6 things that spoil your energy - எனர்ஜியை கெடுக்கும் 6 விஷயங்கள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எனர்ஜியை கெடுக்கும் 6 விஷயங்கள்!

தெரியுமா?

எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் உலகில், நாம் மட்டும் சிக்னலில் மாட்டிக்கொண்ட நாய்க்குட்டிபோல தேமே என முழித்துக்கொண்டிருந்தால் என்ன நடக்கும்? ‘நமக்கு மட்டும் ஏன் ஸார் இப்படி எல்லாம் நடக்குது’ என்று புலம்புவதுதான் நடக்கும்.

போட்டிகள் நிறைந்த வாழ்க்கை என்பது எங்களுக்கும் தெரியும். உற்சாகமாக உழைக்க வேண்டும் என்று முயற்சி செய்தும் முடியவில்லையே என்கிறீர்களா? ‘அது உங்களின் தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. சில மருத்துவ காரணங்களும் அதன் பின்னணியில் இருக்கலாம்’ என்கிறார்கள் நிபுணர்கள்.

அதிகாலையில் எழுவது, நல்ல உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுவது, தீய பழக்கங்கள் இல்லாமல் இருப்பது, உடற்பயிற்சி, யோகா என்பது எல்லாருக்கும் தெரிந்த நல்ல விஷயம்தான். மது, புகை, துரித உணவுகள் எல்லாமே தவறானவை என்று டாக்டர்கள் அடிக்கடிச் சொல்வதற்குக் காரணம், அவை எல்லாமே ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’ என்ற குப்பைகளை உடலில் சேர்த்து செயல்பட விடாமல் சோர்வாக்குபவை என்பதுதான்.

இத்துடன் காபி, சாக்லெட், குளிர்பானங்களை அதிகம் உபயோகிப்பதும், உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் போவதும், எனர்ஜி குறைவதற்கான பொது காரணிகளாக இருக்கின்றன. இரவில் செல்போன், தொலைக்காட்சி, இன்டர்நெட் என போதுமான தூக்கமின்மை காரணமாகவும் ஒருவரின்
எனர்ஜி தொலையலாம்.

‘முதலில் சொன்ன நல்ல பழக்கங்கள் எல்லாமே இருக்கிறது. இரண்டாவதாக சொன்ன கெட்ட பழக்கங்களும் இல்லை. ஆனாலும், சோர்வாகவே உணர்கிறேன்’ என்பது உங்கள் பதிலாக இருந்தால் இப்போது விஷயத்துக்கு வந்துவிடலாம்.

1. ரத்த சோகை

எனர்ஜியை கெடுக்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று ரத்தசோகை. நம் உடலின் செல்களுக்கு ஆக்சிஜனும் ஆற்றலும் செல்வதற்கு ரத்த சிவப்பணுக்கள் முக்கியமான ஊடகமாக இருக்கிறது.

ரத்தசோகையால் ஒருவர் பாதிக்கப்படும்போது இரும்புச்சத்து குறைந்து, ரத்த அணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடுகிறது. இதன் காரணமாகவே ரத்தசோகை ஏற்பட்டவர்கள் சோர்வாக இருக்கிறார்கள். அதிலும், பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது என்பதால் காரணம் தெரியாத சோர்வு கொண்டவர்கள் ரத்தப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

2. சிறுநீரகப் பாதையில் தொற்று

சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தாலோ, அதற்கான சிகிச்சையை சமீபத்தில் எடுத்திருந்தாலோ உடல் சோர்வடையும். அதனால், சிறுநீரகத்தொற்று இருக்கிறதா, ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குறைபாடு முழுவதுமாக நீங்கிவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. தைராய்டு பிரச்னை

நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றும் அளவான வளர்சிதை மாற்றம் உடலில் சரியாக செயல்பட வேண்டும். தைராய்டு குறைபாடு ஏற்பட்டால் இந்த வளர்சிதை மாற்றம் சரியான கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே, ஹைப்போதைராய்டு பிரச்னை இருக்கிறதா என்று நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள்.

4. தூக்கத்தில் மூச்சுத்திணறல்

இரவில் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு காலையில் ஃப்ரெஷ்ஷாக உணர வேண்டும். ஆனால், போதுமான அளவு தூங்கியும் சோர்வாக உணர்கிறீர்களா? அப்படியெனில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை உங்களுக்கு இருக்கக் கூடும். தூக்கத்தின்போது இந்தக் குறைபாட்டை உங்களால் உணரமுடியாத பட்சத்தில், இரவில் குறட்டை விடுகிறீர்களா என்பதை உங்கள் துணையிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உண்மைதான் என்றால் தூக்கம் தொடர்பான சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. நீரிழிவு

சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் பலருக்கும் அது தெரிவது இல்லை. அதனால், உடல் சோர்வாகவே இருப்பதாக உணர்ந்தால் அளவுக்கு அதிகமான சர்க்கரையைப் பராமரிக்க முடியாமல் உங்கள் உடல் திணறுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, பருமன் இருந்தாலோ, நீங்களும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

6. மன அழுத்தம்

உள்ளம்தான் உடலுக்கு டாக்டர். மனம் சோர்வடைந்தால் உடல் செயல்படாது என்பது ஊரறிந்த உண்மை. பசியின்மை, எதிர்மறை எண்ணங்கள், கவலை என மனரீதியாக ஒருவரை முடக்கும் திறன் கொண்டது மன அழுத்தம். எனவே, மன அழுத்தம் இருப்பதாக உணர்கிறவர்கள் மன நல மருத்துவரை சந்தித்துத் தேவையான ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இழந்த எனர்ஜியை மீட்க உதவும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.