் என்பதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்று பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை நம்ப வேண்டாம். படித்து முடித்துவிட்டு உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள இசை கேட்கலாமே தவிர, இடையில் இசை கேட்டல் அல்லது எந்தவொரு பொழுதுபோக்கும் படிக்க உதவாது.
வேலையைத் திட்டமிடுங்கள், திட்டமிட்டதைச் செயல்படுத்துங்கள்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.