Akshaya Thrithiyai - அக்ஷய திரிதியை

jv_66

Super Moderator
Staff member
#1
அக்ஷயத் திரிதியை


‘திரிதியை’ என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். ‘அக்ஷய திரிதியை’ எனபது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.

வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது..

க்ஷயம்என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். அக்ஷயம்என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.

இதற்குப் பின்னால் பற்பல புராணக்கதைகள் உள்ளன .
தெய்வமாகவே இருந்தாலும் , கர்வம் கொள்ளலாகாது என்பதை , சிவபெருமான் உணர்த்திய சம்பவம் இது .
நம் எல்லாருக்கும் குறையாத அன்னத்தை அள்ளி வழங்கும் அன்னையான
காசியில் உள்ள அன்னபூர்னேஷ்வரி தேவி, தன்னால் மட்டுமே அனைவருக்கும் பசி போக்க இயலும் என்று, சிறு கர்வம் கொண்டாள்.

அந்த கர்வத்தைப் போக்க சிவபெருமான் நினைத்தார் . அவர் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி” என்று கேட்டதால் , அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாற, சிவ யோகியோ, இன்னும் இன்னும்” என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.

வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே, காசியில்பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் உள்ள தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார்.

உடனே பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார். அன்னம் தயார் செய்யும் இடத்திற்குச் சென்றார். அங்கு, அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த ஒரு பருக்கை அன்னத்தை,அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டே உட்கொண்டார். உடனடியாக, அன்ன வகைகள் அனைத்தும் நிறையத் தோன்றின. அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார்.

மஹா விஷ்ணுவோ
, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையைப் பின்பற்றியாக வேண்டியக் கட்டாயத்தினால், சிவ யோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார். "உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார். உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்.........

இந்த வருடம் மே 2 ம் தேதி அன்று அக்ஷய திரிதியை வருகிறது.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2014. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
#2
மேலும் சில நிகழ்வுகள்


1. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தான்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.

2. இந்த புண்ணிய நாளில் தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.

3. மஹோதயம் எனும் நகரில், வணிகன் ஒருவன் அட்சய த்ரிதியை தினத்தின் மகிமையைக் கேள்வியுற்று, அந்நாளில் கங்கையில் நீராடிவிட்டு, பித்ருத் தர்ப்பணம் செய்வதுடன், கோதானம், சுவர்ணதானம், பூமிதானம் போன்றவற்றைச் செய்து, மறுபிறவியில் ‘குசாவதி’ நாட்டின் அரசனானதும் த்ரிதியை தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஒருகதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி, குடை, சுவர்ணம் ஆகியவற்றை தானம் செய்வது அழியாப்பலனைத்தரும் என்பது விசேஷம்.

4. மஹாபாரதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில்அபயம்! அபயம்! என்று அலறினாள் திரெளபதி இருந்த இடத்திலிருந்தே ‘அக்ஷ்யம்’ என்றார் கண்ணன். குறையாமல்வளர்ந்தது திரெளபதியின் சேலை.காக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு, இது நிகழ்ந்ததும் ஒரு த்ரிதியை தினத்தில்தான்.

5. பாற்கடல் கடையப்பட்டபோது, அமுதத்தோடு அவதரித்த மலைமகள், ‘அகலுமில்லேன்’ என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது த்ரிதியை திதி நாளில்தான்.

6. மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறை நிலவாகப் பிறந்த சந்திரன், அட்சயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப்பிரகாசித்தவன் ஒருசமயம், மதிகெட்ட செயலால், சாபம் பெற்று (க்ஷயரோகம்) அவன் உடல் தேய்ந்தபோது, அபயம் என்று இறைவனைத் தஞ்சமடைந்து, சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த த்ரிதியை தினத்தன்றுதான்.

7. ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து காசியில் அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற பின்தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து ஸ்வர்ணகரண்டியால் உணவை கொடுத்து, அகிலாண்டநாயகி உலகுக்கு அன்னம் வழங்கத் தொடங்கியதும் இத்திருநாளில்தான்.

8. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு, வறுமையில் வாடிய குபேரன், ஈடற்ற தவத்தால், ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களைப் பெற்ற நாளும் அட்சய த்ரிதியை நாளன்றுதான்.

9. வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரியபகவான், ‘அன்னவளம் குன்றாத’ அட்சயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.

10. ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர், கண்ணன் கூறிய ‘அக்ஷ்யம்’ என்ற சொல்லால் குபேரவாழ்வு பெற்றதும் த்ரிதியை தினம் ஒன்றில்தான்.

11. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அக்ஷய’ என்று நிறைவடையும். ‘அக்ஷய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.

12. இந்த நாளில் தான் வேத வியாசரும், விநாயகரும் இணைந்து மகாபாரதம் எழுத ஆரம்பித்தனர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன...

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine April 2014. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
#3
[TABLE="width: 99%, align: left"]
[TR]
[TD][TABLE="width: 97%, align: left"]
[TR]
[TD]அக்ஷ்ய திரிதியை அன்று செய்யும் பூஜை முறை:


அக்ஷய திரிதியையன்று செய்யும் ஸ்நானம், ஜபம், ஹோமம், தர்மம் எல்லாமே அக்ஷயமாக வளர்ந்துகொண்டே போகும்;.
.. அக்ஷயதிரிதியை அன்று அதிகாலையில் எழுந்து நீராடியபின் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி,. மகாலக்ஷ்மி படத்தின் முன் (லக்ஷ்மி நாராயணர் படம் இருப்பின் சிறப்பு) கோலமிட்டு, நுனிவாழை இலை ஒன்றை வையுங்கள். அதன் நடுவே கொஞ்சம் அரிசியை பரப்பி வைத்து அதன்மீது நீர் நிரம்பிய கலசம் (செம்பு) ஒன்றினை இருத்துங்கள். மஞ்சளால் ஒரு பிள்ளையாரைப் பிடித்து அந்தக் கலசத்தின் அருகே வைத்து, பொட்டிட்டு, மலர்சூட்டுங்கள். மகாலக்ஷ்மியை மனதார நினைத்தபடி தூப, தீபம் காட்டியபின், பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள். வாட்டிடும் வறுமை தொலைந்து, இனிமையும், வளமையும் வாழ்வில் கூடும் அக்ஷயமாக ஆனந்தமும், செல்வமும் வளரும்.
அன்று குசேலர் சரித்திரம் படித்தல் நலம் பயக்கும்.
குசேலர், குபேரசம்பத்து பெற்ற சம்பவத்தை நாராயணீயத்தில் எழுத நினைத்த நாராயணபட்டத்திரி, ஒவ்வொரு ஸ்லோகமாக இயற்றி, குருவாயூரப்பனிடம் ஒப்புதல் கேட்டார். அவல் உண்டு தான் செய்த மாயத்தை ஆவலாகக் கேட்டு “ஆம்” என்று தசையசைத்தான் குருவாயூரப்பன்.. இது நடந்தது அக்ஷயத் திரிதியை அன்று தான் .அதனால் , இந்த சரித்திரத்தை அன்று படித்தால் நல்ல பலன் கிட்டும் . மேலான அந்தத் துதி, எளிய தமிழ் விளக்கத்துடன்
குசேல நாமா பவது ஸதீர்யதாம்
கத: ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ:
த்வதேக ராகேண தநாதி நி: ஸ்பருஹோ
திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ


சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா? (நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி ஒப்பு தலைத் தெரிவித்தார்.
ஸமான ஸீலாபி ததீய வல்லபா
ததைவ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பதவ்ருத்திலப்தயே
ரமாபதி: கிம் ந ஸகா நிஷேவ்ய தே


அவருடைய மனைவியும் அவரைப்போல் நல்ல குணங்கள் உள்ளவர்தான். ஆனால், மனம் பக்குவமடையவில்லையே! குடும்பம் நடத்தப்பட வேண்டிய ஒரு தாயின் எதார்த்த நிலையைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் தன் கணவரிடம் ஒரு வினாவை எழுப்பினாள். திருமகள் கேள்வன் கண்ணன், தங்களின் இளமைக்காலத் தோழனாயிற்றே! அவரை ஏன் நீங்கள் சென்று பார்க்கக் கூடாது? ஏதேனும் பெருஞ்செல்வம் கேட்கமுடியாதா என்றாள். (இது உண்மையா என்று நம்பூதிரி கேட்க குருவாயூரப்பன் ஆமோதித்தார்)
இதீதோ அயம் ப்ரியயயா ஹுதார்த்தயா
ஜுகுப்ஸமா நோபி தநே மதாவஹே!
ததா த்வதா லோகந கௌது காத்யயௌ
வஹந் படந்தே ப்ருதுகாநுபாயநம்


பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் மனைவி, செல்வம் வாங்கிவரச் சொல்கிறாள். ஆனால், செல்வம் செருக்கையே வளர்க்கும் என்பதால் அதனை அறவே வெறுப்பவர் குசேலர். இருப்பினும் மனைவி சொன்னபடி கேட்டால் உன்னைப் பார்க்கலாமே என்ற ஆசை. எனவே, மனைவி சொல்லை ஒரு வியாஜமாக (சாக்காக) வைத்துக் கொண்டு வேஷ்டி நுனியில் வெறும் அவலைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு துவாரகை நோக்கிக் கிளம்பிவிட்டார் அல்லவா? என்று பட்டத்ரி கேட்க,

பகவான் ஆமென்று தலையாட்டினார்.

கதோ அயம் ஆஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யாபவநம் ஸமேயிவாந்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதி ஸம்பாவநயாது கிம் புந:


அவர் அதிசயம் அனேகமுற்ற தங்களின் துவாரகைப் பெருநகரைக் கண்டு வியந்தார். ஏராளமான மாளிகைகள் பலவற்றுள் மிகவும் உயர்ந்ததான ருக்மிணியின் மாளிகைக்குள் நுழைந்தார். அப்போது நிஜமாகவே வைகுண்டத்தில் நுழைந்தது போன்ற மகிழ்ச்சி வெள்ளம் தோன்றியது அதன்பின் அங்கு அவருக்கு உன்னுடைய உபசாரத்தால் கிடைத்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அல்லவா? (குருவாயூரப்பன் சிரத்தை அசைத்து ஆமோதித்தார்)

ப்ரபூஜிரம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாய அகதய: புராக்ருதம்
யதிந்தநார்த்த குரு தார சோதிதை:
அபர்து வர்ஷம் தமர்ஷி காநநே


நீர் அவரைக் கொண்டாடி பூஜித்தீர். உம் மனைவி ருக்மணியோ தம் கையாலேயே விசிறியால் வீசி அவரின் மனம் குளிர்வித்தாள். அவரது கையை அன்பாய் கட்டிக் கொண்டு பழைய பால்யக் கதையையெல்லாம் நினைவு கூர்ந்தீர். முக்கியமாக, குருபத்தினி விறகு கொண்டு வரும்படி சொன்னது. தூக்கமுடியாமல் அதைத் தூக்கிக் கொண்டு வரும் பொழுது மழை பொழிய ஆரம்பித்தது. அகால மழையில் நீங்களிருவரும் மாட்டிக் கொண்டு, சொட்டச் சொட்ட வந்து நின்றது என்ற எல்லாவற்றையும் சொன்னீர்கள் அல்லவா? (குருவாயூரப்பன் தலையை அசைத்து ஆமென்று ஆமோதித்தார்)

த்ரபாஜு ÷ஷா அஸ்மாத் ப்ருதகம் பலாத்த
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்ய கரம் ருரோத தே


குசேலர், தான் கொண்டுவந்த அவலை வெட்கத்தால் (மாட மாளிகையில் மகோன்னதமாக வாழ்பவனுக்கு கிழிந்த வேஷ்டியில் மறைத்து வைத்துள்ள சில பிடி பழைய அவலை எப்படிக் கொடுப்பது என்ற லஜ்ஜை) கொடுக்காமல் மறைத்து வைத்துக் கொண்டிருந்தார். நீர் என்னடா வென்றால், வலுவில் அவரிடமிருந்து ஒரு பிடி அவலை எடுத்து உண்டீர். நீர் இன்னொரு பிடி எடுக்குமுன், லக்ஷ்மி தேவியான ருக்மிணி விரைந்தோடி வந்து இவ்வளவு அனுக்ரஹம் செய்தது போதும் என்று உமது கையைப் பிடித்துத் தடுத்தாள் அல்லவா? ( ஒரு பிடி அவலைச் சாப்பிடும் போதே கண்ணன்
அக்ஷயம் என்று சொல்லிக் கொண்டு விட்டார். காரணம் இங்கே நடக்க, காரியம் குசேலர் இல்லத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது! நம்பூதிரி கேட்டதற்கு குருவாயூரப்பன் ஆம் என்று ஆமோதித்தார்)

பக்தேஷீ பக்தே ந ஸ மாநிதஸ் த்வயா
புரீம் வஸந்நேக நிஸாம் மஹாஸுகம்
பதேபரேத்யுர் த்ரவிணம் விநா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ


பக்தர்களுக்குப் பக்தனான நீர், குசேலருக்கு அளித்த மரியாதை உபசாரம், அனுக்ரஹம் ஆகியவைகளால், அவர் தம்மை மறந்து உமது நகரில் ஓர் இரவு மகா சுகமாய்ப் பொழுதைக் கழித்தார். மறுநாள், பொருள் ஏதும் பெறாமல் தன்னுடைய ஊருக்குப் போனாரல்லவா? உமது அனுக்கிரஹம் விசித்ரமானதல்லவா? (பட்டத்ரியின் வினாவுக்கு, குருவாயூரப்பன் தலையசைத்து ஆமோதித்தார்)

குசேலர், கண்ணனின் தரிசனத்தையும் அன்னியோன்யத்தையும் விரும்பினாரல்லவா! அவர் பொருளை விரும்பவில்லையே! அதனால் பரந்தாமன் அவருக்குப் பொருளைக் கொடுக்காமல், தரிசன சுகத்தையும் அன்னியோன்யமான சுகத்தை மட்டும் கொடுத்தார்.
யதிஹ்யயாசிஷ்ய மதாஸ்யதச்யுதோ
வதாமி பார்யாம் கிமிதி வ்ரஜந்நஸெள
த்வதுக்தி லீலா ஸ்மித மக்நதீ: புந:
க்ரமா தபஸ்யந் மணி தீப்ரமாலயம்


நான் பொருள் கேட்டிருந்தால், அச்சுதன் கொடுத்திருப்பார். இப்போது மனைவி கேட்டால் என்ன செய்வது? என்று குசேலர் வழியில் நினைத்துக்கொண்டே போனார். ஆனால், மறுகணம் உம்முடைய குறும்புப் பேச்சு, புன்சிரிப்பு மந்தஹாஸமுகம் அவரின் மனத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கமுக்காடச் செய்தது. அப்படியே எண்ணிக்கொண்டு நடந்தவர், தன்னுடைய இருப்பிடத்தில் ஒரு ரத்னமயமான் மணிமாளிகையைக் கண்டாரல்லவா? (நாராயண பட்டத்ரியின் கேள்விக்கு ஐயன் தலை யசைத்தார்)
கிம் மார்க்க விப்ரம்ஸ இதிப்ரமத்
க்ஷணம் க்ருஹம் ப்ரவிஷ்ட ஸ ததர்ஸ வல்லாபாம்
ஸகீ பரிதாம் மணி ஹேம பூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மஹாத்புதாம்


குசேலர், வழிதவறி வேறிடத்திற்கு வந்து விட்டோமோ என்று பிரமித்துப் போனார். பின்னர் தன்

மாளிகைக்குள்ளேயே பயத்துடன் மெதுவாக நுழைந்தார். அங்கு பணிப் பெண்களால் சூழப்பட்டு, ரத்னங்களாலும், பொன்னாலும் அலங்கரிக்கப்பட்டு தோழிகள் புடைசூழ அமர்ந்திருந்த தமது மனைவியைக் கண்டார். இவையாவும் உமது அற்புதமான அருள் என்று அறிந்தார் அல்லவா? (நம்பூதிரியின் கேள்விக்கு குருவாயூரப்பன் தலையசைத்து ஆமோதித்தார்)
ஸ ரத்ன ஸாலாஸு வஸந்நபி ஸ்வயம்
ஸமுன்ன மத்க்திபரோ அம்ருதம் யயௌ
த்வமேவாபூரித பக்த வாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே கதாந்


ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல் பக்தியின் பயனாக முக்தியடைந்தார்.
இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும்.

[/TD]
[/TR]
[/TABLE]
[/TD]
[/TR]
[/TABLE]
 

jv_66

Super Moderator
Staff member
#4
[TABLE="width: 99%, align: left"]
[TR]
[TD][TABLE="width: 97%, align: left"]
[TR]
[TD]அட்சய திருதியையன்று சொல்ல வேண்டிய அலைமகள் துதி

தேவி பாகவதத்தில் மகாவிஷ்ணுவே மகாலட்சுமியைப் போற்றிச் சொன்ன சில ஸ்லோகங்கள் எளிய தமிழ் விளக்கத்துடன் இங்கு தரப்பட்டுள்ளது.

அட்சய திருதியை தினத்தில் அகம் முழுக்க அலைமகளை நினைத்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடுங்கள்.

அல்லது இதன் எளிய தமிழ் அர்த்தத்தை மட்டுமாவது சொல்லுங்கள். பொன்மகள் அருளால் உங்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கும்.

ஊர்ணநாபாத் யதாதந்து: விஸ்புலிங்கா: விபாவஸோ
ததா ஜதத் யதேதஸ்யா: நிர்கதம்தாம் நமாம்யஹம்


பொருள் :
சிலந்தியின் வாயிலிருந்து அழகிய நூல் வருவது பால, பெரும் தீயிலிருந்து பொறிகள் பல எழுவது போல, எந்தத் தாயின் பாதங்களிலிருந்து ஞாலமாகிய பல்லாயிரம் அண்டங்கள் பெருகி எழுந்தனவோ அந்தத் தாயின் இணையடிகளைப் போற்றுகிறேன்.

யன் மாயாசக்தி ஸம்ஸப்தம் ஜகத் சர்வம் சராசரம்
தாமசிதாம் புவநாதிதாம் ஸமராம கருணார்ணவாம்


பொருள் :
இந்த உலகின் இயக்கத்தையே தன் மாயா சக்தியால் அசைவின்றி நிற்கச் செய்யும் அரிய ஆற்றலை தன்னகத்தே கொண்டு இயங்குபவள். தன்னால் மயங்கிய அண்டங்களையெல்லாம் மீண்டும் இயங்க வைக்கும் புவனங்களின் தாய் அவள்.

யதக்ஞாநாத் பவோத்பத்தி: யதக்ஞாநாத் பவநாஸநம்
ஸம்வித்ரூபாம்சதாம் தேவீம் ஸ்மராம: ஸா ப்ர சோதயாத்


பொருள் :
அஞ்ஞானத்தால் எந்த தேவியின் பெருமையை அறியாமல் விட்டவர்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொள்கிறார்களோ; எவளின் அருமையை உணர்ந்து போற்றித் தொழுபவர்கள், பலர் போற்றும் வகையில் வாழ்கிறார்களோ, அந்த தேவியின் அருளை வியந்து நெஞ்சாரப் போற்றுகின்றேன்.

மாதர்நதாஸ்ம புவநார்த்தீஹரேப்ரஸீத
மந்நோ விதேஹி குரு கார்யமிதம் தயார்த்ரே

பாரம் ஹரஸ்வ விநிஹத்ய ஸுராரி வாக்கம்
மஹ்யா மஹேஸ்வரி ஸதாம் குரு சம்பவாநி


பொருள் :
தாயே வணங்கிப் பணிகிறேன். புவனத்தின் கஷ்டங்களைத் தீர்ப்பவளே போற்றி. எங்கள்பால் அன்பு வைத்து இன்னல்களைத் தீர்ப்பாயாக. துன்பச் சுமைகளைக் குறைக்கின்றவளே போற்றி. நல்லோரின் எதிரிகளை அழித்து நன்மைகளைத் தருபவளே போற்றி. எங்களுக்கு இன்பத்தைத் தரும் மஹேஸ்வரியே போற்றி.

மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
ஸர்வ சக்த்யை ச தீமஹி
தந்நோ தேவீ ப்ரசோதயாத்


பொருள் :
மகாசக்தியாகவும், உயிர்களை உய்விப்பவளாகவும் நன்னெறியில் நம்மை நடத்திச் செல்பவளாகவும் உள்ள தேவி எங்களைக் காத்திடட்டும். எங்கள் செயல்களை அவளே ஊக்குவிக்கட்டும்.

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸிநீம் பராம்
சரத் பார்வண கோடீந்து ப்ரபாம் முஷ்டிகராம் பராம்


பொருள் :
ஆயிரம் இதழ்த் தாமரையில் அமர்ந்தவளே! கருஞ்சிவப்பு நிற ஆடை உடுத்தியவளே! கோடிக்கணக்கான சரத் கால சந்திரனைப் போல் ஜொலிப்பவளே-எழிலார்ந்த அன்னையே.. உன் திருவடிகளைப் போற்றுகிறேன்.

ஸ்வ தேஜஸா ப்ரஜ்வலந்நீம் ஸுகத்ருஸ்யாம் மநோ ஹராம்
ப்ரதப்த காஞ்சந்திப சோபாம் மூர்த்திமதீம்ஸதீம்


பொருள் :
சுயமான அவள், தன் ஒளியால் ஒப்பில்லா மணியாகப் பிரகாசிப்பவள். தவறில்லாத இன்பத்தைத் தரும் மனோகரமானவள். மாசில்லா பொன்னுக்கும் மேலானவள். ஜோதியே உருவானவள். கற்பில் சிறந்தவள். அப்படிப்பட்ட அலைமகளுக்கு வணக்கம்.

ரத்ந பூபஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாசஸா
ஈஷத் தாஸ்யாம் ப்ரஸந்தாஸ்யாம் சச்வத் ஸுஸ் திரயௌவனாம்

ஸர்வ சம்பத் ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்

பொருள் :
ரத்னமயமான ஆபரணங்களை அணிந்து ஒளிர்பவளே. மங்களகரமான மஞ்சள் வண்ணப் புடவை உடுத்துபவளே. பணிபவர்களின் கோரிக்கைகளை ஒன்றுக்குப் பன்மடங்காகத் தருபவளே. குறையாத இளமையும், வளமுடையவளே. அனைத்துச் செல்வங்களையும் தருபவளே. அன்னையாம் மஹாலக்ஷ்மியே, உனைப் போற்றி வணங்குகிறோம்.
[/TD]
[/TR]
[/TABLE]
[/TD]
[/TR]
[/TABLE]

 

jv_66

Super Moderator
Staff member
#5
அட்ஷய திருதியை தினத்தன்றுதான் இறைவன் விஷ்ணு அக்ஷய பாத்திரத்தை திரவுபதிக்கு கொடுத்தார் என்பதால், இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் மேலும் பெருகும் என்பது சமீபகாலமாக சம்பிரதாயமாகி விட்டது.

இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம்.

அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம்.

ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!

மகத்துவம் மிகுந்த அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த ஒரு செயலைத் துவங்கினாலும், அவை மேன்மேலும் வளர்ந்து வளமை தரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை
 

datchu

New Member
#10

அட்சய திருதியை சிறப்புஅட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ-புண்ணிய கணக்கில் பாவங்கள் ஒரளவு குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும்.
நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

“அட்சய” என்ற சொல்லின் மகிமையை உணர்த்திய மகாபாரதம்

மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் உரிமைகளையும் செல்வங்களையும் இழந்து காட்டில் வாசம் செய்தபோது உணவுக்கு என்ன செய்வது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. அத்துடன் தங்களின் பசியை போல காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் தங்களை தேடி உணவு கேட்டு வரும்போது அவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லக்கூடாதே என்று சிந்தித்த துரோபதை, சூரிய பகவானை நினைத்து வணங்கி அட்சய பாத்திரத்தை பெற்றாள். அந்த நாள்தான் அட்சய தினம்.

அட்சய பாத்திரம் கிடைத்த பிறகு, உணவு கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தாராளமாக உணவு படைத்தாள். இதன் புண்ணியத்தால் பாண்டவர்களுக்கும் – கௌரவர்களுக்கும் நடந்த பாரத யுத்தத்தில் துரோபதி செய்த தர்மம், பாண்டவர்களின் தலையை காத்தது. இழந்த ராஜ்யத்தை திரும்ப பெற்றார்கள். தர்மம் செய்தாலே மோசமான கர்மவினைகள் விலகும், புண்ணியங்கள் சேரும் என்பதற்கு மகாபாரதம் ஒரு சாட்சி. தோஷங்கள் நீங்குவதற்கு அட்சயம் ஒரு அட்சாரம். கர்ணன் பல தானங்கள் செய்தாலும் அன்னதானம் செய்யாததால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே அன்னதானம் செய்தாலே சொர்க்கத்தில் மட்டுமல்ல, இந்த பூலோக வாழ்க்கையும் சொர்கலோக வாழ்க்கையாக அமையும்.

ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர். ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள். நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

குபேரர் லட்சுமிதேவியை பூஜிக்கும் நாள் அட்சய திருதியை:

செல்வத்திற்கு அதிபதி குபேரர். தன் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீலஷ்மி தேவி, குபேரரை என்றும் செல்வந்தனாக இருக்கும் படி ஆசி வழங்குவார். நாமும் இந்த அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும். இறைவனுக்கு பொன் – பொருள் தந்துதான் வணங்க வேண்டும் என்றில்லை. நம் தகுதிக்கு ஏற்ப சமர்பித்து வணங்கலாம். குசேலர் ஸ்ரீகிருஷ்ணருக்கு தன் சக்திக்கேற்ப அவல் மட்டும் தந்துதான் செல்வந்தர் ஆனார். அதேபோல வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டு வாசலில் “பவதி பிக்ஷாந்தேகி” வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, உணவு ஏதும் தர வழியில்லாமல் கலங்கிய அந்த குடும்பத்தின் இல்லதரசி, அப்போது தன் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லி கனியை தந்த பலனால், வறுமையிலும் உயர்ந்த பண்பாட்டில் நிற்கும் அந்த தாயின் நிலையை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாட, அதனால் ஸ்ரீமகாலஷ்மியின் மகிழ்ந்து அந்த குடும்பத்தின் தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். இந்த சம்பவம் நிகழ்ந்த நன்னாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான். ஆகவே அட்சய திருதியை அன்று அன்னதானம், நீர்மோர் தானம்,நன்றாக படிக்கும் ஏழை மாணவ-மாணவிக்கு நம் சக்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை செய்தாலே சொர்கலோக வாழ்க்கை அமையும். அத்துடன் ஸ்ரீ மகாலஷ்மியை அன்று மனமுருகி பிராத்தனை செய்தால் குபேரர் போல் ஆண்டு முழுவதும் சுபிக்ஷத்தோடு செல்வ வசதியோடு வாழ்க்கை அமையும். இதைதான் எல்லா புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கிறது. அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம இல்லை. இருந்தாலும் அவரவர் விருப்பங்களுக்கு சாஸ்திரம் தடையாக இருக்காது. அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும். சக்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள். ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும். அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.

இந்த ஆண்டு அட்சய திருதியை – 02.05.2014
 

Important Announcements!