மூளைக்காய்ச்சல்-தாமதிக்கும் ஒவ்வொரு நி&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து!

மூளைக்காய்ச்சல்

உடல் தட்பவெப்பநிலையின் சமநிலை குலைந்து வெப்பம் அதிகரிப்பதை காய்ச்சல் என்கிறோம். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை கிருமிகள் மூலம் பரவக்கூடியவை. நாம் சுவாசிக்கிற காற்றில் எண்ணற்ற கிருமிகள் பரவிக்கிடக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத சூழலில் அக்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறோம்.

இப்படி பரவக்கூடிய காய்ச்சல்களில் உயிருக்கு உலை வைக்கும் அபாயகரமான காய்ச்சல்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மூளைக்காய்ச்சல். உடனடி சிகிச்சை மேற்கொள்ளாத நிலையில் உயிரையே பறித்து விடும் மூளைக்காய்ச்சல் பற்றி விளக்குகிறார் நரம்பியல் நிபுணர் எஸ்.பாலசுப்ரமணியம்.

‘‘மூளைக்காய்ச்சல் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் காசநோய் கிருமித் தாக்குதலால் ஏற்படுகிறது. மிகவும் அரிதாக புற்றுநோய் பாதிப்பு கூட மூளைக்காய்ச்சலுக்கு காரணமாக அமையும். மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காற்றின் மூலமும் கொசுவின் மூலமும் பரவக்கூடியவை. மூளைக்காய்ச்சல் உள்ளவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் கிருமி அருகில் இருப்பவரிடம் பரவி விடுகிறது. மூளைக்காய்ச்சலில் ஒரு வகையான Japanese encephalitis வைரஸ், பன்றியில் உற்பத்தி யாகி, பன்றியைக் கடிக்கும் கொசு நம்மையும் கடிக்கும்போது நமக்கும் பரவி விடுகிறது.

அப்படி பரவும் கிருமிகள் தொண்டையில் தங்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அக்கிருமிகள், மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள ட்யூரா மேட்டர், அரக்னாய்ட் மேட்டர், பயா மேட்டர் ஆகிய சவ்வுகளை தாக்குகின்றன. இதனால் கழுத்தைத் திருப்பும்போது அதிகமான வலி ஏற்படும். இதற்கு Meningitis என்று பெயர். மூளைச் சவ்வில்லாமல் நேரடியாக மூளையைத் தாக்கினால் அதற்கு Encephalitis என்று பெயர். மூளைச்சவ்வு மற்றும் மூளை ஆகிய இரண்டையும் தாக்கும் நிலையில் அது Meningoencephalitis என்று சொல்லப்படுகிறது.

உடலில் புகும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும் உறுப்பைப் பொறுத்து நோய்கள் வேறுபடுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் பெரும்பாலும் குழந்தைகளும், வயதானவர்களுமே மூளைக்காய்ச்சலுக்கு ஆளாகிறார்கள். கழுத்து வலி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கம் ஆகியவை மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தவுடனே மருத்துவ பரிசோதனையை நாடுவது நல்லது. மூளைக்காய்ச்சல் உயிரைப் பறிக்கக்கூடிய அளவு அபாயகரமானது என்பதால் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்துதான்.

ரத்தம் மற்றும் தண்டுவடத்தில் உள்ள நீர் ஆகியவற்றைப் பரிசோதிப்பதன் மூலமும், மூளைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதன் மூலமும் மூளைக்காய்ச்சலை உறுதி செய்யலாம். தண்டு வட நீரில் கிருமித் தொற்று இருப்பதை உடனே கண்டறிந்து விட்டாலும் என்ன கிருமி என்பதை கண்டறிய 3 நாட்கள் வரை ஆகும்.

ஆகவே அதுவரை காத்துக் கொண்டிருக்காமல் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டாலே, மூளைக்காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அக்கிருமிகள் வேகமாக மூளை முழுவதும் பரவிவிடும்.

மூளைக்காய்ச்சல் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில் ஆன்டிபயாடிக், ஆன்டி வைரல் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலம் குணப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முற்றிவிட்ட நிலையில் காப்பாற்றுவது கடினமாகி விடும்.

கிருமித் தாக்குதலின் காரணமாக மூளைக்குள் நீர் கோர்த்திருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டும். மூளை என்பது நரம்பு மண்டலத்தின் தலைமையகமாகச் செயல்படுகிறது. ஆகவே மூளைக்காய்ச்சலுக்கு ஆளாகி குணமடைந்தாலும் அதன் பக்க விளைவாக நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். வலிப்பு நோய் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம், ஞாபக மறதி மற்றும் காது கேளாமை ஏற்படலாம்.

மூளைக்காய்ச்சலிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. Arthropod Borne என்று சொல்லக்கூடிய கொசு மற்றும் ஒட்டுண்ணிகளின் காரணமாகவே இந்நோய் அதிகளவில் பரவுகிறது. கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள க்யாசனூர் வனப்பகுதியில் பரவிய மூளைக்காய்ச்சலுக்கு kyasanur forest disease என்று பெயர். இப்படி வாழிடங்களுக்கு ஏற்றாற்போல நோயின் வகையும் தன்மையும் மாறுபடும்.

எல்லாக் கிருமிகளும் எல்லா வயதினரையும் தாக்காது. வயதுக்கு ஏற்றபடி பாதிப்புகள் இருக்கும். உதாரணத்துக்கு Pneumococcal Meningitis காய்ச்சலில்தான் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவத்தினர் முதல் வாலிபப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்த பாக்டீரியா தாக்குகிறது.

Japanese encephalitis என்கிற மூளைக்காய்ச்சலும் இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் 18 ஆயிரத்து 170 பேர் இக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டதில் 3 ஆயிரத்து 71 பேர் உயிரிழந்துள்ளனர் (அஸாம் 1,780/9,063, பீகார் 997/3574, மேற்குவங்காளம் 836/6,855).

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாக 2 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டு, 123 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 2/1,008, ஆந்திரா 20/673, கேரளா 30/239, மஹாராஷ்டிரா 46/115. இப்படியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிற நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்துக்கு நாம் ஆளாகியுள்ளோம். முடிந்தவரை எல்லாவற்றிலும் பாதுகாப்பாக இருந்து கொள்கிற முனைப்பு இருக்க வேண்டும்.

அப்போதுதான் மூளைக்காய்ச்சல் போன்ற கிருமித் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க இயலும். பொதுவாக காய்ச்சல் இருப்பவர்களிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். முகத்துக்கு நேராக பேசுகையில் அவர்களிடம் உள்ள கிருமிகள் நேரடியாக நம்மைத் தாக்கும். பொது இடங்களில் எவரேனும் இருமினாலும், தும்மினாலும் அந்த இடத்தை விட்டு சற்றுத் தள்ளி நகர்ந்து சென்றுவிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே இது தாக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் வகையில் உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகள் குழந்தைகளுக்குப் போடப்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் மூலம் வட மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மூளைக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’’ என்கிறார் டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியம்.

மூளைக்காய்ச்சல் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில் ஆன்டிபயாடிக், ஆன்டி வைரல் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலம் குணப்படுத்து வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முற்றிவிட்ட நிலையில் காப்பாற்றுவது கடினமாகி விடும்.


கேப்ஸ்யூல்


கலர் கலர்
வாட் கலர்...

டூத் பேஸ்ட்டில் இருக்கும் குறியீட்டை வைத்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்கள். இது உண்மையா?

பல் மருத்துவர் சங்கீத் ரெட்டி...‘‘டூத் பேஸ்ட் எந்த முறையில் தயாரானது என்பதை குறிக்க சிறிய கட்டம் ஒன்று டூத் பேஸ்ட்டின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று இணையதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

பச்சை நிற கட்டமாக இருந்தால் 98 சதவிகிதம் இயற்கையானது, ஊதா நிறம் இயற்கையானது மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது, சிவப்பு நிறம் இயற்கையான முறை மற்றும் வேதிப் பொருட்கள் கலந்தது, கருப்பு நிற கட்டம் கொண்ட டூத் பேஸ்ட் முழுக்க வேதிப்பொருட்களால் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள்.

அதனால் பச்சை நிறமும், ஊதா நிற கட்டம் கொண்ட டூத் பேஸ்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் நிறைய பகிரப்படுகின்றன.

ஆனால், இந்த Toothpaste color code பற்றி எந்த ஆதாரப்பூர்வமான தகவலும் மருத்துவ உலகில் இல்லை. இது முழுக்க வதந்திதான். டூத் பேஸ்ட் வாங்கும்போது முடிந்தவரை நம்பகமான பிராண்டுகளை வாங்கலாம். முடிந்தால் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று டூத் பேஸ்ட் வாங்குவது இன்னும்
பாதுகாப்பானது!’’

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.