Autism - ஆட்டிஸம்’

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
#1
[h=1]என் மகன் என்னை ஒருநாள் கொல்லக் கூடும்![/h]
ஷட்டர் ஸ்டாக்
‘ஆட்டிஸம்’ குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்குச் சமூகம் உதவ வேண்டும்
என்னுடைய 14 வயது மகன் ஒரு நாள் என்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சுகிறேன். இதை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்.
14 வயதான என் மகன் ராபி, ‘ஆட்டிஸம்’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறான். 6 அடி உயரமும் அதற்கேற்ற பருமனும் வலுவும் உள்ளவன். பூஞ்சையான என்னை அடித்து நொறுக்கிவிடுவான். அவன் அளவுக்கு உயரமும் வலுவும் உள்ள என் கணவர் டேவிட் அருகில் இல்லாவிட்டால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
எங்கள் பரிதாப நிலைமை
ராபி என்னை முதலில் அடித்தபோது அவனுக்கு வயது 11. வேண்டும் என்றே அடித்தான் என்று நான் நம்பத் தயாரில்லை. ஒரு வாரமாக வானிலை சரியாக இல்லாததால் வீட்டில் அடைந்து கிடந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகிலிருந்த அருங்காட்சியகத்துக்குச் செல்ல முடிவுசெய்தோம். ராபி திடீரென்று கத்துவான், வினோதமாக நடந்துகொள்வான். அதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் முகம் சுளிப்பார்கள் அல்லது ஏன் வெளியில் கூட்டி வருகிறீர்கள் என்று கோபமாகக் கேட்பார்கள். அவனையே எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். இதனாலேயே ராபியின் தம்பி ஜோ அவமானம் அடைவான். அண்ணனைக் கூட்டிக்கொண்டு வெளியில் போக வேண்டாம் என்பான். காலையில் புறப்பட்டுவிட்டால் கூட்டம் வருவதற்கு முன் சுற்றிப்பார்த்துவிட்டு அவனைக் கூட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தோம். அப்படிச் செல்வது எங்களைவிட அவனுக்காகத்தான் என்பது பலருக்கும் புரியவில்லை.
முதல் அரை மணி நேரம் அமைதியாகக் கழிந்தது. நம்பிக்கை ஏற்பட்டது. காபி கடைக்குப் போய் சாப்பிடுவதைவிட இங்கேயே வாங்கி வந்துவிடுகிறேன் என்று டேவிட் சென்றார். இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம் ஒரு பெரிய குடும்பம் சளசளவென்று பேச்சுகளோடு ஆரவாரமாக உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்ததும் ராபி தன்வசம் இழந்து கிரீச்சென்று ஓலமிட்டுத் தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான். ஜோ அவமானத்தாலும் கோபத்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் ராபியைச் சமாதானப்படுத்த முயன்றேன். அந்தக் குடும்பம் முழுக்க அருகே வந்து வேடிக்கை பார்த்தது. தரையில் கையையும் காலையும் ஓங்கி ஓங்கி அடித்தான் ராபி. நான் அவனைச் சமாதானப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் இரு கைகளையும் சேர்த்து அணைத்துத் தூக்க முயன்றேன். மின்னல் வேகத்தில் என் மூக்கின் மீது ஒரு குத்துவிட்டான். குருத்தெலும்பு உடைந்துவிட்டதை உணர்ந்தேன். தரையில் மட்டமல்லாக்கச் சரிந்தேன். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. மூக்கிலிருந்து குபுகுபுவென்று ரத்தம் பொங்கியது. என் வலியைவிட ராபியின் நிலையை நினைத்து எனக்குக் கண்ணீர் பொங்கியது.
ஜோவுக்குப் பிடிக்காத ராபின்
அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், “டேய் பையா! அம்மாவை அடிக்காதே நிறுத்து” என்று இரைந்தார். ராபி அதைக் காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் என் தலைமீது அடித்துக்கொண்டே இருந்தான். எங்களைச் சுற்றி நின்றவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. காபி கப்புகளுடன் அங்கு நுழைந்த டேவிட் என்னை ராபி அடிப்பதைப் பார்த்ததும் கோப்பைகளை அப்படியே தரையில் வீசிவிட்டு ராபியைப் பாய்ந்து பிடிக்கத் தொடங்கினார். கூட்டத்திலிருந்த ஒருவர் டேவிட்டைப் பார்த்து, “அந்தப் பையனை நன்றாக உதையுங்கள்” என்று கத்தினார். “முட்டாளே, அவன் ஆட்டிசக் குழந்தை” என்று டேவிட் பதிலுக்குக் கத்தினார். ஒரு கைதியை போலீஸ் அடக்கி கூட்டிச் செல்வதைப் போல காருக்கு அவனைத் தள்ளிக்கொண்டு வந்தார் டேவிட்.
அந்தச் சம்பவத்திலிருந்து மீள எங்களுக்கு ஒரு வாரம் ஆனது. என்னுடைய கண்களைச் சுற்றி கருப்பாக ரத்தம் கட்டியிருந்தது. மூக்கும் கன்னங்களும் கன்னிப்போயிருந்தன. ராபிக்காக நான் வேலையை விட்டுவிட்டேன். ராபி முற்பகலில் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் செல்வான். பிற்பகலில் அவனுடன் நான் தனியாக இருக்க வேண்டுமே என்று டேவிட் கவலைப்பட்டார். ராபி சின்னக் குழந்தையாக இருந்தபோது சுட்டியாக இருந்தான். அழகான, தெளிவான முகமும் குரும்புச் சிரிப்பும் சுருட்டை முடியுமாக பார்ப்பவர்களைக் கவர்ந்தான். ஜோ பிறந்தவுடன் வீட்டு வேலையில் என் சகோதரி உதவினாள். புதிய குழந்தைக்காகத் தன்னைக் கவனிப்பதில் உள்ள மாற்றத்தை ராபி விரும்பவில்லை. கோபத்தை வெளிப்படையாகக் காட்டினான். அப்போதுதான் அவனுக்கு ஆட்டிஸம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் இப்படிக் கூறியவுடனேயே அரசோ, சுகாதாரத் துறையோ தானாகவே எங்களுக்கு உதவிகளை முன்வந்து செய்யும் என்று நினைத்தேன்.
சுகாதாரத் துறையினர் ராபியை நாங்கள் யாரும் அடித்துவிடக் கூடாது, துன்புறுத்தக் கூடாது என்பதில்தான் அக்கறை காட்டினார்களே தவிர, அவன் எங்களைத் தாக்கக்கூடும் என்பது குறித்து அக்கறை காட்டவில்லை. ராபி போன்றவர்களை நீண்ட காலத்துக்குத் தங்கள் பொறுப்பில் எடுத்துச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் எதும் அரசிடம் இல்லை. இதை ஒரு பிரச்சினை யாக யாரும் கருதுவதில்லை. இதனால், பாதிக்கப்படும் குடும்பங்கள் அரசுக்கு முக்கியமே இல்லை.
கண்களில் வழியும் நீர்
ராபிக்கு ஆட்டிஸம் என்று மருத்துவர்கள் சொன்னபோது, இடி விழுந்ததைப் போல ஆயிற்று. அவனை நன்றாக ஆராய்ந்து பார்த்துச் சொல்லுங்கள், எவ்வளவு செலவானாலும் அவனைக் குணப்படுத்த முயற்சிக்கிறேன் என்றார் டேவிட். எப்படி நடந்து கொண்டால் ராபி சாதாரணமாக இருப்பான் என்று யாராவது சொன்னால் போதும், அதன்படி நடக்கலாம் என்று அப்பாவித்தனமாக நினைத்தேன்.
ஆட்டிஸம் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியாவிட்டால் அதைப் புரிந்து கொள்வதே கடினம். இப்போது எங்களுடைய வீட்டின் செயல்பாடு எல்லாமே ராபியின் உடல், மன நிலையை ஒட்டித்தான் இருக்கிறது. இது ஜோவை மிகவும் பாதிக்கிறது. எங்கள் வீடே இரும்புக் கோட்டைபோல மாறிவிட்டது. எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் எப்போதும் சாத்தி வைக்கிறோம். உடலைக் குத்திக் கிழிக்கக்கூடியது, ஓங்கி மண்டையில் அடிக்க உதவுவது என்று எல்லா சாமான்களையும் அகற்றிவருகிறோம். சுவர்களில் படங்கள்கூட தொங்கவிடப்படுவதில்லை. ராபி தானாகவே படுத்துத் தூங்க மாட்டான். வார இறுதி நாட்களில் டேவிட் அவனோடு படுப்பார். அவன் பக்கத்தில் அச்சத்துடன்தான் படுப்பேன். லேசாக நகர்ந்தால்கூட அவனுக்குத் தூக்கம் கலைந்து உடைந்து நொறுங்கிவிடுவான்.
ஆறு மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு 14 வயதானது. அப்போதிருந்து மீண்டும் அடிக்க ஆரம்பித்து விட்டான். பள்ளிக்கூடத்தில் அவனால் பிரச்சினை. பலமுறை அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டேன். இப்படிப்பட்ட குழந்தைகளைக் கையாள பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதைச் செய்யாமல், ஒவ்வொரு முறையும் என்னை அழைத்து அறிவுரை கூறுவதும் கண்டிப்பதும் வருத்தமாக இருக்கிறது. அவன் நடத்தையை வைத்து நான் நல்ல தாயா, பொறுப்பற்றவளா என்று எடை போடுவது மன வேதனையைக் கூட்டுகிறது. இப்படியான குழந்தைகளைப் பராமரிப்பதில் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பங்கிருக்கிறது. ஆனால், சமூகம் யாரோ அது இருவர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று விலகிக்கொள்கிறது. ஜோ இப்போது கத்துகிறான்…
‘‘எனக்குப் பயமாக இருக்கிறது!’’
தமிழில்: சாரி,
© ‘தி கார்டியன்’
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.