முகவாதம் தடுப்பது எப்படி? - Bell's Palsy: Prevention

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
முகவாதம் தடுப்பது எப்படி?


டாக்டர் கு. கணேசன்

இரவில் படுக்கப்போகும் போது நமக்கு முகம் நன்றாக தான் இருந்திருக்கும். காலையில் எழுந்திருக்கும் போது முகம் ஒரு பக்கமாக கோணிக் கொண்டு போகும். காபி சாப்பிட்டால் வாய் ஒழுகும். ஒரு பக்கம் கண்ணை முழுவதுமாக மூட முடியாது. பயந்து போய் டாக்டரிடம் ஓடுவோம். அவர், "உங்களுக்கு முகவாதம் வந்துள்ளது" என்பார். முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்படைவதால் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும் அல்லது வலுவிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாதம். இந்த நோய்க்கு "பெல்ஸ் பால்சி" (bells palsy) என்று பெயர்.

யாருக்கு வரும்?
பிறந்த குழந்தை முதல் பல் போன கிழவர் வரை எந்த வயதினருக்கும் இந்த நோய் வரலாம் என்றாலும், 40 வயதை கடந்தவர் களுக்கு முகவாதம் வரும் வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மிகை ரத்த கொழுப்பு, மூளையில் கட்டி ஆகிய நோய் உள்ளவர்களுக்கு முகவாதம் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட நான்கு மடங்கு அதிகம்.

எப்படி வருகிறது?
மூளையிலிருந்து வரும் ஏழாவது கபால நிரம்பு தான் முகத்தசைகளை இயக்குகிறது. மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப் படும் இந்த நரம்பு காதின் உட்புறம் இருக்கும் "முகக்குழாய்" எனும் மிகவும் குறுகிய பகுதியின் வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது. முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

என்ன அறிகுறிகள்?
முதலில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் சிறிய வலி தோன்றும். இதைத் தொடர்ந்து முகத்தில் வலது அல்லது இடது பக்கக் கன்னத்தில் தொடுஉணர்வு குறையும். நாக்கில் சுவை தெரியாது. வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். உணவு சாப்பிட்டால் அல்லது பானங்கள் அருந்தினால் ஒழுகும். உணவை மெல்லும் போது அது பாதிக்கப்பட்ட பகுதியில் பல்லுக்கும், கன்னத்திற்கும் இடையில் தங்கிக் கொள்ளும். கண்ணிமைகள் தளர்ந்து, கண் பாதி திறந்த நலையில் இருக்கும். உறங்கும் போது கூட கண்ணை முழுவதுமாக மூட முடியாது. இதனால் கண்ணின் வெண்படலம் காய்ந்து கண் எரிச்சல் ஏற்படும். சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும்.

என்ன சிகிச்சை?
வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருவதால் வைரஸ் கிருமிகளை ஒழிக்கும் "ஏளோவீர்" மாத்திரைகள் இதற்குத் தரப்படும். இவற்றுடன் ஸ்டீராய்டு மருந்துகளும் தரப்படலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது "இயன்முறை மருத்துவம்" என்று அழைக்கப்படுகிற பிசியோதெரபி. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இரண்டு மாதங்களுக்குள் முகவாதம் முழுவதுமாக குணமாகிவிடும்.

எப்படித் தடுப்பது?
மிகவும் குளிர்ச்சியான பானங்களை குடிக்காதீர்கள். ஐஸ்கிரீம் போன்றவற்றை அளவோடு சாப்பிடுங்கள். பேருந்து பயணங்களின் போது முகத்தில் குளிர்ந்த காற்று படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்னம்மை நோய்க்கு முதலிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள். காது மற்றும் தொண்டை நோய்களுக்கு உடனே சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.