மீண்டும் டெங்கு! தவிர்க்க... தப்பிக்க

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மீண்டும் டெங்கு! தவிர்க்க... தப்பிக்க...
நிலம் எனும் நல்லாள் தழைக்க, வானிருந்து வரும் கொடையே மழை. பயிர்கள் செழித்து, உயிர்கள் சிறக்கவும், நம் மனதையும் உடலையும் குளிர்ச்சியாக்கவும் பெய்யும் மழையின் உபவிளைவு... கொசுக்கள். அதுவும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது மழை. நாம் அலட்சியமாகத் தூக்கிஎறிந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவை கொசுக்களின் உற்பத்திக்கூடாரமாக மாறி, உயிரையே காவு கேட்கின்றன.
சென்னையில், சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் எட்டு வயதுச் சிறுமி உயிர் இழந்திருக்கிறார். இன்னும் பலர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெங்கு காய்ச்சல், வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இதை, ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசு பரப்புகிறது. சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்றவை, வந்த பிறகு மருத்துவமனைக்குச் செல்வதைக் காட்டிலும் வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இந்தக் கொசுக்களை வளரவிடாமல் தடுப்பது நம் கைகளில்தான் உள்ளது.

டெங்கு அறிகுறிகள்!
தீவிரமான காய்ச்சல், தலைவலி, ரத்தக் கசிவு ஏற்படுதல், மலத்தின் நிறம் கறுப்பாகுதல், வாந்தி, கடுமையான வயிற்று வலி, சருமத்தில் சிவப்புப் புள்ளிகள், சுவாசக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம்.


ரத்தக் கசிவு வராமல் இருக்க!
உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூர லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.


ரத்தத்தில் பிளேட்லெட் அதிகரிக்க!
பப்பாளி இலைச் சாற்றை 5 - 10 மி.லி வெறும் வயிற்றில் அருந்தினால், டெங்கு காய்ச்சல் குறைந்து, பிளேட்லெட் அதிகரிக்கும்.
காய்ச்சல் வந்தால்...
காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளில் காய்ச்சல் சரியாகவில்லை எனில், அவசியம் மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனுடன், டெங்கு காய்ச்சல் வந்தவர்களும் சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனம் கட்டை, பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக் கஷாயமாக அருந்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை, அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க கஷாயம் குடித்த பின், பனங்கற்கண்டைச் சுவைக்கலாம். சித்த வைத்திய மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் கிடைக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்க!
எந்தக் கொசு கடித்தாலும் நோய் வராமல் இருக்க, வைரஸோ கிருமிகளோ நம்மைத் தாக்காமல் இருக்க, எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது அவசியம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுக் குடிக்கலாம்.

தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.
எளிய பாதுகாப்பு வழிகள்
சுருள், மேட், திரவங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் தொண்டை வலி, இருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு, புற்றுநோயாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.

கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை எடுத்து, அதைத் தண்ணீரோடு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் ஸ்ப்ரே செய்யலாம்.

வீட்டில் நொச்சி, வேப்பிலை, காட்டுத் துளசி, பேய்த் துளசி, அசோலா (கம்மல் பாசி), ரோஸ்மெரி, லெமன் கிராஸ், கற்பூரவல்லி, கற்றாழை போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதும் நல்லது.

வியர்வை வாசம் இருந்தால் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்பதால், தினமும் இருவேளை குளிப்பது நல்லது.

மாலையில் வீட்டில் வேப்பிலை எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.

கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களை பயன்படுத்துவதும் சிறந்த வழிதான்.

தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?
கொசு உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் கவர், டயர், ஆட்டுக்கல், பறவைகளின் உணவு பாத்திரம் போன்ற மழை நீர் தேங்கும் பொருட்களை, அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தண்ணீர் தேங்காத வகையில், தலைகீழாக வைக்க வேண்டும்.

செடிகள் நிறைந்த வீட்டில், கூடுதல் கவனம் எடுத்துச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கற்பூரவல்லி, நொச்சி, வேப்பிலை, லெமன் கிராஸ் போன்ற மூலிகைச் செடிகளை வளர்ப்பதால், கொசு அதிகமாக இருக்காது.

குப்பையைச் சேர்த்துவைக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது.

கிணறு, தொட்டி ஆகியவற்றை மூடிவைத்திருப்பது அவசியம்.

வீட்டில் கொசு வராமல் இருக்க...
வேப்பிலை, நொச்சி, உப்பு, காய்ந்த மிளகாய், விரலி மஞ்சள் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, வீட்டில் புகை போட்டால், காற்றில் கலந்திருக்கும் இந்த வாசத்தால் கொசுக்களால் உள்ளே வர முடியாது. இவை அனைத்தும் இயற்கையானவை என்பதால், அலர்ஜி, சுவாசப் பிரச்னைகளும் இருக்காது.

தேங்காய் எண்ணெய், புங்க எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து, அதில் மண்ணெண்ணெயை எட்டில் ஒரு பங்கு கலந்து, நீர் தேங்கும் இடங்களிலும், வீட்டைச் சுற்றிலும் தெளிக்கலாம். இது கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும்.

வியர்வை வாடை வருவதால்தான், கொசுக்கள் நம்மைக் கடிக்கின்றன. நம் உடலின் வாடையைக் கொசு முகர முடியாமல்போனால், கடிக்க முடியாது. அதற்குத் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு பூங்கற்பூரம் கலந்து இளஞ்சூடாக்கி, ஆறிய பின் சருமத்தில் தடவலாம். வில்லை கற்பூரத்தில் கெமிக்கல்கள் அதிகம், பூங்கற்பூரத்தில் கெமிக்கல்கள் குறைவு.

தேங்காய் எண்ணெயில் பளிங்கு சாம்பிராணி (கண்ணாடித் துண்டு போல இருக்கும்) கலந்து இளஞ்சூடாக்கி, சருமத்தில் தடவலாம்.

வீட்டில் துணி வைத்திருக்கும் இடங்கள், கழிப்பறை, குளிய
லறை ஆகிய இடங்களில் கற்பூரம் மற்றும் ஜாதிக்காயைத் தூள் செய்து, ஓரங்களில் தூவலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.