வள்ளிக்கிழங்கு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வள்ளிக்கிழங்கு


சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

இறைவன் இவ்வுலகு உய்ய பல்வேறு இயற்கை உணவுப் பொருட்களையே மருந்தாகவும் வழங்கியிருக்கிறான். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் வள்ளிக்கிழங்கு. இதன் முக்கியத்துவம் கருதியும், இதனுள் அடங்கியிருக்கும் ஊட்டச் சத்துகளை மனதில் இருத்தியும் ‘ஏழைகளின் உணவு’ என்று சிறப்பித்து கூறப்படுவது உண்டு.

கொடி வகையைச் சார்ந்த தாவரமான வள்ளிக்கிழங்கு, இனிப்புச்சுவை மிகுந்த கிழங்கு என்பதால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்று பெயர் பெற்றுள்ளது. இதுதவிர, மரவள்ளி, மஞ்சள் மரவள்ளி, சீமை மரவள்ளி, சிவப்பு வள்ளி, சீன வள்ளி என்று வேறு பல வகைகளும் வள்ளிக்கிழங்கில் அடையாளம் சொல்லப்பட்டுள்ளன.இந்த அத்தியாயத்தில், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் முக்கியத்துவத்துடன் மரவள்ளிக்கிழங்கின் மகிமையினையும் சேர்ந்தே அறிய இருக்கிறோம்.

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பற்றி பார்ப்போம்.வெண்மை, சிவப்பு என இருநிறங்களிலும் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு Ipomoea batatas என்பது தாவரப் பெயர் ஆகும். இதன் இனிப்புச்சுவை காரணமாக ஆங்கிலத்தில் Sweet potato என்று அழைக்கப்படுகிறது. ஆயுர் வேதத்தில் ரக்த கந்தா என்ற பெயரால் குறிப்பிடுவது வழக்கம். அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உணவுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள் சிறுநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறப்பான மருந்து என்று சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சொல்லலாம். சிறுநீர் வலியோடு வெளியாதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறிது நேரம்கூட அடக்க இயலாமை, சிறுநீர்த்தாரை எரிச்சல் ஆகிய துன்பங்களைப் போக்குவதற்கு அற்புத மருந்தாக உதவுகிறது வள்ளிக்கிழங்கின் வேர்ப்பகுதி.

இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற, தாகத்ைத தணிக்கவல்ல மருந்து வள்ளிக்கிழங்கு என்று சொன்னால், அது மிகையில்லை. இதன் முழுத் தாவரமும் காய்ச்சலைத் தணிக்கவும், சரும நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் பயன்படுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைப்பதால் அதனுடைய இனிப்புச்சுவை கூடுவதை அறிந்திருப்போம். இதற்குக் காரணம், வேக வைக்கும்போது வள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து Maltose என்னும் இனிப்புப் பொருளாகவும் Dextrins எனும் இனிப்புப் பொருளாகவும் மாறுபடுவதுதான்.

வள்ளிக்கிழங்கு மருந்தாகும் விதம் வள்ளிக்கிழங்கின் இலையைத் தீநீர் இட்டுக் குடிக்கக் கொடுப்பதால் வயிற்றிலுள்ள கீரிப்புழுக்கள், நாக்குப்பூச்சி என்னும் மண் புழுக்கள், நாடாப் புழுக்கள் உட்பட தேவையற்ற புழுக்கள் உடலிலிருந்து வெளியேறும்.

வள்ளிக்கிழங்கின் சாறு எடுத்து ஏதேனும் ஓர் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி மேற்பூச்சாகப் பயன்படுத்துவதனால் புண்கள் விரைவில் ஆறும். தொழுநோய் புண்களையே ஆற்றும் வல்லமை வள்ளிக்கிழங்கின் சாறுக்கு உண்டு. இதன் இலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசினால் தேள் கடியினால் உண்டாகும் வலி உடனே குறையும்.
வள்ளிக்கிழங்கு பற்றிய அகத்தியர் பாடல்...

‘மந்த மிகுந்த தீபனம்போம் மாறாக் கரப்பானாஞ்
சிந்த மிகேபமுஞ் சேருங்காண் - தொந்தமாய்
மூல முளைவளரும் முட்டைச் சிறுகிழங்கால்
ஏல வளகமின்னே யெண்’.
(அகத்தியர் குணபாடம்)

வள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்து மிகுந்தது என்றாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பதையே இந்தப் பாடலில் அறிவுறுத்துகிறார் அகத்தியர். வள்ளிக்கிழங்கை அடிக்கடி உண்பதால் மந்தத்தன்மை உண்டாகும், பசியின்மை ஏற்படும், கரப்பான் என்னும் சருமநோயும் மூலமும் உண்டாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும். எனவே, அவரவர் உடல் தன்மைக்கேற்ப வள்ளிக்கிழங்கை அளவறிந்து உண்ணுவதே முக்கியமான ஒன்றாகும்.

இதேபோல நாம் பயன்படுத்தும் மரவள்ளிக்கிழங்கும் எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்டது. இன்னும் சொல்லப் போனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கைக் காட்டிலும் நமக்கு அதிகம் நன்மைகளைத் தரக்கூடியது மரவள்ளிக்கிழங்கு.

Tapioca Cassava என்பது மரவள்ளிக்கிழங்கின் தாவரப் பெயர் ஆகும். இதன் தாவரப் பெயரான Tapioca என்ப திலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. குச்சிக்கிழங்கு என்று கிராமப்புறங்களில் சொல்லப்படும் இதனிலிருந்துதான் ஜவ்வரிசி உள்பட பல்வேறு உணவுப்பொருட்களும், மாவுச்சத்து இனிப்புப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக்கிழங்கு, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெரிதும் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கில் 26 முதல் 40 விழுக்காடு வரையில் மாவுச்சத்து அடங்கிஉள்ளது. அதுமட்டுமல்ல... ஃப்ளேவனாய்ட்ஸ், வைட்டமின் சி ஆகிய சத்துகளும் மிகுதியாக உள்ளன.

மரவள்ளிக்கிழங்கின் வேர்ப்பகுதி பசியைத் தூண்டுவதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும், மலமிளக்கியாகவும், காயங்களை ஆற்றும் திறன் கொண்டதாகவும் விளங்குகிறது. மேலும், மரவள்ளிக்கிழங்கில் Carotenoids என்னும் வைட்டமின் ‘ஏ’ சத்து மிகுதியாக உள்ளது. மேலும், Beta carotene, Lutein என்னும் சத்தினையும் பெற்றிருக்கிறது. மரவள்ளிக்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறைவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

மரவள்ளிக்கிழங்கு மருந்தாகும் விதம்

4மரவள்ளிக்கிழங்கின் இலையை அரைத்து மேற்பூச்சாகவோ, பற்றாகவோ போட்டு வைப்பதனால் அம்மை, தட்டம்மை, சின்னம்மை ஆகியவையும், சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், எரிச்சல், வலி உட்பட பல சரும நோய்கள் குணமாகும்.

*மரவள்ளிக்கிழங்கு மாவு சருமத்துக்கு ஆரோக்கியம் தரும் மாவு என்பதோடு, அழகு தரும் மாவு என்றும் அறுதியிட்டுச் சொல்லலாம். மரவள்ளிக்கிழங்கின் மாவை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, கஞ்சி பதம் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அரிப்பு, படை, சொறி, சிரங்கு போன்ற சருமப் பிரச்னை உள்ள இடத்தில் மென்மையாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

மாவு காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணி கொண்டு துடைத்து விட வேண்டும். இதுபோல தொடர்ச்சியாகச் செய்து வருவதன் மூலம் சரும நோய்களை விரட்ட முடியும். சருமத்தின் சுருக்கங்கள் குறைந்து மென்மையும் பளபளப்பும் பெற விரும்புகிறவர்களும், மரவள்ளிக்கிழங்கின் மாவை இதே வழியில் பயன்படுத்தலாம்.

*மரவள்ளிக்கிழங்கின் துண்டுகளை அரைத்துச் சாறு பிழிந்து, அதனை போதிய நீர்விட்டுக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குழந்தைகளைக் குளிக்க வைப்பதால் சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் விளங்கும்.

*புதிதாகப் பெறப்பட்ட மரவள்ளிக்கிழங்கைத் துண்டித்து, அரைத்துப் பசையாக்கி மேல் பற்றாகப் போட்டிடப் புண்கள் விரைவில் ஆறும்.

*மரவள்ளிக்கிழங்கின் இலையை அரைத்துச் சாறு எடுத்து கண்ணுக்கு மை போலத் தீட்டிக்கொள்வதால் கண் எரிச்சல், கண் சிவப்பு ஆகியன குணமாகும். மரவள்ளிக் கிழங்கின் மரப்பட்டையை 10 கிராம் அளவு எடுத்துத் தீநீரிட்டு போதிய இனிப்பு சேர்த்துக் குடிப்பதால் மூட்டு வலிகள் குணமாகும்.

முடக்குவாதம் என்று சொல்லப்படுகிற கைகால்களை மடக்குவதற்கும் நீட்டுவதற்கும் நடப்பதற்கும் சிரமப்படும் பிரச்னையையும் பெரும் வேதனை தரக்கூடிய வலியையும் வீக்கத்தையும் தணிப்பதாகவும் அமையும்.

வெளிநாடுகளில் மரவள்ளிக்கிழங்கின் பயன்பாடு

*பிரேசில், மலேசியா போன்ற நாடுகளில் மரவள்ளிக்கிழங்கின் துளிர் இலையை உணவாகப் பயன்படுத்துகின்றனர். இந்தோனேசிய மக்கள் மரவள்ளிக்கிழங்கு மாவில் ரொட்டி, பிஸ்ெகட்டுகள் செய்து சாப்பிடுகின்றனர்.

*மேற்கு ஆப்பிரிக்காவில் இலையை அரைத்து மேற்பற்றாகப் போட்டு தலை வலியையும், காய்ச்சலையும் போக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். இதையே உள்ளுக்கும் தீநீராக்கிக் குடிக்கின்றனர்.

*கம்போடிய மக்கள் கிழங்கை அரைத்துப் புண்கள், காயங்கள், சிராய்ப்புகள் இவற்றைக் குணப்படுத்த மேல் பற்றாகப் போடுகின்றனர்.

*பிரேசில் தேச மக்கள் மரவள்ளிக்கிழங்கினின்று மேற்பிரயோக மருந்தாக ஒரு களிம்பு தயாரித்து, விழி வெண்படலம் புண்ணாவதையும் சிவந்து போவதையும் குணமாக்க உபயோகப்படுத்துகின்றனர்.

*மலேசிய மக்கள் மரவள்ளிக்கிழங்கை தலைவலி, சளி, காய்ச்சல் ஆகியவற்றைத் தணிப்பதற்கும் மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்து
கின்றனர்.

*தென் அமெரிக்காவின் கயானா நாட்டு மக்கள் மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஒருவித பாகு செய்து மலச்சிக்கலைப் போக்கவும், வயிற்றுக் கோளாறுகளைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

*நைஜீரியா மக்கள் மரவள்ளிக்கிழங்கைப் பசையாக்கி தேமல், கருநிறம் ஆகியவற்றைப் போக்கவும் கட்டிகளைக் கரைக்கவும், கண் நோய்களைக் குணப்படுத்தவும் காயங்களை ஆற்றவும் நாட்பட்ட ஆறாத சீழ்பிடித்த புண்களை ஆற்றவும் பயன்படுத்துகின்றனர்.உணவுமாகி, மருந்துமாகிப் பயன் தரும் வள்ளிக்கிழங்கு வியக்கத்தக்கஒன்றுதான்.

சிறுநீர் வலியோடு வெளியாதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறிது நேரம்கூட அடக்க இயலாமை, சிறுநீர்த்தாரை எரிச்சல் ஆகிய துன்பங்களைப் போக்குவதற்கு அற்புத மருந்தாக உதவுகிறது வள்ளிக்கிழங்கின் வேர்ப்பகுதி.இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற, தாகத்ைத தணிக்கவல்ல மருந்து வள்ளிக்கிழங்கு என்று சொன்னால் அது மிகையில்லை.

மரவள்ளிக் கிழங்கு, முடக்குவாதம் என்று சொல்லப்படுகிற கைகால்களை மடக்குவதற்கும் நீட்டு வதற்கும் நடப்பதற்கும் சிரமப்படும் பிரச்னையையும் பெரும் வேதனை தரக்கூடிய வலியையும் வீக்கத்தையும் தணிப்பதாகவும் அமைகிறது.
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.