மெனிக்யூர் - Manicure

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மெனிக்யூர்


கீதா அஷோக்

கைகளை அழகுப்படுத்துகிற ஒரு சிகிச்சைதான் மெனிக்யூர். அழகுப் பராமரிப்பு என்று வருகிற போது பெரும்பாலும் எல்லோரும் முதலில் முகத்துக்கும், அடுத்து கூந்தலுக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சருமம் சிவப்பாக, இளமையாக, பருக்களோ, மருக்களோ இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

கூந்தல் கருகருவென, நீளமாக, அடர்த்தியாக, அலை அலையாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள். அதிகம் புறக்கணிக்கப்படுபவை கைகளும் கால்களும்தான். உண்மையில் முகத்துக்கும் கூந்தலுக்கும் இணையாக கைகளும் கால்களும் நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டியவை. அழகுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்காகவும்தான்!
கைகளுக்கான அழகு சிகிச்சையான மெனிக்யூர் செய்யும் அடிப்படை, வீட்டிலேயே செய்கிற முறைகள் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.


அழகு என்று பார்த்தால் வயோதிகத்தின் முதல் அடையாளங்கள் கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில்தான் தெரியும். சுருக்கங்களுடன் ஒருவரின் கைகளைப் பார்த்தாலே அவர்களது வயது அதிகமோ என்று தோன்றும். கைகளை முறையாகப் பராமரிக்காவிட்டால் சீக்கிரமே அவற்றில் முதுமை தெரியும். பிரபலமான பல நடிகைகளுக்குக் கூட முகம் அவ்வளவு அழகாக இருக்கும். கைகளோ வயதானவை போல காட்சியளிக்கும். கைகளுக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததன் அலட்சியம்தான் அது. நகங்கள் பழுதடைந்து உடைகிற போது அதுவும் உடலினுள் ஏதோ ஆரோக்கியக் குறைபாடு இருப்பதன் அறிகுறி. வைட்டமின் பற்றாக்குறையோ, சத்துக் குறைபாடோ இருக்கிறது என உணர்ந்து கொள்ளலாம்.கைகளில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். சிலருக்கு கைகளில் அரிப்பு இருக்கும். கைகளின் சருமம் கருப்பாக இருக்கும். இதைத் தாண்டி சிலருக்கு வின்ட்டர் ஆர்த்ரைடிஸ் எனப்படுகிற பிரச்னை வரலாம். குளிர்காலத்தில் அல்லது குளிர்ச்சியான சூழ்நிலையின் போது, அதாவது, மழை பெய்தால்கூட கைகளில், குறிப்பாக விரல் இணைப்புகளில் வலி வந்துவிடும். இப்படி அழகு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் மெனிக்யூர் உதவி செய்யும். மெனிக்யூரை, அவரவர் தேவைக்கேற்ப டிசைன் செய்து கொள்ள முடியும். வெறும் அழகுக்காக செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு அதற்கான பொருட்களை வைத்துச் செய்யலாம். அதுவே கைகளில் ஏற்படுகிற நிறமாற்றம், வலி போன்ற பிரச்னைகளுக்கு என்றால் அதற்கேற்றவாறு வேறு பொருட்களை, அரோமா ஆயில்களை வைத்து மெனிக்யூர் செய்யலாம்.

மெனிக்யூர் செய்யத் தேவையான கருவிகள்...

நெயில் புஷ்ஷர், நெயில் ஃபைலர், நெயில் கிளீனர், ஃபிங்கர் பிரஷ் என மெனிக்யூருக்கு தேவையான சில அடிப்படையான கருவிகள் உள்ளன. நகங்களை சுத்தப்படுத்த, நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற, கியூட்டிகிள் எனப்படுகிற எக்ஸ்ட்ரா சதை வளர்ச்சியை அகற்றவெல்லாம் மேற்சொன்ன கருவிகள் அவசியம். இவற்றைத் தாண்டி, மெனிக்யூரின் அடிப்படையான கைகளை ஊற வைப்பதற்கு என்ன பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். மெனிக்யூர் என்றால் கைகளின் மணிக்கட்டு வரை சிகிச்சை எடுப்பதுதான் எனப் பலரும் நினைக்கிறார்கள். கைகள் முழுவதற்குமான தெரபியாக கொடுக்கும் போதுதான் மெனிக்யூரின் உண்மையான பலன் கிடைக்கும்.

முதலில் கைகளை ஊற வைப்பதற்கு முன் கைகளுக்கு பேக் போடுவோம். அதற்கு முன் கைகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். இறந்த செல்களை அகற்ற டெட் செல் எக்ஸ்ஃபோலியேட்டர் எனப்படுவதை, அதாவது, இறந்த செல்களை அகற்றக்கூடிய க்ரீம் இருந்தால் உபயோகிக்கலாம். அது இல்லை என்பவர்கள் சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய், நல்ெலண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் என ஏதேனும் ஒன்றை எடுத்துக் கைகளில் தடவிக் கொள்ளவும். கைகளில் எண்ணெய்ப் பசை இருக்கும் போதே, பவுடர் செய்த சர்க்கரையை அதன் மேல் வைத்து நன்கு தேய்க்கவும். வட்ட வடிவமான மசாஜ் செய்து கைகளில் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் கழுவும் போது கைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி விடும். இறந்த செல்கள் வெளியேறினாலே கைகளுக்கு உடனடியாக ஒரு பொலிவு உண்டாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கைகள் மென்மையாகும்.அதன் பிறகு கைகளுக்கு போடக்கூடிய பேக். அது எந்தப் பிரச்னைக்கானது எனப் பார்க்க வேண்டும். கைகளுக்கு ஒரு ஈரப்பதம் வேண்டும் என நினைத்தால் பொடித்த பனை சர்க்கரை (இது நாட்டு மருந்துக் கடைகள் மற்றும் ஆர்கானிக் கடைகளில் கிடைக்கிறது) 2 டீஸ்பூன் எடுத்து, ஒன்றரை டீஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கரையும் வரை கலக்கவும். அது க்ரீம் மாதிரி வர வேண்டும். அதில் 10 முதல் 15 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். 2 சிட்டிகை டேபிள் சால்ட் போட்டு அந்தக் கரைசலை கைகள் முழுக்கத் தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து கழுவலாம். சூப்பர் மார்க்கெட்டுகளில் கோகோ பவுடர் கிடைக்கும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் 50 கிராம் வெண்ணெய் சேர்த்து, அது உருகும் போது 50 கிராம் கோகோ பவுடர் போட்டுக் கிளறவும். அது பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கிண்டவும். பிறகு அதில் 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆற விடவும். ரொம்பவும் கெட்டியாகிவிடக்கூடாது. ஒட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அதில் 5 சொட்டு லேவண்டர் ஆயில், 5 சொட்டு யிலாங் யிலாங் ஆயில் கலந்து தேன் பதத்துக்கு வந்ததும் 10 மி.லி. கிளிசரின் சேர்க்கவும். தட்டையான பிரஷ் எடுத்து இதைத் தொட்டு கைகளில் தடவி, 15 நிமிடங்கள் கைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஓய்வெடுத்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும்.

பிறகு கைகளை ஊற வைக்க வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் 1 கைப்பிடி எப்சம் சால்ட் சேர்க்கவும். 1 கைப்பிடி மூன் ஸ்டோன் எனப்படுகிற ஒரு வகை உப்பையும் சேர்க்கவும். இது கைகளுக்கு பிரமாதமான ஒரு மென்மையையும் பளபளப்பையும் கொடுக்கக்கூடியது. இது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. பிறகு சமையலுக்கு உபயோகிக்கும் கல் உப்பு 1 கைப்பிடி சேர்த்து, 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் 1 டீஸ்பூன் தேனும் 2 டீஸ்பூன் கிளிசரின் சேர்க்கவும். 1 டீஸ்பூன் பூந்திக் கொட்டைதூள் சேர்க்கவும். 10 மி.லி. ஆப்பிள் சிடர் வினிகர் விடவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து அதில் கைகளை நன்கு ஊற வைக்கவும். இது கைகள், நகங்களில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் எல்லாவற்றையும் எடுத்து விடும். அந்தத் தண்ணீர் முழுக்க குளிர்ந்ததும் கைகளை எடுத்து கழுவி விடுங்கள். இப்போது உங்கள் கைகள் அழகு கொஞ்சும் அளவுக்கு மென்மையாக மாறியிருக்கும். இது அழகுக்கான சிகிச்சை.

இதையே ஆரோக்கியமான மெனிக்யூராக மாற்றலாம். இதே கரைசலில் 10 சொட்டு பிளாக் பெப்பர் ஆயில், 10 சொட்டு கேம்ஃப்பர் ஆயில், 10 சொட்டு டீ ட்ரீ ஆயில், 10 சொட்டு பெர்கமாட் ஆயில் எல்லாம் கலந்து இதில் கைகளை ஊற வைக்கும் போது, வின்ட்டர் ஆர்த்ரைடிஸ் எனப்படுகிற பிரச்னை அப்படியே காணாமல் போகும். வாரத்தில் 3 நாட்கள் இதைச் செய்ய, கைகளில் உள்ள வலி குறைந்து நிவாரணம் கிடைப்பதை உணரலாம்.

"நகங்கள் பழுதடைந்து உடைகிற போது அதுவும் உடலினுள் ஏதோ ஆரோக்கியக் குறைபாடு இருப்பதன் அறிகுறி. வைட்டமின் பற்றாக்குறையோ, சத்துக் குறைபாடோ இருக்கிறது என உணர்ந்து கொள்ளலாம்."

"கைகள் முழுவதற்குமான தெரபியாக கொடுக்கும் போதுதான் மெனிக்யூரின் உண்மையான பலன் கிடைக்கும்."
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.