‘மா’: கற்பிதம் அல்ல பெருமிதம்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1

பத்மா

ஓவியம்: அ.செல்வம்

பத்மா

ஓவியம்: அ.செல்வம்
பெ
ண்களிடம், “உங்கள் உடல் உங்களுடையதா” என்று கேட்டால் சிலர் “ஆம்” என்று உறுதியாகச் சொல்லக்கூடும். சிலர், “அப்படியா?” என்று கேள்விக்குறியோடு பார்க்கக்கூடும். “இது என்ன கேள்வி, நாங்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்த்ததே கிடையாது” என்று சிலர் நினைக்கக்கூடும்.

உடலைப் பற்றிய நம் புரிதல் என்ன? நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெண்ணுடல் என்றால் பாதுகாக்கப்பட வேண்டியது, நுகரப்பட வேண்டியது, சிதைக்கப்பட வேண்டியது என்ற பார்வையில்தான் இன்னமும் சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
திணிக்கப்படும் அழகுணர்வு

அதனால்தான் இரண்டு வயது பெண் குழந்தை உள்ளாடை அணியவில்லை என்றால் பூச்சி கடிக்கும் என்று சொல்லாமல், ‘ஷேம்... ஷேம் பப்பி ஷேம்’ என்கிறோம். இரண்டு வயதிலேயே உடல் பற்றி அவமான உணர்ச்சியைப் பதியவைக்கிறோம்.
பெண், முதல் மாதவிடாய் சுழற்சி அடையும் நாளில் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ கொண்டாடுகிறோம். புது ஆடை கிடைக்கும் என்பது தவிர அந்தச் சடங்குகள் மகிழ்ச்சியைத் தருகின்றனவா? அந்தப் பெண்ணின் குழந்தைத்தன்மையை உடைக்கின்றனவா?


வளரிளம் பருவத்தில்தான் அவளுக்குள் எது அழகு என்ற பார்வை திணிக்கப்படுகிறது. நிறம், உயரம், எடை போன்றவை குறித்துத் தோற்றரீதியாக அவளுக்குள் பல்வேறு சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன. வளரிளம் பருவத்தை அடையும் ஆணுக்கு, ‘பெரியவனாகிவிட்டான்’ என்று சொல்லி நடமாட்டத்தில், பாலின வெளிப்பாடுகளில் சுதந்திரமாகத் திரிய அங்கீகாரம் தரும் சமூகம், பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைக்கிறது.
நீளும் கேள்விகள்

சின்னஞ்சிறுமியாக இருந்தபோது உடையில் இல்லாத கவனம் வளரிளம் பருவத்தின் போது வருவதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பதா, அழகு என்ற மாயையில் நம்மை அறியாமல் நாம் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பதா?
லெக்கிங்ஸ் அணிவதை உரிமை என்று பார்ப்பதா? நம் மேல் திணிக்கப்பட்ட அழகு என்ற பிம்பத்தின் நீட்சி என்பதா?
உணவில் வரும் கவனம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதா? 50 kg தாஜ்மகால் என்பதோடு சம்பந்தப்பட்டதா?
பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும்போது பெண்ணுக்கு ஏன் தைரியத்துக்குப் பதிலாக அவமான உணர்ச்சி முன்வருகிறது?
காதலன், கணவன் இருவரிடமும் இருந்து வரும் பாலியல் இச்சைகளுக்கு மவுனம் காத்து, தனக்குப் பிடிக்காத பொழுதும் ஈடுகொடுப்பது எதனால்?


குழந்தைப்பேறு தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் போவது எதனால்?
பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது பெண்களுக்குச் சட்டரீதியாகப் பிரச்சினையாக இருக்கும்பொழுது இந்தியாவில் வேண்டாத கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்ய முடிவது எதனால்? இது பெண்கள் போராடிப் பெற்ற உரிமையா மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான இன்னொரு குடும்பக் கட்டுப்பாட்டு முறையா?
ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகப் பெண் குழந்தைகள் பல பிறந்த பிறகும் தொடர்ந்து ஆண் குழந்தையைக் கர்ப்பமுறுவதற்காகப் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவது ஏன்?
வளர்ப்பில் தொடங்கும் பாகுபாடு

பெண்களுக்கான சிக்கல்கள் ஒரு புறம் இப்படி இருக்க, தன் உடல் சார்ந்தும் பெண்ணின் உடல் சார்ந்தும் ஆண்கள் எந்தவிதமான பார்வையில் வளர்க்கப்படுகிறார்கள்?
தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று பெண்ணின் மேல் அமிலம் ஊற்றி அவளைச் சிதைக்கும் ஆணை அப்படிச் செயல்படத் தூண்டியது, ‘பெண் என்பவள் உடல் மட்டும்தான்’ என்ற பார்வையா?
போர்னோகிராபி படங்களைப் பார்த்துவிட்டுத் தனக்குத் தோன்றிய பெண்ணுடலை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது குறித்து ஆண்களுக்கு ஏன் குற்ற உணர்வு வருவதில்லை?
காதலியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் தன் பாலியல் இச்சைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டும் என ஆணின் மனது எப்போது வடிவமைக்கப்பட்டது?
ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒருவர் திருமணம் செய்துகொள்வதை அங்கீகரிக்கும் சமூகம் எம்மாதிரியான சமூகம்?
சாமியார்கள் என்ற பெயரால் இயங்குபவர்களிடம் பெண்கள் ஏன் தாமாகவே போய் மாட்டி, பாலியல் இச்சைகளுக்கு சம்மதிக் கிறார்கள்?
உடல் மட்டுமல்ல பெண்

1980-களில் நடந்த மதுரா பாலியல் வன்முறை வழக்கில் இந்திய அளவில் பெண்கள் அமைப்புகள் போராடின. சட்டங்களிலும் திட்டங்களிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தன. ஆனால், மறுபடியும் 2012-ல் நிர்பயா பாலியல் வன்முறை வழக்கு நம்மை உலுக்கியது. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? ‘பெண்ணுடல்’ ஏன் பொது நுகர்வுக்கு ஆளானது?
பாலியல் இச்சைக்கு வேற்று சாதிப் பெண்ணைத் தீண்ட முடிகிறது. திருமணம், காதல் என்று வரும்போது சாதி, வெறியாகிப்போவது எப்படி?
உடல் இச்சைக்காகப் பாலியல் தொழிலாளர்களோடு உறவுகொள்ள முடிகிறது. ஆனால், பொதுவெளியில் அவர்களை இழிவுபடுத்திப் பேசும் அறம் என்ன அறம்?
திருநங்கையரின் உளவியல் சிக்கல்களைப் புரிந்துகொள்ள மறுத்து, அவர்களைத் திருத்தப்பட வேண்டியவர்களாக மட்டுமே பார்ப்பது எதனால்?
ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகள் தனியாகவும் கவர்ச்சிக் கன்னிகள் தனியாகவும் இருந்தனர். இன்று கதாநாயகிகளே கவர்ச்சிக் கன்னிகளாகவும் கூடுதல் பாத்திரப் பொறுப்பை ஏற்றுவிட்டார்கள். இதற்குப் பின்னால் உள்ள பொதுப்புத்தி என்ன? சமுதாய அளவில் பெண்ணுடல் குறித்து இருக்கும் பார்வைதான் சினிமா, தொலைக்காட்சிக்கும் நீள்கிறதா? அல்லது வரவேற்பறைக்கு வந்துவிட்ட இந்தப் பிம்பங்கள் நம் ஒட்டுமொத்த பார்வையை மாற்றிவிட்டனவா?
செல்போன், பெண்ணின் உடலை இன்னமும் கட்டுக்குள், அதிகாரத்துக்குள் கொண்டுவர வைக்கும் சாதனமானது எப்படி?
இந்த நவீன தொழில்நுட்பங்கள் உடலையும் உறவையும் எப்படி மலினப்படுத்திவிட்டன?
நம் சமூகம் ஆணையும் பெண்ணையும் பிறப்பு தொடங்கி இறப்புவரை ஏன் வெவ்வேறு விதமாகக் கையாள்கிறது? இப்படி வளர்த்துவிட்டு பெண் ஒடுங்கி இருப்பதையும் ஆண் ‘வீரமாக’ இருப்பதையும் பெண்ணின் இயல்பு, ஆணின் இயல்பு என்று எப்படி நியாயப்படுத்துகிறோம்?
பெண்கள் பாவம் என்ற பரிதாபப் பார்வை வேண்டாம். ஆண்கள் மோசம் என்ற குறைகூறலும் வேண்டாம்.
நாம் யோசிக்க வேண்டியதெல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான். பிறப்பு தொடங்கி இறப்புவரை தொடரும் பெண்ணுடல் சார்ந்த அரசியல் குறித்து, கூடி சிந்திப்போம்; விவாதிப்போம்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்:
எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#2
ஷேம் ஷேம் பப்பி ஷேம்

ம்மா தண்ணீ…
பாதித் தண்ணீர் வாய்க்குள் போனது. மீதி கவுனுக்குள் போயிற்று. அம்மா ஈரம், கழற்று.
அம்மா வேறோரு கவுனை எடுத்துவரப் போனாள்.
கொடியில் தொங்கும் முக்கால் பேண்ட்டும் பனியனும்தான் வேண்டுமென்று நிஷா அடம் பிடித்தாள்.
இந்த பேண்ட், பனியன் வந்த நாளிலிருந்து ஒன்று அது நிஷாவின் உடம்பில் இருக்கும். அல்லது கொடியில் காய்ந்துகொண்டிருக்கும். வேறு எந்த டிரஸ்ஸைப் போட்டாலும் நாலைந்து மணி நேரத்தில் கழற்றிவிட்டுக் கொடியில் தொங்கும் டிரஸ்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பாள்.
நிஷாவின் அம்மாவுக்கு அலுப்பாக இருந்தது.
ஜட்டி போட வைக்கறதுல இருந்து கவுன் மாட்டறதுவரை நிஷாவோடு எல்லாமே போராட்டம்தான்.
ஜட்டி போட்ட உடனே எப்ப பார்த்தாலும் கழற்றிப் போட்டுடுவா.
வீட்ல இருக்கறவங்க எல்லாரும் ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்லிச் சொல்லி இப்ப ஒரு வழியா ஒழுங்கா ஜட்டி போடறா.
ஆனா இப்ப இதுல ஒரு புது சிக்கல். அம்மாவைத் தவிர யார் கிட்டவும் குளிக்க மாட்டேங்கிறா. அன்னைக்கு அப்படித்தான் பிரியா அத்தைகிட்ட குளிம்மான்னு சொன்னா குளித்துவிட்டால் மாட்டேன்னு ஒரே அழுகை. அத்தை ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆயிடுமாம்.
ப்ரியா அத்தை கொஞ்சி, கெஞ்சி குளிக்க வச்சுட்டாங்க. ஆனால், தொடையிடுக்குல அழுக்கு இருக்குன்னு தேய்ச்சுவிடப் போனா தொடவே விடலையாம்.
“ஆமாம், முன்னைவிட இப்ப கொஞ்சம் குண்டாயிட்டா, தொடை உரசி சமயத்தில புண்ணா போயிடுது. டாக்டர்கிட்ட போனப்போகூட ஜட்டிய கழற்றவே மாட்டேன்னு அடம்.”
“ஏன், அப்படி வெட்கப்படறா?”
“தெரியலை, முன்னாடி ஜட்டி போட அடம்பிடிப்பா. நாங்க எல்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்லி இப்ப ஒரு வழியா ஜட்டி போடறது பழக்கமாயிடுச்சு.”
“ஏன் அப்படிச் சொன்னீங்க, ஜட்டி போடலைன்னா பூச்சி கடிக்கும்னு சொல்லி இருக்கலாம். இல்லாட்டா எங்கேயாவது உட்காரும்போது ஏதாவது குத்தும்னு சொல்லியிருக்கலாம்.”
“அதெல்லாம் புரியற வயசா?”
“அவங்களுக்குப் புரியற மாதிரி சொல்ல நாம கத்துக்கணும்.”
“புதுசா கத்துக்க என்ன இருக்கு? எல்லாம் நம்ம வீட்ல இருக்கறவங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கறதுதான்.”
“அப்படி இல்லை. முன்னாடி எல்லாம் ஓரளவு விவரம் தெரிஞ்ச பிறகுதான் ஸ்கூலுக்குன்னு வெளியில தனியாகப் போனோம். இப்ப பசங்க நடக்க ஆரம்பிச்சவுடனே ஸ்கூலுக்கு அனுப்பிடறோம். ஸ்கூல்ல, வெளியிடத்துல ஆட்களைப் பார்க்கறாங்க. அவங்களும் குழந்தைங்கள்னு கொஞ்சறாங்க. கன்னத்தைக் கிள்ளுவாங்க. முத்தம் கொடுப்பாங்க.”
“முத்தமெல்லாம் கொடுப்பாங்களா?”
“நிஷா மாதிரி கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குழந்தையைப் பார்த்தால் யாருக்கும் தோணும். இதுல குழந்தையைக் குழந்தையாகப் பார்க்கறவங்களும் இருப்பாங்க. உடம்பாகப் பார்க்கறவங்களும் இருப்பாங்க.”
“என்ன ப்ரியா இப்படிப் பயமுறுத்தற? இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சா பெண் குழந்தையை வீட்டிலேயே வைச்சிக்க வேண்டியதுதான்.”
“பிரச்சினைக்குத் தீர்வு அது இல்லை. அவங்களைத் தயார் பண்ணணும். சொல்லிப் புரிய வைக்கணும்.”
“எப்படிப் புரிய வைக்கிறது?”
“என் பொண்ணை மூணு வயசுல ஸ்கூல்ல சேர்த்தப்ப யாராவது உன்னைக் கையில, கால்ல, தொடையில, மார்ல தொட்டால் சப்புன்னு அறைஞ்சிடுன்னு சொல்லி அனுப்பிச்சேன். ஒரு வாரம் கழிச்சு வேன் டிரைவர், உங்க பாப்பா என்னை அடிச்சுதுன்னு சொன்னார். என் பொண்ணைத் தனியா கூட்டிட்டுப் போய், ஏன் பாப்பா அடிச்சேன்னு கேட்டேன். அந்த அங்கிள் என் தொடை மேல கை வைச்சார், அதனால அடிச்சேன்னு சொன்னா. நீங்கதானேம்மா சொன்னீங்கன்னும் சொன்னா. அப்புறம் அந்த டிரைவரைப் பத்தி ஸ்கூல்ல சொன்னேன். மத்த குழந்தைகள்கிட்ட பேசினப்ப அந்த டிரைவர் இப்படி எல்லார்கிட்டவும் நடந்துக்கறது தெரிஞ்சது. அப்புறம் டிரைவரை மாத்தினோம். இப்ப பிரச்சினை எதுவும் இல்லை.”
“பெரிய பெண் குழந்தைகளுக்குத்தான் பிரச்சினைன்னா, குட்டி குழந்தைகளுக்குக் கூடவா? காலம் கெட்டுப் போச்சு. வெளியே அனுப்பவே பயமா இருக்கு.”
“அதுக்காக வீட்ல பொத்திப் பொத்தி வளர்க்க முடியுமா? எதையும் எதிர்கொள்றபடி பெண் குழந்தைகளைத் தயார் செய்யணும்.”
“உடம்புன்னா அவமானம்னு சொல்லி வளர்க்கக் கூடாது. ஷேம் ஷேம்னு சொல்றதைவிட ஜட்டி போடறது ஆரோக்கியமா இருக்கறதுக்கான வழின்னு சொல்லலாம். ஜட்டி போட்டால் பாதுகாப்புன்னு சொல்லணும். நமக்குத் தெரிஞ்சதெல்லாம் உடம்பைப் பத்தி ஒரு அவமான உணர்ச்சியை உருவாக்கறதுதான். இப்படிச் சொல்லி அவளை ஒடுக்கி வச்சிட்டா பிரச்சினை வராதுன்னு நினைக்கிறோம். பிரச்சினை வரும்போது ஓடி ஒதுங்காம அதை எப்படித் தீர்க்கறதுன்னு யோசிக்கணும்.”
(தேடல் தொடரும்)
சி
று வயதிலிருந்தே குழந்தைகளுக்கு அவர்கள் உடல் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டும். உடல் என்பது அவமானம் இல்லை என்பதோடு அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதையும் சொல்லித்தர வேண்டும். அதேபோல் நல்ல தொடுதல், மோசமான தொடுதல் (Good touch, bad touch) பற்றி அவர்களுக்குப் புரியும்படி சொல்லித்தர வேண்டும்.
நான் சொல்றேன், நீ கேளு என்பதைவிட நான் இந்தக் காரணங்களுக்காகத்தான் சொல்கிறேன் என்று புரியவைக்க முயல வேண்டும்.
நாம் பொதுவாக நமக்கும் குழந்தைகளுக்கும் ஜட்டி வாங்கும்போது என்ன நிறத்தில் வாங்குகிறோம்? பழுப்பு, நீலம், கறுப்பு, பச்சை என்று அழுத்தமான நிறங்களில் வாங்குகிறோம். ஏன் அப்படி வாங்குகிறோம்? அழுக்குத் தெரியக் கூடாது என்று.
அழுக்கு கண்ணுக்குத் தெரியாவிட்டால் அழுக்கில்லை என்றாகிவிடுமா?
வெளுத்த நிறங்களில் அழுக்கு சட்டென்று தெரியக்கூடிய நிறங்களில் ஜட்டி வாங்குவதுதான் உடல் நலத்துக்கு நல்லது. நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதோடு அழுக்கால் வரக்கூடிய அரிப்புகளும் வராது.
7, 8 வயதிலேயே குழந்தைகளுக்கு அவரவர் ஜட்டிகளை அவர்களே துவைக்கச் சொல்லிப் பழக்குங்கள். அழுக்கைச் சரிவர துவைக்கக் கற்றுக்கொடுங்கள். வேண்டுமானால் அவர்களுக்குத் தெரியாமல் மறுமுறை துவையுங்கள். நாளடைவில் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,041
Likes
37,724
Location
karur
#3
அருமையான பதிவு சிஸ் ....என் மனதிற்குள்ளும் இந்த கேள்விகள் உண்டு.....

உடல் மட்டுமே பெண்களின் பலம் மற்றும் பலவீனம் என்ற நிலை எப்போது மாறும் ...அதை எப்படி மாற்றுவது....என பல முறை யோசித்தது உண்டு.

இந்த கட்டுரையில் சொன்னது போல் உடலை வெறும் உடலாக பார்க்க பெண்களுக்கு கற்றுகொடுங்கள் . அதை உணர்வுகளோடு ஒப்பிடாதீர்கள். உள்ளாடை போடுவது எதற்கு என்பதன் நியாமான காரணத்தை அவர்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

சிறுவயதிலே இது போன்ற நல்ல பழக்கங்களை நான் சொல்லி கொடுத்து வளர்த்தால் அவர்கள் எங்கு சென்றாலும் தன்னை பாதுகாத்து கொள்வார்கள் .


தொடர்ந்து பதிவிடுங்கள்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#4
அருமையான பதிவு சிஸ் ....என் மனதிற்குள்ளும் இந்த கேள்விகள் உண்டு.....

உடல் மட்டுமே பெண்களின் பலம் மற்றும் பலவீனம் என்ற நிலை எப்போது மாறும் ...அதை எப்படி மாற்றுவது....என பல முறை யோசித்தது உண்டு.

இந்த கட்டுரையில் சொன்னது போல் உடலை வெறும் உடலாக பார்க்க பெண்களுக்கு கற்றுகொடுங்கள் . அதை உணர்வுகளோடு ஒப்பிடாதீர்கள். உள்ளாடை போடுவது எதற்கு என்பதன் நியாமான காரணத்தை அவர்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

சிறுவயதிலே இது போன்ற நல்ல பழக்கங்களை நான் சொல்லி கொடுத்து வளர்த்தால் அவர்கள் எங்கு சென்றாலும் தன்னை பாதுகாத்து கொள்வார்கள் .


தொடர்ந்து பதிவிடுங்கள்.
thanks lashmi..
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#5
குழந்தை உருவம் குமரி உள்ளம்


வீடே ஏகக் களேபரத்தில் இருந்தது. ஒன்பது வயது ஜானகி என்ற ஜானுக்குட்டி நடனப் போட்டியில் கலந்துகொள்கிறாள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்து டி.வி. சேனலில் வாய்ப்பு கிடைக்கும். அப்பா, அம்மா, அத்தை, சித்தப்பா என ஆளாளுக்கு ஜானகிக்கு அறிவுறுத்திக்கொண்டிருந்தார்கள்.
ஆடும்போது கவனமா ஆடு, எந்த ‘மூவ்மெண்டையும்’ மறக்காதே.
ஆமா, அந்த வரிக்கு அப்படியே கண்ணைச் சொருகி ஆடணும். கையையும் காலையும் சரியா பயன்படுத்திட்டு, கண்ணை என்ன பண்ணும்ங்கிறதுல கோட்டை விட்டுடாதே.
ஆமா, உனக்குச் சரியான எமோஷன் இருக்கான்னு பார்ப்பாங்க.
ஏங்க கடைக்குப் போகணும் வர்றீங்களா?
என்னம்மா வாங்கணும்?
தொப்புள்ள ஒட்டறதுக்கு ஜிகினாப் பொடி வேணும். கைக்கும் காலுக்கும் மருதாணி போடற மாதிரி சிவப்பு சாயம் விக்கிறாங்களாம். ஏதோ பேர் சொன்னாங்க.
அண்ணி, டிரெஸ் சரியா இருக்கா?
உடனே டிரெஸ் அனைவர் எதிரிலும் போட்டுக் காண்பிக்கப்பட்டது. தொப்புளுக்கு மேலே வரும்படியான சட்டை. முட்டிக்கு மேலே வரும்படியான குட்டைப் பாவாடை. அதைப் போட்டவுடன் சின்ன உருவிலான ஜானகி பெரிய பெண் போலத் தோற்றமளித்தாள்.
வீட்டின் மொத்தப் பரபரப்பில் கலந்துகொள்ளாமல் பிரியா வெளியே கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தாள். அவள் தோழி ஸ்வேதாவுக்குப் பிறந்தநாள். ஸ்வேதாவோட பாய் ஃபிரெண்டு ராம் உட்பட 10 பேர் சினிமாவுக்கும் ஓட்டலுக்கும் போவதாகத் திட்டம். ராமோட ஃபிரெண்ட் ரவியும் வரக்கூடும் என்று ஸ்வேதா சொல்லியிருந்தாள். பிரியா அதனால் கொஞ்சம் திரில்லாக இருந்தாள். ரவியைப் பார்ப்பதும் பேசுவதும் அவளுக்குள் ஒருவித கிளர்ச்சியைத் தந்தன. அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கவனமாக உடையைத் தேர்தெடுத்து அணிந்துகொண்டாள்.
பிரியா நீ ஜானகியோட டான்ஸ் நிகழ்ச்சிக்கு வரலையா?
இல்லேம்மா, நான் ஸ்வேதாகூட வெளியில போறேன். அவளுக்கு இன்னிக்கு பர்த்டே. பிரெண்ட்ஸ் எல்லாம் சினிமாவுக்குப் போயிட்டு, வெளியில சாப்பிடப்போறோம்.
யாரெல்லாம் போறீங்க?
பிரியா கவனமாகப் பெண்களின் பெயர்களை மட்டும் சொன்னாள். முதல் தடவை அம்மா, அப்பா கிட்ட அத்தனை பேரையும் சொன்னபோது வீட்டில் பெரிய ரகளை. ஆம்பள பசங்ககூட வெளியே போகக் கூடாது, அதிகம் பேசக் கூடாது, கண்ணை உறுத்துற மாதிரி டிரெஸ் போடக் கூடாது என ஏகப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அத்தை, பிரியாவின் டிரெஸ்ஸைப் பார்த்து கமெண்ட் அடித்தார்.
எதுக்குப் பிரியா ஸ்லீவ்லெஸ் சுரிதாரைப் போடறே.
அம்மா உஷாரானாள். அடுத்து, தன்னிடம் அண்ணன் கறாராக இருந்த மாதிரி தன் பிள்ளைகளிடம் இல்லை என்று அத்தை ஆரம்பிப்பாள்.
பிரியா, புதுசா வாங்கிய கலம்காரி துப்பட்டாவைப் போட்டுக்கோயேன். இந்த டிரஸ்ஸுக்கு மேட்சாக இருக்கும் என்றாள் அம்மா.
உடைக்காகப் பிடிவாதம் பிடித்தால் வெளியே போவதே தடை படும். அத்தையை முறைத்தபடி வேறு உடை மாற்றப் போனாள் பிரியா.
ஒன்பது வயது குழந்தைக்குக் குட்டைப் பாவாடை போட்டு அழகு பார்க்கிறது குடும்பம். நடு ஹாலில் அனைவரும் உட்கார்ந்துகொண்டு, மோகித்து ஆடுவதற்கும் ஆபாசமான அங்க அசைவுகளைச் சரியானபடி ஆடவும் வகுப்பெடுக்டுகிறது. தொப்புளில் ஜிகினா ஒட்டுவதைப் பற்றி வீட்டு ஆண்களும் பெண்களும் கூடிப் பேசுகிறார்கள்.
இருபது வயதுப் பெண்ணின் உடை பற்றி, யாரோடு போக வேண்டும், போகக் கூடாது என்பது பற்றிக் குடும்பம் கருத்து சொல்கிறது.
ஏனிந்த நகைமுரண்? இந்த முரணைக் குடும்பங்கள் ஏன்
உணரவில்லை?
பெரியவர்களாக்கப்படும் குழந்தைகள்
முன்பெல்லாம் குழந்தைகளுக்கான உடைகள் என்பவை கவுன், அரை டிராயர் என குழந்தைகளுக்கான உடைகளாகவே இருந்தன. பெரியவர்களுக்கான உடைகள் வேறுவிதமாக இருந்தன.
ஆனால், இன்றைக்கு மூன்று வயது குழந்தை பேண்ட், சுரிதார் வேண்டுமென்கிறது. பெரியவர்கள் அரை டிராயர், குட்டைப் பாவாடை அணிகிறார்கள். உணவு, உடை, பாவனைகள், பேச்சு என அனைத்திலும் அறியாத்தனம் போய் குழந்தைகள் ‘சிறிய பெரியவர்களாக’ வளர்க்கப்படுகிறார்கள்.

உளவியல் ஆராய்ச்சிகள் குழந்தைகளைப் பெரியவர்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கச் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் அப்படியில்லை. இதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. இன்று உலகம் வரவேற்பறைக்கு வந்துவிட்டது. எல்லாவிதமான தகவல்களையும் பெரியவர்களும் சிறியவர்களும் எதிர்கொள்கிறார்கள். எது சரி, எது தவறு, எது நடைமுறைக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் நல்லது என்பதைவிட டி.வி. பெட்டிக்குள் வரும் உருவங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் காப்பி அடிக்கிறார்கள். ஆனால், மனதளவில் பாரம்பரியத்தின் கூறுகள் ஊறிக் கிடக்கின்றன.
இதில் அனைவரும் சிக்கிக்கொள்கிறார்கள். பெரியவர் களுக்கும் குழப்பம், சிறியவர்களுக்கும் குழப்பம். ஒன்பது வயதில் கிளர்ச்சியான பாடல்களுக்கும் உடல் அசைவுகளுக்கும் உடைகளுக்கும் அறிமுகமாகும்/ அறிமுகப்படுத்தப்படும் குழந்தைகளிடம், வளரிளம் பருவத்தில் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே, இப்படி உடை அணியாதே, உடலைக் காட்டாதே என்று அதிகாரம் செலுத்த முடியுமா?
கெமிஸ்ட்ரி சரியில்லையா?

‘ரியாலிட்டி நிகழ்ச்சி’களில் ‘கெமிஸ்ட்ரி சரியில்லை’ என்று குழந்தைகளைப் பார்த்துச் சொல்கிறார்கள். பெரியவர்களும் குழந்தைகளிடம் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ஆடச்சொல்லி ஊக்குவிக்கிறார்கள். பிறகு அந்த ‘கெமிஸ்ட்ரி’ நடனத்தோடு மட்டும் நிற்க வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியுமா?
மனிதர்கள் உடலாலும் மனதாலும் ஆனவர்கள். மனம் பக்குவம் அடைவதற்குள் உடல்ரீதியாகக் குழந்தைகளின் உடைகளில், அங்க அளவுகளில் பெரியவர்களின் உலகத்தைத் திணிப்பது பற்றி நாம் அனைவருமே யோசிக்க வேண்டும்.
உடல் பூஜிக்கப்பட வேண்டியது என்ற பாரம்பரியப் பார்வையில் வருவதல்ல இந்த வாதம். பாலுணர்வு தூண்டுதல் களுக்குச் சிறிய வயதிலேயே குழந்தைகள் ஆட்படுவதுகூட சிறு வயதில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று என்கிறார்கள். மனதளவில் முதிர்ச்சி வராதபோது, ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ உடல் சார்ந்த உணர்வுகளை எப்படிக் கையாள முடியும்? காதல், பாலுணர்வு போன்றவை புரியாத மிகச் சிறு வயதிலேயே ஊடக பிம்பங்களால் குழந்தைகள் தாக்கப்படும்போது, அதை எதிர்கொள்ள அவர்களுக்கு யார் கற்றுக்கொடுக்கப் போகிறார்கள்?
கற்றுக்கொடுக்க வேண்டிய பெரியவர்கள், வீடுகளிலும் பள்ளிகளிலும் ஊடகங்களுக்குள்ளும் அமர்ந்தபடி ஜிகினா, கெமிஸ்ட்ரி எனப் பேசும்போது குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அதைவிடப் பெரிய கவலை எதையும் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள மறுக்கும் பெரியவர்களைப் பற்றியது.
குழந்தைகளுக்கு அவர்கள் பருவத்துக்கே உரிய செயல்பாடுகளை அறிமுகப்படுத்துங்கள். உட்காரும் பருவம் வருவதற்கு முன்பே தலையணைகளை அடுக்கி அவர்களை உட்காரப் பழக்குவதுபோல் உங்கள் எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணிக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பின்விளைவுகளை யோசித்து, காரண காரியங்களை அலசுங்கள். எந்தவிதமான வளர்ப்பு ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பற்றியும் யோசியுங்கள்.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#6
தோசையம்மா தோசை


ஓவியம்: அ.செல்வம்

ம்மா அடுப்படியில் தோசை சுட்டுக்கொண்டே, பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட உட்கார்ந்திருந்த அண்ணனுக்கும் அப்பாவுக்கும் தட்டு வைத்துத் தண்ணீர் வைத்து, சாம்பார், சட்னி ஊற்றித் தோசைகளைப் பரிமாறிக்கொண்டிருந்தாள் சுசீலா.

இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊற்று, சட்னி கொடு என அப்பாவும் அண்ணனும் தோசையை சாம்பாராலும் சட்னியாலும் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டுவிட்டுத் தட்டை அப்படியே விட்டுவிட்டு அண்ணனும் அப்பாவும் எழுந்துபோனார்கள்.
சுசீலா, எல்லாவற்றையும் தேய்க்கும் இடத்தில் எடுத்துப் போட்டாள். காலியான மாவுப் பாத்திரத்தையும் தட்டுகளையும் கழுவி வைத்துவிட்டு நிமிர்ந்தாள் அம்மா.
சுசீலா நீ தோசையைச் சாப்பிடு, நான் மேடையைச் சுத்தம் செய்திட்டுச் சாப்பிடறேன் என்றாள் அம்மா.
அம்மா, உங்களுக்குத் தோசை.
மாவு தீர்ந்திடுச்சு. நாளைக்கு அரைக்கணும். நான் சோறும் ஊறுகாயும் சாப்பிட்டுக்கிறேன்.
நீயும் வேலையை முடிச்சிட்டு வாம்மா, நாம ரெண்டு பேருமே தோசையையும் சாப்பாட்டையும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்.

இன்றைக்கும் பல குடும்பங்களில் இத்தகைய காட்சியைப் பார்க்கலாம். நம் நாட்டில் ஏர் பிடித்து உழுகிறவனுக்கு மட்டுமா சோறில்லை? காலம் காலமாக உணவுத் தயாரிப்பில் பெருவாரியாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்குக் கூடத்தான் உணவுப் பங்கீட்டில் சமமான பங்கில்லை.
ஆண்களைவிடப் பெண்கள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பதைத்தான் பழமொழி தொடங்கி மழலைப் பாடல், சினிமா பாடல், Body Mass Index
(BMI) வரை சொல்கிறது.
மழலையர் பாடலான, ‘தோசையம்மா தோசை’ பாடலில் இப்படிச் சொல்லித்தரப்பட்டிருக்கிறது:
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று
சரி, பாப்பா ஒரு தோசை சாப்பிட்டாலே பெரிய விஷயம் என்று சொல்லலாம். ஆனால், அப்பாவும் அம்மாவும் பெரியவர்கள்தானே, ஏன் அவர்களுக்குள் பாரபட்சம்?
‘50 kg தாஜ்மகால் எனக்கே எனக்கென்று’ பெண்ணைப் பொருளாகப் பார்ப்பது மட்டுமன்றி, தாஜ்மகாலின் எடையும் 50 கிலோதான் இருக்க வேண்டும் என்றும் கற்பிக்கப்படுகிறது. ‘உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு’ என்பதும் இப்படித்தான்.
இந்தக் கற்பிதங்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல பாதிப்புகளை உருவாக்குகின்றன.
ஆணும் பெண்ணும் சமம் என்பது சட்டத்திலும் முழக்கங்களிலும்தான் இருக்கிறது. நடைமுறையில் பாகுபாடு, வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
இத்தகைய பால்பேதங்களை ஆண்களும் பெண்களும் தொடர்ந்து நடை முறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்திய உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை இனப்பெருக்க காலகட்டத்தில் உள்ள இந்தியப் பெண்களில் 51 சதவீதத்தினர் ரத்தசோகையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின்படி தரவரிசையில் இந்தியா மிக மிகக் கீழே உள்ளது.
ரத்த தான முகாம் ஒன்றை, ஒரு பெண்கள் கல்லூரியில் நடத்தியபோது 267 பேர் ரத்தம் கொடுக்க முன்வந்தார்கள். இதில் நாலே நாலு பேர் மட்டுமே தேர்வானார்கள். மற்றவர்கள் ரத்த சோகை உள்ளவர்களாக, அவர்களுக்கே ரத்தம் தேவைப்படும் நிலையில் இருந்தார்கள்.
தியாகம் தேவையில்லை

பெண்களது ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு வறுமை மட்டும் காரணமல்ல, கலாச்சாரமும்தான். தாய்ப்பால் தருவதிலிருந்தே உணவுப் பங்கீட்டில் பாரபட்சம் தொடங்கிவிடுகிறது. பெண் குழந்தைகளுக்குக் சிறிது காலமே தாய்ப்பால் அளிக்கப்படுகிறது. காரணம், முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால் அந்தத் தாயை அதற்காக மற்றவர்கள் கோபித்துக்கொள்கிறார்கள். உடனடியாக அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்க (அது ஆணாக இருந்துவிடும் என்ற நப்பாசைதான்), கர்ப்பம் தரிக்க முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தச் சொல்கிறார்கள் சுற்றி உள்ளவர்கள்.
கொஞ்சம் வளர்ந்த பெண் குழந்தைக்கு, தோசைப் பாட்டு மூலம் ஆணைவிடக் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்ற கருத்து நுட்பமாக மூளையில் ஏற்றப்படுகிறது. வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களை, 50 கிலோ தாஜ்மகாலாக இருக்கச் சொல்லி மூளைச்சலவை செய்கிறார்கள்.
வீடுகளில் அண்ணன், அப்பா என்று வீட்டு ஆண்கள் சாப்பிட்ட பிறகே அந்த வீட்டுப் பெண் குழந்தையும் அம்மாவும் சாப்பிடுகிறார்கள். நல்ல உணவு வகைகளை ஆண்களுக்குப் பரிமாறிவிட்டு மிச்சம் மீதி இருப்பவற்றைப் பெண்கள் சாப்பிடும் போக்கும் கற்பிக்கப்படுகிறது.
வீட்டுக்குத் தாமதமாக வரும் ஒருவருக்காக அவருக்குரிய பங்கை எடுத்து வைக்கும் அம்மா ஒரு நாளும் தனக்காகவென்று எடுத்து வைப்பதில்லை. அப்படியே எடுத்து வைத்தாலும், இன்னும் கொஞ்சம் இருக்கிறதா என்று கேட்கும்போது எனக்காக வைத்திருக்கிறேன் என்று சொல்லாமல்தான் கொண்டு வந்து தருவார்கள்.
வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடாமல் வெளியே போகும்போது குற்றவுணர்வையும் தவிப்பையும் உணரும் பெண்கள், தாங்கள் சாப்பிட முடியாத போது ஏன் அப்படி உணர்வதில்லை, ஏன் தலைக்குப் பின்னால் தியாகி ஒளிவட்டத்தைச் சுமக்கிறார்கள்?
ஆண்களின் உணவைப் பற்றிப் பெண்கள் கவலைப்படுவதுபோல் ஏன் ஆண்கள், பெண்களின் உணவு பற்றிக் கவலைப்படுவதில்லை? வீட்டில் உள்ளவர்களை, குறிப்பாக ஆண்களை இம் மாதிரியான விஷயங்களுக்குப் பழக்குவதில்லை. பழக்காதபோது ஆண்களைக் கோபித்துக்கொள்ளவும் முடியாது.
சுவையான உணவைச் சமைக்கும் அம்மாவுக்கு அதைச் சுவைக்கவும் உரிமை உண்டு. அண்ணன், அப்பாவின் எச்சில் தட்டைக் கழுவும் பெண் பிள்ளைகளுக்கும் ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிடவும் உரிமை உண்டு.

(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#7
அழகின் நிறம் கறுப்பு!


பிரமோத்தும் ஜனனியும் கமலாவும் பன்னீரும் விடுமுறை நாளில் கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பாயிண்டுகள் அடிப்படையில் விளையாட்டு. தொடர்ந்து கமலாவுக்குக் கறுப்புக் காய்கள் மட்டுமே விழுந்துகொண்டிருந்தன. பன்னீர் கிண்டலடித்தான்.
“அந்தக் காய் வெள்ளையாதான் இருக்கு. உன் கைபட்ட ஸ்ட்ரைக்கர் அதைத் தொடும்பொழுது காயும் கறுப்பாயிடுது.”

நான் விளையாட்டுக்கே வரலை என்று விம்மியபடி அம்மாவைப் பார்க்க அடுக்களைக்குள் போனாள் கமலா. “ஏம்மா என்னைக் கறுப்பு பெண்ணாகப் பெத்தீங்க. எல்லோரும் என்னைக் கறுப்பு, கறுப்புன்னு கிண்டல் பண்றாங்க”
“அதானலென்ன கறுப்பா இருந்தாலும் நீ அழகுதான்.”
அழகு கிரீம்களின் உண்மை நிறம்

கமலா வீட்டில் மட்டுமல்ல; இன்று எல்லாத் தரப்பினரையும் ஆட்டிப் படைக்கும் வியாதி, தோலின் நிறம். குழந்தை பிறந்ததிலிருந்தே நிறம் பற்றிய உயர்வு/தாழ்வு மனப்பான்மை உருவாக்கப்படுகிறது. ‘கறுப்பா இருந்தாலும் களையாக இருக்கா; என்ன சிவப்பு அப்படியே தங்கம் மாதிரி கலர்; ஒல்லியான, சிவப்பான பெண் தேவை; அய்யோ, கறுப்பு பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறதுகுள்ள உயிரே போயிடும், அடர்த்தியான நீல நிற டிரஸ் வேண்டாம்; உன் கறுப்பு கலருக்குப் பொருந்தாது’ - இப்படியான வசனங்கள் இங்கே இயல்பு. இந்தியா முழுவதும் சிவப்பழகு கிரீம்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
வருடக்கணக்காகப் பயன்படுத்தினாலும் எந்த முக அழகுக் கிரீமும் விளம்பரங்களில் வருவதுபோல் யாரையும் வெள்ளையாக்குவதில்லை. பூசுகிற கொஞ்ச நேரத்துக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரலாம். அதுகூடப் புது டிரஸ் போட்டவுடன் நமக்கு வருகிற உணர்வைப் போலத்தான். நம் முகம் வழக்கம்போல்தான் இருக்கிறது. அலங்கரித்த கொஞ்ச நேரத்துக்கான புத்துணர்வு மட்டுமே அது. முக அழகு கிரீம் பயன்படுத்துகிறவர்கள் யாராவது உங்களது தோலின் நிறம் மாறிவிட்டதா எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆரோக்கியம் அளிக்கும் கருமை

ஏன் இந்தியர்கள் மாநிறமாக இருக்கிறார்கள், இது தனிநபர் சம்பந்தப்பட்டதா, பிரதேசம் சம்பந்தப்பட்டதா? நம் மூதாதையர்களுடைய மரபணுக்களும் நம் நிறத்துக்கு ஒரு காரணம். தவிர நம் தோலிலிருந்து மெலனின் என்ற நிறமி உருவாகிறது. இதுதான் நம் நிறத்துக்குக் காரணம். வானத்துல இருந்து வர்ற ஊதா நிறக் கதிர்களோட வீரியத்துல இருந்து நம்மைக் காப்பாத்த தோலோட நிறம் உதவுது.
பூமியோட நடுப் பகுதியில அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் ஊதா நிறக் கதிரோட வீச்சு அதிகமாக இருக்கும். இது தோலில் படும்பொழுது நமக்குப் பாதிப்புகளை உருவாக்கும். தோலோட செல்லில் இருக்கக்கூடிய மரபணுவைக்கூட மாற்றிவிடும். நம் தோலோட நிறம் கறுப்பாக இருக்கும்பொழுது, ஊதாக் கதிரோட வீச்சின் பாதிப்பு குறையும். நம் தோலின் நிறம்தான் நம்மைக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து காப்பாத்துது.
நம் கைகளில்கூடச் சூரிய ஒளி படாத கையின் மேற்புறப் பகுதி வெளுத்த நிறமாகவும் அதற்குக் கீழே உள்ள பகுதி லேசான பழுப்பு நிறமாகவும் இருக்கும். அதற்காக எல்லோரும் சூரிய ஒளியே படாமல் நடமாடுவதும் ஆரோக்கியமானதல்ல. இன்றைக்குப் பலருக்கும் ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை உள்ளது. பலருக்கு டாக்டர்கள் சொல்லும் தீர்வு, காலை நேரத்தில் இளஞ்சூரிய ஒளியில் நிற்பதுதான்.
பிரச்சினை நிறம் அல்ல

சொல்லப்போனால், உலகத்தில் முதலில் எல்லோருமே கறுப்பாகத்தான் இருந்தார்களாம். சிலருக்கு வெள்ளையாகத் தோல் மாற ஆரம்பித்தது, எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. வெப்பமான பிரதேசங்களில் வாழ் ஆதி மனிதர்கள் முதலில் கறுப்பாகத்தான் இருந்தார்களாம். அங்கே இருந்து அவர்கள் குளிரான பிரதேசத்துக்குக் குடிபெயர்ந்த பிறகுதான், தோலின் நிறம் கறுப்பிலிருந்து வெள்ளையாக மாறியதாம்.
இருந்தும், வெள்ளைதான் அழகு என்ற விதை நமக்குள் ஆழ ஊன்றப்பட்டுள்ளது. உண்மையில் பிரச்சினை தோலின் நிறத்தில் இல்லை. நம் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. வெள்ளைதான் அழகு, உயர்வென்று நினைப்பதில்தான் பிரச்சினை. இதுவும்கூட மனிதர்களான நாமே உருவாக்கிக்கொண்டதுதான்.
நாமதான் கேரம் போர்டுல கறுப்புக்கு ஒரு பாயிண்ட், வெள்ளைக்கு இரண்டு பாயிண்டுகள்னு வச்சிருக்கிறோம். விளையாட்டுலகூட நாம இந்த மாதிரி வெள்ளை உசத்தி, கறுப்பு மட்டம்கிற பார்வையைப் பிரதிபலிக்கிறோம். இதைப் போலவே தவறு செய்தவர்களைப் பட்டியலிடும்பொழுது அதை Black list என்கிறோம். உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தும் அறிக்கையை வெள்ளை அறிக்கை என்கிறோம். இப்படியான கருத்தாக்கங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நிற அரசியல்

இதையெல்லாம்விட நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஏன் எல்லோரும் வெள்ளையை உசத்தி என்று சொல்கிறார்கள் என்பதைப் பற்றித்தான். பிரிட்டனில் தொழிற்பு ரட்சி நடந்த பிறகு அமெரிக்காவுக்குப் போய்க் குடியேற ஆரம்பித்த ஐரோப்பியர்கள், அவர்களுக்கு வேலை செய்ய அடிமைகளை வைத்துக்கொண்டார்கள். முதலில் ஏழை வெள்ளைக்காரர்கள்தாம் அடிமைகளாக இருந்தார்கள். பிறகு புதிதாகப் போன நாடுகளில் இருந்த ஆதிவாசிகளை ஒடுக்கி, அடிமையாக்கி வைத்துக்கொண்டார்கள். அடிமைகளை ஒடுக்குகிற பல்வேறு உத்திகளில் ஒரு உத்திதான் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை.
பெருவாரியான ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக வைத்திருக்க, வெள்ளை நிறம் உசத்தி, கறுப்பு நிறம் மட்டம் என்ற கருத்தை ஆழமாக மனங்களில் ஊற்றினார்கள். பிரிட்டிஷ்காரர்கள் அவர்கள் அடிமைப்படுத்திய எல்லா நாடுகளிலேயும் இந்தக் கருத்தைப் பரப்ப ஆரம்பித்தார்கள். நாம் ஆங்கிலேயேர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்துவிட்டோம். ஆனால், கறுப்பு மட்டம் என்று அவர்கள் விதைச்சிட்டுப்போன கருத்தாக்கத்துக்கு அடிமையாயிட்டோம். இந்த அடிமைத்தனத்தை அப்படியே வைத்திருக்கிற வேலையைத்தான் இன்றைக்கு விளம்பரங்கள் செய்கின்றன.
தீர்வு என்ன?

1. கறுப்பு, வெளுப்பு கருத்தாக்கத்துக்குப் பின்னால் இருக்கிற அரசியல் புரிந்த பிறகாவது நாம் மாத்தி யோசிக்கணும்.
2. தொடர்ந்து அடிமைத்தனமான உணர்வோட இருக்க விரும்பறவங்கதான் வெள்ளை அழகுன்னு நினைப்பாங்க.
3. நம் உருவத்தை, தோலின் நிறத்தை, உயரத்தை நாம் ஏத்துக்கணும். நம்மை நாமே நேசிக்க ஆரம்பிக்கணும்.
4. அழகு என்பது தோற்றம் அல்ல, திறமை. அழகு என்பது கம்பீரம். தாழ்ந்த மனப்பான்மையில் கம்பீரம் நிலைக்காது.
5. யாராவது கறுப்பு என்றால், ‘So what’ என்று கேட்கப் பழக வேண்டும்.
பெற்றோர் கவனத்துக்கு

1. உங்கள் மரபணுவின் நீட்சியும்தான் உங்கள் குழந்தைகள். நிறம் பற்றி அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்காதீர்கள்.
2. ‘கறுப்பாக இருந்தாலும் அழகு’, உனக்கு மாப்பிளை எப்படிக் கிடைக்கும் என்று சொல்லி உங்கள் நிலையையும் உங்கள் குழந்தைகள் நிலையையும் சங்கடப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
3. தோலின் நிறத்தைப் பார்த்தா திருமணப் பொருத்தம்? அப்படிப்பட்ட மாப்பிள்ளையோ/பெண்ணோ வேண்டுமா?
4. திறமை, அன்பு, பரிவு - மரியாதை இவைதான் உங்கள் குழந்தைகளின் அழகு. இந்தக் கருத்தாக்கத்தைச் சொல்லி வளருங்கள்.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#8
உயரம் ஒரு பிரச்சினையா?அம்மா இரண்டு நாட்களாக மரப் பலகையைத் தேடிக்கொண்டிருந்தார். அவரது உயரம் சிறிது குறைவுதான். ஆனால், அதைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார். சராசரி இந்தியப் பெண்ணின் உயரமான 5 அடியில்தான் இருப்பதாகச் சொல்வார்.
வீட்டில் மற்றவர்கள் ஓரளவு உயரம். கமலாதான் அம்மாவுக்கு அடுத்தபடியாக வீட்டில் உள்ளவர்களில் குள்ளம். ஆனால், அவளும் 5 அடி 4 அங்குலம்.

முகம் பார்க்கும் கண்ணாடியை அவரவர் உயரத்துக்குச் சாய்த்துக்கொள்ளும்படி கயிறு கட்டியாகிவிட்டது. பிரச்சினை சமையலறை மேடையில்தான். கேஸ் அடுப்பு ஸ்டாண்டு, அதற்கு மேல் அடுப்பு, அதற்கு மேல் குக்கர், பெரிய பாத்திரங்கள் வைக்கும்போது அம்மாவுக்குச் சிக்கலாகிவிடும். அதற்காக அரையடி உயரத்தில் ஒரு அகலமான மரப்பலகையை அவர் வைத்திருந்தார். அதைத்தான் காணோம்.
சமைக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாகக் குழப்பம்தான். வீடு முழுவதும் தேடியாகிவிட்டது. அந்த மரப் பலகையைக் காணோம். மாலை அனைவரும் சேர்ந்து மரப் பலகையைத் தேடிக் கண்டுபிடிக்காவிட்டால் நாளை சாப்பாடு கிடையாது என்று அம்மா கறாராகச் சொல்லிவிட்டார்.
இரண்டு நாட்களாக வராத வீட்டுப் பணியாளர் செல்வி வந்தபோது, அம்மா செல்வியிடம் மரப் பலகை பற்றிக் கேட்டார்.
மாடிப்படி வளைவிலிருந்து செல்வி உடனே கொண்டு வந்து கொடுத்துவிட்டார். பெட்ஷீட் காயப்போட கொடியின் உயரம் எட்டாததால், மாடிக்குக் கொண்டுபோய்விட்டு, அங்கேயே மாடிப்படி வளைவில் வைத்துவிட்டதாக செல்வி சொன்னார்.
கம்பியைப் பிடிக்கப் போட்டி

பஸ்ஸில் பயணம் செய்யும்போதெல்லாம் சீதாவுக்கும் இதே பிரச்சினைதான். மேலே உள்ள கம்பி அவளுக்கு எட்டாது. சீட்டுக்கு அருகில் உள்ள கம்பியைப் பிடிக்க அவளும் அவளைப் போல உயரம் குறைந்த சிலரும் போட்டி போடுவார்கள். பெரும்பாலான பஸ்களில் பேலன்ஸுக்குப் பிடிப்பதற்கான வார்ப்பட்டைகள் அதிக அளவில் இருப்பதில்லை. இருந்தாலும், அவற்றைப் பிடிப்பதற்கும் போட்டிதான்.
ஷீலா, அவள் அலுவலகத்தில் டேபிளுக்கு அடியில் ஒரு சின்ன மர ஸ்டூலை வைத்து அதன் மேல்தான் கால்களை வைத்துக்கொள்கிறாள். அந்த மர ஸ்டூல் இல்லையென்றால், நாள் முழுவதும் காலைத் தரையில் ஊன்றாமல் அந்தரத்தில் தொங்கவிட வேண்டும்.
இது யாருடைய பிரச்சினை?

வீடுகளிலும் சரி, வெளியிடங்களிலும் சரி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எத்தனைப் பொருட்கள் பெண்களுக்குத் தோதானவையாக உள்ளன? சமையலறை மேடையை மேஸ்திரி தன் உயரத்துக்குக் கட்டிவிடுகிறார். வீட்டில் கண்ணாடி மாட்டுவது, ஷெல்ப் மாட்டுவது போன்ற வேலைகள் ஆண்களுக்கு உரித்தானதாகக் கருதப்படுகின்றன. அவர்கள் தங்கள் உயரக் கணக்குப்படி ஆணியை அடித்துவிடுகிறார்கள். ரயில்களில் இருக்கக்கூடிய முகம் பார்க்கும் கண்ணாடியைப் பெரும்பாலான பெண்களால் பார்க்க முடிவதில்லை.
கேட்டால் பெண்களது உயரக் குறைவு அவர்களது பிரச்சினை என்கிறார்கள். சராசரி இந்தியப் பெண்ணின் உயரம் 5 அடி. நாற்காலியின் உயரத்தை, ரயிலில் மாட்டப்படும் கண்ணாடியின் உயரத்தை, பேருந்தில் வார்ப்பட்டையின் தொங்கும் நீளத்தை நிர்ணயிக்கும்போது பெண்களின் உயரத்தை ஏன் யாரும் கணக்கில் எடுப்பதில்லை?
காரணம் இவ்வளவு காலம் ஆன பிறகும் பெண்கள் பொதுவெளியில், வீட்டுக்கு அப்பாலும் இயங்குவதைச் சமூகம் கணக்கில் எடுக்கவில்லை. கணக்கில் எடுக்கவில்லையா, அங்கீகரிக்க மறுக்கிறதா?
குழந்தைகள் மேல் உள்ள பரிவோ மார்கெட்டிங் அணுகுமுறையோ தெரியாது. இன்றைக்குக் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் நாற்காலி, கை கழுவும் இடம் இவற்றைப் பல ஓட்டல்களில் காணமுடிகிறது.
பொது இடங்கள் மட்டுமல்லாமல், வீட்டிலும்கூடப் பிரச்சினை தெரிகிறது. வீடு கட்டும்போது கவனமாக இருக்கும் மேஸ்திரி அந்த வீட்டுப் பெண்மணியின் உயரத்துக்கு ஏற்ற வகையில் மேடை அமைக்கிறார்.
உயரம் எப்படிப் பிரச்சினையோ அதேபோல் குனிந்து பொருட்களை எடுப்பதும் பல பெண்களுக்குப் பிரச்சினைதான். மாதவிடாய், குழந்தைப்பேறு போன்றவற்றை எதிர்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானோர் முதுகு வலி தொந்தரவால் அவதிப்படுகிறார்கள். முதுகை வளைத்துப் பொருட்களை எடுப்பது வலியை இன்னும் தீவிரப்படுத்தும்.
உயரத்தில் இருந்தாலும் பிரச்சினை, குனிந்து எடுப்பதும் பிரச்சினை; என்னதான் செய்யச் சொல்கிறீர்கள் என்கிறீர்களா? சிந்தியுங்கள், தீர்வு வரும்.
பெண்ணுக்கு எதிரான தொழில்நுட்பம்

நாற்காலி, கண்ணாடியின் உயரம் மட்டுமல்ல பிரச்சினை. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் பெண்களுக்கு ஆதரவாக இல்லை.
மாத்திரைகள், காப்பர்-டி, நார்பிளான்ட், அறுவைசிகிச்சை முறை எனப் பல்வேறு கருத்தடை வழிமுறைகள் பெண்களுக்கு உள்ளன. ஆனால், ஆண்களுக்கு ஆணுறையும் கருத்தடை அறுவைசிகிச்சையும் மட்டும்தான்.
பெண்களுக்கென்று விதவிதமான கருத்தடை முறைகளைக் கண்டுபிடிக்கும் அறிவியல் அறிவு, ஆண்களுக்கு இன்னமும் சில முறைகளைக் கண்டுபிடிக்க ஏன் பயன்படுவதில்லை?
கலாச்சாரம் பெண்களை வீட்டுக்குள் இருப்பவர்களாக மட்டுமே பார்ப்பதுபோல், அறிவியலும் குழந்தையைப் பெற்றெடுப்பதும் பெறாமல் தவிர்ப்பதும் பெண்களின் வேலையாக மட்டுமே பார்க்கிறது.
பாகுபாட்டு அணுகுமுறை

இதேபோல் தொழில்நுட்ப சாதனங்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி சிறு வயதிலிருந்தே உருவாக்கப்படுகிறது. ஆண் குழந்தை கார் பொம்மையை உடைத்தாலோ விளையாட்டுப் பொருட்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டாலோ அவன் பின்னாளில் பெரிய இன்ஜினீயராக வருவான் என்று சொல்வார்கள்.
ஒரு பெண் குழந்தை பொம்மையை உடைத்தால் எதையும் ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாது என்பார்கள்.
செயல்பாடுகளிலும் இதே பாணிதான் தொடர்கிறது. டிராக்டர் ஓட்டுவதற்கு உடல் பலம் தேவையில்லை. ஆனால், நாற்று நட, கதிர் அறுக்க, கதிர் அடிக்க பெண்களைப் பயன்படுத்தும் சமூகம், ஆண்களால்தான் டிராக்டர் ஓட்ட முடியும் என நினைக்கிறது. கட்டிட வேலையில் சாரத்தில் ஏறுவது போன்ற கடினமான வேலைகளைச் செய்யும் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தால் மேஸ்திரி வேலையைச் செய்ய முடியாதா என்ன?
உண்மையில் தொழில்நுட்பத்தில் பிரச்சினை இல்லை. பெண்களுக்கு அது ஏற்றதல்ல என்ற மனோபாவத்தில்மட்டுமே அது இருக்கிறது. இதைச் சுலபமாகக் களைந்துவிட முடியும்.
நாம் என்ன செய்யலாம்?
வீடுகளில் தொடங்கிப் பொது இடங்கள்வரை பெண்கள் புழங்கும் இடங்களில் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை வடிவமைக்க வேண்டும். உயரத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். கீழே குனிந்து எடுக்கப்பட வேண்டியது குறித்தும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பஸ்களிலும் மின்சார ரயில்களிலும் தொங்கும் வார்ப்பட்டைகள் பெண்கள் பயன்படுத்தும்படியான எண்ணிக்கையிலும் உயரத்திலும் இருக்க வேண்டும்.
வீடுகளில் பெண்கள் அதிகம் புழங்கும் பொருட்களையும் இடங்களையும் பெண்களின் உயரத்துக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#9
சுத்தம் எது? அசுத்தம் எது?னக்கு முதன்முதலாக மாதவிடாய் வந்தபோது அதிகப்படியான ரத்தத்தைப் பார்த்து அழுதேன். என்னைத் தனியறையில் உட்காரவைத்தார்கள். அனைவரிடமும் சகஜமாகப் பேசவும் விளையாடவும் முடியவில்லை. எனக்கு மனச் சோர்வாக இருந்தது.

இரவில்தான் எனக்கு மாதவிடாய் வந்தது. குளிக்க வைத்தார்கள். தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது. மாதவிடாய் நாட்களில் எல்லா நாட்களும் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளித்துவிட்டு, ஈரம் காயாமலேயே பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. தலைவலி வருகிறது.
அத்தை, கீரை விதையைப் பாலில் கலந்து கொடுத்தார்கள். பாட்டி தினமும் காலை ஒரு டம்ளர் நல்லெண்ணெய் கொடுத்தார். ஒரு முட்டையை பச்சையாகக் குடிக்கச் சொன்னார்.
என் மாமா எனக்கு மாலை போட்டார். எல்லோரையும் கூப்பிட்டு பிரியாணி செய்து கொடுத்தார்கள். தாய் மாமன் வீட்டுச் சீர் கொண்டு வந்தார். புடவை கட்டி தலை நிறைய பூ வைத்ததும் எல்லாரும் என்னை வந்து பார்த்ததும் கூச்சமாக இருந்தது. வெளியே போக முடியவில்லை. தனியாக இருப்பதுபோல இருந்தது.
- முதல் மாதவிடாய் ஏற்பட்ட நேரத்தில் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு பள்ளி மாணவிகளிடமிருந்து கிடைத்த பதில்கள் இவை.
தீட்டு, மாதவிலக்கு போன்ற வார்த்தைகளே வேண்டாத விஷயம் நடந்துவிட்ட உணர்வைத் தருகின்றன. மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதற்கு அடையாளம். பெண்ணின் வளர்ச்சிப் படி நிலைகளில் இதுவும் ஒன்று.
ஆனால், ஒரு பெண் பருவம் எய்துவதை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது?மாதவிடாய் நாட்களில் பெண் தீண்டத்தகாதவள், சுத்தம் இல்லாதவள், பெண் தொட்டால் பால் திரிந்து போகும், உணவு கெட்டுப்போய்விடும், தனியே உட்கார வேண்டும், சாமி கும்பிடக் கூடாது என்றெல்லாம் தடைகள்.
மாதவிடாய் பற்றிய இத்தகைய தவறான கருத்துகளால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய உடல்ரீதியான சில அசெளகரியங்களை மனது பெரிதுபடுத்திப் பார்க்கும். அந்த நாட்களில் வெளிப்படுகிற ரத்தம், அசுத்தமானது என்றே பெரும்பாலானோர் நம்புகின்றனர்.

அருவருப்பு தேவையில்லை

கருப்பையின் உட்சுவரில் இளநீரின் உட்புறத்தில் வழுக்கை உள்ளதுபோல் உள்வரிச் சவ்வு பதிந்திருக்கும். இந்த உள்வரிச் சவ்வு நுண்ணிய ரத்த நாளங்களைக் கொண்டது. ஹார்மோன் சுரப்பால் சினை முட்டை முதிர்வடைவதுபோல் இந்த உள்வரிச் சவ்வும் உப்பித் தடிக்கும். சினை முட்டை ஆணின் விந்தணுவுடன் சேர்ந்து கரு உருவானால், அந்த கருவைத் தாங்கி வளர்வதற்காக உள்வரிச் சவ்வு படுக்கைபோல் தயாராக இருக்கும்.
கரு உருவாகாத பொழுது, கருத்தரிப்புக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலைந்துபோகும். இப்படி கலைகிறபோது, ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கும். இந்த ரத்தமும் கலைந்த உள்வரிச் சவ்வின் பகுதிகளும் சிதைந்த சினைமுட்டையும் கருப்பை வாய் வழியே வெளியேறும். இதுவே மாதவிடாய்.
குழந்தை உருவாகி இருந்தால் கருப்பையில் உள்ள உள்வரிச் சவ்வு படுக்கையில்தான் பொதிந்து வளர்ந்திருக்கும். அப்படியென்றால், அது சுத்தமான ரத்தத்தால் ஆனதா, அசுத்தமான ரத்தத்தால் ஆனதா?
அசுத்தமானது என்பதற்கும் வேண்டாத, பயன்படாத ரத்தம் என்பதற்குமான வித்தியாசத்தைச் சரியாகச் சொல்லவில்லையென்றால் அருவருப்புதான் மிஞ்சும்.
விழிப்புணர்வு தேவை

நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கழிப்பறை இல்லாததுதான் இளம் பெண்களின் பெரிய பிரச்சினை. பள்ளியிலிருந்து பெண்கள் பாதியில் விலகுவதற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
கழிப்பறையின் தேவை மாதவிலக்கை ஒட்டியது மட்டுமல்ல. அதுவரை சிறுமியாக இருந்தவர்கள், திடீரென ஒரே நாளில் பெரிய மனுஷியாக உணரவைக்கப்படுகிறார்கள். சிறுநீர் கழிக்க, முன்புபோல் ரோடு ஓரத்தில் உட்கார முடிவதில்லை. சிறுநீர் கழிக்க வசதி இல்லாததால், அந்த உணர்வையே அடக்க முயல்கிறார்கள். தண்ணீர் குடித்தால், சிறுநீர் கழிக்கத் தோன்றும் என்று தண்ணீரே குடிக்காமல் இருந்துவிடுகிறார்கள்.
இதனால், சிறுநீர்த்தடத் தொற்று, மலச்சிக்கல், மாதவிடாய் காலத்தில் அரிப்பு போன்ற சுகாதாரக்கேடுகள் வருகின்றன. இயற்கை உபாதைகளை வெளியேற்ற முடியாதது அவர்களுக்கு மனஉளைச்சலைத் தருகிறது.
மாதவிடாய் பற்றிய வேண்டாத அருவருப்பு உணர்ச்சியைத் தோற்றுவிக்கிற சமூகம், மாதவிடாய் தொடர்பான சுய சுத்தம் பற்றி இளம்பெண்களுக்குச் சொல்லித் தருவதில்லை.
மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்களை வாங்க முடியாததற்கு பொருளாதார வசதி ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், வெள்ளையாக்கும் அழகுசாதனப் பொருளை எப்படி வாங்க முடிகிறது? பெண்களின் இத்தகைய கோளாறுகளுக்குச் சமூக மதிப்பீடுதான் காரணம். பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைவிட, அழகாக இருக்க வேண்டும் என்றுதான் சமூகம் எதிர்பார்க்கிறது.

ஆரோக்கியமே அவசியம்

மாதவிடாய் காலங்களில் சுத்தமான துணி அல்லது நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். ரத்தப்போக்கும் வியர்வையும் அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் நான்கு முறையாவது துணியை/நாப்கினை மாற்றுவது நல்லது. ஒரே துணியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய அரிப்பு, எரிச்சல் போன்றவற்றைத் துணியைப் போதிய இடைவெளியில் மாற்றுவதால் தவிர்க்கலாம்.
மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் துணிகளை மாதவிடாய் நாட்களிலும் மாதவிடாய் முடிந்த பிறகும் சோப்பு போட்டு நன்றாக அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும். காய வைத்த துணிகளை மடித்து, துணிப்பையில் பத்திரமாக வைக்க வேண்டும். துணிப்பைக்குள் வேப்பிலைகளைப் போட்டு வைக்கலாம். வேப்பிலை கிருமிநாசினி என்பதால் பூச்சி வராது.
மாதவிடாய் நாட்களில் உடல் அதிக அளவு நீரைத் தக்கவைத்துக்கொள்கிறது. உப்புக்கு நீரை உறிஞ்சும் தன்மை உண்டு. எனவே நாம் பயன்படுத்தும் உப்பின் அளவைக் குறைப்பது நல்லது. இதனால் உடலில் அதிக அளவு நீர் சேராது.
சிறிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உடல் இறுக்கத்தை அகற்றவும் தலைவலியைக் குறைக்கவும் மலச்சிக்கலை அகற்றவும் உதவுகிறது. அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஜீரணத்துக்கு வழிசெய்கிறது. மலச்சிக்கலைத் தவிர்க்க இளம் சூடான தண்ணீரைக் குடிக்கலாம். கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அடிவயிற்றில் ஏற்படும் வேதனையைக் குறைக்க கீழ்க்கண்ட பயிற்சிகள் உதவலாம்.
வெந்நீரில் குளித்தல், சூடான நீராகாரம் பருகுதல், வெந்நீரில் கால்களை நனைத்து வைத்திருத்தல், வெந்நீர் நிரப்பிய பையை/பாட்டிலை அடி வயிற்றில் வைத்திருத்தல், நடப்பது, முழந்தாள் மடிய குனிந்து கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு இளைப்பாறுதல், படுத்துக்கொண்டு கால் மூட்டுகளை உயர்த்திச் சிறு வட்டமாக மூட்டுகளை அசைத்தல், வழக்கமாகச் செய்கிற வேலைகளைத் தடையின்றிச் செய்தல் போன்றவற்றைச் செய்வதால் அடிவயிற்று வலியைக் குறைக்கலாம்.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#10
தொட்டால் சொல்லணும்


ஓவியம்: அ. செல்வம்
ரா
தா எட்டாம் வகுப்பு படிக்கிறாள். கடந்த இரண்டு மாதங்களாகக் கணக்குப் பாடத்துக்காக அவளுடைய அப்பாவின் நண்பரிடம் டியூஷன் செல்கிறாள். அவளால் முன்பைவிடக் கணக்கை நன்றாகப் போட முடிகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக டியூஷன் மாமா அவளை அதிகமாகத் தொட்டுத் தொட்டுப் பேசுவதுபோல் தோன்றுகிறது. டியூஷன் போக வேண்டாமோ என்று தோன்றுகிறது. ஆனால், கணக்குப் பாடத்தில் நல்ல மார்க் வாங்குவதற்காக டியூஷன் போக வேண்டும் என்றும் தோன்றுகிறது. டியூஷன் மாமா தொடாமல் பேசினால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. யாரிடம் இது பற்றிப் பேசுவதெனத் தெரியவில்லை.

அப்பாவின் நண்பர் என்பதால், தான் சொல்வதை வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் வந்தது. நேரடியாக டியூஷன் மாமாவிடம் இது பற்றிப் பேச முடியுமா என்றும் தெரியவில்லை.
- உங்கள் குழந்தைக்கு இப்படியொரு சங்கடம் நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?
பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் அறிமுகமானவர்களிடமிருந்துதான் வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எதிர்பாராத தருணத்தில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரக்கூடிய பாலியல் சீண்டல்கள் மோசம் என்றால், தெரிந்தவர்களிடமிருந்தே வரும் அப்படியொரு செய்கை, இளையோருக்கு மனிதர்கள் மேல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்களா என்பதை எப்படிக் கண்டறிவது?
1. யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருக்கக்கூடும்.
2. ஒரு குறிப்பிட்ட நபரைப் பார்க்கும்போது பதற்றப்படக்கூடும்; பயப்படக்கூடும்.
3. சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இருக்கலாம்.
4. எதிலும் ஆர்வமில்லாமல் இருக்கக்
கூடும்.
5. குற்றவுணர்வுடன் தலை குனிந்தபடி தவறுசெய்துவிட்ட முகபாவனையுடன் இருக்கக்கூடும்.
6. உடலை முழுவதும் மறைக்கும்படியோ சில நேரம் ஓர் ஆடைக்கு மேல் இன்னோர் ஆடைகூட அணியக்கூடும்.
தொடுதலும் உணர்வும்

குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே எது நல்ல தொடுதல், எது தவறான தொடுதல் என்று அறிய கற்றுக்கொடுக்க வேண்டும்.
உடலின் ஒவ்வொரு பகுதியையும் யாரோ தொடும்பொழுது தொடுதலையும் தொடும் நபரையும் பொறுத்து நம் உணர்வு மாறும். எந்த உறவாக இருந்தாலும் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கக்கூடிய தொடுதல்தான் நல்ல தொடுதல்; நமக்குப் பயத்தையும் பதற்றத்தையும் கொடுக்கக்கூடிய தொடுதல் மோசமான தொடுதல் என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
நல்ல தொடுதல்

நமக்குப் பிரியமானவர்களும் நம்மிடம் அன்பாக இருப்பவர்களும் தலையை லேசாகத் தடவிக்கொடுத்தாலோ முதுகில் தட்டினாலோ கைகளைக் கோத்துக்கொண்டாலோ தோளோடு அணைத்துக் கொண்டாலோ மிகவும் உற்சாகமாக இருக்கும். தொடுகிறவர், தொடப்படுகிறவர் இருவருக்கும் ஆரோக்கியமான மகிழ்ச்சியைக் கொடுப்பது நல்ல தொடுதல்.
மோசமான தொடுதல்

யாராக இருந்தாலும் நம்மை, நாம் விரும்பாத இடத்தில் குறிப்பாக பாலுறுப்புகளைத் (மார்பு், பிறப்புறுப்பு) தொடுவதும் நம் கைகளைப் பிடித்து அவரது உடலின் மேல் வைக்கச் சொல்வதும் மோசமான தொடுதல். தான் தொட்டதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லித் தொடுவதும் மோசமான தொடுதல்.
குழந்தைகள் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது இதுதான் என்று சொல்லுங்கள். ஒருவரது தொடுதல், மோசமான தொடுதல் என்றால் அதற்காகக் குழந்தைகள் வெட்கித் தலைகுனிய வேண்டியதில்லை என்று சொல்லுங்கள். தவறு குழந்தைகளுடையதல்ல. அவர்களைவிட வயது, அதிகாரம், உறவு முறை போன்றவற்றால் பெரியவர்கள் அவர்களுக்குப் பிடிக்காத விதத்தில், பிடிக்காத இடத்தில் தொட்டால் அதை மறுக்கும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு என்று சொல்லுங்கள்.
நல்ல தொடுதல், மோசமான தொடுதல் ஆகியவற்றில் பாலியல்ரீதியான இச்சைகளும் கலந்திருக்கும்பொழுது அந்தத் தொடுதல் ஒருவேளை அவர்களுக்குத் தற்காலிக பரவசத்தைத் தரலாம். ஆனால், நிம்மதியைத் தராது. நிறைய கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் எழுப்பும். ஆகவே, எவ்வளவு நெருக்கமானவரிடமிருந்து வந்தாலும் நல்ல தொடுதல், மோசமான தொடுதலை அடையாளம் கண்டுகொள் என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள்.
ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல், “அவனை/அவளைப் பார்க்காதே, பேசாதே, வெளியே போகாதே” என்று ஒரேயடியாகக் கட்டுப்பாடு விதிக்கவும் கூடாது. கண்டுகொள்ளாமல் விடவும் கூடாது.

என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது தவறாகத் தோன்றினால் ‘முடியாது’, ‘கூடாது’ என்று சொல்லச் சொல்லி குழந்தைகளைப் பழக்குங்கள். அந்த நபரிடம் அவர் தன்னைத் தொடுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லச் சொல்லுங்கள். இப்படிச் சொல்லும்பொழுது, அவர்கள் உடல் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும். கூனிக்குறுகாமல் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.
வார்த்தைகள் தங்கு தடையில்லாமல் உறுதியாக, பயமில்லாமல் வர வேண்டும்.
அந்த நபருடன் தனியாக இருக்க நேரும் தருணங்களைத் தவிர்த்துவிடச் சொல்லுங்கள்.
உரக்கக் கூச்சல் போடவோ உதவிக்கு பிறரை அழைக்கவோ வேண்டும் என்று சொல்லுங்கள். எதிர்பாராத தருணத்தில் தொடுபவரிடமிருந்து வேகமாக விலகிடச் சொல்லுங்கள்.
மற்றவர்களுக்கு தெரிய நேருமோ என்ற கூச்சம் வேண்டாம் என்பதையும் சொல்லுங்கள். “ஏனென்றால் அத்து மீறியது நீ அல்ல, அவர்தான். உன் உடல் மீதான உரிமை உனக்குத்தான். உன்னை நீயே நம்பு” என்றெல்லாம் சொல்லுங்கள்.
பொருத்தமற்ற விதத்தில் யாராவது தொட்டால், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையைக் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.
தவறான தொடுதலை உணர்ந்தறிவதோடு நிற்காமல், அப்படி நம்மைச் சீண்டுபவரிடம் நம் எதிர்ப்பை உணர்த்தவும் தெரிய வேண்டும். தனியாகப் போகும்பொழுது யாராவது பின்தொடர்ந்தால் பயந்து ஒதுங்கிப்போகாமல் துணிவுடன் நடக்க வேண்டும். பின்னால் திரும்பி உரத்த குரலில், “நீங்கள் யார், ஏன் என்னைப் பின்தொடர்கிறீர்கள்?” என்று கேட்கும் துணிவு குழந்தைகளுக்கு வேண்டும். தனியாகப் போகும் போது தற்காப்புக்குக் கையில் மிளகாய்த் தூள், பெப்பர் ஸ்பிரே போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லலாம் என்றெல்லாம் கற்றுக்கொடுங்கள்.
அறிமுகம் இல்லாதவர் யாராக இருந்தாலும் உங்களை அவர்கள் தொடும் முறை பிடிக்கவில்லை என்றால் அதை உறுதியான வார்த்தைகளாலும் உடல் பலத்தாலும் சொல்லிவிட வேண்டும். பயந்து அழுவதும் கூனிக் குறுகி நிற்பதும் எந்தவிதத்திலும் பிரச்சினையைத் தீர்க்காது என்பதைச் சொல்லிக்கொடுங்கள்.
எல்லா நேரங்களிலும் நாம் குழந்தைகளோடு இருக்க முடியாது. எனவே, அறிமுகமானவர் - நெருங்கிய உறவினர் அத்துமீறி நடந்தால் அவர்களுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடச் சொல்லுங்கள். குழந்தைகள் தனியாக இருக்க நேரிடும் நேரம் பற்றிய தகவல்களை யாரோடும் பகிர வேண்டாம் என்று சொல்லுங்கள்.
(தேடல் தொடரும்)
 
Thread starter Similar threads Forum Replies Date
selvipandiyan Movies 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.