Alzheimer- அல்சீமர் நோய்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அல்ஸைமருக்கு நவீன சிகிச்சை!
மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடுவதில் தொடங்கி, வந்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்ப திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் ‘நான் யார்?’ என்பதே தெரியாமல் போவது வரை முதியவர்களுக்கு ‘அல்ஸைமர்’ (Alzheimer‘s disease) என்னும் ஞாபக மறதி நோய் தாக்குவது இப்போது இயல்பாகி விட்டது.

உலக அளவில் 60 வயதைத் தாண்டியவர்களில் நூற்றில் 5 பேரையும், 85 வயதைக் கடந்தவர்களில் 5 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 38 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘இந்த எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் ஒரு கோடியைத் தொட்டு விடும்’’ என்கிறது, சென்னையில் உள்ள ‘அல்ஸைமர்ஸ் அண்ட் ரிலேட்டட் டிஸார்டர்ஸ் சொஸைட்டி ஆஃப் இந்தியா’ (ARDSI) என்னும் அமைப்பு.

பெண்களைவிட ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம். அதிலும் பக்கவாதம் தாக்கிய ஆண்களை மிக விரைவில் இது தாக்குகிறது. பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால், வாரிசுகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.

இது தவிர, விளையாட்டிலும் விபத்திலும் தலையில் அடிபட்டவர்கள் உடனே தலையை ஸ்கேன் செய்து கவனிக்கத் தவறினால் பின்னாளில் அல்ஸைமர் நோய் வரக் கூடும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மது அருந்துவது, புகைப்பழக்கம் போன்றவற்றால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் இது தாக்குவது அதிகம்.
வயது ஏற ஏற மூளை செல்கள் சுருங்கி, அந்தப் பகுதியில் ‘அமைலாய்டு’ (Amyloid), ‘டௌ’ (Tau) என்னும் இரண்டு புரதப்பொருள்கள் படிகின்றன.

இதனால், பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப் போல, மூளை செல்கள் சிறிது சிறிதாக மடிந்து போகின்றன. இதன் விளைவால் ஞாபக சக்தி குறைகிறது. ‘கார் சாவியைக் காணோம்’, ’செல்போனை எங்கே வைத்தோம்’ என்று வைத்த பொருளைத் தேடுவது சாதாரண மறதி. இதை ‘டிமென்ஷியா’ (Dementia) என்போம். காணாமல் போன பொருளைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருப்பது அல்ஸைமர் நோய்.

அல்ஸைமர் நோயில் அறிவு சார்ந்த செயல்பாடுகள் முதலில் மறந்துபோகும். ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு குறைந்துகொண்டே வரும். இது முதல் கட்டம். இரண்டாவது கட்டத்தில், வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்கள் வரை நினைவில் நிற்காது. மூன்றாவது கட்டத்தில் ஞாபகம் மொத்தமே அழிந்துபோகும்.

உணவை வாயில் போட்டுக்கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்றுகூட தோணாது; மென்றுகொண்டே இருப்பார்கள் அல்லது துப்பி விடுவார்கள். மனைவியையே ‘‘இவர் யார்?’’ என்று கேட்கும் அளவுக்கு மறதி நோய் முற்றி விடும். இறுதியில், எதற்கெடுத்தாலும் சந்தேகம், கோபம், எரிச்சல்படுவது என்று மன பாதிப்புகளுக்கு உள்ளாகி, தன்னிலை மறந்து திரிவார்கள். இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கும்.

இப்படிப்பட்டவர்களை அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் கடமை. ஆனால், கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இன்றைய சூழலில், தன்னிலை மறந்து தவிக்கும் அல்ஸைமர் நோயாளிகளை கவனிப்பது சற்றே சிரமமான காரியம்தான். ஆகவே, இந்த நோய் யாருக்கு வரக்கூடும் என்பதை முதலிலேயே தெரிந்துகொண்டால், அதற்குரிய முறையான தடுப்புகளை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கமுடியும் என்று மருத்துவ அறிவியல் உலகம் முயற்சி எடுத்தது. அதற்கு ஒரு வழியும் அண்மையில் கண்டுபிடித்துவிட்டது.

அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் உள்ள மேயோ கிளினிக்கில் அல்ஸைமர் நோய் சிகிச்சையின் தலைமை மருத்துவர் கெய்த் ஜோசப் என்பவர் டிடிபி 43 (ஜிஞிறி43) என்னும் ஒரு வகைப் புரதம் மூளை செல்களில் இருப்பவர்களுக்கு அல்ஸைமர் நோய் வருகிறது என்று கண்டுபிடித்துள்ளார். இந்த நோய் வந்த 342 பேரை ஆராய்ச்சி செய்தபோது 195 பேருக்கு இந்த அசாதாரணமான புரதம் அவர்கள் மூளை செல்களில் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புரதம் ரத்தத்திலும் இருக்கிறது. இது ஒரு பயோமார்க்கர் மாதிரி செயல்படுகிறது.

பயோமார்க்கர் என்பது உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலியல் உயிர்ப் பொருள். இது மரபணு, என்சைம், புரதம், கொழுப்பு, செல்லின் நுண்அங்கம் என்று எதுவாகவும் இருக்கலாம். களவுபோன வீட்டில் கைரேகைகளைப் பார்த்துத் திருடனைக் கண்டுபிடிக்கிற மாதிரிதான் இது. ஒருவர் உடலில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோமார்க்கருக்குரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும்.

ஐம்பது வயதைக் கடந்தவர்களிடம் ரத்தப்பரிசோதனை செய்து, இந்தப் புரதம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டால், அவர்களுக்கு முன்கூட்டியே நினைவாற்றல் பயிற்சிகளை மேற்கொள்ள வைப்பது, மூளைக்கு ஊட்டமளிக்கும் சத்துக்களைச் சாப்பிடச் சொல்வது, புகை பழக்கத்துக்கு விடை கொடுப்பது, மதுவை மறக்க வைப்பது போன்றவைகளைப் பின்பற்ற வைத்து அல்ஸைமர் பாதிப்பை ஓரளவு குறைத்துவிடலாம் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் கெய்த் ஜோசப்.

அல்ஸைமர் நோய்க்கு ஒரு நவீன சிகிச்சையையும் கண்டுபிடித்துள்ளனர் அதே அமெரிக்காவில். கலிபோர்னியா பல்கலைக்கழகமும் கிளாட்ஸ்டோன் நிறுவனமும் (Gladstone Institute) இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இது சாத்தியமாகியுள்ளது. அல்ஸைமைர் நோயாளிகளிடம் ‘அப்போணி4’ எனும் மரபணு (ApoE4 gene) காணப்படுகிறது. இது ஒரு அசாதாரண மரபணு.

இதுமூளையில் நினைவாற்றலுக்குப் பெரிதும் உதவுகின்ற ஹிப்போகாம்பஸ் பகுதி நியூரான்களை மியூட்டேஷன் முறையில் அழித்துவிடுகிறது. இதுதான் இந்த நோய்க்கு அடிப்படைக் காரணம். இந்த செல்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஸ்டெம் செல்களைப் பதித்துவிட்டால், நாளடைவில் புது நியூரான்கள் வளர்ந்து நினைவாற்றலைத் திருப்பித் தந்துவிடுகிறது. எப்படியோ மறதி மறைந்தால் சரி!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Alzheimer- அல்சீமர்? குழந்தையாக பாவியுங்கள்!

அல்சீமர்? குழந்தையாக பாவியுங்கள்!

முதுமையில் மறதி
வீட்டை விட்டு வெளியே போன மனைவி திரும்ப வீட்டுக்கு வழி தெரியாமல் நட்டநடுத் தெருவில் தவித்து நிற்பதும்... கொட்டுகிற மழையில் மனைவியைக் காணாமல் ஊரெங்கும் அலைந்து திரிகிற கணவர்... காணாமல் போன மனைவி கிடைத்துவிட வேண்டுமே என்று தவிப்பதும் படம் பார்ப்பவர்களையும் பற்றிக் கொள்ளும்.சமைத்துச் சாப்பிட்ட பாத்திரத்தை மறுபடி அடுப்பில் வைப்பது, உரித்த பட்டாணியை திரும்பவும் உரிப்பது என படம் நெடுகிலும் நீளும் அந்த மனைவியின் மறதிக் காட்சிகள். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் மறதி மனைவியாக லீலா சாம்சனும், அவரது கணவராக பிரகாஷ் ராஜும் நடித்திருப்பார்கள். மனைவியின் மறதிப் பிரச்னையை அல்சீமர் (Alzheimer’s Disease) என்பார் கணவர். அதாவது, முதியவர்களைத் தாக்கும் மறதி நோய்!

அல்சீமர் நோயின் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.‘‘அல்சீமர் நோய் எதனால் வருகிறது என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை. முதுமையில் வரும் மறதிக்கும், அல்சீமர் மறதி நோய்க்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதுமையில் மறதி வரும். கொஞ்ச நேரம் கழித்து நினைவுக்கு வந்துவிடும்.

அல்சீமரிலோ மறந்தது எளிதில் நினைவுக்கு வராது. சிலருக்கு அல்சீமர், டிமென்ஷியா என்று இரண்டும் சேர்ந்து வரும் ஒரு வகையும் இதில் உண்டு. காரணத்தையும் கண்டறிய முடியாது. இவ்வகை அல்சீமருக்கு சிகிச்சைகளும் கிடையாது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறதி கடுமையாக இருக்கும். மூளையில் அசிட்டைல்கொலைன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைவதால் டிமென்ஷியா மறதி நோய் ஏற்படும்.

மரபு ரீதியாக வரும் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள், வேதியியல் பொருட்களின் தாக்கத்தால் கூட அல்சீமர் வருகிறது என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுவரை நிரூபணம் இல்லை. அல்சீமர் நோய் பாதித்தவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு டிமென்ஷியாவும் சேர்ந்தே இருக்கிறது. முதுமை மறதி உள்ள ஒருவரிடம் பேனாவை கொடுத்தால் முதலில் ‘கத்தி’ என்பார். ‘நல்லா பாருங்க... எழுதிப் பாருங்க...’ என்று சொன்னால், ஆமாம்! பேனாதான்! என்று ஏற்றுக்கொள்வார்.

அல்சீமர் பிரச்னை இருப்பவரோ பேனாவை கடைசி வரை ‘கத்தி’ என்றே சாதிப்பார். நாம் சொல்வதை ஒப்புக்கொள்ளவே மாட்டார். பிரெஷ்ஷில் பேஸ்ட்டை வைத்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நிற்பார்கள். காபி குடித்ததை மறந்துவிட்டு, ‘எனக்கு காபியே கொடுக்கவில்லை’ என மருமகளிடம் சண்டை போடுவார்கள்.

70 வயது தாண்டிய பெண்களுக்கே இப்பிரச்னை அதிகமாக வருகிறது. தனிமையும் மனச்சோர்வும் கூட மறதிக்கு காரணமாக அமையும். வீட்டுக்குப் போகும் பாதையை மறப்பார்கள். இடம், காலம், நேரம் எல்லாம் அவர்களுக்கு அடிக்கடி மறக்கும். அல்சீமர் உள்ளவர்கள் சமையலறையில் போய் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு மறதி உடையவர்களாக இருப்பார்கள்.

அடிக்கடி மறதிக்கு உட்படுபவர்களுக்கு ‘மினி மென்டல் ஸ்டேட்டஸ் எக்ஸாமினேஷன்’ என்ற பரிசோதனையை செய்து பார்ப்போம். இதில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்படும். 25 முதல் 28 கேள்விகள் வரை சரியாக சொல்லிவிட்டார்கள் என்றால் நார்மல் என்று அர்த்தம். 20க்கும் கீழே சரியாக சொன்னார்கள் என்றால் லேசாக மறதி ஆரம்பிக்கிறது எனப் பொருள். 10க்கு கீழே தவறாகச் சொன்னால் ஞாபகசக்தி மிக மோசமாக திக்கப்பட்டிருக்கிறது என கண்டறிவோம். இந்தப் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டே சிகிச்சையை தொடங்குவோம்.

50 வயதுக்கு கீழே உள்ள சிலருக்கு கூட அல்சீமர் வரும். இதை Early Alzheimer என்று அழைப்போம். வீரியமான மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பவர்களுக்கு, அதிக மனச்சோர்வு உள்ளவர்களுக்கு, தலையில் கட்டி அல்லது காயம் உள்ளவர்களுக்கு, வைட்டமின் பி12 குறைவாக உள்ளவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்கக்கூடும்.

அல்சீமர் நோய் வந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை குழந்தையாக பாவித்து அரவணைத்து வழிநடத்த வேண்டும். அறியாமல் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தக்கூடாது. பசலைக்கீரை, கிரீன் டீ, வெங்காயம், முளை கட்டிய கோதுமை, உலர் திராட்சை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வல்லாரை கீரை ஆகியவை மூளைக்கு பலம் தந்து நினைவாற்றலை தக்க வைக்க கூடிய உணவுகள்.

அல்சீமர் நோய்க்கு உள்ளானவர்கள் உடலை பருமனாக வைத்திருக்கக் கூடாது. 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தினமும் போதிய நடைப்பயிற்சி செய்யவேண்டும். தகுந்த கால இடைவேளையில் முறையான மருத்துவ பரிசோதனையை செய்ய வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மது, புகைப்பிடித்தலை நிறுத்திவிட வேண்டும்.

தனிமையை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பது, விளையாடுவது போன்றவை வயதானவர்களின் தனிமையை போக்கிவிடும். தியானம், பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி), யோகா ஆகிய ஆரோக்கியம் தரும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

மூளையைத் தூண்டும் பயிற்சிகளான குறுக்கெழுத்து, வார்த்தை விளையாட்டு, பாடல்களை மனப்பாடம் செய்து எழுதுதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டலாம். கணினியை தினமும் பயன்படுத்தினால் மூளைக்குப் போதிய பயிற்சி கிடைக்கும். நடைமுறை விஷயங்களை மாற்றி புதிதான செயல்களில் ஈடுபடுவது மூளைக்கு புத்துணர்ச்சியைத் தரும். அல்சீமரை பொறுத்த வரை வாழ்க்கை முழுவதும் இருக்கும். அதனுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்...’’

அல்சீமர் இருப்பவர் வீட்டுக்கு போகும் பாதையை மறப்பார்கள். இடம், காலம், நேரம் எல்லாம் அவர்களுக்கு அடிக்கடி மறக்கும். சமையலறையில் போய் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு மறதி உடையவர்களாக இருப்பார்கள்...
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
re: Alzheimer- அல்சீமர் நோய்

thank you for giving us with this valuable information! thank you @chan
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
எல்லாம் ஞாபகம் இருக்கா

எல்லாம் ஞாபகம் இருக்கா?

டாக்டர் எம்.ஏ.அலீம்

உலக அல்செய்மர் நோய் நாள் செப். 21

மனக் கணக்கு போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா - இல்லையா என்ற சந்தேகம், வீட்டைப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற குழப்பத்துடன் கூடிய சந்தேகம் போன்றவை எல்லாம் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை, பிரச்சினையும் இல்லை. இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

l டிமென்சியா எனப்படும் மூப்புமறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். இவர்களில் 60 -70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

l வயதானவர்களுக்குத்தான் அல்செய்மர் நோய் ஏற்படுகிறது. மனித வாழ்நாள் அதிகரிப்பால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அல்செய்மர் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

l உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் 50 லட்சம் அல்செய்மர் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது.

l சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் 60-க்கு வயதுக்கு மேல் தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

l அல்செய்மர் நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்டவர் ஓர் இடத்துக்குத் தனியாகப் போய்விட்டுத் திரும்பி வரமுடியாது. துணிகளைப் பீரோவில் வைப்பதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். குளியலறைக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு சமையலறைக்குப் போவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பம் ஏற்படும். திடீரென எந்த ஊரில் இருக்கிறோம், யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். காலையில் என்ன சாப்பிட்டோம் என்று ஞாபகம் இருக்காது. உறவினர்களின் முகத்துக்குப் பதிலாகக் குரலை வைத்து அடையாளம் காண்பார்கள். பாதிப்புகளை இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நோய் முற்றும்போது நெருங்கிய சொந்தங்களைக்கூட மறந்துவிடுவார்கள்.

l அல்செய்மர் நோய் யாருக்கு யாருக்கு வரும்? வயதானவர்களுக்கு வயது மூப்பால் வரும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாத நோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, கொழுப்புச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் இருக்கத் தலைக்கவசம் அணிந்துகொள்வது போன்றவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

l உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், அறிவைத் தூண்டக்கூடிய சுடோகு, புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் அல்செய்மர் நோய் வராமல் தடுக்கலாம்.

l சமூகத்தில் முதியவர்களுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முதியவர் களுக்கு ஏற்படும் அல்செய்மர் நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. நோய் பற்றி விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் செப்டம்பர் 21 உலக ஞாபகமறதி நோய் நாள் (World Alzheimer's Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து ‘எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’.
கட்டுரையாளர், மூளை நரம்பியல் நிபுணர்

தொடர்புக்கு: drmaaleem@hotmail.com
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.