‘மா’: கற்பிதம் அல்ல பெருமிதம்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#11
ஏன் அழகாக இருக்க வேண்டும்?
பிறந்தநாளுக்கு நர்மதா போட்டுக்கொண்டிருந்த பட்டியலைப் பார்த்து அம்மாவுக்குப் பயமாக இருந்தது. தீபாவளிக்குக்கூட மற்றவர்களுக்கும் வாங்க வேண்டும் என்று சொல்லி சமாளிக்கலாம். பிறந்தநாளுக்கு அதையும் சொல்ல முடியாது. போன தடவை மாதிரி இரண்டு நாள் சரியாகச் சாப்பிடாமல் அழுவாள்.
வளையல், டிரஸ், தோடு வாங்குவதுகூட பிரச்சினை இல்லை. ஹை ஹீல்ஸ் வாங்கித் தருவதில் அம்மாவுக்கு உடன்பாடில்லை. ஆனால், ஹீல்ஸ் பற்றித்தான் நர்மதா அதிக ஆர்வத்துடன் இருக்கிறாள்.

எல்லாம் அவங்க அப்பா செய்த வம்பு. அவள் போன வருஷம் கேட்டபொழுது உனக்கு இப்ப 17 வயசுதானே, அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்குக் கண்டிப்பாக வாங்கித் தரேன் என்று சொல்லிவிட்டார். அதையே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்டாள்.
ஹை ஹீல்ஸ் நல்லதா?

நர்மதா அப்படியொன்றும் குள்ளம் இல்லை. 5 அடி 4 அங்குலம். ஆனாலும் ஏன் ஹீல்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள் என்பது புரியவில்லை.
அம்மாவுக்கு அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது ஹீல்ஸ் போட ஆசை இருந்ததுதான். அவள் உயரம் 5 அடிகூட கிடையாது. ஆனால், ஹீல்ஸ் வாங்கித்தர முடியாது என்று அப்பா கறாராகச் சொல்லிவிட்டார். முதலில் அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் போட்ட அவளுடைய தோழிகள் பின்னாளில் இடுப்புவலி, முதுகுவலி, கணுக்கால் வலி என்றெல்லாம் சிரமப்பட்டபோது அப்பா சொன்னது சரியென்றுபட்டது. எப்படிச் சொல்லி நர்மதாவுக்குப் புரியவைப்பது?
பெண்கள் ஏன் ஹீல்ஸ் அணிய விரும்புகிறார்கள்? உயரத்தைக் கூட்டிக்காட்ட என்றால் ஏன் உயரமான பெண்களும்கூட ஹீல்ஸ் அணிய விரும்புகிறார்கள்? இதற்குப் பின்னால் உள்ள உளவியலை எல்லாப் பெண்களும் புரிந்துகொண்டு, ஹீல்ஸ் அணிகிறார்கள் என்று சொல்ல முடியாது.
உளவியல் சொல்வது என்ன?

சிலர் எனக்குப் பிடித்திருக்கிறது, போட்டுக்கொள்கிறேன் என்கிறார்கள். என் தோழிகள் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள், நான் போடக் கூடாதா என்கிறார்கள் சிலர். ஹை ஹீல்ஸ் போடுவதுதான் தற்போதைய ஃபேஷன், நான் ஏன் போடக் கூடாது என்கிறார்கள் ச இன்னும் சிலர்.
ஹை ஹீல்ஸ் அணிவதற்குப் பின்னால் உள்ள உளவியல், உயரத்தை அதிகப்படுத்தி காண்பிப்பது மட்டுமல்ல என்று சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது. இங்கிலாந்தில் உள்ள Portsmouth பல்கலைக்கழகத்தில் உளவியல் தத்துவப் பேராசிரியர் பால் மோரிஸ், அவருடைய குழுவுடன் இரண்டு ஆராய்ச்சிகளை நடத்தினார்.
ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பது ஒரு பெண்ணுக்கு வசீகரத்தையும் பெண்மைத் தன்மையையும் அதிகரிக்கிறதா என்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது இதுதான்:
பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது வசீகரமாக உள்ளதா அல்லது வெறும் தட்டை செருப்பு அணிந்து நடக்கும்போது வசீகரமாக உள்ளதா என்று ஆண்களிடமும் பெண்களிடமும் கேட்டிருக்கிறார்கள்.
வசீகரத்தை விரும்பும் பெண் மனம்

ஹை ஹீல்ஸ் போட்டபடியும் தட்டையான காலணிகளை அணிந்தும் பெண்கள் நடப்பதை ஒளி வட்ட உருவங்களாகக் காட்டியிருந்தார்கள்.
ஹை ஹீல்ஸ் அணிந்தபோது இடுப்பின் அசைவுகள் இடதுபுறமும் வலதுபுறமும் ஊஞ்சலாடுவதும் சிறு சிறு அடிகளாக நடப்பதும் பெண்களின் வசீகரத்தைக் கூட்டுவதாகப் பதில் சொன்னவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டாவது பரிசோதனையில் நடப்பவர் ஆணா, பெண்ணா என்று கேட்டிருக்கிறார்கள். நடந்தவர்கள் அனைவருமே பெண்கள்தான். ஆனால், தட்டைச் செருப்பு அணிந்து நடந்தவர்கள் ஆண்களாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
காரணம் என்ன? ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது பெண்களின் நடை அதிகப்படியான பெண்மைத் தன்மையோடு இருக்கிறதாம். அதேபோல் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது கால்களை வேகமாக வீசி நடக்காமல் சின்னச் சின்ன அடிகளாக நடக்கவேண்டி உள்ளதாம். இதற்குக் காரணம் இடுப்பின் அசைவும் சுழற்சியும்தாம்.
எனக்குப் பிடித்திருக்கிறது, நான் ஹை ஹீல்ஸ் அணிகிறேன் என்று சொல்பவர்களின் மனத்தில் அவர்களே அறியாமல் பதிந்திருக்கும் உளவியல் இதுதான்.
அகற்ற வேண்டிய அறியாமை

வரவேற்பறைக்கு டி.வி. வந்தபின் பல ஃபேஷன் சேனல்களை எல்லோரும் பார்க்கிறார்கள். அழகிப் போட்டிகளைப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் ஆண்கள் ரசித்துப் பார்ப்பதையும் பார்க்கிறார்கள்.
பெண்களுக்கு அவர்கள் அறியாமல் உள்ளத்தில் பதிவது இதுதான்: ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது அவர்களின் நடை, பாவனை மேலும் வசீகரமாகிறது. இடுப்பின் அசைவுகளையும் நளினத்தையும் கவர்ச்சியையும் அது கூட்டுகிறது. ஆனால், இதைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஒருவேளை நேரடியாக உணர்வுபூர்வமாக அப்படி யோசிக்காமல்கூட இருக்கலாம். “எனக்குப் பிடித்திருக்கிறது. நான் அணிகிறேன். அதில் என்ன தவறு? பார்ப்பவர்கள் அதைக் கவர்ச்சியாகப் பார்த்தால் அது அவர்கள் பார்வையில் உள்ள கோளாறு” என்கிறார்கள்.
ஆனால், கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த அழகு மாயை (Beauty Myth) என்ற புத்தகத்தில் ஆசிரியர் நவோமி வுல்ப் (Naomi Wolf) இதை வேறுவிதமாக அணுகுகிறார்.
பின்னிழுக்கும் அழகு ஆர்வம்

பாட்டிமார்கள் புழங்காத இடங்களில் நாம் புழங்குகிறோம், படிக்கிறோம், வேலை பார்க்கிறோம். ஆனால், கலாச்சாரம் எப்படிப் பல வரையறைகளை விதித்து நம்மை ஒடுக்குகிறதோ அப்படி அழகு பற்றிய மாயையும் நம்மை ஒடுக்குகிறது. கலாச்சாரம்கூட வெளி அழுத்தம்தான். அழகு மாயை நம்மை நாம் அறியாமலேயே உள்ளுக்குள் அழுத்தி மேலே வர விடாமல் தடுக்கும் ச(க்)தியாக உள்ளது.
நாம்தான் அழகு மாயையில் சிக்கி பாட்டிமார்களைவிட அதிகச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தத் தலைமுறைதான் ரத்த சோகையால் அவதியுறுகிறது. அழகு சாதனப்பொருட்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. உடல் உறுப்புக்களை அழகாக்கிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். ஒல்லியாக இருக்கப் பெண்கள் ஓயாமல் பாடுபடுகிறரகள்.
அழகாகத் தோற்றமளிக்க நினைப்பதில் என்ன தவறு என்று கேட்கலாம். தவறில்லை. ஆனால், இது நம்மை ஒடுக்குகிறது. பெண்களின் ஆளுமையும் திறன்களும் அவர்களை வானத்துக்குக் கொண்டுசென்றாலும் அழகு பற்றிய மாயைப் பின்னுக்கு இழுத்து இரண்டாம் இடத்திலேயே நிற்கவைக்கிறது. நாம் அறியாமலேயே நம் மேல் விரிக்கப்பட்ட வலை இது.
என் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? ‘ஸோ வாட்’ என்று உள்ளுக்குள்ளும் வெளியேயும் கேள்வி கேட்க ஆரம்பிப்போம். அழகு என்பது பெருமிதமல்ல; கற்பிதம் என்பதை உணர்வோம்.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#12
இனிஷியலில்கூடப் பெண்ணுக்கு இடமில்லையா?


ஓவியம்: அ.செல்வம்
நந்தினி டீச்சர் 9-ம் வகுப்புக்குப் புதிதாக வந்தவர். வருகைப் பதிவேட்டிலிருந்து பெயர்களை அழைத்துக்கொண்டிருந்தார். கீதா என்றவுடன் இரண்டு கீதாக்களும் பிரசென்ட் டீச்சர் என்றார்கள். நந்தினி டீச்சர் இனிஷியலைப் பார்த்தார். இருவருமே ஆர்.கீதாவாக இருந்தார்கள்.
முந்தைய வகுப்புகளில் டீச்சர்கள் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாண்டார்கள் எனக் கேட்டார். 9-ம் வகுப்பில்தான் இரண்டு கீதாக்களும் ஒரே வகுப்பில் இருக்கிறார்கள் என்றார்கள். இருவருடைய அப்பா பெயர்களைக் கேட்டார் டீச்சர். ஒருவர் பெயர் ரங்கநாதன். இன்னொருவர் பெயர் ராமநாதன்.

அப்பாடா ஒரு பிரச்சினை தீர்ந்தது. யாராவது ஒருவரை அப்பாவின் பெயரோடு இணைத்து அழைக்கலாம் என்றார் டீச்சர்.
அந்தத் தீர்வு எல்லோருக்கும் சரியாகப்பட்டாலும் ராணிக்கு ஒரு கேள்வி எழுந்தது.
ஏன் டீச்சர், அப்பா பெயரை மட்டும் இனிஷியலாகப் போடறாங்க, அம்மா பெயரை ஏன் போடறதில்லை?
டீச்சர், சிலருக்கு இனிஷியலில் ஊர் பெயர்கூட இருக்கு என்றாள் கலா.
ஊர் பேர்கூட இருக்கு, ஆனா அம்மா பேர் இல்லியே டீச்சர் என்றாள் ராணி.
நந்தினி டீச்சருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
நிர்ப்பந்தமா, விருப்பமா?

ராணியின் கேள்விக்குப் பலரும் பழக்கம் அல்லது கலாச்சாரம் என்பதைப் பதிலாகச் சொல்லலாம். திருமணத்துக்கு முன் அப்பாவின் பெயரையும் திருமணத்துக்குப் பிறகு கணவனின் பெயரையும் இனிஷியலாகவோ பெயரின் பின்னால் முழுப் பெயராகவோ போட வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் இங்கு பெண்களுக்கு இருக்கிறது. சில நேரம் பெண்களே விரும்பியும் தங்கள் கணவன் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்கிறார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது, அதுவொரு அடையாளம்தானே என்று பலரும் நினைக்கக்கூடும். ஏன் இந்த அடையாளம்? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?
ஒரு பெண், காலங்காலமாக ஆணால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்ற தந்தைவழிச் சமூகத்தின் மறைமுகத் திணிப்பு இது. பிறந்தவுடன் அப்பாவின் பெயரை இனிஷியலாகப் போடுவதிலிருந்து இது ஆரம்பிக்கிறது. கல்யாணமானவுடன் தந்தை மூலம் வந்த இனிஷியலை மாற்றி, கணவன் பெயர் மனைவிக்கு இனிஷியல் ஆக்கப்படுகிறது. அல்லது பெண்ணின் பெயரின் பின்னால் முழுப் பெயராகப் போடப்படுகிறது.
பெயர் சொல்லாப் பெருமிதம்?

ஆனால், இன்றைக்கும் கிராமப்புறங்களில் வேறு வழக்கம் இருக்கிறது. கிராமப்புறப் பெண்களிடம் அவர்களுடைய கணவன் பெயரைக் கேட்டால் பலரும் நேரடியாகப் பெயரைச் சொல்ல மாட்டார்கள். திருப்பதி சாமி பெயரென்றும் (ஏழுமலை) மரத்துக்காய் பெயரென்றும் (முருகேசன்) சொல்வார்கள். கணவன் பெயரை மனைவி சொல்வது மரியாதை ஆகாதாம். மேலும், அப்படிச் சொன்னால் கணவனின் ஆயுள் குறைந்துவிடும் என்கிறார்கள்.
நகரத்துப் பெண்களிடம் அவர்களது பெயரைக் கேட்டால் மிஸஸ் கபிலன், மிஸஸ் சுரேஷ் என்று சொல்கிறார்கள். வேறு சிலர் கணவன் பெயரையும் உடன் சேர்ந்துக்கொண்டு திருமதி மல்லிகா பண்டரிநாதன், திருமதி செல்வி சுகுமாறன் என்றெல்லாம் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் கணவனின் பெயரால் மனைவி அறியப்படுவதுதான் பெண்ணுக்குப் பெருமை தரும் விஷயம் என்கிறார்கள்.
ஆக, இதில் எது நமது கலாச்சாரம்? கணவன் பெயரைச் சொல்லாமலே இருப்பதா இல்லை கணவனின் பெயர் முன் திருமதி என்று போட்டுக்கொள்வதா?
கிராமப்புறப் பெண்களின் இந்தப் பெயர் சொல்லா இயல்பு, காரண காரியங்கள் சொல்லப்படாமலேயே ஒரு மரபாகிவிட்டது. மேலைநாட்டவர்கள் போல நகர்ப்புறப் பெண்கள் கணவன் பெயர் முன் திருமதி என்று போட்டுக் கொள்வதை ஃபேஷனாகக் கருதிச் செய்கிறார்கள்.
ஆணுக்கு மட்டுமே முக்கியத்துவம்

இரு வகைப் பெண்களின் அணுகு முறையிலும் முரண்பாடுகள் இருப்பதாக மேலெழுந்த வாரியாகப்பட்டாலும், ஊன்றிப் பார்த்தால் இந்த இரு வகைப் போக்குகளும் ஒரே உணர்வைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆண் பிரதானமானவன், பெண் அவனைச் சார்ந்தவள் என்ற மதிப்பீட்டைத்தான் இது பிரதிபலிக்கிறது.
தந்தை பெயரை இனிஷியலாகப் போடுவதற்குச் சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.
குழந்தையைத் தாய் பெற்றெடுப்பதால் அந்தக் குழந்தைக்கு அவள்தான் தாய் என்பது யாரும் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தக் குழந்தையின் தந்தை யார் என்பது தாய்க்கு மட்டும்தான் தெரியும். ஒரு குழந்தை சரியான முறையில்/உறவில் பிறந்த குழந்தை என்பதற்கு அத்தாட்சியாகத்தான் தந்தையின் பெயர் இனிஷியல் ஆகிறது என்கிறார்கள்.
ஆக, எல்லாத் தாய்மார்களுடைய ‘கற்பு’ நிர்ணயிக்கப்படுவது அவரவர் குழந்தைகளின் இனிஷியல் மூலம்தானா? ஒவ்வொரு பெண்ணும் தாயாக, ஒவ்வொரு குழந்தையும் மனிதனாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் இது.
தந்தையின் பெயரை இனிஷியலாகப் போடுவதற்கு இன்னொரு நொண்டிச் சமாதானமும் சொல்லப்படுகிறது. ஒரே பெயரில் பலர் இருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்க இனிஷியல் பயன்படுகிறது என்கிறார்கள். இது பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கும் செயல் மட்டுமே என்று சொல்கிறவர்கள் ஏன் திருமணமானவுடன் தந்தை பெயரை விட்டுக் கணவன் பெயரை இனிஷியல் ஆக்கிக்கொள்ள வேண்டும்?
எது சமத்துவம்?

ஏன் ஆண்களின் பெயர்களால் மட்டுமே பெண்கள் அறியப்பட வேண்டும்? வலியைப் பொறுத்துக்கொண்டு குழந்தையைப் பெற்றெடுப்பவள் பெண். ஆனால் இனிஷியலில்கூட அவளுக்கு உரிமையில்லை. சமத்துவம் சமத்துவம் என்கிறோம். எல்லாம் வாயளவில்தானா? ஏன் அது செயல்பாடுகளில் பிரதிபலிப்பதில்லை?
அப்பா, அம்மா இருவரது பெயரின் முதலெழுத்தையும் எடுத்துக்கொண்டு ஏன் இரட்டை இனிஷியல் வைத்துக்கொள்ளக் கூடாது? இனிஷியலில் ஊர் பெயரைக்கூட சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அம்மாவின் பெயரைச் சேர்த்துக்கொள்வதைப் பற்றி யோசிக்கக்கூட மறுக்கிறோம்.
பெண்கள் ஒருவருக்கு மகளாக, மனைவியாக, தாயாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமேயல்ல அவர்கள். அவர்களும் தனி மனிதர்கள்தாம். அவர்களுக்கும் உணர்வும் தனித்துவமும் உண்டு. அவர்களுக்கான சமூக அந்தஸ்தும் தரப்படுவதுதான் உண்மையான சமத்துவம்.
இளம் பெற்றோரே, உங்கள் குழந்தையின் பெயரைப் பதிவுசெய்யும் முன் இருவரது பெயரையும் கட்டாயமாக இனிஷியலாக்க வேண்டும் என்று முடிவெடுங்கள்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#13
சும்மா இருக்கிறார்களா இல்லத்தரசிகள்?


நா
ள் முழுவதும் தம் உழைப்பைப் போட்டு வீடுகளைப் பராமரிக்கும் குடும்பத்தினருக்கான வேலைகளைச் செய்யும் பெண்களை நாம் என்ன சொல்கிறோம்? யோசியுங்கள். யோசனைக்கு இடையே இந்தத் தொலைபேசி உரையாடலுக்கும் செவி கொடுங்கள்.

“வணக்கம். யார் பேசறது?”
“நான் மதுரையிலிருந்து மகேஷ் பேசறேன்”
“சொல்லுங்க, இன்னைக்குத் தந்தையர் தினம். உங்களுக்கு எத்தனை குழந்தைங்க, என்ன பண்றாங்க?”
“ரெண்டு பேர். பொண்ணு எல்.கே.ஜி. பையன் நாலாவது.”
“உங்க மனைவி என்ன பண்றாங்க?”
“வீட்ல சும்மாதான் இருக்காங்க.”
வீட்லதானே இருக்கே, கரண்ட் பில் கட்டிடு.
வீட்லதானே இருக்கே, பேங்குக்குப் போயிட்டு வா.
வீட்லதானே இருக்கே, ரேஷனுக்கு, கடைக்கு, குழந்தைங்க ஸ்கூலுக்கு இப்படி எதுக்கும் என்னை ஏன் எதிர்பார்க்கிறே? நீயே பார்த்துக்கோ.
வீட்லதானே இருக்கே, நம்ம குடும்பம் சார்பா உறவுக்காரங்க வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு வந்துடு.
இவை மட்டுமல்ல; கூட்டுக் குடும்பமாக இருந்தால் மாமனார், மாமியார், பிற உடன்பிறப்புகளின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
‘சும்மா’ செய்யும் வேலைகள்?

நாம் ஏன் வெளி வேலைக்குப் போய் சம்பாதிக்காத பெண்களை, ‘சும்மா இருப்பவர்’களாகக் கருதுகிறோம்? அவர்கள் வீட்டில் பார்க்கக்கூடிய வேலைகளை மதிப்பிடுவோமா?
1. சமையல் வேலை - நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மூன்று வேளையும் சமைத்து, விசேஷ நாட்களில் விசேஷ சமையல் செய்து, லீவு நாட்களில் தடல்புடலாகச் சமைத்து என வேலை செய்யும் ஒருவருக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டியிருக்கும்? குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய்.
2. சிறு குழந்தைகளைப் பராமரிக்க, பள்ளி செல்லும் குழந்தைகளைக் கவனிக்க - குறைந்தபட்சம் 4 ஆயிரம் ரூபாய்.
3. துணிகளைத் துவைக்க (வாஷிங் மிஷினாக இருந்தாலும் அது ஒரு பொறுப்புதானே), துணிகளை மடித்து அவரவருக்குரிய இடத்தில் வைக்க, அயர்ன் செய்ய (அல்லது வெளியே கொடுத்து வாங்கி வைக்க), மாதமிரு முறையாவது பெட்ஷீட், தலையணை உறைகளை மாற்ற, துவைக்க, மடிக்க - குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய்.
4. வெளியே கடைகளுக்குப் போய் வர, கரண்ட் பில் கட்ட, ரேஷன் கடை, குழந்தைகளின் பள்ளிக்குப் போய் வர - குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்.
5. மாமனார், மாமியாருக்கு வேண்டியவற்றைச் செய்ய, மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போக – குறைந்தது 3 ஆயிரம் ரூபாய்.
6. வீட்டைக் கூட்டி, துடைத்து, ஒட்டடை அடித்து சுத்தமாக வைத்திருத்தல் (அப்படியே அந்த வேலைக்கு ஆள் இருந்தாலும் அவர்களை மேற்பார்வை பார்த்தல்) - குறைந்தது 1,500 ரூபாய்.
7. வீட்டில் உள்ளவர்கள் ஆங்காங்கே போடும் பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து, தேவைப்படுபவற்றை வாங்கி வைத்தல் - குறைந்தது ஆயிரம் ரூபாய்.
மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் ரூ.18,500.
அன்பின் அடிப்படையில் செய்யக்கூடிய வேலைக்குக் கணக்கு பார்க்கலாமா என்று கேட்கலாம். அப்படியென்றால் ஏன் என் மனைவி/மருமகள் வீட்டில் சும்மாதானே இருக்கிறாள் என்ற வார்த்தை வருகிறது?
பெரியவர்களிடமிருந்து குழந்தைகளும் அதையே கற்றுக்கொள்கிறார்கள்
“ஓ.. உங்க அம்மா வேலைக்குப் போறாங்களா?”
“இல்லையே, எங்க அம்மா வீட்ல சும்மாதான் இருக்காங்க.”
வீட்டு வேலை, வேலையில்லையா?
வீடு என்ற அமைப்பைக் கட்டமைக்கவும் பராமரிக்கவும் நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், இந்த உழைப்பு வீடுகளிலும் வெளியேயும் அங்கீகரிக்கப்படுகிறதா?
பெண்கள் செய்யும் பல்வேறுவிதமான வேலைகளுக்குக் குடும்ப அளவிலும் அங்கீகாரம் இல்லை; சமூக அளவிலும் இல்லை.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இவர்கள் வேலை பார்க்காதவர்கள் (Non Workers) என்று அறியப்படுகிறார்கள். மக்கள்தொகைக் கணக்குப்படி ஒரு நபர் செய்யும் வேலையில் எந்த வேலைக்கு ஊதியம், வருமானம், பணவரவு, சம்பளம், கூலி, வெகுமானம் போன்றவற்றில் ஏதாவதொன்று கிடைக்கிறதோ, அதுவே வேலையாகக் கருதப்படும்.
புறக்கணிக்கப்படும் பெண்ணுழைப்பு

வீட்டு வேலை, வேலையாகக் கருதப்படாததால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பெண்களின் இந்த உழைப்பு கணக்கில் கொள்ளப்படவில்லை.
GDP என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த செயல்திறனைத் தீர்மானிக்க உதவுகிறது. பிற நாடுகளுடனும் ஒப்பீடு செய்யப்படுகிறது. இந்தியா தரவரிசையில் உலக அளவில் 7-வது இடத்தில் இருந்தாலும் மொத்த மக்கள்தொகையின் அடிப்படையில் தனிநபர் கணக்கீடாகப் பார்த்தால் இந்தியா 139-வது இடத்தில் இருக்கிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது நிலம் இருக்கும் விவசாயியிடம் குடும்ப விவரம் கேட்டிருக்கிறார்கள். மனைவி என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு, வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.
சில கேள்விகளுக்குப் பிறகு அவர்கள், நிலத்தில் உழைப்பது யார் எனக் கேட்டிருக்கிறார்கள். என் மனைவி என்றிருக்கிறார். உங்கள் மனைவி வேலை பார்க்கவில்லையே என்று கேட்டதற்கு, “என் மனைவி என் நிலத்தில் வேலை செய்வதை எப்படி வேலையாகப் பார்க்க முடியும்?” என்று கேட்டிருக்கிறார். இதுதான் இடிக்கிறது. வருத்தத்தைத் தருகிறது.
பெண் உழைப்பைக் கணக்கிலெடுப்போம்

கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத உழைப்பு கண்ணுக்குத் தெரியாமலேயே போகிறது.
வீட்டுப் பெண்கள் இந்த வேலையைச் செய்யாமல், வேறு ஆட்களை வைத்துச் செய்தால் காசு தர வேண்டும் அல்லவா?
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் கிட்டத்தட்ட ரூ10,000 முதல் 20,000 வரை வீட்டு வேலைக்காகச் செலவிட வேண்டியிருக்கும்.
வெளி வேலை பார்த்துச் சம்பாதிக்கும் ஆண், குடும்பத்துக்காக உழைத்து ஓடாகப் போவதாகச் சமூகம் சொல்கிறது. ஆனால், வீட்டைப் பராமரிக்கும் பெண்ணின் உழைப்பை கடமை, பாசம், அன்பு என்று சொல்லி வசதியாக மறைத்துவிடுகிறோம். வெளி வேலை பார்க்கும் ஆண்களுக்கு வாரந்திர, வருடாந்திர விடுமுறைகள் உண்டு. பெண்களின் வீட்டு வேலைக்கு விடுமுறையே கிடையாது. அதுவும் வீட்டில் உள்ளவர்களுக்கு விடுமுறை வந்துவிட்டால் பெண்கள்பாடுதான் திண்டாட்டம். வித விதமாகச் சமைக்க வேண்டும்.
ஆண், பெண் இருவரின் கூட்டுப் பிணைப்பில் உருவா வதுதான் இல்லறம். ஒருவரின் உழைப்பை உயர்த்திப்பிடித்தும் மற்றவரின் உழைப்பை அங்கீகரிக்காமலும் இருப்பது என்ன நியாயம்?
பெண்கள் ‘House wife’ இல்லை. ‘Home Maker’. வார்த்தைகளை வெறுமனே மாற்றிச் சொல்வதால் வேலையில் மாற்றம் வராமல் போகலாம். ஆனால், அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடும். மொழி என்பது மனத்தின் எண்ணம். கண்ணுக்குத் தெரியாத பெண்களின் உழைப்பையும் கணக்கிலெடுப்போம்!
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#14
இது பருவத்தின் கோளாறா?ள்ளிக்குச் செல்லும் வழியில் கல்லூரி மாணவன் ஒருவன் தன்னைச் சில நாட்களாகப் பின்தொடர்ந்து வருவதை ரேவதி கவனித்தாள். அவனைத் திரும்பிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால், அவன் அதைக் கவனித்துவிடுவானோ என்று பதற்றமாகவும் இருந்தது.

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அவன் ஒரு வாழ்த்து அட்டையை அவளிடம் கொடுத்தான். கைகள் தீண்டியபொழுது கிடைத்த ஸ்பரிசம் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. கூடவே யாராவது பார்த்துவிடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது.
பிறந்த நாளன்று புது டிரெஸ் அணிந்து அத்தை வீட்டுக்கு இனிப்பு கொடுக்கப் போனாள் ஸ்வேதா. அத்தை, மாமாவிடம் கொடுத்துவிட்டு சந்துருவைத் தேடினாள். அவன் அறைக்குள் இருப்பதாக அத்தை சொன்னார். கதவுக்குப் பின்னால் மறைந்து இருந்தவன் அவள் உள்ளே நுழைந்தவுடன் ‘பே’ என்று பயமுறுத்தினான். அவள் பயந்துவிட்டாள் என்று தெரிந்தவுடன், ‘சும்மா’ என்று சொல்லிவிட்டு, இனிப்பை எடுத்துச் சாப்பிட்டான். இன்னொரு இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடப் போனான். அவள் பின்னால் போவதைப் பார்த்து சட்டென்று அருகே வந்து கன்னத்தில் முத்தமிட்டு, “அம்மா டிபன் ரெடியா?” என்று கேட்டபடியே போனான். ஸ்வேதாவுக்கு அதிர்ச்சியோடு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தடைபோடும் பெற்றோர்

நம் கலாச்சார மதிப்பீடு, பெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைப் பேசுவதுபோல், அவர்களுக்குள் எழக்கூடிய பாலியல் இச்சைகளைப் பற்றிப் பேசுவதில்லை.
வளரிளம் பருவத்தில் ஹார்மோன்கள் உடல்ரீதியான வளர்ச்சியை மட்டும் தூண்டுவதில்லை. மனரீதியாகவும் பலவிதமான உணர்வுகளைத் தூண்டுகின்றன. அதிலும் குறிப்பாகப் பாலியல்ரீதியான உணர்வுகள். டி.வி.யில் ஒளிபரப்பாகும் படங்களும் பாலியல் உணர்வைத் தூண்டுகின்றன. நண்பர்களும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பது பற்றி, காதல் வயப்படுவது பற்றி எல்லாம் கதை கதையாகப் பேசி ஆவலைத் தூண்டிவிடுகின்றனர். இந்த மும்முனைத் தாக்குதல்களில் இளையவர்கள் சிக்கித் தவிக்கும்போது பெரியவர்களோ, “பார்க்காதே, பேசாதே, பழகாதே” எனத் தடை போடுகிறார்கள்.
நம் வளரிளம் பருவத்தினர் மிகவும் பாவம். பாலியல் ஆசைகள் ஒரு பக்கம் இருக்க, பயமும் பதற்றமும் குற்ற உணர்வும் அவர்களை எப்போதும் குழப்பமான மனநிலையிலேயே வைத்திருக்கிறது.
ஈர்ப்பு இயற்கையானது

பெரியவர்கள் சுலபமாக இதை ‘வயசுக் கோளாறு’ என்று சொல்லிவிடுகிறார்கள். கோளாறு என்ற கண்ணோட்டத்தில் பார்த்துவிடுவதால் பெரியவர்கள் இதைக் குழந்தைகளிடம் இருக்கும் குறையாகப் பார்க்கிறார்கள். திட்டித் திட்டி அவர்களைக் குற்ற உணர்விலும் ஆழ்த்துகிறார்கள்.
ஒருபுறம் இளமையின் வேகம், மறுபுறம் பாலியல் குறித்த சமூக மதிப்பீடுகளால் ஏற்படும் குற்றவுணர்வு. எழக்கூடிய சந்தேகங்களைப் பெரியவர்களிடம் கேட்க தயக்கம், பயம். அப்படியே மீறி கேட்டாலும் பெரியவர்களின் பதில்கள் திருப்தியாகவும் ஆதரவாகவும் இருப்பதில்லை. பெரியவர்கள் எரிச்சல்படுகிறார்கள், கோபப்படுகிறார்கள். “உனக்குச் சின்ன வயசு. இதையெல்லாம் யோசிப்பதும் பேசுவதும் தவற” என்கிறார்கள். வளரிளம் பருவத்தினரின் மொத்த நடத்தையையே சந்தேகப்படுகிறார்கள்.
பெரியவர்களும் இதையெல்லாம் கடந்துவந்தவர்கள்தானே. நமக்கும் நம் ‘டீன் ஏஜ்’ பருவத்தில் இத்தகைய உணர்வுகள் வந்ததில்லையா?
எதிர்ப் பாலினர் மீதும் சில நேரம் தன் பாலினர் மேலும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனம்விட்டுப் பேசுவோம்

டீன் ஏஜ் குழந்தைகளின் இத்தகைய பாலியல் உணர்வுகள் இயற்கையானவை என்பதைப் புரிந்துகொண்டால், இந்தச் சிக்கலான தருணத்தில் பாதையைக் கடக்க அவர்களுக்கு உதவ முடியும். அவர்கள் கைப்பிடித்து நடப்போம்.
டீன் ஏஜ் வயதில் இரண்டுவிதமான பாலியல் அனுபவங்கள் கிடைக்கலாம். முதலாவது நமக்குள் தோன்றும் பாலியல் ரீதியான இச்சை. இரண்டாவது நம் ஆசை காரணமாக பிறர் மேல் நாம் செலுத்தும் வன்முறை.
வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, பரிதாபத்துக்குரியவராக ஆகும்பொழுது சமூகம் நம் மேல் இரக்கப்படும். கருணை காட்டும். ஆனால், இச்சையை வெளிப்படுத்தினால் தூற்றும். சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் என்று ஏசும்.
பார்க்கத் தோன்றும் ஆனால், பார்க்கக் கூடாது. பேசத் தோன்றும் ஆனால், பேசக் கூடாது. நினைக்கத் தோன்றும் ஆனால், நினைக்கக் கூடாது. இவை எப்படிச் சாத்தியம்?
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. இது எதிர்பாராது வரும் விபத்தல்ல. நமக்குத் தெரிந்தே வரும் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.
யார் என்ன செய்யலாம்?
பெரியவர்களுக்கு:


உங்கள் குழந்தைகளுக்கு உடற்கூறு குறித்து சொல்லிக்கொடுங்கள். உடலைச் சுத்தமாக வைக்கக் கற்றுத்தருவதோடு உடல் வளர்ச்சியில் வரக்கூடிய மன உணர்வுகளைப் பற்றியும் பேசுங்கள்.
‘பாலியல்ரீதியான ஈர்ப்பு இயற்கை. ஆனால், அதற்கான வயது இதுவல்ல. அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான பருவமிது. காதல், பாலியல் நாட்டம் இவையெல்லாம் பரவசத்தைக் கொடுத்தாலும் இந்தப் பரவசம் தற்காலிகமானது. இதற்கு ஆட்பட்டுவிட்டால், படிக்கத் தோன்றாது. திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தோன்றாது. பாலியல் இச்சை என்பது முதன்மையாகும்போது நாம் நம் இச்சையை யார் மீதாவது, பாலியல்ரீதியான துன்புறுத்தலாகச் செலுத்தவும்கூடும். பாலியல்ரீதியாக மற்றவரைத் துன்புறுத்த நேரும்பொழுது, குற்ற உணர்வு வரலாம். கையும் களவுமாகப் பிடிபட்டு, தண்டனைக் உள்ளாகப்படலாம். இளமையே தொலைந்து போகக்கூடும்’ என்று அவர்களிடம் பொறுமையாகச் சொல்லுங்கள்.
இளையவருக்கு:

பார்க்கத் தோன்றுகிறதா, பார்த்துவிட்டு அழித்துவிடு. மண்டைக்குள் சுமக்காதே. பேசத் தோன்றுகிறதா? கனிவாக, கம்பீரமாக உரையாடு. அதை போதை ஆக்கிக் கொள்ளாதே. வாழ்வில் இதற்கான நேரம் வரும்.
பாலியல் இச்சையை நிறைவேற்றிக்கொள்வதற்கான வயதல்ல இது. இன்னும் பக்குவப்பட வேண்டும். உன்னை அறிந்து, உனக்குப் பிடித்தது பிடிக்காதது பற்றி எல்லாம் தெளிவு வந்த பிறகு, துணையைத் தேர்தெடுக்கலாம். அதுவரை சின்னதாக ஆசைப்பட்டு, அந்த உணர்வை உணர்ந்து, கடந்து போகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாலியல் இச்சையும் அதற்கு வயப்படுதலும் மட்டுமல்ல வாழ்க்கை. முன்னேற்றத்துக்கான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதை அடைவதற்கான வழிமுறைகளைத் தீர்மானிக்க வேண்டும். தடைக் கற்களாக உள்ள நம் சிந்தனைப் பள்ளங்களில் போய் சிக்காமல், இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும்.
சொல்வது எளிது, செய்து பார்த்தால்தானே தெரியும் எனத் தோன்றும். ஆனால், இன்றைக்கு இளம் வயதிலேயே அயராது பாடுபட்டு, தமக்கென ஓரிடத்தைப் பிடித்திருக்கும் பலரும் சவால்களை எதிர்கொண்டுதான் சாதித்திருப்பார்கள்.
வறுமை, ஏழ்மை, வாய்ப்பின்மை இவற்றை எல்லாம்விடப் பெரிய சவால் நம் உணர்வுகளை நம் கட்டுக்குள் வைத்திருப்பது. வண்ணமயமான வாழ்க்கை அமைய நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் கையாளத் தெரிய வேண்டும். இலக்கு ஒன்றே தீர்வு!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#15
ஆணென்ன? பெண்ணென்ன?
சுமதி பிரசவத்துக்கு உள்ளூரிலேயே இருந்த அம்மா வீட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். தாராவுக்கும் அம்மாகவுடன் போக ஆசையாக இருந்தது. ‘ஸ்கூலுக்கு மூணு மாசம் போகாம இருக்கக் கூடாது; அதனால் அப்பா கூடவே இரு’ என்று அம்மா சொல்லிவிட்டாள். தாராவுக்கு அழுகையாக வந்தது. அம்மா சனி, ஞாயிறு விடுமுறையில் வந்து பார்க்கச் சொன்னாள்.
ஆனால், புறப்பட்டபோது அம்மா ஏன் அழுதுகொண்டே போகிறாள் என்று தாராவுக்குப் புரியவில்லை.

இந்தத் தடவையாவது ஆம்புளப் புள்ளையா பெத்துக்குடுன்னு எல்லாரும் சொல்லறாங்க. பிறக்கறது பொம்பளப் புள்ளையா இருந்துவிட்டால் என்ன ஆகும்னு யோசிக்க யோசிக்க சுமதிக்குப் பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது.
குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்க சுமதி என்ன செய்ய முடியும்? இது விஞ்ஞானம் தெரியாத சுமதி மாதிரியான குடும்பங்களின் பிரச்சினை மட்டும் அல்ல. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் சொன்னாங்க, அவங்க கூட படிச்ச டாக்டருக்கு நான்கு குழந்தைகளாம். மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு நான்காவது ஆண் குழந்தையாம். நல்லவங்களுக்குதான் ஆம்புளப் புள்ள பொறக்கும்னு அவங்க மாமியார் சொன்னாங்களாம். தான் நல்லவதான்னு நிரூபிக்க அப்படிச் செஞ்சாங்களாம்.
அறிவியல் சொல்லும் சேதி

ஏன் பெண் குழந்தையைப் பெற்றால் தாயை மட்டுமே குறைசொல்கிறோம்? ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பது எதனால்?
நம் உடம்பில் ஏராளமான செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. இதில் முதல் 22 ஜோடி குரோமோசோம்களும் ஆணின் உடம்பிலும் பெண்ணின் உடம்பிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். 23-வது ஜோடிதான் பால் குரோமேசோம்கள் (sex chromosome). இது ஆணோட செல்லிலும் பெண்ணோட செல்லிலும் ஒரே மாதிரி இருக்காது. ஆணோட உடம்புல x, y எனவும் பெண்ணோட உடம்புல x, x எனவும் இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். இதனால் பெண்ணோட கருமுட்டையில x, x குரோமோசோம்களும் ஆணோட விந்தணுவில் x,y குரோமோசோம்களும் இருக்கும்.
கருவுறுதல் நேரத்தில் பெண்ணோட x குரோமோசோமுடன் ஆணோட x குரோமோசோம் சேர்ந்தால் பெண் குழந்தை உருவாகும். பெண்ணோட x குரோமோசோமுடன் ஆணோட y குரோமோசோம் சேர்ந்தால் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும்.
இதுதான் அறிவியல் உண்மை. பள்ளியில் படித்த அனைவருக்கும் இது தெரிந்திருக்கும். ஆனால், பெண் குழந்தை பிறந்தால் அதற்குப் பெண்களையே திட்டுகிறார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்க ஆண்கள்தாம் காரணம்.
ஆனால், எந்த ஆணும் தேர்ந்தெடுத்து x, y எனத் தருவதில்லை. இதெல்லாம் உடம்புக்குள்ள நடக்கிற விந்தைகள். இனிமே பெண் குழந்தை பிறந்தால் அம்மாவைக் குறைசொல்வதைத் தடுக்க இந்த விஞ்ஞான உண்மையை உரக்கச் சொல்லலாம்.
தாக்குப்பிடிக்கும் பெண்கள்

குழந்தை என்பது ஆண், பெண் இருவரின் கூட்டுப் பிணைப்பில் வருவது. திருமணம் செய்ய ஆணுக்குப் பெண் தேவை. ஆனால் அந்தப் பிணைப்பில் உருவாகும் குழந்தை பெண்ணாக இருக்கக் கூடாது. இது இப்படியே தொடர்ந்தால் பெண்களின் எண்ணிக்கை குறையாதா?
பொதுவாக உலகம் முழுவதும் பெண்களைவிட அதிக அளவில் ஆண் குழந்தைகளே கருவில் உருவாகின்றன. ஆனால், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைவிடத் தாக்குப்பிடித்து உயிர்வாழும் சக்தியும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறைவு. இதனால் பெண் குழந்தைகளைவிட அதிக ஆண் குழந்தைகள் கருவிலேயே கலைந்துபோகின்றன.
குறையும் எண்ணிக்கை

ஐ.நா. சபையின் அறிக்கையின்படி (2015), உலகளாவிய அளவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் 101.70. அதாவது 100 பெண்களுக்கு ஈடாக 101.70 ஆண்கள் இருக்கிறார்கள்.
ஐ. நா. சபை கணக்கீடு செய்த 201 நாடுகளில் 124 நாடுகளில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பெண்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார கணக்கில் இந்தியா 192-வது இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவில் ஆண் -பெண் விகிதாச்சாரத்தில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவைவிட 9 நாடுகளில் மட்டுமே குறைவு.
1901-ல் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தார்கள். இந்த விகிதாச்சாரம் குறைந்துகொண்டே வந்து 1991 மக்கள்தொகை கணக்குப்படி 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் எனக் குறைந்துவிட்டது. 2001 கணக்கெடுப்பில் இந்த விகிதாச்சாரம் கொஞ்சம் கூடி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்றானது. 2011 கணக்குப்படி இன்னமும் கொஞ்சம் கூடி 1000-க்கு 940 என்றாகி உள்ளது. பெண்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் வந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்படலாம் என்றால், 0-6 வயது வரையுள்ள ஆண் - பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் 1991-ல் 1000-க்கு 945 ஆக இருந்தது. 2001-ல் 1000க்கு 927 ஆகக் குறைந்தது. 2011-ல் 1000க்கு 914 ஆகக் குறைந்து விட்டது.
காரணம் என்ன?

பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுகிறார்கள். பிறந்த பிறகு கள்ளிப்பால் கொடுத்துச் சாகடிக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் தப்பிப் பிழைக்கும் பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பங்கீட்டிலும் மருத்துவப் பராமரிப்பிலும் இரண்டாம்தர அந்தஸ்து தரப்படுகிறது. கருவில் இருந்து தொடங்கும் இந்தப் பாகுபாடு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
ஒரு நாட்டின் மேம்பாடு, அதன் மனித வளம் சார்ந்தது. பெண் இனத்தை மட்டப்படுத்தி வாழவிடாமல் செய்யும் எந்தச் சமூகமும் முன்னேறவே முடியாது.
ஆணும் பெண்ணும் சமம் என்ற முழக்கம் மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகளைத் தெரிந்துகொண்டு எதிர்ப்பதே தன்மானத்தின் ஆரம்பம்.
1. குழந்தை ஆணா பெண்ணா என்பதைத் தீர்மானிப்பவர் தாய் அல்ல.
2. குழந்தை ஆணா பெண்ணா என்று கருவிலேயே பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றம். இதைச் செய்துவரும் மருத்துவமனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.
பெண் கருக்கொலை
அமினோசெண்டஸிஸ் என்ற மருத்துவப் பரிசோதனை பெண் கருவுற்ற 14-16 வாரத்தில் மரபணுக் குறைபாடுகளைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. 1980-களின் இறுதியிலும் 1990-களிலும் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மருத்துவமனைகள் வெளிப்படையாகவே இந்தப் பரிசோதனையைச் செய்தன.
இன்று 500 ரூபாய் செலவழித்தால் பின்னால் வர இருக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவைத் தடுத்துவிடலாம். பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? – கருவிலேயே தெரிந்துகொள்ள வாருங்கள் - இப்படி விளம்பரங்கள் வேறு. பல்வேறு மகளிர் அமைப்புகள் போராடிய பிறகு, கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் முறைக்கு 1994-ல் தடை விதிக்கப்பட்டது.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#16
மகள் = மகன்


சு
சீலாவுக்குக் கடைக்கு வந்த பிறகு சந்தேகம் வந்துவிட்டது. பிறந்தநாள் பரிசு வாங்க வேண்டியது ஆண் குழந்தைக்கா, பெண் குழந்தைக்கா?

அவளுடைய கணவரின் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவரின் குழந்தைக்கு முதலாவது பிறந்தநாள்.
பொம்மை வாங்குவதா, ஆடை வாங்குவதா? என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படிப் பரிசு வாங்குவது?
கணவரிடம் போனில் கேட்டாள். அவருக்கும் தெரியவில்லை. இரண்டு நிமிடங்களில் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார்.
பையனாம். ஆயிரம் ரூபாய்க்குள் பரிசு வாங்கச் சொன்னான்.
அழகான பெரிய கார் பொம்மையையும் ஒரு டிராயர் - சட்டையையும் வாங்கலாம் என முடிவெடுத்தாள்.
ஆணுக்கு கார், பெண்ணுக்குப் பொம்மை?

ஆண் குழந்தை என்றால் கார் வாங்கலாம் என்று சுசீலா ஏன் நினைத்தார்? பெண் குழந்தை என்றால் மென் பொம்மைகள், சொப்புச் சாமான்கள் போன்றவற்றை வாங்கியிருக்கக்கூடும். ஆண் குழந்தை என்றால் கார் பொம்மை வைத்து விளையாடவும் பெண் குழந்தை என்றால் சொப்புச் சாமான்கள் விளையாடவும்தான் விரும்புவார்கள் என்று நாம் நினைக்கிறோம்.
குழந்தைக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பது யார்? நாம்தான். நமக்குள் காலம் காலமாகச் சுமந்து திரியும் பிம்பங்களை ஆண் - பெண் பண்பு வரையறைகளை அவர்கள் மேல் திணிப்பவர்கள் வேறு யாருமல்ல நாம்தான்.
நான் பையன், நான் பொண்ணு; எனக்கு இதுதான் விளையாடப் பிடிக்கும் என்று அந்தக் குழந்தை நம்மிடம் வந்து சொன்னதா? ஏன் நாம் இப்படியொரு வரையறுக்கப்பட்ட stereotyped என்று சொல்லக்கூடிய வார்ப்புக் கலாச்சாரத்தில் இயங்குகிறோம்?
பிறந்த குழந்தையின் பாலின உறுப்புகளின் அடிப்படையில் ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துச் சொல்கிறோம். மற்றபடி கை, கால், வாய் எல்லாம் ஒன்றுதானே. உடற்கூறு அடிப்படையில் நம் பாலினம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ஆண் - பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகளைத் தீர்மானிப்பது எது? நமது ‘கலாச்சாரம்’. அவரவர் வாழும் சமூகம் இதைத் தீர்மானிக்கிறது. இதைத்தான் சமூகப் பாலினம் (Gender) என்கிறோம்.
விளையாட்டுப் பரிசோதனை

இப்படியான வார்ப்புகள் பற்றிய கருத்தாக்கங்கள் பற்றி உலக அளவில் சில சுவாரசியமான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் பி.பி.சி. நிறுவனம் ஒரு சின்ன பரிசோதனை செய்துபார்த்தது. ஆண் குழந்தைக்குப் பெண் உடையையும் பெண் குழந்தைக்கு ஆண் உடையையும் அணிவித்து, கொஞ்சம் பொம்மைகளைப் போட்டு விளையாட விட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் பராமரிப்பாளர்கள், பெண் குழந்தையின் ஆடை அணிந்த ஆண் குழந்தைக்கு மென் பொம்மையைக் கொடுத்து விளையாட ஊக்குவித்திருக்கிறார்கள். ஆண் உடை அணிந்த பெண் குழந்தையை கார் பொம்மை மேல் ஏற்றிச் சுற்றவிட்டிருக்கிறார்கள்.
குழந்தைப் பராமரிப்பாளர்களிடம் பெண் குழந்தையாக இருந்தது ஆண் என்றும் ஆண் குழந்தையாக இருந்தது பெண் என்றும் சொல்லப்பட்டது. “ஏன் இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதமான பொம்மைகளைக் கொடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு ஒரு பெண் இப்படிச் சொல்கிறார்: “நான் எதையும் வெளிப்படையாக எந்தவித முன் தீர்மானமும் இல்லாமல் அணுகுபவள். ஆனால், எனக்குள்ளேயே இப்படியான வரையறைகள் ஆழப் பதிந்துள்ளதை இப்போது உணர்கிறேன்”.
நாம் பொதுவாகப் பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கப் பார்க்கிறோம். ஒரு பெண் தடதடவென ஓடிவந்தால், “ஆம்பள மாதிரி ஓடாதே, அடக்க ஒடுக்கமா இரு” என்கிறோம். பெண் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளை விளையாடவே ஊக்குவிக்கிறோம். ஆண் குழந்தைகள் வேகமாக ஓடியாடும் விளையாட்டுகளை விளையாடச் சொல்கிறோம். பெண்களும் இந்த விளையாட்டுகளை விளையாடினாலும்கூட பையன்கள் தெருவுக்குத் தெரு கிரிக்கெட் ஆடுவதுபோல் பெண்கள் விளையாடுவதில்லை.
விளையாட்டு வினையாகாது

இப்படி விளையாடாமல் இருப்பதால் என்ன பெரிய இழப்பு வந்து விடப்போகிறது எனத் தோன்றலாம். இழப்புதான். மூளை வளர்ச்சியின் தூண்டுதல்கள் பாதிக்கப்படுகின்றனவாம். மூளை வளர்ச்சி, அனுபவங்களின் தூண்டுதல்களால் ஏற்படுவது. தூண்டுதல் இல்லாவிட்டால் வளர்ச்சி தடைபடும்.
பெரியவர்களுக்கும் இதே தர்க்கம் பொருந்தும். ஆடி, ஓடி, நடந்து, உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருக்கும்போது மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்து, உடற்பயிற்சி செய்பவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை.
பையன்கள் கார், சைக்கிள், துப்பாக்கி என அவர்களைத் துரிதமாக இயங்கவைக்கும் பொம்மைகளோடு விளையாடுகிறார்கள். சிறுவயதில் மட்டுமல்ல, குழந்தைகள் வளர வளரவும் இதே அணுகுமுறைதான் தொடர்கிறது. பாண்டி, கும்மி, கோலாட்டம். கோ-கோ அல்லது உள்ளரங்க விளையாட்டுகளான கேரம், தாயம் போன்றவற்றை விளையாட ஆண்களை ஊக்குவிப்பதே இல்லை. பையன்கள் மரம் ஏறுகிறார்கள், ஓடுகிறார்கள், கால்பந்து, கிரிக்கெட் என உடலை நன்கு பயன்படுத்தும்படியான விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
சொல்லப்போனால் நகர்ப்புறங்களில் இருபால் குழந்தைகளுமே விளையாட்டைத் தொலைத்துவருகிறார்கள். பெற்றவர்களும் தங்கள் பார்வை வட்டத்துக்குள் குழந்தைகள் வளர்வதைத்தான் விரும்புகிறார்கள். விளையாட்டில் குழந்தைகள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் குடும்பங்கள் நம்மிடையே குறைவு.
சமத்துவம் என்பது வாய்ப்பேச்சல்ல

பொம்மை விளையாட்டு, வெறும் பொம்மை விளையாட்டல்ல. இதிலும் பாலின பேதம் வெளிப்படுகிறது. இப்படியான பேதமான உருவாக்கம், பெண்களின் ஒட்டுமொத்த ஆகிருதியை வளர விடாமல் தடுக்கிறது. அவர்கள் நளினமானவர்களாக, ஒடுங்கி இருப்பவர்களாக, பயந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் நம் வளர்ப்புதான். பெண் குழந்தைகளை ஓடியாட விடுங்கள். எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளப் பழக்குங்கள். இது பெண்களுக்கான விளையாட்டு, பெண்களுக்கான வேலை என ஒடுக்காதீர்கள். தைரியத்துடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் துணிவைக் கற்றுக்கொடுங்கள். அதை விளையாட்டுப் பொம்மையிலிருந்து தொடங்குவோம்.
பையன், கார் பொம்மையை உடைத்தால் பின்னாளில் இன்ஜினீயராக வருவான் என்றும், பெண் உடைத்தால் ஒரு பொருளை ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாது, பொறுப்பில்லை எனவும் திட்டாதீர்கள். பொறுப்புணர்வு நல்ல குணம் என்றால் ஆண்களுக்கும் அது வேண்டாமா? வாய்ப்பைப் பெண்ணுக்கு மறுத்து, ஆண்களின் ஆகிருதியையும் குலைக்காதீர்கள்.
சமத்துவம், வாய்ப்பேச்சு அல்ல. நடைமுறையில் வாய்ப்புகளைத் தருவது. தந்தால் அவர்கள் நிச்சயம் வளர்வார்கள்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#17
பகிர்ந்துகொள்ளப் பழக்குவோம்
பெற்றோரிடமோ ஆசிரியரிடமோதானே குழந்தைகளால் பேச முடியும். ஆனால், ஒரு12 வயது சிறுமிக்குத் தன் வாழ்வில் நிகழ்ந்த துயரத்தையும் வேதனையையும் பிரச்சினையையும் இவர்களிடம் ஏன் பகிர முடியாமல் போயிற்று?
வெவ்வேறு விதமான செய்திகள். எது உண்மை என்று பிறகுதான் தெரியும். ஆனால், இப்போது புரிவதெல்லாம் ஒன்றுதான். குழந்தைகள் அதிக நேரம் புழங்கக்கூடிய இடங்கள் இரண்டுதாம். வீடு, பள்ளி. இந்த இரண்டு இடங்களிலும் இருக்கக்கூடிய பெரியவர்களால், தொடர்ந்து அந்தக் குழந்தையுடன் உரையாடி, உறவாடிக் கொண்டிருப்பவர்களால், குழந்தையின் உடலில், மனத்தில், உணர்வில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாறுதல்களை அடையாளம்காண முடியவில்லையா? அல்லது அடையாளம்காணத் தெரியவில்லையா? இல்லை, அவர்கள் அதை உணரவில்லையா?


யாருக்குத் தேவை பொறுப்பு?
முதல்நாள் குற்றவாளிகளைக் குறைசொன்ன சமூகம், அடுத்துப் பெற்றோரிடம் வரும். அதிலும் குறிப்பாக, அம்மாவுக்குப் பொறுப்பில்லை என்று சாடும்.
நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்துக் குழந்தைகளுக்குச் சொல்லித்தந்தால் மட்டும் போதாது. தீய தொடுதலை எதிர்கொள்ள நேர்ந்தால் யாரிடம் போய்ச் சொல்வார்கள்; சொன்னால் ஆறுதல் கிடைக்குமா? இல்லை, “உனக்கு யாரிடம் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை” என்று திட்டு கிடைக்குமா?
குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்டவர்கள் மிரட்டியதால்தான் குழந்தை பெற்றோரிடம் சொல்லவில்லை என்கிறார்கள். குழந்தையின் அக்கா, குழந்தையின் உடம்பிலிருந்த காயங்களைப் பார்த்துவிட்டுக் கேட்டபிறகு, குழந்தை தனக்கு நடந்த கொடுமையைச் சொன்னதாகச் செய்தி வந்திருக்கிறது. அக்காவிடம் பகிரலாம் என்று வந்த நம்பிக்கை ஏன் பெற்றோரிடம், ஆசிரியர்களிடம் பகிரலாம் என்று வரவில்லை?
12 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பிரச்சினையின் தகவல்களை விவரிப்பதோ விவாதிப்பதோ நமது நோக்கமல்ல. இதற்குப் பின்னால் இருக்கும் சூழல் என்ன? ஏன் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் தொடர் உரையாடல் இருப்பதில்லை?
அன்பால் அரவணைப்போம்
காலையில் எழுந்ததிலிருந்து தூங்கப்போகும்வரை, பல் தேய், குளி, ஸ்கூலுக்குக் கிளம்பு, மாலை வீடு திரும்பியவுடன் மீண்டும் படி, டியூஷன் போ, டி.வி. பார்க்காதே என இப்படியான கட்டளைகளைத்தான் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இடுகின்றனர். ஆனால், இதே விஷயங்களைச் செல்லமாகக் கொஞ்சி, கண்களுக்கு நேராகப் பார்த்து, சில நேரம் அருகில் நின்று அணைத்து, ஆறுதல்படுத்திச் சொல்லலாம். பள்ளியில், வெளியில் என்ன நடந்தது என்று ஆதரவாகக் கேட்கலாம்.
இப்படியெல்லாம் செய்திருந்தால் குழந்தை உண்மையை உடைத்துச் சொல்லியிருக்காதா? என்னதான் யாராவது மிரட்டி இருந்தாலும் ஏழு மாதங்களாகக் குழந்தையால் தனக்கு நேர்ந்த துயரத்தை, கொடுமையைச் சொல்லாமல் எப்படி இருந்திருக்க முடியும்? அப்படிக் கண்ணோடு நேருக்கு நேர் நின்று பேசுவதைக் குழந்தை தவிர்த்திருந்தாலே ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று ஊகித்திருக்க முடியாதா? இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல; எல்லாக் குடும்பங்களிலும் இதுதானே நிகழ வேண்டும்?
விளையாடி, சைக்கிள் ஓட்டி முட்டியைப் பெயர்த்துக்கொண்டாயா, கை, கால் நகங்களை வெட்டினாயா, தலையைச் சரியாகச் சீவினாயா, தலைக்கு எண்ணெய் வைத்தாயா, தலையைச் சரிவரத் துவட்டினாயா? – இப்படிக் குழந்தைகளோடு பேசவும் அருகில் இருக்கவும் பல தருணங்களும் சந்தரப்பங்களும் உள்ளனவே? இது எதுவும் நிகழாவிட்டாலே கோளாறு இருக்க சாத்தியம் உண்டு.
சரியான பெற்றோராக இருக்கிறோமா?
நம் வீடுகளில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் என்ன வகையான பரிமாற்றம் நடக்கிறது? நாம் வீடு வாங்குவதுபோல், குழந்தையும் நம் அந்தஸ்தின் அடையாளமாக ஆகிவிட்டது. திருமணமாகி கொஞ்ச நாட்கள் ஆனவுடனேயே என்ன விசேஷமான செய்தி எதுவும் இல்லையா என்கிறோம். திருமணம் நடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு சமூக வற்புறுத்தல்.
ஒரு குழந்தையைப் பெற்று, நல்லபடியாக வளர்ப்பதற்குப் பெற்றோர் தயாரா? அவர்களுக்குள் திருமணம், குடும்பம், அது பற்றிய பணிப் பகிர்வுகள், பரிமாற்றங்கள் என்னென்ன என்பன போன்ற புரிதல்கள் வருவதற்குள்ளாகவே குழந்தைப்பேறு, குழந்தையை வளர்ப்பதற்கான பொறுப்புகள் வந்துவிடுகின்றன.
சரியான பெற்றோராக இருக்கிறோமா என்பது புரியாமலேயே குழந்தைகளை வளர்க்கிறார்கள். தவமாய்த் தவமிருந்து பெற்றாலும் இப்படித்தான். குடும்பங்கள் இப்படி இருக்க, பள்ளிகளும் மதிப்பெண்களைப் பெறவைக்கிற நிறுவனங்கள் மட்டுமே என ஆகிவிட்டன.
நான் படித்த காலத்தில் MI (Moral Instructions) வகுப்பு உண்டு. டீச்சர்கள் அதிகாரத்தைக் காட்ட, கட்டளைகளை விதிப்பதற்கான வகுப்பாக மட்டும் இல்லாமல் சில கேள்விகளைக் கேட்பார்கள். சில மதிப்பீடுகளைப் பகிர்வார்கள். இப்போது அந்த வகுப்புகள் வேண்டும் என்று சொன்னால், அதை நம்மால் மதரீதியாக மட்டும்தான் பார்க்க முடியும். இன்றைய சூழல் அப்படி ஆகிவிட்டது.
நம்பிக்கையை வளர்ப்போம்
எங்கள் ஆசிரியர்கள், தலைக்குக் குளிப்பதிலிருந்து நகம் வெட்டுவது, சுத்தமாக இருப்பது, உதவுவது எனப் பல விஷயங்களை விவாதித்திருக்கிறார்கள். இன்றைக்கு ஆசிரியர்களுக்கு அப்படியான நேரம் அளிக்கப்படுகிறதா? பள்ளி நிர்வாகத்துக்கு வேறுவிதமான எதிர்பார்ப்புகள்தாம் இருக்கின்றன.
குழந்தைகள் நல்ல மார்க் எடுக்க வேண்டும், வகுப்புகள் ‘டிசிப்ளினாக’ இருக்க வேண்டும். இந்த டிசிப்ளின் என்ற சொல் படும்பாடு இருக்கிறதே! பேசாதே, வாய் மேல் விரலை வை, கைகளைக் கட்டு என எல்.கே.ஜி.யில் தொடங்கும் டிசிப்ளின் எல்லா வகுப்புகளிலும் தொடர்கிறது.
குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் பேச மதிய உணவு இடைவேளை மட்டும்தான். அவர்கள் யாருடன் எதைப் பகிர்வார்கள்?
இந்தச் சம்பவத்தில் நாம் கற்க வேண்டிய மிகப் பெரிய பாடத்தில் ஒன்று பரிமாற்றம்.பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான பரிமாற்றம், வகுப்பு ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்குமான பரிமாற்றம், குழந்தைகளுக்குள்ளான பரிமாற்றம்.
எனக்கு வேறு யாரையும்விட, பெற்றோரும் ஆசிரியரும்தானே இருக்கிறார்கள் என்று குழந்தையின் மனத்தில் அவர்களைப் பற்றிய ஒரு கான்ஃபிடன்ஸ்-நெருக்கம் வர வேண்டும். நான் எதை வேண்டுமானாலும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம், எனக்கு அவர்கள் ஆறுதலைத் தருவார்கள் என்ற நம்பிக்கை வர வேண்டும். பல பிரச்சினைகளுக்குத் தீர்வு அதுதான். எனக்குத் தெரிந்த 13 வயதுப் பையன் பாலியல்ரீதியான சீண்டலை எதிர்கொண்டபோது, அதை முதலில் அவனுடைய அம்மாவிடம்தான் சொன்னான். அந்தத் தாய் அவனுக்கு அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.
சமூகத்தில் நடக்கும் தீங்குகளை நம்மால் முழுமையாக ஒழுங்குபடுத்த முடியாது. அதற்கு நம் குழந்தைகளைத் தயார் செய்யத்தான் நம்மால் முடியும். இது நல்ல பரிமாற்றத்தால் மட்டுமே சாத்தியம்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#18
பொதுவெளி பெண்ணுக்கும்தான்


மலைப்பகுதி கிராமத்தைவிட்டுப் படிப்பதற்காக நகரத்துக்கு வந்தபோது ராணிக்கு எல்லாமே புதிதாக இருந்தது. அவ்வளவு பெரிய டி.வி.யை அவள் பார்த்ததில்லை. விதவிதமான பிம்பங்கள். ஒவ்வொரு சானலிலும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பெண்கள் பலவிதமாக வந்தார்கள். அவர்களின் நடை, உடை, பேச்சு எல்லாமே ராணிக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால், எல்லாம் கொஞ்ச நாட்களில் அலுத்துவிட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது பெரிய கொடுமை. அவள் ஊரில் இருந்தபோது, எப்போதும் வெளியேதான் திரிவாள். அதுவும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு கேட்கவே வேண்டாம்.

அம்மாவுக்கு அவள் அதிகமாக வெளியே சுற்றுவதாகப்பட்டாலும், வெளிவேலைகளை ராணி முடித்து விடுவதால், இருட்டிய பிறகு மட்டும் வெளியே போகத் தடைவிதிப்பாள்.
நகரத்தில் எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது. ஸ்கூல், ஸ்கூல் விட்டால் வீடு. அதுவும் ஸ்கூலில் இருந்து கொஞ்சம் லேட் ஆனாலும் அத்தை பதறிவிடுவார்.
அம்மா வந்தார்
அரை மணி நேரமாக அம்மாவை வீட்டில் காணோம். அவர் திரும்பி வந்தவுடன் ஆளாளுக்குக் கேள்வி கேட்டார்கள்.
எங்கேம்மா போனே? மளிகைக் கடைக்கா?
இல்லை என்றாள் அம்மா.
டெய்லர் கடை?
இல்லை.
கோயில்?
இல்லை.
யார் எதைச் சொன்னாலும் அம்மா இல்லை இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்பாவுக்குக் கோபம்.
பின்னே எங்கேதான் போய்த் தொலைஞ்சே?
சும்மா வெளியே நடந்துட்டு வந்தேன்.
சும்மா எதுக்குப் போனே?
ஏன், சும்மா போயிட்டு வரக் கூடாதா? வெளியில கொஞ்சம் காலாற நடந்துட்டு வரணும்னு தோணுச்சு.
நாங்க எல்லாம் உன்னை அரை மணி நேரமா தேடிட்டு இருந்தோம்.
ஏன் போன் பண்ணி இருக்கலாமே?
நீ சொல்லிட்டுப் போயிருக்கலாமே?
சொன்னால் எங்கே போறே எதுக்குப் போறேன்னு கேள்வி வரும்.
முணுமுணுத்தபடி அப்பா போனார். பையனும் பெண்ணும் அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பது போர்தான். அம்மா பாவம் என்று பெண் நினைத்தாள்.
எந்த வயதுப் பெண்ணாக இருந்தாலும், அவள் உலகம் நான்கு சுவருக்குள் முடக்கப்படுகிறது. வெளிவேலை பார்க்கும் பெண்கள், வீடு, அலுவலகம், வீடு என்ற வட்டத்துக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கிறது.
ஏன் வெளியே செல்வதில்லை?
நம் அம்மாக்கள் காலத்தைவிட இன்று நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனாலும், ஆண்கள் சுதந்திரமாக, நினைத்த நேரத்தில் நடமாடுவதைப் போல், பெண்கள் வெளியே நடமாட முடிவதில்லை.
காலம் கெட்டுக் கிடக்கு என்று காரணம் சொல்லப்படுகிறது. இதை வேறு கோணத்தில் யோசித்துப் பார்ப்போம்.
பெரும்பாலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அதிகமான பெண்களை சாலையில் எதிர்கொள்கிற வாய்ப்பு ஆண்களுக்கு குறைவு. அதுவும் வீட்டில் இருந்து அவர்கள் ஆண்களுக்குச் சேவை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் சாலையில் நடமாடும் பெண்களை, ஆண் மனது தனக்குக் கிடைப்பவளாக, அதாவது சீண்டலுக்குரியவள் என்று நினைக்கிறது.
சுதந்திரமான உடை அணியும் பெண்ணை எப்படி எதற்கும் தயாராக இருப்பவளாக ஆண் மனது கற்பித்துப் பார்க்கிறதோ அதேபோல் சுதந்திரமானவளாக நடமாடும் பெண்களையும் நினைத்துப் பார்க்கிறது. அது அவனுடைய வளர்ப்பின் பிரச்சினை. அவன் சுதந்திரமாக நடமாடலாம். பெண் என்றால் வீட்டுக்குள் பொத்தி வளர்க்கப்பட வேண்டும் என்று நாம் பூட்டி விடுவதால் அவனுக்குப் பெண்களை வெளியிடங்களில் கண்ணியத்துடன் எதிர்கொள்ளும் பழக்கம் வரவில்லை.
ஆண்களிடம் இல்லாத கண்ணியம்
பேசுவதற்கு, பழகுவதற்கு, சீண்டிப் பார்ப்பதற்கு என இப்படித் தன்னிச்சையாக இயங்கும் பெண்கள் அவனை வசீகரிக்கிறார்கள். அவனே திருமணம் என்று வரும்போது கொஞ்சம் பாந்தமாக, அடக்க ஒடுக்கமாக பெண் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை மனோபாவம் பற்றித்தான் இங்கே விவாதம்.
ஒருவேளை குழந்தை முதல் பாட்டிவரை அனைத்து வயதுப் பெண்களும் ரோட்டில், பார்க்கில், பீச்சில், கோயில்களில் நடமாடினால் அவர்களை எதிர்கொள்வது அவனுக்குப் பழக்கமாகி, கண்ணியத்துடன் நடத்துவானோ என்னவோ.
சரி, பெண்களுக்கு இது என்ன தருகிறது? பெரும் விடுதலை உணர்வு. அடைபட்டுக் கிடப்பதிலிருந்து சுதந்திரமான சுவாசம். ஒருவேளை இப்படி வீதிகளில் சுற்றித் திரிய முடிந்தால், அது மனிதர்களின் கலாச்சாரமானால், பெண்கள் மோசமான டி.வி. சீரியல்களிலிருந்து விடுதலை பெறுவார்களோ என்னவோ?
யோசித்துப் பாருங்கள், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது?
சில பெண்களைத் தவிர பலருக்கும் வெளியே சென்று வங்கி வேலைகளைப் பார்ப்பது, கரண்ட் பில் கட்டுவது, இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் வாங்குவது போன்ற எதையும் செய்து பழக்கமில்லை. காரணம் குடும்பங்கள் இதற்கெல்லாம் பெண்களைப் பழக்குவதில்லை.
பெண்களைப் பழக்குவோம்
எனக்குத் தெரிந்த பெண், கணவர் இறந்த பிறகு அரசாங்க அலுவலகங்களுக்குப் போய் நின்று நின்று நொந்துவிட்டார். பெண்களுக்குச் சிறு வயதிலிருந்தே தைரியத்தைக் கற்றுத்தர வேண்டியுள்ளது. தைரியத்தை எப்படிக் கற்றுத் தருவது? எல்லாவற்றையும் எதிர்கொள்ள அவர்களை பழக்க வேண்டும். எத்தகைய சூழலிலும் பயப்படாமல், பதற்றப்படாமல் எதிர் நின்று சமாளிப்பது பயிற்சியில்தான் வர முடியும். அனுபவம்தான் சிறந்த பாடம். அனுபவம் சவால் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால், மோசமாக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்தால் போதும். அதற்காகப் பெண்களை இரவு 12 மணிக்குத் தனியே வெளியே அனுப்பச் சொல்லவில்லை. அது அசட்டுத் தைரியம். ஆனால், ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குப் போகப் பழக்கலாம்.
தற்காப்புக்கான சில சாதனங்களை அவர்கள் வைத்துக்கொள்ளலாம். தற்காப்புக் கலையைக் கற்றுத் தரலாம்.
இருவருக்கும் பொது
பெண் பிள்ளைகளைத் தைரியமானவர் களாக வளர்ப்பதுபோல், பையன்களைப் பொறுப்பானவர்களாக நடந்துகொள்ளப் பழக்க வேண்டும். வீடுகளில் உள்ள பெண்களை மரியாதையாக நடத்த ஆரம்பித்தால்தான் இது சாத்தியம். உனக்கு ஒண்ணும் தெரியாது, வாயை மூடு, வீட்டிலேயே அடங்கி இரு, ஊர் சுத்தாதே என்றெல்லாம் பெண்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள்தாம் வரையறை கள் எனப் புரிந்துகொள்ளும் ஆண்களாலும் பையன்களாலும் பொதுவெளிகளில் உலவும் பெண்களை ஆரோக்கியமாக, சக மனுஷியாக அணுக முடிவதில்லை.
காற்று, நிலம், நீர், நெருப்பு, வெளி என்ற பஞ்ச சக்திகளும் அனைவருக்கும் பொது. ஆனால், இவற்றை நுகர்வதிலும் அனுபவிப் பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதம் ஏன்? குடும்பங்களாக, வீதிகளில் உலவுங்கள். பெண்களே உலகம் பரந்து விரிந்தது. டி.வி.யில் உங்கள் வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். சுதந்திரக் காற்றைச் சுவாசி யுங்கள். பல்வேறு இடங்களை, மனிதர்களை எதிர்கொள்ளுங்கள். மனம் விசாலமடையும். வாழ்வின் பரிமாணங்கள் பிடிபடும்.
(தேடல் தொடரும்)
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,375
Likes
74,520
Location
Chennai
#19
ஆணுக்கு இல்லாத அடையாளம்
சுகுணா, அரசு குறைதீர்க்கும் நாளில் மனுவோடு வந்தார். விதவை பென்ஷனுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். மனுவை தாசில்தார் ஏற்க மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டி மனு கொடுத்திருந்தார்.
மனுவை ஏற்க மறுத்ததற்கு தாசில்தார் ஏதாவது காரணம் சொன்னாரா என்று சமூக நலத்துறை மேலதிகாரி அந்தப் பெண்ணிடம் விசாரித்தார்.

“என் கணவரின் இறப்புச் சான்றிதழை இணைத்துள்ளேன். நான் இறந்தவரின் சட்டபூர்வமான மனைவி என்பதற்கான சான்றிதழையும் இணைத்துள்ளேன். மறுமணம் செய்யப் போவதில்லை என்ற உறுதிமொழிப் பத்திரத்தையும் இணைத்துள்ளேன். பிரச்சினை போட்டோவால்” என்றார் அந்தப் பெண்.
பூவும் பொட்டும்
சமூக நலத்துறை அதிகாரி போட்டோவை வாங்கிப் பார்த்தார். போட்டோவில் இருந்த முகத்தையும் அந்தப் பெண்ணின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.
“ஏம்மா, இரண்டும் ஒரே முகமாகத்தானே இருக்கு. அப்புறம் ஏன் தாசில்தார் மறுத்தார்?”
“விதவை பென்ஷனுக்கு விண்ணப்பிக்கிற போட்டோவில் பொட்டு இருக்கக் கூடாதாம்; தலையில் பூ இருக்கக் கூடாதாம். பொட்டு இல்லாமல், பூ இல்லாமல் இருப்பது மாதிரி போட்டோ வேண்டுமாம். ஏன் மேடம், நான்தான் தேவைப்படுற எல்லாச் சான்றிதழ்களையும் சரியா கொடுத்திருக்கேனே. பூவும் பொட்டும் இருக்கற போட்டோவைக் கொடுத்தால் என்ன தப்பு? நான் கல்யாணத்துக்கு முன்னாடியும் பூ, பொட்டு வைச்சேன்; கல்யாணத்துக்கு அப்புறமும் வைச்சேன். இப்பவும் வைக்கிறேன். நான் எப்பவும் இருக்கற மாதிரி உள்ள போட்டோவைத்தானே தர முடியும்? பென்ஷன் வேணும்கிறதுக்காக, நான் புது வேஷம் போட முடியுமா?”
சமூக நலத்துறை அதிகாரி, கலெக்டரிடம் பேசினார். துறைச் செயலர்வரை விஷயம் சென்றது. ஒரு விஷயத்தை அமல்படுத்துவதில் உள்ள இந்த மனோபாவத்தை அரசு அலுவலர்கள் கைவிட வேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது. இது நடந்து 10, 12 வருடங்கள் இருக்கும்.
திருமணம் நடந்ததற்கான சான்றுகளையும் ஒளிப்படங்களையும் ஏஜெண்டிடம் கொடுத்தாள் கமலா. “என்னம்மா, இப்படி ஒரு போட்டோ கொடுக்கறீங்க. போட்டோல நெத்தியில பொட்டு இல்லை. சுரிதார் போட்டிருக்கீங்க. தாலியைக் காணோம். புடவை கட்டி, பொட்டு வைச்சு, தாலி வெளியிலே தெரியற மாதிரி போட்டோ எடுத்துட்டு வாங்க. இல்லைன்னா திருமணப் பதிவுச் சான்றிதழ் கிடைக்காது.” கமலா மறுநாள் அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு பூ வைத்து, பொட்டு வைத்து, சேலை கட்டி, தாலியை வெளியே தெரியும்படியாக ஒளிப்படமெடுத்து விண்ணப்பப் படிவத்தோடு இணைத்தாள்.
இரண்டாவது சம்பவம் நடந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாக. ஆணை மையப்படுத்திய அடையாளம் ஆணைத் தொடர்புபடுத்தித்தான் பெண் அறியப்பட வேண்டும் என்பது எல்லா இடங்களிலும் தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பாஸ்போர்ட் எடுப்பதற்குச் சென்றபோது, திருமணச் சான்றிதழ் கேட்டார்கள். எங்கள் வீட்டு ஆண்கள் அப்படி எதையும் சமர்ப்பிக்காத போது, பெண்கள் மட்டும் ஏன் அவர்களின் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்? இப்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மாறுதல் வந்ததாகச் சொல்கிறார்கள், தெரியவில்லை.
இதே போலத்தான் பெயர் எழுதும்பொழுது ஆணுக்கு எப்பொழுதும் Mr. தான். திருமணம் ஆனவர், ஆகாதவர் எல்லோருக்கும் Mr. என்ற ஒன்றுதான். பெண் என்றால் பெயர் எழுதுபவர்கள், தாலி இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் Miss, Mrs. இரண்டில் எதுவென நம்மிடமே கேட்பார்கள். Ms. என்று போடலாம் என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டியுள்ளது. இதே போல் தமிழிலும் ஆண்களுக்கு ‘திரு’ என்று போட்டுவிடுகிறார்கள். பெண்களுக்கு ‘செல்வி’ போடுவதா, ‘திருமதி’ போடுவதா என்று குழப்பம்.
ஆணுக்கு இல்லாத அடையாளம்
வாரிசுதாரர் சான்றிதழில் கணவனை இழந்த பெண்ணை விதவை என்கிறார்கள். மனைவியை இழந்த கணவன் நிலையைக் குறிப்பிடுகையில், மனைவியை இழந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள்.
திருமணம் ஆன பெண்களுக்கான சின்னமான தாலி, மெட்டி, தலை வகிட்டுச் செந்தூரம் இவை எல்லாம் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று எண்ணும் சமூகம், ஆணுக்கு ஏன் இந்த வரையறைகளை விதிப்பதில்லை. பழங்காலத்தில் ஆண்களுக்கு மெட்டி இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது நடைமுறையில் இல்லையே.
திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான ஒப்பந்தம். ஆனால், இந்த ஒப்பந்த விதிகள் எல்லாம் ஏன் பெண்களுக்கு மட்டுமே அடையாளங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றன?
தடுமாறும் தனிமனித அறச்சீற்றம்
பொட்டு வைத்தால் பிடிக்கும் என்ற பெண், கணவனை இழந்தால் பொட்டு வைக்கக் கூடாது என்று நினைக்கிறது சமூகம். பொட்டு வைக்கப் பிடிக்காத பெண்ணை, திருமணம் ஆனால் பொட்டு வைத்தே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பூ வைப்பதும் பொட்டு வைப்பதும் தனி மனித விருப்பம். ஆனால், கணவன் இறந்தவுடன் இவற்றை இழக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? சட்டத்தில் சமம் என்கிறோமே தவிர, நடைமுறையில் அடையாளங்களைச் சுமக்க வேண்டியுள்ளது.
சட்டத்தில் இல்லாததை அரசு அதிகாரிகள் வலியுறுத்துவது எதனால்? காலம் காலமாக நமக்குள் ஊறிப்போயிருக்கும் மதிப்பீடுகள்தாம் இதற்குக் காரணம். அரசு அலுவலர்களும் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கம்தானே.
மாற்றம் எப்படி வரும்? அரசுக் காகிதங்களால் மட்டும் இதைச் சரிசெய்துவிட முடியாது. அனைவரது மனோபாவத்திலும் மாறுதல் வர வேண்டும். அண்மைக் காலமாகப் பொதுப் பிரச்சினைகளில் மக்கள் பங்கேற்பும் அறச் சீற்றமும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. ஆனால், நாலு பேரோடு சேர்ந்து போராடத் தயாராக இருப்பவர்கள்கூட, தனி மனித விஷயங்களில் இந்த அறச்சீற்றத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குவது ஏன்? சட்டங்களில் மாற்றம் வருவதும் அமலாக்கத்தில் மாற்றம் வருவதும் நம் முயற்சியில்தான் இருக்கிறது. அதிலும் பெண்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றம் வரப் பெரிதும் போராட வேண்டியிருக்கும்.
அரசு அலுவலகங்களில் இதே ஆணாதிக்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் சட்டங்களோடு, அன்றாட நடைமுறைகளோடு சீற்றம்கொள்வோம். இனிஷியலில் பெண் பெயர் போடுவது மாதிரி, இதுவும் நம் சமூக அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே. ஏஜெண்டு தொடங்கி அரசு ஊழியர், அதிகாரிகள்வரை உள்ள ஆண், பெண் அனைவரின் மனோபாவத்துக்கு எதிராகச் சண்டைபிடிப்போம்.
இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால், என்ன மாற்றம் முன்மொழியப்பட்டாலும் எதுவும் மாறாது. சட்டமும் மனிதர்களும் பெண்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும் நிலைப்பாடே தொடரும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அதை அவர்கள் நம்புகிறார்கள்; நம்புவதை அமல்படுத்துகிறார்கள். ஆனால், மாற்றத்தை விரும்பும் நாம் என்ன செய்கிறோம்? அதிகாரம் அவர்கள் வசம் இருப்பதால், காரியம் முடிந்தால் சரி என்று நாம் நம்பும் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுகிறோம். மாறாக மாற்றத்தை நோக்கி முதல் அடியை எடுத்துவைப்போம்.
(தேடல் தொடரும்)
 
Thread starter Similar threads Forum Replies Date
selvipandiyan Movies 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.