ஹோமியோபதி ஏமாற்று வேலையா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஹோமியோபதி ஏமாற்று வேலையா?

நோபல் விஞ்ஞானி அதிரடி குற்றச்சாட்டு

‘ஹோமியோபதி மருத்துவம் மோசடி யானது’ என்று சமீபத்தில் திரியைப் பற்ற வைத்திருக்கிறார் நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். ‘ஜோதிடமும் ஹோமியோபதியும் மக்களை ஏமாற்றுகிற இரண்டு முக்கியமான துறைகளாக இருக்கின்றன. கிரகங்களின் இயக்கம் ஒரு தனிமனிதரின் தலைவிதியைத் தீர்மானிக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அதேபோல, ஹோமியோபதி மருத்துவம் நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதற்கான ஆதாரமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார் அவர். ஹோமியோபதி மருத்துவம் பற்றி அடிக்கடி இதுபோல எழும் சர்ச்சைகள் பற்றி தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஏஷியன் ஹோமியோபதி மருத்துவர்கள் லீக் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினருமான டாக்டர் பி.வி.வெங்கட்ராமனிடம் பேசினோம்.

‘‘முதலில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் மறுப்பு சொல்ல வேண்டுமா என்றுதான் தோன்றுகிறது. காரணம், அவருடைய துறையில் வெங்கட்ராமன் சிறந்தவராக இருக்கலாம். ஆனால், மருத்துவத்துறை பற்றி இப்படி ஒரு கருத்து சொல்லும் அளவுக்கு எந்த அளவு மருத்துவ ஞானம் பெற்றவர் என்பது தெரியவில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பதி லேயே மிகவும் சிறியது அணு, அதைப் பிளக்க முடியாது என்று கூறினார்கள். அதன்பிறகு காலப்போக்கில் அணுவுக்குள் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் போன்றவை இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இப்போது அதற்குள் இன்னும் நுட்பமாக நானோ துகள்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இதேபோல விஞ்ஞானம் இன்னும் அதிகமாக வளர்கிறபோது, ஹோமியோபதி மருத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இன்று அவர் சொல்கிற குற்றச்சாட்டை விளக்க முடியாது என்றாலும் எதிர்காலத்தில் ஆய்வுகள் நடக்கும்போது அதற்கு பதில் தெரியும். எய்ட்ஸ் வைரஸை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற டாக்டர் லூக் மாண்டேஜினர் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஹோமியோபதி மருத்துவத்தை பலமாக ஆதரித்திருக்கிறார் என்பதையும் மாற்று மருத்துவத்தைக் குறை சொல்கிறவர்கள் கவனிக்க வேண்டும்’’ என்கிறார் பி.வி.வெங்கட்ராமன்.

ஹோமியோபதி மருந்துகளில் இருக்கும் வேதிப்பொருட்கள் பல மடங்கு நீர்த்துப் போகச் செய்த பிறகு கொடுப்பதால் வீரியம் இருப்பதில்லை. குழாயில் வரும் தண்ணீரில் அதைவிட அதிக அளவு ஆர்சனிக் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறாரே...
‘‘ஹோமியோபதி மருந்துகளில் இருக்கும் Arsenic compounds மிகவும் குறைந்த அளவில் கொடுக்கும்போது எப்படி குணப்படுத்தும் திறன் பெற்றிருக்கும் என்பது அவரது வாதம். முள்ளை முள்ளால் எடுப்பதுதான் ஹோமியோபதியின் அடிப்படைத் தத்துவம்.

நேரடியாக மின்சாரத்தைத் தொட்டால் உயிருக்கு ஆபத்து. அதே மின்சாரத்தை அளவு குறைத்து எலெக்ட்ரிக் ஷாக்காக கொடுக்கும்போது உயிருக்குப் போராடும் ஓர் இதய நோயாளியைக் காப்பாற்ற முடிகிறது. போலியோவுக்கான மருந்து, போலியோவை உருவாக்கும் கிருமிகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. குழந்தையாக இருக்கும் போதே அந்தக் கிருமிகளை குறைந்த அளவு கொடுத்துவிட்டால், உடல் அந்தக் கிருமியைப் பற்றித் தெரிந்துகொண்டுவிடும். எதிர்காலத்தில் போலியோ வைரஸ் கிருமிகள் அதிகம் தாக்கும்போது எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்துவிடும். அதற்காக அதிகம் கொடுக்க முடியாது. இதுதான் ஹோமியோபதி மருத்துவம் செயல்படும் முறை.

ஒவ்வொரு மனிதனுக்குமே நோயைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடிய Self healing ஆற்றல் தனக்கு உள்ளேயே இருக்கிறது. சில நேரங்களில் உடலால் முடியாதபோதுதான் நோய் வருகிறது. அப்போது உடலுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் மருந்துகள் கொடுத்து அதன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறோம். உடலின் சக்தியைத் தூண்டும் அளவு குறைவாகக் கொடுத்தாலே போதும். அதிகமாகக் கொடுக்க வேண்டியது இல்லை. ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பு என்பது மிகவும் வெளிப்படையானது. ரகசியம் எதுவும் இதில் இல்லை. உப்பையே மருந்தாகத் தயாரிக்கிறார்கள். ஒரு கிராம் உப்பை எடுத்து, ஒரு கோடி பேருக்கு தயாரிக்கிறார்கள். இப்படி ஒரு கிராம் உப்பை, ஒரு கோடி டோஸ்களாக பிரிக்கும்போது எப்படி குணப்படுத்தும் என்று கேட்கிறார்.

பிரிக்கிற முறை என்று ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கிறது. ஒரு பொருளின் அளவு குறையக் குறைய அதன் வீரியம் அதிகரிக்கும் என்பதுதான் ஹோமியோபதி மருத்துவத்தின் முக்கியத் தத்துவம். எந்த அளவு பிரிக்க வேண்டும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது யாரோ ஒருவர் பேடன்ட் உரிமை வாங்கி வைத்துக் கொண்டு ரகசியமாகத் தயாரிக்க முடியாது. உலக அளவில் பொதுவானது. இந்த மருந்துகளின் பெயர், அது என்னென்ன செய்யும், எந்த சூழலில் கொடுக்க வேண்டும் என்பதும் புத்தகங்களில் பதிவுகள் இருக்கிறது. இதுவும் ஒரு தனிப்பட்ட மருத்துவருக்கான ரகசியம் இல்லை. அதை வைத்துத்தான் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம்.

அலோபதி மருத்துவத்தில் தலைவலிக்கு என்று மாத்திரைகளில் பல பிராண்டுகள் இருக்கின்றன. ஹோமியோபதியிலோ அதுபோல ஒவ்வொரு மருந்துகளிலும் பல பிராண்டுகள் இல்லை. வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்தாலும் ஒரே பெயர்தான். உப்பில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துக்கு உலகம் முழுவதும், எல்லா மருந்து நிறுவனங்களிலும் Natrum muriaticum என்பதுதான் பெயர்...’’ ஹோமியோபதி பற்றி ஆதாரப்பூர்வமான ஆய்வுகள் போதுமான அளவு இல்லையா என்கிற நம் சந்தேகத்துக்கும் தொடர்ந்து பதிலளிக்கிறார்.

‘‘உலகம் முழுவதும் ஹோமியோபதிக்கு ஆதரவாக நிறைய ஆய்வுகள் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசாங்கமே Central council for research in homeopathy என்ற அமைப்பின் மூலம் பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 50க்கும் அதிக நிறுவனங்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. சமீபத்தில் ஐ.ஐ.டி. பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ஹோமியோ மருந்துகளில் நானோ துகள்கள் அளவில் சக்தி இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாக ஹோமியோபதி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்திருக்கிறது. பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக இருக்கிறது. எந்த குணமும் தெரியாமல் ஒரு மருத்துவம் 220 ஆண்டுகளாக உயிரோடு இருக்க முடியுமா?

ஹோமியோபதி மருத்துவம் தோன்றிய காலத்திலிருந்து இதுபோன்ற நிறைய அவதூறு பிரசாரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி, இந்த மருத்துவம் இன்னும் உயிரோடு இருப்பதற்குக் காரணம், மக்களுக்குப் பயன்படுவதால்தான்! ஹோமியோபதி பற்றிய ஆய்வுகளை அதற்கு ஏற்ற தத்துவத்தோடுதான் விஞ்ஞானிகள் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரின் உடல்நிலையும் தனித்துவமானது. ஒருவருக்கு ஏற்படும் நோயும் தனித்துவமானதே. அதனால் ஹோமியோபதி மருத்துவம் ஒரு தனிமனிதருக்கான மருத்துவம். ரெடிமேட் மருத்துவம் அல்ல இது.

ஒருவர் தலைவலி என்று வருகிறார். நேற்று என்ன செய்தீர்கள் என்று கேட்கிறோம். ‘கடற்கரைக்குச் சென்றிருந்தேன். சில்லென்று காற்று அடித்தது. கடல் தண்ணீரில் குளித்தேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன். தலையில் மணலாக இருந்ததால் வீட்டுக்குத் திரும்பிய பிறகு குளித்தேன்’ என்று சொல்கிறார். இதில் தலைவலியை உருவாக்கியது கடற்கரையின் குளிர்ந்த காற்றா அல்லது தண்ணீரா, ஐஸ்க்ரீம் சாப்பிட்டதாலா, இல்லை வீட்டுக்கு வந்த பிறகு குளித்துவிட்டுத் தலைதுவட்டாமல் தூங்கியதா என்பதை மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டும்.

நோயாளி தெளிவாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன், தலைவலி வந்துவிட்டது என்று சொன்னால் குணப்படுத்துவது எளிது. இல்லாவிட்டால், என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள அவகாசம் ஆகும். இதுதான் ஹோமியோபதி மருத்துவத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று சொல்வதற்கான காரணம். நோய்க்கான காரணம் தெளிவாகத் தெரியாதபோது எல்லா மருத்துவத்திலுமே இந்தத் தாமதம் வரத்தான் செய்யும். காரணங்கள் யூகிக்க முடியாதபோது தாமதம் தவிர்க்க முடியாதது. அதனால், ஒருவரின் உடல்நிலையை மருத்துவர் புரிந்துகொள்ளத் தாமதமாகும்போது குணமாவதும் தாமதமாகிறது.

இதற்கு முன்பு ஹோமியோபதிக்கு எதிராக ஒரு கட்டுரை வந்தபோது, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இதய சிகிச்சை மருத்துவரான பி.எம்.ஹெக்டே ஒரு கருத்து கூறினார்... ‘பள்ளிக்கூடத்தில் படித்த வேதியியல் பாடத்தை வைத்துக் கொண்டு ஹோமியோபதியை குறை சொல்லாதீர்கள். வேதியியல் நிறைய மாறியிருக்கிறது, விஞ்ஞானம் மாறியிருக்கிறது. விஞ்ஞானப்பூர்வமான ஒரு மருத்துவம் ஹோமியோபதி’ என்று கூறியிருக்கிறார். அவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஆயுர்வேதத்திலும் தேர்ச்சி பெற்றவர். எதனால் நோய் ஏற்படுகிறதோ அதே காரணியை வைத்து நோயைக் குணப்படுத்த முடியும் என்ற ஹோமியோபதி மருத்துவத்தை உருவாக்கிய சாமுவேல் ஹானிமன் கூட ஒரு ஆங்கில மருத்துவர்தான்!’’

ஹோமியோபதியை பற்றி அவதூறுகள் வர என்ன காரணம்?

‘‘ஹோமியோபதியை பெரிய அளவில் வியாபாரமாகப் பண்ண முடியாது. குறைந்த செலவில் மக்களைச் சென்றடைகிற மருத்துவம் இது. அதனால் பெரிய நிறுவனங்கள் இந்த மருத்துவத்தை விரும்பாமல் இருக்கலாம். உலகின் இளம் மருத்துவம் இது. முறைப்படி படித்த மருத்துவர்கள் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறார்கள். இதுவும் காரணமாக இருக்கலாம். நோயாளிகளை புரிந்துகொள்ளத் தவறுகிற மருத்துவர்களும் காரணமாக இருக்கலாம். பழுத்த மரத்தில்தான் கல்லடி படும் என்பதால், ஹோமியோபதியை போட்டியாக நினைக்கிறவர்கள்கூட இதுபோன்ற அவதூறுகளைப் பரப்பலாம். போலி மருத்துவர்களும் தங்களை ஹோமியோபதி என்று சொல்லிக் கொள்வதும் காரணமாக இருக்கலாம்.

ஆங்கில மருத்துவம் எத்தனை மோசமானது என்று இதைவிட நிறைய கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தொழிலில் நடக்கும் போட்டி, பொறாமைகளில் ஒன்று’’ என்பவர், இதற்கு முன்பும் இப்படி நடந்த முயற்சிகள் பற்றியும் கூறுகிறார். ‘‘ஹோமியோபதி மருத்துவம் தவறானது என்று சொல்ல வேண்டும், ஹோமியோபதிக்கு எதிராக எழுத வேண்டும். அதனால், ஹோமியோபதியைப் பற்றி படியுங்கள் என்று டாக்டர் ஹெர்ரிங் என்ற அலோபதி டாக்டரை அமெரிக்க மருத்துவ சங்கம் நியமித்தது. அவர் ஹோமியோபதியை முழுமையாகப் படித்துவிட்டு ஹோமியோபதி மருத்துவம் சரியானது என்று கூறினார். கடைசியில் ஹோமியோபதி மருத்துவராகவே மாறிவிட்டார்!

இந்தியாவிலேயே வி.கே.சர்க்கார் என்ற கொல்கத்தா மருத்துவரை ஹோமியோபதிக்கு எதிராக எழுதச் சொல்லி நியமித்திருக்கிறார்கள். ஆனால், அவர் முழுமையாக படித்துவிட்டு ஹோமியோபதி சிறந்த மருத்துவம் என்று கூறியிருக்கிறார். ஹோமியோபதியை பற்றி எதிராகப் பேசக் கூடியவர், எழுதக் கூடியவர் யார் என்று கவனித்துத்தான் ஒருவரை உருவாக்குகிறார்கள். முழுமையாக ஹோமியோபதியை புரிந்துகொண்டவர்கள் ஹோமியோபதிக்கு ஆதரவாகவே மாறிவிடுகிறார்கள். இதுதான் வரலாறு!’’

கூட்டு முயற்சி தேவை!


‘‘அலோபதி மருத்துவத்தின் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள நிறைய அரசியல் நடக்கிறது. அவற்றில் ஒன்றுதான் மாற்று மருத்துவங்களை இதுபோல குறை சொல்வதும். ஆயுள் வளர்க்கும் நெல்லிக்கனி என்று அவ்வையாருக்கு அதியமான் கொடுத்தார் என்று படித்திருப்போம். ஆனால், இன்று நெல்லிக்காயில் வைட்டமின் சி இருக்கிறது, அஸ்கார்பிக் அமிலம் இருக்கிறது, இது செல்களை இறந்து போகாமல் தடுக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘நெல்லிக்காய் எப்படி ஆயுள் வளர்க்கும்’ என்று அதியமானிடம் கேட்டிருந்தால் அவனுக்குப் பதில் சொல்லத் தெரிந்திருக்காது.

அதேபோலத்தான் ஒரு நோயை குணமாக்க ஹோமியோபதி மருத்துவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அது எப்படி என்பதை விளக்கத் தெரியவில்லை. இது ஹோமியோபதி மருத்துவர்களின் பிரச்னை இல்லை. விஞ்ஞானிகளின் பிரச்னை. அவர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்! அறிவியலில் எதுவும் இன்னும் முழுமை யடையவில்லை. Nano particles எப்படி செயல்படுகிறது என்பதை இன்னும் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹோமியோபதி மருத்துவம் எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, நானோ பார்ட்டிகிள்ஸ் எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தால்தான் விடை கிடைக்கும். சென்னையில் இருக்கும் கிங் இன்ஸ்டி டியூட்டிலேயே டெங்கு பற்றி ஆய்வு ஒன்று செய்திருக்கிறார்கள். Eupatorium perfoliatum என்ற ஹோமியோபதி மருந்து கொடுத்த பிறகு ரத்தத்தட்டுகள் அதிகமாகி இருக்கின்றன.

நான் அலோபதி மருத்துவராக இருந்தாலும், என்னுடைய மருத்துவமனைக்கு வாரம் ஒரு முறை ஹோமியோபதி மருத்துவரும் வந்து நோயாளிகளைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி என எதுவாக வேண்டு மானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நோயாளிகள் குணமடைய வேண்டும் என்பதுதான் எனது அடிப்படையான கொள்கை. எந்த மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். நோயாளி குணமாக வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் இறுதி நோக்கம். அதற்கு மாற்று மருத்துவங்களின் ஒத்துழைப்பும் தேவை. மேலோட்டமாக ஒரு மருத்துவ முறையே தவறானது என்று சொல்லிவிடக் கூடாது!’’

ஹோமியோபதி - இன்னும் சில சர்ச்சைகள்

* ஆஸ்திரேலியாவின் National health and medical research அமைப்பு, ‘ஹோமியோபதி மருத்துவத்துக்கு குணப்படுத்தும் திறன் குறைவு. அதனால் நோய் குணமாகாமல் தாமதமாவதுடன் நோயின் தீவிரமும் அதிகமாகிறது. அதனால் ஹோமியோபதியை தவிர்க்க வேண்டும் என்று 2015 மார்ச் மாதம் பரிந்துரைத்திருந்தது.

‘ஹோமியோபதி மருத்துவத்துக்காக ஆண்டுக்கு 9 மில்லியன் டாலர் அளவு மக்கள் செலவு செய்கிறார்கள். இதை சகித்துக் கொள்ளாமல்தான் இதுபோன்ற மக்களைக் குழப்பும் ஆய்வுகளை வெளியிடுகிறார்கள்’ என்று ஆஸ்திரேலியாவின் ஹோமியோபதி மருத்துவர்கள் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றி பதிலடி கொடுத்திருந்தது.

* ‘ஹோமியோபதி மருந்துகள் வெறும் இனிப்பு மிட்டாய்கள். ஹோமியோபதி மருத்துவத்தைத் தடை செய்ய வேண்டும்’ என்று 2015ம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் சர்ச்சை எழுந்திருக்கிறது. ஹோமியோபதி மருத்துவத்துக்குச் செலவு செய்வதை அலோபதி மருத்துவத்துக்காக ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இங்கிலாந்து அமைச்சர்கள் ஹோமியோபதி மருத்துவத்துக்கு ஆதரவாக இருப்பதால் அவர்கள் மீதும் சர்ச்சைகள் உருவாகியிருக்கிறது. ‘‘எனக்கு மருத்துவம் தெரியாது. ஆனால், மூளையில் இருக்கிற கட்டிகள் எல்லாம் ஹோமியோபதியில் குணமானதைப் பார்த்திருக்கிறேன்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் இளவரசர் சார்லஸ்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.