வியாதி அல்ல வெண்புள்ளி - Leucoderma

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வியாதி அல்ல வெண்புள்ளி!


'வெண்புள்ளி’ பாதிப்பு கொண்டவர்களை எதிரில் கண்டால் வெறித்துப் பார்ப்பவர்களும் முகத்தைத் திருப்பிக்கொள்வோரும்தான் அதிகம். 'வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒரு நோயே அல்ல... எனவே, அதை வெண் குஷ்டம் என்று அழைப்பதே தவறு’ என்று உறுதிபடச் சொல்கிறது மருத்துவ விஞ்ஞானம். ஆனாலும், இந்த மருத்துவ உண்மை இன்னமும் சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே ஓர் உதாரணம்....

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஐயப்பன். வாய் பேச முடியாதவர். தனியார் பல்கலைக்கழக மாணவர். இவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். இவரது உடலில் ஏற்கெனவே வெண்புள்ளிப் பிரச்னை இருந்தது. இந்த நிலையில், திடீரென வெண்புள்ளிகள் அதிக அளவில் பரவ ஆரம்பிக்க, உடன் படிக்கும் மாணவர்கள், 'தங்களுக்கும் வெண்புள்ளி பரவிவிடுமோ’ என்ற பயத்தில் ஐயப்பன் அருகில் செல்லத் தயங்கியதோடு தங்கள் பெற்றோரிடமும் இதுகுறித்துப் புகார் கூறி உள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து, 'எங்கள் பிள்ளைகளை வெண்புள்ளி பாதித்த மாணவர் அருகில் எப்படி உட்கார வைக்கலாம்?’ என்று சண்டை போட்டு இருக்கின்றனர்.இதில் பயந்துபோன பல்கலைக்கழக நிர்வாகம், ஐயப்பனை அழைத்து 'உனக்கு உள்ள நோயைக் குணப்படுத்திக்கொண்டு வா’ என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இந்தச் செய்தி வெளியே தெரியவும் வெண்புள்ளி விழிப்பு உணர்வு இயக்கத்தினர் பல்கலைக் கழகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகைகளும் மாணவருக்கு ஆதரவாகப் பேசின. இதனால் வேறு வழியின்றி பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் மாணவனைச் சேர்த்துக்கொண்டது. 2010-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 'வெண் குஷ்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தது. மேலும், இதனை வெண்புள்ளிகள் என்றே அழைக்க வேண்டும் என்றும் இது தொற்றுநோய் இல்லை என்றும் தெளிவாகக் கூறியிருந்தது. இவ்வளவுக் குப் பிறகும் ஒரு பல்கலைக்கழக நிர்வாகமே, வெண்புள்ளியைக் காரணம் காட்டி ஒரு மாணவனை வெளியேற்ற முயற்சித்ததுதான் கொடுமை!

வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கச் செயலாளர் டாக்டர் கே.உமாபதி (ஹோமியோபதி மருத்துவர்) இதுபற்றி விரிவாகப் பேசினார்.
'வெண்புள்ளி என்பது உடலில் உள்ள நிறமி இழப்பாகும். பாக்டீரியா, வைரஸ் போன்ற எந்த ஒரு கிருமியாலும் இது தோன்றுவது இல்லை. எனவே, இது ஒரு
தொற்று நோய் இல்லை.


கணவன் -மனைவி உறவின் மூலம்கூட இந்தப் பாதிப்பு பரவாது என்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் எப்படி இந்த நோய் தோன்றுகிறது என்று கேட்கலாம். நம் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் நம் உடலில் நுழையும் நச்சுக் கிருமிகளை அழித்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால், ஒரு சிலரது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் உடலில் உள்ள ஓர் உறுப்பையே எதிரியாக நினைத்து அழிக்க ஆரம்பித்துவிடும். இதை 'ஆட்டோ இம்யுன் டிஸ்ஆர்டர்’ என்று கூறுவர்.

நம் சருமத்தில், நிறத்தை அளிப்பதற்காக 'மெலனோசைட்’ என்ற சுரப்பி உள்ளது. வெள்ளை அணுவானது இந்த சுரப்பியை நம் உடலுக்குச் சம்பந்தம் இல்லாத பொருள் என்று நினைத்து அழிக்க ஆரம்பிக்கிறது. எனவே, தோலின் எந்த இடத்தில் இந்தத் தாக்குதல் ஏற்படுகிறதோ அந்த இடத்தில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதைத் தடுக்க முடியாது.

வெண்புள்ளிகள் நான்கு வகைப்படும். 'ஃபோக்கல்பேட்டன்’ (Focal pattern) வெண்புள்ளி என்பது உடலில் எங்கோ ஓர் இடத்தில் ஒரு சிறிய வெண்புள்ளியாக உருவாகும். இது உடனடியாகவோ அல்லது 30, 40 ஆண்டுகள் கழித்தோ விரைவாகப் பரவும். அடுத்தது செக்மென்ட் (Segmental)வெண்புள்ளி. இது உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் ஏற்படும். வலது பக்கத்தில் வெண்புள்ளி வந்தால் இடது பக்கத்தில் வராது. மூன்றாவது, ட்ரைலேட்ரல் (Trilateral) வெண் புள்ளி. இது உடலின் எல்லாப் பகுதிகளிலும் வரும். நான்காவது மரபுரீதியாக வரக்கூடியது. மரபுரீதியானது என்பதற்காக இது அப்பாவுக்கு வந்தால், குழந்தைக்கு வரும் என்று கட்டாயம் இல்லை. மூதாதையரில் யாரேனும் ஒருவருக்கு இருந்தால், அவர் வம்சாவழியில் யாருக்கேனும் ஒருவருக்கு வரலாம். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றில் 12 பேர் இந்த வகையினர்தான்.

வெண்புள்ளி வந்த பிறகு அதைச் சரிப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், அவற்றால் பலன் ஓரளவுக் குத்தான் கிடைக்கும். தற்போது மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் புதிய மூலிகை மருந்தைக் கண்டறிந்து உள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது வெண்புள்ளிகள் மறையத் தொடங்குகின்றன. மாதக்கணக்கில் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். 12 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த மருந்து முழுமையான பலனை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாங்களும் கண்கூட காண்கிறோம்'' எனச் சொன்ன டாக்டர் இறுதியாகப் பகிர்ந்த செய்திதான் நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது.

''வெண்புள்ளி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, மற்றவர்களின் ஏளனப் பார்வையால் ஏற்படும் மன அழுத்தம்தான் அதிகம். இதனால், தாழ்வு மனப்பான்மை, பதற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டவர்களால் கல்வி மற்றும் வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உருவாகிறது. வெண்புள்ளிகள் உடையவர்களைத் தீண்டத்தகாதவர்களைப் போல் பார்க்காமல் அவர்களையும் சக மனிதர்களாக நாம் அரவணைக்க வேண்டும். 'இது நோய் இல்லை’ என்ற எண்ணத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வண்ணம் போதிய விழிப்பு உணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்!''

வெண்புள்ளிகள் நம் ஏளனப் பார்வையால் புண்புள்ளிகள் ஆகாமல் தவிர்க்கலாமே!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.