வசம்பு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வசம்பு

குழந்தை மருந்துகளின் பட்டியலில் மிக உயரத்தில் இருப்பது வசம்பு. இதற்கு ‘பேர் சொல்லாதது’ என்ற பெயரும் உண்டு. இந்தப் பெயரை எதற்காக வைத்தார்கள் என்ற காரணம் தெரியவில்லை.

நாட்டார் வழக்காற்றியல் துறையினர் ஆராய்ந்தால், வசம்பின் மணம் போன்ற சுவாரசியமான சமூகத் தகவல் ஒன்று கிடைக்ககூடும். 30 வயதைத் தாண்டிய நம்மில் 90 சதவிகிதத்தினருக்கும் மேல், வசம்பின் சுவையைத்தான் தாய்ப்பாலுக்குப் பின்னதாக சுவைத்திருக்கக்கூடும். அப்படி என்ன இருக்கிறது வசம்பில்?

தடுப்பூசி தொடங்காத காலத்தில் கைக்குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து உரை மருந்து. முழங்காலில் கைக்குழந்தையைக் குப்புறப்படுக்கவைத்து குளிக்கவைக்கும் காட்சி கவித்துவமான அறிவியல்.

மூக்கில் நீரேற்றம் நிகழாமல், குழந்தையின் தலையை உயர்த்தி, தன் குலவையிட்டு பாடி ரசனையாய் குளிக்கவைத்து, பிறகு, வலிக்காமல் தலையைத் துவட்டி, அது பசியேறி சிணுங்கும் சமயம், பக்கவாட்டில் உள்ள உரைக்கல்லில் சில சொட்டு தாய்ப்பாலில் இழைத்த உரைமருந்தை, வாயில் தடவி, குழந்தையின் முகக் கோணலை செல்லப் பதற்றத்துடன் ரசித்து, இன்னும் கூடுதலாய் சிணுங்கும் முன் தாய்ப்பாலை வேகமாகப் புகட்டி மகிழ்ந்த செம்மாந்த வாழ்வு நம் வாழ்வு.


அப்படி கொடுக்கப்படும் உரைமருந்தின் கதாநாயகன் வசம்பு. உரைமருந்தாக மட்டுமின்றி, சில இல்லங்களில் கொஞ்சம் கடுக்காய், கொஞ்சம் வசம்பு, கொஞ்சம் மாசிக்காய் எனத் தனித்தனியே இழைத்துக் கொடுப்பதும் உண்டு. தமிழ் மருத்துவம் உரைப்பது என்னவோ, அனலில் வாட்டி எடுத்த வசம்பு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், அக்கரகாரம், கடுக்காய் தோல், மாசிக்காய், நெல்லிவற்றல், கொஞ்சம் பூண்டு இவற்றின் சமபங்கை அதிமதுரக் கசாயம் விட்டு அரைத்து, குச்சி போல் உலர்த்தி எடுப்பர்.

அதிமதுரக் கசாயத்தில் அரைப்பதால், பிற மூலிகையின் மணம், காரம் மறைக்கப்பட்டு, குழந்தைக்கு நாவில் தடவியதும் இனிப்பாய் இருக்கும். உமிழ்நீருடன் உடனடியாய் குழந்தையும் விழுங்கும். கூடவே, தாய்ப்பாலில் சரியாய் இழைத்துத் தருவதால், மிகச்சிறந்த அளவில் அத்தனை மருத்துவக் கூறுகளும் உட்கிரகிக்கப்படும். மாந்தம் எனும் செரியாது கழித்தல், கணை எனப்படும் பிரைமரி காம்ப்ளெக்ஸ், உடல் வெதுவெதுப்பாய் இருப்பது, பால் குடிக்க மறுப்பது, பசியின்மை எனப் பல பிரச்னைகளுக்கு இந்த வசம்பு சேர்ந்த உரை மருந்துதான் இன்றளவும் சரியான தேர்வு.


வசம்பைப் பயன்படுத்தும்போது அதை சுட்டப் பிறகுதான் பயன்படுத்தச் சொல்லியுள்ளது சித்த மருத்துவம். வசம்பு சுட்டகரி எனப் பயன்படுத்தச் சொன்னதற்குப் பின்னால் ஒரு பெரும் மருத்துவ உண்மையும் பொதிந்துள்ளது. வசம்பின் நறுமண எண்ணெயில் உள்ள ஆல்பா அசரோன் எனும் ரசாயனம், நரம்புகளுக்கு நஞ்சானது என ஒரு பீதி இடையில் கிளம்பியது. உண்மையில் வசம்பில் உள்ள எண்ணெய்ச் சத்தில் 0.2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே அந்த ரசாயனம் உள்ளது. 35 - 40 சதவிகிதம் ஆவியாகும் தன்மையுடைய அந்த ரசாயனம், காணாமல்போகும்.

கூடவே, நரம்பைப் பலமாக்கி நற்பலன்களையும் தரும். இதில், நம் முன்னோர்கள் சாதுரியம் பெரிதும் வியக்கவைக்கிறது.

திக்குவாய் இருந்தால் வசம்பு சுட்ட கரியைத் தேனில் குழைத்து, நாவில் தடவி, தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சி கொடுக்க திக்குவாய் அகலும்.

சிறுகுழந்தைகளுக்கு இரவில் வரும் இருமல், சளிக்கு வசம்புடன் அதிமதுரக்கட்டையைச் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க, ஓரிரு நாட்களில் குணமாகும். பெரியவர்களுக்கு கால் மூட்டில் வீக்கமும் வலியும் இருந்தால், வசம்புடன் காய்ச்சுக்கட்டியைச் சேர்த்து அரைத்துப் பற்றிடலாம். வீக்கமும் வாங்கி வலியும் தீரும்.

குழந்தைகள் பால் குடிக்கும் காலத்தில் வரும் வயிற்றுப் பொருமலுக்கு, வசம்பு சுட்ட கரியின் பொடியை, காலை மாலை எனத் தேனில் குழைத்து கொடுக்கத் தீரும். சிறு குழந்தைகள் வெளி உணவுகளைச் சாப்பிட்டு செரியாமை இருந்தால், சுட்ட வசம்பு, பெருங்காயம், அதிவிடயம் திப்பிலி, மிளகு, சுக்கு, கடுக்காய்த் தோல் இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து தேனில் குழைத்துக் கொடுக்க, கழிச்சலும் தீரும். செரியாமை நீங்கும். இன்றைக்குப் பெருகி வரும் ஆட்டிசம், கவனக்குறைவு அல்லது கவனச் சிதறல் நோய்க்கு, வசம்பில் பல மருந்துகள் ஆராயப்பட்டு வருவது மகிழ்வான செய்தி. மொத்தத்தில் வசம்பு ‘பேர் சொல்லாதது’ அல்ல. தமிழ் மருத்துவத்தின் பெயர் சொல்வது!
 
Last edited:
Thread starter Similar threads Forum Replies Date
chan Nature Cure 0

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.