மூலிகையே மருந்து கற்றாழை தரும் குளுமை

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,497
Likes
720
Location
Switzerland
#1
மூலிகையே மருந்து கற்றாழை தரும் குளுமை
முதல் பார்வையிலேயே மனதை மயக்கி காதல் வசப்பட வைக்கும் அழகான தாவரம் கற்றாழை. தோற்றத்தில் மட்டுமல்ல, மருத்துவக் குணத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகானவைதான்! வேனிற் காலத்துக்கென இயற்கையில் பிரத்யேகமாகப் படைக்கப்பட்ட ‘குளுகுளு மூலிகை’ கற்றாழை. இந்திய, கிரேக்க, எகிப்திய, சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘அற்புதத் தாவரம்’ கற்றாழை.பெயர்க் காரணம்: பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த கோளாறுகளை நீக்குவதால் கன்னி, குமரி ஆகிய பெயர்கள் கற்றாழைக்கு நயமாகப் பொருந்துகின்றன. செங்கற்றாழை, ரயில்வே கற்றாழை, மலைக் கற்றாழை, வெண் கற்றாழை, வரிக் கற்றாழை தவிர, மேலும் பல கற்றாழை வகைகள் உள்ளன. பயன்பாட்டில் அதிகமிருப்பது சோற்றுக் கற்றாழை.
அடையாளம்: வறண்ட சூழலிலும் பல ஆண்டுகள் வாழும் சிறு செடி இது. சதைப்பற்றுள்ள மடல்களை அழுத்திப் பிழிந்தால் கசப்புச் சுவை கொண்ட திரவம் வெளியாகும். இதன் உட்பகுதியில் இருக்கும் கூழ் போன்ற பகுதியே ‘கற்றாழைச் சோறு’ எனப்படுகிறது. Aloe barbadensis எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை லிலியேசி (Liliaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. அலோசின் (Aloesin), அலோ-எமோடின் (Aloe-emodin), Aloin, Isobarbaloin, லிக்னின்ஸ், அமினோ அமிலங்கள் ஆகிய தாவர வேதிப்பொருட்கள் கற்றாழையின் உள்ளன.
உணவாக: தோல் சீவிய பின், உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை ஆறேழு முறை நீரிலிட்டுச் சுத்தம்செய்து, பின் மோருடன் கலந்து, உப்பும் சீரகத்தூளும் சேர்த்து மத்து கொண்டு நன்றாகக் கடைந்து எடுத்தால், குளுகுளு கற்றாழைப் பானம் தயார். பனிக்கட்டி இல்லாமலே குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்தப் பானத்தை வேனிற்காலத்தில் குடித்துவர, உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
வயிற்றுப் புண்களைக் குறைப்பதற்கான சிறந்த பானம் இது. கற்றாழைக் கூழுடன் சிறிது கடுக்காய்ப் பொடி தூவி, ஒரு பாத்திரத்தில் வைக்க சில மணி நேரத்தில் வடியும் சாற்றைப் பானமாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். விந்தின் தரத்தை அதிகரிக்க, பாலில் ஊறவைத்த காற்றாழைச் சோற்றைச் சாப்பிட்டும் வரலாம்.
மருந்தாக: கற்றாழையில் உள்ள கொலாஜென், எலாஸ்டின் போன்றவை புரதங்களின் உற்பத்தியை அதிகரித்து, தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தைத் தள்ளிப்போடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வீக்கமுறுக்கி செய்கையுடைய Cglycosyl chromone எனும் பொருள் கற்றாழையிலிருந்து சமீபத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. வலி உண்டாக்கும் பிராடிகைனினுடைய (Bradykinin) செயல்பாட்டைத் தடுத்து, உடனடி வலிநிவாரணியாக இது செயல்படுவதையும் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக ஆய்விதழ் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. கற்றாழையை நன்றாக உலரவைத்து வற்றலாகவோ பொடியாகவோ உணவில் சேர்த்துவந்தால், ‘முதுமையிலும் இளமை காணலாம்’ எனும் காயகல்ப முறையைப் பற்றி சித்தர் தேரையர் வலியுறுத்துகிறார்.
வீட்டு மருந்தாக: கற்றாழையோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துத் தலை முழுக, நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது. வாரம் ஒருமுறை கற்றாழைக் கூழோடு சிறிது உப்பு சேர்த்து வாய்க் கொப்பளித்து வர பற்கள் பலமாகும்.
ஈறுகளிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். நெருப்பு சுட்ட புண்களுக்கு வாழை இலையோடு சேர்த்து, கற்றாழையைப் பயன்படுத்தலாம். கை, கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சலைக் குறைப்பதிலும் கற்றாழையைக்கொண்டு தயாரிக்கும் மருந்துகள் பலன் தரக்கூடியவை.
அழகு தர: முகப் பொலிவை மெருகேற்ற வேதியியல் கலவைகள் நிறைந்த செயற்கை கிரீம்களுக்கான சிறந்த மாற்று கற்றாழை. மேல்தோலைச் சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை முகத்தில் நாள்தோறும் தடவிவர, கற்றாழையைப் போல விரைவில் முகமும் பொலிவடையும். கிரீம்கள், சோப்பு போன்ற செயற்கை அழகுசாதனப் பொருட்கள், கற்றாழையின் சத்து இல்லாமல் முழுமையடையாது.
நேரடியாக சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க (Sun screen) காற்றாழைக் கூழைப் பூசிக்கொள்ளலாம். உடலில் தேய்த்துக் குளிக்கவும் கற்றாழையைப் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் கற்றாழையைப் பூசிவர, தோல் நீர்த்தன்மை பெற்று தேகம் புத்துணர்ச்சி பெறும். தோலில் சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.
கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுப்பதால், கற்றாழை ‘பெண்களுக்கான வரப்பிரசாதம்!’. மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலியைக் குறைக்க, கற்றாழைச் சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுப்பது வழக்கம்.
கர்ப்பிணிகளின் உடற்சூட்டைத் தணிக்க, சுகப்பிரசவத்தைத் தூண்ட உதவும் ‘பாவனபஞ்சாங்குல தைல’த்தில் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழையைக் கொண்டு தயாரிக்கப்படும் பெண்களுக்கான சித்த மருந்துகளின் எண்ணிக்கையோ அதிகம்.

ஆசனவாய் சார்ந்த நோய்களைத் தடுக்க உதவும் ‘குமரி எண்ணெய்’, கருப்பைக்கு வலுவூட்டும் ‘குமரி லேகியம்’ என சித்த மருந்துகளில் கற்றாழையின் பங்கு அதிகம். அதிவெப்பம் காரணமாகக் கண்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க, சிறுதுண்டு கற்றாழையைக் கண்களின் மீது வைத்துக் கட்டலாம்.
கற்றாழை மடல்களுக்கு இடையில் இரவு முழுவதும் வைத்து முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டுவர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். கற்றாழையின் உலர்ந்த பாலுக்குக் கரியபோளம், மூசாம்பரம் போன்ற பெயர்கள் உள்ளன. கருப்பையில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு முக்கிய மருந்தாக கரியபோளம் பயன்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய மூலிகைப் பட்டியலில் கற்றாழையும் ஒன்று. வளமான மண்ணும் சிறிது நீர் வளமும் இருந்தால், கற்றாழைகள் செழிப்பான வளர்ச்சியைக் கொடுக்கும். விரைவில் தாய்க் கற்றாழையைச் சுற்றி உருவெடுக்கும் பல அழகான ‘கற்றாழைக் குழந்தை’களை ரசிக்க இருகண்கள் போதாது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.