வெல்லுவதோ இளமை

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,461
Likes
714
Location
Switzerland
#1
அந்த நிராகரிப்பு நாட்கள்!‘ஜோ, உன்னோட அறிவுக்கு நீ ஆக்ஸ்ஃபோர்டுக்குதான் போய்ப் படிக்கணும்.’
சிறு வயதிலிருந்து இதைப் பலமுறை கேட்டுவிட்டாள் ஜோ. ஆகவே, அவளுக்குள் அது ஒரு பெரிய கனவாகியிருந்தது.
உலகெங்கும் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்க வேண்டும் என்ற கனவோடு வளரும் பிள்ளைகள் ஏராளம். அவர்களில் மிகச் சிலருக்குதான் அங்கே இடம் கிடைக்கும்.
ஜோவுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்கள், அவளுக்கு ஆக்ஸ்ஃபோர்டு செல்லும் தகுதியுண்டு என்று நம்பினார்கள். அதற்கான முயற்சிகளை எடுக்கும்படி ஊக்கப்படுத்தினார்கள்.
ஆக்ஸ்ஃபோர்டில் சேர விரும்பும் பிள்ளைகள், அதற்காகச் சில நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்; அதில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அவர்களுக்கு இடம் கிடைக்கும்.
அந்த நுழைவுத் தேர்வுகள் மிகக் கடினமானவை. ஆனால், உண்மையில் நல்ல திறமைகொண்ட பிள்ளைகளுக்கு அந்தச் சவால் பிடிக்கும். தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் உழைப்பார்கள்.
ஜோ தன்னுடைய பாடங்களை ஊன்றிப் படித்தவள்; படிப்பின் மீது உண்மையான ஆர்வம் கொண்டவள். ஆகவே, ஆக்ஸ்ஃபோர்டு நுழைவுத் தேர்வுகளை அவள் ஒரு சுமையாக நினைத்திருக்க வாய்ப்பில்லை.
அவள் மொத்தம் மூன்று நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருந்தது: ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன்.
மூன்றையும் அவள் சிறப்பாக எழுதினாள். இரண்டில் ‘ஏ’ நிலையும் ஒன்றில் ‘பி’ நிலையும் பெற்றாள்.
இது போதுமா? ஆக்ஸ்ஃபோர்டில் அவளுக்கு இடம் கிடைக்குமா?
சில நாட்கள் கழித்து முடிவுகள் வெளியாயின. ஜோவுக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டது ஆக்ஸ்ஃபோர்டு.

கஷ்டப்பட்டுத் தேர்வெழுதிய மாணவிக்கு இது பெரிய அதிர்ச்சிதான். ஆக்ஸ்ஃபோர்டுதான் உயர்தரம் என்ற நினைப்போடு இத்தனை ஆண்டுகளாக இருந்துவிட்டு, இப்போது அங்கே தனக்கு அனுமதியில்லை என்று கேள்விப்படும்போது அந்த வருத்தம் அகல நாளாகும்.
அதைவிடப் பெரிய அதிர்ச்சியை அவளுடைய ஆசிரியர்கள் தந்தார்கள், ‘ஜோ, உனக்கு இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் உன்னுடைய திறமைக் குறைவில்லை; இதில் அரசியல் இருக்கிறது.’
ஆக்ஸ்ஃபோர்டுக்காக ஜோ எழுதிய அதே நுழைவுத் தேர்வுகளை எழுதிய இன்னொரு மாணவி, ஜோவைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள். ஆனால், அவளுக்கு ஆக்ஸ்ஃபோர்டில் இடம் கிடைத்துவிட்டதாம்.
அதெப்படிச் சாத்தியம்
அந்த மர்மம் பற்றி யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை; ஆனால், மறைமுகமாகப் பல காரணங்களைப் பேசிக்கொண்டார்கள். ‘அந்தப் பெண் ஒரு தனியார் பள்ளியில் படித்துத் தேர்வெழுதியிருக்கிறாள். ஆனால், ஜோ அரசுப் பள்ளியில் படித்தவள். ஆகவே, அவள் நல்ல மதிப்பெண்களை எடுத்தும்கூட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவளை நிராகரித்துவிட்டது!’
இதென்ன அநியாயம்? திறமையைப் பரிசோதிக்கிறேன் என நுழைவுத் தேர்வு வைத்துவிட்டு, வேறு காரணங்களைச் சொல்லி இடம் மறுக்கலாமா?
உண்மையில், அன்றைக்கு ஜோவுக்கு அப்படியோர் அநீதி இழைக்கப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. பின்னாளில் ‘ஜே.கே. ரௌலிங்’ என்ற பெயரில் உலகறிந்த எழுத்தாளரான ஜோ, இது பற்றி எங்கும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோனி ஆன் கிர்க் இதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.
“ஆக்ஸ்ஃபோர்டில் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்தான். ஆனால், அதற்குள் பெரும்பாலும் பணக்கார மாணவர்கள்தான் வருவார்கள். தந்தை, அவருடைய மகன், அவருடைய மகள் என்று தலைமுறை தலைமுறையாகப் படிப்பார்கள்; இவர்களெல்லாம் பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலிருந்து நேரடியாக ஆக்ஸ்ஃபோர்டுக்குள் நுழைந்துவிடுவார்கள்.”
ஜோ தனியார் பள்ளியில் படிக்கவில்லை; அதனாலோ என்னவோ அவருக்கு ஆக்ஸ் ஃபோர்டில் இடம் கிடைக்கவில்லை. எக்ஸெடெர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம்பெற்றார். சில சிறு வேலைகளைச் செய்தபடி எழுத்து முயற்சிகளைத் தொடங்கினார்; ஹாரிபாட்டர் நாவல்கள் அவருடைய வாழ்க்கையையே மாற்றி உலகின் முன்னணி எழுத்தாளராக, மிகப் பெரிய பணக்காரராக ஆக்கின.


அதேநேரம், ஜே.கே. ரௌலிங்தான் சந்தித்த நிராகரிப்புகளை மறக்கவில்லை. இப்போது பெரிய எழுத்தாளராகிவிட்டார் என்பதற்காகப் பழைய தோல்விகளை மறைக்கவில்லை. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் நிராகரிப்பைப் பற்றிப் பேசாவிட்டாலும், மற்ற பல நிராகரிப்புகளைப் பொதுவில் பதிவுசெய்திருக்கிறார்.
எடுத்துக்காட்டாக, ரௌலிங் முதன்முதலாக ஹாரிபாட்டர் நாவலை எழுதியிருந்த நேரம். அதைப் பதிப்பகங்களுக்கு அனுப்பிவைக்க விரும்பினார்.
ஆங்கிலத்தில் பொதுவாகப் பதிப்பகங்கள் புதிய எழுத்தாளர்களுடன் நேரடியாகப் பேசுவதில்லை. அதற்கென்று முகவர்கள் இருப்பார்கள். புதிய எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை இந்த முகவர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும், இவர்கள் அந்தப் படைப்புகளைப் படித்துப் பார்த்து, அவற்றில் சிறந்தவற்றைப் பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
ஆகவே, ரௌலிங் தன்னுடைய ‘ஹாரிபாட்டர்’ நாவலை ஒரு முகவருக்கு அனுப்பினார். தனக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த முகவரிடமிருந்து பதில் வந்தது. ‘என்னிடம் ஏற்கெனவே நிறைய நூல்கள் சேர்ந்துவிட்டன; உங்களுடைய நாவலைப் படிக்க எனக்கு நேரமில்லை.’
யோசித்துப் பாருங்கள், உலகம் முழுக்கப் பல மொழிகளில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற, திரைப்படங்களாக வெளியாகிப் பெரும் வெற்றிகண்ட கதை ‘ஹாரிபாட்டர்’. ஆனால், அந்த நாவலை முதன்முதலாகப் பார்த்த வெளிநபர், அதைப் படிக்கக்கூட விரும்பவில்லை; நிராகரித்துவிட்டார்.
அவர் மட்டுமல்ல; அடுத்தடுத்துப் பல முகவர்கள், பதிப்பகங்கள் அந்த நாவலை நிராகரித்தன. அதன் பிறகுதான் யாருக்கோ அதன் முக்கியத்துவம் புரிந்து ‘ஹாரிபாட்டர்’ அச்சேறி, பெரும் வெற்றிபெற்றது.
‘ஹாரிபாட்டர்’ மூலம் மிகப் பெரிய எழுத்தாளராகப் புகழ்பெற்ற பின்னர் ஜே.கே. ரௌலிங் ஒரு நாவல் எழுதினார். ‘ராபர்ட் கால்ப்ரைத்’ என்ற பெயரில் அதைச் சில பதிப்பகங்களுக்கு அனுப்பிவைத்தார்.
சொல்லிவைத்தாற்போல், இவையும் நிராகரிக்கப்பட்டன. ஒரு பதிப்பாளர், “எழுதுவது எப்படி என்று பல பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன; நீங்கள் அதில் கலந்துகொண்டு எழுதக் கற்றுக்கொள்ளலாமே” என்றுகூட ஆலோசனை சொல்லியிருந்தார்.

ஜோ தன்னுடைய முழுத்திறமையைக் காட்டி எழுதிய ஆக்ஸ்ஃபோர்டு நுழைவுத் தேர்வுகளுக்கும், ரௌலிங், ராபர்ட்டுடைய நாவல்களைச் சரியாகப் படிக்காமல் நிராகரித்த இந்த முகவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நல்ல வேளையாக, மூன்று சூழ் நிலைகளிலும் மற்றவர்கள்தான் ரௌலிங்கை நிராகரித்தார்கள். அவர் தன்மீது வைத்திருந்த நம்பிக்கை சிறிதும் குறையவில்லை.
இன்றைக்கு, ரௌலிங் தன்னுடைய நிராகரிப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்; புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார்; ‘உங்களுடைய படைப்புகள் பிறரால் பேசப்படவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்; நம்பிக்கை இழக்காதீர்கள்; உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயலுங்கள்; உங்களுக்கான தொடக்கம் விரைவில் கிடைக்கும்’ என்கிறார்.
சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு அமைந்தபிறகு, இந்தத் தோல்விகளை எண்ணிச் சிரிக்கலாம். நம்மை நிராகரித்தவர்களுக்கு எதிரில் வெற்றிகரமாக வாழ்ந்துகாட்டுவதைவிடச் சிறந்த பழிவாங்கல் ஏதுமில்லை!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.