மாசடைந்த குடிநீரும் மாசு நீக்கும் வெந்ந&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாசடைந்த குடிநீரும் மாசு நீக்கும் வெந்நீரும்

டாக்டர் வி. விக்ரம் குமார்
“ஓடுற ஆத்துத் தண்ணியையும், ஊறுற ஊத்துத் தண்ணியையும் குடிச்சு, ஆரோக்கியமாக வளர்ந்தோம். ஆனால் இப்போ, பெரிய டப்பாவுல (Can water) அடைச்சுவைச்ச தண்ணியைக் குடிச்சுட்டு, `புதுசு புதுசா நோய் வந்து வாட்டுதே’ என்று புலம்பும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

மனிதர்களைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் எனப் பல காரணங்கள் இருந்தாலும், குடிக்கும் நீரில் ஏற்பட்ட மாற்றமும் மிக முக்கியமானது. குடிக்கும் நீரிலும் கலப்படம் வந்துவிட்டது.

சுற்றுச்சூழல் மாசு இல்லாத அந்தக் காலத்திலேயே நீரைக் காய்ச்சிக் குடிப்பதன் முக்கியத்துவத்தைச் சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், மாசு நிறைந்த இந்தக் காலத்தில், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குளிர்ந்த நீரை அடிக்கடி பருகுவது, கேன்களில் அடைத்து வைத்த நீரைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. குடிக்கும் நீரைக் காய்ச்சாமல் குடிப்பதால் காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாசடைந்த நீரால் நோய் ஏற்படாமல் தடுத்துக்கொள்ள, காய்ச்சிய சுடுநீரையே அருந்துவது சிறப்பு.

கேடயமாகப் பாதுகாக்கும்
காய்ச்சிய வெந்நீரைப் பருகுவதால், உடலில் உள்ள நஞ்சுகள் (Toxins) வெளியேற்றப்படுகின்றன, வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிகரித்து, உடல் நல்ல நிலையில் இயங்கும்.

மழைக் காலத்தில் அதிகமாகப் பரவும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளிடமிருந்து தப்பிக்க, வெந்நீரில் அதிமதுரப் பொடி, சிறிதளவு மிளகுத் தூள், துளசி, தூதுவளை இலைகளைப் போட்டுக் குடிக்கலாம். டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல் அரக்கர்களின் பிடியில் சிக்காமல் இருக்க, கேடயம் போலிருந்து இந்த வெந்நீர் பாதுகாக்கிறது.

பல்வேறு பலன்கள்
வெந்நீர் குடிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமன்றித் தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளும் சிறப்படைகின்றன.

மலம் சரியாக வெளியேறாமல் தவிப்பவர்கள், எந்த மருத்துவரிடம் செல்லலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, வெந்நீரில் சிறிது சீரகத் தூளைப் போட்டுக் குடித்தால், குடலின் இயக்கம் அதிகரித்து மலம் எளிதாக வெளியேறும்.

ரத்தக் கொதிப்பு, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், கை, கால் எரிச்சல், வயிற்று வலி, கழிச்சல் போன்றவை குணமாக வெந்நீரில் சீரகமும் வெந்தயமும் ஊறவைத்துக் குடிக்கலாம்.

வெந்நீரில் சாயமர (பதிமுகம்) சக்கைகளையும், கருங்காலி வேரையும் கலந்து அருந்தும் பழக்கம் கேரள மக்களிடையே இன்றளவும் தொடர்கிறது. துவர்ப்புச் சுவையுடைய சாயமரச் சக்கைகளை நீரில் கொதிக்க வைத்துக் குடித்துவருவதால் செரிமானமின்மை, கழிச்சல், அதிகத் தாகம், தோல் நோய்கள் போன்றவை குணமடைவது மட்டுமன்றி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கும் குறையும். இந்த நீருக்குக் கிருமிநாசினித் தன்மை இருப்பதால் நீரிலுள்ள நுண்கிருமிகளை அழிக்கும்.

உணவும் வெந்நீரும்
வெந்நீரை எப்போது குடித்தால் சிறப்பு என்பதைப் பற்றியும் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

“ஊணுக்கு முன்பு வெந்நீருண்டக்காற் தீபனம் போம்
ஊணுக்கு பின்பருந்தினா லூதியமாம் ஊணுக்குப்
பாதியிலுண் டாற்பசியும் பாதியாம் வெந்நீரே
ஓதுசுர வாதமகற்றும்.”

உணவுக்கு முன்: சாப்பிடுவதற்கு முன் வெந்நீர் அருந்தினால் பசி மந்தப்படும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சாப்பிடுவதற்கு முன்பு நீர் அருந்தலாம் என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள்.

சாப்பிடும்போது: சாப்பிடும்போது இடையிடையே நீர் அருந்துவதால், செரிமானச் சுரப்புகளின் (Digestive enzymes) செயல்கள் பாதிக்கப்பட்டு, உணவு செரிமானம் ஆகும் ஆற்றல் குறையும். உணவு அருந்தும்போது இடையில் நீர் அருந்துவது, செரிமானத்துக்கு அவசியமான பசித் தீயை, நீர் ஊற்றி அணைப்பது போன்றதாகும். அதிலும் சாப்பிடும் உணவுக் கவளங்களுக்கு இடையே நீருக்குப் பதிலாகக் குளிர்பானத்தைக் குடிக்கும் இன்றைய தலைமுறையினரின் செரிமானம் பெரிதும் பாதிக்கப்படும்.

உணவுக்குப் பின் அருந்தலாமா?
சாப்பிட்டு முடித்துச் சிறிது நேரம் கழித்து நீர் அருந்துவதால் வயிற்று உப்புசம், கை, கால் மூட்டு வலி போன்ற வாத நோய்கள், சில வகை கண் நோய்கள் போன்றவை தீரும். மேலும் நீண்ட ஆயுளும், சுக்கிலமும் பெருகும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சித்தர்களின் பாடல்கள். உணவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சத்துகளை, திசுக்கள் அதிகளவில் உட்கிரகித்துக்கொள்ள, சாப்பிட்ட பின் நீர் அருந்துவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

நீரைத் தூய்மையாக்க
ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு, அதில் 3, 4 தேற்றான்கொட்டைகளை இழைத்துப் போட்டு, சில மணி நேரம் அசையாமல் வைத்திருக்க, நீரில் உள்ள அழுக்குகள், பாத்திரத்தின் கீழ் தங்கும். மேலுள்ள தெளிந்த நீரை எடுத்துக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். தேற்றான் கொட்டைக்குப் பசியைத் தூண்டும் தன்மையும், உடலைத் தேற்றும் குணமும் இருப்பதால், இந்த நீரை அருந்த உடல் உரம் பெறும். தேற்றான் கொட்டையால் நீரிலும் சிறிது இனிப்பு சுவை சேரும்.

நன்றாகக் கனிந்த நெல்லிக்கனியை நீரில் ஊறவைத்தும், அந்த நீரைப் பருகலாம். இதனால் நீர் தூய்மையாவது மட்டுமன்றி, நீருக்குப் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை உண்டாகும். இந்த நீரைப் பருகிவந்தால், உடல் குளிர்ச்சி அடைந்து சிறுநீரும் மலமும் சிரமமின்றி வெளியேறும்.
குடிநீராகப் பயன்படுத்தும் நீர், ஆற்று நீராக இருந்தாலும் சரி, டப்பாக்களில் அடைத்த நீர் (Can water), ஆர்.ஓ. சுத்திகரிப்பு செய்த நீர் (R.O purified) என எதுவாக இருந்தாலும் சரி அதைக் காய்ச்சிக் குடிப்பதே ஆரோக்கியத்துக்கு உகந்தது. அது மட்டுமில்லாமல் நீர் மாசுபடுவதைத் தடுக்க நிச்சயமாக நடவடிக்கை தேவை. இல்லையென்றால், எதிர்காலத்தில் இயற்கையின் கொடையான இளநீரையும் காய்ச்சிக் குடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம், சிந்திப்போம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.