வெயிலோடு விளையாடுவோம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெயிலோடு விளையாடுவோம்

டாக்டர் வி. விக்ரம்குமார்
'காலை வெயில் கழுதைக்கு நல்லது, மாலை வெயில் மனிதனுக்கு நல்லது’ என்னும் பழமொழி தொடங்கி, ‘காலை இளங்கதிர் தீது’ என்று உரைத்த பழம்பெரும் சித்தர் தேரையரின் கூற்றுவரை மாலை வெயிலே சிறந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இருந்தாலும், சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் முன் காலையிலும் சூரிய ஒளியில் நனையலாம். சூரிய நமஸ்காரம், நடைப்பயிற்சி போன்ற செயல்களைச் சூரிய ஒளியில் மேற்கொள்வதால் பல நோய்களைத் தடுக்க முடியும்.

இப்படி நம்மைச் சுற்றி இலவசமாகக் கிடைக்கும் இயற்கையின் கொடை சூரிய ஒளி. அதன் மகத்துவத்தை அறியாமல், இருளின் பிடியில் வலிந்து சிக்கிக்கொள்கிறது இன்றைய அதிவேக உலகம்!

நம் நாடு ஒரு வெப்பமண்டல நாடாக இருந்தாலும், சூரிய ஒளியை உடலுக்குள் அனுப்புவதைத் தடுக்கின்றன ‘அப்பார்ட்மெண்ட்’ வீடுகள். 24 மணி நேரமும் குளுகுளு வசதிகளுடன் கூடிய அலுவலகங்களும், மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலும் நம் உடலில் சூரிய ஒளி படுவதை முற்றிலும் தடை செய்கின்றன.

வெயிலில் நனையும் நேரம்
சூரிய ஒளியில் நனைந்து அதன் பலன்களைப் பெற, காலை நேரமாக இருந்தால் 7 மணிக்கு முன்னும், மாலை நேரமாக இருந்தால் 4 மணிக்குப் பின்னாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காலை 7 மணிக்கு மேல் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து நம் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றித் தலைவலி, சோம்பல் போன்றவற்றையும் உண்டாக்கலாம்.
வெயிலில் காய்வதால் வாத நோய்கள் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். இதை நிரூபிக்கும் வகையில் உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கச் சூரியக் குளியல் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது மேற்கத்திய ஆய்வு ஒன்று.

வைட்டமின் டி
தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால், எந்தச் செலவுமில்லாமல், நம் உடலின் மிகப் பெரிய உறுப்பான தோலுக்கடியில் மறைந்திருக்கும் புரோ-வைட்டமின் டி (Pro- Vitamin-D) வைட்டமின் டியாக மாற்றப்படுகிறது. இப்படி இயற்கை வரப்பிரசாதமாகக் கிடைத்த வைட்டமின் டி, உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி, எலும்புகளைப் பலப்படுத்தி, தசைகளை வலிமைப்படுத்துகிறது.

கொழுப்பு கரைய
தோலின் அடியில் உள்ள கொழுப்பு சூரிய ஒளியால் எரிக்கப்படுகிறது. சூரியனால் கிடைத்த வைட்டமின் டி, உடலில் சேர்ந்த அதீதக் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு சேர்த்துச் சூரியனையும் நம்பலாம்.

முகப் பளபளப்புக்கு
முகத்தில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, கருவளையம் போன்ற பிரச்சினைகளைப் போக்குவதற்கு அழகுக் கிரீம்களிடம் தஞ்சமடைந்து முகத்தின் பொலிவை இழப்பதற்குப் பதிலாக, முகத்தில் நல்லெண்ணெயை லேசாகத் தடவிக்கொண்டு தினமும் ஐந்து நிமிடம் சூரிய ஒளி படும்படி செய்து, பின் முகத்தை இளஞ்சூடான நீரில் கழுவிவர, சில நாட்களில் முகம் `பளிச்’ ஆகும்.

கிருமிகளை அழிக்க
நீர்நிலைகளில் இருக்கும் கிருமிகளை, இயற்கையான சூரிய ஒளி அழிப்பதுபோல, உடலில் உள்ள கிருமிகளையும் சூரிய ஒளி அழித்து உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருத்துவ வளர்ச்சி அவ்வளவாக இல்லாத கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தைத் தடுக்க இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்படும் ரத்த அழுத்தம்
உடலில் `செரடோனின்’ எனும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, ‘டிப்ரஷன்’ எனும் மனம் சோர்வுறுவதைத் தடுக்கிறது சூரிய ஒளி. அத்துடன் ரத்தக் குழாய்களில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுத்தப்பட்டு, உயர் ரத்தஅழுத்தமும் குறைகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாப்பது மட்டுமன்றி, வேறு சில புற்றுநோய்கள் வராமலும் தடுக்கிறது சூரிய ஒளி.

வாழ்நாள் அதிகரிக்க
‘நீண்ட நாட்களுக்கு வாழ ஆசைப்படு பவர்கள், தினமும் சூரிய ஒளி படும்படி ஜாலியாக ஒரு வாக்கிங் போயிட்டு வந்தால் போதும்’ என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

சூரிய ஒளி ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படச் செய்கிறது. நமக்குப் பிராண வாயுவை அள்ளித் தரும் தாவரங்கள் சூரியனிலிருந்து ஆற்றலை உருவாக்கிக் கொள்வதைப் போலவே, நம்மைப் பாதுகாக்கும் தோலும் ஆற்றலை உருவாக்கிக் கொள்கிறது. மிதமான சூரிய ஒளியானது தோலின் மேல் படுவதால், நம் உடலின் செல்கள் சுறுசுறுப்படைந்து, அதிக ஆற்றல் கிடைக்கிறது.

சூரியக் குளியல்
‘சூரிய ஒளி உடலில் படுவதால், பல விதமான நோய்கள் நீங்கும்’ என்று சித்தர்கள் ஏடுகளில் பொறித்து வைத்தனர். இதைப் பல காலமாக ஏற்க மறுத்த நவீன விஞ்ஞானம் இப்போது, ‘சூரியக் குளியல் பல்வேறு நோய்களைத் தடுக்கிறது’ என்று சொல்வதில் வியப்பேதுமில்லை. முன்னோர்கள் பின்பற்றிவந்த வாழை இலைக் குளியல் மூலமும் சூரியனால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம்.

வெயிலோடு பின்னிப் பிணைந்த நம் முன்னோர் முறைகளை ஆரோக்கியத்துக்காகத் தூசி தட்டுவோம்! நிலவொளியில்தான் கவி பாட வேண்டும் என்றில்லை! சூரியனின் இளவொளியிலும் கவி பாடலாம், வெயிலில் நனைந்துகொண்டே!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.