ராட்சச ரகசியம் - Ratchasa Ragasiyam By Ambara Santham

Joined
Apr 27, 2018
Messages
32
Likes
28
#21
Post 018:

அத்தியாயம் பதினைந்து – ஜானிர்யாவின் சித்திரங்கள்
கீரரின் இல்லம். விசாலமான ஜன்னல்கள் கொண்டு வெளிச்சம் பொங்கும் இந்த மாடியறைதான் ஜானிர்யாவின் சித்திரச்சாலை. சுவர்களில் பலவிதமான சித்திரங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. ஜன்னல் அருகே ஒரு வரைப்பலகை தாங்குசட்டம். அதன்மீது வெண்ணிற வரைப்பலகை காலியாக இருக்கிறது. அதனருகே இரு மேஜைகள். சிறிய மேஜை மீது ஒரு வண்ணத்தட்டு. அதன்மீது சுமார் பத்துப் பதினைந்து இடங்களில் வெவ்வேறு வண்ணம் கொண்ட சாயங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

ஜன்னலை நோக்கி இருக்கும் பெரிய மேஜை மீது ஒரு பழைய செம்புத் தட்டு. தட்டின்மேல் புதுக் குங்குமம் போல் சிவப்பு நிறப் பழம் ஒன்று இருக்கிறது. சூர்யாஸ்தமனம் ஆன மேற்குவான அந்தியொளி ஜன்னல் வழியாக பழத்தின் மீது பொழிந்து அதைக் கண்ணாடிப் பழம் போல் பளபளக்க வைக்கிறது.

தாங்குசட்டத்தின் பக்கத்தில் ஒரு பதினாறு வயது சிறுமி. அவள் கையில் ஒரு வர்ணக்கோலை பேனா போல் பிடித்துக்கொண்டு ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாள். இவள்தான் ஜானிர்யா. கீரரின் ஒரே மகள் – ஓவியை. சித்திரம் எழுதுவதே இவளுடைய ஒரே பொழுதுபோக்கு. ஓவியக்கலை மீது பேரார்வம் கொண்டவள்.

ஜானிர்யாவிற்கு விசாலமான குறும்புக்காரக் கண்கள். எண்ணெய் தேய்த்து சீவிய கருங்கேசம் இரட்டை பின்னலாய்ப் பின்னப்பட்டிருக்கிறது. பின்னலின் நுனியைப் பார்த்தால் இவளைப்போலவே சுயேச்சையான மனப்பான்மை கொண்ட சுருண்ட முடி அடங்க மறுத்து பின்னலினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தெரியவரும்.

நீல மலர்கள் சித்தரிக்கப்பட்ட ரவிக்கை, லூமாவின் கண்கள் போல் கருநீல வண்ணங்கொண்ட பட்டுப்பாவாடை. போர்த்திக்கொள்ள அதற்கு ஈடான ஒளிபுகும் வெள்ளைத் தாவணி. ஜானிர்யாவிற்கு மெல்லிய வடிவம். மல்லிக்கொடியிடை மாசற்ற மாநிற மேனியைக் காட்டுகிறது. தொப்புளில் ஒரு சிறிய தங்க வளையம் மின்மினுக்கிறது. வளையத்திலிருந்து ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி தொங்கி அதன் நுனியில் ஒரு தங்கத்தாமரை ஊசலாடுகிறது – அவள் காதிலாடும் தோடுகள் போலவே.

காலடி ஓசையைக் கேட்டவுடன் ஜானிர்யா திரும்பிப்பார்த்து பெரும்புன்னகை ஏந்தி “அப்பா!” என்று அறைவாசல் அருகே ஓடி வந்து கட்டிக்கொள்ள முயற்சிக்கிறாள். அவர் பின்னால் நிற்கும் லூமாவைப் பார்க்கவில்லை.

ஓடிவரும் மகளின் கையில் இருக்கும் வண்ணக்கோலை பார்த்து கீரர் சற்று தயங்கி நகர்கிறார். “வேண்டாம் அம்மா. உன் சாயங்களைப் பூச உனக்குத்தான் வரைகலம் உள்ளதே. இம்முறையானது என் வேட்டி அங்கவஸ்திரத்தை விட்டுவிடு.”

“கவலைப்படாதே அப்பா. இது புதிய வண்ணக்கோல். சாயம் காணாதது. இன்னும் நான் எழுத ஆரம்பிக்கவில்லை. உங்களை பயமுறுத்தத்தான் இதை வாள் போல் வீசிக்கொண்டே ஓடி வந்தேன். ஹி ஹி...” சுழற்றிப்போட்ட சோழிபோல் சிரிப்பைச் சிந்துகிறாள்.

கீரரும் சிரிக்கிறார். அவளை அணைத்து உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிடுகிறார். அப்போது ஓரக்கண்ணால் ஜானிர்யா கீரரின் பின் நிற்கும் லூமாவைப் பார்த்துவிடுகிறாள். சட்டென்று தந்தையின் அணைப்பிலிருந்து வெளிவந்து ‘யாரிவன்’ என்றபடி லூமாவைப் பார்க்கிறாள்.

உடனே கீரர் அவனை அறிமுகப்படுத்தி வைக்கிறார். முதலில் லூமாவிடம் “இவள்தான் என் அன்புமகள் ஜானிர்யா. இவளிடம் வெகு ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். ஒரு நிமிடம் கண்சிமிட்டினால் ஆளையே விழுங்கி விடுவாள். எப்பொழுதும் விஷமம்தான்.” என்கிறார்.

பிறகு ஜானிர்யாவை நோக்கி “ஜானிப்பட்டு, இவன் பெயர் லூமா. சௌரியதேச வெள்ளிக்குல சிறுவன். என்னிடம் பயில நம் நாட்டிற்கு வந்திருக்கிறான். பாவம், அனாதை. அதனால் குருதட்சிணைக்கு பதிலாக நம்மிடம் பணியாற்றுமாறு சொல்லியிருக்கிறேன். இவன் முதல் வேலை என்ன தெரியுமா?”

“சமையல் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் அப்பா. எனக்கு நம் சமையல்காரரை மிகவும் பிடித்திருக்கிறது…”

சிரிக்கிறார் கீரர். “இல்லை இல்லை. கவலைப்படாதே செல்லம். இவன் வேலை உன்னோடு சம்பந்தப்பட்டதுதான். வெகுநாட்களாக உனக்கு ஒரு ஏவலாளன் வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...”

“என்ன!” ஜானிர்யா குறுக்கிடுகிறாள். “ஏவலாளனா? எனக்கா? என்ன புதுக் கதையப்பா இது? இதை நான் நம்பவேண்டும் என்று நினைக்கிறீரா?”

“இல்லை அம்மா. நீ பிரயாணம் செல்லும்போது-”

“ஆ! நினைத்தேன். பாதுகாப்பாளன்தானே? ஏவலாளன் என்ற வேஷத்தில் எனக்கு ஒரு பாதுகாப்பாளன் வைக்கிறீரா? பொய் சொல்லாதீர்கள் அப்பா. உங்கள் மனது எப்படி வேலை செய்யும் என்று எனக்குத் தெரியாதா?”

பார்த்தாயா லூமா நான் இவளிடம் படும் பாடை? என்றபடி சற்று லூமா பக்கம் கடைக்கண் பார்வையாய்ப் பார்க்கிறார்.

பின்னர் ஜானிர்யா பக்கம் திரும்பி ஒன்றும் தெரியாதபடி அவள் முன்பு பேசிய அதே ராகத்தில் “என்ன? பாதுகாப்பாளனா? உனக்கா? வேடிக்கையாய் இருக்கிறதே. யார் அப்படி நினைத்தது? கூப்பிடு. நன்றாய்த் திட்டி அனுப்புகிறேன். உனக்கென்ன பாதுகாப்பு வேண்டிருக்கிறது? உன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களையல்லவா பாதுகாக்கவேண்டும்?” என்று சிரிக்கிறார்.

“கவலைப்படாதே ஜானிக்குட்டி. நீ இவனை உன் தோழன் என்று நினைத்துக்கொள்ளேன். நீ சித்தரிக்கத் தொடங்கும்போது எவ்வளவு முன்வேலை இருக்கிறது என்பதைத் தெரிந்துதான் உனக்கு உதவி செய்யுமாறு இவனிடம் சொன்னேன். கடைக்குச் சென்று சாயம், பலகைகள், கோல்கள், சட்டங்கள், இவைகளை வாங்குவதற்கு, சாயங்களைக் கலந்து கொடுப்பதற்கு, உன்னுடன் சித்திரக் கண்காட்சிகளுக்கு உன் ஓவியங்களை ஜாக்கிரதையாக சுமந்து வருவதற்கு… இதற்கெல்லாம் லூமாவை ஒத்தாசைக்கு வைத்துக்கொள்.”

“அதற்கெல்லாம் ஓவியக்கலை பற்றி தெரிந்திருக்க வேண்டுமே அப்பா. முன்பின் தெரியாதவனைக் கூட்டி வந்து சித்திரம் எழுத உதவிசெய் என்பது குருடனைக் காட்டுமுழி முழித்து காட்டு என்பது போல்…”

இவர்கள் இப்படி வீண்விவாதம் செய்துக் கொண்டிருக்கும்போது இவர்களே அறியாமல் லூமா அறைக்குள் நுழைந்து விட்டான். சுவற்றில் மாட்டிய ஓவியங்களை ஒன்று ஒன்றாய் நின்று ரசித்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது.

லூமா அருகில் இல்லை என்பதைத் திடீரென உணர்ந்த இருவரும் அறையினுள் திரும்பிப் பார்க்கிறார்கள். தான் எழுதிய சித்திரங்களை இவ்வளவு ஆர்வத்துடன் அவன் ரசித்துப் பார்க்கிறானே என்று அவள் ஆச்சரியப் படுகிறாள். புன்னகைக்கிறாள்.

நான் சொன்னேனே, பார்த்தாயா?’ என்றபடி கீரர் மகளைப் பார்த்து தலையை ஒருபுறம் தாழ்த்தி மறுபுறம் புருவத்தைத் தூக்கி ‘எப்படி என் தேர்வு?’ என்று மௌனமாய் செய்கையினால் வினாவுகிறார்.

போதும் உங்கள் வெட்டிப்பெருமை பீத்திக்கொள்ளுதல்’ என்றபடி “ம்ம்க்கும்” என்று மூச்சை அழுத்தி விட்டு, தலையசைத்து, கீரரை விட்டு லூமாவின் அருகில் சென்று, மௌனமாக அவன் காணும் சித்திரத்தையே அவளும் இரு நொடிகள் ஆராய்ந்து, அவன் பக்கம் திரும்புகிறாள்.

அருகில் வந்தவள் பக்கம் உடனே மரியாதையுடன் திரும்புகிறான் லூமா. “வணக்கம் அம்மா-” என்று தொடங்கும்போதே ஜானிர்யா உள்ளங்கையை உயர்த்தி ‘நிறுத்து’ என்றபடி காட்டுகிறாள்.

1529706382014.png
“இதோ பார் லூமா. நீ எனக்கு ஒத்தாசை செய்யப் போகிறாய் என்றால் முதலில் ஒன்று தெரிந்துக்கொள். நான் என்ன உன்னைப் பெற்றெடுத்தேனா?”

“இல்லை அம்-” மீதி வார்த்தையை தானே விழுங்குகிறான்.

“ம்ம். அதுதான் சரி. நான் அம்மா அல்ல. என் பெயர் ஜானிர்யா. எனக்கு என் பெயரின் ஓசையை கேட்கப் பிடிக்கும். அப்பாதான் என்ன சொன்னாலும் எப்பொழுதும் அதைக் குலைத்து திருகி முறுக்கி… அப்பப்பா! ‘ஜானிக்குட்டி, ஜாப்பட்டு, ஜாஜீ’’, என்றெல்லாம்… நன்றாய் பெயர் வைக்க மட்டும் தெரிந்தது… ஆனால் அழைக்கத் தெரியவில்லை.” ஓரக்கண்ணால் தந்தையைப் பார்த்து ‘என்ன நான் சொல்வது சரிதானே?’ என்று பாவனை செய்கிறாள்.

“இல்லையம்மா ஜாபட்-” குற்றவாளிபோல் முகபாவம் செய்து சட்டென்று மீதி வார்த்தையை விழுங்கி “உன் அன்னைதான் உனக்கு அந்த பெயர் வைக்க-”

“நினைத்தேன்!” என்கிறாள் ஜானிர்யா. “பார்த்தாயா லூமா? ஆனது ஆகட்டும். நீ என்னை ஜானிர்யா என்றுதான் அழைக்க வேண்டும். அப்புறம் இன்னொன்று. அனாவசியமாக வாங்கள் போங்கள் வேண்டாம். நான் உன்னைவிட வயதில் சிறியவள் என்றுதான் நினைக்கிறேன். நீ தான் சௌரியனாயிற்றே. உனக்கு என்ன இப்போது முன்னூறு நானூறு வயதாகி விட்டதா?” என்கிறாள் தெரிந்தும் தெரியாதபடி அவனைத் தூண்டிவிடுவது போல். அவளைப் பற்றி அறியாத காரணத்தால் அந்த விடைதேடா வினாவிற்கு அவன் உடனே பலியாகிவிடுகிறான்.

“இல்லை ஜானி...ர்யா – பதினாறு வயதுதான் ஆகிறது… அவ்வப்பொழுது “ஜானி” என்றழைத்தால் கோபித்துக் கொள்ளமாட்டீர்- மாட்டாயே?” என்கிறான். சரி என்றபடி புன்னகைக்கிறாள்.

அவளுடைய விளையாட்டுத்தனமான பேச்சு அவன் மனநிலையை சற்று ஸ்திரப்படுத்துவது போல் அவனுக்குத் தோன்றுகிறது. உதடுகள் புன்னகைக்க தவித்து கடந்தகால சம்பவ விலங்குகளினால் கட்டப்பட்டிருப்பதை உணர்கிறான்.

கடும் சோதனைகளுக்குப் பின் ஜானிர்யாவின் இனிமையான கவலையற்ற குரலும் செய்கைகளும் கருமேகத்தின் மேல் வெள்ளி ஜரிகை போல அவனுக்குத் தோன்றுகிறது. விதியின்மீது நம்பிக்கை இல்லாவிடிலும் இங்கு வந்து சேர்ந்ததற்கு யாருக்காவது… எதற்காவது… அவன் நன்றி சொல்லவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

இவர்கள் பேசுவதை கீரர் கதவருகே நின்றபடி நடைக்கோலின் மீது கைகளை ஊன்றி தனக்குத்தானே புன்னகைத்து ரசிக்கிறார். ‘ஆ. இளமையின் துடிப்பு எவ்வளவு அழகானது!
லூமா மீண்டும் சித்திரத்தின் பக்கம் திரும்புகிறான். “அபூர்வமான சித்திரங்கள் ஜானி. இவைகளைக் காணும்போது நிஜமா பொய்யா என்றே தெரியவில்லை. நீ மிக திறமைசாலி போலிருக்கிறது”

15-02-color.jpg

அது உண்மைதான் என்று அறிந்திருந்த தன்னம்பிக்கை மிகுந்த ஜானிர்யா, பொய் அடக்கம் கொண்டு மறுப்பதுபோல நடிக்கவில்லை.

“ஆமாம் லூமா. எனக்கு அந்த ஆற்றல் உண்டு. ஆனாலும் என்னால் அந்த லோகிதாப் பழத்தை வரைய முடியவில்லை. காலை ஆரம்பித்தவள், இன்னும் வரைப்பலகை மீது ஒரு கோடு கூட எழுதவில்லை!”

மேஜை மீது உள்ள பழத்தைச் சுட்டிக்காட்டி அதன் அருகே அவனை அழைத்துச்செல்கிறாள்.

“நீ ஒரு லோகிதாப்பழத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் தேசத்தில் வளராது. இங்கு கூட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காய்க்கும்…”
“நீ சொல்வது சரிதான். நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்திருந்தால் கூட நினைவில் நின்றிருக்காது. காட்சிகளை ஞாபகம் வைத்துக் கொள்ளுவதில் எனக்குத் திறமையில்லை. விஞ்ஞானமும் கணிதச் சின்னங்களும்தான் என் மனதைக் கவருகின்றன. கலைஞன் ஆகியிருந்தால் பரிதாபமான ஒரு கலைஞனாகத்தான் ஆகியிருப்பேன்.”

“தன்னைத்தானே அளவுக்குமீறி தரக்குறைவாகப் பேசாதே லூமா. நான் அதை நம்பவில்லை. இதோ பார்.” என்று மேசை மீதிருக்கும் பழத்தைச் சுட்டிக்காட்டுகிறாள்.
“அந்த பழத்தை வரைய நான் எந்த வர்ணம் பயன்படுத்த வேண்டும்?”
கேள்விகள், பிரச்சினைகள் என்றால் அது உடனே லூமாவின் விஞ்ஞான உணர்வைத் தட்டி எழுப்பிவிடும். உடனே தன்னையறியாமல் பழத்தை விஞ்ஞானி போல தீவிரமாக ஆராய்கிறான்.

‘எப்படிப் பார்த்தாலும் சிவப்புதான். என்னடா அவன் என்ன குருடா? குங்குமச்சிவப்பு என்று சொல்ல எவ்வளவு நேரமாக போகிறது’ என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும் போது லூமா அவளுக்கு பதிலளிக்கிறான்:

“ஒரு வர்ணம் போதாது ஜானிர்யா …” என்கிறான், இன்னும் பழத்தை ஆராய்ந்துக்கொண்டே.

“நிச்சயமாக குங்குமச்சிவப்பு உண்டு. ஆனால், ஆங்காங்கே அந்திவான வெளிச்சம் அதன் தோலில் பிரதிபலிக்கும் இடங்களில் சிறிது நாரஞ்ச வர்ணம் பூச வேண்டும். மேலும், இந்தத் திசையிலிருந்து பார்த்தால் ஓரங்களில் மேல்வானத்தின் நீல ஒளி தெரிகிறது. அதனால் லேசாக வெண்நீலம் கலந்த கருஞ்சிவப்புச் சாயம் தெளிக்க வேண்டும். செம்புத் தட்டின் அருகில் இருக்கும் பாகத்திற்கு செம்புக்களிம்பின் தன்மையளிக்க மாவிலைப்பச்சை… இங்கு கண்ணாடிபோல் ஜொலிக்குமிடம் வெள்ளையாகத் தெரிவதனால், அங்கு சாயமே பூசாமல் வெறுமனே விடவேண்டும்.”

இதை மும்முரமாக கேட்டுக்கொண்டிருந்த ஜானிர்யா சற்று வியப்படைகிறாள். “சபாஷ் லூமா. விஞ்ஞான ரீதியில் சிறந்தவன் என்பதை நிரூபித்துவிட்டாய். உன் அவதானித்தல் பாராட்டுக்குரியது. சற்றே பயிற்சி பெற்றால் நீ ஒரு சிறந்த கலைஞனாக முடியும்...”

லூமா லேசாக சுயதிருப்தியுடன் புன்னகைக்கிறான். “உன் தாராள மனப்பான்மைக்கு மிக்க நன்றி ஜானி. இப்போது நான் ஒரு மிகப்பெரிய ஓவியையின் நிழலில் நிற்பதனால்தான் எனக்கு நானே திகைப்பூட்டுமாறு பேசிவிட்டேன்.”

ஆனால் அதே மூச்சில் ஜானிர்யா விடாமல் தொடர்கிறாள்:

“... ஆம். சிறந்த கலைஞன் ஆகலாம் – அபூர்வமான கலைஞன் அல்ல – ஆனால் நிச்சயம் சிறந்த கலைஞன்.” என்கிறாள்.

“இதை நீ சொல்லி நான் கேட்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் ஜானி.” என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் வேறொரு சித்திரத்தைப் பார்க்கத் திரும்புகிறான். அப்போது ஏதோ ஒன்று தோன்றியதுபோல், திடீரென மறுபடியும் அவள் பக்கம் திரும்பி…

“ஒரே ஒரு சந்தேகம் … நீ கேட்ட கேள்விக்கு ஒரு அபூர்வமான கலைஞன் என்ன பதிலளித்திருப்பான் என்று விளக்க முடியுமா?”

“ஓ. நிச்சயம் முடியும்” என்கிறாள் ஜானிர்யா. “அபூர்வமான கலைத்திறன் படைத்தவருக்கு …”

சட்டென்று தட்டிலிருந்து பழத்தை எடுத்துக் கடித்து, ரசத்தை உறிந்து, கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கிறாள்.

“... பழத்தை ருசிபார்க்கும்வரை அந்த வினாவிற்கு விடை தெரிந்திருக்காது.”தொடரும்...​
 
Joined
Apr 27, 2018
Messages
32
Likes
28
#22
Post 019:

அத்தியாயம் பதினாறு – ஜானிர்யாவும் லூமாவும்
இவ்வாறு அறிமுகமான லூமாவும் ஜானிர்யாவும் இப்படியே பல்லாண்டுகளுக்குப் பழகுகிறார்கள். காலம் செல்ல அவர்கள் பருவ வயதை நெருங்குகையில் ஒருவருக்கு மேல் ஒருவருக்கு மோகம் பிறக்கிறது. இவ்விருவர்களில் உணர்ச்சிகளுக்கு அதிகமாக இடம் கொடுக்கும் ஜானிர்யாவையே இந்த மோகம் அதிகமாய் பாதிக்கிறது. லூமா கீரருடன் பேசும் குரல் சப்தம் கேட்கும்போதெல்லாம் வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும் ஏதோ சாக்கில் கூடத்திற்கு வந்துவிடுவாள். ஆனால் இப்படி ஓடி வந்தவளை லூமா நேருக்கு நேர் பார்க்கும்போது வெட்கத்தில் அவளுடைய முகம் சிவந்து விடும்.

நாளாக ஆக அவளுக்கு எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் லூமாவை பற்றிய எண்ணங்கள் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கின்றன. அவனுக்கு எது பிடிக்கும், அவன் நன்றாக இருக்கிறானா, அவன் என்ன செய்தான், என்ன செய்யப்போகிறான், இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்ற யோசனைகளே மனதில் முக்கியமான யோசனைகளாய்த் தெரிகின்றன.

அவன் என்ன செய்தாலும், அவளை மனதில் வைத்துதான் செயல்படுகிறான் என்ற எண்ணமும் அவளுக்கு உண்டாகிறது. அதனால் அவனுடைய சிறு செயல்களுக்கும் தன்னைத்தானே மையத்தில் காணும் காரணங்களையே அவள் மனம் தயாரிக்கிறது. அவளுடைய உலகமே அவனைச் சுற்றிதான் இயங்குகிறது. ஆனால் அவளுடைய மனதில் இவளைச் சுற்றிதான் அவன் இயங்குகிறாற்போல் இருக்கிறது. லூமாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவளுக்கு விளக்கமுடியாத ஒரு சந்தோஷம் உண்டாகிறது. அதனால் அடிக்கடி அவள் முகத்தை அவளுக்குத் தெரியாமலேயே ஒரு அசட்டுப் புன்னகை அலங்கரிக்கிறது.


ஒரு நாள் கீரர் ஜானிர்யாவின் சித்திரச்சாலை அறைக்கு அவளைப் பார்க்கச் சென்றபோது காணும் சித்திரங்கள் அனைத்தும் லூமாவைப் பற்றியே இருந்தன.

“அடுத்த சித்திரக் கண்காட்சிக்கு தயாராகி கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே. இந்தக் கண்காட்சியில் ‘வாலிபன்’ என்ற கருத்துக்கொண்ட படங்களைக் கேட்டிருந்தாரோ?”

“கண்காட்சிகளேதும் இல்லையே அப்பா. இவை அனைத்தும் சாதாரண படங்கள் தானே?”

“அப்படியா?” என்கிறார் கீரர் ஆச்சரியத்துடன். “இப்படங்கள் அனைத்திற்கும் ஒன்றுபட்ட கருத்து ஏதும் இல்லையா?”

“இல்லையேப்பா. ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளைத்தானே காண்பிக்கிறது?”
அவளுக்கே தெரியாமல் லூமாவின் மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பதை கீரர் உணர்கிறார்.

“சரியம்மா ஜானிக்குட்டி. எனக்கு நீ ஒரு பூவின் படத்தை வரைந்து காட்டுகிறாயா?”

“சரி அப்பா” என்று கூறி ஒரு காகிதத்தை எடுத்து வண்ணக்கோலை தோய்த்தெடுத்து சர சரவென்று வேகமாய் சித்திரம் ஒன்றைத் தீட்டுகிறாள்.

“நன்றாக இருக்கிறதே செண்பகப்பூ. ஆனால் பூ மட்டும்தானே கேட்டேன், ஏன் அதற்கும் மீறி வரைந்திருக்கிறாய்?”

“ஆமாம் அப்பா, பூ தானாக காற்றில் மிதக்குமா என்ன? அதனால்தான் அதை பிடித்துக்கொண்டு நிற்குமாறு ஒரு மனிதனையும்-”

“லூமாவையும் என்று சொல்.” என்கிறார் கீரர் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“லூமா என்றுதான் வைத்துக்கொள்ளுங்களேன்… இந்த காட்சியில் பூ ஒன்று இருப்பதற்கு காரணம் தேவை. அதற்கு அவன் சாதகமாக இருக்கிறான்.” என்கிறாள்.

“சரி, எனக்கு ஒரு மீனை வரைந்து காட்ட முடியுமா?” என்கிறார்.

“ஓ முடியுமே!” என்று உற்சாகத்துடன் வேறொரு காகிதத்தை எடுத்து விறுவிறுவென்று வரைகிறாள்.

“உன் திறமையைக் கண்டு நான் வியப்பதற்கு எல்லையே இல்லை போலிருக்கிறது ஜாப்பட்டு. என்ன சோபை நிறைந்த குளம்! தாமரைகளும் அல்லிமொட்டுகளும் அழகிய மங்கையின் கூந்தலை அலங்கரிப்பது போலல்லவா காட்சியளிக்கின்றன… இந்த மீனும் எத்தனை அழகு. பஞ்சவர்ண மீனோ? இது என்ன? மீனுக்கு பக்கத்தில் தெளிவான நீரின் மீது?”

“ஓ! அதுவா? இத்தனை அழகிய குளத்தை ரசிக்க ஒருவரும் இன்றி அது இருந்து என்ன பயன்? அதனால்தான் அந்த பிரதிபலிப்பை நான் லேசாக அங்கு வரைந்திருக்கிறேன். இந்த காட்சியை குளத்திற்கு வெளியிலிருந்து பார்த்து ரசிக்கும் ஒரு மனிதனின்-”
“லூமாவென்றுதான் சொல்லேன்.” என்கிறார் கீரர்.

“ஆமாம் அப்பா!” என்கிறாள் ஆச்சரியத்துடன். “நீங்கள் சொன்ன பிறகுதான் நானே உணர்ந்தேன். பிரதிபலிக்கும் முகம் லூமாவை போலவே இல்லை?”

“சரியம்மா. பிரமாதம்தான். எனக்கு ஓவியத்தில் நீ கொடுத்த சிறு பயிற்சிக்கு மிக்க நன்றி.” என்று சிரித்துக்கொண்டே எழுகிறார்.

“இருங்கள் அப்பா. என்ன அவசரம்? உங்களுக்கு வேறு ஏதாவது வரைந்து காட்டவா?” என்கிறாள்.

“வேண்டாம் குழந்தாய். நீ என்ன வரையப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும்.” என்று சிரித்துக்கொண்டே புரியாப் புதிரிடம் சிக்கியது போல் காட்சியளிக்கும் ஜானிர்யாவை விட்டு அறையிலிருந்து வெளியேறுகிறார்.


மற்றொரு நாள் இரவு உணவுக்கு கீரர், ஜானிர்யா மற்றும் லூமா – மூவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். விரித்த வாழையிலை மீது பணியாள் துளசிப் பச்சிடியை பரிமாறுகிறான். கீரர் இதைக்கண்டு ஆச்சரியப்படுகிறார்.

“எனக்கு ஒன்று புரியவில்லை” என்கிறார். “ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாய் சமைத்து நம் அனைவருக்கும் வியப்பூட்டி விருந்தளிக்கும் சமையல்காரர் ஏன் கடந்த ஒரு மாதமாக தினமும் துளசிப் பச்சடி மட்டும் தவறாமல் செய்கிறார்?”

“பாவம் குருநாதா, அவர் செய்வதை செய்யட்டுமே. ருசியாகத்தானே இருக்கிறது.” என்கிறான் லூமா சற்று குறும்புத்தனமாகச் சிரித்துக்கொண்டே. துளசி பச்சடி என்றால் அவனுக்கு உயிர் என்று கீரருக்குத் தெரியும் என்பது அவனுக்கும் தெரியும்.

“அது இல்லை லூமா. அவர் செய்வதை செய்யட்டும். ஆனால் தனது இயல்புக்கு மாறாக இரண்டு நாட்கள் ஒரே பண்டத்தை சமைக்க மாட்டாரே, அதுதான் ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை நீ அவரிடம் ஏதாவது கோரிக்கை இட்டிருந்தாயோ என்று நினைத்தேன்.”

உடனே பணியாள் குறுக்கிடுகிறான். “இல்லை சுவாமி. லூமா சமையலறைக்குள் நுழைந்ததே இல்லை. ஒரு நாள் நமது தேவி தான்…” என்று சொல்லிக்கொண்டே ஜானிர்யாவைப் பார்க்கிறான். அவள் முறைக்கிறாள்.

உடனே மீதி வாக்கியத்தை லபக்கென்று விழுங்கி “மஹ்ரர்ம்… நான் போய் பாயசத்தில் உப்பு… இல்லை இல்லை … சர்க்கரை கரைந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று திக்கி திக்கிப் பேசி அவசரமாக இடத்தைக் காலி செய்கிறான்.

ஜானிர்யா ரகசியமாக புன்னகைக்கிறாள். ஆனால் கீரர் அதை பார்த்து விடுகிறார்.
“ம்ம்ம்…” என்கிறார் விளையாட்டுத்தனமாக. “... எனக்கு பிடித்ததையெல்லாம் யார்தான் இப்படி சிபாரிசு செய்யப்போகிறார்களோ?” என்று சொல்லிக்கொண்டே விஷமக்கார கண்களுடன் ஜானிர்யாவை பார்க்கிறார். அவள் தலைகுனிந்து வெட்கத்தில் சிவந்த முகத்தை மறுபக்கம் திருப்ப முயற்சிக்கிறாள்.


வேறொரு நாள், பள்ளியிலிருந்து திரும்பிய கீரர் கூடத்தில் இருக்கும் மஞ்சத்தின் மீது சோர்வடைந்து அமர்கிறார். சேவகன் அவருக்கு ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வரவே அதைக் குடித்து அவனிடம் செய்கையால் நன்றி சொல்கிறார்.

“இன்று மிகக் கடினமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தேன் கதிர்முகா. இறுதியில் கேட்ட கேள்விகளுக்கு ஒருவன் கூட சரியான பதில் அளிக்கவில்லை. லூமா கூட தவறாய்ப் புரிந்து கொண்டு விட்டான். ஆகவே அனைவரையும் இன்று தண்டித்து விட்டேன்.” என்கிறார்.

இப்படி சொல்லி முடிப்பதற்குள் மாடியறையிலிருந்து தடதடவென்று படியிறங்கும் சப்தம் கேட்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவருக்கு முன் ஜானிர்யா நிற்கிறாள். அவள் கண்களில் கவலை தெரிகிறது.

“தண்டனையா? என்னப்பா இது? லூமா கூட தவறாகச் சொல்லிவிட்டானா?”

“ஆமாம் அம்மா. இன்று அவனுக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்-”

ஜானிர்யா அவசரமாக குறுக்கிடுகிறாள். “சரியாகத்தான் இருக்கும் அப்பா. அவன் சொன்னதை நன்றாக யோசித்துப் பார்த்தீரா?”

கீரர் தனக்குள் பிறக்கும் புன்சிரிப்பை அடக்கிக் கொள்கிறார். “யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன் ஜாக்குட்டி. நீ கவலைப்படாதே.”

“ஆனால் இப்படி தண்டித்து விட்டீரே அப்பா? மிக கொடிய தண்டனையோ?”
“ஆமாம். ஆமாம். ஆயிரம் தோப்புக்கரணங்கள்-”

“ஆ!” என்று குறுக்கிட்டு பூவிதழ் கன்னங்களை இரு கைகளினாலும் கூப்பி அதிர்ச்சியுடன் கத்துகிறாள்.

கீரர் வாய்விட்டு சிரிக்கிறார். “கவலைப்படாதே செல்லம். மீண்டும் ஒருமுறை பாடத்தை முதலிலிருந்து படிக்கும்படி சொல்லியிருக்கிறேன். அதுதான் தண்டனை.”

“அப்பாடா!” என்கிறாள் ஜானிர்யா. “பயந்தே போய்விட்டேன். மனிதாபம் மிகுந்த மகான் மகிஷாசுரனாகி விட்டார் என்ற புரளியை சீடர்கள் கிளப்பிவிடுவார்களோ என்று.”

“ஆம். அதனால்தான் நான் மாணவர்களைத் தண்டிக்க கூடாது என்று நீ ஆசைப்படுகிறாய் என்று தெரிகிறது” என்கிறார் நக்கலாய் சிரித்துக்கொண்டே.

சற்று வெட்கப்படுகிறாள் ஜானிர்யா. ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் “லூமா சொன்னதை மீண்டும் யோசித்துப் பாருங்கள் அப்பா. ஒரு வேளை அவன் சரியான பதிலைத்தான் தவறான முறையில் விளக்கியிருப்பான்.” என்கிறாள்.

“ஆகட்டும் குழந்தாய் ஆகட்டும்” என்று சிரித்துக் கொண்டே கீரர் சொல்கிறார். விடாமல் ஜானிர்யா மீண்டும் மாணவர்களுக்கு (லூமாவிற்கு) பரிந்து பேசுகிறாள்.

“என்ன இருந்தாலும் ஆசிரியர் கற்றுக்கொடுப்பது அனைத்து மாணவர்களுக்கும் புரியவில்லை என்றால் அது அவர்களுடைய குற்றமா என்ன? குருதானே சரியாக கற்றுக் கொடுக்கவில்லை என்றாகும்? அதனால் தண்டனை பெறவேண்டியது அவர்தானே?” என்கிறாள்.

கீரருக்கு சிரிப்பு தாங்கவில்லை. வாய்விட்டு சிரித்து எழுந்து நின்று அவளை அனைத்துக்கொள்கிறார்.

“குழந்தாய், குழந்தாய்… வாஸ்தவம்தான். என்னை இம்மாதிரி தண்டிப்பதற்காகத்தானே நீ இருக்கிறாய்?” என்கிறார்.

அவருடைய அணைப்பில் இருக்கும் ஜானிர்யா ஆசையாய் குஸ்தியிடுவது போல் தனது சுருட்டிய கரங்களினால் அவர் மார்பை குத்து குத்து எனக் குத்துகிறாள், “போங்கள் அப்பா” என்று சொல்லிக்கொண்டே.தொடரும்...​
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.