முருங்கை - Health Benefits of Drumstick

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
முருங்கை


மூலிகை மந்திரம்

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


வேப்பிலை, வில்வம், துளசி, அருகு, வன்னி, எருக்கு, மஞ்சள், கரும்பு, தாமரை போன்ற வற்றையும் இன்னபிற மூலிகைகளையும் பிரசாதமாகவோ, வழிபடு பொருளாகவோ இறை வழிபாட்டோடு இணைத்தனர் நம் முன்னோர். மூலிகைகளின் முக்கியத்துவம் கருதி அவற்றை நாம் தவிர்த்து விடாமல் இருக்கும் பொருட்டே இவ்வாறு செய்துள்ளனர்.

அந்த வகையில் முருங்கைக்கீரை இல்லாமல் முருகப்பெருமானின் கிருத்திகை வழிபாடு முடிவதில்லை என்பதை நாம் அறிவோம். முருகன் என்றால் அழகன், முப்பது வயது உடையவன் என்கிறது தமிழ் மருத்துவம். அதனால்தான் முருகன் + கை + காய் என்று முருங்கைக்காயைச் சொன்னார்கள். முருகனைப் போல அழகையும் இளமையையும் தரும் குணம் கொண்டது என்ற அர்த்தத்திலேயே அப்படிச் சொன்னார்கள்.

இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் பயிராக வளர்கிறது முருங்கை. இவற்றில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசு முருங்கை என பல வகைகள் உள்ளன. முருங்கையின் அனைத்து பாகங்களும் உணவாகவும் மருந்தாகவும் பயன்தர வல்லது.

முருங்கையினுடைய தாவரப்பெயர் Moringa oleifera. ஆங்கிலத்தில் Drumstick. ஆயுர்வேதத்தில் ஷிக்ரு, மது ஷிக்கு, ஷோபான்ஜனா, தீக்*ஷ்ண கந்தா என்பர்.முருங்கையின் பயன்கள்முருங்கை மரத்தினுடைய எல்லா பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முருங்கையின் பூக்கள் உடலுக்கு உரத்தைத் தரவல்லவை. மாதவிலக்கைத் தூண்டி ஒழுங்குபடுத்தக்கூடியது. வேர்ப்பட்டை தொற்று நோய்க்கிருமிகளைத் துரத்த வல்லது. வீக்கத்தைக் கரைக்க வல்லது. வலியைத் தணிக்கக்கூடியது. முருங்கைப்பட்டை பூஞ்சைக் காளான்களைப் போக்கவல்லது. நுண்கிருமிகளை நீக்கவல்லது. முருங்கையின் இளம்பட்டையும் பூக்களும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வல்லவை. முருங்கை விதைகள் உள்ளுக்கு உணவாகும். கடுப்பைத் தணிக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கக்கூடியது. பால்வினை நோய்களின்போது பயன்தர வல்லது.

இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல், உலர்ந்த முருங்கையின் வேர்ப்பட்டையை கழலை நோய்க்கும், சிறுநீரில் சர்க்கரை வெளியாவதற்கும், ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்துவரும் தொல்லைகளுக்கும் நல்ல மருந்தாக சிபாரிசு செய்கிறது. முருங்கையின் இலை, விதைகள், வேர்ப்பட்டை, மரப்பட்டை சீழ்பிடித்த புண்களை ஆற்றவும், மூலம், பௌத்திரம் போன்ற நோய்களைப் போக்கவும் சிபாரிசு செய்கிறது.

100 கிராம் முருங்கையில் சுண்ணாம்புச்சத்து 435 மி.கி. அளவும், பாஸ்பரஸ் 70 மி.கி. அளவும், இரும்புச்சத்து 7 மி.கி. அளவும், நீர்ச்சத்து 76% அளவும், புரதச்சத்து 6.7% அளவும், கொழுப்புச்சத்து 1.6% அளவும், தாது உப்புகள் 2.2% அளவும், வைட்டமின் சி சத்து 220 மி.கி. அளவும், சிறிதளவு பி.காம்ப்ளக்ஸ் சத்தும், நார்ச்சத்து சிறிதும் அடங்கியுள்ளன.முருங்கைக்கீரையின் மருத்துவப் பயன்கள்

* முருங்கைக்கீரையை உணவோடு அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் வயிற்றுப்புண்கள் குறிப்பாக உணவுப் பாதையில் உள்ள புண்கள் வெகு விரைவாக ஆறும்.

* முருங்கைக்கீரை அடிக்கடி தலைவலி வருவதைத் தடுத்து நிறுத்துவதோடு ரத்தம் கலந்து மலம் வெளியாவதைத் தடுத்து நிறுத்தும்.

* முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் பணிக்கும் உதவுகிறது.

* முருங்கைக்கீரையில் வைட்டமின்கள் ஏ,சி, அபரிமிதமான அமினோ அமிலங்கள், சுண்ணாம்புச்சத்து ஆகியன அதிகம் அடங்கியுள்ளன.

* முருங்கை இலைச்சாறு மலச்சிக்கலைப் போக்கி குடலைச் சுத்திகரிக்க உதவுகிறது. முருங்கைக்கீரையில் உள்ள பொட்டாசியம் மூளை வளர்ச்சிக்கும்் நரம்பு மண்டலங்களின் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.

* இளம் தாய்மார்கள் அடிக்கடி முருங்கைக்கீரையினை உணவோடு சேர்த்துக்கொள்வதால்் போதிய தாய்ப்பால் சுரக்க ஏதுவாகிறது. கர்ப்பிணிகளுக்கும் ஆரோக்கியம் தரவல்லதாக முருங்கைக்கீரை அமைகிறது.

* முருங்கைக்கீரை எலும்புகளுக்கு பலம் தருவதாகவும் இளஞ்சிறார்களின் எலும்புகள் உறுதி பெறவும் சத்துள்ள உணவுப் பொருளாக விளங்குகிறது.

* முருங்கைக்கீரை ரத்தத்தில் சேர்ந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வல்லது. சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் மூன்று நாட்களாயினும் முருங்கைக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

* முருங்கைக்கீரை கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் கரைத்துச் சீர்செய்யும். முருங்கைக்கீரை சத்துள்ள உணவாக இருப்பதால் தலைமுடி உதிர்வதைத் தடை செய்வதோடு இளநரையையும் போக்குகிறது. பொடுகு பிரச்னைக்கும் முருங்கைக் கீரை அருமருந்தாகிறது.

* முருங்கைக்கீரை உடல் வெப்பத்தைத் தணிக்க உதவி செய்கிறது. இதனால் கண்கள் சிவந்து போதல், தலைவலி போன்ற தொல்லைகள் வராத வண்ணம் காக்கப்படுகிறது.

* முருங்கைக்கீரையின் சூப் மூட்டுகளின் தேய்மானத்தை சரி செய்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண், காய்ச்சல், கண் நோய்களையும் குணமாக்குகிறது.

இளம் தாய்மார்கள் அடிக்கடி முருங்கைக்கீரையினை உணவோடு சேர்த்துக் கொள்வதால்் போதிய தாய்ப்பால் சுரக்க ஏதுவாகிறது. கர்ப்பிணிகளுக்கும் ஆரோக்கியம் தரவல்லதாக முருங்கைக்கீரை அமைகிறது.முருங்கை இலைச்சாற்றுடன் தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கும்.

முருங்கை மருந்தாகும் விதம்

* முருங்கை இலைச்சாற்றுடன்(10 முதல் 20 மி.லி.) சம அளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து அன்றாடம் காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக் குறைபாடு, ரத்த சோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி, தோலின் வறட்சி ஆகியன குணமாகும்.

* முருங்கை இலைச்சாற்றுடன் தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கும்.

* கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும்முன் முருங்கைக்கீரைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் பார்வை கூர்மை பெறும்.

* நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தஉடன் முருங்கைக்கீரையோடு இரண்டு பல் பூண்டு, சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளைச் சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுப்பதுடன் கடிபட்ட இடத்தில் சிறிதளவு தடவிவர நஞ்சு முறியும்... புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

* முருங்கைக்கீரையை இடித்துச் சாறெடுத்து அதனோடு மிளகைப் பொடித்து சேர்த்துக் குழைத்து நெற்றியின் மீது பற்றாகப் பூசி வைக்க தலைவலி விரைவில் தணியும்.

* அடிபட்டதாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ ஏற்பட்ட வீக்கங்கள் மீது முருங்கைக்கீரையை அரைத்து மேற்பற்றாகப் பூச வீக்கம் வற்றும்.

* முருங்கைப்பூ பிஞ்சான உடன் சேகரித்து தோலோடு சமைத்து சாப்பிட்டு வர மிகுந்த உடல் வெப்பத்தைத் தணித்து ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

* முருங்கை விதையைப் பொடித்து தேன் சேர்த்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டுவர, நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். ஆண்மை அதிகரிக்கும்.

* முருங்கைப்பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி சொறி, சிரங்கு கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.

* முருங்கைப் பிசினை எண்ணெயில் இட்டுக் கரைத்தோ அல்லது காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டோ ஓரிரு சொட்டுகள் காதில் விட்டுவர காது புண்கள் ஆறும்.

* முருங்கைப் பிசினைப் பாலில் இட்டுக் கரைத்து இரண்டு பக்க கன்னப் பொறியின் மீதும் பூசி வைக்க விரைவில் தலைவலி தணியும். இதையே நெறிக்கட்டிகளின் மீதும் பூசி வைக்க வீக்கமும் வலியும் குணமாகும்.

எளிதாகப் பயிராகி தன் முழுப்பகுதியையும் மருந்தாக நமக்குத் தரும் முருங்கையை கடவுளுக்குப் படைக்கும் உயர்நிலையில் வைத்தது மிகவும் பொருத்தம் உடையதுதான். ‘முந்து நீரைத்தடுக்கும் மோரைப் போலேயொழுகும் விந்து வைத்தடிப்பித்து மேனிதரும் - தொந்தக் கரிய நிறவாயுதனைக் காதிவிடு நாளும்பெரிய முருங்கைப் பிசின்’என்கிறது முருங்கையைப் பற்றிய அகத்தியர் குண பாடம்.

தாம்பத்திய உறவின்போது விந்து முந்துதலைத் தடுக்கும். உடல் வெப்பம் நிறைந்து பால்வினை நோயால் ஏற்பட்ட நீர்த்து ஒழுகும் விந்தைக் கெட்டிப்படுத்தும், மேனிக்கு அழகு சேர்க்கும், வாயுவைக் கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பது மேற்கூறிய பாடலின் பொருள்.


(மூலிகை அறிவோம்!)

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.