வண்ணங்கள் ஏழு

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#1


னிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால், குடும்பத்தாலும் உறவுகளாலும் புறக்கணிக்கப்படும் பாலினச் சிறுபான்மையினர் ஒவ்வொருவருமே தங்களைப் போல் தனிமைப்படுத்தப்படுபவர்களை ஒருங்கிணைத்துத் தோப்பாகின்றனர். பிறக்கும்போது ஆண், பெண், இடையிலிங்கம் ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் பிறப்பவர்கள் வளரும்போது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப திருநங்கையாகவோ திருநம்பியாகவோ இவற்றுக்கு இடைப்பட்ட பாலின அடையாளங்களுள் ஏதாவது ஒன்றாகவோ மாறுகின்றனர். இவர்களையும் உள்ளடக்கியதே நம் சமூகம். இவர்களது உரிமையும் மனித உரிமையே இவர்களின் வாழ்க்கை, அவர்கள் கடந்துவந்த பாதை, போராட்டம், நம்பிக்கை, காதல், எதிர்காலம் குறித்த கனவுகள், அவற்றுக்கான திட்டமிடல்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசும் பகுதி இது.குடும்பப் புறக்கணிப்புதான் சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை. உறவுகளுக்கு ஏங்கும் அவர்கள் தங்களுக்குள் தாய், மகள் உறவை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த நடைமுறையையும் தாண்டி, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார் திருநங்கை அர்ச்சனா. கோயம்புத்தூரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிவருகிறார் திருநங்கை பத்மினி. பரதநாட்டியக் கலைஞரான இவர் தன் கணவர் பிரகாஷுடன் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார். சக திருநங்கைகளின் போராட்டத்தாலும் ஆதரவாலும் பிரித்திகா யாஷினி போன்றோர் தங்களுக்கான பணி உரிமையைப் போராடிப் பெற்றிருக்கின்றனர். பிசியோதெரபிஸ்ட் செல்விக்கு அரசு மருத்துவமனையில் நிரந்தரப் பணி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, திருநங்கைகள் சமூகம் உயர்ந்துவிட்டது என்று கூற முடியாவிட்டாலும் ஆங்காங்கே தென்படும் சில வெளிச்சப் புள்ளிகள் நம்பிக்கை தருகின்றன.
ஊடகங்களின் பங்கு

பாலினச் சிறுபான்மையினரில் திருநங்கைகள் பற்றிய புரிதல் தற்போது சற்று அதிகரித்திருக்கிறது. குடும்ப அட்டை, நலவாரியம், உதவித்தொகை போன்ற அரசு நலத் திட்டங்கள் திருநங்கைகளுக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சமூக ஊடகங்களிலும் திரைப்படத் துறையிலும் தங்களது படைப்புகளின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.
இந்த மாற்றம் பாலினச் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். வணிகரீதியான திரைப்படங்களை எடுப்பதோடு, திருநங்கைகளுக்கு ஆதரவாக ‘ஸ்டாண்ட் பை மீ’ பிரசாரத்தையும் ‘சதையை மீறி’ இசைப் படத்தையும் இயக்கி வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி, திருநங்கைகளை மதிப்புமிக்க கதாபாத்திரங்களாகத் திரைப்படத்தில் சித்தரித்த இயக்குநர்கள் சீனு ராமசாமி (தர்மதுரை), அருண் பிரபு (அருவி) மம்மூட்டி நடிக்கும் ‘பேரன்பு’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கும் இந்தியாவின் முதல் திருநங்கை அஞ்சலி அமீர் போன்றோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
திருநங்கைகள் மாநாடு


திருநங்கைகள் தினமான இன்று வேலூரில் திருநங்கைகள் மாநாடு நடக்கிறது. ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்கும் இந்தக் கலை விழாவில் தென்னிந்திய அளவில் அழகிப் போட்டி நடந்தாலும், அதைத் தாண்டி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சில தீர்மானங்களையும் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல இருப்பதாகச் சொல்கிறார் இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் திருநங்கை கங்கா நாயக்.
எதிரொலிக்கவிருக்கும் தீர்மானங்கள்

திருநங்கை சமூகத்தில் நிறைய பேர் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பை அரசுத் துறைகளில் அதிகரிக்க வேண்டும்.
உயர் கல்வி படிக்க விரும்பும் திருநங்கைகளுக்குக் கல்லூரிகளில் முறையாக இடம் ஒதுக்க வேண்டும்.
திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.
புதுவையில் வழங்கப்படுவதுபோல் ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.


மாநகராட்சிப் பணிகளைச் செய்ய விரும்பும் திருநங்கைகளுக்கு அந்தப் பணிகளை வழங்க வேண்டும்.
பள்ளிச் சான்றிதழ்களில் தாங்கள் விரும்பும் பாலினத்தைக் குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
பாலினச் சிறுபான்மையினர் குறித்து வெவ்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் அவர்களைப் பற்றிய கற்பிதங்கள் இன்னும் முழுமையாக அகலவில்லை. அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வது புரிதலுக்கான முக்கியமான வழிகளில் ஒன்று. அதை நோக்கிப் பயணிப்போம்.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#2
யூனிபார்ம் ஸ்கர்ட்டே அவஸ்தை!ஷ்யாம்

மூக மாற்றத்துக்கு ஆதாரமான கருத்துகளை ஆண், பெண், பால் புதுமையர் என எல்லோரிடமிருந்தும்தான் பெறவேண்டியிருக்கிறது. இப்படிப் பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு ஆண், பெண் என்னும் இருமை நோக்கிலேயே செய்யப்படும் ஆராய்ச்சிகளிலிருந்து பெறும் முடிவுகள் எப்படிச் சரியாக இருக்கும் என்னும் கேள்வியை ஈவ் செட்விக்கின் (Eve Sedgwick) ‘கோணல் கோட்பாடு’ (Queer Theory) எழுப்புகிறது.

ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ‘பால் புதுமையர்’ (LGBTQI) குறித்த விரிவான பாடத்திட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இப்போதுதான் திருநங்கைகளைக் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் பரவலாக ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் ஆணாகப் பிறந்து, பெண் மனதோடு வளர்ந்து, நாளடைவில் திருநங்கையாக மாறுபவர்களைப் பற்றித் தெரிந்த அளவுக்கு, பெண்ணாகப் பிறந்து, ஆண் மனதோடு வளர்ந்து, நாளடைவில் ஆண் பாலினத்தை விரும்பி ஏற்கும் திருநம்பிகளைக் குறித்துச் சமூகத்தில் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை.
திருநம்பியாவதன் வலி

பெண்ணாகப் பிறந்தவர் ஷ்யாம் பாலசுப்ரமணியன். வளர வளரத்தான் ஒருவருடைய பாலினம் எதுவெனத் தெரியவரும். நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஷ்யாம் தன்னை ஆணாக உணர்ந்திருக்கிறார்.
“என்னைப் பற்றிய குழப்பமே அதிகம் இருந்தது. ஏன் எல்லோரும் என்னை அலங்கரித்துக்கொள்ளச் சொல்கிறார்கள், பெண் குழந்தைகளுக்கான உடைகளை அணியச் சொல்கிறார்கள் என்றெல்லாம் யோசிப்பேன். அதுவும் ஸ்கர்ட் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்ற அவஸ்தையை சொல்லி மாளாது. பலரும் என்னைக் கேலி செய்தனர். ஆசிரியர்கள்கூடக் கிண்டல் செய்திருக்கிறார்கள். நிறைய அவமானங்களைச் சந்திச்சேன்” என்று சொல்லும் ஷ்யாம், நன்றாகப் படிக்கக்கூடியவர். ஆனால், பள்ளி நாட்களில் தான் எதிர்கொண்ட அவமானங்களால் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குப் பெரும்பாடுபட்டிருக்கிறார்.
மாற்றம் தந்த சந்திப்பு

அதன் பின் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உயர் கல்வி படித்தார். அமெரிக்காவில் ‘பால் புதுமையர்’ குறித்து ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும், அங்கும் சிக்கல்களை இவர் எதிர்கொண்டார்.
“என்னோடு படித்தவர்களில் 50 சதவீதத்தினர் இந்தியர்கள். என்னோடு படித்த மாணவிகளால் என் நடை, உடை போன்றவற்றையே ஜீரணிக்க முடியவில்லை. அங்கேயும் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளானேன். இண்டர்ன் மதிப்பெண்களைப் போடமாட்டார்கள். நான் செய்த புராஜெக்ட்களைக் கிழித்துப் போட்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியான மிரட்டல்களைக்கூடச் சந்தித்திருக்கிறேன்” என்று சொல்லும் ஷ்யாம், விடுதியில் பலரும் இவருக்கு அறை தராமல் புறக்கணித்ததை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.


“ரூம் கதவைத் திறக்க மாட்டார்கள். என்னுடன் ரூம்மேட்டாக இருந்த பெண்ணே என் பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போட்டுவிடுவதாகச் சொன்னார். உடன் படிக்கும் தோழிகளோ, ‘உனக்கு என்ன பையன்களையே பிடிக்காதா’ என மிரட்டுவார்கள்” என்று சொல்லும் ஷ்யாம், படிப்பு முடிந்ததும் பெங்களூருவில் சிப் டிசைனராகப் பிரபல நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். அங்குதான் தன்னைப் போல் திருநம்பி ஒருவரைச் சந்தித்தார்.
“அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் என் குழப்பம் தீர்ந்தது. உளவியல்ரீதியான கவுன்சலிங் பெற்று பாலின மாறுதலுக்கான சிகிச்சையைத் தற்போது தொடங்கியிருக்கிறேன். குடும்பத்தின் அரவணைப்பு எனக்கு இருப்பதால் சமூகத்தால் ஏற்பட்ட சிரமங்களை என்னால் எளிதில் எதிர்கொள்ள முடிந்தது” என்கிறார் ஷ்யாம். புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ந்தவரான இவர், இனிவரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை வேய்ங்குழல் நாதத்தின் மூலம் குறிப்பாகச் சொல்லிப் புன்னகைக்கிறார்!
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
ஊக்குவித்தவர்களுக்குப் பாராட்டு
“ஒரு காலத்தில் திருநங்கைகள் சாலைகளில் நடந்து சென்றாலே கல்லால் அடிப்பார்கள் அல்லது மோசமாக நடத்துவார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமை ஓரளவு மாறியுள்ளது. நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் போராடும் அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம்” - ‘பார்ன்2வின்’ தொண்டு நிறுவனம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு இப்படி உணர்ச்சி பொங்கச் சொன்னார் திருநங்கை நீலம்மா.
திருநங்கைகளுக்காகச் செயல்பட்டுவரும் இந்தத் தொண்டு நிறுவனம் சார்பில் சமீபத்தில் சாதனையாளர்களை கௌரவிவித்து விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகளும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
திருநங்கைகள் உரிமை அமைப்பின் நிறுவனர் ஜீவா ரங்கராஜனின் தாய் சின்னம்மாள், மதுரை மாவட்டத்தில் பிசியோதெரப்பிஸ்ட்டாகப் பணிபுரிந்து வரும் எஸ். சோலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ‘அருவி’ திரைப்பட இயக்குநர் அருண் பிரபு, நடிகை அதிதி பாலன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோருக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
மாறுபக்க ஆணியல்
பால் புதுமையரில் ‘மாறுபக்க ஆணியல்’, ‘ஆணியல் பெண்’ போன்ற பிரிவுகளும் அடக்கம். பெண்ணாகப் பிறந்து தன் பாலினத்தை முழுதாக உணர முடியாதவராகவும் குறைந்த அளவு பெண்ணாக உணர்கிறவராகவும் இருக்கிறவர்கள், ‘மாறுபக்க ஆணியல்’ என்னும் நிலையில் இருப்பவர்கள்.
‘ஆணியல் பெண்’ என்பவர் தன் செயல்களின் மூலம் தன்னை ஆண்போல் காட்டிக்கொண்டாலும் இயல்பில் தன்னை ஒரு பெண்ணாகவே கருதுவர். ‘மாறுபட்ட பெண்ணியல்’ என்னும் நிலையில் இருப்பவர் தம்மைக் குறைந்த அளவில் ஆணாக உணர்வர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#3
திருநங்கை மொழி பேசும் புத்தகம்


ரேவதி - தனி நபர் நாடகத்தில்...
கோயம்புத்தூரிலும் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச நாடகத் திருவிழாவிலும் திருநங்கை ரேவதியின் தனிநபர் நாடகம் பலரது கவனத்தை ஈர்த்தது. தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையே காதல், பிரிவு, சோகம், மகிழ்ச்சி, பாசம் எனப் பல்வேறு உணர்ச்சிகளின் கலவையோடு வெளிப்படுத்தினார் ‘வெள்ளை மொழி’ ரேவதி.
மாற்றுப் பாலினத்தவரின் உரிமைக்காகச் செயல்பட்டுவரும் ‘சங்கமா’ அமைப்பில் 1999-ல் உதவியாளராகச் சேர்ந்து படிப்படியாகப் பல பொறுப்புகளை ஏற்று அதன் இயக்குநராகவும் சில காலம் பணியாற்றிவர் ரேவதி. தற்போது சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ரேவதி, மாற்றுப் பாலினத்தவர்களான திருநம்பிகளைப் பற்றிய புரிதல் சமூகத்தில் பரவலாக இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். திருநம்பிகளைப் பற்றிய புரிதலைச் சமூகத்தில் ஏற்படுத்த அவர்களைக் குறித்த ஆவணங்களைத் தமிழில் எழுதினார். இதன் ஆங்கில வடிவம், ‘லைஃப் இன் டிரான்ஸ் ஆக்டிவிசம்’ (மொழிபெயர்ப்பு: நந்தினி முரளி). ரேவதி எழுதிய ஆவணத் தொகுப்பு தமிழில் புத்தகமாக வெளிவரவிருக்கிறது.
வாழ்க்கைக் கதைகள்

“எங்க அப்பா பெரிய இம்சையெல்லாம் குடுத்தாரு. அவரோட என் தம்பியும் சேர்ந்துக்கிட்டான். ‘நீ இப்படி அரவாணியா ஆயிட்டு எங்க வம்சத்தையும் குடும்பத்தையும் கெடுக்க வந்தையா? எங்களோட மதிப்பைக் கெடுக்க வந்தையா?’ன்னு ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு என்னைப் பேசாத பேச்சு இல்லை. அது மட்டுமில்ல, எங்க அம்மா வயலுக்குப் போன பிறகு ‘அவங்க திரும்பி வீட்டுக்கு வர்றதுக்குள்ள நீ செத்துப் போயிடணும்’ன்னு விஷத்தைக் கொடுத்து என்னைக் குடிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்தினாங்க”

- இது ஒரு திருநங்கையின் கதை. இப்படிச் சமூகத்தில் வாழும் பல திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை முதன்முதலாகப் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த புத்தகம் ‘உணர்வும் உருவமும்’. அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள் நிறைந்திருக்கும் இந்தப் புத்தகம், 2005-ல் வெளியானபோது பல்வேறு தளங்களில் விவாதங்களை எழுப்பியது. குடும்பம், பள்ளிக்கூடம், நெருக்கமான உறவுகள், மதம், சாதி என அனைத்தும் திருநங்கைகளுக்கு எதிராக அணிதிரளும்போது, திருநங்கை சமூகமே எப்படி அவர்களுக்கு ஆதரவாக அமைகிறது என்பதைச் சொன்ன முதல் புத்தகம் என்ற வகையிலும் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியரான ரேவதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையை இதில் பதிவுசெய்திருந்தார்.
பாடத்திட்டத்தில் புத்தகம்

நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதியும் திருநங்கைகள் சந்திக்கும் அனைத்துவகையான பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். வீட்டினரின் புறக்கணிப்பையும் அவமானத்தையும் தாண்டி, தனக்கெனத் தனி அடையாளம் பதித்திருக்கிறார்.
“உணர்வும் உருவமும் புத்தகம்தான் முற்போக்கு எழுத்தாளர்களிடமும் பல்வேறு கலை - பண்பாட்டுக் குழுக்களிடமும் என்னைக் கொண்டு சேர்த்தது. தமிழகத்தின் பல இடங்களிலும் சமூகத்தின் பல பிரிவுகளிடையே இந்தப் புத்தகம் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த வேளையில்தான் பெங்குயின் பதிப்பகத்தாரிடமிருந்து இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்கு எனக்கு அழைப்பு வந்தது.

அப்போது நான் என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். அதையே ஆங்கிலத்தில் ‘எ ட்ரூத் அபவுட் மீ’ என்னும் பெயரில் 2008-ல் பதிப்பித்தனர். அது தமிழில் ‘வெள்ளை மொழி’ எனும் பெயரில் 2012-ல் வெளிவந்தது. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டது” என்று சொல்கிறார் ரேவதி.
இந்தப் புத்தகம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், லண்டன், சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பாலினம் குறித்த பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதையொட்டி லண்டன், சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களுக்கு இவர் சென்றுவந்திருக்கிறார்.
“கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் திருநங்கைகளுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்தால் அவர்களாலும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடியும். இதற்கு அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும்” என்கிறார் வெள்ளைச் சிரிப்போடு ரேவதி.
வாடாமல்லி
நவீன இலக்கியச் சூழலில் மூன்றாம் பாலினத்தவரின் உலகத்தை மிக அருகிலிருந்து தரிசிக்க உதவியது ‘வாடாமல்லி’ நாவல். 90-களிலேயே பாலினச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை மையப்படுத்தி எழுத்தாளர் சு.சமுத்திரத்தால் அவர்களால் எழுதப்பட்ட தொடர் கதை ‘வாடாமல்லி’. சுயம்பு என்னும் தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய கதையாக இல்லாமல் பாலினச் சிறுபான்மையினரின் வாழ்க்கையையும் அப்படிப் பிறப்பவர்களை குடும்பமும் சமூகமும் எப்படி நடத்துகின்றன என்பதையும் இந்த நாவல் ஆவணப்படுத்தியிருக்கிறது.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#4
ஆண்ட்ரோஜென் அதிகமானாலும் பெண்தான்!


காஸ்ட்ர செமன்யா

ழகு சாதனப் பொருட்களின் விளம்பரத்துக்காக அல்ல, வறுமை ஓடு... ஓடு... என விரட்ட, அப்படியொரு பேயோட்டம் ஓடினார் அந்த இளம் பெண். அவர் வீதியில் ஓடவில்லை, தடகள மைதானத்தில் நிகழ்ந்தது அவரது ஓட்டம். 2012-லேயே 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் தடகளப் போட்டியில் 11.8 விநாடிகளில் கடந்து தேசிய சாம்பியன் ஆனார் டுட்டி சந்த். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் பிரிவில் 23.8111 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

தடகளப் போட்டிகளில் ஏறுமுகத்தில் இருந்த டுட்டி சந்த்தைப் பாலின பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அவருக்குச் சுரக்கும் ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகம் என்பதால் மற்ற வீராங்கனைகளைவிட அவரது திறன் அதிகம் என்ற காரணத்தைச் சொல்லி காமன் வெல்த் போட்டியில் அவர் பங்கேற்பதை இந்திய தடகள சம்மேளனம் தடை செய்தது.
பாலின பரிசோதனை

ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து ஓட்டப்பந்தய வீராங்கனையாகச் சுடர்விட்ட டுட்டி சந்த், நெசவுத் தொழிலை நம்பியிருந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அக்கா சரஸ்வதி சந்த்தும் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்ததால், அவரது வழியில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு நாட்டுக்காகப் பல பதக்கங்களை டுட்டி சந்த் வென்றார்.
டுட்டி சந்தின் காமன்வெல்த் சர்ச்சை தொடர்பான வழக்கை சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்துக்கு ஒடிசா அரசே கொண்டுசென்றது. இந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் வழங்கியது. ஆண்ட்ரோஜென் அதிகமாகச் சுரப்பதால்தான் ஒரு வீராங்கனையின் ஆட்டத் திறன் அதிகரிக்கிறது என்பதற்கான போதிய அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லாததால், அந்த விதியைத் தடை செய்து தீர்ப்பு வழங்கியது. அதோடு இரண்டு ஆண்டுகளில் போதிய ஆதாரத்தைச் சமர்ப்பிக்காவிட்டால் இந்தத் தீர்ப்பே இறுதியாகும் என்றும் அதிரடியாக அறிவித்தது.
கன்னித் தன்மை பரிசோதனையில் தொடங்கி, தான் பெண்தான் என்பதை நிரூபிப்பதற்கான பரிசோதனைகள்வரை எல்லாமே பெண்களுக்கு மட்டுமேதான் இங்கே நடக்கின்றன. அதிலும் விளையாட்டுத் துறையில் ஓர் ஆண் விளையாட்டு வீரர், தான் ஒரு ஆண்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
ஆனால், பெண்கள் மட்டும் தங்களைப் பெண் என நிரூபிக்க வேண்டிய கட்டா யம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தலித் வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் சர்வதேச ஒலிம்பிக் கல்வி மையத்தின் ஆய்வு உதவியாளர் கோபி ஷங்கர்.

டுட்டி சந்த்
நாடு முழுவதும் திரண்ட ஆதரவு

பெர்லினில் 2009-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தடகளப் பிரிவில் தங்கம் வென்றவர் காஸ்டர் செமன்யா. இவருக்கும் பாலின பரிசோதனை நடத்தப்பட்டு ஹார்மோன் பிரச்சினையைக் காரணம் காட்டி, அவரது பதக்கத்தைப் பறித்தது சர்வ தேச விளையாட்டு சம்மேளனம். அவ்வளவுதான், தென்னாப்பிரிக்காவே கொந்தளித்தது. அந்த நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர், பிரதமர், முதல் குடிமகன் தொடங்கி கடைக் குடிமகன்வரை, அந்தச் சோதனைக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்க அரசே தங்கள் நாட்டு வீராங்கனைக்காக ஐ.நா. சபையில் வழக்குக் தொடர்ந்து வாதாடியது. ஒரு நாடே ஒரு வீராங்கனைக்காக வீதியில் இறங்கிப் போராடியதை உலகமே ஆச்சரியத்தோடு பார்த்தது. வழக்கில் வென்றதோடு, லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தென்னாப்பிரிக்கக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் அந்த நாடு காஸ்டர் செமன்யாவுக்கு வழங்கியது.தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற நாடுகளும் செயல்படுவதுதானே சரியாக இருக்கும்.
XX குரோமோசோம்கள் இருந்தால் பெண் என்றும் XY குரோமோசோம் ஆண்களுக்கானதும் எனவும் அறிவியல் சொல்கிறது. ஆனால், XXY குரோமோசோமோடு இருக்கும் ஆண்களும் ஒரேயொரு X குரோமோசோம் அமையப்பெற்ற பெண்களும்கூட உண்டு. இவர்களும் பெண்தான் என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#5
உறவென்னும் புதிய வானில்...பொ
ண்ணா பொறந்தா ஆம்பளகிட்ட கழுத்த நீட்டிக்கணும்

அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு போட்டா மாட்டிக்கணும்
- என்னும் அந்தக் காலத்து திரைப்படப் பாடல்கள் தொடங்கி, நேற்றுவந்த,
‘வீட்டு குத்துவிளக்கு
நீ கெடைச்சா என் வாழ்க்க கெத்து’
- என்ற பாடல்வரை பெண்ணை ஆணுக்கு மணம் முடித்து வைப்பதற்கு இந்தச் சமூகம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேர்கோட்டுச் சிந்தனையை மறுத்து உலகின் பல பகுதிகளிலும் ஆண்களிடமும் பெண்களிடமும் புறப்பட்டதுதான் ‘பால் புதுமைக் கோட்பாடு’.
டாக்டர் எத்திங்கர், ஜுடித் பட்லர், ஈவ் செட்விக், கிறிஸில்டா போல்ஸ்கி ஆகிய பெண்ணியவாதிகள்தாம் பால் புதுமைக் கோட்பாட்டை 1980-களில் வடிவமைத்தனர். மருத்துவம், சமூகவியல், அறிவியல் போன்ற பல துறைகளை அடிப்படையாகக்கொண்டு, சமூகத்தில் நிலவும் பாலின இருமைக் கொள்கைக்கு எதிரான கோட்பாட்டை இவர்கள் முன்னெடுத்தனர். பால் புதுமைப் பிரிவினரில் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட பாலினங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், பைசெக்ஷுவல் (bisexual) எனப்படும் இருபால் உறவாளர்களுக்கும் பேன்செக்ஷுவல் (pansexual) எனப்படும் பலர்பால் உறவாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
“ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, தன்பால் ஈர்ப்பு இயற்கையானதுதான் என்பதைப் பல்வேறு உதாரணங்களோடு உலகப் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து ஒரு பேச்சுப் போட்டியில் பேசினேன். அந்த வயதில் நான் பேசிய அந்த உரைக்கு ஆசிரியர்கள் பலரிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. விதிவிலக்காகச் சில ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்தது” என்கிறார் பேன்செக்ஸுவாலிடி எனும் பாலின அடையாளத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நமீதா.
என்னுள்ளே ஏதோ…

நமீதாவுக்கு இப்போது 24 வயது. உடன் படிக்கும் மாணவிமீது முதல் ஈர்ப்பு வந்தபோது அவருக்கு 12 வயது இருக்கும். இன்னொரு பெண் மீதும் ஆண் மீதும் ஈர்ப்பு கொண்டிருந்ததை அவர் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறார். அதைப் பற்றித் தெளிவடைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சியின் போதுதான் பைசெக்ஸுவல் பற்றி முதலில் நமீதா அறிந்துகொண்டார்.
“அதன் பிறகு தீவிரமாக என்னைப் பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் எனக்கு ஆண், பெண் தவிர திருநங்கை, திருநம்பி, ஏ-ஜென்டர் (பால் இல்லாதவர்கள்) என எல்லோரின் மீதும் ஈர்ப்பு இருப்பது தெரிந்தது. நான் ஒரு பேன்செக்ஸுவல் என்பதைக் கல்லூரி நாட்களில்தான் உணர்ந்தேன். என்னுடைய காதல் இனப்பெருக்க உறுப்புகளைச் சார்ந்தது இல்லை. அளவு கடந்த அன்பையும் நேசத்தையும் பிணைப்பையும் எதிர்நோக்குவதே” எனத் தன் காதலுக்குப் புது பரிமாணம் காட்டுகிறார் நமீதா.
புதிய வெளிச்சம்

சமூகவியலில் முதுகலை படித்தபோது பயிற்சி மாணவியாக ‘நிறங்கள்’ என்ற தன்னார்வ அமைப்பில் நமீதா இருந்திருக்கிறார். அப்போது மாற்றுப் பாலினத்தவர் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. படிப்பு முடிந்தவுடன் தொடர்ந்து இன்றுவரை அந்த அமைப்பிலேயே தன்னார்வலராக நமீதா செயல்பட்டு வருகிறார்.
“மனித உரிமைச் சட்ட மையத்தின் மாநாடு மகாராஷ்டிரத்தில் பஞ்சகனி எனும் இடத்தில் நடந்தது. அந்த மாநாட்டில் பங்கெடுத்தது எனக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அந்த நான்கு நாட்களில் பாலினச் சிறுபான்மையைச் சேர்ந்த பல்வேறு நபர்களைச் சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் வலி மிகுந்த ஒரு சோகக் கதை இருந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஆராயவைத்தன. அவற்றுள் பாலின அடையாளம், பால் ஈர்ப்பு சார்ந்த பல உண்மைகள் புரிந்தன” என்கிறார் நமீதா.
‘ஷாக்’ கொடுத்தால் பாலினம் மாறுமா?

பெண்ணை அடிமையாகவே வைத்திருப்பதற்கான உத்தியாகவே திருமணத்தை அவர் குறிப்பிடுகிறார். தான் ஒரு பேன்செக்ஸுவலாக இல்லாமல் இருந்தால்கூட, திருமணம் வேண்டாம் என்பதே அவரது முடிவு என்கிறார். வீட்டிலும் யாரும் இந்த விஷயத்தில் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.
“சரியான புரிதல் இல்லாமல் மருத்துவத்தின் மூலமாக இந்த உணர்வுகளை மாற்றிவிடலாம், ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுத்தால் சரியாகிவிடும், வலுக்கட்டாயமாக வல்லுறவுக்கு ஆளாக்கும்போது பெண் குணமாகிவிடுவாள் என்றெல்லாம் பல கொடுமைகளைப் பெற்றோர்களே தங்களுடைய பிள்ளைகளுக்கு நடத்துவதும் நம் சமூகத்தில் உண்டு. இவையெல்லாம் மாற, சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர் குறித்தும் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட பாலினங்களைக் குறித்தும் புரிதல் ஏற்பட வேண்டும்” என்கிறார் நமீதா.
உரிமையைப் பறிக்கும் சட்டம்

தனி மனித உரிமைக்கு எதிரான 377-வது சட்டப் பிரிவை நீக்கினால்தான் மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள் மீட்கப்படும்; தங்களது பாலின அடையாளங்களுடன் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தடையாக இருப்பது அந்தச் சட்டம்தான் என்கிறார் நமீதா. சமூகத்துக்குப் பயந்தே மாற்றுப் பாலினத்தவரின் மரணங்கள்கூட மூடி மறைக்கப்படுகின்றன. ஆனால், சமூகம், சட்டம் போன்றவை எதுவும் செய்ய முடியாததைப் பெற்றோரின் அரவணைப்பு செய்யும். “உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி, எந்தப் பாலினத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்களைப் புறக்கணிக்காதீர்கள்” என்று பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறார் நமீதா.
அம்மாவின் பரிவு

ஒருமுறை உடல்நலம் சரியில்லாதபோது நடந்த திருநங்கைகள் போராட்டத்தில் நமீதாவால் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டதைப் பார்த்த நமீதாவுடைய அம்மா, “நான் போய் அவர்களைப் பார்த்துவருகிறேன்” என்று சொல்லி அங்கே சென்று அவர்களுக்கு வேண்டிய சாப்பாடு, குடிநீர் போன்றவற்றை வழங்கிவந்தார்.
“இந்தச் சம்பவத்தைத் திருநங்கைகள் எல்லோரும் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டனர். என்னோட பாலின அடையாளத்தையும் என் நண்பர்களையும் என் அம்மா ஏற்றுக்கொண்டதை நினைத்து நானும் மகிழ்ந்தேன்” என்று பூரிப்புடன் சொல்கிறார் நமீதா.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#6
நான் அவள் அவன்


எதிர்பாலினத்தின் மீதான அன்பையும் காதலையும் சொல்வதற்கே சாதி, மதம், மொழி எனப் பல தடைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சமூகச் சூழலில் தன்பால் ஈர்ப்புள்ளவர்களும் இருபால் ஈர்ப்புள்ளவர்களும் தங்களது பாலியல் விருப்பத்தை மனதுக்குள் பூட்டிவைத்தே நாட்களைக் கடத்துகின்றனர். இன்னும் பலர் குடும்ப உறவுகளுக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டு பெயரளவுக்குத் திருமணம் செய்துகொள்கின்றனர். பிறகு தங்களது விருப்பத்தை மறைமுகமாக நிறைவேற்றிக்கொண்டு, ஊரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகாமல் இருக்க இரட்டை வாழ்க்கை வாழ்வார்கள்.
எதிர்பால் ஈர்ப்போடு தன்பால் ஈர்ப்பும் ஒருங்கே கொண்டவர்கள் இருபால் ஈர்ப்புள்ளவர் (bisexual) என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தம் பாலியல் தேவைகளுக்கு மட்டுமே பிறரைப் பயன்படுத்துவார்கள் என்று பலர் தவறாக நினைப்பதாக இருபால் ஈர்ப்புள்ளவர்கள் சொல்கின்றனர். அன்பும் நேசமும் காதலும் எங்களுக்கு மட்டும் கிடையாதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

தனிப்பட்ட ஒருவரது பால் ஈர்ப்பின் மீது சமூகம் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது; விதிக்கவும் கூடாது. அப்படி இருக்கும்போது இரண்டு பாலினத்தவரிடமும் ஈர்ப்பு கொள்ளும் இருபால் ஈர்ப்புள்ளவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. இந்தக் கோரிக்கையை முன்னிறுத்திச் சேர்ந்திருப்பவர்களே ஜல்ஜித் – பின்ஸி இணையர்.
கணவரும் அவர் தோழியும்

“திருமணம் என்னும் பெயரில் ஆண், பெண்ணை அடிமையாக நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை சுதந்திரமான, தன்னிச்சையான ஒரு பெண்ணே எனக்கு இணையாக வர வேண்டும் என நினைத்தேன்” என்கிறார் பில்ஜித். அந்த நினைப்புக்குத் தன் வருகையால் வலு சேர்த்தார் பின்ஸி.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரத்தில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்தபோது பின்ஸியை அவர் சந்தித்தார். பின்ஸியும் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட். இருவரும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பின்ஸியின் வீட்டில் விரும்பினர்.
“சட்டப்படி திருமணம் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர் பார்ட்னர்தான். அவரது சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன். அவரும் அப்படியே. குழந்தைகள் பற்றி யோசிக்கவில்லை. எதிர்காலத்தில் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் எண்ணமும் இருக்கிறது. 2012-ல் திருமணம் செய்துகொண்டோம். அவர் பைசெக்ஷுவலாக இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒருமுறை என் தோழி வீட்டுக்கு வந்திருந்தார்.
அவர் மீது என் மனைவிக்கும் என் மனைவி மீது தோழிக்கும் ஈர்ப்பு இருப்பதை நான் கவனித்தேன். அதை என் மனைவியிடமும் கேட்டு உறுதிசெய்து கொண்டேன். அதன் பிறகுதான் என் மனைவி அவரது ஃபேஸ்புக் பதிவில் ‘பீயிங் எ பைசெக்ஷுவல் ஐ எம் பிரவுட்’ என்று ஒரு பதிவு போட்டார். அதைப் பார்த்ததும் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அவரது செயலைக் கடுமையாகக் கண்டித்தனர்.
உங்களுக்குள் தாம்பத்திய உறவு சரியில்லையா, நல்ல மருத்துவரைப் பாருங்கள் என்றெல்லாம் வித விதமான அறிவுரைகள் வந்துவிழுந்தன. என் ஃபேஸ்புக் பக்கத்திலும் நிறைய கண்டனங்கள் வந்தன. ஆனால், சமூகத்துக்காக நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை” என்கிறார் ஜல்ஜித்.

பின்ஸி, ஜல்ஜித்
நம்மை அறிவோம்

“நான் இருபாலினத்தவர் மீதும் ஈர்ப்பாக இருப்பதை ஏதோ என் தவறு போலவும் சமூகத்துக்கு எதிராக நான் இருப்பதாகவும் உணர்ந்தேன். எனக்கு ஏதோ பிரச்சினை இருப்பதாகவும்கூட நினைத்தேன். நாளாக நாளாகத்தான் இதில் என் பிழை எதுவும் இல்லை என்பதும் நான் வித்தியாசமானவள் இல்லை என்பதும் புரிந்தது.
என் பார்ட்னருக்கு இந்த விஷயத்தில் இருக்கும் தெளிவும் ஆதரவும் எல்ஜிபிடி சமூகத்திற்கான என்னால் முடிந்த பணிகளைச் செய்யத் தூண்டியது. தற்போது திருவனந்தபுரத்திலிருக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கும் பொதுச் சமூகத்துக்கும் பாலமாக இருக்கும் தன்னார்வ அமைப்பில் துணைச் செயலாளராக இருக்கிறேன்.
நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை மனதில் ஏற்படுத்திக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் புழுங்கக் கூடாது. எல்லா மனிதர்களையும் போலத்தான் நாமும் என்னும் புரிதலை மாற்றுப் பாலினத்தவர்கள் வேண்டும். நமக்கு நாமே போட்டுக்கொண்டிருக்கும் தடைகளைத் தகர்த்தாலே போதும், நாம் முன்னேறிவிடலாம். இதுபோன்ற ஆறுதல் வார்த்தைகளை உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் மாற்றுப் பாலினத்தவர்களிடம் சொல்லி அவர்களைத் தேற்றுகிறேன்” என்கிறார் பின்ஸி.
அபத்த புரிதல்கள்

எல்லோருடனும் உறவு வைத்துக்கொள்ளத் துடிப்பீர்களா? அழகான பெண்களைக் கண்டால் அவர்கள் மீது பாய்ந்துவிடுவீர்களா?
- இது போன்ற அபத்தக் கேள்விகள் தங்களை நோக்கிப் பாயும் என்கிறார் ஜல்ஜித்.
“ஆனால், அவற்றில் துளியும் உண்மையில்லை. ஆண், பெண் என என் பார்வையில் எந்த வித்தியாசமும் இல்லை. அதேநேரம், ஒருவர் மீதான ஈர்ப்பு இயல்பானதாக இருக்க வேண்டும். எப்படி ஆணையும் பெண்ணையும் மெய்யாக நான் நேசிக்கிறேனோ அதைப் போல” என்கிறார் ஜல்ஜித்.
ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பல சிறுமிகளின் படங்களைப் பகிர்ந்து, ‘இந்தச் சிறுமியை என்ன செய்யலாம்’ என்றெல்லாம் கேட்டு அந்தப் பக்கத்தின் அட்மின் வக்கிரமாக எழுதியிருந்தது பின்ஸிக்குத் தெரியவந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத்தில் இப்படியொரு அநியாயம் நடப்பதை சைபர் கிரைம் பிரிவினர் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். குழந்தைகளை வக்கிரமாக அணுகும் அந்த ஃபேஸ்புக் பக்கம் பல்வேறு கட்டப் போராட்டங்கள், விசாரணைகளுக்குப் பிறகு முடக்கப்பட்டது.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#7
இது இயற்கைக்கு மாறானதா?


CHENNAI, 28/06/2009: Participants at the first Chennai Rainbow Pride march, a celebration and a political statement to proclaim the rights of the lesbian, gay, bisexual and transgender people, held in Chennai on June 28, 2009. Photo: M. Vedhan - THE HINDU
சமூகத்தில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் ஒற்றுமையை வலியுறுத்தியும் இந்தியாவில் முதன்முதலாகக் கொல்கத்தாவில் 1999-ல் பாலினச் சிறுபான்மையினர் வானவில் பேரணி நடத்தினர். கடந்த 2009 ஜுன் 28 அன்று சென்னையில் முதன்முதலாக வானவில் பேரணி நடந்தது. அதே ஆண்டு ஜூலை மாதம் டெல்லி உயர் நீதிமன்றம், “வயது வந்த தனிப்பட்ட இருவரது விருப்பத்துடன் அவர்களுக்கு இடையேயான தன்பால் உடலுறவுக்கு எந்தவித தடையும் இல்லை” எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் பலரும் தங்களின் பாலியல் தேர்வை வெளிப்படையாக அறிவித்தனர். இந்த ஆண்டு 10-வது ஆண்டாக வானவில் பேரணி நடக்கவிருக்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை என இந்தியாவில் 13 நகரங்களில் இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.
18 ஆண்டு சட்டப் போராட்டம்தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, மனித உரிமைக்கு எதிரானது என்று கடந்த 2001 முதல் சட்டப் போராட்டம் நடத்திவருகிறது ‘நாஸ்’ (NAAZ) அறக்கட்டளை. இதன் நிறுவனர் அஞ்சலி கோபாலன், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை அமெரிக்காவில் தொடங்கி இந்தியாவின் கிராமங்கள்வரை கொண்டு சேர்க்கச் செயல்பட்டவர். எய்ட்ஸ் விழிப்புணர்வு, விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக போராடுவது என முழு நேர சமூகச் செயற்பாட்டாளராகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். இவரது சமூகப் பணிகளைப் பாராட்டி பிரான்ஸ் அரசு இவருக்கு ‘செவாலியே விருது’ வழங்கியது. டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்த 100 சக்தி வாய்ந்த பிரபலங்களில் இவரும் ஒருவர்.
நீதி கிடைக்குமா?

உச்ச நீதிமன்றம் 2013-ல், முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தடை செய்து தீர்ப்பளித்தது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 குறித்த விவாதம் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 377-வது சட்டப்பிரிவைத் தன்பால் உறவாளருக்கு எதிரான சட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. ஆண், பெண் தவிர்த்துப் பிற பாலினத்தைச் சேர்ந்தவர்களின் உறவையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377, அம்பேத்கரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையான தனி மனித உரிமைக்கு எதிராக உள்ளது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் இப்போது அந்த நாட்டிலேயே அமலில் இல்லை என்கின்றனர் மாற்றுப் பாலினத்தோர் உரிமைக்காகப் போராடுபவர்கள்.

2009 ஜனவரி 26 அன்று சென்னையில் முதன்முதலாக நடந்த வானவில் பேரணி - (கோப்புப் படம்)

தீர்ப்பால் நீர்த்துப்போன நம்பிக்கை

அமெரிக்க அதிபராக முதன்முறையாகப் பதவியேற்றபோது இந்த வெற்றியை எல்லாச் சிறுபான்மை சமூகத்தினருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று சொன்னதோடு, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தன்பால் உறவுக்கு இருந்த தடையை ஒபாமா நீக்கினார் என்கிறார் எல்.ஜி.பி.டி. சமூகத்துக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா. சட்டப் பிரிவு 377 நீடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
“டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு 2010-ல் நடந்த வானவில் பேரணியில் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால், அதன்பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சட்டப் பிரிவு 377 தொடரும் நிலையில், ஏறக்குறைய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுப் பாலினத்தவர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், முகநூலிலேயே சிறைப்பட்டனர். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின், தன்பால் உறவாளராகவும் இரு பால் உறவாளராகவும் வெளிப்பட்ட தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கிடைத்த ஆதரவுகூட அதன்பின் கிடைக்காமல் போனது.
தங்கள் பிள்ளைகளின் தன்பால் உறவை மறைத்து, வலுக்கட்டாயமாக நடத்திவைக்கப்பட்ட திருமணங்கள் இன்றைக்குக் கேள்விக்குறியாகியிருக்கின்றன. இந்தியன் சைக்கியாட்ரி சொசைட்டி, வேர்ல்ட் சைக்கியாட்ரி சொசைட்டி போன்றவை தன்பால் உறவு என்பது மன நோய் அல்ல என்று வலியுறுத்திய பிறகும், தன்பால் விருப்புள்ள தங்களுடைய பிள்ளைகளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோரையும் ‘ஷாக்’ ட்ரீட்மென்ட் கொடுத்தால் சரியாகிவிடும் என்று அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில மருத்துவர்களையும் என்ன செய்வது? உலக சுகாதார நிறுவனம் 2016-ல் வெளியிட்ட உடல் நலம் குறித்த அறிக்கையில் பாதுகாப்பான, வன்முறை இல்லாத பாலுறவே ஆரோக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

அஞ்சலி கோபாலன் - AFP
இன்னும் சொல்லப்போனால், நம்மில் இடதுகைப்பழக்கம் இருப்பவர்களைப்போல்தான் தன்பால் உறவு என்பதும் இயற்கையானதுதான் என்று சொல்கிறது. தன்பால் ஈர்ப்பையும் மற்றப் பாலின ஈர்ப்பையும் இயற்கைக்கு மாறானவை என்று சொல்பவர்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. இயற்கைக்கு எதிராக சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் கருத்தடை செய்துகொள்வதும் இயற்கைக்கு மாறானவை இல்லையா?” என்கிறார் ஜெயா.
மனித உரிமைகளைக் காக்கும் போராட்டத்தைப் பல ஆண்டுகளாக நடத்திவரும் அஞ்சலி கோபாலனிடம், “சட்டத் திருத்தம் கொண்டுவருவதால் எல்லாம் மாறிவிடுமா?” எனும் கேள்வியைக் கேட்டிருக்கிறார் இடையிலிங்க குழந்தைகளின் உரிமைக்காகப் போராடிவரும் கோபி ஷங்கர்.
அதற்கு அஞ்சலி கோபாலனின் பதில் இது:
“மக்கள் மனத்தில் மாற்றுப் பாலினம் பற்றிய தவறான எண்ணங்களே ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அத்தகைய எண்ணங்களை மாற்ற ஒரு சட்டத் திருத்தம் போதாது. சட்டம், அறிவியல், மருத்துவம், ஊடகங்கள், அரசு என்று அனைத்துத் துறைகளும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் நடக்கும். எல்லாம் ஒரே நாளில் நடக்கும் என்று சொல்லவில்லை. அதே நேரம், நிச்சயம் ஒரு நாள் எல்லாம் மாறும் என்று நம்புகிறேன்”.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.