முதுமை தரும் முக்கிய பிரச்னை மறதி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
முதுமை தரும் முக்கிய பிரச்னை மறதி


ஆகஸ்ட் 21 - முதியோர் நல நாள்

டாக்டா் கு.கணேசன்
நம் மூளையின் அபார ஆற்றல்களுள் முக்கியமானது ஞாபக சக்தி. இந்த ஞாபகத்தை தன்னுள் கொண்டிருக்கும் பகுதிக்கு ‘ஹிப்போக்காம்பஸ்’ என்று பெயர். நாம் பார்த்ததை, படித்ததை, கேட்டதை, கேள்விப்பட்டதை இங்குள்ள நியூரான்களில் - இன்னும் குறிப்பாகச் சொன்னால் சைனாப்ஸ்களில் (Synapses) சில வேதிவினை மாற்றங்களாக சேமித்துக்கொள்கிறது.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரமாயிரம் சைனாப்ஸ்களில் ஒரு பட்டாசு சரடு மாதிரி அடுக்காகவும் தொடர்ச்சியாகவும் சேமித்துக்கொள்கிறது. இதை ஞாபகச் சரடு (Memory Engram) என்று கூறுகிறோம்.

பின்னொரு நாளில் இந்த ஞாபகச் சரடைத் தூண்டும்போது, பட்டாசு சரடின் ஒரு முனையில் உள்ள திரியைக் கொளுத்தினால், அந்தச் சரடு முழுவதும் வெடிக்கிற மாதிரி, ஞாபகச் சரடில் பதியப்பட்ட பழையவை நமக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த ஞாபக சக்திக்கு மூளையின் செல் அமைப்பு, செயல்பாடு, வேதிப்பொருட்கள், தானியக்க நரம்புகள் எல்லாமே இயல்பாக ஆரோக்கியமாக அமைய வேண்டும்.

ஞாபக சக்தி வகைகள்

ஞாபக சக்தியை நம் வசதிக்காக மூன்று வகையாகப் பிரித்திருக்கிறோம். நண்பர் சொல்லும் அலைபேசி எண்ணை அலைபேசியில் குறித்துவைக்கிறவரை நமக்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம். இது ‘குறுகிய கால ஞாபக சக்தி’ (Short term memory). போன வாரம் நடந்தது நமக்கு நினைவில் இருப்பது ‘அண்மைக்கால ஞாபக சக்தி’ (Recent memory). வாழ்க்கையில் நிகழ்ந்த துக்ககரமான அல்லது மகிழ்ச்சியான விஷயங்கள் என்றைக்கும் நினைவில் இருக்குமல்லவா? இது ‘நெடுங்கால ஞாபக சக்தி’ (Long term memory).

ஞாபக மறதி என்பது என்ன?

ஞாபக சக்தி குறையும் நிலைமையை ‘ஞாபக மறதி’ (Amnesia) என்று பொதுவாக சொல்கிறோம். ஒருவர் தன் ஞாபக சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாகவோ, முழுவதுமாகவோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இழந்துவிடலாம். இதில் பல வகைகள் உள்ளன. அதுபோல் ஞாபக சக்தி குறைவதற்கு முதுமை, ஊட்டச்சத்து குறைவு, மன அழுத்தம், கவனமின்மை, குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம், மருந்துகளின் பக்க விளைவுகள், தலையில் அடிபடுதல், வலிப்பு நோய் என்று பல காரணங்கள் இருக்கலாம்.

முதுமையில் மறதிசுமார் 60 வயதாகும்போது இயல்பாகவே ஞாபக சக்தி படிப்படியாகக் குறையும். காரணம், அப்போது நம் மூளை செல்களின் செயல்பாடு மெதுவாகக் குறையத் தொடங்கும். கவனக் குறைவு அதிகமாகும். அன்றாடம் நடந்த நிகழ்வுகள் மனதில் பதியாது. இன்றைக்கு வீட்டுக்கு யார் வந்தனர், காலையில் எங்கே சென்றுவந்தோம் என்பதுகூட மறந்துவிடும்.

வீட்டுக் கதவு எண் மறந்துவிடும். மிகவும் நெருங்கியவர்களின் பெயர்கூட அவசரத்துக்கு நினைவுக்கு வராது. தனக்கு ஞாபக மறதி உள்ளதை உணர்ந்து அவரே மருத்துவரிடம் வருவார். இப்படிப்பட்டவர்களுக்குப் பேச்சுத்திறன், செயல்திறன், நடை உடை பாவனைகள் எதுவும் மாறாது. ‘குறுகிய கால ஞாபக சக்தி’ மட்டுமே குறையும். இது முதுமை வயதுக்கான ஞாபக மறதி.

இம்மாதிரியான ஞாபக மறதியுடன் ஒருவர் இயல்பாக பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் சிரமப்பட்டால், அந்த நிலைமையை ‘முதுமை மறதி’ (Dementia) என்கிறோம். உதாரணமாக, பேசும்போது உச்சரிப்பு தெளிவாக இருக்காது. சரியான வார்த்தையை சரியான இடத்தில் பயன்படுத்தமாட்டார். தினமும் செய்யக்கூடிய வேலையாக இருந்தாலும் அதைச் செய்ய சிரமப்படுவார். இந்த மாதிரியான ஞாபக மறதி அவருக்கு உள்ளதை மற்றவர்கள்தான் சொல்வார்கள். அதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். அவராக மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரமாட்டார். குடும்பத்தினர் தான் அழைத்து வருவார்கள்.

முதுமை மறதி என்பது 60 வயதுக்குப் பிறகு நம் மூளை செல்கள் அழிவதாலும், அப்படி அழிந்த செல்களுக்கு மாற்றாக புதிய செல்கள் உருவாவதில்லை என்பதாலும் மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான வேதிப்பொருட்களும் சுரப்பதில்லை என்பதாலும் ஏற்படுவது,

காரணம் என்ன?

முதுமை மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. 70 சதவிகிதம் வெளியில் தெரிவதில்லை. மீதி 30 சதவிகிதம் மட்டுமே வெளியில் தெரியும். காரணம் தெரியாத வகையில் முக்கியமானது, ‘அல்ஸைமர் நோய்’ (Alzheimer’s disease). அல்ஸைமர் நோய் மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடுவதில் தொடங்கி, வந்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்ப திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் ‘நான் யார்?’
என்பதே தெரியாமல் போவது வரை முதியவர்களுக்கு ‘அல்ஸைமர்’ என்னும் மறதி நோய் தாக்குவது இயல்பாகிவிட்டது.

உலக அளவில் 60 வயதைக் கடந்தவர்களில் நூற்றில் 5 பேரையும், 85 வயதைக் கடந்தவர்களில் 5 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 38 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பெண்களைவிட ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம். அதிலும் பக்கவாதம் தாக்கிய ஆண்களை மிக விரைவில் இது தாக்குகிறது. பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால், வாரிசுகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம். இது தவிர, விளையாட்டிலும் விபத்திலும் தலையில் அடிபட்டவர்கள் உடனே தலையை ஸ்கேன் செய்து கவனிக்கத் தவறினால் பின்னாளில் அல்ஸைமர் நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மது அருந்துவது, புகைப்பழக்கம் போன்றவற்றால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் இதுதாக்குவது அதிகம்எப்படி ஏற்படுகிறது?

வயது ஏற ஏற மூளை செல்கள் சுருங்கி, அந்தப் பகுதியில் ‘அமைலாய்டு’ (Amyloid), ‘டௌ’(Tau) என்னும் இரண்டு புரதப்பொருட்கள் படிகின்றன. இதனால், பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப்போல, மூளை செல்கள் சிறிது சிறிதாக மடிந்துபோகின்றன. இதன் விளைவால் ஞாபக சக்தி குறைகிறது. இந்த நோய்க்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மரபணுக் கோளாறு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்னென்ன?

அல்ஸைமர் நோயில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முதலில் மறந்துபோகும். ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு குறைந்து கொண்டே வரும். இது முதல் கட்டம். இரண்டாவது கட்டத்தில், வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்கள் வரை ஞாபகத்துக்கு வராது.


மூன்றாவது கட்டத்தில் ஞாபகம் மொத்தமும் அழிந்துபோகும். உணவை வாயில் போட்டுக்கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்றுகூட தோணாது... மென்றுகொண்டே இருப்பார்கள் அல்லது துப்பிவிடுவார்கள். மனைவியையே ‘இவர் யார்?’ என்று கேட்கும் அளவுக்கு மறதி முற்றிவிடும். இறுதியில், எதற்கெடுத்தாலும் சந்தேகம், கோபம், எரிச்சல்படுவது என்று மன பாதிப்புகளுக்கு உள்ளாகி, தன்னிலை மறந்து திரிவார்கள்.

சிகிச்சை என்ன?
இந்த நோய்க்கு முழுமையான சிகிச்சை எதுவும் இல்லை. நோயின் வீரியத்தைக் குறைக்க டோனிபிசில், ரிவாஸ்டிக்மின் கேலன்டமின் ஆகிய மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகளால் தொடக்க நிலை அல்ஸைமர் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நோயாளியைப் பராமரித்தல்இந்தப் பாதிப்பு உள்ளவர்களை
அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் கடமை. கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இன்றைய சூழலில், தன்னிலை மறந்து தவிக்கும் அல்ஸைமர் நோயாளிகளை சரியாக கவனிப்பது நாட்டில் வெகுவாக குறைந்து வருவது ஒரு துயரம்தான்.

முதுமை மறதி - வெளியில் தெரியும் காரணங்கள்

1. ரத்த ஓட்டக் குறைவு

மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படும்போது பக்கவாதம் வருவதுண்டு. இவ்வாறு பக்கவாதம் ஏற்பட்டு, சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புண்டு. இது பெரும்பாலும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய வால்வு கோளாறுகள், உடற்பருமன், ரத்த மிகைக் கொழுப்பு உள்ளவர்களுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வருவதுண்டு. ஒரே நேரத்தில் ஒருவருக்கு அல்ஸைமர் நோயால் ஏற்படுகிற மறதியும், ரத்த ஓட்டக்குறைவால் ஏற்படுகிற மறதியும் சேர்ந்தும் இருக்கலாம்.

2. மூளையில் கட்டி

மூளையில் ஏற்படுகிற சாதாரண கட்டி அல்லது புற்றுநோய்க் கட்டியும் மறதிக்கு அடிபோடும். இந்த வகை ஞாபக மறதி கொஞ்சம் கொஞ்சமாகவே அதிகமாகும்.

3. மூளையில் ரத்த உறைவுக் கட்டிவயதாகிவிட்டால் பலரும் அடிக்கடி கீழே விழுவார்கள். அப்போது தலையில் அடிபட்டு அதன் விளைவாக மூளையில் ரத்தம் கசிந்து, உறைந்து கட்டியாகி பாதிப்பு ஏற்படலாம். அந்த நேரத்தில் எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கலாம். சில மாதங்கள் கழித்து தலைவலி, வாந்தி, மயக்கம், மறதி போன்ற தொல்லை கள் தொடங்கலாம். இந்தக் கட்டியை சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் தெரிந்துகொண்டு, அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.

4. அளவுக்கு அதிகமான மது

மாதக்கணக்கில் தொடர்ந்து அதிக மது அருந்துபவர்களுக்கு ஞாபக மறதி வருவது இயல்பு. இவர்கள் மதுவை மறந்துவிட்டு, நரம்புகளுக்கு வலுவூட்டும் வைட்டமின் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி மீண்டுவிடும்.

5. தைராய்டு சுரப்பு குறைவது தைராய்டு சுரப்பி தைராக்சின்

ஹார்மோனை குறைவாகச் சுரப்பது ஞாபக மறதிக்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு இந்தக் காரணத்தால் தான் அதிக அளவில் மறதி ஏற்படுகிறது என்கிறது புள்ளி விவரம். ரத்தப்பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டு முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஞாபக மறதி ஏற்படாது.

6. வைட்டமின்கள் குறைவு

வைட்டமின் பி1, பி12 மற்றும் நியாசின் குறைந்தால் ஞாபக மறதி ஏற்படலாம். இவர்களுக்கு இந்த வைட்டமின்கள் கலந்த மாத்திரைகளைக் கொடுத்தால் அல்லது இவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் ஞாபக மறதி மறைந்து விடும்.

7. உறுப்புகள் செயலிழப்பு

கல்லீரல், நுரையீரல், சிறுநீரம் ஆகிய உறுப்புகள் செயலிழந்தாலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இந்த நோய்கள் சரியானால் மறதியும் மறையும்.

8. உளவியல் காரணங்கள்

மனச்சோர்வு, மன பயம், பதற்றம், பரபரப்பு, வெறுப்பு, குழப்பம், மன அமைதியின்மை போன்ற உளவியல் காரணங்களும் உளச்சிதைவு நோயும் ஞாபக மறதியை வரவேற்கும்.

9. மூளையில் புரதப் பொருள் படிவு

பெருமூளைப் பகுதியில் ‘லேவி பாடீஸ்’ (Lewy Bodies) என்று அழைக்கப்படுகிற புரதப்பொருட்கள் படியும்போது முதுமை மறதி நோய் தோன்றும். இந்த வகைக்கு ‘லேவி பாடீஸ் முதுமை மறதி நோய்’ என்று ஒரு தனிப் பெயர் உண்டு.

10. பிற காரணங்கள்

பிரியான் நோய், பிக் நோய், எய்ட்ஸ் நோய், நியூரோ சிபிலிஸ் எனும் பால்வினை நோய், வலிப்பு நோய், பார்க்கின்சன் நோய், உதறுவாதம் (Chorea), நீர் மண்டை, டௌன் நோய்த்தொகுப்பு போன்ற நோய்களின் காரணமாகவும் ஞாபக மறதி ஏற்படலாம். தொடர்ச்சியான போதை மருந்துப் பழக்கம், மனநோய்க்குத் தரப்படும் சில மருந்துகளின் பக்கவிளைவு, அதிக அளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவு எனப் பல காரணங்களால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புண்டு.

பரிசோதனைகள் என்னென்ன?

அடிப்படை காரணத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையும் உளவியல் தொடர்பான பரிசோதனைகளும் தேவைப்படும். குறிப்பாக, ரத்தப் பரிசோதனைகள், மூளைக்கு சிடி ஸ்கேன் / எம்ஆர்ஐ ஸ்கேன் / பெட் ஸ்கேன் (PET Scan) பரிசோதனைகள் தேவைப்படும். குறுகிய கால ஞாபக சக்தியைக் கண்டறியும் பரிசோதனை (Mini mental state examination - MMSE) மற்றும் கடிகாரம் வரையும் பரிசோதனையும் செய்யப்படும்.சிகிச்சை என்ன?

ஒருவருடைய ஞாபக மறதிக்கு அடிப்படை காரணம் தெரிந்துவிட்டால் அதைக் குணப்படுத்துவது எளிது. காரணத்துக்கு ஏற்பவே சிகிச்சை அமையும். அத்தோடு உளவியலாளரின் ஆலோசனைகளும் பரிந்துரைகளும் தேவைப்படும்.

முதுமை மறதியைத் தடுப்பது எப்படி?

1. ஊட்டச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிடுங்கள்.
2. துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
3. பருமனைத் தவிருங்கள்.
4. புகைப் பிடிக்காதீர்கள்.
5. மது அருந்தாதீர்கள்.
6. நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.
7. ரத்தக் கொழுப்பை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.
8. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தியானம், பிராணாயாமம் மேற்கொள்ளுங்கள்.
9. தினமும் 6 - 8 மணி நேரம் உறக்கம் தேவை. இதற்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
10. தனிமையைத் தவிருங்கள்.
11. பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வுக்காலத்தில் உள்ளவர்கள் பகலில் புத்தகம் படிப்பது, தோட்டக்கலை, இசை
கேட்பது, கேரம், செஸ் போன்ற உள் விளையாட்டு விளையாடுவது என ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.
12. மனக் கவலை, மன அழுத்தம்தவிருங்கள்.

உணவை வாயில்போட்டுக்கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்றுகூட தோணாது... மென்றுகொண்டே இருப்பார்கள் அல்லது துப்பிவிடுவார்கள். மனைவியையே ‘இவர் யார்?’ என்று கேட்கும் அளவுக்கு மறதி நோய் முற்றிவிடும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.