வளரவிடாதீர்கள்... விஷச்செடியை!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வளரவிடாதீர்கள்... விஷச்செடியை!

டாக்டர் அபிலாஷா

ந்தேகம் என்ற நோய் வந்தால், அது கொண்டவரை மட்டு மல்லாமல், சுற்றி உள்ளவர்களையும் சிதைத்துவிடும். அப்படிச் சிதைந்த, பிரிந்த பல குடும்பங்களை நாம் அறிவோம். கோபம் எப்படி இயற்கையானதோ... அதேபோல் சந்தேகமும் இயற்கையானதுதான். ஆனால், இந்த சந்தேகத்தை தாமதிக்காமல் பொசுக்கிவிட வேண்டும். இல்லையென்றால், அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பொசுக்கிவிடும்.

சந்தேகத்திலும் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்று உண்டு. அது என்ன பாஸிட்டிவ் சந்தேகம்? ஒருவர் ஒரு பொருளை விற்க நம் வீடு தேடி வருகிறார். அவரை நாம் சந்தேகத்தோடுதான் அணுக வேண்டும். இப்படி பொருள் சார்ந்து நாம் யாரிடமும் ஏமாந்துவிடாமல் நம்மைக் காப்பது, பாஸிட்டிவ் சந்தேகம். இதுவே, உறவுகளுக்குள் நம்பிக்கை சம்பந்தமாக ஏற்படுவது, நெகட்டிவ் சந்தேகம்.


உறவுகளுக்குள் எழும் சந்தேகம் பொதுவாக அன்பு அளவுக்கு அதிகமாகும்போதும், ஒருவர் தன் பாதுகாப்புக்கு பாதிப்பு என்று உணரும்போதும் வரக்கூடும். சந்தேகத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று சந்தேகப்படுதல்.

மற்றொன்று சந்தேகப்படப்படுதல். இதில் இரண்டு விதங்களிலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இது இந்தியா போன்ற நாடுகளில்தான் அதிகம். அக்கம்பக்க செய்திகளும், மீடியா செய்திகளும் அவர்களை அதிகமாகப் பாதிக்கின்றன. மேலும், சுயசம்பாத்தியம் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் கணவனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழலும்கூட, பெண்களுக்கு சந்தேகம் ஏற்படக் காரணங்களே!

கணவன், மொபைலில் இரண்டு நிமிடங்களுக்கு அதிகமாகப் பேசிவிட்டால், வீட்டுக்குத் தாமதமாக வந்தால், 'வெளியிலேயே சாப்பிட்டுட்டேன்’ என்றால்... இப்படி சின்னச் சின்ன விஷயங் களில்கூட சந்தேகப் பார்வை வேர் வைக்கும். இது ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டிய விஷச்செடி. ஆனால், பெண்களில் 99% அப்படிச் செய்வது கிடையாது. தங்களின் சந்தேகத்துக்கு வலுக்கூட்டிக்கொண்டே போய், தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி, நிம்மதியைத் தொலைத்து, ஒருகட்டத்தில் அந்த வீட்டில் சந்தோஷம் என்பதையே எட்டாக் கனி ஆக்கிவிடுவார்கள்.

'யார்கூட போனில் பேசினே?’ என்று ஆரம்பித்து, 'இன்னிக்கு ஏன் இந்தப் புடவை கட்டினே?’ என்பதுவரை, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கோணங்களில் எல்லாம் சந்தேகம்கொள்ளும் மனது ஆண்களுடையது. பெண் சந்தேகப்படும்போது, அதை எதிர்த்துப் பேசும் 'உரிமை' ஆணுக்கு உண்டு. ஆனால், ஆணின் சந்தேகத்துக்குப் பதில் கூறும் உரிமைகூட பெண்ணுக்குக் கிடையாது.

சந்தேகம் கணவனுடையதோ, மனைவியுடையதோ... இதனால் கணவன், மனைவி மட்டுமல்லாது குழந்தை களும் பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக தற்கொலை என்றால், பெரும்பாலும் இறப்பது பெண்களாகத்தான் இருக்கிறார்கள். கொலை செய்யப்படுபவர்களும் அவர்களே!

இந்த சந்தேக நோய்க்கு அடிப்படைக் காரணம்... நம்பிக்கை இன்மைதான். கணவன் மனைவி உறவில் நம்பிக்கைதான் உயிர். அந்த நம்பிக்கை இல்லாமல் இருவர் சேர்ந்து வாழ்வது என்பது, இரண்டு பிணங்கள் சேர்ந்து வாழ்வதைப் போன்றது.

அந்தளவுக்கு அந்த உறவுக்கு இடையிலான அன்பு செத்துப்போயிருக்கும். பரஸ்பர நம்பிக்கையால் பலமான உறவில், கணவனிடம் மனைவியைப் பற்றியோ, மனைவியிடம் கணவரைப் பற்றியோ ஒருவர் அவதூறாகச் சொல்லும்போது, சந்தேகம் வரலாம். ஆனால், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடந்து கொள்வதுதான் இல்லறத்துக்கு அழகு!


'கணவர்/மனைவி அப்படி நடந்துக் கிறார். ஆனா, சந்தேகப்படக் கூடாதுனு விட்டுட்டு, அப்புறமா சந்தேகப்பட்டது உண்மையாயிடுச்சுனா..?’ என்று கேட்கலாம். உங்கள் துணை மீது சந்தேகம் வந்தால், உடன் வேலை செய்பவர்களிடமோ, அக்கம் பக்கம், உறவுகளிடமோ அது குறித்து மேலதிகத் தகவல்களைப் பெற நினைக்காதீர்கள். சந்தேகம் என்ற பொறி தோன்றிவிட்டால் முதலில் பேச வேண்டியது சம்பந்தப்பட்டவரிடம்தான்.

'இப்படி நான் சந்தேகப்படுறேன். நீ ஏன் அப்படி சந்தேகப்படுற மாதிரி நடந்துக்கிறே?’ என்று துணையிடம் வெளிப்படையாக, நேரடியாக மனம்விட்டுப் பேசிவிட்டால், பற்பல இல்லறப் பிரச்னைகளில் ஒன்றாக இதுவும் தோன்றி மறைந்துவிடும். அப்படியல்லாது, சந்தேகத்தை மேலும் மேலும் வளரவிட்டால்... மனஅழுத்தம் உண்டாகி, வாக்குவாதத்தில் தொடங்கி, அடிதடி, சண்டை, சச்சரவு, விவாகரத்து, தற்கொலை, கொலை என்று விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமல்லாமல், குழந்தை, இரு வீட்டாரின் குடும்பம் என்று அனைவரும் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சந்தேகம், ஒரு புள்ளியாக இருக்கும்போதே துணையிடம் வெளிப்படையாகப் பேசி, முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். உறவுகளில் ஒருபோதும் நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். யார் சொன்னாலும் நம்பிவிடாமல், துணை மீது நம்பிக்கையோடு கையாள வேண்டும். நம்மால் முடியாவிட்டால் பக்குவமான, அக்கறையுடைய நண்பரிடமோ, தோழியிடமோ, உறவினரிடமோ, குடும்பப் பெரியவர்களிடமோ கூறி, அவர்கள் மூலமாகத் தீர்வு காண வேண் டும். அப்படியும் முடியாவிட்டால், உடனடியாக மனநல மருத்துவரை அணுகி, நோயை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும்.

ஒரு கொடிய நோய்க்கு எப்படி உடனடி சிகிச்சை கொடுக்கப்பட வேண்டுமோ, அப்படியான அவசர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியதுதான் சந்தேகம் என்ற நோயும். மேலும் நம்பிக்கை என்ற மருந்து உறவுகளுக்கிடையில் எப்போதும், எதிலும் இருந்துவிட்டால் சந்தேக நோய் ஒருபோதும் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம்!

சந்தேக நோய்க்கு மருந்து... உங்கள் இல்லறத்தில் நிரம்ப இருக்கிறதுதானே..?!
ரிலாக்ஸ்...
[HR][/HR]


சந்தேகத்தால் சீரழிந்த குடும்பம்!

ந்தேகத்தால் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள், இருவீட்டார் குடும்பத்தினர் மட்டுமல்ல, சிலசமயம் தவறறியாத மற்றொரு குடும்பமும் பாதிக்கப் படுகிறது. சமீபத்தில் என்னிடம் வந்திருந்தனர்

அந்தத் தம்பதி. 'நான் எந்தத் தப்பும் செய்யல. எதுக்காக இந்த சந்தேகப்புத்தி கொண்டவளோட வாழ்ந்து, செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கணும்? விவாகரத்து செய்யப்போறேன்!’ என்று ஒற்றைக்காலில் நின்றார் கணவர்.

அவர் மனைவி ஆரம்பத்தில் மொபைலில் பேசுவது, அலுவலகத்தில் இருந்து தாமதமாக வருவது என சின்னக் சின்னக் காரணங்களுக்கு சந்தேகப் பிரச்னையை கிளப்பியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது வளர்ந்து, எதிர்வீட்டுக்குப் புதிதாக குடிவந்த பெண்ணுடன் அவரை சம்பந்தப்படுத்திப் பேசியதோடு, அதை அந்த அப்பார்ட்மென்டில் உள்ள அனைவரிடமும் பஞ்சாயத்து வைத்து,

அந்தப் பெண்ணின் குடும்பத்திலும் பெரிய பிரச்னையை உண்டாக்க, அவர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துப் பேசினேன். தன் சொந்தக்கார பெண் ஒருத்திக்கு நேர்ந்த கொடுமை தனக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதால்தான் 'ஜாக்கிரதை’யாக இருப்பதாக நினைத்து, சந்தேகப்பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார் அவர். இருவருக்கும் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினேன்.

இப்படி சந்தேகத்தால் விளையும் பிரச்னைகளின் பட்டியல் கொஞ்சநஞ்சமல்ல!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.