Artificial Muscles -செயற்கை தசை தயார்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
செயற்கை தசை தயார்!

தசை சிதைவு நோய்க்கு குட்பை


‘உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்பார்கள் வெங்காயத்தை! ஆனால் அந்த வெங்காயத்திலிருந்து மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் தேவையான தசையை செயற்கையாகத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது மருத்துவ விஞ்ஞானம். இந்த அதிசயத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நம் தசைகளின் அனாடமியை்த் தெரிந்து கொள்வோம்...

நம் உடலின் பலத்துக்கும் இயக்கத்துக்கும் ஆதாரத் திசுக்களாக இருப்பவை தசைகள். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களால் ஆன நாண்களின் தொகுப்பு இவை. நம் உடலில் சிறிதும் பெரிதுமாக 700க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இடுப்பில் உள்ள ‘குளூட்டியஸ் மேக்சிமஸ்’ (Gluteus maximus) எனும் தசை மிகப் பெரியது.

முதுகில் உள்ள ‘லேட்டிஸ்மஸ் டார்சை’ (Latissimus dorsi) தசை மிகவும் அகலமானது. இடுப்பில் ஆரம்பித்து முழங்கால் மூட்டில் முடியும் ‘சார்ட்டோரியஸ்’ (Sartorius) தசை மிகவும் நீளமானது. உடலில் உள்ள தசைகளில் அதிக வலுவானது கீழ்த்தாடையில் காணப்படும் மசேட்டர் தசை (Masseter). நடுக்காதில் உள்ள ஸ்டெபிடியஸ் (Stapedius) தசைதான் உடலிலேயே மிகச் சிறியது.

இதயத் தசை தவிர எந்த ஒரு தசையும் தனியாக இயங்குவதில்லை. எலும்புகளோடு இணைந்துதான் இயங்குகின்றன. தசைநாண்கள் இவற்றை எலும்பின் முனைகளில் இணைக்கின்றன. எலும்பின் உதவியுடன் ஓர் இயக்கம் நிகழும்போது ஒரு தசை விரியும்; மற்றொரு தசை சுருங்கும். எல்லா தசைகளும் ஒரே திசையில் இயங்குவதில்லை.

தசைகளில் எலும்புத் தசை, இதயத் தசை, மென் தசை என்று மூன்று வகைகள் உண்டு. எலும்பில் இணைந்து இயங்கும் தசையை எலும்புத் தசை (Skeletal muscle) என்கிறோம். இத்தசைகள் நம் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நமக்குத் தேவைப்படும் இயக்கத்தைக் கொடுக்கின்றன. உதாரணத்துக்கு நடக்கவும், நிற்கவும், பொருளை எடுக்கவும் உதவுகின்ற கை, கால் எலும்புத் தசைகளைச் சொல்லலாம்.

மென் தசைகள் (Smooth muscles) உடலின் உள்ளுறுப்புகளில் உள்ளன. இவற்றின் இயக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மூளை இடும் கட்டளைக்கு ஏற்ப இவை இயங்குகின்றன. உணவுப் பாதை, சுவாசப் பாதை தசைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். உடலில் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு தசை, இதயத் தசை (Cardiac muscle). இதயத்துடிப்பு என்பதுதான் அந்த தனித்தன்மை. வேறு எந்த தசைக்கும் இம்மாதிரியான ஒழுங்குமுறையில் துடிக்கும் தன்மை கிடையாது. இதயத் தசையின் இந்த இயக்கத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதயம் தானாகவே இயங்குகின்ற ஒரு தசை வீடு.

நம் உடல் எடையில் பாதி, தசைகளின் எடை. ஒவ்வொரு உறுப்பும் பல தசைகளால் ஆனது. உதாரணத்துக்கு நாக்கில் மட்டும் எட்டு தசைகள் உள்ளன. இதுபோல் ஒவ்வொரு இயக்கத்துக்கும் பல தசைகள் ஒரே நேரத்தில் இயங்க வேண்டும். உதாரணத்துக்கு புன்சிரிப்புக்கு 17 தசைகள் ஒத்துழைக்க வேண்டும். முகம் மற்றும் கழுத்தில் 11 தசைகள் இயங்கினால்தான் கொட்டாவி விட முடியும். உடலிலேயே அதிக காலம் இயங்கும் தசை இதயத் தசை மட்டுமே.

எலும்போடு இணைந்த தசைகளை முறையாக இயக்கத் தவறும்போது அவை பாதிக்கப்படுகின்றன. தசை சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் தற்காலிகமானவை. மரபணுக் கோளாறு காரணமாக பரம்பரை ரீதியில் கடத்தப்படும் தசை சிதைவு நோய், தசை வலுவிழப்பு நோய் போன்றவை நிரந்தரமானவை. இவற்றை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. சில பயிற்சிகள் மூலம் ஓரளவுக்கு சரி செய்யலாம். இவற்றால் உயிருக்கும் ஆபத்து நேர்வதுண்டு.

வலுவிழந்த தசைகளுக்கு மாற்றாக செயற்கை தசைகளைப் பொருத்தி உடலியக்கத்தை மீட்பதற்கான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் தைவான் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றிபெற்றுள்ளனர். பேராசிரியர் வென்பின் ஷை உதவியுடன் அவரது மாணவர் செய்ன் ஷன் சென் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

‘‘செயற்கை தசை தயாரிப்பு விஞ்ஞான உலகிற்குப் புதிதல்ல; கிராபின், எலாஸ்டோமர், வனெடியம் டையாக்சைடு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட செயற்கை தசைகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இவை நெகிழ்வுத்தன்மை அற்றவை. இவை விரியும். ஆனால் அதன்பின் தேவைக்கேற்ப சுருங்கும் தன்மையும் அதைத் தொடர்ந்து விரியும் தன்மையும் இவற்றுக்கு இல்லை. இந்தக் குறையை நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம்.

வெங்காய செல்களின் தன்மையும் மனித தசை செல்களின் தன்மையும் ஓரளவுக்கு ஒத்துப் போனதை அடிப்படையாக வைத்து எங்கள் ஆராய்ச்சிகளை அமைத்துக்கொண்டோம். வெங்காயத்தின் முதல் அடுக்குத் தோலுக்கு ‘எபிடெர்மிஸ்’ என்று பெயர். இதன் செல்களில் ஹெமிசெல்லுலோஸ் எனும் புரதம் இருக்கிறது. இதுதான் வெங்காயத் தோல் அடுக்கைக் கடினமாக்குகிறது. நாங்கள் ஒரு ரசாயனத்தைச் சேர்த்து ஹெமிசெல்லுலோஸைப் பிரித்தெடுத்துவிட்டோம்.

பிறகு அந்தப் பகுதியில் தங்கத்தால் முலாம் பூசி உறையிட்டோம். ஒருபுறம் மெல்லிய படலமாகவும் மறுபுறம் தடிமனான படலமாகவும் உறை கொடுத்தோம். ஒரு குறிப்பிட்ட அளவில் மின்சாரத்தை இந்த உறைகளுக்குச் செலுத்தினோம். அப்போது தங்க அடுக்கானது மின்கடத்தியாகச் செயல்பட்டு செல்படல் இயக்கத்தைத் தூண்டியது.

அதாவது, குறைந்த அளவு மின்சாரத்தைச் செலுத்தும்போது இந்தப் படலம் விரிவடைகிறது. அதிக அளவு மின்சாரத்தைச் செலுத்தும்போது சுருங்கவும் செய்கிறது. எனவே இந்த செல் படலங்களை இன்னும் அதிக அளவில் உருவாக்கி செயற்கை தசையாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தோம். விரைவில் தசை சிதைவு நோய் மற்றும் தசை வலுக்குறைவு நோய்க்கு எங்கள் கண்டுபிடிப்பு சரியான தீர்வு தரும்’’ என்று நம்பிக்கை தருகிறார் செய்ன் ஷன் சென்.டாக்டர் கு.கணேசன்
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Wonderful technology development.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
Very useful info.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.