வைகாசி திருவிழா !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#11
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி

1526883991260.png

வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் வேல்காவடி செல்லும் விழா கடந்த 18-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முதல்நாள் காலை கணபதிஹோமம், மாலை திருவிளக்கு பூஜை, தீபாராதனை, நலத்திட்ட உதவி வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடந்தது. 19-ந்தேதி காலை தீபாராதனை, மாலை நையாண்டிமேளம், வேல்தரித்தல், இரவு 8 மணிக்கு பூக்குழி இறங்குதல், அன்னதானம், காவடி பெரும் பூஜை ஆகியவை நடைபெற்றது.

நேற்று காலை 7.30 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அங்கு தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் பிள்ளையார் கோவில் வந்தடைந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு நாசிடோல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, 4 மணிக்கு பறக்கும் வேல்காவடி பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#12
ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது

1526884283624.png

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது, நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆழிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையொட்டி அந்த மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

விழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவது சிறப்பம்சமாகும். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

வசந்த உற்சவத்தின் போது 28-ந் தேதி அன்று விஸ்வரூபசேவை கிடையாது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக நம்பெருமாள் வசந்த உற்சவத்தையொட்டி மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேற்று நீர் நிரப்பப்பட்டது. மேலும் அந்த மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#13
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந் தேதி நடக்கிறது

1526966647726.png

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்தது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ஆகும். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

விழாவையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 மணிக்கு அபிஷேகம், சிறப்பு உதய மார்த்தாண்ட பூஜை, காலை 11 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால பூஜை, மாலையில் மங்கள இசை, இரவில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி ஆகியன நடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#14
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

மூலவர், உற்சவர், விநாயகர், அஸ்த்ர தேவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, கோயிலை சுற்றி வலம் வந்து கொடி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு ஆறு கலசங்கள் வைக்கப்பட்டு மயூர யாகம் நடத்தப்பட்டு, தங்கக் கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக வாத்ய பூஜை, தேவாரம், திருமுறைப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கொடி மரத்துக்கு மாவிலை, தர்ப்பை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து கொடி மண்டபத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத முத்துக் குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உச்சிக்காலத்தின் போது மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்து நாள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி யானை, கற்பக விருஷம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி வீதி உலா எழுந்தருள்கிறார். வரும் மே மாதம் 27-ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், மே மாதம் 28-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றன.

விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#15
வசந்தம் வீச வைக்கும் வைகாசி திருநாள் : 28-5-2018 வைகாசி விசாகம்

1527055537593.png


வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் ‘வைசாக' மாதம் என்றிருந்து, பின்னாளில் ‘வைகாசி’ என்றானதாக சொல்லப்படுகிறது.

வைகாசி மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் சக்தியாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான்.

இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

‘வி' என்றால் ‘பட்சி' (மயில்), ‘சாகன்' என்றால் ‘சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் ‘விசாகன்' என்றும் முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக் கிறான். இதன் மூலம் பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள்.

இந்த நாளில், முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால், அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலன் கிடைப்பதுடன், எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு ‘சதாசிவாஷ்டமி’ என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பர். வெ றும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#16
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது

1527056665103.png

சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர். விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு கோவில் முன்பாக யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கணேசபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருட்களுடன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தனர்.

பின்பு கோவிலில் உள்ள கம்பத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு காப்புகள் கட்டப்பட்டன. தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவில் தினமும் அம்மன் ரிஷபம், யாழி, சிம்மம், காமதேனு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று காலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பூமேட்டு தெருவில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்பு அங்கிருந்து இரவு சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.வி.எம் குழும தலைவர் முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், கலைவாணி மெட்ரிக்பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு அம்மன் யாழி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 9-ம்நாள் காலை பால்குடம், பிற்பகல் 2 மணி முதல் அக்னிச்சட்டி எடுத்தல் நடைபெறுகிறது.

இரவு பூப்பல்லக்கும், மறுநாள் மாலை மந்தைக்களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டமும், 17-ம்நாள் வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி லதா, தக்கார் சக்கரையம்மாள், கணக்கர் பூபதி, மற்றும் ஆலய பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#17
பாடலீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா - தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா

1527237268823.png

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசிப்பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடந்து வருகிறது.

இந்த விழாவின் 5-ம் நாளான நேற்று காலை அதிகார நந்திகோபுர தரிசனமும், இரவு 11-30 மணிக்கு தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடந்தது. கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தெருவடைச்சான் சப்பரம் தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேரோட்டமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#18
வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..?- விசாக மகத்துவம்!

தமிழ்க் கடவுள்' என்று போற்றப்படும் அழகு முருகனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், சிறப்பான பெயர்களாகத் திகழ்பவை 'கார்த்திகேயன்' மற்றும் 'விசாகன்' ஆகிய இரண்டு திருப்பெயர்களாகும். காரணம்?முருகப்பெருமான் ஞானஸ்வரூபி. அவனைச் சரணடைந்தால், நம்முடைய அகம்பாவம் நீங்கும். அகம்பாவமே மனிதர்களைப் பாவக்குழியில் வீழ்த்துகிறது. அதன் விளைவாக பல துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது. சூரபத்மன் அகங்காரத்தின் ஒட்டுமொத்த வடிவம். அவனால் பலவகையான துன்பங்களுக்கு ஆட்பட்ட தேவர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காகவே, 'குமார சம்பவம்' நிகழ்ந்தது.


தர்மத்தை நிலைநிறுத்தவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் பல அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் பேசுகின்றன. முருகப்பெருமானின் அவதாரம் தவிர்த்து, இறைவனின் மற்ற அவதாரங்களில் அசுரர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டனர். ஆனால், அழகு, அன்பு, கருணை ஆகிய அனைத்தும் உருவம் தரித்து வந்ததுபோல் அவதரித்த முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. மயிலாகவும் சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார். ஆக, முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; மாறாக ஆட்கொண்டருளினார்.


அதுவே முருகப்பெருமானின் பேரருள் பெருங்கருணைத் திறம்.


முருகப்பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்த வைகாசி விசாகம், நாளை (28.5.18) முருகப்பெருமானின் அனைத்து தலங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.


சரி, விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தபோது நிகழ்ந்த மற்றோர் அற்புதம்தான் என்ன?


சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு அபயம் அருளிய சிவபெருமான், குமார சம்பவத்தை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். தம் நெற்றிக் கண்ணைத் திறக்க, ஆறு தீக்கதிர்கள் வெளிப்பட்டு, சரவணப்பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றியதும், அறுவரையும் அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து, அதன் பயனாக முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டதும் நாமெல்லாம் அறிந்த விஷயம்தான். ஆனால், அன்றைக்கே நிகழ்ந்த மற்றோர் அற்புதம் நவவீரர்களின் தோற்றம்தான்.


குமாரசம்பவத்துக்கு முன்பாக மற்றொரு தருணத்தில் சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணைத் திறந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது வெளிப்பட்ட அக்னிச் சுடரின் வெம்மை தாங்கமாட்டாமல், பார்வதி தேவி எழுந்தோடினார். அதனால், அவருடைய திருவடி சிலம்புகளிலிருந்து நவமணிகள் தெறித்துச் சிதறின. சிதறிய நவமணிகளை, பார்வதி தேவியார் திருக்கண் நோக்க, அந்த மணிகளிலிருந்து நவசக்தி தேவியர் தோன்றினர். ஈசனின் திருவுள்ளக்குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால், திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார்.

அம்பிகையின் சாபம் கேட்டு அஞ்சி நின்ற நவசக்தியரின் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனாக மாற, மொத்தம் ஒரு லட்சம் வீரர்கள் தோன்றினர். பின்னர், அம்பிகையின் கோபம் தணியவேண்டி சரவணப்பொய்கையின் அருகில் தவமியற்றினர். காலம் கனிந்து விசாகத்தன்று முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்த அதே தருணத்தில், பார்வதிதேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.


மாணிக்கவல்லி வீரபாகுவையும், மௌத்திகவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீர மகேஸ்வரனையும், வைடூரியவல்லி வீர புரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீர தீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். பிறக்கும்போதே பகைவர்களை அச்சுறுத்தும் தோற்றத்தோடு தோன்றிய அவர்களை வாழ்த்தி ஈசன் ஆளுக்கொரு வாளை பரிசளித்து வாழ்த்தினார். தர்மத்தை காக்க பிறப்பெடுத்திருக்கும் முருகப்பெருமானுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இப்படி முருகப்பெருமான் தோன்றிய திருநாளிலேயே உருவானவர்கள் இந்த நவவீரர்கள். வைகாசி விசாகத் திருநாளில் கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.


முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பெற்றதால் கார்த்திகேயன் என்ற பெயரும் சிறப்பு வாய்ந்தவைகளாகப் போற்றப்படுகின்றன.

எங்கும் ஞான வடிவாக காட்சியளிக்கும் முருகப்பெருமான் அவதரித்த இந்த நாளில் அவன் தாள் வணங்கி அவன் புகழ் பாடி உய்வோம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#19
நெல்லையப்பர் கோயிலில் கலசாபிஷேகம் !

நெல்லையப்பர் கோயில் கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கடந்த 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 28-ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த பூஜை நாளை மே 26-வுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 1008 சங்காபிஷேகமும், 9 மணிக்கு 1008 கலசாபிஷேக பூஜையும், சுவாமி அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தங்க சப்பரத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும் சண்டிகேசுவரர் சப்பரத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#20
பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

1527480403018.png

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்.

அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருந்ததால் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்தவர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்காருக்காக காத்திருக்காமல் படிப்பாதை வழியாக இறங்கிச்செல்லவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.