ராட்சச ரகசியம் - Ratchasa Ragasiyam By Ambara Santham

Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#11
Post 008:
அத்தியாயம் ஐந்து – சௌரிய சிறைச்சாலை

ஒரு காவல் நிலையத்தின் தற்காலிகச் சிறை.

இச்சிறைக்கு தரை, கூரை, மற்றும் மூன்று சுற்றுச் சுவர்கள் மட்டுமே. முன்பக்கம் சுவரில்லாமல் காவல் நிலையத்தின் உள்நடைபாதையுடன் திறந்தவண்ணம் சேர்ந்திருக்கிறது. உயரே ஒரே ஒரு ஜன்னல். பொழுது விடிவதற்கு ஒரு ஜாமமிருக்கும் இவ்வேளையில் அதன் வழியாய் கரைமுகப் பிறைச்சந்திரன் சிலந்திவலை திரைமுகிற்பின் இறைகாவல் கேளாமல் சிறைவாசிக்கு துணையளிக்கிறான்.

இவ்வறையில் விளக்குகள் ஏதும் இல்லை. ஆனால் சுவர்களும் கூரையும் மங்கலான மஞ்சள் ஒளியில் ஒளிர்கின்றன. குறிப்பிடத்தக்க வேறொன்றும் இங்கு இல்லை.

சிறையின் மூலையில் ஒரு ஆசனம். அதன்முன் ஒரு மேசை. இரண்டுமே நகர்த்த முடியாதபடி தரையுடன் பொருத்தப்பட்டிருக்கின்றன.

சிறைவாசி கமல்யா. தனியாய் இருக்கிறாள். ஆசனத்தில் அமராமல் சுவற்றில் சாய்ந்து முட்டிக்கால்களை கட்டிக்கொண்டு தரையில் உட்கார்ந்திருக்கிறாள், ஏதோ ஆழ்ந்த யோசனையில்.

அவள் சிறையை விட்டு வெளியே தப்பியோடாமல் இருக்க எந்தவிதமான கட்டோ, விலங்கோ, சங்கிலியோ காணப்படவில்லை. என்ன அதிசயம் என்று நினைப்போம். அவள் விரும்பியேதான் சிறையில் அடைந்து கிடக்கிறாளா? இக்காவல்நிலையத்தில் எல்லா கைதிகளுமே அப்படித்தானா என்று வியப்பு கலந்த ஆர்வத்துடன் சிந்திக்கிறோம். இந்த கேள்விகளுக்கான விடை சற்றுநேரத்தில் நமக்குத் தெரியவரும்.

அப்பொழுது நடைபாதையில் ஏதோ சலசலவென ஓசை. கமல்யா நிமிர்ந்து பார்க்கிறாள். வெளியே வந்தது அதமந்தி.

கமல்யாவின் கண்களில் நம்பிக்கை தெரியவில்லை. ஒரு புரியாபுதிரின் விளக்கம் தேடும் ஆர்வம்தான்.

“அதமந்தி!”

“ஷ் ஷ்!” என சுற்றுமுற்றும் பார்த்து எச்சரிப்பது போல் தன் உதட்டின் மீது விரலை வைக்கிறான். பின் ரகசியம் பேசுவதுபோல் மெல்லிய குரலில் ஓதுகிறான்:

“ஆம் கமலி. நான்தான். ஆச்சரியப்படாதே.”

கமல்யா எழுந்து அவனை நோக்கிச் செல்கிறாள். நெருங்கும்போதுதான் நமக்கு காணாமற்போன நான்காம் சுவர் எங்கே என்று புரிகிறது. சிறைவாசல் பக்கம் இருக்கவேண்டிய அந்த சுவர் ‘ர்ர்ர்’ என மின்சாரம் பாயும் ஓசையுடன் தோன்றுகிறது. அதைக்கண்ட கமல்யா ஓரடி பின்வைக்க சுவர் மறுபடியும் மறைகிறது. அவளால் அதமந்தியை காணமுடிகிறது ஆனால் இருவருக்கும் இடையே சுவரும் உள்ளது.


1527401757161.png

“நீ கைது செய்யப்பட்டாய் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. மரமண்டை மாருவுடன் பேசினேன். நடந்த அனைத்தையும் புரிந்துகொண்டேன்.”

இரு நொடி மௌனம் கொண்டு பின் தொடர்கிறான்.

“கமலி – நான் பழைய கதையை மறந்து மனம்மாறி பல்லாண்டுகள் ஆயிற்று. உன்னிடம் நேராக வந்து உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்லத் துணிவில்லாமலே காலம் கழித்து விட்டேன். ஆனால் நீ இப்படி ஒரு காரியம் ஏன் செய்தாய்? அதுவும் அந்த வெறிநாய் மாருவிடம் அகப்படுவதுபோல்!”

கமல்யா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் அவனை கண்குருகிப் பார்க்கிறாள். ‘நீ நிஜமாகவே இந்த விஷயத்தில் நான் குற்றவாளி என்று நினைக்கிறாயா?’ என்பதைப் போன்றிருந்தது அந்தப் பார்வை. அந்தப் பார்வையின் பொருளறிந்த அதமந்தி விளக்கம் தரத் துவங்கினான்.

“இல்லை இல்லை கமலி. நான் அப்படி நினைப்பேன் என்று கனவிலே கூட சந்தேகிக்காதே. ஆனால் அந்த மாரு… அவன் ஒரு பேதையாக இருந்தாலும் பேராசைக்கொண்ட பேதை. லட்சியவாதியும் கூட. அவன்போல் துடுக்கான லட்சியவாதியை அலட்சியப்படுத்துவது ஆபத்தான செயல்…

... நான் அவனை வேலைக்கு நியமித்ததிலிருந்து விசனப்படாத நாளில்லை! ஆனால், அவனுக்கு பெரிய இடங்களில் ஆட்களைத் தெரியும். என் வேலையின் மீதே இப்பொழுது கண்ணை வைத்துவிட்டான் அந்தப் பாதகன்…

... பசியுண்ட பாம்பு எலிப்பொந்தருகில் பொறுமையுடன் விருந்துண்ணக் காத்திருப்பது போல்…

... படுபாவி மாரு என் இதயத்தினருகில் இருப்பதென்ன என்றறிந்து என் மனோபலத்தை உடைக்க பலவீனமான நேரத்தில் தாக்கிவிட்டான். அவன் உன்மீது புரளி கிளப்பி நீ அரக்கர்களின் உளவாள் என பல போலி ஆதாரங்களைத் தயாரித்து உங்களனைவருக்கும் மரண தண்டனை கிடைக்குமாறு திட்டமிட்டிருக்கிறான். அவன்மீது நான் சந்தேகப்பட்டதால் அவனைச் சார்ந்த விஷயங்களை கண்காணிக்க ஒரு ஒற்றனைப் பயன்படுத்தியிருந்தேன். ஒற்றன் தந்த விவரங்களிலிருந்து இவனது தீய திட்டத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன்...

... நான் அவனை வேலையிலிருந்து நீக்க ஏதாவது ஒரு காரணத்தை சதா தேடிகொண்டிருந்தேன். இப்பொழுது அது கிட்டிவிட்டது எனத் தோன்றுகிறது… ஒரே கல்லில் இரு பழங்கள்! கமலி, நீ என்னுடன் ஒத்துழைப்பாயானால்...”

சில வினாடிகள் அங்கே அர்த்தமுள்ள மௌனம் நிலவுகிறது. அதமந்தி கமல்யாவின் கண்களுக்குள் ஆழ்ந்து பார்க்கிறான்.

“... உன்னையும் விடுவித்து, அதே சமயத்தில் அந்த சண்டாளனையும் வெளியேற்ற முடியும்…”

மெய்மறக்கவைக்கும் மரகத விழிகளில் நீர்ததும்ப கமல்யாவைக் கெஞ்சுவதுபோல் பார்க்கிறான்.

“... என்னால் இந்தக்கோலத்தில் உன்னைக் காண இயலவில்லை கமலி.”

கமல்யாவோ மௌனமாக தரையை பார்த்துக் கொண்டிருக்கிறாள். பின்னர் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்து பழைய கதையை எழுப்புகிறாள்.

“அதமந்தி. நீ சொல்வதெல்லாம் சரி. ஆனால் உன் திடீர் மனமாற்றம்தான் எனக்குப் புரியவில்லை. சென்ற நூற்றாண்டு நான் உன் காலில்விழாத குறையாய் என்னை மன்னித்துவிடு என்று கதறியபோதும் நீ மனமிறங்காமல் முகம்திருப்பிச் சென்றாயே. ஒரு நாள் என்னை பழிவாங்கி நீ கண்ட துக்கத்தை என்னையும் காணவைப்பேன் என்று சபதம் செய்தாயே...

... அப்போது நான் செய்த பெருந்தவறை உணர்ந்து பழைய கமல்யாவை நானே கொல்வேனென முடிவெடுத்தேன். கடந்த காலத்தையெல்லாம் மறக்க முயன்று என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கினேன். ஆனால் உன் மனதை நான் எவ்வளவு ஆழமாய்த் துன்புறுத்தியிருப்பேன் என்ற எண்ணம் பலநாட்களுக்கு என்னை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது…”

கமல்யா சற்றே தயங்கி தரையைப் பார்க்கிறாள்.

“... லூமா பிறந்தபின்தான் ...”

லூமா என்ற பெயரைக் கேட்டவுடன் ஒரு க்ஷணம் அதமந்தியின் முகம் கல்லாகிறது. ஆனால் கமல்யா அதைக் கவனிப்பதற்கு முன் மறுபடியும் சாந்தமடைகிறது.

கமல்யா தொடர்கிறாள்: “... லூமா பிறந்தபின்தான் ... என்னால் புதுவாழ்க்கை தொடங்க முடிந்தது. நீ என்றும் என்னை மன்னிக்க மாட்டாய் என்றும் எனக்கு உன் மன்னிப்பைப் பெறுவதற்கும் அருகதை இல்லையென உள்ளூர ஏற்றுக்கொண்டேன்… ஆனால் இப்போது… எனக்கு ஒன்றும் புரியவில்லை அதமந்தி!”

“புரியவேண்டிய அவசியமில்லை கமலி. நான்தான் சொன்னேனே. என்னால் உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கமுடியவில்லை என்று. நான் செய்வது என் சுயநலத்திற்காகவென்றே வைத்துக்கொள்ளேன்…

... என்றுமே நான் உன் காதலன்தான், உன்னை மனமாரக் காதலிப்பதை தவிர்க்க முடியாது என்பதை நிதமும் உணர்கிறேன் கமலி.”

சில வினாடிகளுக்கு அர்த்தமுள்ள மௌனம். கமல்யாவின் ஆழ்கடல் போன்ற கண்களுக்குள் குதித்து அவளுடைய உள்ளத்தை நோக்கி நீந்திச் செல்வது போலப் பார்க்கிறான்.

“தயவுசெய்து ஒத்துழைக்கிறாயா கமலி?”

கமல்யா பெருமூச்சு விடுகிறாள்.

“சரியென்று சொன்னாலும் என்னால் என்ன செய்யமுடியும்? என் நிலையைத்தான் நீ கண்கூடாய் காண்கிறாயே! சௌரிய நீதிமன்றம் எவ்வளவு விரைவாக முடிவெடுத்து நீதி வழங்குமென்பது உனக்குத் தெரியாதா? ஒரு நிரபராதி மாண்டாலும் ஒரு குற்றவாளி தப்பக்கூடாது என்ற தத்துவத்தில் ஊறிய சபையில் நீ சொன்னபடி சாட்சிகளுடன் ஒரு பெருங்குற்றம் சாட்டப்படவிருக்கும் என் குரலுக்கு மதிப்பேது?”

ஒரு வினாடி நிசப்தம். ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். அதமந்தி பேசத் துவங்குவதற்குள் கமல்யா மீண்டும் தொடர்கிறாள்.

“அதமந்தி, நீ என்னை மன்னித்திருக்கலாம். ஆனால், என்னை நானே இன்னும் முழுதும் மன்னிக்கவில்லை என்று உனக்குத் தெரியாது. எனக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ள நான் தயார். ஏன்! மரணதண்டனை விதித்தாலும் அதுவே என் விடுதலை எனக் கருதுவேன். நான் செய்த தவறுகளுக்கெல்லாம் கடைசியில் ஒரு தண்டனை கிட்டிவிட்டது என்று எண்ணி கர்மப்பலனை கரைத்த காந்தையென நம்பி மரணத்தை மனப்பூர்வமாக வரவேற்பேன். என் உள்ளம் சாந்தியடையும்…”

ஒரு வினாடி ஏதோ தன்னை மறந்து யோசிப்பதுபோல் தயங்கியபின் தொடர்கிறாள்:

“... ஆனால் லூமா ...”

மீண்டும் லூமாவின் பெயரைக் கேட்டவுடன் அதமந்தியை விரக்தி தழுவுகிறது. ஆனால் அதை வெளிகாட்டாது கட்டுப்படுத்துகிறான். கமல்யா தொடர்கிறாள்.

“... ஆனால் லூமா … அவன் ஒன்றும் தெரியாத சிறுவன். சாது. அவனுக்கு ஒரு ஆபத்தும் வராமல் நீ பாதுகாத்தால் போதும்.”

“சீச்சீ. இப்படியெல்லாம் பேசாதே கமலி. நான் சொல்வதைக்கேள். இன்று காலை உன் விசாரணை நடக்கப்போவதாக நிச்சயமாகியிருக்கிறது. விசாரணையின் போது நடுவர்குழுவிடம் என் மீது நீ பழியைப் போட வேண்டும். ஆனால் கவலைப்படாதே. எனக்கொன்றும் ஆகாது. அதற்கொரு திட்டம் வைத்திருக்கிறேன். என்னை விசாரிக்கும் போது நான் சொல்வேன்:

‘நான் சொல்லிதான் நீ அந்த அரக்கனுக்கு உதவி செய்வதுபோல் நடித்தாய். நான் அவனைப் பயன்படுத்தி அரக்கர் குல சதி ஒன்றை வெளிப்படுத்தத் திட்டமிட்டிருந்தேன். நீ என்னுடன் அதற்காக ஒத்துழைத்தாய், எல்லாம் திட்டப்படி நன்றாய் நடந்துக்கொண்டிருக்கும்போது மடையன் மாரு முட்டாள்த்தனமாக குட்டையைக் குழப்பி பலமாதம் பாடுபட்டுத் தீட்டிய திட்டத்தை கவிழ்த்துக் குலைத்து விட்டான்.’ என்று…

மாருவின் மகாரதம் அதோடு மடியும். நீயும் தண்டனைக்குப்பதில் விருது பெற்று விடுதலையாவாய்.”

முழுதும் கேட்ட கமல்யா ஏமாற்றமடைகிறாள். “அதமந்தி. இத்திட்டம் நிறைவேறினால் அந்த அரக்கர்குலச் சிறுவனின் கதி என்ன? அவன் பெருங்குற்றவாளியென தீர்மானித்துவிட மாட்டார்களா? பாவம், தன் தங்கைக்காக சிகிச்சை தேடி வந்த சிறுவனை சிறைச்சேதம் செய்து இல்லாத கூட்டாளிகளை காட்டிக்கொடுக்கும்வரை சித்திரவதை செய்ய மாட்டார்களா?”

“ஆம் கமலி. நானும் அந்த துரதிருஷ்டவசத்தை எண்ணி வருந்தினேன். ஆனால் இதுவே இரு கேடுகளில் சிறிய கேடு என்ற முடிவுக்கு வந்தேன். என்ன இருந்தாலும் அவன் ஒரு அரக்கன்தானே. நம் சௌரியர்களின் நல்லுயிர் ஒன்றைக் காப்பதற்கு நான் கொடுக்கவேண்டிய அவசியப் பலி என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.”

“ஐயோ. அதுபோல் என்னை நானே சமாதானப்படுத்த முடியவில்லையே. இந்த திட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. வாழ்க்கையில் ஒரு தவறு செய்தே பல்லாண்டுகள் சுமக்கமுடியாத வலியைச் சுமந்து வந்தேன். முடிவில் நேர்மைத்தவறாது அஹிம்சைமிக்க வாழ்வை மெச்சி அதுவே முக்திக்கு உதவும், அவ்வாறே வாழவேண்டுமெனத் தீர்மானித்தேன். நீ சொல்லும்படி செய்தால் இரண்டு அப்பாவி உயிர்கள் மட்டும் மாளாது. என் தேகம் தப்பினாலும் அழியாச்சுடரற்று நடமாடும் பிரேதமாகிவிடும். குற்றமில்லாச் சிறுவர் உயிரிழப்பதைவிட வாழ்க்கையில் தவறிய ஒரு முதியவர் மடிவதே மேல். அதனால் உன் திட்டத்துடன் நான் ஒத்துழைக்க முடியாது அதமந்தி.”

“சற்று பொறு கமலி. அந்த அரக்கனின் உயிரைக்காப்பது உனக்கு அவ்வளவு முக்கியமானால் அவனும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைத்தான் என்று சாட்சியம் சொல்லி அவனையும் விடுவித்து நாடுகடத்த முயற்சிக்கிறேன். சற்றே மேலும் சில கேள்விகளுக்கு நான் பதில்கள் யோசித்துத் தயாரிக்க வேண்டும். அவ்வளவுதான். அது முடியாத காரியமல்ல என்று நினைக்கிறன். இது உனக்குச் சரிதானே?”

“தெரியவில்லை அதமந்தி. என்னால் இனி எந்தவிதப் பொய்யும் சொல்லமுடியாது என்று மட்டும் தெரியும்.”

“உன்னால் மௌனமாக இருக்கமுடியும் அல்லவா? உனக்காக நான் பொய் சொல்கிறேன் கமலி. உனக்காக நான் எதுவும் செய்யத் தயார். உன்னை மன்னித்தபின் உன் மீது கொண்ட கோபம் அளவுக்கு மீறியதென்று உணர்ந்தேன். அந்த குற்ற உணர்வுடன் வாழ்வது எனக்கும் கடும் நரகமாய்த்தான் இருந்தது. நான் செய்யபோவதே என் பிராயச்சித்தம் எனக் கருதுவேன்.”

கமல்யா ஒன்றும் சொல்லாமல் தயங்கினாள். அதமந்தி அவளைக் கெஞ்சும் கண்களால் பார்த்து மீண்டும் உத்தரவாதம் தருகிறான்:

“கவலைப்படாதே கமலி. நீ ஒன்றுமே சொல்லவேண்டாம், ஒன்றுமே செய்யவேண்டாம். மௌனமாக மட்டும் இரு. நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்… இன்று மதியம் நீ விடுதலையான பிறகு விவரமாகப் பேசலாம். பேசுவதற்கு எவ்வளவு இருக்கிறது தெரியுமா? நான் அதை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…”

இது அனைத்தும் ஒரு கனவில் நடைபெறுவது போலவும், கமல்யா அதை வெளியிலிருந்து எவ்வித பாதிப்புமின்றி பார்ப்பது போலவும் முகபாவம் கொண்டு அதமந்தி இருந்த திசை நோக்கிப் பார்க்கிறாள்.

“இப்போது விடைபெறுகிறேன் என்னுயிர் கமலி. மீண்டும் சில ஜாமங்களில் சந்திப்போம்.”

இப்படிக்கூறியவாறே அதமந்தி கமல்யாவின் கண்களைத் தன்பார்வையால் உடும்புப்பிடிபோலப் பிடித்துக்கொண்டு, பின்பக்கமாய் சில அடிகளை மெதுவாக வைத்து நடந்து பின்னர் திரும்பி மெதுவாக வெளியே செல்கிறான்.

கிழக்கு வானத்தின் வைரம்பதித்த கருநீலப் பட்டாடை மெல்ல மெல்லச் சிவந்து பொன் ஜரிகைக் கரை கொள்ளத் துவங்கி இரவு முழுதும் ஜொலித்துழைத்த நட்சத்திரங்களுக்கு ஒன்றொன்றாய் ஓய்வளிக்கிறது.தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#12
Post 009:

அத்தியாயங்கள் ஆறு-எட்டு – எங்கே?

அத்தியாயங்கள் ஆறு முதல் எட்டு வரை எங்கே?

இந்நூலின் முதல் பதிப்பை படித்த நேயர்களின் விருப்பப்படி இந்த மூன்று அத்தியாயங்கள் இப்புத்தகத்தின் பின்னிணைப்பிற்கு நகர்த்தப் பட்டுள்ளன. இவை அதமந்தி, கமல்யாவின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றியவை. அந்த பின்கதையைப் பற்றி நமக்கு தெரியவேண்டியது என்னவென்றால்:

● அந்த காலத்தில் அதமந்தி ஒரு நடிகனாக இருந்தான். சுஷீ என்னும் சகநடிகையிடம் மனதை பறிகொடுத்து அவளுடன் சிற்பா என்னும் பேரழகுவாய்ந்த பெண்குழந்தையைப் பெற்றுக்கொண்டான்.
● சுஷீ ஒரு நாள் காணாமல் போகவே, தன் மகளான சிற்பாவை உயிருக்கு உயிராய் தானே பாதுகாத்து வளர்த்து வந்தான்.
● காலப்போக்கில் அதமந்தி கமல்யாவை சந்திக்க நேர்ந்து அவள் மீது அவனுக்கு மோகமும் பிறந்தது.
● ஆனால் அதமந்தியின் அயலவனான மாலோமணி (மாலூ) என்றவன் மீதுதான் கமல்யாவிற்கு உயிர்க்காதல் பிறந்தது.
● ஒரு நாள் சூர கொள்ளைக்காரன் ஒருவனிடம் மாலூ சிக்கியிருக்கும் போது அதமந்தியின் செய்கையினால் கமல்யாவின் கண்ணெதிரே சூரன் மாலூவின் உயிரை பறிக்க நேர்ந்தது.
● இதற்கு பழியாய் கமல்யா அந்த சூரனினால் சிற்பாவும் உயிரிழக்க காரணமாக இருந்தாள்.
● ஆகவே அதமந்திக்கு கமல்யா மீதிருந்த மோகம் கோபமாய் மாறியது. அவளையும் புத்திரசோகம் அனுபவிக்கவைத்து பழிவாங்க வேண்டும் என்று சபதம் செய்தான்.
● இப்படி இருக்கையில் கமல்யா மாலூவின் குழந்தையுடன் கர்பமாக இருப்பதை உணர்ந்தாள். இந்த குழந்தை தான் லூமா.
● இதற்கிடையே கமல்யாவிற்கு மனமாற்றம் உண்டானது. தனது செயல்களினால் அதமந்திக்கு ஏற்பட்ட துக்கத்தை உணர்ந்து அவனிடம் சென்று மன்னிப்பு தேடினாள். ஆனால் அவனோ சிற்பாவை இழந்த சோகத்தில் தன்னையே இழந்து கமல்யாவை அடியோடு வெறுக்கத் துவங்கினான்.
● இப்படியே பல்லாண்டுகள் ஆயின.தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#13
Part 010:

அத்தியாயம் ஒன்பது – விசாரணை
உயர்நீதிமன்றம் – சௌரியதேசத்தின் மையத்தில் கம்பீரமான அரண்மனை போன்ற சோபை மிகும் மாளிகையில் ஆடம்பரமான சபை. பிரதிபலிக்கும் கண்ணாடிபோல் பளபளப்பாய் மெருக்கிட்ட செம்பளிங்குத் தரை. தூணுக்குத் தூண் பிரமிக்க வைக்கும் விலைமதிப்பிடமுடியாத ரத்தினங்கள் பதிந்த சிற்பங்கள். ஆகாசம் போல் பரந்த உட்கூரையில் கண்களுக்கு விருந்தளிக்கும் பலவித ஜீவகளை சிந்தும் சித்திரங்கள். மகா வட்டச்சுவரில் விசாலமான ஜன்னல்கள். அவை ஒவ்வொன்றிலும் வர்ணக் கண்ணாடிகளாலான அழியாச்சுடரைப் போற்றும் ஓவியங்கள் – இங்கு வந்தவர்கள் விசாரணையை பின்தொடர்வார்களா அல்லது அருங்காட்சிகளை ரசித்து வியப்படைவார்களா என்பதுபோல்.

மேல்நோக்கிப் பார்த்தால் குவிமாடத்தின் அடியில் உட்கூரை அருகில் ஏழு வெண்புறா போன்ற பளிங்குச் சிற்பங்கள், இறக்கைகளை மெல்ல அசைத்து ஒன்றின்பின் ஒன்றாய் வட்ட அமைப்பில் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் வாயில் ஒரு தங்கத் தராசை கவ்விக் கொண்டிருக்கிறது.

சபையில் பெரிய மேடை. மேடையின் மீது சிம்மாசனம் போன்ற இடத்தில் உயராலோசனை சபைத் தலைவரும் நீதிபதியுமான நீதிமான் ஆங்கிபதி என்னும் முதியவர் அமர்ந்திருக்கிறார். வெள்ளி போல் நரைத்த நீண்ட முடியும் தாடியும் கொண்ட இவரின் முகம் அப்படியே ப்ருஹாவை உரித்து வைத்தாற்போல் ஜாடை காட்டுகிறது. தன் கேசம் போலவே வர்ணம் கொண்ட நீண்ட அங்கவஸ்திரத்தினால் கழுத்துவரை போர்த்திக் கொண்டிருக்கிறார்.

ஆங்கிபதியின் இரு பக்கத்திலும் மேஜைகளுக்கு பின்னே ஏழு ஏழு நடுவர்கள் அரைவட்ட அமைப்பில் ஆண்-பெண்-ஆண்-பெண் என மாறி மாறி அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருமே முதியவர்கள்தான். இவர் யாவரும் புன்னகைக்காமல் சோகக்கதைகளைக் கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தவர் போல் முகபாவம் கொண்டவர்கள்.

இவர்களுக்குமுன் அரைவட்டத்தின் உள்ளே மூன்று பளிங்கு அரைக்கூண்டுகள் – அதாவது இடுப்புவரை உயரம் கொண்ட சதுர வேலிகள். தரையிலிருந்து அரையடி உயரத்தில் ஒளி உமிழும் அடிவாரத்துடன் காற்றில் மிதக்கின்றன. முதல் கூண்டில் பாலோப்பியன் நின்று கொண்டிருக்கிறான். நடுக் கூண்டில் கமல்யா. கடைசிக் கூண்டில் லூமா.

1527470250729.png

பல்வேறு பார்வையாளர்கள் இவர்களைக் காணும்வகையில் அரை வட்ட வரிசைகளில் அமைக்கப்பட்ட ஆசனங்களில் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.

வெளிவட்ட வரிசையில் சபையின் மகாகதவிற்கு அடுத்து இருக்கும் ஆசனத்தில் இதுபோல பார்வையாளனாக ப்ருஹா இருக்கிறான். அவன் வலதுபுறம் இருக்கும் மகாகதவிலிருந்து செல்லும் கரும்பளிங்குப் பாதை செம்பளிங்குத் தரையை எடுத்துக்காட்டும் வகையில் பளிச்சென முகம்பார்க்கும் கண்ணாடிபோல் ஜொலித்து நேராக அவன் தந்தை ஆங்கிபதியின் பீடத்தை நோக்கிச் செல்கிறது.

விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதமந்தியை எங்கும் காணவில்லை.

விசாரணையின் ஒருங்கிணைப்பாளன் பல்வேறு சாட்சிகளைக் கூப்பிடுகிறான். அவர்கள் வந்து நடுவர் குழுவிற்கு முன்னின்று கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் வெறுமனே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றி விவாதம் நடந்துகொண்டிருக்கிறதே தவிர அவர்களை யாரும் இதுவரை ஒன்றும் வினவவில்லை.

சாட்சிகள் அனைவரையும் விசாரித்த பிறகு ஒருங்கிணைப்பாளன் கமல்யாவை நோக்கி ஏதாவது சொல்ல விரும்புகிறாளா என்று கேட்கிறான். கமல்யா விதி நினைத்தபடி நடக்கட்டும் என்றபடி இல்லையென மெல்லத் தலையாட்டுகிறாள்.

“நடுவர்குழு யோசித்து தீர்மானிக்க விலகுவதற்குமுன் வேறு யாராவது சாட்சியம் சொல்ல விரும்பினால் இப்போது முன்வரலாம். இதுவே கடைசி சந்தர்ப்பம்.” என்று அறிவிக்கிறான்.

சில வினாடிகளுக்கு ஆழ்ந்த நிசப்தம். அப்போது மகாகதவின் வெளியில் தாழ்வாரத்தில் யாரோ நடந்து வருகிறாற்போல் ஓசை கேட்கிறது.

எல்லோரும் திரும்பிப் பார்க்கையில் சபையினுள் அதமந்தி நுழைகிறான்.
“நான் சாட்சியம் சொல்ல விரும்புகிறேன்” என்கிறான்.

1527470348756.png
உள்ளே வந்த அதமந்தி மன்றத்தின் நடுப்பகுதிக்குச் சென்று நீதிபதியையும் நடுவர்குழுவையும் தலை தாழ்த்தி வணங்குகிறான்:

“சௌரிய உயர்தேசத்தின் போற்றத்தக்க நடவடிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் மேம்பார்க்கும் மாண்புமிகு உயராலோசனை சபைத் தலைவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்” என்கிறான்.

“நமது மக்களின் மீது நான் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். மேலும், சூர நாட்டு அரக்கர்கள் செய்யும் அட்டூழியங்களையும் நான் நன்கு அறிவேன் என்றும் உங்களுக்குத் தெரியும். என் காதலியும் உயிர் தோழியுமான சுஷீயை கடத்திச் சென்றார்கள். இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான் உயிருக்குயிராய் ஆசைவைத்து வளர்த்த என் அன்பு மகளை என் கண் முன்னாலே கழுத்தை அறுத்துக் கொன்றார்கள். இந்தக் கொடுமைகளை அனுபவித்த பின்னும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இது போல சம்பவங்கள் மீண்டும் நடந்து நான் பட்ட வேதனைகளை மற்ற சௌரியர்களும் அனுபவிக்கக்கூடாது என்ற ஒரே எண்ணம்தான் என் மனதை ஆட்கொண்டது.” என்று ஆரம்பிக்கிறான்.

“இப்படி இருக்க, அரக்கர்களின் சதிகளைக் குலைப்பதே என் வேலையும் கடமையுமாக ஆக்கிக்கொண்டேன். எங்காவது அரக்கர்கள் நமது அமைதிக்கு இடையூறு செய்வதற்கோ, நம் நாட்டின் செழுமையை கொள்ளையடிப்பதற்கோ அல்லது நம் நாட்டினர் மீது கொண்ட மூடத்தனமான பழிவாங்கும் எண்ணங்களுடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கோ திட்டமிட்டிருந்தார்களானால், அந்த திட்டத்தைக் கண்டுபிடித்து வேரோடு பிடுங்கி ஒழிப்பதைப் பற்றியே நான் காலையும் மாலையும் சிந்திப்பேன்.
சில மாதங்களுக்கு முன் எனக்கு அவர்கள் செய்யும் சூழ்ச்சி ஒன்று பற்றித் தெரிய வந்தது. அரக்கர்குல சிறுவர்களை நம் நாட்டிற்குள் அனுப்பி நமது பலவீனங்களைப் பற்றி ஆராய்ந்து தெரிந்தபின் நம்மைக் கொள்ளையடிக்கத் தீவிரவாதிகளைத் தயார் செய்கிறார்கள் என்று…”

இப்படி சொல்லிக்கொண்டே கமல்யாவை பார்க்கிறான். அவளோ தலைகுனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அதமந்தி தொடர்கிறான்: “ஆனாலும் அரக்கர்களின் திட்டங்களை அவர்களினால் தனியாக செயல்படுத்த முடியாது என்றும் அவற்றை நிறைவேற்ற சௌரியர்களில் சிலர் ஒத்துழைத்தால் மட்டுமே முடியும் என்பதையும் அறிந்துக்கொண்டேன். மேலும் துப்பறியும்போது நம் நாட்டினர் சிலர் நமக்கு துரோகம் செய்யும் வகையில் இங்கு திருட்டுத்தனமாக வரும் அரக்கர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்றும், அச்சிறுவர்கள் மூலம் நம் தேசிய ரகசியங்களை அரக்கர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறார்கள் என்றும் அறியவந்தேன்.

நமது தேசத்திற்கு துரோகமான சௌயர்கள் யாரென கண்டுபிடிக்க ஒரு திட்டம் வகுத்தேன். இதற்காக சில சௌரியர்கள் என்னுடன் ஒத்துழைத்தார்கள். இவர்களில் ஒருவன் என் துறையில் தலைக்காவலனான மாரு. நேற்று நடந்த சம்பவங்கள் என் நெடுங்கால சந்தேகங்களை உறுதிப்படுத்தின.

இதோ நம் முன் நிற்கும் கமல்யா என்பவள் பல்லாண்டுகளாய் அரக்கர்களுக்காக பல்வேறு மன்றங்களில் வாதாடி அவர்கள் நலனுக்கான செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது ஒரு ரகசியமல்ல. ஆனால் நேற்றோ அவள் செயல்கள் எல்லை கடந்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. அரக்கர் நலனுக்குப் போராடுவது வெறுக்கத்தக்க செயலானாலும் குற்றமல்ல. ஆனால் அவர்களின் நலனுக்காக சௌரியர்களின் பாதுகாப்பையும் நலனையும் விட்டுக்கொடுத்துத் தியாகம் செய்வது கடுங்குற்றம். அப்பேற்பட்ட குற்றத்தையே அவளும் அவள் மகனும் செய்திருக்கிறார்கள். அவர்கள் அந்த அரக்கர்குல சிறுவனிடம் பகிர்ந்து கொண்ட தகவலை அவன் எடுத்துச் சென்றானானால் நமக்கு மாபெரும் ஆபத்து ஏற்படும் என்று தெரியவந்தேன். அதனாலேயே மாருவை விட்டு அவர்களை உடனடி கைது செய்யுமாறு கட்டளையிட்டேன்.

இதுவே நான் கொடுக்கும் சாட்சியம். இதைப் பொறுமையுடன் கேட்ட சபைத்தலைவருக்கும், நடுவர்குழுவிற்கும், இங்கு வந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் என் மனமிக்க நன்றி.” என்று கூறியவாறே மறுபடியும் தலைதாழ்த்தி வணங்கி பார்வையாளர் ஆசனங்கள் ஒன்றில் அமரச்செல்கிறான். செல்லும் வழியில் கமல்யாவின் கூண்டிற்கருகே சற்றே நின்று துன்மார்க்கமாகப் புன்னகைத்து ரகசியமாக அவளிடம் ஓதுகிறான்.

“கிராதகி! இப்போது பார் வேடிக்கையை! உன் முன்பே உன் பீடை மகனைச் சிரச்சேதம் செய்தபின் உன்னையும் கொல்லுவார்கள் என வேண்டுகிறேன். இதோடு என் சபதம் நிறைவேறிவிடும். நீ ஒழிவாயாக.” என்கிறான்.

கமல்யாவின் முகத்திலோ எவ்வித ஆச்சரியமும் தோன்றவில்லை. இன்னும் முகபாவம் மாறாமல் தரையை நோக்கி அநாயசமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். லூமாவும் பாலோப்பியனும் இது போன்ற சம்பவங்களில் அனுபவம் இல்லாததனால், ஒன்றும் புரியாதவண்ணம் கமல்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.தொடரும்...
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#14
Post 011:

அத்தியாயம் பத்து – ஆங்கிபதியின் தீர்ப்பு

தீர்ப்பு வழங்கும் நேரமாயிற்று.

“மாண்புமிகு உயராலோசனைச் சபைத் தலைவர் ஆங்கிபதி அவர்கள் இப்பொழுது நடுவர்குழுவின் பரிந்துரைகளை ஆலோசித்து தீர்ப்பு வழங்குவார்” என்று பார்வையாளர்களைப் பார்த்து சபையின் ஒருங்கிணைப்பாளன் அறிவிக்கிறான்.

பின் திரும்பி “மாண்புமிகு ஆங்கிபதி அவர்களே – உங்கள் நியாயத்தீர்ப்பைக் கேட்க சௌரிய உயர்தேசத்தின் பிரஜைகளான நாங்கள் தாழ்மையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறான்.

இடையில் சிறிது சலசலப்படைந்த சபை மீண்டும் அதிநிசப்தமாகிறது.

நடுவர் குழுவினர் ஒவ்வொருவரும் அவரவர் முன்னிருக்கும் ஒரு காகிதப்பத்திரத்தை தத்தம் மேஜையின் மீது குப்புறத் திருப்பி வைக்கிறார்கள்.

ஆங்கிபதி வலதுபக்க நடுவர்குழுவை நோக்கி தலையசைத்தவாறு ‘தயாரா?’ என்றபடி சமிக்ஞை செய்கிறார். அவர்களும் ‘ஆமாம்’ என்றபடி செய்கையிலேயே பதிலளிக்கிறார்கள்.

இடதுபக்க நடுவர்குழுவை நோக்கி மறுபடியும் அவ்வாறே கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

மீண்டும் நடுவர்களை நோக்கி சமிக்ஞை செய்கிறார். நடுவர்குழு வரிசையின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் நடுவர் தனது காகிதத்தை அவருக்கு பக்கத்தில் இருக்கும் நடுவரிடம் நகர்த்தி விடுகிறார்.

சபையின் ஆழ்ந்த அமைதியில் “ஸ்ஸ்ஸ்…” என்று காகிதம் மேஜையின் மீது உரசி ஒருவரைவிட்டு ஒருவருக்கு சரியும் சப்தம் நம்மை உள்ளூர புல்லரிக்க வைக்கிறது.

அடுத்த நடுவர் தனது பத்திரத்தை அதன்மீது வைத்து இரண்டையும் சேர்த்து தனது அயலவனிடம் அதே முறையில் தள்ளிவிடுகிறார்.

இவ்வாறே பத்திரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து குவிந்து கடைசி நடுவர்கள் இருவர்களிடமிருந்தும் சிறிய பத்திர அடுக்குகளாய் ஆங்கிபதியிடம் தரப்படுகின்றன.

இரண்டு அடுக்குகளையும் சேர்த்து வைத்து ஆங்கிபதி ஒன்று ஒன்றாய் எடுத்து படித்து பக்கத்தில் வைக்கிறார். படிக்கும் போது அவர் கண்களில் ஏதோ ஆச்சரியமும் மடுப்பும் தெரிகிறது. எல்லாவற்றையும் படித்தப்பின்னர் ஆழ்ந்த யோசனையில் சில வினாடிகள் மூழ்கியிருக்கிறார். பின் விதியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது போல் தலைநிமிர்ந்து தனது தீர்ப்பை வழங்கத் தயாராகிறார்.

1527470796600.png

கம்பீரமான குரலில் ஆங்கிபதி பேசத் தொடங்குகிறார். பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் பாலோப்பியனை நோக்கிப் பேசுகிறார். “சூரர்குலத்தைச் சார்ந்த பாலோப்பியன் என்பவனே, உன் மீது எல்லைமீறி அதிக்கிரமம் செய்தல், திருட்டு மற்றும் உளவு போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. நடுவர்குழுவின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவில் நீ இம்மூன்று கட்டங்களிலும் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரைப்படி நீதி மரத்தில் உடனே கழுவேற்றப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறாய்.” என்கிறார்.

கமல்யாவும் லூமாவும் தீர்ப்பின் தீவிரத்தைக் கேட்டு திகைத்துப்போய் நெடுமூச்செறிந்து திணறிப்போகிறார்கள். அதமந்தியின் முகத்திலோ ஒரு திருப்திகர புன்சிரிப்பு.

அடுத்தக் க்ஷணமே இரு காவலர்கள் எங்கிருந்தோ விரைந்து வந்து பாலோப்பியனின் கூண்டைத் திறந்து இருபுறமும் அவன் கைகளைப் பிடித்து தரதரவென்று பக்கக் கதவு வழியே அவனை இழுத்துச்செல்கிறார்கள். பாலோப்பியனுக்கு ஒன்றும் புரியவில்லை. முகம் திருப்பி கமல்யாவை கெஞ்சும் கண்களால் பார்த்துக் கதறுகிறான். அவள் என்ன செய்தாலும் நடக்கப்போவதை மாற்றமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டவள் போல் உதவியற்றுப் பார்க்கிறாள்.

ஆங்கிபதி இப்பொழுது கமல்யாவை பார்த்து பேசுகிறார்.

“சௌரியதேசத்து குடிமகளான வெள்ளிக்குல கமல்யா என்பவளே. உன்மீது தேசத்துரோகம், அரக்கர்குல தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பு மற்றும் உளவுதல் என்ற குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. நடுவர்குழுவின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவில் நீ முதலிரண்டு கட்டங்களில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது…”

பார்வையாளர்கள் பலர் திகைத்துப் போகிறார்கள். அதமந்தி துன்மார்க்க புன்சிரித்து கமல்யாவின் கண்களை நோக்கிப் பார்க்கிறான். அவள் இன்னும் தரையையே பார்க்கிறாள். ஆங்கிபதி தொடர்கிறார்:

“...அவர்களின் பரிந்துரைப்படி ஒருநாள் பிராயச்சித்தம் செய்தபின் சிரச்சேதத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறாய்.”

உடனே ஓவென்று அலறுகிறான் லூமா. “அம்மா! என்ன அநியாயம் அம்மா! என்ன நடந்தது என்று சொல் அம்மா. சொல். ஆ… ஆ!” என கதறுகிறான். ஒரு காவலன் லூமாவிருக்கு சமீபத்தில் நகர்ந்து ‘அமைதியாக இல்லாவிடில் வெளியேற்றி மீதி விசாரணையை நீ இல்லாமலே நடத்திவிடுவோம்’ என்றபடி எச்சரிக்கிறான். லூமா அழுகையை நிறுத்தமுடியாமல் தணிக்க முயற்சிக்கிறான்.

இரண்டு காவலர்கள் கமல்யாவின் கூண்டின் அருகே சென்று நிற்கிறார்கள். ஆனால் அவளை இன்னும் வெளியேற்ற முயற்சிக்கவில்லை.

தீர்ப்பைக் கேட்ட பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். என்ன இருந்தாலும் ஓர் சௌரியருக்கு – அதுவும் இலவசமாக சிகிச்சை செய்து பலர் மனதை வென்ற சௌரியருக்கு – இவ்விதமான தீவிர தண்டனை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை போலும்.

“ஏதோ அரசியல் சூழ்ச்சி நடந்திருக்கிறது…”, “...இதனால்தான் அரசியல்வாதிகளைப் பகைத்துக்கொள்ளக் கூடாது…”, “...ஒரு வேளை அவள் தெரிவிக்க முடியாத வேறு தவறுகள் ஏதேனும் செய்திருப்பாளோ?” என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

அதமந்தியின் புன்சிரிப்பு மேலும் பலமடைந்து முதிர்ந்த புன்னகை ஆகிவிடும் போல் இருக்கிறது. கமல்யாவின் முகபாவம் கல்லாகிறது. ஆனால் அவள் கண்ணோரத்தில் ஒரு முத்துப்போன்ற கண்ணீர்த் துளியை நம்மால் காணமுடிகிறது.

ஆங்கிபதி “ம்ஹ்ம்ஹ்ரும்” எனக் கமறி ஆரவாரத்தைத் தனிக்குமாறு சப்தமிடுகிறார். உடனே அவர் மீதுள்ள மரியாதையினாலோ அல்லது அடுத்த தீர்ப்பு என்னவென்று தெரிந்துக்கொள்ள இருக்கும் ஆவலினாலோ அதிநிசப்தம் மீண்டும் நிலவுகிறது. லூமாவின் பக்கம் திரும்புகிறார்.

“சௌரியதேசத்து குடிமகனான வெள்ளிக்குலன் லூமா என்பவனே. உன்மீது தேசதுரோகம், அரக்கர்குல தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பு மற்றும் உளவுதல் என்ற குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன…”தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#15
Post 012:

ஆங்கிபதி சற்றே தயங்குகிறார். நிசப்தம் நீடித்து நிலவுகிறது.

“ந்… ந்… ந்ந்... ந…” அவர் நாக்குழற்றி திக்குகிறார்.

“ந்… நடுவர்குழுவின் ஆலோசனையை க்… க்… க… கருதி… எடுக்…”

அவருக்கு தொண்டை அடைக்கிறது. பக்கத்தில் இருக்கும் ஒரு குவளையிலிருந்து சிறிது நீரைக் குடிக்கிறார். மறுபடியும் நடுவர்குழுவிலிருந்து வந்த காகிதங்களை சோதிக்கிறார். ஏதோ குழப்பமோ சங்கடமோ அவர் முகத்தில் தெரிகிறது. காகிதங்களை மறுபடியும் மேஜை மீது வைத்து தொடர முயற்சிக்கிறார்.

“... ஆலோசனையைக் கருதி எடுக்கப்பட்ட ம்… ம்… மு… டிவில்…”

மீண்டும் திக்கல். மீண்டும் சிக்கல். மீண்டும் ஓய்வு. குடித்த நீர் நெற்றியில் முத்து முத்தாய் வியர்வையாகித் தோன்றுகிறது. அங்கவஸ்திரத்தினால் துடைத்துக் கொள்கிறார். ஏதோ குழப்பத்துடன் சபையின் சுற்றுவட்டாரத்தை ஆராய்கிறார். மறுபடியும் நெற்றியைத் துடைக்கிறார்.

இந்நேரத்தில் ப்ருஹா அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தில் தலைகுனிந்து தந்தையின் பார்வையைத் தவிர்க்குமாறு தரையை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆனால் நாம் உற்றுப் பார்த்தால் கண்ணை மூடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருப்பது போலவோ அல்லது ஏதோ வேண்டுகோள் பூர்த்தியடைய யாரையோ, எதையோ பிரயோகம் செய்கிறது போலவோ இருக்கும். அவன் மூடிய கண்கள் லேசாக துடிப்பதும், அவன் நெற்றி வியர்ப்பதும், அவன் கூப்பிய கைகள் சற்றே நடுங்குவதும் தெரியவரும்.

“ந் … ந்… நீ… நி…” என தொடர்ந்து தடுமாறுகிறார் ஆங்கிபதி.

சபையோர் என்ன நடந்துகொண்டிருக்கிறது என அறியாமல் மூச்சைப்பிடித்து ஆவலுடன் ஆங்கிபதியின் அடுத்த வார்த்தைகளை எதிர்பார்க்கிறார்கள்.

ப்ருஹாவின் நெற்றி வியர்வை துளிகள் உருண்டு கலந்து சொட்டாகி தரையில் விழுந்து சிதறுகிறது. “ச்ச்” எனும் சப்தம் நிசப்தமான சபையின் மூலைகளில் எதிரொலிக்கிறது.

“... நிரபராதி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்ற வார்த்தைகளை ஒரே மூச்சில் அவசரத்துடன் துப்பிவிடுவதுபோல் உச்சரிக்கிறார் ஆங்கிபதி. மகா குழப்பம்கொண்டு நடுவர் காகிதங்களை மீண்டும் ஆராய்கிறார்.

பார்வையாளர்களிடம் ஒரே சலசலப்பு. ஆங்கிபதியின் நசப்பிசத்தலைப் பற்றி கிசுகிசுக்கள் கொசுக்கூட்டம்போல் பறக்கின்றன. அதமந்தியின் கண்களிலோ வெறுப்பும் ஏமாற்றமும் தெரிகிறது. கமல்யாவின் முகத்தில் சற்றே நிவாரணம் தோன்றுகிறது.

அப்போது ப்ருஹா மெல்ல தலைநிமிர்ந்து தந்தையை நோக்கி கடைக்கண் பார்வையைச் செலுத்துகிறான். அதே க்ஷணம் ஆங்கிபதியின் சுற்றுநோட்டம் அவன்பக்கம் இருக்க இருவர் கண்களும் ஒரு நொடி சந்திக்கின்றன. உடனே ஆங்கிபதி சட்டெனப் பார்வை இணைப்பை முறித்துக்கொண்டு தன் முன்னிருக்கும் காகிதங்களை அள்ளி கையில் நெருக்கிப் பிடித்துக் கொள்கிறார். ப்ருஹா மீண்டும் தலைசாய்த்து வெட்கப்பட்டவன் போல் தரையை நோக்கிப் பார்க்கிறான்.

பார்வையாளர்கள் ஒவ்வொருவராய் கிசுகிசுத்துக் கொண்டே சபையிலிருந்து வெளியேறுகிறார்கள். லூமா அவன் கூண்டினுள் அதிர்ச்சியடைந்தவன் போல் சரிந்து மேல்நோக்கி இலக்கில்லாத விறைத்த பார்வைக்கொண்டு சாய்ந்தபடி இருக்கிறான்.

அதமந்தி எழுந்து அங்கவஸ்திரத்தின் தலைப்பை வெறுப்புடன் “ஹ்ம்!” என்று கூறியவாறே உதறி கமல்யாவை நோக்கி நடக்கிறான். அவளிடம் சென்று “என் சபதத்தை மறக்கவில்லை சண்டாளி. சந்ததிநாசம் கண்டபின் உயிரிழப்பாய் என எண்ணினேன். அது நடக்கவில்லை. ஆனால், உன் பாவிமகன் தப்பிவிட்டான் என மகிழாதே! அவன் எங்கிருந்தாலும் தேடி அவன் வாழ்க்கையை நரகமாக்கி அவனையும் நான் இவ்வுலகிலிருந்து ஒழிக்கும்வரை உறங்கமாட்டேன். இந்த நினைவே உன் சிரம் துண்டிக்கப்படும்போது கடைசி நினைவாகட்டும். தூ!” என்று துப்பி மறுபடியும் வெறுப்பில் அங்கவஸ்திரத்தை அவள் முகத்தின் மீது உதறி அவசர வேகத்துடன் சபையிலிருந்து மகாகதவு வழியாக வெளியேறுகிறான். பளபளக்கும் கரும்பளிங்குப் பாதையில் அவன் காலணிகள் பதிக்கும் தூசிமுத்திரைகள் சபையின் சோபையைக் குலைக்கின்றன.

அதமந்தி கமல்யாவைக் கண்டு எரிந்து விழுந்ததை, கிளம்பத் தயாராகிக்கொண்டிருக்கும் ஆங்கிபதி தூரத்திலிருந்து கண்டார். எங்கேயோ ஏதோ சதி நடந்திருக்கிறது என்று அவர் சந்தேகித்தாலும் தற்போது நீதி வழங்கும் காரியாக்கிரமத்தில் ஏதோ சிதைவு ஏற்பட்டிருக்கிறது என்ற எண்ணம் அவரை மேலும் பாதிக்கிறது.

காவலர்கள் கமல்யாவின் கூண்டைத் திறந்து அவள் கைகளில் விலங்கிட்டு அழைத்துச்செல்கிறார்கள். லூமாவின் கண்ணெதிரே அது நடந்தாலும், அவன் அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு உடலசையாமல் கூண்டினுள் கண் திறந்து சரிந்து கிடக்கிறான்.

ஆங்கிபதி எழுந்து மகாகதவை நோக்கி பளிங்கு பாதையில் மெல்ல நடக்கிறார். அவருடைய நீண்ட அங்கவஸ்திரம் அவருக்குப்பின் தரையை தடவியவாறே வருகிறது. அதமந்தி விட்டுப்போன கால்தூசி முத்திரைகளை துடைத்து மீண்டும் பாதையைப் பளபளக்க வைக்கிறது.

வழியில் ப்ருஹாவின் இடத்தை ஆங்கிபதி கடக்கிறார். அப்போது அவன் அருகில் நின்று அவனை உற்றுப் பார்க்கிறார். மெல்ல தலைநிமிர்ந்து குற்றவாளியின் கண்களுடன் அவர் கண்களை சந்திக்கிறான். “அப்பா…” என்கிறான்.

ஆங்கிபதி ஒன்றுமே சொல்லவில்லை. அவர் கண்களில் காண்பது வியப்பா, ஏமாற்றமா, கோபமா அல்லது மேலும் தெரிந்துகொள்ள ஆர்வமா என்று தெரியவில்லை. ஆனால் தன் கையிலிருக்கும் காகிதக்கட்டிலிருந்து ஒரு காகிகத்தை உருவி அமர்ந்திருக்கும் ப்ருஹாவின் மடிமேல் போடுகிறார். காகிதம் காற்றில் சிறகு போல் மிதந்து ஊஞ்சல் போல் இடமும் வலமும் ஊசலாடி அவன் மடியில் விழுவதற்குள் அமைதியாக மகாகதவு வழியே வெளியேறுகிறார்.

ப்ருஹா தன் மடிமீது விழுந்த காகிதப் பத்திரத்தைப் பார்க்கிறான். நடுவரின் பரிந்துரை தெரிகிறது. லூமாவின் பெயருக்கடியில் சில வார்த்தைகள் பத்திரத்திலிருந்து அவன் கண்களுக்குள் தாவிக் குதிக்கின்றன:

“... மூன்று கட்டங்களிலும் குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறோம். அதனால் உடனே சிரச்சேதத்தினால் மரண தண்டனை வழங்குமாறு…”
தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#16
Post 013:

அத்தியாயம் பதினொன்று – லூமாவின் சபதம்

மரணதண்டனை விதிக்கப்பட்டோருக்கான சிறை. கமல்யா தனியாக உள்ளே இருக்கிறாள். அவள் இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்பு ஒளியுமிழும் வளையம் இருக்கிறது. அவ்வளையம் அதே போல ஒளியுமிழும் நீளமான சங்கிலியினால் தரையுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. முன்பு கண்ட தற்காலிக சிறை போலவே இந்த அறைக்கும் மூன்று சுவர்கள்தான்.

முன்பு அதமந்தி நின்ற இடத்தில் இப்போது லூமா நின்றுகொண்டு கமல்யாவைப் பார்த்து அழுதுக் கொண்டிருக்கிறான். கமல்யா அவனைச் சமாதானப் படுத்துமாறு ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

அச்சமயம் இரண்டு காவலர்கள் சிறைச்சாலைக்குள் நுழைகிறார்கள்.

லூமா அவர்களைக் கண்டவுடன் பதட்டப்பட்டு ஓடி, அவர்களை கமல்யாவின் சிறைக்கருகே செல்லவிடாமல் வழிமறிக்கிறான். ஆனால் காவலர்களோ இதை எதிர்பார்த்ததுபோல இதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் அவரவர் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களில் ஒருவன் லூமாவை அழுத்திப் பிடித்துக்கொள்கிறான். லூமா “உம்ம்… ம்ம்” என்று ஆவேசத்துடன் திமிறி தன்னைக் காவலனின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும்போது, மற்றொரு காவலன் கமல்யாவின் சிறைக்கருகே சென்று வெளிச்சுவரில் உள்ள ஒரு சதுரமான வெண்ணிற கண்ணாடித்திரை மீது தனது உள்ளங்கையை வைக்கிறான். உடனே திரைக்கு உயிர்வந்து நீல ஒளியை சுவாசிப்பது போல் ஒரு முறை உமிழ்ந்து அடங்கி “ங்கோய்” என உச்சஸ்தாயியில் ஓசையிடுகிறது. உடனே சிறையின் மறைந்த சுவர் மீண்டும் தோன்றி மின்மினிப் பூச்சிகள் ஒளிவிட்டு மறைவதுபோல் ஒளிச் சிதறல்களைச் சிந்தி மங்கலான ஒளிச்சுவடாய் காற்றோடு காற்றாய்க் கரைகிறது.

காவலன் சிறைக்குள் சென்று ஏதோ ஒரு கருவியை கைப்பிடியில் அடக்கி கமல்யாவை தரையுடன் கட்டியிருக்கும் சங்கிலியின் மீது காட்டி கருவியின் பிடியை லேசாக நெருக்குகிறான். சங்கிலியின் கீழ் ஓரம் தரையிலிருந்து விடுபட்டு மிதந்து வந்து காவலன் கையிலிருக்கும் கருவியுடன் தன்னைத்தானே இணைத்துக்கொள்கிறது. காவலன் அப்படியே சங்கிலியைப் பிடித்தவாறே சிறையிலிருந்து வெளியேறுகிறான். கமல்யா அமைதியாக அவனைப் பின்தொடர்கிறாள்.

அப்போது முதல்காவலனிடம் அகப்பட்டிருந்த லூமா பேராவேசத்துடன் திமிறி, அவன் பிடியிலிருந்து தப்பித்து கமல்யாவிடம் ஓடிச்சென்று மண்டியிட்டு அவள் காலை அழுத்தமாய்க் கட்டிக்கொள்கிறான்.

“மாட்டேன் அம்மா. நான் இதை நடக்கவிடமாட்டேன். நீ இங்கிருந்து போகாதே. அம்மா… நான் விடமாட்டேன்… விடமாட்டேன்…” என அழுகிறான். காவலர்கள் அவனை விலக்க முயற்சிக்கவில்லை. கடைசி முறை தாயும் மகனும் பேசிக்கொள்ள அனுமதிப்பதுபோல் சற்றே நகர்ந்து நிற்கிறார்கள்.

கமல்யா லூமாவின் கலைந்த பொற்கேசத்தை ஆசையோடு வருடி விடுகிறாள். “அவலைப்படாதே என் கண்ணே” என உறுதி சொல்கிறாள். “அழியப்போகும் இச்சரீரத்தின் மேல் பாசம் வைக்காதே. என்றுமே நான் உனக்குள்தான் இருப்பேன். இதை நீ இப்போது உணரமாட்டாய். இது வாழ்க்கையில் மேலும் நீ அனுபவம் பெற்றபின் உனக்குத் தெரியவரும். அதுவரை, நான் சொல்லும் அறிவுரையை மனதில் வைத்துக்கொள்: யாருக்காகவும் எதற்காகவும் வேஷம் போடாதே. உன் புனிதமான உள்ளம் சொல்லும்படியே நடந்துக்கொள். அதிமுக்கியமாக… தனக்குத்தானே நேர்மையாக வாழ்ந்தால் மட்டுமே ஒருநாள் பரமார்த்தம் தெரியவரும். நானும் உன்னுள் இருப்பதை நீ காண்பாய்.”

அழுதுக்கொண்டே இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லூமா, மேல்நோக்கி தன் அன்னையின் கண்களைச் சந்திக்கிறான். விக்கிவிக்கி அழுதுக்கொண்டே “இது எல்லாம் சரிதான் அம்மா” என்று சொல்கிறான். “ஆனாலும் இன்று உன்னை என்னால் விடமுடியாது. நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்? என்னால் இந்த துக்கத்தைத் தாங்க முடியாது.”

“என் உயிருக்குயிரான பேதை குமரா! நான் சொல்வதைக் கேள். நீ துக்கப்படுவது எனக்காக அல்ல. நான்தான் உனக்குள் எப்போதும் இருப்பேனே. உன் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எதிர்ப்புதான் உன் துயரத்தின் காரணம். மாறுதலை ஏற்க மறுப்போருக்கு மிஞ்சுவது துக்கம் மட்டும்தான். எனவே, நடப்பதை ஏற்று துணிவோடு இனிவரும் நாட்களை எதிர்கொள். நான் கூறியதை மனதில் வைத்துக்கொள். உன்னைப்போல் கூர்மையான அறிவுப்படைத்த மகனைக் கண்டு மகிழ்ந்ததைவிட ஒரு தாய்க்கு வேறென்ன தேவை? அந்த எண்ணத்தை மட்டுமே மனதில் கொண்டு நான் இந்த உடலை துறக்கத் தயாராக இருக்கிறேன்.”

‘மகிழ்வதை விட’ என்று சொல்லாமல் கடந்தகால வாக்கியம்போல ‘மகிழ்ந்ததை விட’ என்றது லூமாவின் மனதில் சுளீர் என்று உறங்குபவன் முகத்தில் நீர் தெளித்தாற்போல் அடிக்கிறது. விதியின் வலிமையை உணருகிறான்.

கமல்யா இவ்வாறு புத்தி சொல்லியபடி குனிந்து அவன் தலையுச்சியில் ஒரு அன்பு முத்தம் அளிக்கிறாள். தன் கரங்களினால் அவன் கைகளை மிருதுவாகக் கழட்டி விடுகிறாள். காவலர்களிடம் ‘செல்லத் தயார்’ என்றபடி தலையசைத்து அவர்களைப் பின்தொடர்கிறாள்.

லூமா உதவியற்றவன் போல் அப்படியே இருந்த இடத்திலேயே மண்டியிட்டு கிடக்கிறான். அவன் கைகள் ஆலமர விழுதுகள் போல் இரு பக்கங்களிலும் இலக்கற்றுத் தொங்குகின்றன.

சற்று நேரத்தில் லூமா மெல்ல தலை நிமிர்ந்து பார்க்கும்போது அவனுள் இருக்கும் ஆழ்ந்த துக்கத்தை அவன் முகம் பிரதிபலிப்பதை உணரமுடிகிறது. ஆனால் நம் கண்ணெதிரேயே அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கல்லாகிறது. சோகவிதை அந்த கல்லைப் பிளந்து, துளிர்விட்டு, விரக்தியாய் முளைத்து ஆத்திரமாய் வேரூன்றுகிறது.

எழுந்தவன், ஏதோ ஒரு புது இலட்சியம் கொண்டதுபோல் திட்டவட்டமான குறிக்கோளுடன் சிறைவாசலை நோக்கி நடக்கிறான்.தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#17
Post 014:

நள்ளிரவு – சௌரியதேசத்தின் எல்லையில் ஒரு கழுவளம். இராப்பட்சிகள் அங்குமிங்கும் பறந்து வெவ்வேறு கழுக்களில் ஏறி இறந்த மற்றும் இறக்கவிருக்கும் கழுவேற்றப்பட்டவர்களை கொத்திக் கொண்டிருக்கின்றன. வலியினால் அவதிப்படுவரின் அலறல்கள் காதைத் துளைக்கின்றன. இந்த கொடூரங்களைக் காண விரும்பாத பிறைச்சந்திரன் அவ்வ்பொழுது கருமேகத்தின்பின் ஒளிந்து கழுகளத்தை இருள்சூழ வைக்கிறான்.

நிஜமாகவே இக்கழுக்கள் மரங்களும் அல்ல, மரத்தாலானவையும் அல்ல. நீதிமரம் என்பது அன்றைய புராதான வார்த்தையை பெயராகச் சூடிக் கொண்டிருப்பதுதான். வெண்கழுக்கள்போல் ஏதோ ஒரு நவீன உலோகத்தினால் உருவாக்கபட்ட சூலங்கள். இவை வரிசையாய் கழுக்களத்தில் நடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு விளக்கு போன்ற ஒளியுமிழி உள்ளது. கழுவேற்றப்பட்டவரின் உயிர்நிலையைப் பொறுத்து அதன் நிறம் மாறுகிறது. இறந்து விட்டவர்களின் கழுக்களில் அவை சிவப்பு நிறமாகவும், வெளியூற அவதிப்படாமலும் அலறசக்தியிழந்தும் உயிரை இன்னும் பிடித்துக்கொண்டிருப்போரின் கழுக்களில் அவை மஞ்சள் நிறமாகவும், வலியால் அவதிப்பட்டு துடித்து அலறிக்கொண்டிருப்பவர்களின் கழுக்களில் பச்சை நிறமாகவும் உள்ளன. காலியான கழுக்களின் மீதுள்ள ஒளியுமிழிகள் வெள்ளை நிறம் கொண்டுள்ளன.

இந்த களத்தின் ஓரத்தில் ஒரு கழுவில்தான் நாம் பாலோப்பியனைக் காண்கிறோம். அவன் உடல் துடிக்கும் நிலையைத் தாண்டிவிட்டான். ஆனால் இன்னும் உயிர்பிரியவில்லை. அவன் ஏற்றப்பட்ட கழுவின் ஒளியுமிழி மஞ்சள் நிறம் கொண்டிருக்கிறது.

கண்ணை மூடிக்கொண்டிருக்கிறான். ஆனால் வறண்ட நிலம் போல் விரிசல்கொண்ட உதடுகளோ ஏதோ கனவில் பேசுவதுபோல் லேசாக அசைந்துக்கொண்டிருக்கின்றன. அருகில் சென்றால் கேட்க முடிகிறது. அவன் மெல்லிய குரலில் வாய்குழற்றி மந்திரம் போல் ஓதும் வார்த்தை “இரு… இரு…” என்பதுபோல். மேலும் அருகில் சென்றால்தான் தெரிகிறது அது “இரு” அல்ல, அவன் தங்கை விருணாவின் பெயர் என்று.

அருகில் ஏதோ சப்தம் கேட்கிறது. கருப்புப் போர்வை போர்த்திக்கொண்டு உயிரை மீட்க வந்த யமதூதனைப்போல் ஒருவன் அங்கு வந்திருக்கிறான். இரு வெண்ணிறக் கைகள் மெல்ல தலையை மூடும் துணியை அகற்றியதும் நமக்கு அது லூமாவெனத் தெரிகிறது. பாலோப்பியனைக் காண வந்திருக்கிறான். இடுப்பில் தொங்கும் ஒரு நீர்குப்பியைப் பிடித்து, பாலோப்பியனின் அருகில் சென்று நீர்க்குப்பியைத் திறந்து அதன் வாயை பாலோப்பியனின் உதடருகில் வைத்து குப்பியைச் சாய்கிறான். நீர் வழிகிறது.

பலோப்பியன் நாக்கை நீட்டி ஈரமாக்கிக்கொண்டு கண்ணைத்திறந்து பார்க்கிறான். “ஓ... சௌ...ர்யா…” என்று வலுவற்றுச் சொல்கிறான். மீண்டும் நாக்கை நீட்டி நீர் வேண்டுமாறு பாவனை செய்து கொஞ்சம் குடித்தப்பின்னர் லூமா ஒரு துணியினால் பாலோப்பியனின் உதடுகளையம் கன்னங்களையும் மெல்ல ஒத்தி ஒத்தித் துடைக்கிறான்.

“என்னை மன்னித்துவிடு சூரா... எங்களை மன்னித்து விடு…”

‘பாவமாவது, மன்னிப்பாவது! இப்போது அதுவா முக்கியம்’ என்றபடி “சௌரியா…” என பாலோப்பியன் திணறித் தொடர்கிறான். “என் தங்கை… விருணா… மருந்தை அவளிடம்… கொண்டு சேர்ப்பாயா?”

‘ஆம்’ என்றபடி லூமா தலையசைக்கிறான்.

“எல்லைநகர் தெற்குவீதி கோடியில்… எனக்கு என்ன ஆயிற்று என்று அவளிடம் தயவு செய்து சொல்லாதே. உன்னைக் கெஞ்சுகிறேன். ஏற்கனவே பலவீனமான இதயம் கொண்டவள்… இது தெரிந்தால்…”

கண்மூடி மயக்கமடைகிறான். அவன் கழுவிலிருக்கும் ஒளியுமிழி மஞ்சளிலிருந்து சிவப்பாகவும் மறுபடியம் மஞ்சளாகவும் மினுமினுக்கிறது.

சில வினாடிகளில் மறுபடியும் நிலையான மஞ்சள் நிறம் கொள்கிறது, பாலோப்பியன் மீண்டும் கண்திறந்து லூமாவை நோக்கி

“... எங்களுக்கு இங்கு ஒரு வாழ்க்கையமைக்க முயற்சிக்கிறேன் என்று சொல்… கூடிய சீக்கிரம் அழைத்துச்செல்ல வருவேன் என்று-”

மீண்டும் மயக்கம். மீண்டும் ஒளியுமிழி மினுமினுத்தல். மீண்டும் முன்போல் கண்விழிப்பு… கெஞ்சும் பார்வை.

பாலோப்பியன் பேச முயற்சிக்கும்போது லூமா தனது விரலை பாலோப்பியனின் உதடுகள் மீது வைத்து சாந்தப்படுத்துகிறான்.

“கவலைப்படாதே சூரா. உன் தங்கைக்கு மருந்தை நானே எடுத்துச்சென்று தருகிறேன். ஆனால் நான் இங்கு வந்ததற்கு வேறொரு காரணம் உண்டு.”

ஒரு வினாடி மௌனத்திற்கு பிறகு வலி மீண்டும் விழித்துக்கொண்டாற்போல் பாலோப்பியன் பலவீனமாக ஆவென்று முனகுகிறான்.

“நான் ஒரு தீர்மானம் செய்துவிட்டேன் சூர நண்பா.” என்கிறான் லூமா. “இன்றுமுதல் நான் சௌரிய தேசத்தை துறந்து சூர நாட்டிற்குச் சென்று சூரர்களின் நன்மைக்காக உழைப்பேன். இது சத்தியம். உனக்கும் எனக்கும் நடந்த அநீதியை சரியாக்குவதையே என் வாழ்க்கையின் குறிக்கோளாக்கிவிட்டேன். இனி சௌரிய தேசத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.”

பாலோப்பியனின் கண்கள் லூமாவை நோக்கி இருந்தாலும் அவனைக் காணவில்லை, ஏதோ கனவுலகக் காட்சி காண்பதுபோல் இருக்கின்றன.

“சௌரியா… என் தங்கை… விருணா… மறக்காதே… விருணா…”

எங்கோ சொருகிய கண்கள் நகரவில்லை. உதடுகள் மட்டும் மெல்ல வாய்குழறி உச்சரிக்கின்றன. “மறக்... காதே… விரூணீ … ரூணீ … மறக்கா-”

உதடுகள் அப்படியே உறைகின்றன. கண் திறந்தவாறே தலை சாய்கிறது. கழுவின் மின்மினுக்கும் ஒளியுமிழி ‘ங்கொய்ய்ய்…’ என நீடித்து அடங்கும் ஓசையுடன் நிலையான சிவப்பு நிறமாய் மாறுகிறது.

தன் கைகளால் பாலோப்பியனின் திறந்த கண்களை லூமா மூடுகிறான். தன் கண்களையும் மூடிக்கொண்டு சற்று நேரம் அவன் முன் அமைதியாக நிற்கிறான்.

அப்படியிருக்கையிலே அவன் பின் திடீரென ஏதோ சப்தம். சந்திரன் மீண்டும் கருமேகத்தின் பாதுகாப்பை நாடி ஒளிந்துக்கொள்கிறது. கும்மிருட்டில் யாரோ அவனை நோக்கி வலதுபுறத்திலிருந்து வருகிறாற்போல் ஓசை.

கண்சுருக்கி வலதுபக்கம் திரும்பி இருளை துளைத்து கூர்மையான பார்வையைச் செலுத்தி யாரென்று கண்டறிய முயல்கிறான்.

அப்போது அவன் முதுகுப்புறத்தில் படக் என்று ஏதோ குச்சி முறியும் சப்தம்.

திரும்புவதற்குள் அவன் தோளின் மீது ஒரு கை. அழுத்தமாய் பிடிக்கிறது.
தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#18
Post 015:

அத்தியாயம் பன்னிரண்டு – சூரதேசம் செல்லுதல்

எட்டிப்பார்க்கும் நிலாவெளிச்சத்தில் பம்பரம்போல் திரும்பிய லூமா ப்ருஹாவின் கண்களைச் சந்திக்கிறான்.

“நீயா?”

“ஆம் லூமா. நீ பாலோப்பியனிடம் சொன்ன அனைத்தையும் கேட்டேன். யோசிக்காமல் அவசரப்பட்டு மோசமான முடிவெடுக்கிறாய். உன் கூர்மையான அறிவு எங்கே போயிற்று?”

“எதிர்மாறாக புரிந்துக்கொண்டாய் ப்ருஹா. நான் எடுத்த தீர்மானங்களிலே இதுமட்டுமே நன்கு யோசித்து பகுத்தறிவைப் பயன்படுத்தி எடுத்தது. என்னால் இனியிங்கு இருக்க இயலாது. என் மக்கள் செய்த பாவங்களுக்கு எங்கு பரிகாரம் தேடமுடியுமோ, அங்குதான் நான் செல்ல வேண்டும்!”

“இல்லை லூமா. உன் தீர்மானங்கள் இப்போது கோபத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்குப்பின் யோசித்து முடிவெடுப்போம். நான் தந்தையுடன் பேசி எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டேன். அவர் உன்னைத் தத்து எடுத்துக்கொள்ளச் சம்மதித்துவிட்டார். நாமிருவரும் இனி சகோதரர்களாக வாழலாம். உனக்கு ஞாபக-”

“நிறுத்து ப்ருஹா. இதுவரை நான் சொல்லிக் கொண்டிருந்ததை ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக விட்டுவிட்டாயா? நான் தீர்மானித்துவிட்டேன். என் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்று அறிந்துவிட்டேன். நான் செல்ல வேண்டும். என்னைத் தடுக்க முயலாதே.”

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்…

“மேலும்… என் மனதுள் புகுந்து முடிவை மாற்ற முயற்சிக்காதே. நீ செய்வது எனக்குத் தெரிகிறது. வேலை செய்யாது. நிறுத்து.”

“நீ சொல்வது சரி லூமா. வேலை செய்யாதுதான். நீ அதை எதிர்க்கத்தக்க மனோபலம் கொண்டவன். என் தந்தையை விட அதிகமான மனோபலம் கொண்டவன்.”

சில வினாடிகளுக்கு மௌனமாக இருக்கிறான்.

“உன் இதயத்தைச் சுற்றி நீ ஒரு சுவரை எழுப்பியிருப்பதை உணர்கிறேன். உன் கூர்மையான அறிவையும் அதைவிட கூர்மையான முனைகொண்ட கேள்விக்கணைகளையும் என்மேல் ஏவத் தயாராக இருப்பதையும் உணர்கிறேன்.”
சட்டென லூமாவின் கையைப் பிடித்து நீட்டி நடுவர் குழுவின் காகிதப்பத்திரத்தை அதன் மீது பளீரெனச் சாத்துகிறான். சந்திரன் அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் கருமேகத்தின் பின்னிருந்து எட்டிப்பார்த்து தனது வெள்ளிக்கதிர்களை அதன் மீது ஏவுகிறான். அதன் ஒளியில் லூமா தனது நிஜமான விசாரணைத் தீர்ப்பு என்னவெனக் காண்கிறான்.

சற்று நேரம் ப்ருஹாவின் கண்களுக்குள் உற்றுப் பார்க்கிறான், ஏதோ சொல்ல முயற்சிக்குமாறு. ஆனால் ப்ருஹா மீண்டும் தொடங்கி:

“உன்னை அன்பினாலும் தேற்ற முடியாது, மனதுள் புகுந்து மனமாற்றவும் விடமாட்டாய் என்றால் அந்த பத்திரத்தைப் பார். நான் உனக்காக என்ன செய்திருக்கிறேன் என்று பார். அந்த நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகவாவது நீ இங்கு என் சகோதரனாகத் தங்கமாட்டாயா?”

இதை கேட்ட லூமாவின் கண்களில் கோபக்கனல் பற்றி எரிகிறது.

“என்ன தைரியம் இருந்தால் நன்றியைப் பற்றி என்னிடம் பேசுவாய்! உன் இரத்தம் அல்லவா என் இரத்தத்தை இரக்கமில்லாமல் என்னிடமிருந்து பறித்தெடுத்துச் சிரச்சேதம் செய்தது? உன்னால் முடிந்ததை என் தாய்க்குத் தீர்ப்பு வழங்கும் போதே ஏன் செய்யவில்லை?”

“ஐயோ லூமா. உனக்குப் புரியவில்லை. கடைசிவரை காத்திருக்கவில்லை என்றால் என் தந்தை அப்பொழுதே விசாரணையை நிறுத்தி ஒத்திவைத்-”

“ப்ருஹா. நீ சொல்வதை நான் கேட்க விரும்பவில்லை. நான் சொல்வதை நீ கேள். என் நண்பன் என்ற ஒரே காரணத்தினால் உன் மனதைத் துன்புறுத்தவேண்டாம் என இதுவரை நான் இதைச் சொன்னதில்லை. ஆனால் நான் என்றுமே நீ ஒரு அறிவாளி என்று நினைத்ததில்லை. இப்பொழுது நான் மேலும் உறுதி பெற்றேன் – நீ ஒரு முட்டாள் மட்டுமல்ல, நண்பர்களின் நம்பிக்கைத்துரோகி, முதுகில் குத்தும் நயவஞ்சகன்.”
ப்ருஹா முகத்தில் கோபம் இல்லை. வெறும் ஆச்சரியம்தான். லூமா மேலும் தொடர்கிறான்:

“என் உயிரைக் காப்பாற்றுதலில் உனக்கு என்ன லாபமோ, யார் கண்டார்?”
சற்றே அமைதி. இருவரும் ஒன்றும் சொல்லாமல் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.

“இல்லை ப்ருஹா. நான் உனக்கு நன்றிக்கடன் படவில்லை. உயிரென்ன, கால்தூசி அளவு கூட கடன்படவில்லை. நான் உனக்கு கொடுக்கவேண்டியது ஒன்றுமே கிடையாது, சொல்லவேண்டியதும் எதுவுமில்லை. இதுவே நாம் சந்திக்கும் கடைசி முறை.”

இதைக்கேட்ட ப்ருஹா பதட்டப்படவில்லை. சற்று நேரம் மௌனமாக நின்று லூமாவின் கண்களுக்குள் ஆழமாய் பரிதாபத்துடன் பார்க்கிறான். அவன் தோளின் மீது கையை வைக்கிறான்.

“ஆம் லூமா. நீ சொல்வது முழுதும் சரிதான். என் அறிவுத்திறன் உன்னுடையதற்கு சமமில்லை. என்னால், உன்னைப்போல் கூர்மையாக சிந்திக்க முடியாது. ஆனால்... என்னால் உணரமுடியும்… என்னால் காத்திருக்க முடியும்… என்னால் தீர்க்கமாய்ப் பார்க்க முடியும்…

... உன் உள்ளத்தைச் சுற்றி நீ எழுப்பிக்கொண்ட மகாகற்சுவர்களைத் துளைத்து என்னோடு பேச விரும்பாத உன் இதயம்வரை சென்று பார்க்க முடியும். நீ சொன்னபடியே இனி நாம் சந்திக்கபோவதில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். நீ இப்பொழுது இங்கிருந்து செல்லவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் நாம் விரோதிகளாகப் பிரிய வேண்டாம். நண்பர்களாகவே விடைபெறுவோம்…

...நீ எனக்கு கடன்படவில்லை லூமா… உன் உயிர் என்னுடையதல்ல. ஆனால் ஒன்றுமட்டும் கண்டுவிட்டேன்: உன் சுயரூபம் மிகவும் கருணை வாய்ந்தது. அதை நீ ஏற்றுக்கொள்ளாமல் அதை மறைக்கப் போடும் ஒரு வீராப்பு வேஷம்தான் இது. என்னால் உன் வேஷத்தைக் கலைக்க முடியாது. அதற்கு ஏதோ ஒரு அனுபவம் எங்கோ எப்போதோ உன்னை சந்திக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. வேஷம் கலைந்தபின் ஒரு நாள் நீயே உன் உயிரை எனக்காகத் தியாகம் செய்யத் தயங்கமாட்டாய் என்பதும் தெரிகிறது. உனக்கு இனி நல்லதே நடக்கட்டும் என வாழ்த்துகிறேன்.”

இப்படி சொன்னபடியே லூமாவின் தோளிலிருந்து தன் கையை எடுத்து. ஓரடி பின்வாங்கி லூமாவைப் பார்த்து குனிந்து தலைவணங்குகிறான்.

அவன் மீண்டும் தலைநிமிரும்போது லூமா அங்கு இல்லை. அர்த்தராத்திரி இருளுக்குள் ஓசையின்றி நுழைந்துவிட்டான்.

ஆந்தை ஒன்று கூக்குரலிட்டுக்கொண்டு பாலோப்பியனின் பிணத்தின் மீது உட்காரவேண்டி மேலே வட்டமடிக்கிறது.தொடரும்...
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#19
Post 016:

அத்தியாயம் பதின்மூன்று – விருணா காட்டிய வழி

மறுநாள் காலையாகிவிட்டது…

பொதுவாகவே ஒரு ஊர் தலைநகரிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறதோ, அவ்வளவு வசதி குறைந்து இருக்கும். இந்த விதி சூரதேசத்தில் உள்ள ஊர்களுக்கும் பொருந்தியே இருந்தது. இதன் காரணத்தை ஆராய்ந்தால், ஒவ்வொரு ஊரிலும் சூரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவ்வூர்களில் இருக்கும் பரம ஏழைகளே முதலில் பாதிக்கப்படுவதால், அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று அடுத்த சிற்றூருக்குச் செல்வதோ அல்லது செலவுகளைக் குறைக்கவேண்டி வசதிகளற்ற இருப்பிடங்களை உருவாக்குவதையோ அறியமுடியும். தாங்களுடனே தன் பழக்க வழக்கங்களையம் எடுத்துச்சென்று அங்கே ஒரு புதிய வாழ்விடத்தை அமைப்பார்கள்.

இப்படி சூரநாட்டுத் தலைநகரிலிருந்து வெகுதூரத்தில் உள்ளதுதான் எல்லைநகர் என்ற ஒரு சிற்றூர். சௌரியதேசத்தின் சுவர்களுக்குச் சமீபத்தில் உள்ளது. தலைநகரில் வாழும் சூரர்கள் சிலசமயம் எல்லைநகரத்தை “இல்லைநகரம்” என்றே கேலியாகப் பேசுவதுண்டு. செளரியர்கள் இவர்களை மக்கள் இனமெனவே கருதுவது இல்லை. சூரநாட்டு அதிகாரிகளின் பார்வையில் இவ்விடம் கணக்கிலே இல்லை. எனவேதான் இந்தப் புனைபெயர் – இல்லைநகரம். இந்த ஊரில்தான் நம் கதையின் அடுத்த அத்தியாயம் தொடர்கிறது.

தெற்குவீதிக் கோடியில் பாலோப்பியன் விருணாவை ஏற்றி வைத்த இடத்திலேயே அவள் இன்னும் இருக்கிறாள். வீதியை முதுகுப்பக்கம் வைத்துக்கொண்டு சுருண்டு படுத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது சாதாரணமாக யாரும் சீண்டாத இந்த தெருவில் காலடி ஓசை கேட்கிறது. அதுவும் விருணா இருக்கும் திசையை நோக்கி நடந்து வருவது போல் இருக்கிறது.

விருணா சிரமப்பட்டு திரும்பி கண்குருகிப் பார்க்க முயற்சித்தாலும் சோர்ந்த கண்களுக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை. நிழல்போல் ஏதோ ஒரு சிறுவனின் உருவம் தன்னை நோக்கி வருவதைக் காண்கிறாள்.

பாலோப்பியன் திரும்பி வந்துவிட்டான் என்ற சந்தோஷத்தில் அவள் இதயம் கொண்டாடுகிறது. தனக்கு நோய்வாய்ப்பட்ட உடம்பு என்பதைச் சற்றே மறந்து புதுவலிமை கண்டு உற்சாகத்துடன் அவனை வரவேற்க மனம் துடிக்கிறது.

ஆனாலும் அந்த நிவாரணத்தையும் துடிப்பையும் அவனிடம் வெளிப்படையாக காட்ட அவள் விரும்பவில்லை.

‘ஒரு வேளை என் கவலை தணிந்தது என்று அவனுக்குத் தெரிந்து போனால் மறுபடியும் இது போல் என்னை விட்டுப் போக தைரியம் அதிகரித்த்துவிடுமோ’ என்ற சந்தேகத்தினால் சந்தோஷமாய் அவனை வரவேற்பதைவிட தாமதத்தைச் சுட்டிக்காட்டி கோபப்படலாம் என்ற விதத்தில்:

“பீப்பி… நன்றாய் வந்தாய் போ. உனக்காக நான் எவ்வளவு நேரம்தான் காத்துக்கொண்டிருப்பது?” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பொய்க் கோபத்துடன் குறைசொல்கிறாள்.

அவள் அருகில் வந்து நின்ற உருவம் ஒன்றுமே சொல்லவில்லை. “மமஹ்ரம்” என்று தொண்டையிலிருந்து சற்று சளியகற்றுகிறது.

குரலைக்கேட்ட விருணாவிற்கு அப்போது சந்தேகம் எழுகிறது. அது பாலோப்பியனின் குரல் போல் இல்லையே. இது யாராக இருக்கும் என்று. கைகளினால் கண்களை நன்கு கசக்கி உற்றுப் பார்க்கிறாள். வந்தது லூமா. அவனை முன்பின் தெரியாததினால் விருணா அச்சப்பட்டு அவனை அவ்விடத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறாள். லொக்கு லொக்கென்று இருமுறை பொய் இருமல் இருமுகிறாள்.

“ஓ. நீ பீப்பி இல்லையா? இங்கிருந்து சென்று விடு சிறுவா. எனக்கு உடம்பு சரியில்லை. என் அருகில் வந்தால் உனக்கும் இந்த நோய் வந்து விடும்.”

மறுபடியும் இருமுகிறாள், அவன் இருக்கும் திசையை நோக்கியே. ஆனால் லூமா அதைக்கண்டு அசரவில்லை. இன்னும் நெருங்குகிறான்.

“நீதானே விருணா? உன் அண்ணன்தான் என்னை இங்கு அனுப்பிவைத்தான்.”

“பீப்பி?” அவள் கண்களில் ஒருக்ஷணம் உற்சாகம் தெரிகிறது. “உனக்கு அவனைத் தெரியுமா? அவனைக் கண்டாயா? எங்கு இருக்கிறான்?”

“அவன்தான் என்னை இங்கு அனுப்பிவைத்தான் விருணா. உன்னைக் கண்டுபிடித்து உன்னிடம் இதைக் கொடுக்குமாறு சொன்னான்.” எனச் சொல்லிக்கொண்டே பையிலிருந்து மருந்துக்குப்பியை எடுக்க முயற்சிக்கிறான்.

விருணா சற்று ஏமாற்றமடைகிறாள். “பீப்பி அப்படி செய்யவே மாட்டான். அவனே இங்கு திரும்பி வருவதாக எனக்கு வாக்களித்திருக்கிறான். நீ யார்? உனக்கு என் அண்ணனை எப்படித் தெரியும்?”

“நான் ஒரு சௌரியதேசத்து சிறுவன் விருணா. உன் அண்ணனை எங்கள் நாட்டில் சந்தித்தேன். என் தாய் ஒரு மருத்துவர்ர் …” சற்று தயங்கி பிறகு தொடர்கிறான்.

“...ர்ராக இருந்தாள்” என்று கடந்தகால வாக்கியத்தில் முடிக்க அவன் கண்ணிலும் சோகம் தெரிகிறது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ யோசித்தப்பின் குப்பியை அவள் கையில் வைக்கிறான்.”

“இந்த மருந்தை நீ அருந்த வேண்டும். உனக்குக் குணமாகிவிடும்.”

லூமாவின் கை அவளுடைய கைகள் மீது பட்டவுடன் விருணா திடீரென கண்களை நன்கு திறந்து லூமாவை உற்றுப்பார்க்கிறாள்.

“சௌரியனே, நீ என்னைத்தொட்டவுடன் எனக்கு ஏதோ தோன்றியது! உன்னிடத்தில் ஏதோ ஆழ்ந்த சோகத்தைக் காண்கிறேன். ஆத்திரம் கொண்டிருப்பதையும் உணர்கிறேன்... ஆனால் என் மீதும் என் அண்ணன் மீதும் ஏதோ அனுதாபம் வைத்திருக்கிறாய். உண்மையைச்சொல். என் அண்ணன் எங்கிருக்கிறான்? எப்போது திரும்புவான்?”

“இந்த மருந்தை முதலில் அருந்து விருணா. நீ உன் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற்றப்பின் அதைப்பற்றிப் பேசுவோம்.”

சட்டென கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மணிக்கட்டைக் கெட்டியாய்ப் பிடிக்கிறாள்.

“இல்லை. இப்போதே சொல். பீப்பி எப்போது வருவான்?”

லூமா ஒன்றும் சொல்லாமல் குப்பியை அவள் உள்ளங்கையில் மேலும் அழுத்தமாய்த் திணிக்கிறான்.

“மருந்தை குடி விருணா.”

விருணா ஒன்றும் சொல்லாமல் அவன் மணிக்கட்டைப் பிடித்தவாறே அவன் கண்களுக்குள் உற்றுப்பார்க்கிறாள். அவள் கண்களில் சோகம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

“சொல் சௌரியா! பீப்பி இறந்துவிட்டானா?”

“விருணா. இது அதைப்பற்றி பேசும் நேரம் அல்ல. முதலில்-”

“நினைத்தேன்!” என்று லூமாவின் மணிக்கட்டை உதறிவிட்டு மேல் நோக்கி எங்கோ பார்க்கிறாள். கண்களில் நீர்.

“நினைத்தேன்! ஓ பீப்பி… சொல் சௌரியா. அவன் சிரமமின்றி இறந்தானா?”

லூமா விடையளிக்காமல் மௌனமாக இருக்கிறான். விருணாவின் கண்களில் நீர் பொங்கி வழிகிறது. “நினைத்தேன்… நினைத்தேன்...” என்று மெதுவாக அழுகிறாள். கையை விரக்தியோடு திறக்க அதனுள் அடங்கியிருக்கும் மருந்து குப்பி அங்கிருந்து உருண்டோடி விழப்பார்க்கிறது. லூமா அதைப் பிடித்து நிறுத்தி அவள் கைகளை இறுக்க மூடுகிறான்.

“அப்படியானால்…” என தொடர்கிறாள். “... இதிகாசச்சுவடிகள் சொல்லும் குறி உண்மையாகதான் இருக்கும். இருக்காது என நம்பினேனே! அப்பொழுது பீப்பி என்னுடன் இங்கு இருப்பானே! இது சரியல்ல. மற்றவர் உயிரைக்காக்க என் அண்ணனின் உயிர் ஒரு காணிக்கையா?”

மறுபடியும் விரக்தியடைந்து கையைத் திறக்கிறாள். மீண்டும் குப்பி உருண்டு விழப்பார்க்கிறது. லூமா அதைப் பிடித்து அவள் கையில் அழுத்தி வைத்து “நீ இப்படி செய்வது சரியல்ல விருணா. நீ இந்த மருந்தை அருந்த வேண்டும் என்பது உன் அண்ணனின் வேண்டுகோள். அதை நிறைவேற்ற மாட்டாயா?” என்கிறான்.

“அண்ணனே போன பிறகு நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் சௌரியா? அவனைப் பற்றிய செய்தியை என்னிடம் கொண்டு வந்ததற்கு நன்றி. நீ செல்லலாம்.”

“அப்படிப் பேசாதே விருணா. இந்த மருந்தைப் பெறுவதற்கு உன் அண்ணன் என்ன பாடுபாட்டான் தெரியுமா? அருந்தமாட்டேன் என்று நீ பிடிவாதம் பிடிப்பது சரியா என நீயே யோசித்துப்பார். உன் அண்ணன் இதற்காக தன் உயி-”

“நல்லது... கெட்டது… இதை பற்றி நீ என்னிடம் சொல்லவேண்டாம் சௌரியா. எங்கள் தாய் பாடிய தாலாட்டு என்ன தெரியுமா?

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் பாடுகிறாள்: ‘நல்லதொரு நாள் கெட்டதாகும். கெட்டதொருநாள் நல்லதாகும். ஆனால் உறவு மட்டும் எந்நாளும் உறவே ஆகும்...’”

திடீரென அவள் பாடுவதைக்கேட்ட லூமாவிற்கு கவலை உண்டாகிறது – ஒருவேளை அவளுக்கு ஜுரம் முற்றிப்போய் புத்தி பாதிக்கப்பட்டு விட்டதோ என்று நினைக்கிறான். நிசம்பதமான தெருக்கோடியில் ஒலிக்கும் அவள் குரலோசை அசரீரியின் கீச்சானை குரல்போல் ஒலிப்பதைக் கேட்டால் நமக்கு பயத்தினால் தேகத்தின் மயிர்சிலிர்த்துவிடும். லூமாவிற்கோ பயமில்லை, கவலைதான்.

அவன் முகத்தில் குழப்பத்தைக் கண்டு ஆச்சரியப்படாமல் விருணா லேசாகச் சிரிக்கிறாள். கன்னங்களின் மேல் கண்ணீர் உருண்டோட அவள் கண்களை மூடிக்கொண்டு மெல்லிய குரலில் சொல்கிறாள்:

“செல் சௌரியா. சுவடிகளின் பாதுகாப்பாளரும் ராஜகுருவுமான கீரர் என்பவரைத்தான் நீ சந்திக்கவேண்டும். தலைநகரில் உள்ளார். இங்கிருந்து பல நாட்கள் தூரத்தில் உள்ளது. கீரர்தான் சுவடிகள் சொல்லும் குறியைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் உன்னை வரவேற்பார். வேறெங்கும் உனக்கு சூரநாட்டில் பாதுகாப்பான புகலிடம் கிடையாது.”

லூமா அங்கிருந்து நகரவில்லை. கையில் மருந்துக்குப்பியை வைத்துக்கொண்டு பாலோப்பியனுக்கு கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்கிறான். சற்றே மௌனமாக கண் மூடியிருந்த விருனா மீண்டும் தொடர்கிறாள்.

“நீ இன்னும் இங்குதான் இருக்கிறாயா? நீ செல்ல வேண்டும்…” என்று நா குழல விட்டுவிட்டுப் பேசுகிறாள். “... பிற்காலத்தில்...”

மயங்கி தூக்கத்தில் உளறுவது போல் “... நீ மகா தொகைக்கரைப்பை... நிறுத்தும்… போது என்னைப் பற்றி யோசி.... ஒரு வேளை நாம் மீண்டும் அப்போது சந்திப்போம்.”

“விருணா! விழித்துக்கொள். என்னவோ சொல்கிறாயே? கீரரா? மகா தொகைக்கரைப்பா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை விருணா. நீ இந்த மருந்தைக் குடித்தாயானால் நாம் மேலும் விவரமாகப் பேசலாம்.”

ஆனால் விருணா மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். லூமா முடிவெடுத்து விட்டான். அவள் கையை மீண்டும் திறந்து, அதனுள் மருந்துக்குப்பியை வைத்து, கையை மறுபடியும் மூடிவிட்டு அவள் மடிமேல் நகர்த்தி வைத்தபின் ஒரு அடி பின்சென்று விருணாவை நோக்கி தலை வணங்குகிறான். “நீ மீண்டும் உடல்நலம் பெறவேண்டும் விருணா. இது உன் அண்ணனுடைய வேண்டுகோள் மட்டுமல்ல. என்னுடைய வேண்டுகோளும். நீ நன்றாய் இருப்பாயாக.” என்று வாழ்த்து கூறி அங்கிருந்து வந்த வழியே திரும்பிச் செல்கிறான்.தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
23
#20
Post 017:

அத்தியாயம் பதினான்கு – ஆதியூரில் கீரர்

ஆதியூர் எனப் பெயர்கொண்ட சூர தேசத்தின் தலைநகரம். மாலை நேரம். சூர தேசத்தின் தெற்குப்பக்கக் கோடியருகில் உள்ளது. இந்நாட்டைக் கடந்து மேலும் தெற்கே சென்றால் தென்னூர் என்ற பெரும் நகரம் ஒன்று இருக்கும். அதையும் தாண்டி வெறும் காடு தான். அந்தக் காட்டில் வனவிலங்குகளோடு சில சூரர்கள் சமாதானமாக வசிப்பதைக் காணலாம். சில சூரர்கள் நிர்வாணமாக இருக்கிறார்கள். சிலர் அரைநிர்வாணமாக கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். மற்றும் சிலர் வெறும் கோவணம் மட்டும் உடுத்தி உலாவுகிறார்கள். ஜடாமுடியோடு புழுதியும் சாம்பலும் படிந்த இவர்களின் சரீரங்களைத் தூரத்திலிருந்து பார்க்கையில் பிச்சைக்காரர்கள் என்று தவறாக மதிப்பிட வாய்ப்புண்டு. உற்றுப் பார்க்கையிலேதான் ஒவ்வொருவர் கண்ணிலும் ஒரு தீர்க்கமான திருப்தியை காணலாம். இவர்கள் வாழ்க்கையின் சிற்றின்பங்களை வெறுத்து அழியாச்சுடர்ஞானத்தை நாடி வனவாசம் சென்ற துறவிகள்.

சௌரிய தேசத்தைப்போல் மிக உயர்ந்த நாகரீகமும் உயர்தர சௌகரியங்களும் இல்லையென்றாலும் சூரநாட்டுத் தலைநகரில் வெவ்வேறு வசதிகள் உண்டு. எல்லைநகரைப்போல் இங்கு தெருக்குத்தெரு பிச்சைக்காரர்களைக் காணமுடியாது. தெருக்கள் ஓரளவு சுத்தமாகவும் இருக்கும். அரசன் வசிக்கும் நகரல்லவா? இடைவெட்டுச்சந்துக்களை அழகிய சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்களும் நீரூற்றுகளும் உண்டு. இவைகளை பாதுகாக்க காவலர்களும் நடமாடுகிறார்கள்.

தெருக்களின் இரு பக்கங்களிலும் பயணிகளுக்கு நிழலளிக்கும் விசாலமான மரங்கள். இவைகளில் பல சந்தன மரங்கள். தென்றல் வீசும்போதெல்லாம் இவற்றின் கிளைகளிலிருந்து சிறிது சுகந்தத்தைப் பறித்து நம்மீது தடவி விட்டுப் பறக்கிறது.

இலையுதிர்காலமானதால் மரங்கள் தத்தம் இலைவஸ்திரங்களை உதிரவிட்டு குளிர்கால ஆழ்நித்திரைக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

வீதியில் நடந்து கொண்டிருக்கும் லூமாவை வரவேற்குமாறு பூம்பொழிகைப்போல் வெவ்வேறு வண்ணங்களில் உதிரும் இலைகள் அவனை அபிஷேகிக்கின்றன.

இந்நாட்டுப் பிரஜைகள் சற்று நாகரீகம் தெரிந்தவர்கள் போலத்தான் காட்சியளிக்கிறார்கள். மங்கையர் அவரவர் வீட்டு வாசல்களை நீர்தெளித்து கோலமிட்டு விருந்தோம்பல் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அஸ்தமிக்கும் சூரியனின் பசும்பொன்னொளியில் கோலங்களின் மீது இலைகள் மிருதுவாக மெல்ல ஆடி ஆடி மிதந்து வந்து துறைமுகம் திரும்பும் தங்கப்படகுகள் போல் நிற்கின்றன.

தலைநகரின் ராஜவீதியில் ஒரு வசதியான பெரும் இல்லம். அரண்மனை போல் இல்லையென்றாலும் ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டு ஈர்க்கக்கூடிய எழில் படைத்தது. இதுதான் ராஜகுரு கீரரின் வாசஸ்தலம். வீட்டுத் திண்ணைக்கும் தெருவுக்கும் இடையே ஒரு பெரிய பூந்தோட்டம். மலர்கள் நிறைந்த செடிகொடிகள். சில தோட்டக்காரர்கள் இவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தோட்டத்தின் ஒரு மூலையில் ஒரு அழகான வெண்பந்தல் கொண்ட கூடாரம். அது ஒரு பள்ளிக்கூட வகுப்பறைபோல் அமைந்திருக்கிறது – மேசைகள், நாற்காலிகள், எழுதுபலகைகள் போன்றவற்றை அங்கு காணமுடிகிறது.

வீட்டைச் சுற்றி பல ஏவலாளர்கள் அங்குமிங்கும் பணியில் ஈடுபடுள்ளார்கள். வீடு நன்கு பராமரிக்கப்பட்டது போல் உள்ளது.

கீரர் சுமார் எழுபத்து ஐந்து வயதான முதியவர். வீட்டு திண்ணையில் ஒரு எளிமையான நாற்காலியில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார். களங்கமற்ற கருந்தேகம். தேகத்திற்கு எதிர்மாறாக வெள்ளிபோல் நரைத்த முடியும் தாடியும் கழுத்தளவு நீளத்தில் கவனமாய் வெட்டப்பட்டிருக்கின்றன. மேல்நோக்கி முறுக்கிய மீசை சிரித்துப் பழகிய வாயை சாடை குறிக்கிறது. வயதாகியும் வாழ்க்கையின் விளையாட்டுத்தன்மையை ரசித்துப் பகிரவேண்டும் என்ற ஆசையை மூடி மறைக்காத புன்னகை வாழும் கண்கள் கொண்டுள்ளார்.

அங்கவஸ்திரத்தை துண்டுபோல் மடித்து இடது தோள் மீது போட்டிருக்கிறார். அதனால் புசுபுசுவென மார்பிலிருக்கும் வெண்மயிர்த் திரைக்குப்பின் பசித்தப்பின் அளவோடு புசித்த ஆரோக்கியமான மெல்லிய வடிவம் தெரிகிறது. ஆனாலும் அவர் நாற்காலியருகில் ஒரு நடைக்கம்பைச் சாய்த்து வைத்திருக்கிறார்.


மனைவாயில் திறந்திருந்ததால் லூமா உள்ளே நுழைந்து திண்ணைக்குச் செல்லும் வாசற்படியின் கீழ் கைகூப்பி நிற்கிறான்.

“ஐயா, என் பெயர் லூமா. நான் ஒரு சௌரிய நாட்டு அகதி. அனாதை. இங்கு வந்து உங்களைச் சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன்.

கீரர் புத்தகத்திலிருந்து தலைநிமிர்ந்து வந்தவனை உற்றுப்பார்க்கிறார். “ம்ம்ம்? சௌரியன் என்று சொன்னாயா? நான் உன்னை சந்திக்கவேண்டுகிறேன் என்று நீ ஏன் நினைக்கிறாய்?”

1529706081617.png

லூமா ஒரு அடி முன்னால் வைக்கிறான். “மன்னிக்கவேண்டும் குருநாதா. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நல்லெண்ணம் கொண்ட ஒரு சிறுமி எனக்கு உங்களிடம்தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று போதித்தாள்.”

கீரர் ஒன்றும் சொல்லாமல் சில வினாடிகளுக்கு அவனையே உற்றுப் பார்க்கிறார்.

லூமாவின் குரலில் சிறிது தயக்கம் தெரிகிறது. இங்கு புகலிடம் கிட்டாவிடில் என்ன செய்வது என்ற கவலை அவனைப் பற்றுகிறது.

“நான் சொன்னதில் ஏதேனும் தவறு இருந்தால் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் சுவாமி. நான் சென்றுவருகிறே-”

கீரர் குறுக்கிடுகிறார். “அருகில் வா சௌரியனே. என் வயதான கண்களுக்கு உன் முகம் சரியாக தெரியவில்லை.”

லூமா படியேறி கீரரின் முன்னால் கைக்கூப்பி வணங்கி நிற்கிறான். “சௌரியதேசத்து வெள்ளிக்குல லூமா, குருநாதா. உங்கள் மரியாதைக்குரிய சேவகன்.”

கீரர் ஒன்றும் சொல்லாமல் அவன் கூப்பிய கைகளை பிரித்து தனது கைகளில் ஏந்திப் பிடித்து அவன் கண்களுக்குள் ஆழமாகப் பார்க்கிறார்.

“லூமா, ம்ம்ம்? வெள்ளிக்குலன், ம்ம்ம்? சரியான பெயர்தான். உன் கண்களில் வெள்ளியின் பிரகாசத்தையும், வேகத்தையும், கூர்மையான அறிவுத்திறனையும் காண்கிறேன். ஆனால்…” என்று தயங்குகிறார்.

“... ஆனால் … உன் இதயத்தில் வெள்ளியின் மிருதுத்தன்மையைக் காணமுடியவில்லையே?”

“ஐயா…” என்று லூமா ஏதோ சொல்ல முயல்கிறான்.

கீரர் மீண்டும் குறுக்கிடுகிறார். “கேள்வி என்னவென்றால்… உன் மிருதுத்தன்மை உறங்குகிறதா அல்லது இறந்துவிட்டதா? ஒருவேளை ஒளிந்து கொண்டிருக்கிறதா? மிருதுவான வேறொரு இதயத்தினால் அதைத் தட்டி எழுப்பி வெளிக்கொண்டுவர முடியுமா? ம்ம்ம்?”

லூமாவிற்கு அவர் சொன்னது ஏதும் புரியவில்லை.

“சுவாமி, எனக்கு தெரிந்ததெல்லாம் நான் உங்களுக்கு பணிசெய்து மட்டுமே பாதுகாப்பு அடைய முடியும் என்பதே.”

ஒரு நொடி நிறுத்தி மீண்டும் தொடர்கிறான்.

“நான் ஒரு விசுவாசம் மிகுந்த சேவகன் ஐயா. மேலும் அறிவுத்திறன் படைத்தவன். என்னால் பல சிக்கலான விஷயங்களை உடனே புரிந்துக்கொள்ள முடியும்…”

கீரர் ஒன்றும் சொல்லாமல் அவன் சொல்வதையே மும்முரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பாடப்புத்தகம்போல் அவனைப் படிக்கிறார் எனச் சொல்லலாம்.

“... உங்கள் சேவகனாக இருக்க நான் மிக்க கடன்பட்டிருப்பேன். மனமிரங்கி உங்கள் சீடனாகவும் என்னை ஏற்றுக்கொண்டீரானால் ஒரு சிறந்த மாணவனாகவும் இருப்பேன்…”

“... ஆனால், நீங்கள் சொன்னதெல்லாம் நான் புரிந்துக்கொண்டேன் என்று நான் சொன்னால் அது ஒரு நாணயமற்ற பொய்யாகிவிடும். நேர்மை தவறாது வாழவேண்டும் இல்லையேல் வாழ்க்கையே வீணாகிவிடும் என்றுதான் என் அன்னை எனக்கு போதித்தாள்.”

“ஆ! நேர்மை! எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது சௌரியா. நீ சொல்வது சரி தான். எனக்கு நீ ஒரு சிறந்த சீடனாக இருப்பாய். ஒருநாள் எனக்குத் தெரிந்ததெல்லாம் உனக்கும் தெரியவரும். நான் உன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளத் தயார், ஆனால்…” என்று தயங்குகிறார்.

“... அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது …” என்று சொல்லியபடியே மீண்டும் வார்த்தையில்லா விடையை அவன் கண்களுக்குள் தேடுகிறார்.

“குருநாதா?” என்று குழப்பத்துடன் கேட்கிறான்.

“ஒரு நாள்… பல்லாண்டுகளுக்குப் பின் ஒரு நாள்…”

“... உன்னைப்போலவே ஒரு சௌரியதேசத்துச் சிறுவன் உன் கதவைத் தட்டி வருவான். உன்னைப்போலவே கோரிக்கையிடுவான்...”

நிறுத்தி லூமாவின் முகபாவத்தை சற்று ஆராய்கிறார். பின்னர் ஒரு திருப்தியுடன் தொடர்கிறார்.

“... அவனை நீ ஒரு கேள்வியும் கேளாமல், நான் உன்னை இப்போது ஏற்றுக்கொள்வது போல் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு நீ சம்மதிப்பாயா?” பதிலறிந்தும் கேட்கவேண்டிய கேள்வி போல் கேட்கிறார்.

“அது சத்தியம் சுவாமி. நீர் சொல்லும்படியே ஆகட்டும்.” என்று கூறி மீண்டும் கைகூப்பி தலைவணங்குகிறான்.

கீரர் அவன் நிமிர்ந்து நிற்குமாறு சமிஞ்ஞை செய்து ஆசனத்திலிருந்து எழுந்து நடைகோலைப் பற்றுகிறார். அவருக்கு இவனைப்பற்றி நமக்கு தெரியாதது ஏதோ தெரிந்திருப்பதுபோல் இருக்கிறது.

“முடிவெடுத்துவிட்டோம் அல்லவா? என்னுடன் வா.” என்று வீட்டினுள் அழைத்துச் சென்றபடி பேசுகிறார். “விசித்திரமான விஷயம் ஒன்று என்ன தெரியுமா? இப்போதுதான் நான் என் மகள் ஜானிர்யாவிற்கு ஒரு சேவகனைத் தேடிக்கொண்டிருந்தேன். தற்செயலாக சரியான சமயத்தில் நீ வந்து சேர்ந்தாய்…”

உள்வாசற்படியருகில் சற்று நின்று மெல்லிய குரலில் “... நீ அவள் சேவகனாகப் பணிபுரிந்து அவள் பிரயாணங்களின் போது அவளுடைய பாதுகாப்பாளனாக இருக்கவேண்டும்…

… அதாவது நான் கற்றுக்கொடுக்கும் பாடங்களை படுகவனத்துடன் படிக்காத வேளைகளில்…” என்று விஷமப் புன்சிரிப்பு சிரிக்கிறார்.

“... ஆனால் அவளிடம் மட்டும் பாதுகாப்பாளன் என்ற வார்த்தையை தவறியும் சொல்லிவிடாதே. சொல்லி விட்டாயானால், உன் உயிருக்கு நான் உத்திரவாதம் இல்லை.” என்று சொல்லிவிட்டு களுக் களுக் என்று சிரிக்கிறார்.

வீட்டினுள் இருவரும் நுழைகிறார்கள்.தொடரும்...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.