‘வெர்பல் அப்யூஸ்’...வெறுத்து ஒதுக்குங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
‘வெர்பல் அப்யூஸ்’...வெறுத்து ஒதுக்குங்கள்


சமீபத்தில் என்னிடம் ஒரு கல்லூரி மாணவியை, அவள் தோழி அழைத்து வந்திருந்தாள். ‘‘ஃபேஸ்புக்ல இவளை, இவ பாய்ஃப்ரெண்ட், கீழ்த்தரமான வார்த்தை சொல்லித் திட்டிட்டான். அதனால ரொம்ப அப்செட்டா இருக்கா’’ என்று தோழி சொல்ல, ‘‘என்னால அந்த வார்த்தையைத் தாங்கிக்கவே முடியல. எப்படி அவ்வளவு கேவலமான வார்த்தையால அவன் யோசிக்காம என்னை எல்லார் முன்னிலையிலும் திட்டலாம்?

அவங்க எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? ‘கோபத்துல சொல்லிட்டேன்’னு அப்புறமா அவன் எங்கிட்ட ‘ஸாரி’ சொன்னாலும், சொன்ன வார்த்தையை அவனால திருப்பி வாங்க முடியுமா? அத்தனை பேர் முன்னாடியும் போன என் மானம் திரும்ப வருமா? அந்த ஒரே வார்த்தையால அவனோட ஃப்ரெண்ட்ஷிப்புக்கே `குட்பை’ சொல்லிட்டேன். ஆனாலும், அந்த வார்த்தை என் மனசை அறுத்துட்டே இருக்கு...’’
- அவளை அந்த வார்த்தை ஏற்படுத்திய காயத்தில் இருந்து மீட்பது சிரமமாகத்தான் இருந்தது.


கெட்ட வார்த்தைகள்... நம் முந்தைய தலைமுறைகளில் துரோகம், கோபம், குரோதம், பழிவாங்கும் உணர்வு போன்ற கட்டுப்படுத்த முடியாத உணர்வு ரீதியாக பெரும் சண்டை வெடிக்கும்போதே, இந்த வார்த்தைகளும் வந்துவிழும். அப்போதும்கூட, நாகாக்கும் பண்பாளர்கள் பலர் இருந்தனர். ஆனால் இன்றோ... கெட்ட வார்த்தைகள் பேசுவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்... சண்டை, கோபத்தின்போது மட்டும் அல்ல... சந்தோஷமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட கெட்ட வார்த்தைகளை ஏதோ ‘பெட் நேம்’ போல அள்ளித் தெளிக்கிறார்கள்; ‘ஹாய்’, ‘பை’ சொல்வதுபோல சொல்லிக்கொள்கிறார்கள். அவை குறிக்கும் பொருள் என்ன, அவை எவ்வளவு கேவலமானவை என்பதை சொல்பவரும் உணர்வதில்லை... சொல்லப்படுபவரும் உணர்வதில்லை.

போதாக்குறைக்கு, இன்றைய திரைப்படங்கள் கெட்ட வார்த்தைகளை ‘ஃபேஷன்’ ஆக்கி குழந்தைகளையும் சர்வசாதாரணமாகப் பேசச் செய்யும் முக்கிய சமுதாய சீர்கேட்டுக் கடமையாற்றி வருகின்றன. வில்லன்கள் மட்டுமல்ல... காமெடியன்களும், கதாநாயகன்களும்கூட கெட்ட வார்த்தைகளை திரையில் `ஹிட் வார்த்தை’களாக்குகிறார்கள்.

இன்னொரு பக்கம், சேனல்களின் அட்டூழியம். முன்பெல்லாம் அழகான தமிழில், பண்பாகப் பேசும் தொகுப்பாளர்களை மட்டுமே அறிந்தவர்களாக இருந்தோம் நாம். இன்றோ சில குறிப்பிட்ட சேனல்களில், தொகுப்பாளரும், தொகுப்பாளினியுமாக இணைந்து ஒரு நிகழ்ச்சியை வழங்கும்போது, ‘கலகலப்பு’ என்ற பெயரில் அவர்கள் தங்களுக்கு இடையில் பேசிக்கொள்ளும் வார்த்தைகள்... சகிக்க முடியாதவை. ‘போடா’, ‘போடி’ என்று ஒருமையில் அழைப்பதில் இருந்து, சமயங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகளை சேனலே சென்சார் செய்து (மியூட்) ஒளிபரப்பும் அளவுக்கு... கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மேடை கலாசாரத்தை!

இவை அனைத்தையும் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினருக்கு, தகாத வார்த்தை என்பது தகாதது என்ற உணர்வே வருவதில்லை. வீட்டிலும் பதின்பருவ பெண்ணோ, பையனோ நாகரிகமற்றுப் பேசும்போது, ‘என்ன வார்த்தை பேசுற நீ? அந்த வார்த்தையோட அர்த்தம் தெரியுமா?’ என்று கண்டிக்கும் பெற்றோர்கள் சிலரே. பலரும், ‘நாம எல்லாம் இந்த வயசுல இப்படியா பேசினோம்? இதுங்க முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ள இப்படியெல்லாம் பேசுதுங்க’ என்று, புலம்பலோடு விட்டுவிடுகின்றனர்.

இப்படி அவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு உணர்த்தப்படாததால்... கூச்சமின்றி, தயக்கமின்றி கொட்டுகிறார்கள் கீழ்த்தரமான வார்த்தைகளை!
ஒருவரை வாளைவிடவும் காயப்படுத்தக்கூடிய, மனதுக்கு ஆறாத அவமானத்தைத் தரக்கூடிய, தகாத வார்த்தைகளால் சாடும் அணுகுமுறையை, ‘வெர்பல் அப்யூஸ்’ என்பார்கள் ஆங்கிலத்தில். உலகளவில், அடித்து துன்புறுத்துதல், பாலியல் வன்முறை இரண்டுக்கும் அடுத்தபடியாக அதிகமானோர் பாதிக்கப்படுவது வெர்பல் அப்யூஸினால்தான். ‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்றார் வள்ளுவர்.

கிராமங்களில், எத்தனையோ வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு வார்த்தையால் இன்றும் சேராமல் பிரிந்துகிடக்கும் குடும்பங்களைப் பார்க்கலாம்.
அந்தளவுக்கு வலி தரக்கூடியவை, ஒருவர் வரம்பு மீறிப் பேசும் வார்த்தைகள். ஜாலிக்காக கெட்ட வார்த்தை பேசிக்கொள்ளும் இன்றைய இளைஞர்களேகூட, அதே வார்த்தை ஒரு கோபமான சூழ்நிலையில் வெளிப்படுத்தப்படும்போது, அவமானமாக உணர்ந்து ரோஷப்படவே செய்வார்கள்.

இப்படி நாவடக்கம் அற்றுப்போன பண்பால் முறிந்த நட்புகளும், காதல்களும் பல. தகாத வார்த்தைகளுக்குப் பழக்கப்பட்டுப் போனதால்தான், செல்ஃப் கன்ட்ரோல் இன்றி, ஃபேஸ்புக்கில் தன் கேர்ள்ஃப்ரெண்டை பலர் முன்னிலையிலும் கொஞ்சமும் யோசிக்காமல், பண்பற்று அப்படி ஒரு வார்த்தையால் சாடியிருக்கிறான் அந்தப் பையன்.
எனவே, தகாத வார்த்தைப் பயன்பாடுகளை கைவிடுங்கள் இளையோர்களே.

‘நோ இஷ்யூஸ், ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று சமாதானம் சொல்லலாம். ஆனால், கேளிக்கைக்கும் சந்தோஷத்துக்கும் மொழியில் எத்தனையோ வார்த்தைகள் இருக்கும்போது, ஒருவனை/ஒருத்தியை கேவலமாக, கீழ்த்தரமாகச் சுட்டும் ஒரு வார்த்தையை உபயோகிப்பது, பேசுகிறவர், கேட்டுக்கொள்பவர் இருவரின் பண்பையும் கீழிறக்கும். சபையில் இருவரின் மரியாதையைக் குறைக்கும். தவிர, ஒருவர் மீதான கோபத்தின்போதோ, வாக்குவாதத்தின்போதோ சட்டென அவரை தகாத ஒரு வார்த்தையால் சாடிவிடும், பழக்கப்பட்டுப்போன அந்த நாக்கு. அந்த வார்த்தை, அவருக்கு வாழ்நாளுக்கும் தீராத ரணம் கொடுப்பதாக அமைந்துவிடும்.

எப்போதும் நல்ல, பண்பான வார்த்தைகளையே பேசுவது எல்லா சூழலிலும் ஒருவருக்கு அவருக்கான மரியாதையைப் பெற்றுத் தருவதாக அமையும். அவரின் ‘பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்’டில் கைகொடுக்கும். மேலும், அது ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனையும் அவரைச் சுற்றி, அவரை சார்ந்திருப்பவர்களைச் சுற்றி உருவாக்கும்.

வளர்த்த இரண்டு செடிகளில், ஒரு செடியிடம் தினமும் ‘நீ நல்லா வளரமாட்ட, வேஸ்ட்’ என்றும், மற்றொரு செடியிடம், ‘நீ ரொம்ப நல்ல செடி, சூப்பரா வளருவ’ என்றும், ஒரு ஆய்வில் சொல்லி வந்தனர். சில மாதங்களில் நல்வார்த்தைகள் சொன்ன செடி அழகாக வளர்ந்திருக்க, இன்னொரு செடி கருகிவிட்டது.

‘சாவுகிராக்கி’, ‘தண்டம்’, ‘பூட்டகேசு’வில் ஆரம்பித்து, வலிமையான, வக்கிரமான கெட்ட வார்த்தைகள் வரை சகஜமாக, சாதாரணமாகப் பேசுவதனால் ஏற்படும் பலனும் இதுபோலத்தான் இருக்கும்.
‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்றார் வள்ளுவர். செழிப்பான, செறிவான சொற்கள் இருக்கும்போது, தகாத வார்த்தைகள் வேண்டாமே!

- ரிலாக்ஸ்...டாக்டர் அபிலாஷா
[HR][/HR]நாவடக்கம் பழக்குங்கள்!

தவறை தவறு என்று எடுத்துரைக்கும் போதுதான் அதை குழந்தைகள் உணர்வார்கள். உங்கள் வீட்டுப் பிள்ளைகள் கீழ்த்தரமான சொற்களைப் பேசினால், அது எவ்வளவு பண்பற்ற செயல், அது அவர்களின் பண்பை எந்தளவுக்கு கீழிறக்கும் என்பதை கனிவாகவோ, கண்டிப்பாகவோ சொல்லிப் புரியவையுங்கள்.

அதையும் மீறி அவர்கள் பேசினால், ‘இந்தக் காலப் புள்ளைங்க...’ என்று அதையே அவர்களுக்கு சாக்காகக் கொடுக்காமல், ‘என்ன குடும்பத்துப் பிள்ளை இது?’னு மத்தவங்க எங்களை அவமானப்படுத்தத்தான் நீ இப்படிப் பேசுறியா?' என்று கேட்டு அவர்களின் நாவடக்குங்கள்.

வீட்டில் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி, வெளியிடங்களிலும் அவர்கள் மட்டமான வார்த்தைப் புழக்கத்துக்குப் பழகாமல் கண்காணியுங்கள். அவர்களை கண்ணியத்துடன் வளர்த்தெடுங்கள்.

குடும்பச் சண்டையில்கூட நீங்கள் நாகரிகம் இழக்காமல் பேசுவது முக்கியம். அதைத்தான் பிள்ளைகளும் பின்பற்றுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பண்பான, கனிவான சொற்களை நீங்களும் பேசுவதுடன் குழந்தைகளுக்கும் பழக்குங்கள்.

எதிர்காலத்தில் எந்த மேடையிலும், சபையிலும்... அலுவல், தொழில் சூழலிலும் அவர்கள் பேச்சுக்காக ரசிக்கப்படுவார்கள்; மதிக்கப்படுவார்கள்.
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,445
Likes
148,278
Location
Madurai
#2
True that Lakshmi.. ரொம்பவே Casual ah இப்படி Words use பண்றாங்க இப்போ.. தன் மரியாதையைத்தான் குறைத்துக் கொள்கிறோம்ன்னே இப்படி பேசுறவங்களுக்குப் புரியல..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.