9 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்பு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
9 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்பு

By டாக்டர் என். கங்கா


அப்பாடி! குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்து விட்டது. கீழ்ப் பல்லும் லேசாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. எல்லாத்தையும் கடிக்கிறாள்! என்ன சாப்பாடு ஊட்டலாம் என்கிறாள் பூமா. 24 வயதாகும் IT நிறுவன அடிமை!
‘பூமா! அடிமைன்னு சொன்னதற்கு தப்பா நினைக்காதேம்மா! ஐடி தொழிலில் இருக்கும் ஒருவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்பது தான். என்னமோ இது மனதில் ஓடியது அவ்வளவுதான். நீ இத்தனை நாளும் ஆபிஸையும் குழந்தையையும் போராடி சமாளித்து தாய்ப்பால் மட்டும் (Exclusive breast feeding) கொடுத்தாயே!

பெரிய சாதனை தான் புதுமைப் பெண்ணே! சரி சரி! தாய்ப்பாலை நிறுத்தலாமா என்று கேட்டுவிடாதே. தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் தரலாம். விளக்கமாகச் சொல்கிறேன். கேட்டுக் கொள்’ என்றாள் மருத்துவரான அம்மா.

தாய் வீட்டில் இருக்கும்நேரங்களில் தாய்ப்பால் தரலாம். கட்டுப்பால் புளித்திருக்கும், குழந்தைக்கு ஜீரணம் ஆகாது என்பதெல்லாம் கட்டுக்கதை தான்! குழந்தை உறிஞ்சிக் குடிக்கும் போதுதான் பால் சுரக்குமே தவிர மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. மார்பகத்தில் அதிகபட்சம் 20 மில்லி தான் Lactoferous duet என்ற ட்யூப்களில் தங்கி இருக்கும். அது புளித்துப் போகாது. 1-2 மாதங்கள் தராமல் இருந்துவிட்டு பிறகு கூட தாய்ப்பால்தரலாம். மார்பகக் காம்புகளை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு கறந்து எடுத்துவிட்டு பிறகு குழந்தையைக் குடிக்க வைக்கலாம்.

ஏன் 6 மாதங்களுக்குப் பிறகுதான் இணை உணவு தரவேண்டும்?


 1. பிறந்த முதல் 6 மாதங்கள் குழந்தைக்குத் தாய்ப் பால் மட்டும் போதும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு அதிகமான ஊட்டச் சத்துத் தேவைப்படுகிறது. அதனால் தாய்ப்பால் மட்டும் போதாது.
 2. இணை உணவுகளின் முக்கிய ஊட்டச் சத்து Carbohydrate எனப்படும் மாவுப்பொருள். இதை ஜீரணிக்க தேவையான டயலின், ஒரு வகை அமிலேஸ் போன்றவை குழந்தையின் உமிழ்நீரில் சுரக்கின்றன. ஆமாம்! கார்போ ஹைடிரேட்டின் ஜீரணம் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. உமிழ்நீர் அமிலேஸ் 6 மாதங்களில் தான் சுரக்க ஆரம்பிக்கிறது. அதற்கு முன் இட்லி, சாதம் போன்றவை கொடுத்தால் வாயில் நடைபெற வேண்டிய முதல் ஸ்டெப் ஜீரணம் நடக்காமல் உணவு வயிற்றை சென்றடையும். முழுவதும் வளர்ந்து முதிர்ச்சி அடையாத உணவுப் பாதைக்கு இது அதிக லோடு தான்! ஜீரணம் முழுமையாக இருக்காது.
 3. 6 மாதங்கள் வரை நாக்கு, தொண்டை, விழுங்கும் திறன் ஆகியவை போதுமான வளர்ச்சி அடைந்திருக்காது. திரவ உணவை விழுங்குவது எளிது! திட உணவை வாயிலிருந்து தொண்டைக்கு கொண்டு சென்று விழுங்குவது குழந்தையின் வாய், நாக்கு, தொண்டை, மூச்சுப்பாதை மூளை நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஒன்று சேர்ந்த ஒத்துழைப்பால் நடைபெறுகிறது (Swallowing is a highly co-ordinated activity) குழந்தைக்கு 6 மாதங்களிலிருந்து தான் இந்த நிகழ்வு லேசாக ஆரம்பிக்கிறது. இது முழுமையாக முதிர்ச்சி அடைய சுமார் 1-வது ஆகும். அதனால் நன்கு மசித்த Semi solid உணவு சிறிது சிறிதாக தரப்பட வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு புரையேறும். அதாவது உணவு மூச்சுப் பாதைக்கு சென்றுவிடும். புரையேறுவது இயற்கையான சாதாரண நிகழ்வு என்றாலும் சில சமயம் சிறு குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தாக முடியலாம். கவனம் தேவை.
 4. 6 மாதங்களில் தான் குழந்தைக்கு உமிழ்நீர் சுரப்பதும் படிப்படியாக அதிகரிக்கும். வாயில் ஈரம் இருந்தால் உணவை விழுங்குவது எளிது.
 5. குழந்தைக்கு பல் முளைத்த பிறகு திட உணவு சாப்பிட ஆர்வம் ஏற்படும்.
இந்த காரணங்களால்தான் 6 மாதம் முடிந்த பிறகு திடமான உணவு தேவை.

என்ன வகையான இணை உணவுகள் தரலாம்?

வீட்டில் தயாரிக்கப்பட்ட, அவரவர் குடும்ப சூழலுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ற உணவுகளை மட்டும் தர வேண்டும். கடைகளில் கிடைக்கும் எந்த மாவு வகைகளும் குழந்தைக்குத் தரக் கூடாது. குழந்தை கை கால்களை உதைத்து விளையாடி, நீந்த, தவழ ஆரம்பிப்பதால் தண்ணீரும் அதிகம் தேவை.

உப்பு கலந்த ஆகாரம் உட்கொள்ள ஆரம்பிப்பதால் தாகம் அதிகரிக்கும். எனவே கொதிக்க வைத்த, ஆற வைத்த தண்ணீர் ஸ்பூன் மூலம் தரலாம். பாட்டில், உறிஞ்சும் டம்ளர் (Straw tumbler) சிப்பர் போன்றவை கூடாது.

இயற்கைப் பழச் சாறுகள், காரமில்லாத சூப் வகைகள், இளநீர் ஆகியவற்றையும் தரலாம்.

என்ன வகையான இணை உணவு?

உணவு ஆரம்பிப்பதற்கு முதல் வோட்டு இட்லிக்குத்தான். நிறைய குழந்தைகளுக்கு, ஏன் பெரியவர்களுக்குக் கூட இட்லி பிடிக்காது. உண்மை தானே! ஆனால் இட்லி போன்ற அருமையான உணவு எதுவுமே இல்லை. நமது கலாச்சாரத்திற்கு உட்பட்டது. எல்லா குடும்பத்துக்கும் பொருந்தக் கூடியது. எளிமையான அதிக செலவு இல்லாதது.

இட்லியின் நன்மைகள்!

 1. நமது உணவில் 12 முக்கியமான அமினோ அமிலங்கள் (Essential Amino acids) சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த 12-ம் உடலில் தானாக தயாரிக்கப்படுவதில்லை. உணவின் மூலம் தான் உடலில் சேரும். அரிசியில் லைசின் என்ற அமினோ அமிலம் குறைவு. உளுந்தில் மெதியோனின் (Methionine) என்ற அமினோ அமிலம் குறைவு! அரிசி உளுந்து இரண்டையும் சேர்த்து உணவுப் பொருளைத் தயாரிக்கும் போது ஒன்றில் இல்லாததை மற்றொன்று ஈடு கொடுக்கிறது. இது mutual supplementation எனப்படுகிறது. எனவே இட்லி எல்லா முக்கிய அமினோ அமிலங்களையும் கொண்ட உணவாக பரிமளிக்கிறது.
 2. மாவைப் புளிக்க வைக்கும் போது அதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (2-ம்) Lacto bacillus, bifidus factor போன்றவையும், சில ஈஸ்ட் வகைகளும் நன்கு வளர்கின்றன. அதனால் தான் fermentation நடந்து மாவு புளிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் நமது குடலுக்குத் தேவை. இவை ஜீரணத்திற்கு உதவுகின்றன.
 3. இந்த நுண் உயிர்களின் வளர்ச்சியால் (complex carbohydrate and protein molecules) மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து மூலக் கூறுகள் உடைக்கப்பட்டு எளிதில் செரிக்கக் கூடிய கூறுகளாக மாறுகின்றன. அதாவது மாவிலேயே pre digest ஆகிவிடுகின்றன. எனவே குழந்தையின் வளர்ந்து வரும் குடலுக்கு லோடு குறைவு.
 4. இட்லியை ஆவியில் வேக வைப்பதால் இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிவதில்லை.
 5. ஆவியில் வேகும் போது எந்த ஊட்டச்சத்தும், முக்கியமாக வைட்டமின்கள் B,C போன்றவை வீணாவதில்லை.
 6. மிருதுவாக இருப்பதால் சிறிது வெந்நீர் கலந்து குழந்தைக்கு ஊட்டுவதும் எளிது!


இடியாப்பமும் இதே வகைதான்! ஆனால் உளுந்து இல்லாததால் இதில் புரதச் சத்து கம்மி தான். மசிப்பதற்கு பருப்பு கலந்த நீரை உபயோகித்தால் புரதம் கிடைத்துவிடும்.

’சரிம்மா. போதும் இட்லி, இடியாப்பாம் புராணம். என் ப்ரெண்ட் ஆஞ்சல் முகர்ஜி தில்லிக்காரி. அவளால் இட்லி செய்ய முடியாது. அவள் குழந்தைக்கும் 6 மாதங்கள் முடிந்துவிட்டது. என்ன செய்யலாம்? என்றாள் பூமா.

மிருதுவாக மெல்லிய சப்பாத்தி செய்து அதை நீர்த்த பருப்பு மசியலில் ஊற வைத்து மசித்துத் தரலாம். சன்னா எனப்படும் பெரிய கொண்டைக்கடலை அல்லது பட்டாணி 6 மணி நேரம் ஊற வைத்து, நன்கு வேக வைத்து, மசித்து பருப்புடன் சேர்த்து தரலாம். தேவையான புரதம் குழந்தைக்குக் கிடைக்கும்.

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.