மாறுகண் அதிர்ஷ்டமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாறுகண் அதிர்ஷ்டமா?

விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்

மருத்துவ முன்னேற்றம் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும் மாறுகண் பிரச்னையுடன் பிறக்கும் குழந்தையை அதிர்ஷ்டசாலி எனக் கொண்டாடுகிற பெற்றோர் இருக்கிறார்கள். அந்த மூடநம்பிக்கையின் விளைவாக குழந்தைக்கு நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்படவும், அதன் எதிர்காலமே இருண்டு போகவும் கூடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும். சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம். உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பேறிக் கண் என்ற நிலை ஏற்பட்டு நிரந்தரப் பார்வை இழப்புக்கு உள்ளாகலாம்.மாறுகண் பிரச்னையில் பல வகைகள் உள்ளன.

ஒரு கண் நேராகவும், இன்னொரு கண் மூக்கு பக்கம் திரும்பியும் இருக்கலாம். அதற்குப் பெயர் ஈசோட்ரோபியா. மூக்குக்கு வெளிப்பக்கம் திரும்பி இருந்தால் அதற்குப் பெயர் எக்சோட்ரோபியா. மேல் பக்கம் திரும்பியிருந்தால் அதற்குப் பெயர் ஹைப்பர் ட்ரோபியா. கீழ் பக்கம் திரும்பியிருந்தால் ஹைப்போ ட்ரோபியா. இப்படி எப்படி வேண்டுமானாலும் கண் திரும்பியிருக்கலாம். ஒரு கண் மட்டுமோ அல்லது இரண்டு கண்களுமோ கூட
திரும்பியிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Squint அல்லது Strabismus என்கிறோம்.

ஈசோட்ரோபியா என்பது சில நேரங்களில் குழந்தை பிறந்ததுமே காணப்படும். இதை இன்ஃபன்ட்டைல் ஈசோட்ரோபியா என்கிறோம். குறை மாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழி வளர்ச்சி முழுமையடையாததால் அது பொருந்திப்போக சற்று தாமதமாகும்.

அப்போது ட்ரான்சியன்ட் ஸ்க்வின்ட் எனப்படுகிற தற்காலிக மாறுகண் பிரச்னை வரலாம். அதாவது, மாறுகண் மாதிரித் தெரியும். பெற்றோர் பயந்து போய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். குழந்தை இரண்டு கண்களையும் மூக்கின் அருகில் கொண்டு வந்து குவித்துப் பார்க்கும்.

அது பற்றிக் கவலை வேண்டாம். ஆனால், ஒரு கண் மட்டும் தொடர்ந்து ஒரு பக்கம் திரும்பியிருந்தால் அதை கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதிக்க வேண்டியது அவசியம். பொதுவாக 10 மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைவிட, குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாறுகண் பிரச்னையின் தீவிரம் அதிகம். இன்ஃபன்ட்டைல் ஈசோட்ரோபியா எனப்படுகிற ஒரு கண் மட்டும் திரும்பியிருக்கிற பிரச்னைக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்.

இல்லாவிட்டால் கண்ணின் வழியே மூளைக்குப் போகிற காட்சிகள் தெளிவாக இருக்காது. இன்னொரு கண்ணின் வழியே போகிற காட்சிகள் தெளிவாக இருக்கும் என்பதால் மூளையானது மாறுகண் வழியே வருகிற காட்சிகளைத் தவிர்த்து விடும். அதன் விளைவால் அந்தக் கண் சோம்பேறி ஆகி விடும். அதைத்தான் Lazy Eyes என்கிறோம். கடந்த இதழில் அதைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

அதை 8 வயதுக்குள் நாம் சரிசெய்யாவிட்டால் கஷ்டம். இன்ஃபன்ட்டைல் ஈசோட்ரோபியாவினால் வரக்கூடிய சோம்பேறிக் கண் பிரச்னையின் சதவிகிதம் சற்றே அதிகம் என்பதால் அதை உடனடியாக குணப்படுத்திவிடுவது புத்திசாலித்தனம்.

இது தவிர ரிஃப்ராக்டிவ் எரர் எனப்படுகிற பிரச்னையின் காரணமாகவும் மாறுகண் வரலாம். அதாவது, கண்ணாடி பவர் இருந்து அதை கவனிக்காமல் விட்டு, அதாவது,
அதிகமான பிளஸ் பவர் அல்லது அதிகமான மைனஸ் பவர் இருந்து அதை கவனித்து கண்ணாடி போடாமல் விடப்படும் பட்சத்தில் கண் ஏதேனும் ஒரு பக்கம் திரும்பலாம்.

குழந்தைகளுக்கு மாறுகண் வரும்போது கண் மூக்குப் பக்கம் திரும்பும். பெரியவர்களானதும் மூக்குக்கு எதிர் பக்கம் திரும்பும்.மாறுகண் பிரச்னையை கருடப் பார்வை என்றுகூட சொல்வதுண்டு. அதை அதிர்ஷ்டம் என்று சொல்பவர்கள் உண்டு. அப்படியெல்லாம் கிடையாது. அதே போல பரம்பரையாகவும் இந்தப் பிரச்னை தொடரலாம்.

டுவேன்ஸ் ரிட்ராக்*ஷன் சிண்ட்ரோம் (Duane Retraction Syndrome) என்கிற இன்னொரு முக்கியமான வகை மாறுகண் உண்டு. ஒரு கண் மூக்கு பக்கம் திரும்பும் போது கண் குட்டியாகி விடும். இன்னொரு கண்ணானது ஆடும். பாதிப்பு ரொம்பவும் தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. இது தவிர muscle imbalance காரணமாகவும் இப்பிரச்னை வரலாம்.

அதாவது, நமது கண்களை இட, வலமாகவும், மேலும், கீழும் இயக்குவது Extraocular Muscles என்பவை. அதற்கும் மூளையில் இருந்து வரும் கிரேனியல் நரம்புகளுக்கும் தொடர்புண்டு. குழந்தை பிறக்கும்போது அந்த நரம்புகள் ஏதேனும் அறுபட்டால் கண்ணை அந்தப் பக்கம் திருப்ப முடியாது. எதிர் பக்கம் திரும்பும். அதுவும் மாறுகண் போலக் காட்சியளிக்கும்.

என்ன சிகிச்சை?
மாறுகண்ணுக்கு கண்ணாடி பவர் இருந்து, கண்ணாடி போட்டால் சரியாகிவிடும். கண்ணாடி பவர் இருக்கும் பல குழந்தைகளுக்கும் கண்ணாடி போட்டால் கண்கள் நேராகி விடும். கண்ணாடியைக் கழற்றினால் மாறுகண்ணாகி விடும். இது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் சரியாகி விடும்.இது தவிர Prism என்கிற சிறப்புக் கருவியை கண்ணாடியில் இணைத்துக் கொடுக்கலாம்.

மாறுகண் பிரச்னை உள்ள குழந்தைகளை சாதாரண கண் மருத்துவரிடம் காட்டுவதைவிட, மாறுகண் சிறப்பு மருத்துவர் அல்லது குழந்தைகளுக்கான கண் மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதே சிறந்தது.மாறுகண்ணால் வரும் சோம்பேறிக் கண் பிரச்னைக்கு கடந்த இதழில் பார்த்ததுபோல நன்றாக உள்ள கண்ணை மறைத்து சோம்பேறிக் கண்ணைத் தூண்டும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கும் குணமாகாத நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதாவது, பலவீனமாக உள்ள தசைகளை பலப்படுத்தி, பலமாக உள்ள தசைகளை பலவீனமாக்கும் சிகிச்சை. உதாரணத்துக்கு கண் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் அப்படித் திரும்ப தசைகள் பலமாக இருக்க வேண்டும்.

வலது பக்கம் திரும்புகிற தசைகள் பலவீனமாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் கண் ரிலாக்ஸ் ஆகும். ஒருவேளை அந்தக் கண் இடப்பக்கமே திரும்பியிருக்கிறது என்றால் இடப்பக்க தசைகள் மிகவும் பலமாக இருக்கிறது... வலப்பக்கம் திரும்பச் செய்கிற தசைகள் பலவீனமாக இருப்பதாக அர்த்தம். அப்போது வலப்பக்கம் திரும்பச் செய்கிற தசைகளை பலப்படுத்திவிட்டு, இடப்பக்கம் திரும்பச் செய்கிற தசைகளை பலவீனமாக்க வேண்டும். அப்போது கண்கள் நேராகி விடும்.

சில நேரங்களில் காஸ்மெட்டிக் ஸ்க்வின்ட் சர்ஜரியும் செய்யப்படும். அதாவது, விழித்திரையில் ஏதோ பிரச்னை... பல வருடங்களாக சிகிச்சையே எடுக்கவில்லை... அதனால் பார்வையில் பாதிப்பு என்கிற நிலையில் கண் அதன் பொசிஷனுக்கே திரும்பிவிடும்.

அதை எக்சோட்ரோபியா என்கிறோம். அதற்குத் தீர்வே கிடையாது. காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் திரும்பிய கண்ணை நேராக்க முடியும். ஆனால், பார்வை வராது. பெரும்பாலும் திருமண வயதில் உள்ள பெண்களுக்கே இது அதிகம் தேவைப்படுகிறது.

கண்களுக்குள் ஏதோ பிரச்னை என்றால் குழந்தைக்கு அதை வெளியில் சொல்லத் தெரியாது. அப்போதும் கண் திரும்பிவிடும். உதாரணத்துக்கு ரெட்டினோபிளாஸ்ட்டோமா எனப்படுகிற கண்களுக்குள் கட்டி, கண்புரை அல்லது விழித்திரை விலகல் அல்லது Uveitis என்கிற பிரச்னை போன்றவற்றின் காரணமாகவும் மாறுகண் வரலாம்.காரணம் எதுவானாலும் உடனடியாக சிறப்பு மருத்துவரைக் கலந்தாலோசித்து, தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்வதே பார்வையைப் பாதுகாக்கும்.’’

பொதுவாக 10 மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைவிட, குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாறுகண் பிரச்னையின் தீவிரம் அதிகம். இன்ஃபன்ட்டைல் ஈசோட்ரோபியா எனப்படுகிற ஒரு கண் மட்டும் திரும்பியிருக்கிற பிரச்னைக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.