வீட்டையும் பள்ளிக்கூடம் ஆக்கலாம்!

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
993
Location
Switzerland
#1
வீட்டையும் பள்ளிக்கூடம் ஆக்கலாம்!வளமான சமூகத்தைக் கட்டமைப்பதில் கல்வியின் பங்கு முதன்மையானது. ஆனால், நீண்ட காலமாகவே நமது கல்வி முறையின் மீதான விமர்சனம் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டுவருகிறது. இந்தக் கல்வி முறை மனப்பாடக் கல்வி முறையாக இருக்கிறது. இதனால் எந்தப் பயனும் இல்லை என்கிற விமர்சனம் அவற்றுள் முக்கியமானது. கற்பித்தல் முறை, பாடத்திட்டம் ஆகியவற்றில் மாற்றம் வேண்டும் என்கிற குரல் எழுகின்ற அதே வேளையில், பள்ளி என்கிற அமைப்புக்கு மாற்றாக வீட்டுப்பள்ளி முறையை (Home schooling) சிலர் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
வீட்டிலிருந்தே அத்தனையும் படிக்கலாம்
குழந்தைக்கு நாம் எதையும் புகட்ட வேண்டாம் என்பதுதான் வீட்டுப்பள்ளி முறையின் சாராம்சம். தவழ்கிற குழந்தை தன் சொந்த முயற்சியால்தான் எழுந்து நடக்கிறது. அதில் எத்தனை முறை தோற்றாலும் தொய்வடையாமல் தன் முயற்சியை குழந்தை தொடர்கிறது.
குழந்தைகள் இயல்பிலேயே எதையும் அறியும் ஆர்வம் உடையவர்கள். எல்லாவற்றுக்குப் பின்பும் அவர்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். எதற்காக இரவு வருகிறது, இரவில் ஏன் சூரியன் தெரிவதில்லை என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் இயல்பிலேயே எழும். அப்போது நாம் கொடுக்கும் பதில் அவர்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கும்.

ஹேமா
ஆனால் பள்ளி அமைப்பு குழந்தைகளின் கேள்விகளுக்கும், சுய சிந்தனைக்கும் பொதுவாக இடம் தருவதில்லை இதனால்தான் தன்னுடைய இரு குழந்தைகளையும் வீட்டுக்கல்வி முறையில் படிக்கவைத்து வருவதாகச் சொல்கிறார் ஹேமா. “வீட்டுக்கல்வி முறையில் எதுவும் திணிக்கப்படுவதில்லை. பொது இடங்களுக்கு என்னுடன் வரும்போது அங்கு நடைபெறும் ஏற்பட்டது. உரையாடல்கள் வழியே என்னுடைய குழந்தைகள் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்கிறார்கள்.
இயற்கை விவசாயத்தில் எனக்கு ஆர்வம் இருப்பதால் தோட்ட வேலைகள், கட்டட வேலைகள் இரண்டையும் என் குழந்தைகள் விரும்பிச் செய்கிறார்கள். இந்துஸ்தானி இசை கற்றுக் கொள்கிறார்கள். மனித உளவியல் பற்றிய புரிதல் அவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இதை இப்படியே நகர்த்திக்கொண்டு போனால் சமூகம் சார்ந்த புரிதலும் அவர்களுக்கு உருவாகும்” என்கிறார் ஹேமா.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட National institute for open schooling மூலமாகப் பொதுத்தேர்வு எழுத வைத்து விருப்பப்பட்ட துறை சார்ந்த கல்லூரிக்குத் தன் குழந்தைகளை அனுப்ப அவர் முன்வந்திருக்கிறார்.
சுதந்திரமாகப் படிக்க...
ஒரு வகுப்பில் முப்பது குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் முப்பது விதமானவர்களாக இருப்பார்கள். கற்றல் திறன் ஒருவருக்கொருவர் மாறுபடும் சூழலில் எப்படி ஒரு ஆசிரியரால் அனைவருக்கும் ஒன்றுபோல் கற்பிக்க முடியும்? ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் புரிந்துணர்வுக்கு ஏற்றாற்போல் தனித்தனியாகக் கற்றுக்கொடுப்பதற்கான சூழல் பள்ளியில் இல்லை. ஆகவேதான் தனது குழந்தைகளை வீட்டுப்பள்ளி முறையில் வளர்த்தெடுப்பதாகச் சொல்கிறார் பத்மஸ்ரீ.
“நாங்கள் முன்பு அமெரிக்காவில் வசித்தோம். அப்போது குழந்தைகளின் உளவியல், கற்றல் பற்றியெல்லாம் நான் படிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளைப் பற்றிய புரிதல் எனக்கு தொடர்ச்சியாக வீட்டுப்பள்ளி முறை பற்றி படித்தேன். கல்வி சார்ந்த நிறைய தத்துவ நூல்களைப் படித்த எனக்கு வீட்டுப்பள்ளி முறை ஏற்புடையதாக இருந்தது. எங்களது குழந்தைகளை வீட்டுப்பள்ளி முறையில் வளர்ப்பதற்கு என் கணவரும் விருப்பம் தெரிவித்தார்” என்கிறார்.

பத்மஸ்ரீ
வீட்டுப்பள்ளி முறையைக் கற்பித்தல் முறை என்று சொல்வதைவிட வாழ்தலின் வழியாகவே அனைத்தையும் புரியவைக்கும் முறை என்று இவர் கருதுகிறார். “எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிக் கிடையாது. டிஜிட்டல் கேம்ஸ் கிடையாது. போர்டு கேம்ஸ்தான் இருக்கிறது. எங்கள் மகனுக்கு டேபிள் டென்னிஸ், ஓவியம், பாட்டு மற்றும் ரோபோடிக்ஸில் ஆர்வம், மகளுக்குப் பரதம், ஓவியம், பாட்டு மீது நாட்டம். இருவரும் அதற்கான பயிற்சிகளைத் தனியே கற்றுக் கொண்டு வருகிறார்கள். அவர்களது சுதந்திரத்தை நாங்கள் உணர வேண்டும் என நினைக்கிறோம்.” என்கிறார்.
புறந்தள்ளுவது ஆரோக்கியமானது அல்

மறுபுறம், வீட்டுப்பள்ளி முறையை இந்தியச் சமூகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. கல்வி என்பது பண்பாட்டின் கூறு. இந்தியச் சமூகத்தில் பாகுபாடான கட்டமைப்பு இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெனக் கூறுகிறது.
குழந்தைகள் ஒன்றாகக் கற்கின்ற சூழல் இருந்தால் மட்டுமே சகோதரத்துவம் வளரும். சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அவர்கள் தெரிந்துகொள்ளும்போதுதான், அதனைக் களைய முற்படுவார்கள் என்கிற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
“இப்போது இருக்கிற கல்வி முறையில் போதாமைகள் இருப்பதுதான். சாதிய விடுதலை, பாலினச் சமத்துவம் இக்கல்வி முறையில் சாத்தியப்படவில்லை. ஆனால், வீட்டுப்பள்ளி முறை மூலம் இது சாத்தியப்படுமா? வீட்டுப்பள்ளி முறை எந்த நாட்டிலும் பரவலாக இல்லை. குறிப்பிட்ட தரப்பு மட்டும் இதைப் பரவலாக்க முயற்சி செய்கிறது. பள்ளி என்கிற அமைப்புக்கு எதிரான சிந்தனைதான் இந்த வீட்டுப்பள்ளி முறை. பிரச்னையை எதிர்கொள்வதற்குப் பதிலாகப் பிரச்சினையிலிருந்து தப்பிப்பது இது.
நமது கல்வி முறையில் இருக்கும் சிக்கலைத் தீர்ப்பதற்குக் கோத்தாரி கல்விக் குழு தொடங்கிப் பல்வேறு கல்விக் குழுக்கள் பல பரிந்துரைகளைக் கொடுத்திருக்கின்றன. கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதைப் பொதுப்பள்ளி முறைக்குள் இருந்துதான் செய்ய வேண்டும்.
பள்ளி என்கிற அமைப்பையே புறந்தள்ளுவது ஆரோக்கியமானது அல்ல. என்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு. வளர்ந்த நாடுகளில்கூடப் பொதுப்பள்ளி முறைதான் பரவலாக இருக்கிறது. அப்படி இருக்க சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த இந்தியா போன்ற நாட்டில் கல்வியை மட்டும் பள்ளியில் இருந்து வீட்டுக்குக் கொண்டுவருவதால் எப்படிப்பட்ட மாற்றம் சாத்தியம் என்கிற கேள்வி பரிசீலனைக்குரியது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.