வெலவெலக்க வைக்கும் வெல்லக் கலப்படம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெலவெலக்க வைக்கும் வெல்லக் கலப்படம்!


கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்றுக்கு தற்செயலாகச் சென்றிருந்தேன்.அங்கு வெல்லம் தயாரிப்பில் பல ரசாயனங்கள் பயன்படுத்துவதை நேரடியாகப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்த ரசாயனங்களின் பெயர்கள் எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அவையெல்லாமே ஆபத்தானவை என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.அங்கு இருந்தவரிடம் கேட்டபோது, ‘இதையெல்லாம் கலந்தால்தான் வெல்லம் தயாரிக்க முடியும்’ என்று சாதாரணமாகக் கூறினார். ‘என்ன செய்து கொண்டிருக்கிறோம்’ என்பதை உணர்ந்து செய்கிறார்களா? இல்லை... அறியாமலேயே செய்கிறார்களா? என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது பற்றி விசாரிக்க முடியுமா?’
- சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இருந்து நமக்கு வந்த ஷாக் மெயில் இது!

எந்தப் பொருளில் எல்லாம் கலப்படம் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இன்று கஷ்டம். அந்த அளவு ‘எங்கும் கலப்படம்... எதிலும் கலப்படம்’ என்று எல்லாம் கலப்படமயமாகிவிட்டது தெரியும்தான்.

ஆனால், வெல்லத்தில் நடக்கும் கலப்படங்கள் பற்றி இதுவரை பரவலான விழிப்புணர்வு எதுவும் இல்லை. தமிழகத்தில் வெல்லத்தில் நடக்கும் கலப்படம் பற்றி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த உணவு பாதுகாப்பு அலுவலரான அனுராதாவிடம், அப்படி என்னதான் வெல்லத்தில் கலக்கிறார்கள் என்று கேட்டோம்...

‘‘தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில்தான் வெல்லம் உற்பத்தி அதிகம். கரும்பின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வெல்லம் சர்க்கரையைவிட ஆரோக்கியமானது. ஆனால், இந்த நம்பிக்கையைக் கெடுக்கும் விதத்தில் மைதா, சர்க்கரை போன்ற கலப்படங்
களும் ஆபத்தான ரசாயனங்களும் வெல்லத்தில் சேர்க்கப்படுகின்றன.

கரும்புச்சாறிலிருந்து பாகு எடுக்கப்பட்டு, அதிலிருக்கும் அழுக்குகளை நீக்குவதற்காக சல்பர் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்த சட்டத்தில் அனுமதியுண்டு. அதுவும், 70 பி.பி.எம். அளவுக்குத்தான் சல்பரை பயன்படுத்த வேண்டும்.

பி.பி.எம். என்பது பத்து லட்சத்தில் ஒரு பங்கு. அப்படியென்றால் எத்தனை குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் ஆய்வு செய்தபோதோ 1500 பி.பி.எம். அளவு வரை அதிகபட்சமாக சல்பர் சேர்க்கப்பட்டிருப்பதைக்கண்டுபிடித்தோம்’’ என்று அதிர வைக்கிறார் அனுராதா. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்...

‘‘வெல்லம் தயாரிக்கும்போது கரும்புப்பாகுடன் வேறு எந்தப் பொருளையும் சட்டப்படி கலக்கக் கூடாது. ஆனால், வெல்லத்தின் விலையை விட சர்க்கரை விலை குறைவு என்பதால் லாபநோக்கத்துக்காக சர்க்கரையை கலப்படம் செய்து வந்தார்கள். அதுவும், கடந்த 2 ஆண்டுகளாக சர்க்கரைக் கலப்படம் மிகவும் அதிகமாகிவிட்டது. 50 சதவிகிதம் கரும்புப்பாகுக்கு 50 சதவிகிதம் சர்க்கரையை கலந்து தயாரிக்கிறார்கள்.

இத்துடன் நிறுத்திவிடுவதில்லை. கரும்புப் பாகில் சர்க்கரையை கலந்து தயாரிக்கும்போது வெல்லத்துக்குண்டான பதம் வராது. சர்க்கரையை சேர்த்த உடன் பாகு இளகிப் போய்விடும். அதனால் வெல்லத்துக்கு உண்டான பதம் வர வேண்டும் என்பதற்காக மைதா சேர்ப்பார்கள். இதைவிட அபாயகரமாக, சூப்பர் பாஸ்பேட் உரத்தையும் சேர்க்கிறார்கள். விவசாயத்துக்குப் பயன்படும் இந்த உரத்தைச் சேர்த்தால்தான் வெல்லத்துக்குக் கெட்டித் தன்மை கிடைக்கும். வெல்லத்தை உருண்டையாகவும் பிடிக்க முடியும்.

இதன்பிறகு, வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். வெல்லம் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்தால்தான் கவர்ச்சி கரமாக இருக்கும், மக்கள் வாங்குவார்கள் என்பதால் அதன் பிறகு சோடியம் பை கார்பனேட், ஹைட்ரோஸ் போன்ற ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். வெல்லத் தயாரிப்பில் சர்க்கரையை அளவுக்கு அதிகமாக சேர்க்க ஆரம்பித்த பிறகு, சோடியம், ஹைட்ரோஸ் ரசாயனக் கலப்பும் இப்போது அதிகமாகிவிட்டது. வெல்லம், சர்க்கரை, ஜவ்வரிசி போன்றவை 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்தனை வெண்மையாக இல்லை. இந்த வேதிப்பொருட்களின் ஆதிக்கம் வந்த பிறகு அதிகமாகிவிட்டது...’’

இதற்கு அரசு தரப்பு நடவடிக்கை என்ன?‘‘2011ம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் வந்த பிறகு வெல்லம் உற்பத்தியாளர்களையும் வியாபாரிகளையும் வரவழைத்துத் தொடர்ச்சியாகப் பேசினோம்... பேசி வருகிறோம்...

சட்டப்படி இந்த முறையில்தான் வெல்லம் தயாரிக்க வேண்டும், வேதிப்பொருட்களை இந்த அளவுதான் சேர்க்க வேண்டும், ஆபத்தான ரசாயனங்களைச் சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆய்வுகளையும் செய்து வருகிறோம்.

நாங்கள் ஆய்வு செய்யும்போது வெல்லத்தின் மீது சந்தேகப்பட்டால், சேகரிக்கப்பட்ட வெல்ல மாதிரிகளை உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைப்போம். ரசாயனக் கலப்புகள் உறுதிப்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் உண்டு.

உணவுப்பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி ஆய்வறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பற்றது, தரம் குறைந்தது என்று உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு
6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அபராதத் தொகையாக 5 லட்சம் வரையும் விதிக்க முடியும்.’’

வெல்லத்தில் கலக்கப்படும் வேதிப்பொருட்களின் தன்மை என்ன?
பதிலளிக்கிறார் வேதியியல் பேராசிரியரான வெங்கிடுசாமி நாராயணன்...‘‘சல்பர் டை ஆக்ஸைடு உணவுப்பொருட்களிலும், குளிர்பானங்களிலும், உலர் பழங்களிலும் காய்கறிகளிலும் பிரிசர்வேட்டிவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தும் போது சல்பர் டை ஆக்ஸைடால் உடல்நலனுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை. அதனால்தான், உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட அளவு மட்டுமே சல்பர் பயன்படுத்த அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு தாண்டி பயன்படுத்தும்போது மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும் குணம் கொண்டதாக சல்பர் மாறிவிடுகிறது.

ஆஸ்துமா பிரச்னைக்கு ஆளாகியிருக்கும் ஒன்பது பேரில் ஒருவர் உணவுப் பொருளின் மூலம் சல்பர் டை ஆக்ஸைடால் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான ஆய்வுகளும் இருக்கிறது.

அதேபோல, விவசாயத்துக்குப் பயன்படுத்தும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை வெல்லம் தயாரிப்பில் பயன்படுத்துவதும் பெரிய தவறு. பாஸ்பேட் நம் எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவைதான். ஆனால், அது உணவின் மூலம் மிகவும் குறைந்த அளவில்தான் தேவை. இதுபோல், உணவுப்பொருளில் நேரடியாகக் கலக்கப்பட்டு நம் உடலுக்கு அதிக அளவில் போய்ச் சேர்ந்தால் சிறுநீரகக் கல், எலும்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உடனடியாக வெல்லத்தை உருண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல சூப்பர் பாஸ்பேட் கலக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காய்ச்சிய பாகு கொஞ்சம் குளிர்ந்த உடன் உருண்டை பிடித்தால் சூப்பர் பாஸ்பேட் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது...’’

வெல்லம் வாங்கும் போதும்... பயன்படுத்தும் போதும்...சர்க்கரைப் பொங்கல், பாயசம், அதிரசம், கச்சாயம், சீடை என பல்வேறு இனிப்பு
களில் அத்தியாவசிய இடம் பிடிக்கிறது வெல்லம். சர்க்கரையைவிட ஆரோக்கியமானது என்ற காரணத்துக்காகவும் வெல்லத்தைப் பயன்படுத்துகிறவர்கள் உண்டு.‘வெல்லத்தின் அருமையை உணர்ந்தவர்கள், அதை வாங்குவதிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார் உணவுப்பாதுகாப்பு அலுவலர் அனுராதா.

‘‘வெல்லம் முறைப்படி தயாரிக்கப்படும்போது அடர்பழுப்பு (Dark Brown) நிறத்தில்தான் இருக்கும். அந்த வெல்லம்தான் தரமாகவும் சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும். வெல்லம் வாங்கும்போது கொஞ்சம் அடர்பழுப்பான நிற வெல்லத்தைத்தான் வாங்க வேண்டும். ஆனால், பளிச்சென்று இருக்கும் வெல்லம் தான் சுத்தமானது என்று பொதுமக்கள் வாங்கிவிடுகிறார்கள்.

ஓர் உணவுப் பொருள் கவர்ச்சியாக, பளிச்சென்று இருந்தால் அதில் அளவுக்கு அதிகமான ரசாயனம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோன்ற தரக்குறைவான வெல்லம் உட்பட மற்ற பொருட்களை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தால் தானாகவே மாற்றம் நிகழும்.

வியாபாரிகள் வெளிர் மஞ்சளாக இருக்கும் வெல்லத்துக்குத்தான் அதிக விலை கொடுக்கிறார்கள் என்று எங்களிடம் பிடிபடுகிற
உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

வியாபாரிகளிடம் கேட்டால் வெளிர் மஞ்சளாக இருக்கும் வெல்லத்தைத்தான் அதிகம் வாங்குகிறார்கள் என்று மக்களின் மீது குற்றம் சொல்கிறார்கள்.
என்னதான் சட்டம் இயற்றி, கண்காணித்து வந்தாலும் தவறுகளை முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை.

எனவே, இந்த மாற்றம் மக்களிடம் இருந்தும் உருவாக வேண்டும். தரக்குறைவான வெல்லம் விற்காதபட்சத்தில் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் தரமான வெல்லத்தைத் தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள். மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அந்த மாற்றம் நிகழ வேண்டும்.

வெல்லத்தை நேரடியாக உணவுத் தயாரிப்பில் சேர்க்கக் கூடாது. குறிப்பாக, நேரடியாக வெல்லத்தை நுணுக்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வெல்லத்தை சூடுபடுத்திப் பாகு மாதிரி காய்ச்ச வேண்டும். அதன்பிறகு, அதன் அழுக்குகள் கீழே வடிந்தபிறகுதான் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். உற்பத்தி செய்யும் இடங்களில் ஈ மொய்க்கும். எறும்புகள் ஊறும்.

அதனால் சூடுபடுத்திவிடும்போது கெமிக்கலும் ஓரளவு கீழே படிந்துவிடும். ஈ, எறும்பு, கரும்புச் சக்கைகள், தூசிகள் போன்றவை கீழே படிந்துவிடும். அதன்பிறகு பயன்படுத்துவது ஓரளவு பாதுகாப்பானது.’’வெல்லத்துக்குண்டான பதம் வர வேண்டும் என்பதற்காக மைதா சேர்ப்பார்கள். இதைவிட அபாயகரமாக, சூப்பர் பாஸ்பேட் உரத்தையும் சேர்க்கிறார்கள்!


 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
OMG :rolleyes::rolleyes::rolleyes:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.