Artificial Sweeteners for Diabetes - சுவை கூட்டும் செயற்கை இனிப்பூட்டி

chan

Well-Known Member
#1
சுவை கூட்டும் செயற்கை இனிப்பூட்டிகள்


டாக்டர் கு.கணேசன்

நீரிழிவு நோயாளிகள் வீட்டில் காபி, டீ குடிக்கும்போது, ‘காபியில் சர்க்கரை போட வேண்டாம். ஒரு சாக்கரின் மாத்திரை அல்லது இரண்டு சுகர் ஃப்ரி மாத்திரையைப் போட்டுக் கொடுங்க’ என்று பேசிக்கொள்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சாக்கரின், சுகர் ஃப்ரி என்பவை என்ன? மருத்துவ மொழியில் சொன்னால், ‘செயற்கை இனிப்பூட்டிகள்’!

கரும்பு போன்ற இயற்கைப் பொருளிலிருந்து கிடைக்கும் சர்க்கரைக்குப் பதிலாக, செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கொண்டு உணவுகளை இனிப்பாக்கும் மருந்துகளை ‘செயற்கை இனிப்பூட்டிகள்’ (Artificial Sweeteners) என்பர். சாக்கரின், அஸ்பார்ட்டேம், சுக்ரலோஸ், ஸ்டீவியோசைட், லேவுலோஸ் ஆகியவை சில முக்கியமான செயற்கை இனிப்பூட்டிகள். இவை சர்க்கரையைவிட அதிக இனிப்புச்சுவை உடையவை. அதேநேரம், இவை ரத்தச் சர்க்கரையை அதிகரிப்பது இல்லை. காரணம், இவற்றுக்குக் கலோரி சக்தி மிகக் குறைவு. காபி, டீ அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

இந்த இடத்தில் அம்மாக்களுக்கும் ஒரு இனிய செய்தி... வீட்டில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், மற்றவர்கள் தங்கள் விருப்பத்துக்கு இனிப்பு சாப்பிட முடியாமல் திண்டாடுவார்கள். இனி உங்களுக்கும் கவலை இல்லை. வீட்டில் இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கும்போது, சர்க்கரை, வெல்லம் போன்றவற்றுக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தியும் தயார் செய்யலாம். இப்போது இவற்றைப் பயன்படுத்திப் பலகாரங்கள் செய்து விற்கும் ஸ்வீட் ஸ்டால்கள் நகரங்களில் நிறைய உள்ளன. செயற்கை இனிப்பூட்டிகள், கடைகளில் பல பெயர்களில் விற்கப்படுகின்றன. இவை எல்லாமே ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
சாக்கரின்

இது சர்க்கரையை விட 300 மடங்கு அதிக இனிப்புடையது. ‘பென்சாயிக் சல்ஃபினைட்’ (Benzoic Sulfinide) என்பது இதன் வேதிப்பெயர். இதில் கலோரி சக்தி எதுவும் இல்லை. இது ரத்தச் சர்க்கரையை உயர்த்துவது இல்லை. ஆகவே, இனிப்பாக எதையும் சாப்பிட முடியவில்லையே என்று கவலைப்படும் நீரிழிவு நோயாளிகள், இதை காபி, டீ அல்லது பாலில் சர்க்கரைக்குப் பதிலாக சேர்த்துக் கொள்ளலாம். ஒரு மாத்திரை 12 மி.கி. அளவுடையது. நாளொன்றுக்கு 10 மாத்திரைகள் வரை பயன்படுத்தலாம்.
அஸ்பார்ட்டேம்

இது அஸ்பார்டிக் அமிலம், எல்-பினைல்அனனின் (L-Phenylananine) எனும் இரண்டு அமினோ அமிலங்கள் கலந்துள்ள இனிப்பூட்டி. சர்க்கரையைவிட 180 மடங்கு இனிப்புச்சுவை கொண்டது. ஒரு மாத்திரை 18 மி.கி. அளவுடையது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 12 மாத்திரைகள் வரை பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் இதைப் பயன்படுத்தக் கூடாது.

சுக்ரலோஸ்

இது பவுடர் மாதிரி இருக்கும்; வேதி அமைப்பின்படி ‘குளோரோ கார்பன்’ வகையைச் சேர்ந்தது. சாதாரண சர்க்கரையைவிட 600 மடங்கு அதிக இனிப்பு சுவை உடையது. இதைச் சமையலுக்கும் இனிப்புகள் மற்றும் பேக்கரி பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.


ஸ்டீவியோசைட்

தென்அமெரிக்கத் தாவர இலை ஒன்றிலிருந்து தயாரிக்கப்படுகின்ற செயற்கை இனிப்பூட்டி இது. சர்க்கரையைவிட 300 மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. இதுவும் சமையலுக்கும், இனிப்புகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாதது.

லேவுலோஸ்

இது தேன், பழங்கள் போன்ற இயற்கையாகக் கிடைக்கும் இனிப்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சர்க்கரையைவிட இரண்டு மடங்கு இனிப்புச் சுவை கொண்டது. காபி, பால் போன்ற பானங்களில் கலந்து சாப்பிடலாம். இனிப்பு தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.
இத்தனை இனிப்பூட்டிகள் இப்போது நமக்குக் கிடைத்தாலும், சாக்கரின்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. தெரிந்துகொள்வோமா?

1877ல் அமெரிக்க அரசு, வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்படும் வெண் சர்க்கரையில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஹெச்.டபிள்யூ.பெரெட் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இந்த நிறுவனத்தில் ஃபால்பெர்க் எனும் ரஷ்ய வேதியியலாளர் இந்தப் பணிக்காக வரவழைக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் இரா ரெம்சென் என்பவர், சல்ஃபா பென்சாயிக் அமிலத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இவரது சோதனைச்சாலை பல வழிகளில் நவீனமானது என்பதை அறிந்த பெரெட் நிறுவனம், ஃபால்பெர்க்கின் ஆராய்ச்சிக்கு அங்கு இடமளிக்க வேண்டினர். அதற்கு ரெம்சென் சம்மதித்தார்.

1878 ஜூன் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவர் உணவு சாப்பிட தாமதமாகிவிட்டது. கை கழுவாமல் ஒரு ரொட்டித் துண்டை அவசரமாகச் சாப்பிட்டார். அது வழக்கத்தைவிட அதிக இனிப்பாக இருந்தது. வியப்புடன் தன் விரல்களைச் சப்பினார். விரல்களும் இனித்தன. வியப்பு அதிகமாக சோதனைச்சாலைக்கு விரைந்தார். அன்றைக்கு அவர் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய கண்ணாடித் தட்டு, குடுவை மற்றும் எல்லா உபகரணங்களிலும் ஒரு உப்பு போன்ற பொருள் படிந்திருப்பதைக் கண்டார். அதைச் சுரண்டி எடுத்து ருசி பார்த்தார். அது மிகவும் இனித்தது. காரணம் தெரிந்துகொள்ள அந்தப் படிகத்தைப் பரிசோதித்தார். அது பென்சாயிக் சல்ஃபினைட் எனும் வேதிப்பொருளாக இருந்தது.

இது எப்படி உருவானது? யோசித்தார். அப்போதுதான் ஓர் உண்மை விளங்கியது. முதல் நாளில் ஒரு குடுவையில் சல்ஃபா பென்சாயிக் அமிலத்தைக் கொதிக்க வைத்தவர், அதை நிறுத்த மறந்து விட்டார். அது தொடர்ந்து கொதித்துச் சிதறி மேஜையிலிருந்த பாஸ்பரஸ் குளோரைடு மற்றும் அமோனியாவுடன் கலந்து பென்சாயிக் சல்ஃபினைடாக தானாகவே உருமாறியிருந்தது. இதுதான் மேசையிலிருந்த பொருள்களில் படிந்திருந்தது. அதை மீண்டும் தனியாகத் தயாரித்து சாக்கரின் என்ற பெயரில் விற்பனைக்கு அனுப்பினார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதோடு மருந்து விற்பனையில் சாதனை படைத்தது. ஒரு விபத்துபோல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனிப்பூட்டி அடுத்தடுத்து பல இனிப்பூட்டிகளைக் கண்டுபிடிக்கவும் வழிவகுத்தது.
 

Important Announcements!