வெயிலோடு விளையாடு!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெயிலோடு விளையாடு!

சம்மர் ஸ்பெஷல் டிப்ஸ்
கோடையின் கொடுமையில் இருந்து தப்பிக்க, ஃபிரிட்ஜுக்குள் தலையை விட்டு குளிர்காற்று வாங்கும் சுட்டிகள், மானாவாரியாக ஐஸ் வாட்டரில் தொண்டையை நனைக்கும் அப்பாக்கள், அடுப்படியில் புடவைத்தலைப்பை கைக்குட்டையாக்கி வியர்வையைத் துடைத்துக்கொண்டு சமையல் செய்யும் அம்மாக்கள் என, ஏப்ரல், மே மாதங்களில் இதுதான் அன்றாடக் காட்சி.

பெய்யெனப் பெய்து மழை ஒரு வழி செய்து போன பின், வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்து இருக்கிறது. ‘மார்ச் இறுதியிலேயே இந்த நிலை என்றால், அக்னிநட்சத்திரத்தில் எப்படி இருக்குமோ?’ எனக் கோடையை நினைத்துக் கலங்கி நிற்கிறார்கள் மக்கள்.

‘வெயில் பாதிப்பு இதுவரை இல்லை என்றாலும், ஏப்ரல் இறுதி, மே மாதங்களில் உச்சம் பெறும்’ என எச்சரித்து உள்ளது வானிலை ஆய்வு மையம். வீட்டிலும் அலுவலகத்திலும் மின் விசிறி, ஏ.சி எனத் தப்பித்துக்கொண்டாலும் வெளியே செல்லும் இடைப்பட்ட நேரம் நரகம். அதிலும் நகரத்தின் போக்குவரத்து நெரிசலில், சிக்னல் சிக்னலாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நேரம், எமலோகத்து எண்ணெய் சட்டி எஃபெக்ட்.

மறுபுறம், கொளுத்தும் கத்திரி வெயிலால் பரவும் விதவிதமான தொற்றுநோய்கள், உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டுபோகும் தொண்டை, எச்சில் உலரும் நாக்கு, கசகச அக்குள் வியர்வை, எரிச்சல், அரிப்பு ஏற்படுத்தும் வியர்க்குரு, எந்த வேலையையும் செய்ய முடியாத அலுப்பு, தலைவலி, படபடப்பு... என வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யாரும் தப்புவது இல்லை. கோடையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, என்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிந்துகொண்டால், கோடையும் கொண்டாட்ட காலமாக மாறிவிடும்.


பொதுவாக ஏற்படும் சருமப் பாதிப்புகள்


வெயில் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படுவது சருமம்தான். சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், முகம், கை, கால், முதுகில் சிவப்பான தடிப்புகள், புள்ளிகள் ஏற்பட்டு, எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும்.

இரண்டாவது முக்கியப் பாதிப்பு, வியர்க்குரு.சருமத் துவாரங்களில் ஏற்படும் அடைப்பால், வியர்வை வெளியேற முடியாமல்போவதால் ஏற்படுவதுதான் வியர்க்குரு. இதனால், தோல் தடிப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம், வெயில் காலத்தில் காற்றுப்புக முடியாத இறுக்கமான ஆடைகள் அணிவது.

வியர்க்குருவைக் கவனிக்காமல் விடும்போது, கிருமிகள் தாக்கத்தால் வேனல் கட்டிகளாக மாறக்கூடும்.

வெயில் காலங்களில் பொதுவாகத் தாக்கும் நோய்கள் சின்னம்மை மற்றும் `ஹெர்பீஸ்’ எனப்படும் அக்கி.

வெயிலுக்கும் அம்மைக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், கோடை காலத்தில்தான் அம்மைநோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன.

இடைவிடாத காய்ச்சல், தொண்டைவலி, உடல்வலி, உடல் முழுதும் ஏற்படும் சிவப்பு நீர்க் கொப்பளங்கள் அம்மையின் பிரதான அறிகுறிகள்.

இவற்றுள், ஏதேனும் ஓர் அறிகுறி தென்பட்டாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

அம்மைநோய்க்குச் சரியான தடுப்பு மருத்துகள் எடுத்துக்கொள்ளாவிட்டால், அம்மைநோய்க் கிருமிகள் முதுகுத்தண்டுவடம் வழியாக உடலில் பரவித் தங்கிவிடும்.

எப்போது எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ, அப்போது இந்த அம்மைக் கிருமி உடல் செல்களைத் தாக்கும். இதனால், அக்கி உருவாகும்.

புற ஊதாக் கதிர்கள்

வெப்ப மண்டல நாடுகளில், கோடை காலத்தில் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் உடல் பாதிப்பு அதிகம்.

அல்ட்ரா வயலெட் ஏ கதிர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இருக்கும். இவை, உடலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சருமத்தின் மேல் பகுதியான எபிடெர்மிஸின் மேல் மட்டுமே இதன் கதிர்கள் படும். இதில், வைட்டமின் டி மிகவும் குறைவு.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அல்ட்ரா வயலெட் பி கதிர்கள் இருக்கும். இது, மிகுந்த வீரியம் உடையது.

சன் ஸ்ட்ரோக் முதல் சருமப் புற்றுநோய் வரை எல்லா பாதிப்புகளும் இதனால் ஏற்படலாம். இதன் கதிர்கள், சருமத்தின் மேல் பகுதியான எபிடெர்மிஸைத் துளைத்து, அடிப்பகுதியான டெர்மிஸ் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும்.

இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் உள்ளது. பொதுவாக, இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் இருக்கக் காரணம், சருமத்தில் அதிக அளவு உள்ள மெலனின். இது, அல்ட்ரா வயலெட் பி கதிர்வீச்சின் பாதிப்புகளைத் தடுத்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் சேர்த்தே தடுக்கிறது.

வெள்ளையான தோல் உடையவர்களுக்கு மெலனின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதனால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதில் கிடைத்துவிடும். ஆனால், புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளும் அவர்களுக்கு அதிகம்.

சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாமா?

வெயிலில் இருந்து தப்பிக்க, பல சன் ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளன. அவற்றில், ரசாயனம் கலந்தது எது, கலக்காதது எது, ஆல்கஹால், அமோனியா இல்லாதது எது, சுத்தமான ஹெர்பல் பொருட்கள்தான் வாங்க வேண்டுமா? எனப் பலருக்கும் பல குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தினாலும், பொதுவான சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

சன் அலர்ஜி உள்ளவர்கள், கண்டிப்பாக சன் ஸ்கிரீன் கிரீம் அல்லது லோஷனைக் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டும். வெயில்படும் இடங்களில் இந்த லோஷனைத் தடவிக்கொள்ள வேண்டும். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தமான நீரால் கழுவி, ஈரம் போகத் துடைத்துவிட்டு, மீண்டும் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை இவ்வாறு செய்ய வேண்டும்.

ஆடைகள்

காற்றோட்டமான கதர், பருத்தி ஆடை மற்றும் உள்ளாடைகள்தான் கோடை காலத்துக்கு ஏற்றவை. முடிந்தவரை, வெள்ளை அல்லது பளீர் நிறங்களில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம், சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் தன்மை உடையது. கறுப்பு மற்றும் அடர் நிறங்கள் அதற்கு நேர்மாறாக, சூரியக் கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும். இதனால், புழுக்கம், வியர்வை அதிகமாகும். பெண்கள் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ், ஷிபான், பாலியஸ்டர், பட்டு ஆடைகளைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

பூஞ்சை (ஃபங்கஸ்) நோய்கள்

வியர்வை அதிகமாக இருக்கும் இடங்களில் வளரக்கூடியவை பூஞ்சைகள். இவை, தேமல், படை என இரண்டு வடிவங்களில் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும். தோலின் நிறம், மெலனின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, பச்சை, சிவப்பு நிறங்களில் அக்குள், பிறப்புறுப்பு இடுக்குகளில் தோன்றும்.

வியர்க்குரு பவுடர் பயன்படுத்தலாமா?

கண்கவர் விளம்பரங்களைப் பார்த்து, குளித்த புத்துணர்வு மாறாமல், வியர்க்குரு பவுடரை உடல் முழுக்கத் தூவிச் செல்பவர்கள் அதிகம். இது, மிகத் தவறானது. அந்த பவுடர்தான் வியர்வைக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி, வியர்வையை வெளியேற விடாமல் செய்துவிடுகிறது. நாளடைவில் வியர்க்குரு ஏற்படக் காரணமாகிறது. பூஞ்சை பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் மருத்துவர் பரிந்துரையின் பேரில், அதற்கானப் பிரத்யேகமான பவுடரை உபயோகிக்கலாம். மற்றவர்கள், கோடை காலத்தில் பவுடர்களைத் தவிர்ப்பது நலம்.

அமோனியா ஃபேஸ் வாஷ்


கோடையில், அடிக்கடி ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கு உண்டு. சோப், ஃபேஸ் வாஷ் இரண்டுமே முகத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும் கிளென்ஸர்கள்... அவ்வளவுதான். இரண்டிலும் ஒரே ஃபார்முலாதான் உள்ளது. மற்றபடி, ஃபேஸ் வாஷ் செய்வதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது இல்லை. கோடை காலத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளித்தாலே, உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். ஆனால், எதை உபயோகித்தாலும் சீக்கிரம் முகத்தைக் கழுவிவிட வேண்டும். நெடுநேரம் ஈரத்தில் ஊறினால், சரும மேல்புற செல்கள் வறட்சி அடையும்; சருமம் பாதிப்புக்கு உள்ளாகும்.

பெர்ஃப்யூம், டியோடரன்ட் பயன்படுத்தலாமா?

சிலர், அக்குள் வியர்வைத் துர்நாற்றத்தைப் போக்க, வெற்று உடலில் பாடி ஸ்ப்ரே அடிப்பார்கள், ரோல் ஆன் தடவுவார்கள். இவற்றில், 94 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளது. தோலின் மேல்புறமான எபிடெர்மிஸ்ஸில் இது நேரடியாகப் படுவதால், சரும ஒவ்வாமை, எரிச்சல் ஏற்படக்கூடும். தொடர்ந்து பாடி ஸ்ப்ரே பயன்படுத்தினால், தோல் கறுத்துவிடும். நீங்கள் நறுமண விரும்பியாக இருந்தால், பாடி ஸ்ப்ரேவுக்குப் பதிலாக, சட்டை மேல் அடிக்கும் பெர்ஃப்யூம் பயன்படுத்துவது நல்லது.

நீர் சத்துள்ள பழங்கள்

கோடையைச் சமாளிக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் அற்புதக் கொடை, பழங்கள். உடலுக்கு நீர்ச்சத்தைத் தருகிற, வெப்பத்தைப் போக்குகிற வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, நுங்கு போன்றவை வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கின்றன. தர்பூசணியின் வெள்ளைப்பகுதியில்தான் 90 சதவிகித நீர் உள்ளது. சிவப்புப் பகுதியில், 10 சதவிகித நீர்தான் உள்ளது. எனவே, வெள்ளைப் பகுதியுடன் சேர்த்துச் சாப்பிடுவதுதான் நல்லது.

ஏ.சி பயன்பாடு

பல நாட்களாக ஏ.சியைச் சுத்தம் செய்யவில்லை எனில், அதில் சேரும் அழுக்கு, கிருமிகள் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய்களையும் பரப்பும். எனவே, வீட்டில் உள்ள ஏ.சியை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், வறண்ட சருமம் உள்ளவர்கள், வியர்வை வெளியேறாத குறைபாடு உள்ளவர்கள், ஏ.சியைத் தவிர்க்கவும். ஜன்னலில் நன்னாரி வேரால் ஆன திரையை மாட்டினால் குளிர்ந்த மூலிகைக் காற்று அறையை நிரப்பும். சுகாதாரமான ஹெல்த்தி டயட், முன் எச்சரிக்கையான நடவடிக்கைகள், எளிமையான வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றினாலே, இந்தக் கோடையைக் கொண்டாட்டமாக மாற்றலாம். ஹேப்பி சம்மர்!


[HR][/HR]வெயில் கால டிப்ஸ்ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வெளியில் செல்பவர்கள் கையில் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பது நல்லது. அது
பிளாஸ்டிக்காக இல்லாமல் உலோகமாக இருப்பது சிறந்தது.

வறண்ட சருமம் உள்ளவர்கள் கோடைக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.


முடிந்தவரை எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், வெயில் தாழ்ந்த பின்பு, மாலையில் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சிறுநீர் மிகவும் மஞ்சளாக இருந்தால், உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிக்கவேண்டியது அவசியம்.

வெளியே செல்லும்போது சருமத்துக்கு சன்ஸ்கிரீன் தடவுவதுபோல, கண்ணுக்கு கூலிங்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இது தரமான புறஊதாக் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கையில் தண்ணீர், குடை கட்டாயம் இருக்க வேண்டும்.

10 - 15 வயதுள்ள வளரும் குழந்தைகளுக்கு வெயிலைத் தாங்கும் சக்தி அதிகம். எனவே, இவர்களை வெளியே விளையாட அனுமதிக்கலாம். ஆனால், 11 முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.


அதீதக் குளிர்ச்சி உள்ள ஐஸ் வாட்டர் குடிப்பது தவறு. மிதமான குளிர்ச்சியாக அருந்தலாம். மண்பானை நீர் நல்லது.

காலை, மாலை இரு வேளையும் குளிக்க வேண்டும். உள்ளாடைகளை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.


தினமும், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தைக் கழுவிக்கொள்வது நல்லது.

[HR][/HR]கோடை கால முதியோர் பராமரிப்பு

இதய ஆஞ்சியோபிளாஸ்ட்டி, பைபாஸ் அறுவைசிகிச்சை செய்தவர்கள், காலை 10 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

திடீர் மாரடைப்பை சில மணி நேரம் சமாளிக்க, ஆஸ்பிரின் மாத்திரையைக் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

வெளியே போகும்போது, கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும்.

எதிர்பாராத சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டால், உடனடியாக நீர் மோர் கொடுக்கலாம். பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.
 
Last edited:

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Very good sharing, Letchumy.
Kodai kaalatthai samalikka arumaiyaana tips solli irukeenga.
:thumbsup
Thanks for sharing.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Very nice sharing. Useful tips for this summer. Thank you ji
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.