Bad Effects of Snacking - நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா?'ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்குச் சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்!’

'எனக்குப் பப்ஸ் வேணும் டாடி’ - இப்படி, தினமும் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் 'ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய கேள்விகளுக்கு விடை தருகிறார் ஊட்டச் சத்துத் துறை தலைவரும் பேராசிரியருமான ஹேமாமாலினி ராகவ்.

'அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி,எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ் வகைகளை இரண்டு முறையாவது சாப்பிடுகிறோம். காலை 9 மணிக்கு உணவு சாப்பிட்டால் மதியம் உட்கொள்ள 2 மணி ஆகிவிடுகிறது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அதாவது 11 மணி அளவில் டீ, சமோசா, வடை என எதையாவது சாப்பிடுகிறார்கள். இரவு சாப்பிட 9 மணி ஆகிவிடுகிறது. இதனால் மாலை 5 மணிக்கு டீ, பிஸ்கட், பஜ்ஜி, வடை சாப்பிடுகிறார்கள். ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க ஏதேனும் தீனி தேவை. இதையே 'எனர்ஜி ரீஃபில்லிங்’ என்போம்.'
'நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?'

'சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தான் அதிகம். 'டெம்ப் பக்கிங்' என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகளும் அதிகமாக விற்கப்படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும். மேலும் ஒரே எண்ணெயை திரும்பத்திரும்பப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரிக்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.'

'இதற்கு மாற்று என்ன?'

'வீட்டிலேயே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம். சுண்டல், பொரிகடலை, அவல், சோளக்கருது, பொரிஉருண்டை, வேர்க்கடலை, எள் உருண்டை, பயத்தம் உருண்டை, ரவா லட்டு போன்ற உணவுகளைத்தான் நொறுக்குத்தீனியாகச் சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், இன்று பண்டிகை நாட்களில் மட்டுமே கடமைக்குச் செய்து சாப்பிடுகிறோம். மேலும் கப்பை, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. ஃப்ரூட்சாலட், வெஜ்சாலட், ஃப்ரெஷ் பழங்களில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இவை எல்லாம், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியவை. இதனால், ரத்தஅழுத்தம் மற்றும் உடல்எடை கட்டுப்படுகிறது.'


'ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை எந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்?'

'மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான நொறுக்குத்தீனி அனைத்து வயதினருக்கும் தேவை. ஆனால், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் தகுந்த ஆலோசனைபடி எடுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் ஆரோக்கியமானது என்றாலும், எப்போதுமே சாப்பிட்டுக்கொண்டிருப்பது ஆபத்துதான். தேவையான நேரத்தில் மட்டுமே குறைந்த அளவு சாப்பிடலாம்.

இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதது. எனவே, வாரத்துக்கு 2 நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை எடுத்தால், ஒரு நாள் அவித்த பயறுகள், ஒரு நாள் பழங்கள், சாலடுகள், ஒரு நாள் வேர்க்கடலை, கிழங்கு வகைகள், மற்றொரு நாள் பாதாம், முந்திரி, உலர்திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் என எடுத்துக்கொள்ளலாம். மேலும், வெஜ் சான்ட்விச், எக் சான்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்த வரை அதிகம் வாங்கி ஃபிரிட்ஜில் அடைத்துவைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்வது சிறந்தது.பாட்டில் குளிர்பானங்களைவிட, இளநீர், மோர், கூழ் வகைகள், காய்கறி சூப்கள், அருகம்புல், வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ் வகைகளைச் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாகச் செயல்பட முடியும்.'

வீட்டில், நம் கையால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து சாப்பிடும் திருப்தியும், சுவையும் வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகளில் கிடைக்காது... இனி வீட்டிலேயே பண்ணலாமே!
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Wow superb like ji Hi 5 Thanks for sharing :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.