Affection-பாசம் என்பது கொடியல்ல; விழுது

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
இன்று, பிள்ளைகள் தங்களிடம் பாசமாக இல்லை என்று வருந்தும் பெற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதியோர் இல்லங்களுக்குத் தள்ளப்படும் பெற்றோர் எண்ணிக்கையும் கூட அதிகரித்துத்தான் வருகிறது.
இந்த நிலைமை சரியில்லைதான். பெற்றோரைத் தன் இல்லத்தில் வைத்து அன்போடு பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்நிலை ஏன் நேர்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பெற்றோர் மகனிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது. ஆழமானது. மகன் பெற்றோரிடம் செலுத்தும் பாசம், அந்த அளவு உணர்வுபூர்வமானதல்ல. அது பெரிதும் அறிவுபூர்வமானது மட்டுமே.
காரணம், தனது ஆறு வயதுக்கு உள்பட்ட நினைவு மகனிடம் ஒரு சிறிதும் இல்லை. தாயும் தந்தையும் தன்னை எவ்விதமெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார்கள் என்பது பற்றிய ஞாபகம் மகனிடம் இருக்க வாய்ப்பில்லை. சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது தன் கழிவையெல்லாம் நீக்கி தாய் செய்த பணிவிடையையோ ஒவ்வொரு நாளும் தந்தை பலப்பல விளையாட்டுப் பொருள்களை வாங்கி வந்து தன்னைச் சீராட்டிய அருமையையோ மகன் மனத்தில் இயற்கை பதிய வைக்கவில்லை.
அது இயற்கை செய்யும் சூழ்ச்சி. பத்துப் பன்னிரண்டு வயதுக்குப் பிறகுள்ள நினைவுகள் மட்டும்தான் மகன் மனத்தில் பசுமையாக இருக்கின்றன.
ஆனால் பெற்றோர் விஷயம் அப்படியல்ல. பெற்றோரிடம், மகன் பிறந்தது முதல் இன்றுவரை உள்ள அத்தனை நினைவுகளும் பதிந்திருக்கின்றன. மகன் சின்னக் குழந்தையாக இருந்தபோது அவனுக்குக் காய்ச்சல் வந்ததையும் இரவெல்லாம் கண் விழித்து மருந்து கொடுத்ததையும் கூட தாயும் தந்தையும் அணுஅணுவாக நினைவில் வைத்திருக்கிறார்கள்.
இப்போது மகனுக்கு முப்பது வயது என்றால், பெற்றோருக்கு மகன் மேல் உள்ள பாசத்தின் வயதும் முப்பதுதான். இன்னும் சொல்லப்போனால், அது முப்பது வயதும் பத்து மாதங்களும் சேர்ந்தது. ஆனால் மகனுக்குப் பெற்றோர் மேல் உள்ள பாசத்தின் வயது சுமார் இருபத்து நான்கு அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்கும்.
எனவே, பாசத்தின் ஆண்டுக் காலமே மாறும்போது அதன் அளவும் மாறத்தான் செய்யும் என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். புத்திரபாசம் வலுவான உணர்வு. புத்திரனுக்குப் பெற்றோர் மேல் உள்ள பாசம் அந்த அளவு வலுவானதல்ல.
அதனால்தான் கி.ராஜநாராயணன், பாசம் விழுது போன்றதென்றும் கொடி போன்றதல்ல என்றும் அழகாக எழுதுகிறார். விழுது மேலிருந்து கீழே இறங்கும். பாசம் பெற்றோரிடமிருந்து அடுத்த தலைமுறையான தங்கள் குழந்தைகளை நோக்கி இறங்குகிறது. ஆனால் பாசம் கொடி போன்றதல்ல. கொடி கீழிருந்து மேலே படரும். பாசம் ஒருபோதும் குழந்தைகளிடமிருந்து மேலே பெற்றோரை நோக்கிப் படராது. இது இயற்கையின் நியதி.
இந்த நியதியைப் புரிந்துகொண்டால் பெற்றோர் சமாதானமடைய வாய்ப்பிருக்கிறது. தாத்தா பிள்ளைமீதும், பிள்ளை அவன் பிள்ளைமீதும் பாசம் செலுத்துவது இயல்பானது. உணர்வு பூர்வமானது. பிள்ளை தன் தந்தைமீதும், தந்தை தன் தந்தைமீதும் பாசம் செலுத்துவது பெரிதும் அறிவுபூர்வமானது.
உணர்ச்சியால் எழுகிற பாசம் தன்னிச்சையானது. அறிவால் எழுகிற பாசம் கடமை மட்டுமே. மனிதனைத் தவிர்த்த பிற உயிரினங்களைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம். ஆடு, மாடு, நாய், பறவைகள் எல்லாம் தாய்ப்பாசத்தோடு அடுத்த தலைமுறையைக் குறிப்பிட்ட காலம்வரை காப்பாற்றுகின்றன. வளர்ந்த ஆடோ மாடோ நாயோ பறவையோ தன் முதிய தாயைப் பராமரிப்பதை உலகில் எங்கும் காண இயலாது.
குழந்தை வளர வேண்டும் என்பதற்காக இயற்கை, தாய்க்குத் தன் குழந்தைமேல் பாசம் தோன்றுமாறு செய்கிறது. அப்போது தாய் குழந்தையிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. பசுமாடு தன் கன்றுக் குட்டியிடமிருந்தோ, காகம் தன் குஞ்சிடமிருந்தோ எதையும் எதிர்பார்த்து அதை வளர்ப்பதில்லை. தாய் தன் குழந்தையிடம் செலுத்தும் பாசம் என்பது இயற்கையின் நியதி. சந்ததி வளர இயற்கை வகுத்துள்ள திட்டம்.
அப்படியானால், வளர்ந்த குழந்தைகள், பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளுவது சரிதான் என்று விட்டுவிடலாமா என்றால், அப்படியல்ல. பெற்றோரைக் காப்பாற்ற வேண்டிய கடமையைப் பிள்ளைகள் புறக்கணிப்பது மாபெரும் தவறுதான். அது ஏன் நேர்கிறது என்பதற்கான காரணம் சொல்லப்பட்டதே தவிர, மற்றபடி பிள்ளைகள் செய்யும் அநியாயத்தை நியாயப்படுத்த முடியாது.
திருட்டு என்பது தவறு என்று உணர்வு சொல்லவில்லை. அறிவு சொல்கிறது. பொய் என்பது தவறு என்று உணர்ச்சி சொல்லவில்லை. ஞானம் சொல்கிறது. தங்களைப் பேணி வளர்த்த பெற்றோரைக் காப்பாற்ற வேண்டியது உன்னதமான கடமை என்பதை அறிவுபூர்வமாகப் பிள்ளைகள் உணரவேண்டும். பெற்றோரைப் புறக்கணிக்கும் மகாபாவத்தைப் பிள்ளைகள் செய்யலாகாது.
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பதே இயற்கை விதி. பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகள், எதிர்காலத்தில் தங்களுக்கும் இதே நிலைதான் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வயோதிக காலத்தில் பெற்றோரைப் பிள்ளைகள் பராமரிக்க வேண்டும் என்ற புனித தர்மம் பாரத தேசத்தில் உள்ளதுபோல் வேறெங்கும் இத்தனை வலுவாக இல்லை.
இறந்த தாய் தந்தைக்குப் பிள்ளை திதி கொடுக்க வேண்டும் என்பதை நம் தர்மம் வலியுறுத்துகிறது (மகாகவி பாரதிக்குப் பிள்ளை இல்லை என்பதால் அவருக்கு கவிஞர் திரிலோக சீதாராம் அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்து திதி கொடுத்துவந்தார்).
இறந்த பின் திதி கொடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தும் நம் தர்மம், உயிரோடிருக்கும் போதே பெற்றோரைப் பிள்ளைகள் புறக்கணிப்பதை எப்படி அனுமதிக்கும்? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம் கலாசாரத்தின் மேல் விழும் அடி.
ஆனால் எவ்வளவோ ஒன்றுபட்டு வாழ முயன்றும், பல பிள்ளைகளாலும் மருமகள்களாலும் அது முடியாமல் போவது ஏன் என்பதையும் முதியவர்கள் சிந்திக்க வேண்டும். நம் பண்டைய மரபுப்படி, முதியவர்கள் தங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டால், அவர்கள் பிள்ளையோடும் மருமகளோடும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக வாழ இயலும்.
நம் மரபு பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற நான்கு நிலைகளைப் போதிக்கிறது. வானப்ரஸ்தம், சன்யாசம் ஆகிய கடைசி இரண்டு நிலைகளும் துறவிகளுக்கு மட்டும் போதிக்கப் பட்டிருப்பதாக நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அப்படியல்ல. அந்தக் கடைசி இரு நிலைகளும் கூட எல்லாருக்குமானவைதான்.
வானப்ரஸ்தம் என்றால் வனத்திற்குச் சென்று வாழ்வது என்பதல்ல. எதிலும் பற்றில்லாமல் செயல்களைச் செய்துகொண்டு ஒதுங்கி வாழ்வதுதான் அது. சன்யாசம் என்பது இறைவன்மேல் மட்டும் பற்று வைத்துக் கொண்டு மற்ற பற்றுகளை முற்றிலுமாகத் துறப்பது.
இந்த இரு நிலைகளையும் மனத்தளவில் முதியவர்கள் பழகிக் கொண்டால் தங்கள் விருப்பப்படி, தங்கள் வரைமுறைக்கு உள்பட்டு, தங்கள் பிள்ளையும் மருமகளும் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழாது. எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றமும் ஏற்படாது.
பிள்ளையின் வாழ்வும் மருமகளின் வாழ்வும் அவர்கள் விருப்பப்படி வாழ்வதற்கானது என்ற உண்மையை முதியவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தேவையற்ற உபதேசங்களைச் செய்யும் பழக்கம் முதியவர்களிடமிருந்து தானாகவே விடைபெற்று விடும்.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் பெரும்பாலும் சொல்லும் காரணம், வீட்டில் அவர்கள் தொணதொணப்பைத் தாங்க முடியவில்லை என்பதுதான். வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் தங்கள் பிள்ளையையும் மருமகளையும் நெறிப்படுத்தி வழிநடத்துகிற பெரும்பொறுப்பைக் கடவுள் தங்கள் மேல் சுமத்தியிருப்பதாகப் பெரும்பாலான பெற்றோர் நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் ஓயாமல் அறிவுரை சொல்லவும், பிள்ளையும் மருமகளும் செய்யும் செயல்களைக் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்படுகிறார்கள். தலைமுறை இடைவெளி தாண்டி விஷயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றோருக்கும் இருப்பதில்லை. பிள்ளைகளுக்கும் இருப்பதில்லை. இதுவே சிக்கல்களுக்கு அடிப்படை.
எது சரி, எது தவறு என்பதைப் பெற்றோர் தங்கள் வாழ்க்கை முறை மூலம் போதிக்க வேண்டுமே தவிர, தங்கள் வார்த்தைகள் மூலம் அல்ல. மனமுதிர்ச்சியும் வாழ்க்கை அனுபவமும் உடைய மாமியாரால் நாவை அடக்க இயலவில்லை என்றால், இவை ஏதுமில்லாத மருமகள் தன் நாவை அடக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?
மருமகளுக்கு மாமியார் தாய் போன்றவள் தானே தவிர, தாய் அல்ல. எனவே மகளிடம் ஒரு தாய் எடுத்துக் கொள்ளும் உரிமையை ஒரு மருமகளிடம் மாமியார் எப்படி எடுத்துக் கொள்ள இயலும்?
முதியோர், தங்கள் வீட்டிலேயே வானப்ரஸ்தம், சன்யாசம் ஆகிய மனநிலைகளுக்கு வந்து சேர்வதும், எதிர்காலத்தில் தங்களுக்கும் வயதாகும் என்ற உண்மையைப் பிள்ளையும் மருமகளும் உணர்ந்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கும். நம் கலாசாரப்படி நாம் வாழ்வோமானால் நம் வாழ்வில் சாந்தி மேலோங்கும்.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
அருமையான விளக்கம் .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#8
Arumaiyaana Vilakkam Selvi:thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.