ஸ்லீப் டெக்ஸ்டிங் இது புதிய பிரச்னை!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஸ்லீப் டெக்ஸ்டிங் இது புதிய பிரச்னை!


விழிப்புணர்வு

தொழில்நுட்பம் 4Gயிலிருந்து 5Gக்குத் தாவிக் கொண்டிருக்கும் காலத்துக்கேற்ப, பிரச்னைகளும் இப்போது நவீன அவதாரம் எடுக்கின்றன.ஆமாம்...இன்றைய வாட்ஸ் அப் தலைமுறையினரிடம் வைரலாகிப் பரவலாகிக் கொண்டிருக்கிறது Texting என்கிற புதிய பிரச்னை. குறிப்பாக, வளர் இளம்பருவத்தில் இருக்கும் குழந்தைகளிடம் இது ஒரு மனநலப் பாதிப்பாகவே மாறிவருகிறது என்கிறார்கள் வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவர்கள்.

‘மேலை நாடுகளின் கண்டுபிடிப்போ, பாதிப்போ அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். இதற்கு முன் அப்படித்தான் Game Addiction இந்தியாவுக்குள் வந்தது. செல்போன், இன்டர்நெட் பயன்பாடுகள் உச்சத்தில் இருக்கும் இந்தியாவில், இனி Sleep Texting உருவாகும் நிலை வரலாம். அதற்கு முன் விழித்துக் கொள்வது நல்லது’ - எச்சரிக்கிறார் உளவியல் மருத்துவரான கார்த்திக் எம்.சாமி.

‘‘வேலையே கம்ப்யூட்டரில்தான் என்று பணிபுரியும் நிலை, ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் என முன் எப்போதும் இல்லாத அளவு நம் விரல்களுக்கு இன்று வேலை அதிகம். தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட செல்போன், பல்வேறு வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் போனாக மாறிய பிறகு அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால், தூக்கத்திலும் செல்போனில் டைப் செய்யும் நிலைக்கு ஆளாவதையே `ஸ்லீப் டெக்ஸ்டிங்’ என்கிறோம். இதில் மற்ற வயதினரைவிட, டீன் ஏஜ் பருவத்தினர் அதிகம் ஆளாவதால் இதை Teens Sleep Texting என்று சொல்கிறார்கள்.

அளவுக்கு அதிகமாக செல்போன், இன்டர்நெட் பயன்படுத்துகிறவர்கள், இரவு நேரத்தில் சாட் செய்யும் பழக்கம் உள்ளவர்கள், Non Rem என்கிற ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்கள் ஸ்லீப் டெக்ஸ்டிங்கால் பாதிக்கப்படலாம். முக்கியமாக, மரபியல்ரீதியாக தூக்கத்தில் பேசுவது, தூக்கத்தில் நடப்பது போன்ற பாதிப்புகள் கொண்ட குடும்பத்தினருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

தூக்கத்தில் பேசுவதும், தூக்கத்தில் நடப்பதும் பாரசோம்னியா என்ற தூக்கம் சார்ந்த குறைபாடு. அதுபோல நவீன பாரசோம்னியா பிரச்னைதான் ஸ்லீப் டெக்ஸ்டிங். தன்னை மறந்த நிலையில் ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், காலத்துக்கு ஏற்ப இந்தப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஸ்லீப் டெக்ஸ்டிங்கால் பெரிய ஆபத்து இல்லை என்றாலும், மறைமுகமாக பல சிக்கல்கள் ஏற்படும். உதாரணத்துக்கு எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு வைத்திருப்போம். ஒருவரைத் திட்ட வேண்டும் என்று எண்ணம் இருந்தால் கூட அதை வெளிப்படாமல் பார்த்துக் கொள்வோம்.

நன்றாகப் பழகிக் கொண்டிருக்கும் எதிர்பாலரிடம் ‘ஐ லவ் யூ’ சொல்ல நினைப்பதைக் கூட ஆழ்மனதில் மறைத்து வைக்கலாம். ஆனால், ஸ்லீப் டெக்ஸ்டிங் பிரச்னைக்கு ஆளானவர்கள் மறைத்து வைத்திருக்கும் விஷயத்தை மற்றவர்களுக்கு மெசேஜாக அனுப்பிவிடும் அபாயம் உண்டு. இதனால் சுமுகமான உறவு பாதிக்கப்படும்’’ என்பவர், செல்போனை ஏன் இத்தனை ஆவேசமாக நாம் பயன்படுத்துகிறோம் என்பதன் உளவியல் காரணங்கள் பற்றித் தொடர்கிறார்.

‘‘புதிதாகக் கிடைக்கும் ஒரு பொருளின் மீது அதீத ஈடுபாடு உண்டாவது இயற்கைதான். முன்பு தொலைக்காட்சி கூட ஒரு பைத்திய நிலையை உருவாக்கி இருந்தது. அதுபோல, இப்போது செல்போன் வந்திருக்கிறது.நினைத்த நேரத்தில் யாருடனும் பேசலாம், சாட் பண்ணலாம், பாட்டு கேட்கலாம், படம் பார்க்கலாம், இன்டர்நெட் பயன்படுத்தலாம் என்று எல்லா வசதிகளுமே வந்துவிட்டதால் செல்போனை மக்கள் அளவுக்கு அதிகமாக விரும்புகிறார்கள், பயன்படுத்துகிறார்கள், அதையே முழுமையாக சார்ந்திருக்கிறார்கள். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்கிற அளவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

பொதுவாக, ஸ்லீப் டெக்ஸ்டிங் பிரச்னைக்கு எல்லோருமே ஆளாவதில்லை என்பதைப் போல, செல்போன் அடிமைத்தனமும் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. மூளையின் முன்பகுதியான Frontal lobe சரியாக வளர்ச்சி அடையாதவர்கள்தான் ஏதாவது ஓர் அடிமைத்தனத்தில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள். போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள், செக்ஸுக்கு அடிமையாகிறவர்களை எல்லாம் இந்த ஃப்ரன்டல் லோப் வளர்ச்சியின்மை குறைபாடு கொண்டவர்கள்தான்...’’

‘இந்தப் பிரச்னையிலிருந்து மீள வெறும் ஆலோசனை மட்டுமே போதுமானதல்ல’ என்கிறார் கார்த்திக்.‘‘முதல் நாள் இரவில் அனுப்பிய மெசேஜ் ஞாபகம் இல்லை என்றாலோ, தெரிந்தவர்கள் சொல்லியும் நினைவுக்கு வராமல் இருந்தாலோ ஸ்லீப் டெக்ஸ்டிங் இருப்பதாக அர்த்தம். மூளையின் ஃப்ரன்டல் லோப் வளர்ச்சியின்மை, தூக்கம் சார்ந்த கோளாறு என்பதால், உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். உளவியல் ஆலோசனை மட்டுமே இதற்கு போதுமானதல்ல.

தூங்கும் அறைக்கு செல்போனை கொண்டு போகக் கூடாது என்பது ஸ்லீப் டெக்ஸ்டிங் பிரச்னைக்கு முதல் ஆலோசனையாகச் சொல்வார்கள். அப்படியே கொண்டு சென்றாலும் கைக்கெட்டும் தூரத்தில் செல்போனை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறுவார்கள்.

ஆனால், இது மூளையின் செயல்பாட்டில் இருக்கும் குறைபாடு தொடர்பு உடையது என்பதால், மனநல மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சைகளைப் பெறுவதே நல்லது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க, மறுவாழ்வு மையம் இருப்பதைப் போல வெளிநாடுகளில் இப்போது Digital de-addiction மையங்கள் உருவாகி வருகின்றன.

‘கேட்ஜெட்டுகள் மட்டுமே வாழ்க்கை இல்லை. அவற்றைத் தாண்டி நிறைய சந்தோஷங்கள் இருக்கின்றன’ என்பதை இந்த டிஜிட்டல் டீ-அடிக்*ஷன் மையத்தில் புரிய வைப்பார்கள். இந்தியாவிலும் டிஜிட்டல் டீ-அடிக்*ஷன் மையங்கள் வரக்கூடிய அளவுக்குதான் நிலைமை இருக்கிறது. நடக்கும்போதே டெக்ஸ்ட் பண்ணிக் கொண்டு போகிறவர்களையும், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரங்களிலும், வாகனம் ஓட்டும்போது கூட டெக்ஸ்ட் பண்ணுகிறவர்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஸ்லீப் டெக்ஸ்ட் தொடர்புடைய மற்ற விஷயங்களையும் யோசிக்க வேண்டும். மாலை 7 மணிக்கு மேல் சாப்பிடும் ஒரு கப் காபியோ, பிடிக்கும் ஒரு சிகரெட்டோ உங்களின் தூக்கத்தை இன்னும் ஒருமணி நேரம் தள்ளிப் போடும் வல்லமை கொண்டது. அதேபோல, 7 மணிக்கு மேல் செல்போன் பயன்படுத்துவதும் தூக்கத்தைப் பாதிக்கும்.

மாலை நேரங்களில் மூளையை சுறுசுறுப்பாக்கும் ஆக்டிவான வேலைகளைச் செய்யக் கூடாது. Passive work என்கிற மூளையை அமைதிப்படுத்தும் வேலையைத்தான் செய்ய வேண்டும். அதனால், மாலை நேரங்களில் எத்தனை குறைவாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு குறைவாக செல்போனை பயன்படுத்த வேண்டும். எத்தனை சீக்கிரம் பயன்படுத்திவிட்டு, தூக்கிப் போட்டுவிட முடியுமோ அத்தனை சீக்கிரம் செல்போனை ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட வேண்டும். அதுதான் தூக்கத்துக்கு நல்லது.

இன்னொன்று, இரவு நேரத்தில் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்ட இருளில் இளைஞர்கள் மொபைல் பயன்படுத்துகிறார்கள். குறைவான வெளிச்சத்தில் செல்போன் வெளிச்சத்தை மட்டுமே பார்க்கும்போது, கண்களுக்கு தேவையற்ற அழுத்தம் உண்டாகும். இதனால் பார்வைக்குறைபாடு ஏற்படவும், ஏற்கெனவே பார்வைக்குறைபாடு இருக்கும்பட்சத்தில் அதிகமாகவும் வாய்ப்பு உண்டு.

இதன் தொடர்ச்சியாக தலைவலி, இரவில் தூங்காமல் பகலில் பள்ளியிலோ, அலுவலகத்திலோ நேரம் மாறி தூக்கம் வருவது போன்ற அவஸ்தைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தூக்கமின்மையால் கவனச்சிதறல், மன அழுத்தம், மற்றவர்களிடம் எரிந்துவிழுவது, படிப்பில் / வேலையில் சிறந்து விளங்க முடியாத சிக்கல்களும் ஏற்படும்.

தகவல் தொழில்நுட்பத்தில் ஜாம்பவனாக விளங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், தன்னுடைய வீட்டில் கேட்ஜெட் பயன்படுத்தத் தடை விதித்திருந்ததாகச் சொல்வார்கள். செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை எத்தனை கவனமாகக் கையாள வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நாம் அந்த அளவுக்கு மொத்தமாகத் தடைவிதிக்க வேண்டியதில்லை. குறைந்தபட்சம் வாரம் ஒருநாளாவது செல்போன், லேப்டாப் இல்லாமல் இருந்து பழகுவது நல்லது.

இதில் பெற்றோருக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. கேட்ஜெட்டுகள் இன்று தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. ஒட்டுமொத்தமாகத் தடைவிதிப்பது சாத்தியம் இல்லை. எப்படியிருந்தாலும் வெளியிடங்களுக்குச் செல்லும் குழந்தைகள், நண்பர்களின் செல்போனை பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.

அதனால், செல்போனை கல்விக்காக ஆக்கப் பூர்வமாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.தங்களைத் தொல்லை பண்ணாமல் இருந்தால் போதும் என்று குழந்தையின் கையில் செல்போனை கொடுத்துவிடுகிற பெற்றோர் நிறைய இருக்கிறார்கள்.

இது பெற்றோர் செய்யும் பெரிய தவறு. நாமே செல்போன் பயன்பாட்டை உருவாக்கிக் கொடுப்பதாகவே இது அமையும். இப்போது வெளிநாடுகளில் ஹெப்படைட்டிஸ் என்பதைப் போல வாட்ஸ் அப்பைட்டிஸ் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக, அழற்சியைத்தான் Aitis என்று சொல்கிறோம். எலும்புகளில் ஏற்படும் அழற்சியை ஆர்த்ரைட்டிஸ் என்பதுபோல, இரண்டு கைகளின் கட்டைவிரல்களின் இணைப்பில் ஏற்படும் எலும்பு அழற்சியை வாட்ஸ் அப்பைட்டிஸ் என்று சொல்கிறார்கள். இதுபோல் செல்போனால் புதிது புதிதாக பிரச்னைகள் வராமல் தடுக்க இப்போதே விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.